மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தாலும் அவளின் பேச்சு சத்தத்தை ஆதி கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
‘அடியே! கரகாட்டாக்காரி. என்னை இழுத்துட்டு போவியா? நீ இப்படி பேசினா பாட்டி நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க?’ அவளின் முந்தைய புரிதலான பேச்சில் பூரித்தவன், வாக்குறுதியில் கொஞ்சம் அரண்டுதான் போனான்.
ஆனால், இவனைப்பற்றி இவன் பாட்டிக்கு தெரியாதா என்ன? அப்படியிருக்க தாராவின் பேச்சை அவர் ஏன் தவறாக நினைக்கப் போகிறார்?
“என்னவோ போ நீங்க இங்கே வராட்டியும் விஷேஷம்ன்னு சேதி சொன்னா கூட போதும் எனக்கு பத்து வயசு குறைஞ்சுடும்” என்ற பாட்டிக்கு நம்பிக்கையாக எந்த பதிலையும் அவளால் சட்டென்று சொல்ல முடியவில்லை.
மேலும் சுருங்கிப் போன முகத்துடனும் கொள்ளை தயக்கத்துடனும், “சரிங்க பாட்டி” என்று அவருடன் பேசி முடித்தபோது அவளின் குரல் வெகுவாக உள்ளே போயிருந்தது.
திருமண பந்தத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படி எதிர்பார்ப்புகள் நிறைந்து கிடக்கிறதோ, அதேபோல இரு குடும்ப உறவுகளுக்கும் நிறைய நிறைய எதிர்பார்ப்புகள் இருக்குமே! இங்கே தங்கள் வாழ்க்கை அவர்களுக்கு நிறைவைத் தர மறுக்கிறது என்னும் கசப்பான உண்மை புரிந்தாலும் என்ன செய்து இதனை சரி செய்ய என தாராவுக்கு புரியவில்லை.
இந்த சில நாட்கள் நல்லவிதமாக கணவன் நடந்து கொண்டான் என்பதற்காகவே இத்தனை நாட்கள் அவள் அனுபவித்த வேதனைகள் இல்லை என்று ஆகிவிடாதே! கோபம் என்ற பெயரில் தன்னை உதறி விட்டு சென்றவனை எந்த நம்பிக்கையில் அவள் இப்பொழுது ஏற்றுக்கொள்வதாம்?
கணவன் அவளின் கண்கள் முன்னால் நடமாடவில்லை. நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையைச் சொல்லிலோ செயலிலோ தந்தது இல்லை. நீயும் என் வாழ்வில் ஓர் அங்கம் என அவளுக்கு உணர்த்தவும் இல்லை. இத்தனைக்குப் பிறகும் அவன் அருகில் இருந்தால் அவன்மீது தன்னையும் மீறி அக்கறை எடுத்துக் கொள்கிறாள். அதற்கு அவனது வேலைப்பளு, அலைச்சல் எல்லாம் காரணம் என்றாலும் அவள் இவ்வளவு இலகுவாக இறங்கிப் போய் விட்டாளே! இப்படி இவள் இருந்தால் அவன் எப்படி மதிப்பான்? மீண்டும் வேண்டாமென்றால் தூக்கி வீசுவதும், வேண்டுமென்றால் எடுத்து மடியில் வைத்துக் கொள்வதுமாக ஒரு பொம்மையைப் போலத்தானே அவளை நடத்துவான்?
பெண்ணவளின் மனம் குமுறியது. ஊது குழல் கொண்டு ஊதும் போது விறகுகளின் மீது படிந்திருந்த சாம்பல் எல்லாம் காற்றில் பறக்க, அது மூடி வைத்திருந்த நெருப்பு தகதகவென மின்னி சற்று நேரத்தில் கொழுந்து விட்டு எரியுமே! அந்த விறகடுப்பு விறகின் நிலையில் தான் இப்பொழுது அவளது கோபமும்! என்னதான் அவன் மீது கொண்ட அன்பாலும் அக்கறையாலும் அது சில நாட்களாக மூடி மறைந்திருந்தாலும், கோபம் என்னும் நெருப்பு இன்னமும் தகித்துக் கொண்டுதான் இருந்தது.
