கண்ணே முத்து பெண்ணே 20

முத்து பெண்ணை கல்லாவில் பார்த்ததும் செல்வத்திற்கு அதிர்ச்சியே!

அடுத்து அவள் என்ன செய்ய போகிறாள் என்பதை மிக தெளிவாக காட்டிவிட்டாள்.

ஆனால் அது கணவனுக்கு தான் ஒப்பவில்லை.

எனக்கு தான் தலையெழுத்து, இவளுக்கு என்ன?

நல்லா படிச்சு, அருமையான வேலையையும் விட்டு, இதென்ன?

செல்வம் முகம் சுருங்க, மேலேறிவிட்டான். நேரம் எடுத்து குளித்து வர, சமையல் அறையில் அவனின் மனைவி.

இருவருக்குமான காலை உணவு தயாராக, செல்வம் அமைதியாக காத்திருந்தான். இடைப்பட்ட நேரத்திற்கான காபி வந்து சேர, ‘எனக்கு வேணாம்’ என்று கையசைத்தான் செல்வம்.

முத்து பெண் கண்களை சுருக்கி கேள்வியாக பார்க்க, நானும் பேச மாட்டேன் போ என்பதாய் இருந்தான்.

மனைவியிடம் முறைப்பு. “என்ன? நீ பேச மாட்ட, நான் மட்டும் பேசணுமா?” என்று கேட்க,

“இப்போ பேசாம என்ன பண்ணிட்டு இருக்காராம்?” மனைவியின் புருவங்கள் தூக்கியது.

“ஆஹ்ன். அது நான் உன்கிட்ட சொல்லணும் இல்லை, அதான். இனி பேச மாட்டேன்” என்றான் செல்வம்.

“சரி பேசாதீங்க போங்க” என்பதாய் காபியை அவன் முன் வைத்து சென்றுவிட்டாள் மனைவி.

“எனக்கு காபி பிடிக்காது. டீயாவது கொடுடி” என்று குரல் உயர்த்தி கேட்க, எட்டி அங்கிருந்தே ஒரு பார்வை.

“சரி. சரி குடிக்கிறேன்” என்று மருந்து குடிப்பது போல் முகம் வைத்து குடித்தவன், கீழே சென்றுவிட்டான்.

நிமிடங்கள் சென்று சாப்பிட வருமாறு மெசேஜ். செல்வம் பார்த்து கடுப்பானவன், போகவே இல்லை.

“ண்ணே. அண்ணி கூப்பிட்டாங்க, வாங்க சாப்பிட போலாம்” என்று சுப்பிரமணி வந்து நின்றான்.

தம்பியையும் அழைத்திருக்கிறாள் என்பதில் செல்வத்திற்கு அளவில்லாத மகிழ்ச்சி. ஆனாலும் வீம்பில் நிற்க, “என்னண்ணா. வாங்க. அண்ணி சமையல் எப்படி இருக்குன்னு பார்க்கணும்” என்றான் தம்பி ஆர்வமாய்.

“அதெல்லாம் கண்டிப்பா நல்லா தான் இருக்கும். நீ போய் சாப்பிடு. போ” என்றான் செல்வம்.

“நீ முன்னாடியே சாப்பிட்டிருக்கியாண்ணா?” சுப்பு கேட்க,

“இல்லை. ஆனா தெரியும் போடா” என்றான். மனைவி மேல் எல்லாவற்றிலும் ஒரு நம்பிக்கை, உறுதி.

“அப்போ ஏன் சாப்பிட வர மாட்டேங்கிற. வா போலாம்” மணி நகராமல் நிற்க, போடா என்று அனுப்பிவிட்டான்.

சில நிமிடங்களில் தம்பி சாப்பிட்டு இறங்கி வந்தவன், “ண்ணே. சூப்பர்” என்றான்.

“நீயும் போய் சாப்பிட்டு வா. அண்ணி உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க” என்று செல்ல, அண்ணன்காரன் அங்கேயே தான் இருந்தான்.

மேலும் நேரம் சென்றது. டீ குடிக்கலாம் என்றால் மனைவி ஞாபகம். சாப்பிட்டு இருக்க மாட்டா, ம்ப்ச். வைத்துவிட்டான்.

“என்ன மாப்பிள்ளை எனக்கா டீ” என்று ரவி வந்தான்.

“எடுத்துக்கோ” என்று கொடுத்தவன், “அகிலன் கிட்ட பேசுனியா?” என்று விசாரித்தான்.

