அவனின் திறமைகள் அங்கே பணமாய் உருப்பெற்றுக் கொண்டிருக்க…
“அப்பா… பணம் தாராளமா புழங்குது, போன வாரம் தான் கட்டின வீடு ஒன்னு விலைக்கு வருது… பேசவா பா”
“உனக்கு சரின்னா பார்த்திடுபா” என விநாயகமும் சிவஹாமியும் கூறினர்.
அடுத்த இரு வாரங்களில் வீட்டை வாங்கி…. கிரகபிரவேஷமும் செய்ய, வீட்டை பார்த்த இருவருக்குமே பேரானந்தம் தான். ஊரை விட்டு வரும் போது இல்லாத பணம் இப்போது கை நிறைய இருக்க….மகிழ்ச்சியாய் வலம் வந்தனர்… ஆனாலும் மூத்தமகனை பற்றி பேசாத நாட்கள் இல்லை… அவ்வப்போது சத்ரியிடம் விசாரிக்கவும் தயங்கவில்லை..சத்ரியோ கண்டும் காணாதது போல் கடைக்கு சென்றுவிடுவான்.. தன்னுடைய மகிழ்ச்சியே அங்கே தான் என்பது போல்.
அவனுடைய பைக்கர்ஸ் பாய்ண்டில் வேலை பார்க்கும் அனைவருக்கும் கை நிறைய சம்பளம், வாரம் ஒரு நாள் விடுமுறை, வருடத்திற்கொரு முறை எங்காவது சுற்று பயணம்… என அவனுடன் வேலை செய்த அனைவருடனும் உணர்வுப் பூர்வமாய் கலந்தான்.
அப்படி ஒரு நாள் சுற்றுலா சென்ற இடத்தில் தான் (பெங்களூரில்) வெங்க்கட்டையும் க்ருத்திகாவையும் பார்த்தது.
பசங்களுடன் மால் வந்தவனின் கண்களில் பட்டது.. வெங்க்கட்டும் அவனுடன் வாதம் செய்து கொண்டிருந்த ஒரு சிறிய பெண் குழந்தையும்.
“இதெல்லாம் ரேட் ஜாஸ்தி மா* என்ற வெங்க்கட், கொஞ்சம் நடுத்தர விலையில் இருந்த மற்றொரு டெடி பியரை காட்டி ”இது வாங்கிக்கலாமா” என கேட்க..
“அப்பா.. எனக்கு பெரிய டெடி தான் வேண்டும்” என அங்கிருந்த பெரிய டெடியை காட்டி… கொஞ்சம் சப்தமாய் கேட்ட திவ்யாவும் கண்களில் பட்டனர்.
பார்த்த சத்ரிக்கோ… நலிந்த தோற்றத்துடன் இருந்த வெங்க்கட்டும்.. ஆசை மிளிற பெரிய டெடியை பார்த்துக் கொண்டிருந்த சிறு பெண் குழந்தையும் தான்.
அவனின் மகள் என புரிந்து கொண்டான். க்ருத்திகாவை தேட… ’ம்ஹூம், கூட்டிட்டு வரலை போலவே..’ என அவர்கள் அருகில் செல்ல ‘அதற்குள் திவ்யாவை சமாதானம் செய்து.. கொஞ்சம் சிறிதான டெடியுடன் பில் போடும் இடம் சென்றிருந்தனர் தந்தையும் மகளும்..
அந்த பெரிய டெடியை ஒரு கையில் தூக்கிக் கொண்டு வேக நடையில் அவர்களை நெருங்கியவன், வெங்க்கட் கையில் இருந்த டெடியை தன் கைக்கு மாற்றி..
“அது வேணாம், இதை பில் போடுங்க..” என பெரிய டெடியை கொடுக்க..
திவ்யா சத்ரியை ஆச்சர்யாமாய் பார்க்க வெங்க்கட்டோ.. அதிர்ச்சியாய் அவனை பார்த்திருக்க..
“நான் உன்னோட சித்தப்பாடா குட்டிமா.” என திவ்யாவை அள்ளிக் கொண்டான் சத்ரியன்.
வேறு சில பொருட்களுடன் அங்கே வந்த க்ருத்திகாவும் அவனை கண்டு அதிர்ச்சியாய் நிற்க
கனமான நிலையை அங்கே யாராலும் சமாளிக்க முடியவில்லை…
மூன்றரை வயதிற்குரிய துறு துறுப்புடன் “சித்தப்பா” என்ற உயிர்ப்புடன் திவ்யா… சத்ரியின் கழுத்தை கட்டிக்கொள்ள இறுக்கமாய் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டான் சத்ரி..
