காவியத் தலைவன் – 16

கணவன் எந்நேரமும் எதையோ யோசித்தபடியும், கைப்பேசியில் கட்டளைகளை பிறப்பித்துவிட்டு கோபத்துடனும் எரிச்சலுடனும் அலைவதையும் பார்க்கப் பார்க்க அவனை பேசாமல் வீட்டை விட்டு அவனது வேலைக்கே துரத்தி விடலாமா என்று யோசிக்கும் நிலைக்கு தாராகேஸ்வரி வந்து விட்டாள்.

கிட்டத்தட்ட ஒரு வார காலமாக சென்னையிலேயே தேங்கி விட்டான். இங்கும் அவன் பார்க்க வேண்டிய வேலைகள் வரிசை கட்டி நிற்கும் போல. சில சமயங்களில் வெளியில் சென்றான் என்றால் எப்பொழுது வருவான் என்றே தெரிவதில்லை. வீட்டில் இருக்கும்போதும் போன் போன் போன் மாத்திரமே!

இரவுகளில் அவனது அருகாமை பழக்கமானது போல அவனது ஓய்வற்ற வேலைப்பளு அவன் மனையாளுக்கு இன்னும் பழக்கமாகவில்லை.

அவன்மீது கோபமாக இருக்கிறோம் என்பதை வேறு வழியே இல்லாமல் ஓரம் கட்டி வைத்து, அவனை அவன் வேலைக்கே கிளப்பி விடுவோம் என்று அவளே அவனுக்காக யோசிக்கும் நிலையில் இருந்தது ஆதியின் அலைச்சல்.

ஆனால், ஏற்கனவே இவள் சொன்னபோது தான், ‘நான் இருக்கிறது இடைஞ்சலா இருக்கா?’ என்று கேட்டு இவளை வாயடைக்க வைத்து விட்டான். இப்பொழுது மீண்டும் என்னவென்று சொல்வது என இவளுக்கு தெரியவில்லை.

வீட்டில் இருக்கும்போதே இப்படி வேலை, வேலை என அலைபவன் கண்காணாத தூரத்தில் எத்தனை மெனக்கெடுவான் என யோசிக்கையிலேயே அவளுக்கு அங்கலாய்ப்பாக இருந்தது.

அப்படி பாவம் பார்த்து தானோ என்னவோ அவன் வீட்டில் இருந்தால் தன்போல அவனின் தேவைகளைக் கவனிக்கத் தொடங்கி விடுகிறாள். அவளுடைய கோபம் எந்தவித மெனக்கெடலுமின்றி தானாகக் கரைவதிலேயே அவளின் குணம் புரிந்தது ஆதீஸ்வரனுக்கு. அவளின் கோபம் முழுதாக கரையவில்லை என புரிந்தாலும், அவள் இந்தளவில் இறங்கி வந்ததே மிகவும் பெரிய விஷயமாகப் பட்டது!

சின்ன பிள்ளையில் அத்தனை சேட்டை செய்து வீட்டையே சத்யாவுடன் சேர்ந்து ரணகளப்படுத்தும் அவளிடம் இந்தளவு பக்குவத்தை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

அனுதினமும் தன் குணத்தால், சிறு சிறு செயல்களால், சின்னஞ்சிறு சமிக்ஞைகளால், அசரடிக்கும் பேரழகால், பார்வையிலேயே செய்யும் மௌன யுத்தத்தால் என அவனை ஏதோவொரு வகையில் ஈர்ப்பவளிடமிருந்து விலகியிருப்பது ஆதிக்கு பெரும் சவாலாகத்தான் இருந்தது.

சமீபமாக அழகாண்டாள் பாட்டி தாராவை அழைக்கும் பெரும்பாலான பொழுதுகளில் மூத்த பேரன் வீட்டிலேயே இருக்க, அவருக்கு அது பெரிய ஆச்சரியம். “எப்படி அவன் ஒரு இடத்துல இருக்க மாட்டானே? காலுல சக்கரம் கட்டிட்டு சுத்துவான். இப்ப என்ன அங்கேயே இருக்கான்? எதுவும் விசேஷமா என்ன?” பாட்டி பொடி வைத்து பேசுவது இவளுக்குப் புரியவில்லை போலும்.