“பேசணும். என்ன சொல்றா நாச்சி. சமாதானம் பண்ணிட்டியா?”

“நீ முதல்ல அவன்கிட்ட பேசு. என்ன உங்கப்பா அமைதியா இருக்காரா? இல்லை மூளை ஏதும் பிராண்டி புதுசா ஏதாவது ஆரம்பிச்சுட்டாரா?” என்றான் மருமகன் கேலியாக.

“என்னமோ அமைதியா தான் இருக்கார், அதான் இடிக்குது” ரவி சொல்ல, நாச்சி கீழிறங்கி வந்தாள்.

முகம் வாடி இருந்தது. கணவன் பக்கம் திரும்பாமலே. “வா’ண்ணா” என்று அண்ணனை வரவேற்றாள்.

“ஏன் நாச்சி டல்லா இருக்க? ரெஸ்ட் எடுத்தியா?” ரவி விசாரிக்க,

“எனக்கு பசிக்குது” என்றிருந்தான் செல்வம்.

மனைவி அவனை கண்டு கொள்ளாதவளாக, “அம்மா போன் பண்ணாங்க. இப்போ இதெல்லாம் தேவையா?” என்று கேட்டாள்.

“நாச்சி அவன் பசிக்குதுன்னு சொல்றான் பாரு” ரவி நண்பனுக்காக பேச,

“நீயே போய் சாப்பிட வை” என்றாள் தங்கை.

“நானா? சரி வாடா போலாம்”

மாப்பிள்ளையாகப்பட்டவன், “உன் கையால சாப்பிட நான் சாப்பிடலாமலே இருப்பேன்” என்று கடுப்படித்தான்.

“நீ தான் வேணுமாம்” ரவி உஷாராய் ஒதுங்கி டீ குடிக்க ஆரம்பித்தான்.

முத்து பெண் கல்லாவிற்கு செல்ல போக, செல்வம் அவளின் கை பிடித்து தடுத்தவன், “நீயும் வாடா” என்று ரவியை அழைத்து மனைவியுடன் மேலேறினான்.

மற்றவர்கள் முன் அமைதியாக வந்துவிட்டவள், தனியே இருக்கும் நேரம் கணவனின் கையை விலக்கிவிட்டாள். செல்வம் அவளை இழுத்து பிடித்து அமர வைத்தவன், இருவருக்குமான உணவுடன் வந்தான்.

ஒரே தட்டில் அவளுக்கு ஊட்ட, மனைவி முகம் திருப்பினாள். “நேத்துல இருந்து சரியா சாப்பிடலை, நீயும் சாப்பிட்டிருக்க மாட்ட. கோவப்படாம சாப்பிடு” என்றான்.

இவ்வளவு நேரம் பண்ணது யாரு என்று கண்களை சுருக்கி முறைக்க, செல்வம் தட்டை கீழே வைத்துவிட்டான்.

“எல்லா சந்தோஷமும் எனக்கு ஒரு நேரம் தான் போல. எதுவும் நிலைச்சு நிக்கிறதில்லை” என்றான்.

முத்து பெண்ணுக்கு புரியவில்லை. என்ன, எதுக்கு இப்படி என்று கண்களால் கேள்வி கேட்க,

“கல்யாணம் முடிஞ்சு ஒரு நைட் தான், நீ வந்த சந்தோஷமும் ஒரு நைட் தான்”

‘இப்போ நான் எங்க போயிட்டேன்?’ அவளிடம் கேள்வி.

“இங்கேயே இருக்க தான். ஆனா கடைக்கு ஏன் போற?”

‘என் கடை. நான் போவேன்’ மனைவியிடம் அதிகாரம்.

“அதென்ன ஆஹா ஓஹோ தொழிலா? நீயெல்லாம் அங்க போய் உட்காரலாமா? நீ படிச்ச படிப்பென்ன? பார்த்த வேலையென்ன? என்னோட தகுதி அவ்வளவு தான். ஆனா நீ அப்படியா? எதுக்கு அங்கெல்லாம் போற? உனக்கு தனியா தொழில் வேணும்ன்னா கொஞ்ச நாள் பொறு. உன் ரேஞ்சுக்கு ஒரு தொழில் ரெடி பண்றேன்” என்றான் வேகமாக.

முத்து பெண் நொடி கணவனை பார்த்திருந்தவள், உணவுக்காக வாய் திறந்தாள்.  செல்வம் புரிந்து முதலில் அவள் செய்திருந்த இனிப்பை அவளுக்கு ஊட்டிவிட்டு, அவனும் சாப்பிட்டான்.

