கண்ணே முத்து பெண்ணே 21

புது மணமக்களின் வாழ்க்கை தொடர்ந்த நாட்களில் இனிமையாகவே சென்றது. வேறெந்த அழுத்தமும் எடுத்து கொள்ள கூடாது என்பதில் செல்வம் கவனமாக இருந்தான். அதுவும் தற்காலிகமாக தான்.

யோசித்து, ஆராய்ந்து, செயல்படுத்த எல்லாம் அதிகமே உள்ளது. திடீரென எப்போது, என்ன முளைக்கும் என்று அவனுக்குமே தெரியாது.

அதுவரைக்குமாவது அவனின் முத்து பெண்ணுடன் மகிழ்ச்சியாக இருந்துவிட வேண்டும். அதற்கேற்ற படி நடந்தும் கொண்டிருக்கிறான்.

வீடு, தொழில் இரண்டு மட்டும் தான். அதுவும் ஒரு கட்டிடத்திற்குள் இரண்டும் எனும் போது, அதன் வாசலை கூட தாண்டுவதில்லை. வெளி வேலை எல்லாம் சுப்பிரமணி பொறுப்பு.

தம்பியும் உற்சாகத்துடன் சுற்றி கொண்டிருக்கிறான். நேரா நேரத்துக்கு அண்ணி கையால் உணவு, சூடு பிடிக்கும் தொழில், லாபத்தில் அண்ணன் கொடுக்கும் பங்கு என்று அவனுக்கும் மகிழ்ச்சி தான்.

ஊர் கடையில் வரும் வருமானம், புது கடை வருமானம் இரண்டையும் முத்து பெண்ணின் கையில் ஒப்படைத்துவிட்டான் செல்வம்.

“என்ன பண்ணணுமோ பண்ணு. உனக்கு போனது மீதியை ஏதாவது முதலீடு பண்ணி வைச்சா சந்தோசம்” என்றான்.

முத்து பெண்ணுக்கு கணவன் செய்ய வேண்டும் என்று ஆசை. “நீங்களே எதாவது பார்த்து செய்ங்க” என்று சைகையில் சொன்னாள். இன்னமும் பேசுவதில்லை.

“ஏன் நீ பண்ண மாட்டியா, செய்டி” என்றான் அதிகாரமாக.

மனைவி உர்ரென்று முறைக்க, செல்வத்திற்கு அதுவும் இனித்தது. அவனுக்கான எல்லாம் அவள் தானே! அன்புக்கும் சரி அதிகாரத்திற்கும் சரி!

இரண்டையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் காட்ட தவறுவதில்லை.

இப்போதும் அவளின் முறைப்பில், செல்வம் ஈர்க்கபட்டான். முத்து பெண்ணின் இடையை வளைத்து தன் நெஞ்சில் முட்ட வைத்தான்.

அவளின் சில்லென்ற முத்தத்திற்காக காத்து நிற்க, மனைவி உதடு சுளித்தாள். “வர வர இதே வேலை தான்” என்று இதழ்களை மூடி அடமாக நின்றாள்.

“முத்தம் கொடுடி” என்றான் வாய் விட்டு.

அவளோ முடியாது போ என்றிருக்க, “கொடுக்கலை, முத்து மாலையை காப்பாத்த முடியாது பார்த்துக்கோ” என்று கண்ணடித்து மிரட்டல்.

முத்து பெண்ணுக்கு கோவம். அவரோட முதல் பரிசு, அதுலே கண்ணா இருக்கிறது.

அவனை வலுவாக விலக்கி தள்ள, விடாமல் காந்தம் போல் ஒட்டி கொண்டவன், “என்னை விடவா முத்து மாலை உனக்கு, ஆஹ்” என்று மூக்கை கடித்து விட்டான்.

“ஸ்ஸ்” என்றவளிடம் இன்னும் அடம் சேர்ந்து கொள்ள, செல்வமும் நிலையாக நின்றான்.

“என் நெஞ்சுல ஈரம் பண்ணாம போக முடியாது. பண்ணுடி” என்றான்.