“எந்தா பாட்டி? அவர் இருந்தா விஷேசம் எங்கேனா உண்டு. பிரஷணம் (பிரச்சனை) வேணா இருக்கும்” என்று அலுப்புடன் சொன்னவளின் பார்வை கணவனை உரசி நின்றது. இவளை கண்டுகொள்ளாமல் லேப்டாப்பில் லொட்டு லொட்டு என்று தட்டி எதையோ தேடிக் கொண்டிருந்தான்.

‘திவசம் முழுவன் எந்தானு ஜோலியோ? குறைச்சு நேரங்கூட சும்மா இருந்து நான் கண்டிட்டில்லா?’ என உள்ளுக்குள் அவனை எண்ணி பொறுமிக் கொண்டிருந்தாள்.

“அதென்ன பிரச.. பிரச… பிரசவம் மாதிரி என்னவோ சொன்னியே… அதுக்கு என்ன அர்த்தம்? அவன் இருந்தா அது என்ன இருக்கும்?” தமிழ், மலையாளம், சில சமயங்களில் இரண்டையும் கலந்துகட்டி என இவள் செய்யும் குழறுபடிகள் அவளின் கணவனுக்கு அத்துபடி! ஆனால், பாவம் அழகாண்டாள் பாட்டி என்ன செய்வார்?

திருதிருவென விழித்தவள், “பாட்டி அது பிரஷணம்ன்னு சொன்னேன்… தமிழ்ல ம்ம்… பிரச்சனைன்னு கூட சொல்லுவாங்களே” என பாவமாக விளக்கம் சொல்ல, இவளின் தடுமாற்றத்திலும் பதிலிலும் ஆதீஸ்வரன் தன் சிரிப்பை மறைக்க முயற்சி செய்வதைக் கண்டுகொண்டாள்.

‘கள்ளன் ஜோலி நோக்கினாலும் கவனம் இங்கேயும் இருக்கு’ அவனை செல்லமாக முறைத்து வைத்தாள். பேசுவது பாட்டியிடம் என்றாலும் பார்வை மாத்திரம் தன்னையும் மீறி அவனையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அது அவளுக்குப் புரிந்ததோ இல்லையோ ஆதிக்கு நன்றாகப் புரிந்தது.

“பிரச்சனையா? அதுசரி புருஷன் இருந்தா பிரச்சனை இருக்கும்ன்னு சொல்லிட்டு திரியற, ம்ம் இதுல எங்கிருந்து உன்கிட்ட நான் விசேஷத்தை எதிர்பார்க்கிறது” என அழகு பாட்டி பெருமூச்சுடன் புலம்ப, பதறியவளாக, “அச்சோ பாட்டி அது சும்மா சொன்னேன். அவர் இருந்தா என்ன பிரச்சனை இருக்கப்போகுது. பாவம் வேலை தான் நிறைய செய்யறாரு. ஓய்வே இல்லாம” என இவளும் பதிலுக்குப் புலம்பி வைத்தாள்.

பாட்டிக்கு இந்த பதிலை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை. அவர் விசேஷத்தையும் சேர்த்துத் தானே புலம்பினார். இவள் அவனது ஓயாத வேலையைப்பற்றி புலம்புகிறாள் என்றால் என்ன அழகில் அங்கு குடும்ப நடக்கிறதோ என்றிருந்தது அவருக்கு. ஆனாலும் கடிந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. வெறும் புலம்பல் மாத்திரமே!

முன்பெல்லாம் அழகு பாட்டி பெரும்பாலானவர்களிடம் நல்லவிதமாக நடந்துகொண்டது இல்லை. கணவன் வீட்டு உறவுகளை அவருக்கு அறவே பிடிக்காது. அவர்களைச் சேர்த்துக் கொள்ளவே மாட்டார். மருமகளை எந்நேரமும் கரித்துக் கொட்டிக்கொண்டே இருப்பார். தான் தான் என ஆதிக்கம் செலுத்துவார்.

எல்லாவற்றிற்கும் அடியாய் விழுந்தது மகன், மருமகளின் மரணம். அழகு பாட்டி தான் உறவுகளிடம் ஒட்டி உறவாட மாட்டாரே! ஆக, அவர்களின் இறப்புக்குப் பிறகு இரண்டு பேரப்பிள்ளைகளுடன் தனித்து தான் இருந்தார். வேலையாட்கள் இருந்தாலும் உறவுகள் யாரும் அருகில் இல்லை. தானாக சேரப்பார்த்த உறவுகளும் சொத்தை சுரண்ட முயற்சி செய்கிறார்கள் என்பது புரிந்து அவர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. மகனின் நண்பன் வீரராகவன் மட்டும் நல்லவிதமாக நடந்துகொண்டது போலத் தோன்றியது. வீராவைத் தவிர யாரையும் நம்பும்படியாகவும் இல்லை என்பதால், அவனிடம் மாத்திரம் தொழிலில் உதவிபெற்றுக் கொள்வார்.