வெங்க்கட் தான் அப்படி இருந்தான் என்றால் க்ருத்திகா அதை விட நலிந்து இருந்தாள். முகமெல்லாம் இருண்டு போய் கிடந்தது.. பார்த்தவனுக்கு இவர்கள் அப்படி ஒன்றும் நன்றாக ,வாழவில்லை என அப்பட்டமாய் தெரிந்தது.
அவர்களிடம் பேச மனமில்லாத போதும், அப்படியே விட்டு வரவும் மனமில்லை. அதற்குள் வெங்க்கட்டே.. “அம்மா அப்பா வந்திருக்காங்களாடா” என அவனை சுற்றி கண்களை ஓட்டினான்.
“இல்லை, அவங்க திருச்சயில் இருக்காங்க.. நான் ப்ரண்ட்ஸோட வந்தேன்… “
“ஆமாம்… ” என்ற சத்ரி “நீயும் இங்கே நல்ல வாழ்க்கை வாழற மாதிரி தெரியலையே“ என டெடி பியரை சுமந்த திவ்யா, வெங்க்கட்டின் நலிந்த தோற்றம், பின் கடைசியாய் க்ருத்திகா என அவனின் பார்வைகள் வெங்க்கட்டை கூறு போட…
“திருடிட்டு வந்த பணமும் நகையும் நல்லாவா வாழ வைக்கும்… ” என வெங்க்கட்டும் வெறுப்பில் பேச, அந்த வார்த்தையில் வெங்க்கட்டின் மனம் தெளிவாய் புரிந்தது.
“திருச்சியில் நம்ப வீட்டுக்கு வந்திடுறியா” என சத்ரி சட்டென கேட்க
ஆசையை பிரதிபலித்த வெங்க்கட்டின் விழிகளையும் இது நடக்கவே நடக்காதா என ஏங்கிய க்ருத்திகாவின் விழிகளையும் அழகாய் படம் பிடித்தன சத்ரியின் விழிகள்.
ஆனாலும் “அம்மா அப்பா” என வெங்க்கட் இழுக்க…
“உன்னையும் க்ருத்திகாவையும் பற்றி பேசாத நாட்கள் இல்லை” என கூற.. அந்த பதிலில் நீர் நிறைந்த கண்களுடன் சத்ரியை ஆரத் தழுவிக் கொண்டான் வெங்க்கட். மற்றவர்களுக்காக இல்லையென்றாலும், திவ்யாவுக்காகவே தங்களோடு இணைத்துக் கொண்டான் சத்ரி.
திருச்சியில் தங்கள் வீட்டின் முகவரியை கொடுத்து “இனி இங்கே இருந்து எதுக்குடா கட்ட படுற.. அங்கே வந்திருடா” என கூற, இவனும் தலையசைத்தான்.
ஆனால் அதன் பின்பு வெங்கட் வருவதற்கான அறிகுறியை காணவே இல்லை்
இரண்டு் முறை போனில் பேசியவன், அடுத்த முறை விநாயகம் சிவஹாமியை விட்டு அழைத்தான்.
சத்ரி அழைத்ததே பெரிய விஷயம் என்றால் தன் தந்தையும் தாயும் தன்னிடத்தில் பேசியது இரட்டிஇப்பு மகிழ்ச்சியை கொடுத்தது.
பெங்களூரில் வேலையை ரிசைன் செய்து, அதே ஐடி ஃபீல்டில் திருச்சியில் வேலை தேடிக் கொண்டு வந்து விட்டான் வெங்க்கட்.
வெங்க்கட் க்ருத்திகா என இருவரையும் பார்த்த சிவஹாமியும் விநாயகமும்… திகைத்துவிட்டனர்.. வெங்க்கட் கிருத்தியின் நலிந்த தோற்றம்… எதிலோ தோற்ற உணர்வு…. என வீட்டிலிருந்த மற்றவர்களை அலைக்கழித்தது.
ஏதும் கேட்காமல் வீட்டில் சேர்த்துக் கொண்டனர். ரத்தபாசமே அங்கு ஓங்க…. பட்ட அடிகளை காலம் ஆற்றியிருக்க… மகனை மருமகளை பேத்தியை அழகாய் உள் வாங்கிக் கொண்டனர் வெங்க்கட்டின் பெற்றோர்கள்.