ரவி மேலே வந்தவன், “மாப்பிள்ளை, நாச்சி சொன்னாளா?” என்றமர்ந்தான்.

“மறுவீட்டுக்கு வரணும். மதிய விருந்து அங்க தான்” என்று சந்தேகமாகவே அழைக்க,

“நான் வரலை” என்றுவிட்டான் செல்வம்.

“எந்த முறையும் செய்யலை. இதையாவது”

“அவளை வேணும்ன்னா கூப்பிட்டு போ”

“நீ வராம அவளும் வர மாட்டான்னு தெரிஞ்சு தானே சொல்ற. அம்மா தான் என்னை நச்சு பண்றாங்க” என்றபடி கமலாவிற்கு அழைத்து பேசினான் மகன்.

“சரி சமைச்சாவது கொண்டு வரேன்னு சொல்றாங்க. வேணாம்ன்னு சொல்லிடாத” என்று ரவி கேட்க, இவர்களுக்காக ஏற்று கொண்டான்.

நாச்சி அண்ணனுக்கு இனிப்பை கொண்டு வந்து கொடுக்க, செல்வத்தின் போன் ஒலித்தது.

பேசி வைத்தவன் யோசனையாக மனைவியை பார்க்க, “என்ன மாப்பிள்ளை” என்று ரவி கேட்டான்.

“இந்த மாசத்துக்கான பணத்தை எப்போ கொண்டு வரன்னு கேட்கிறாங்க” என்று அவனின் முத்து பெண்ணை பார்த்து பதிலளித்தான்.

ரவிக்கு புரிந்து போனது. போன மாதம் வரை அவன் தானே அதை எல்லாம் பார்த்தது. மாதாமாதம் பினாமி சொத்துக்கள் மூலம் வரும் வருமானம். பெரிய தொகையே.

“இவ்வளவு பணம் வரும்டா. இவங்களுக்கு இந்தளவு பங்கு கொடுக்கணும், நாங்க இதை பண்ணுவோம்” என்றான் ரவி தானே.

முத்து பெண் கேட்காதவள் போல் உள்ளே சென்றுவிட, செல்வம் நெற்றியை நீவி விட்டான்.

மதியம் போல் பணமும் வந்துவிட, செல்வம் முன் நின்று வாங்கும் கட்டாயம்.

நாச்சி அமைதியாக கை கட்டி பார்த்திருக்க, அதை பத்திரப்படுத்தினான்.

தாங்களே செய்ததால் ரவிக்கு அந்த கணம் தெரியவில்லை. ஆனால் இப்போது செல்வத்தின் மூலம் அதை உணர்ந்தான்.

வருத்தமே. ஆனால் இதில் என்னால் என்ன செய்ய முடியும்? வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தான் ரவி.

அங்கு நாராயணனோ அதற்கான வேலையில் இறங்கியிருந்தார். நேரே அமைச்சரை பார்க்க கிளம்பியிருந்தார்.

கமலா விருந்துடன் கிளம்பி வர, “தனியாவா வந்தீங்க. அப்பா எங்க?” என்று ரவி கேட்டான்.

“தெரியலை, நீ இப்படி வரவும் அவர் கிளம்பிட்டார், எதுவும் சொல்லலை” என்றவர், எல்லோரையும் அமர வைத்து  பரிமாறினார்.

ரவி சாப்பிட்டு கிளம்ப செல்வமும், மணியும் கடைக்கு வந்தனர். கமலா மகளுடன் இருந்தவர் மாலை போல் வீடு திரும்பினார்.

முத்து நாச்சிக்கு நேரம் இழுத்து தான் சென்றது. கடைக்கு போலாம் என்றால் செல்வம் விடவில்லை. இடையில் தம்பியுடன் வந்து இரவு உணவு முடித்து சென்றான்.

“நீ போண்ணா. நான் பார்த்துகிறேன்” என்று மணி சொல்ல, இருக்கட்டும்டா என்றுவிட்டவன், கடை அடைத்து வீட்டுக்கு வந்தான்.

அதற்குள் மனைவி தூங்கியிருந்தாள். குளியல் போட்டு வந்தவன், தூக்கம் வராமல் நெடு நேரம் நடந்தான். மனைவியை பார்க்க, பார்க்க ஆசை வேறு.

பக்கத்துல போனா சேர்த்துப்பாளா?

இருக்கும் எல்லா பிரச்சனையும் மறந்து இவள் தான் முதலில், முதன்மையாக நின்றாள்.