வாழ்வில் அன்று வாங்கிய அடி அவருக்கு பெரிய பாடமாகப் போய்விட்டது. காலம் கடக்க கடக்க நன்றாகவே பக்குவப்பட்டு விட்டார். முன்பு செய்த தவறுகளுக்கெல்லாம் வருந்துகிறார். ஆனாலும் இழந்த காலத்தை மீட்டெடுக்க முடியாதே! ஆக, இப்பொழுதெல்லாம் எல்லாரிடமும் நல்லவிதமாகத் தான் நடந்து கொள்வது. இல்லையேல் அவர் பார்க்கும் கௌரவத்திற்கும் அந்தஸ்திற்கும் யார் என்ன என்று விசாரிக்காமல் தாரகேஸ்வரியை பேரனுக்குக் கட்டி வைக்க நிச்சயம் சம்மதித்திருந்திருக்க மாட்டார்.

தாராவின் புலம்பலில், “அதுசரி புதுசா கட்டிக்கிட்ட பொண்டாட்டி கண்ணுக்கு நிறைவா பக்கத்துலேயே இருக்கா. அவன் என்னன்னா வீட்டுல இருந்தாலும் வேலை, வேலைன்னு செய்யறான்னு நீ சொல்லற. அப்ப நீயே பாத்துக்க உன் சாமர்த்தியம் என்னன்னு…” அழகு பாட்டிக்கு கொள்ளு பேரனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை, அதற்குத் தான் விதவிதமாக விண்ணப்பம் போட்டுப் பார்க்கிறார்.

தாராவிற்கு அவர் எங்கு வருகிறார் என இப்பொழுது புரிந்து விட்டது. சட்டென்று முகம் சுருங்கிவிட என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அருகருகே இருவரும் படுத்துக் கொள்ளுமளவு முன்னேற்றமே இந்த ஒருவார காலமாகத்தான் வந்திருக்கிறது. இனி இயல்பாகப் பேசிப்பழகி, இருவருக்கும் பிடிப்பு வந்து, வாழ்க்கையைத் தொடங்கி… என எல்லாம் யோசித்துப் பார்த்தால் மலைப்பாக இருந்தது. ஓய்வின்றி உழைக்கும் கணவனைப் பார்த்ததுமே தன்போல பெருமூச்சு வந்துவிட்டது.

“என்ன பதிலையே காணோம்? என் பாட்டி இப்படித்தான் தொல்லை செய்யும். நீ அதெல்லாம் கண்டுக்கக் கூடாதுன்னு உன் புருஷன் முன்னாடியே சொல்லி வெச்சிருக்கானாக்கும்?” என பாட்டி நொடிக்க, “அச்சோ அதெல்லாம் இல்லை பாட்டி…” என்றாள் அவசரமாக.

“என்னவோ போ. அவன் அங்கே தங்கறதே இல்லை. தங்கி இருந்தாலும் வேலையை கட்டிட்டு அழறான்னு சொல்லற. இதுல எப்ப ஊரு பக்கம் வருவானோ? கல்யாணம் முடிஞ்சதுல இருந்து கூப்பிட்டுட்டே இருக்கேன். பதிலே சொல்ல மாட்டீங்கறான்” பாட்டி மேலும் மேலும் புலம்புவதைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. ஆனால், கணவனின் நிலைமையும் புரிகிறதே!

“அவங்களுக்கு ரொம்பவும் முக்கியமான வேலை போல பாட்டி, இந்த நேரத்துல ஊருக்கு வரதை பத்தி எல்லாம் பேச்செடுக்க முடியுமான்னு தெரியலை. கொஞ்சம் வேலை எல்லாம் சுமூகம் ஆனதும் கண்டிப்பா இழுத்துட்டு வந்துடறேன். நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க” என்னவோ அவளின் கணவனே இவள் கைக்குள் தான் என்ற தோரணையில் பாட்டியிடம் தாராளமாக வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தாள்.