கோபம், இயலாமை, குமுறல் என பலவகை உணர்வுகள் அவளை ஆக்கிரமித்து அலைக்கழித்தது. வெகுவாக தளர்ந்து போனாள்.
மனதின் கலக்கம் முகத்திற்கும் வந்து விட்டது போல! சட்டென்று முகம் பொலிவிழந்து இறுகிப்போக, கண்களில் கண்ணீர் கரைகட்டி நின்றது.
இத்தனை நேரமும் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவளின் முகம் திடீரென்று வேறுவிதமாக மாறவும், ஆதீஸ்வரன் தான் எடுத்துக்கொண்டிருந்த குறிப்பை ஓரமாக வைத்துவிட்டு வேகமாக அவளருகே எழுந்து வந்தான்.
அவன் அருகில் வந்ததைக் கூட உணராதவள் போல தன் எண்ணங்களின் சுழலுக்குள் சிக்கியிருந்தாள். அவளின் முகத்தையே சில நொடிகள் பார்த்தவன், அவள் நிமிர்வதாகக் காணோம் என்றதும், அவளின் தாடையைப் பற்றி இவனே உயர்த்தினான்.
பீன் பேகில் அமர்ந்திருந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்துப் புரியாமல் விழித்தாள். ஆதி அவளையே ஆழ்ந்து பார்த்தபடி ‘என்ன?’ என்கிற தோரணையில் புருவம் உயர்த்தினான். விழிகள் அலைபாய அவனையே பார்த்திருந்தவளின் தலை ஒன்றுமில்லை என்று ஆடியது.
முன்பு ஒரு முறை அவளின் தந்தையைப் பற்றிய பேச்சு வந்தபோதும் அவள் கலங்கினாள் தான்! அப்பொழுது அவனே குழப்பத்தில் இருந்தான் என்பதால் உடனடியாக அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்யவில்லை. அவளும் அதனை எதிர்பார்க்காதவள் போலத் தனிமையை நாடி ஓடி விட்டாள். இப்பொழுது அவள் கலங்கி, தான் என்னவென்று கேட்க வந்தபோது காரணமில்லாமல் அந்த நாள் நிகழ்வும் சேர்த்து மனதிற்குள் வந்து விட்டது. அன்று சமாதானம் செய்திருக்க வேண்டுமோ என்று காலங்கடந்து காரணமே இல்லாமல் இப்பொழுது வருந்தினான்.
தொண்டையில் பொங்கிய கசப்புணர்வை விழுங்கிக் கொண்டு மனைவியின் தலையைப் பற்றி தன் வயிற்றில் புதைத்தான்.
புரியாமல் சாய்ந்து கொண்டாலும் அவன் முன்பு அவளால் அழ முடியவில்லை. என்னவென்று கேட்டால் அவள் என்ன பதில் சொல்வது? தன் எண்ணங்களை உணர்வுகளை அவனுக்கு விளக்கமாகச் சொல்லி அதன்பிறகு அவன் அதனைப் புரிந்து கொள்வதில் அவளுக்கு ஒரு பிடி அளவு கூட உடன்பாடில்லை.
அவளின் உடல் இறுகுவதைப் பார்த்தவன், மீண்டும் அவளின் முகத்தை உயர்த்தி, “என்ன யோசனைன்னு சொல்லு” என்றான் பரிவாக.
என்ன சொல்ல என அவளுக்குத் தெரியவில்லை. எதையாவது சமாளிப்பதற்காகப் பொய் சொல்லவும் மனதில்லை. பதில் எதுவும் சொல்லாமல் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நான் ஹர்ட் பண்ணினதை நினைச்சிட்டு இருக்கியா? அதை என்கிட்டயே எப்படி சொல்லறதுன்னு யோசிக்கிறயா?” அவளின் எண்ணவோட்டத்தைப் படித்தவன் போல ஆதி கேட்க, தாராவின் விழிகள் விரிந்து விட்டது.