நடுஇரவு கடந்தே தூங்கியவன், காலையிலும் சீக்கிரம் எழுந்துவிட்டான். இன்றும் முத்து நாச்சி அவனுடன் பேசவில்லை. பேசவும் செய்வாளா என்று சந்தேகம் வந்துவிட்டது.

நாள் அமைதியாக செல்ல, இரவு உணவுக்கு வந்த செல்வம் அறைக்குள் சென்று வந்தான்.

மனைவி கேள்வியாக அறைக்குள் செல்ல, முத்து மாலை கட்டிலில் ஒய்யாரமாக இடம் பெற்றிருந்தது. முத்து பெண்ணுக்கு கண்கள் விரிந்து போனது. அவனின் எதிர்பார்ப்பும் புரிந்தது.

ஒவ்வொரு முத்தையும் மென்மையாக வருடினாள். இவளை கணவன் வருடும் நினைவு. அழக்கூடாது என்ற வைராக்கியம் சில்லு சில்லாக, முத்து மாலையை  நெஞ்சோடு அணைத்து கொண்டவளுக்கு அப்படி ஒரு அழுகை.

காதல்! இந்த வார்த்தையே இப்போது பிடிக்கவில்லை. வெறுப்பாக வந்தது. அதன் மேல், அவள் மேல்.

இளம் வயதிலே அவனை விட்டுவிட முடியாமல், சுமக்க முடியாமல் தடுமாறினாலும் காதலில் வெல்லவே செய்தாள். காதலனும் கணவனாகி விட்டான்.

ஆனால் அந்த வெற்றி அவளுடையது இல்லை. காதலித்தவளுடையது இல்லை.

அவனுடையது. அவளின் கணவனுடையது!

‘அவர் இல்லைன்னா இன்னைக்கு நான் அவரோட இல்லை. ஆனா இதை அவர் செஞ்சிருக்க கூடாது. என்னை விட்டிருக்கணும்’

இப்போவும் அவரை விட்டு போயிடலாமா? அடிக்கடி அதிகமாகவே தோன்றியது.

ஆனால் அவளால் அது முடியாது. நிதர்சனம்.

வருடிய முத்து மாலையை கட்டிலை விட்டு தள்ளி வைத்து படுத்தாள். கணவன் வருவதற்குள் தூங்கிவிட வேண்டும்.

முயற்சி அத்தனையும் வீணானது. செல்வம் வரும் சத்தம் கேட்க முகத்தோடு போர்த்தி கொண்டாள்.

செல்வம் அன்று சீக்கிரமே வந்துவிட்டவன், முத்து மாலையை நேரே கண்டான். மனைவி முகம் காட்டாமல் இருப்பதையும் கண்டு, அப்படியே சுருங்கி போனான்.

ஏமாற்றம். அதுவும் அவனின் முத்து பெண்!

அவளால் என்னை தள்ளி வைக்க முடியுமா? அதெப்படி? கூடாது. கோவமும் வந்தது. கட்டிலில் அமர்ந்துவிட்டான்.

நிமிடங்கள் சென்றும் இருவரிடமும் அசைவில்லை. ஒரு கட்டத்தில் முத்து நாச்சி தான் முகம் காட்டினாள். எழுந்து கணவனின் முதுகோடு கட்டி கொண்டாள்.

செல்வத்தின் இறுகிய உடல் கொஞ்சம் கொஞ்சமாக தளர ஆரம்பித்தது. அவனின் மனதும் மனைவி பால் இளகி நிற்க, அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தான்.

கணவனின் தோளில் முகம் சாய்த்திருக்க, நிமிர்த்தி நெற்றி முத்தம் வைத்தான்.

“நான் வேணாம்ன்னா சொல்லிடுடி. இப்படி தள்ளி வைக்காத” என்றான்.

முத்து பெண்ணுக்கு சட்டென ஒரு கோவம். கணவனின் முடி பிடித்து ஆட்டிவிட்டாள். இவர் வேணாம்ன்னு நான் சொல்வேனா?

“ஆஹ் வலிக்குதுடி” செல்வம் அலற, இன்னும் வலு கூடியது.

“எதுக்கு இப்போ கோவம்? நீ தானே முத்து மாலையை போடாம இருந்த?” என்று கேட்க, அவளின் கண்களில் அப்படி ஒரு சூடு.

‘முத்து மாலைக்கு என்ன அர்த்தம்?’ இடையில் கை வைத்து புருவம் தூக்கினாள்.