வாய் திறந்தாலாவது திட்டி விடலாம். இப்போது முழுமையாக கோவத்தை காட்ட முடியாமல் திணறியவள், “இனி முத்து மாலையை பத்தி பேச கூடாது” என்றாள் கையசைவில்.

“பேச மாட்டேன்” என்று சமத்தாக கேட்டு கொண்டவனிடம் எக்கச்சக்க குறும்பு.

மனைவி கண்களை சுருக்கி சந்தேகமாக பார்க்க, “நம்புடி. முத்து பொண்ணு இருக்கும் போது முத்து மாலை எதுக்கு? இந்த பொண்ணு கொடுக்கிற முத்தத்தை விடவா அது. சும்மா நச்சுன்னு, சில்லன்னு, பச்சக்குன்னு இங்க வைப்ப பாரு. யப்பான்னு இருக்கும். இப்போ கூட கொடுத்து பாரு, நான் எப்படி ஆகுறேன்னு” என்று அவள் உதடுகளை தன் நெஞ்சில் அழுத்தினான் கள்ளன்.

முத்து பெண்ணுக்கும் அவன் கள்ள வேலை  புரிந்ததில், சிரிப்புடனே சில்லென்ற முத்தத்தை வைத்தாள்.

“செமடி, இன்னும் கொடுத்தா நான் அப்படியே மயங்கிடுவேன் நினைக்கிறேன்” என்று மேலும் பிட்டு போட

“நீங்க மயங்கி எனக்கென்ன?” என்று மனைவி விழிகளால் கேள்வியெழுப்பினாள்.

செல்வம் அவள் நெற்றி முட்டியவன், “பொண்டாட்டிகிட்ட  மயங்கி கிடக்கிறது சும்மாவா? அதுவும் முத்தத்துக்காக. இந்த செல்வம் மட்டும் தான் இவ்வளவு ஈஸியா மடங்குவான்” என்றான்.

“ஆஹ். இதுல பெருமை வேற” என்று அவள் உதடு சுளிக்க,

“உனக்கு அந்த சாமர்த்தியம் இல்லை. நான் சொல்லியும் சும்மா நிக்கிற” என்றவனின் நெருக்கம் இன்னும் கூட,  முத்து பெண் உஷாராகிவிட்டாள்.

“கடைக்கு போகாம இதென்ன?” என்று அவனை தள்ளிவிட,

“தம்பி உடையான் படைக்கு அஞ்சான். எனக்கு சுப்பு குட்டி இருக்கான்” என்றான் செல்வம்.

“இது நல்லா இருக்கே. எல்லாத்துக்கும் பதில் வைச்சிருக்கிறது. சரியான கேடி” முத்து நாச்சி அவன் பிடியில் சிக்காமல் கடைக்கு நழுவிவிட்டாள்.

“நைட்டு பார்த்துகிறேன் உன்னை” என்ற செல்வத்தின் போன் ஒலித்தது.

அண்ணாச்சி. இத்தனை நாள் கூப்பிடாம இப்போ லைனுக்கு வரார். செல்வம் இறுதியாகவே அவரின் அழைப்பை ஏற்றான்.

“செல்வம். என்னப்பா எப்படி இருக்க?” என்று ஆரம்பித்தார்.

“இப்போ எல்லாம் ஆபிஸ் பக்கமே வரதில்லையே. தொழில்ல ஜோரா போகுது போல” என,

“நீங்க தான் பஞ்சாயத்துக்கு கூப்பிடுறதில்லையே அண்ணாச்சி. அப்புறம் ஏன் சும்மா வரணும்ன்னு தான்” என்று அவரின் வழியிலே சொன்னான்.

“அட இனி உனக்கு அதெல்லாம் தேவைப்படுமா என்ன? உட்கார்ந்த இடத்திலே பணம் வந்து கைக்கு சேரும். அப்பறமென்னப்பா” என்றார் மனிதர் அடக்கப்பட்ட வயிறு எரிச்சலுடன்.