அதுவே அவனுக்கு உண்மையை உணர்த்த, “அப்ப அதுதான் இல்லையா? சாரிம்மா. ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்னு எனக்கு நிஜமா புரியலை. ஆனா, எனக்கு இருக்க வேலையில வேற எதுவும் யோசிக்க முடியலை. ஆனா அது தப்பு தான், நீ என்ன செய்யற, எப்படி இருக்கன்னு தெரிஞ்சுக்கிட்டு இருந்திருக்கணும். உன்னை மனைவியாக்கிட்டு இவ்வளவு அலட்சியமா நடந்திருக்கக் கூடாது. அது ரொம்ப தப்பு தான்” என்று சொன்னவனின் குரலில் நிஜமான வருத்தம் தெரிந்தது. இமைக்காமல் அவனையே தான் பார்த்திருந்தாள்.
“அதுக்காக யாரைப்பத்தியும் நீ விசாரிக்கலையா? யார்கிட்டயும் நீ பேசலையான்னு என்கிட்ட கேட்டா… உண்மையை சொல்லணும்ன்னா நான் உன்கிட்ட மட்டுமில்ல பாட்டி, சத்யா யார்கிட்டயும் பேசலை. பேச நேரம் ஒத்து வந்ததில்லைன்னு சொல்லறது தான் சரியா இருக்கும். வேலை முடிச்சு எத்தனை மணிக்கு வரேன்னே என்னால சொல்ல முடியாது. இதுல எங்க இருந்து உங்ககிட்ட எல்லாம் பேசறது?
ஆனா சத்யாவைப் பத்தி மட்டும் விசாரிச்சுட்டு தான் இருப்பேன். உன்னை, பாட்டியைப்பத்தி எல்லாம் எதுவும் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டது இல்லை. காரணம் நீங்க உங்களை பார்த்துப்பீங்கன்னு ஒரு நம்பிக்கை! அதோட உங்களை வீட்டுல என்னோட ஆளுங்க காவல்ல விட்டுட்டு போயிருக்கேன். உங்க மேல இருக்க நம்பிக்கை சத்யா மேல இல்லையான்னு கேட்டா அவன் நிலைமையை உனக்கு எப்படி சொல்லறது?” என்றவன் ஒரு நொடி தன் நெற்றியை இரு விரல்களால் தேய்த்து விட்டுக்கொண்டான்.
அவளின் பார்வை அவனிலேயே சிக்குண்டிருந்தது. இமை தட்டி விழி நீரை வெளியேற்றி விட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆதி ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து, “அது எங்க அம்மா, அப்பா இறக்கும் வரை பெருசா எதுவும் இல்லைம்மா. ஆனா அவங்க இறந்த பிறகு அவன் மொத்தமா மாறிட்டான். அவனுக்கு நிறைய விஷயங்கள் மறந்து போச்சு. ஏன்னு எங்களுக்கு தெரியலை! காரணமில்லாம பயம், அழுகை! அடிக்கடி ரொம்ப ஆர்ப்பாட்டம் செய்வான். பயந்து ரொம்ப நேரம் கத்துவான். பல நேரங்கள்ல ராத்திரி எல்லாம் தூங்காம அப்படி நடுங்குவான்.
இப்பதான் அவன் வளர்ந்த பிறகு நம்ம பொத்தி பொத்தி வளர்க்க வேணாம்ன்னு நானும் பாட்டியும் முடிவு பண்ணி அவனை ஹாஸ்டல்ல சேர்த்து விட்டோம். அதுக்கப்பறம் கொஞ்சம் பசங்களோட சேர்ந்ததும் அவன் கொஞ்சம் பரவாயில்லைன்னு சொல்லலாம். அதுக்கு முன்னாடி எல்லாம் அவன் நிலைமை ரொம்ப மோசம். இப்பவும் அவன் ரொம்ப சென்சிடிவ் தான், எப்ப என்ன யோசிக்கிறான்னு புரியாது. கொஞ்சம் அதிக கேர் தேவைப்படும்ன்னு வெச்சுக்கவேன். அவனை மத்த பசங்களை மாதிரி மாத்த எவ்வளவோ முயற்சி எடுத்துட்டோம். இதுவரைக்கும் எந்த பயனும் இல்லை. அவனை சரி செய்ய முடியாம தான் இப்பவரை பாடுபட்டுட்டு இருக்கோம்.