செல்வம் நொடி எடுத்து புரிந்து கொண்டவன், “அது நான் வேணும், வேணாம் தான்” என்றான்.

‘பிராடு’ என்று முறைத்து கட்டிலுக்கு செல்ல பார்க்க, “ம்ஹூம். இப்படியே இரு. நீ என்னோட இருந்தா கூட இப்போதைக்கு போதும்” என்றவன் அவளை அணைத்தபடி தான் அன்றிரவு தூங்கினான்.

தொடர்ந்த நாட்களில் அந்த முத்து மாலை கட்டிலுக்கு வருவதும், அவள் அதை அணியாமல் இருப்பதும் தான் இருவருக்குள்ளும் ஓடியது.

ஏமாற்றம் அதிகரித்து கொண்டே சென்றது. ஓர் அளவுக்கு மேல் செல்வம் முத்து மாலையை விட்டும் விட்டான்.

வழக்கம் போல் அன்றிரவு கடை அடைத்து வீட்டுக்குள் வர, நல்ல வாசம். ஜாதி மல்லியா? இழுத்து சுவாசித்து பூ இருக்கும் இடம் சென்றால் அவனின்  மனைவி பூவாய் நின்றாள்.

அதுவும் கழுத்தில் முத்து மாலை வேறு. செல்வத்தின் உடல் சூடாக ஆரம்பித்தது.

முத்து பெண் அவனின் பார்வையில் திணறி வேறு பக்கம் திரும்ப, கன்னத்தை பிடித்து தன்னை பார்க்க வைத்தான். தன்னை மட்டுமே பார்க்க வைத்தான்.

அவளின் உதடுகள் லேசாக விரிந்து கொள்ள, இவனின் உதடுகள் அதனுடன் இழைந்து கொண்டது.

இடையை இறுக்கி பிடித்தவன், “உண்மையாவா?” என்று காதருகில் கிசுகிசுத்தான்.

முத்து பெண்ணுக்கு அவனின் ஆசை புரிய, கணவனின் மேலுடையை விலக்கி நெஞ்சிலே சில்லென்ற முத்தம் வைத்தாள்.

“ஸ்ஸ்” என்று சிலிர்த்தவன், மேலும் அவள் உதடுகளை அங்கேயே அழுத்தினான்.

முத்து பெண்ணும் சலிக்காமல் முத்தங்களை வாரி வழங்க, செல்வத்தின் கட்டுப்பாடுகள் அனைத்தும் அங்கு உடைந்தது.

வீறு கொண்டு பாயும் அவனிடம் இருந்து முத்து மாலையை காப்பாற்றவே பெண் பாடுபட்டுவிட்டாள்.

பேசவே கூடாது என்ற அவளின் வைராக்கியத்தை உடைத்து சிணுங்க வைத்து, அலற வைத்து ஒரு வழியாக்கினான்.

“இத்தனை நாள் என்னை காக்க வைச்சுட்ட இல்லை. எவ்வளவு ஆசை தெரியுமா? ஒரு நைட் போய் என்ன பத்தும்டி. அன்னைக்கு இதெல்லாம் நான் ஒழுங்கா பார்க்கவே இல்லை, முத்தம் கொடுக்கவே இல்லை. தெரியுமா?” என்று கோவம் வேறு.

மனைவி முத்தம் வைத்து சமாதானம் செய்தால், “நல்லா அழுத்தி கொடுடி, இதெல்லாம் என்ன முத்தம்? கடியேன், பல் படணும். யார் கேட்பா உன்னை? ” என்று கட்டிலில் அடாவடி செய்தான்.

மனைவி கடுப்பானால், “என்ன? என்னடி, எவ்வளவு ஏங்க விட்ட. அடுத்து நீ தான் எல்லாம் செய்யணும். பனிஷ்மென்ட். செய்” என்று அதிகாரம்.

புதிதான செல்வத்தை பார்த்த மனைவிக்கு இதிலும் காதல் தான்!

இதற்கு மேல் முடியாது என்று முத்து பெண் சோர்ந்து போன பின்னே கட்டுக்குள் வந்தவன், “இன்னும் நல்லா செஞ்சிருக்கலாம். ஓகே தான். நாளைக்கு பார்த்துக்கலாம்” என்று மெல்ல பிட்டு போட, மனைவி கடுப்பாகி அவனை நன்றாகவே கடித்து வைத்தாள்.

அதையும் உல்லாசமாக வாங்கி கொண்டான் நல்லவன்.