“அதுவும் நீங்க பண்ணது தானே அண்ணாச்சி” செல்வம் சொல்ல, அவருக்கு அதிர்ச்சி தான். அமைச்சர் சொல்லிட்டாரா?

“என்ன செல்வம், எது எப்படி இருந்தாலும் நீ நம்ம பையன்” என்றார் பொதுவாக.

செல்வம் அமைதியாக இருக்க, “அப்புறம் நான் கூப்பிட்டது ஷேர் பத்தி பேச தான். போன மாசமும் வரலை” என்று கேட்க,

“என்ன ஷேர் அண்ணாச்சி?” என்று தெரியாதவனாக கேட்டான் செல்வம்.

பினாமி சொத்துக்கள் வருமானத்தில் நாராயணன் இவருக்கும் பங்கு கொடுத்து கொண்டிருந்தார், அதை ரவியும் அன்றே சொல்லிவிட்டான்.

“என்ன செல்வம், நாராயணன் சொல்லலை?”

“இல்லை அண்ணாச்சி எனக்கு யாரும் எதுவும் சொல்லலை”

மனிதருக்கு கோவம். பொறுத்து கொண்டு, “அந்த பணத்துல எனக்கும் பங்கு இருக்கு செல்வம். மாசமாசம் இவ்வளவு கொடுக்கணும். போன மாசத்தோட சேர்த்து எடுத்துட்டு வந்துடு” என்றார்.

“அமைச்சர் அப்படி ஏதும் என்கிட்ட சொல்லலை. அவருக்கான பங்கு போயிடுச்சு” என்றான் செல்வம்.

அவர் சொல்ல மாட்டார். நாராயணன், அவருக்குமான கணக்கு இது. செல்வமும் கொடுத்து விடுவான் என்று நினைத்திருக்க, இவனோ அப்படி ஒரு எண்ணமே இல்லை என்பது போல் பேசி கொண்டிருந்தான்.

“சரி இப்போ நான் சொல்றேன் இல்லை. எடுத்துட்டு வா” என்றார்.

“இல்லை அண்ணாச்சி. அமைச்சரை கேட்காம கொடுக்க முடியாது” என்றான் உறுதியாக.

“நான் தான் நம்ம தொகுதிக்கு. எனக்கு கொடுத்து தான் ஆகணும்”

“அப்படி எனக்கு மேலிடத்துல சொன்னா நானும் கொடுத்திடுறேன்”

“செல்வா, நம்ம பையன்னு தான் பொறுமையா பேசிட்டு இருக்கேன்”

“அண்ணாச்சி. நீங்க என்கிட்ட இப்படி பேசுறதை நான் அமைச்சர்கிட்ட சொல்லாம இருக்கிறதும் அதனால் தான்”

“என்ன, என்ன சொல்வ அவர்கிட்ட?”

“அதை அவரே வந்து உங்ககிட்ட கேட்பார்” என்று வைத்துவிட்டான்.

அண்ணாச்சிக்கு வேர்த்து விட்டது. பணம் ஒரு மூலைக்கு. இவருடைய எல்லாம் செல்வத்துக்கு அத்துப்படி. சொல்லிடுவானா? என்று அந்த நொடியில் இருந்து அச்சம் கொள்ள ஆரம்பித்தார்.

விஷயம் கேள்விப்பட்டு ரவி நண்பனை பார்க்க வந்துவிட்டவன், “என்னடா இது? கேட்டா கொடுத்து தொலைய வேண்டியது தானே? அந்தாள் பத்தி தெரியும் இல்லை. ஏதாவது ஆரம்பிச்சா?” என்று பொரிந்தான்.

“உனக்கு மில்லுல வேலை எல்லாம் இருக்காதா?” செல்வம் சாதாரணமாக கேட்க,

“பேச்சை மாத்தின மிதிச்சிடுவேன். கேட்கிறது என்ன?”

“மாப்பிள்ளைக்கு நல்ல மரியாதைடா” செல்வம் கை தட்டினான்.

“டென்ஷன் பண்றானே. சரிங்க மாப்பிள்ளை சார். பதில் சொல்லுங்க. அந்த பணத்தை நீ தொட கூட இல்லை. அப்புறம் என்ன கொடுத்திட வேண்டியது தானே” என்று பொறுமையாக கேட்டான்.