வெங்க்கட் க்ருத்திகா இருவருமே பெற்றோர்களிடம் எதிர் பார்த்த பாசம் கிடைக்காத போதும்…. தங்களுக்குள் தேடிக் கொண்டனர்.
சாத்வி சத்ரியை போல் நேரடியாக பாசம் காட்டாது திருட்டு தனமாய் வெங்க்கட் எல்லாவற்றிலும் உதவ…. இருவருக்கும் அது ஓர் அழகிய உணர்வை தர காதலில் விழுந்தனர்.
ஷிவாவிற்கு க்ருத்திகாவை பேச போறோம் என மீசையெ முறுக்கிய சங்கரன் வில்லனாய் தெரிய இழுத்துக் கொண்டு ஓடி வந்து விட்டான்.
சத்ரி இரண்டாம் வருட மெக்கானிக்கலில் செமஸ்டர் எழுதும் நேரம், பெங்களூரில், இண்டர்வியூவில் இருந்த வெங்க்கட்டிற்கு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்தது.
பர்மணன்ட் வேலை என்பதால் அதற்கு முன்பணமாய் செலுத்த வேண்டி ய கட்டாயம் “இவ்ளே பணம் கொடுத்து வேலை வாங்கவா வேண்டாம்” என்றவன்,
க்ருத்திகாவை திருமணம் செய்வதை முன்னருத்தி.., சுயநலமாய் வேலைக்கு சேர்ந்தான், குத்தகை பணம் மற்றும் நகைகளின் புண்ணியத்தில்.
வேலைகிடைத்த தைரியத்தில் பெங்களூரில் குடி புகுந்தனர். ஆனால் அதன் பின்? அது வெங்கட்டிற்கும் க்ருத்திக்கும் தான் வெளிச்சம். இவர்கள் சொல்லவும் இல்லை, சத்ரி கேட்கவும் இல்லை.
ஆனால் நாளாக நாளக
ஒரே வீட்டில் அனைவரும் இருந்தாலும், வெங்க்கட்டும் க்ருத்திகாவும் தாங்கள் செய்த தவறின் வீரியம் தெரியாமல் தெரிந்து கொள்ளாமல் இருப்பதை பார்க்கும் போது அவ்வளவு ஆத்திரம் வரும் சத்ரிக்கு.
ஆனால் தெரிந்து கொண்டால் மட்டும், சத்ரியும் சாத்வியும் அவர்களின் பெற்றோர்களும் இழந்த நாட்களை ,இழந்த நிம்மதியை இவர்களால் திருப்பி தர முடியுமா… ? என கனன்று கொண்டிருக்கும் நெருப்பை அணைக்க முடியாவில்லை அவனால்.
ஒரு நாள் “ பணத்தையும் நகையையும், என்ன பண்ணின வெங்க்கட்” என கேட்டு விட்டான் மனம் தாளாமல்.
சிறிதும் தயக்கமில்லை வெங்க்கட்டிடம் “பர்மணன்ட் ஜாப்க்காக அமௌண்ட் பே பண்ண சொன்னாங்க.. நம்பி பே பண்ணினேன். பர்மணன்ட் ஜாப் தான் ஆனா சேலரி ரொம்ப கம்மி.. சமாளிக்கமுடியலை” ‘நல்ல வேளை நீ வந்த’ என்ற வார்தைகள் அவன் மனதில் உதித்தாலும் வெளிவரவில்லை.
சத்ரிக்கு என்ன சொல்வதென தெரியவில்லை.. நொந்து போய் இருப்பவனை வார்த்தைகளால் சாட சத்ரியால் முடியவில்லை.. அவன் தோளில் லேசாய் கை போட்டு.. “இப்போ சேர்ந்த வேலை எப்படி இருக்கு” என பேச்சை திசை திருப்பி வெங்க்கட்டிற்கு அண்ணணாய் ஆனான் சத்ரி.
நடந்ததை சொல்லி.. வெங்க்கட்டை ஏன் கஷ்டபட விட வேண்டும் என சத்ரி, வெங்க்கட் க்ருத்திகாவின் திருமணத்தின் பின் நடந்த எதையும் தெரிவிக்கவில்லை. கஷ்டபடுத்தியும் பயனில்லையே என எண்ணியது அவன் மனம்.. அப்படியே தந்தை தாயிடம் கூறி “எதுவும் சொல்லவும் வேணாம் கேட்கவும் வேணாம்” என முடித்துவிட்டான் சத்ரி…