அன்னைக்கு கனிகா விஷயத்துல உன்கிட்ட அவ்வளவு கோபப்பட்டதுக்கு காரணம் கூட கனிகாவோட துரோகத்தை கண்டிப்பா சத்யாவால தாங்க முடியாதுன்னு தான்! அவ அவனை ஏமாத்திட்டு போறதுக்கு முன்னாடி அவளைப்பத்தி அவனுக்கு புரிய வெச்சுடலாம்ன்னு நினைச்சேன். அந்த ஆதங்கத்துல தான் உன்கிட்ட அவ்வளவு கோபப்பட்டேன். நீ மறுத்து நான் பயந்த மாதிரியே சத்யாவுக்கு ஆபத்து வந்துடவும் என்னால என் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியலை. இப்ப யோசிச்சு பார்த்தா அதெல்லாம் மடத்தனமா தோணுது. ஆனா, அப்ப நான் இருந்த மனநிலையில என்னால அப்படி யோசிக்க முடியலை. அதுவும் சத்யாவை அந்த நிலைமையில பார்த்தபிறகு எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லு. அந்த ஆதங்கத்துல தான் உன்னை நோகடிச்சுட்டேன்” மனம் வருந்தி அவன் சொன்னபோது அவனது குரலின் கரகரப்பை அவளால் உணர முடிந்தது.
அவன் முன்பு அழ வேண்டாம் என்று ஆரம்பத்தில் யோசித்தவள், அவன் பேசுவதைக் கேட்கக்கேட்க தன்னையும் மீறி சொட்டு சொட்டாய் நீரைக் கண்ணிலிருந்து வழியனுப்பி வைத்தவள், இப்பொழுது அவன் பேசி முடித்ததும் மடை திறந்த வெள்ளம் போல மொத்தமாக அவன் இடையைக் காட்டிக்கொண்டே கொட்டி தீர்த்தாள்.
“ஸ்ஸ்ஸ்… தாரா… என்ன? ம்ப்ச்… சாரிடி” என்றவன் அவள் முகம் பற்றி உயர்த்தி கன்னம் துடைத்து சமாதானம் செய்தது எதுவுமே பயனளிக்கவில்லை. ஏன் அழுகிறாள் என்று அவளுக்குமே காரணம் தெரியுமா என தெரியவில்லை. இத்தனை நாட்கள் அவள் அனுபவிக்க நேர்ந்த வேதனைக்காகவா? இல்லை அவனிடம் அதற்காக இனியும் கோபம் காட்டும் நிலையில் அவன் இல்லை என்பதற்காகவா? இல்லை தன்னை ஏற்றுக் கொண்டேன் என முன்பு சொன்னவன் அதை அப்பொழுது செயலில் நிரூபிக்காமல் விட்டிருக்க, இன்றோ அவன் இத்தனை விவரங்கள் பகிர்ந்து தன்னை அவன் மனைவியாக ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறான் என புரிய வைத்ததற்காகவா? இல்லை கணவனின் வேதனைக்காகவா? என புரியாமல் அழுது கரைந்தாள்.
காரணமும் புரியாமல் தேற்றவும் முடியாமல் அவளை அமைதியாக அரவணைத்துப் பரிவுடன் தலை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்த அவளின் கணவனின் கண்களிலிருந்தும் அவனையும் மீறி கண்ணீர் வழிந்தது.
இப்பொழுது உணர முடிகிறது இது முடிவிலா நேசத்தின் கண்ணீர் வெளிப்பாடு என்று!