“நான் எடுக்கலைன்னா. எப்படி இருந்தாலும் அது என்னை சேர்ந்தது. நான் கொடுக்க மாட்டேன்”

“டேய் அதை அப்பாக்கு காமிச்சு கொடுத்ததே அவர் தான். அதனால அப்பாவும் அவருக்கு ஷேர் கொடுத்திட்டு இருந்தார்”

“உங்க அப்பாவை வாழ வைக்க பண்ணார். என்னை ஒழிக்க பண்ணார். நான் எப்படி கொடுப்பேன்”

“ஏண்டா. இப்போ தான் ஏதோ போயிட்டிருக்கு. திரும்ப கெடுத்துக்காத”

“இது தான். இதுக்கு தான் நான் கொடுக்கலை. அப்படி என்ன இந்த செல்வம் எல்லோருக்கும் இளைச்சவனா போயிட்டான். யார் வேணும்ன்னாலும் வந்து என்ன வேணும்ன்னாலும் பண்ணிட்டு போவாங்களா?” என்று அமைதியாக தான் கேட்டான்.

ஆனால் உண்மையில் அவன் அப்படி இல்லை என்பதை கைகளின் நரம்பு வெளிக்காட்டி கொடுத்தது. பல்லை கடித்திருந்தவனின் தாடை இறுகி போய் இருக்க, ரவி கவனித்துவிட்டான்.

“மாப்பிள்ளை. என்னடா. இரு. பேசலாம். கோவப்படாத” என்றான் ரவி.

“என்ன, என்ன பேச போற? அந்தாள் இதுவரை பண்ணாததையா இனி பண்ணிட போறார்?”

“இல்லை மாப்பிள்ளை”

“அவங்க வாழறதுக்கு நாங்க எல்லாம் சாகனும் இல்லை. அப்படியென்னடா? பணம் பதவி இருந்தா யாரை வேணும்னாலும் அடிச்சி போட்டுட்டு போயிடலாம் இல்லை. என்ன நீயும் அப்படி தானே. உன் அப்பா அதை தானே எனக்கு பண்ணார். பார்த்துட்டு தானே இருந்த? தட்டி கேட்டியா அவரை?”

“மாப்பிள்ளை, என்னடா” ரவி பதில் இல்லாமல் தடுமாறினான்.

“இதே செல்வம் அன்னைக்கும், அப்போ நான் மாப்பிள்ளை இல்லை. இன்னைக்கு நான் உன் அப்பாக்கு மருமகன், அதான் அந்த குதி குதிக்கிறார். ஏன்னா பொண்ணு. அவர் பொண்ணு என்னோட இருக்கா. இல்லைன்னா என்னை முடிச்சிருப்பார் இல்லை”

“கண்டிப்பா அப்படி எல்லாம் இல்லைடா. நான் விட்டிருக்க மாட்டேன். என்னால முடிஞ்சதை செய்வேன்டா”

“செய்வ. புண்ணுக்கு மருந்து போட்டு விடுவ. வலி தாங்கிறது யாரு நான் தானே”

“இப்போ எதுக்குடா இந்த கோவம்”

“எப்போவும் இருக்கிறது தான். ஆனா கோவத்தை காட்ட கூட நான் அப்போ இல்லையே. இனி விடுறதா இல்லை. யாரையும் தான்” என்றான் அழுத்தமாக.

“டேய் நல்லா வாழ வேண்டிய நேரத்துல இதென்னடா. வேணாம் மாப்பிள்ளை. இந்த நினைப்பை எல்லாம் விட்டுடு” ரவி நண்பன் கை பிடித்து கெஞ்சவே செய்தான்.

“அப்படி எல்லாம் என் வாழ்க்கையை வீணாக்கிட்டு பண்ற அளவுக்கு இவங்க யாரும் இல்லை. பண்ணுவேன். கண்டிப்பா செய்வேன். ஆனா நான் சந்தோஷமா இருந்துகிட்டு தான்”  என்றான் செல்வம்.

“மாப்பிள்ளை நாச்சி, அவளை யோசிடா”

“அவளையும் தானே கஷ்டப்படுத்தினாங்க”

“அது, அதை நீ மறந்துடு செல்வா”

“முடியாதே. வேற பேசு நீ. இல்லை கிளம்பு” என்றுவிட்டான்.

மிகவும் கடினமாக தெரிந்த நண்பனை ரவி கவலையாக பார்த்திருக்க, “என்ன உன் அப்பாவை நினைச்சு பயமா?” என்று கேட்டான் செல்வம்.

“உன்னை நினைச்சு சொன்னா நீ நம்புவியா?”

“நம்பாம. ஏதோ என்னை சுத்தி நீங்க எல்லாம் இருக்கிறதால தான் செல்வம் இப்படியாவாவது இருக்கேன்”

“நாங்க இல்லாம இருந்திருந்தா நீ இன்னும் நல்லா இருந்திருப்படா” என்று ரவி உணர்ந்தே சொன்னான்.

“ம்ஹூம். முத்து பொண்ணு இல்லாம நல்லா இருக்கிறதா, வாய்ப்பே இல்லை” என்றான் செல்வம்.

அவனின் முகத்திலும் அந்த இளக்கம் மீண்டுவிட, ரவிக்கும் முகம் கொஞ்சம் தெளிந்தது. “அப்போவும் உன் பொண்டாட்டி தானா, நாங்க இல்லை” என்று வம்பிழுத்தான்.

“நீ இல்லாம. ஆனா ஏதோ ஒரு ஓரமா தான்” என்றான் செல்வம் கேலியாக.

“ஓரமாவது இருக்கிறேனே. நாச்சியை பார்க்க போலாமா?” என்று எழுந்தான்.

இருவரும் கடையின் பின் புறத்தில் இருந்து, வீட்டுக்கு சென்றனர். முத்து பெண் நல்ல தூக்கத்தில் இருக்க, செல்வம் அவளை தொந்தரவு செய்யாமல் நண்பனுக்கு குடிக்க கொடுத்தான்.

“அம்மா அவளை  இப்படி பார்க்கணும். திட்டு தான்” என்று ரவி சிரிக்க, செல்வம் தலை கோதி கொண்டான்.

மனைவியின் தூக்கத்தை கெடுப்பவனுக்கு தெரியாதா அவளின் அசதி. அங்கிருந்தே எட்டி முத்து பெண்ணை பார்த்தவனுக்கு அவளுடன் பிணைந்து படுக்க ஆசை வந்தது.

ரவி இருக்க பொறுத்திருந்தவன், அவன் கிளம்பவும் மனைவி பக்கம் இடம் பிடித்து கொண்டான்.

முத்து பெண்ணின் தூக்கம் கலைய, இன்னும் நன்றாக விழிக்க வைக்கும் வேலையை  செய்ய ஆரம்பித்துவிட்டான். அன்றிரவு உணவை வெளியில் தான் வாங்கினர்.

அடுத்தடுத்த நாட்கள் கழிய, செல்வம் எதிர்பார்த்திருந்த நாளும் வந்தது. அகிலன் போன் செய்து, அடுத்த சொத்துக்கான பத்திர பதிவு பற்றி கேட்டான்.

நாராயணன் மேல் இருக்கும் சொத்துக்களை செல்வம் மேல் ஒன்று ஒன்றாக மாற்ற வேண்டும்.

“நான் ஏற்பாடு பண்ணிட்டு சொல்றேன்” என்று வைத்தான் செல்வம்.

ஒரு மாதம் மட்டுமே அவகாசம். நாராயணனுக்கு எந்நேரமும் பதைபதைப்பு தான். அவருக்கும் தகவல் போக, மனிதர் இன்னும் சுருண்டு கொண்டார்.

தன் பயத்தை மீறி அமைச்சரை பார்க்கவும் சென்றார். ஆனால் இவரை சந்திக்க கூட அவர் அனுமதிக்கவில்லை. திருப்பி அனுப்பப்பட்டார்.

“செல்வத்துக்காக தான் விட்டு வைச்சிருக்கேன். அமைதியா இருந்துக்க சொல்லு” என்று அகிலன் மூலம் எச்சரிக்கை வந்தது.

நாளும் வேகமாக செல்ல, பத்திர பதிவுக்கான வாரமும் வந்துவிட்டது. அதற்கான வேலையில் அகிலன் இறங்க, செல்வம் வேடிக்கை பார்த்தான்.

ஆட்கள் வீட்டுக்கு வந்து தேவையானதை வாங்கி செல்ல முத்து பெண் கண்டு கொண்டாள். கணவனிடம் கண்களால் கேள்வி கேட்க, செல்வமோ “நீ வாய் திறந்து கேட்டா பதில் சொல்றேன்” என்றான்.

இதென்ன விளையாட்டா? உள்ளுக்குள் அவள் அதிகம் அஞ்சும் விஷயம் நடக்க போகிறது. இப்போ போய் இப்படி பதில் சொல்றதா என்று கோவம் கொண்டு முறைத்தாள்.

செல்வம் இப்போதும் அவளை ரசித்து நிற்க, நெஞ்சிலே பட்டென்று ஒன்று வைத்தாள்.

நல்ல அடி. “ஆஹ். சில்லன்னு வைக்காம இதென்ன வலிக்க வைக்கிற” என்று அவளின் கையையவே பிடித்து தேய்க்க வைத்தான்.

பெண் கடுப்பாகி கிள்ளி வைக்க, “ஸ்ஸ். ஏண்டி” என்று சட்டையை விலக்கி பார்க்க, சிவந்திருந்தது.

“ஒழுங்கா ஊதி விடு” என்று அவள் உதட்டுக்கருகில் நெஞ்சை கொண்டு வர, கடிச்சிடலாமா என்று யோசித்துவிட்டாள் மனைவி.

பாவம் ரொம்ப வலிக்கும், போகட்டும்.  “பதில் சொல்லுங்க” என்று கண்களால் உத்தரவிட்டாள்.

“மனைவி அதிகாரம். ம்ஹ்ம். பதில் சொல்லியே ஆகணுமா?” என்று இழுத்தவன், அவளிடம் கவலையை கண்டான்.

“ம்ப்ச். இப்போ என்ன, அதுக்குள்ள சுருங்கணுமா?” என்று கை வளைவில் கொண்டு வந்தவன், “என்னை நம்பு. நான் பார்த்துகிறேன்” என்றான்.

மற்றவர்கள் பற்றிய கவலை தானே அது. விட்டுவிட கூடியவர்களா அவர்கள்?

“யாரா இருந்தாலும் என்னால முடியும்” என்றான் உறுதியாக.

கணவனின் நம்பிக்கை, அவனின் வசீகரத்தை கூட்ட, தானே அவன் நெஞ்சில் அழுந்த முத்தமிட்டாள்.

  அங்கு நாராயணன் எப்போதும் போல் யோசித்து, வழி ஒன்றை கண்டறிந்தார்.

நான் வந்தால் தானே கையெழுத்து போட என்று நினைத்து மருத்துவமனையில் போய் படுத்து கொண்டார். அதுவும் சாதாரணமாக இல்லை. விபத்து ஒன்றை ஏற்படுத்தி கொண்டு.

விஷயம் கேள்விப்பட்டு செல்வம் தலையில் அடித்து கொண்டான். “உன் அப்பா எப்போவும் இப்படி தானா, இல்லை இப்போ மட்டுமா?” என்று ரவியிடம் கேட்டான்.

“சும்மா இருடா, நானே பயந்து போய் இருக்கேன்” என்று மருத்துவரை பார்க்க ஓடினான்.

நாராயணன் யோசனை எல்லாம் பலனளிக்கவில்லை. குறித்த நாளில் பத்திர பதிவு நடந்தது. ஆனால் நாராயணன் மிகவும் மகிழ்ச்சியாக கையெழுத்து இட்டு வந்தார்.