பகுதி 17..

உள்ளே நுழையும் போதே தருணைப் பார்த்து விட்டாள். சாத்வி…. அவனை பார்த்து தயங்கினாலும்.. அடுத்த நொடியே தப்பு செஞ்சவங்க தான் பயப்படனும்…  தலைகுனியனும்? என்ற சத்ரியின் வார்த்தைகள் நியாபகம் வர…. மெதுவாய் தலை நிமிர்ந்தபடி சென்றாள். தருண் அவளை பார்த்த அடுத்த நொடி காணாமல் போய்விட்டான்… வாங்கிய அடி அப்படி! நிம்மதி பெருமூச்சை வெளியிட்டபடி தனது கிளாஸினுள் சென்று அமர்ந்தாள்

பள்ளியில் மனதை ஒருநிலை படுத்த மிகுந்த சிரமமாய் இருந்தாலும்…  முக்கால் வாசி நேரம் வழக்கம் போல் கயல் சரண்யா செந்தில் என அவர்கள் கும்பலுடன் சேர்ந்து தன் நேரத்தை செலவிட்டாள். அதற்கு மூவருமே உறுதுணையாய் இருந்தனர் எல்லாம் தெரிந்திருந்தும் எதுவுமே கேட்க வில்லை…  எப்போதும் போல் தங்களின் பேச்சில் அவளை இழுத்துக் கொள்வர்…

“ ஏய், லன்ஜ் எடுத்திட்டு வா…  சாப்பிட போகலாம்….” என சரண்யா கூற

அவள் அசையாததை பார்த்து “ஏய் உன்னைத்தாண்டி ” என கயல் மீண்டும் அவளை உலுக்கினாள்…

 “ம்ப்ச், சாப்பாடு கொண்டு வரலை” என டெஸ்க்கில் தலை வைத்து படுத்துக் கொண்டாள் சாத்வி .

சாத்வியின் தந்தையை அறிந்தவர்களாய்.. “நம்மளோட லன்ஜ்சை ஷேர் பண்ணிக்காலாம்” என கயல் சரண்யாவிடம் உதட்டினை அசைத்து பேச…இருவருமே தங்களது உணவினை  அவளுக்கு பங்கிட்டு கொடுத்தபடி

“சாப்பிடாமல்….இருக்கிறதாலே எல்லா பிரச்சனையும் சரியா போய்டாது சாப்பிடுடி” என கயல் கூற….

“ஆமாமண்டி.. சாப்புடுடி” என அவர்கள் முன் ஜங் என குதித்து வந்த செந்தில், அத்தோடு நில்லாமல் “ஹாய் டீ’ஸ்“ என செந்தில் பெண்கள் குழுவை கிண்டல் செய்ததும் இல்லாமல் வம்பிழுக்கவும் ஆரம்பிக்க…

“என்னாது…. டீ யா?” என நிமிர்ந்து செந்திலை முறைத்தாள் சாத்வி, சரண்யாவும், கயலும் “ஏய், டீ போட்டா பேசுற” என இவருமே கோரசாக கத்தியபடி அவனை இருபுறமும் சேர்ந்து மொத்தினர்..சில நிமிடங்கள் வரை சமாளித்தவன் அதன் பிறகு முடியாமல் போக…

இருவரையும் ஒரே தள்ளில் விலக்கியவன்….பட பட வென மூச்சுக்கள் வாங்கி

“இதென்னங்கடி நியாயம்…. நீங்க மட்டும் என்னை டா போடுறீங்க…  நான் மட்டும் டீ போடகூடாதா…  நல்லாருக்கே உங்க நியாயம்” என கேட்க…. இந்த முறை சாத்வியும் சேர்ந்து அவனை மொத்தி எடுத்துவிட்டாள் .

தங்களுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும்.. சாத்வியை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தனர் அந்த மூவரும்.

———

ஷிவா , சாத்வியை  பள்ளியில் இறக்கிவிட்டு வரும் போது வழியிலேயே ஷிவாவை நிறுத்தினான் சத்ரி.

‘என்ன’ என்பது போல் வண்டியை நிறுத்திவிட்டு அவனருகில் செல்ல..  “தேங்கஸ்” என சிரித்தமுகத்துடன் சத்ரி கூறினான்.

அது சாத்விக்கான நன்றி என புரிந்த ஷிவா.. “தேங்க்ஸ்லாம் இருக்கட்டும்… ஊரை விட்டு போறதா கேள்வி பட்டேன் என்ன பிரச்சனை நான் எதுவும் ஹெல்ப் பண்ணவா ”என சத்ரியை பார்க்க

இதழ்கள் லேசாய் வளைய…  “ம், ஒரே ஒரு ஹெல்ப்…  சாத்வியை பார்த்துக்கணும்…  வேற எதுவும் வேண்டாம்” என ஷிவாவிடம் கூற

“கண்டிப்பா சாத்விக்கு பண்ணாமலேயா.. நான் உன் பிரச்சனையில் ஏதாவது ஹெல்ப் பண்ணவான்னு கேட்டேன்” என ஷிவா பதிலுக்கு கேட்க

“இல்லையில்லை வேண்டாம்“  இது என்னுடைய பிரச்சனை என்பது போல் நாசூக்காய் மறுத்தான்.

அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. ஷிவாவும் சரி என்பது போல் தலையசைக்க “சாத்வியை மட்டும்” என சத்ரி மீண்டும் இழுக்க “நான் பார்த்துக்கிறேன்டா” என ஷிவாவும் சிறிதாய் புன்னகைத்தபடி நகன்று விட்டான்.

சாத்வியை தருணுடன் பார்த்த நாளுக்கு முன்பு தான்   பஞ்சாயத்து தலைவர், வாங்கிய பணத்திற்கு வட்டி கேட்டு விநாயகத்தின் வீட்டிற்கே ஆள் அனுப்பினார்.

விநாயகம் பரிதவித்தபடி “நான் ஐயாவை நேரில் வந்து பார்க்கிறேன்பா” என அவனை அங்கிருந்து அனுப்ப…  சத்ரி தந்தையை முறைத்த வண்ணம் நின்றிருந்தான்.

குத்தகை பணத்தையும் நகையையும் வெங்க்கட் எடுத்து சென்றிருக்க, குத்தகை பணத்தோடு, பஞ்சாயத்து தலைவரிடம் சத்ரிக்காக வாங்கிய பணமும் சேர்ந்து கொண்டதால், வட்டியும் சற்று அதிகமாகவே சேர்ந்து கொண்டது.

இரண்டையும் செலுத்தும் நேரம் நெருங்க நெருங்க என்ன செய்வது என தெரியாமல் தினமும் உறக்கத்தை தொலைத்தார் விநாயகம்.

குத்தகை நிலங்களை பிரித்து, இரண்டு நிலங்களில் பயிர்கள் போட்டிருந்தார். மற்றொன்றில் வாழை…  இன்னொன்றில் சிறு சிறு பாத்திகளாய் பிரித்து தக்காளி மிளகாய் இன்னும் சில காய்கறிகள் போட்டிருந்தார்.

மூன்று நிலங்களுக்கும் இதோ இன்னும் இரண்டு மாதத்தில் மொத்தமாய் குத்தகை பணம் செலுத்த வேண்டும்.

சங்கரின் ஆட்டங்கள் குறைந்தது என நிம்மதியாய் பெருமூச்சு விடும் முன்  அடுத்த அடி பஞ்சாயத்து தலைவர் மூலம் விழ.. கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த சத்ரிக்கு இது எதுவுமே தெரிய படுத்தாமல் வெகு நாட்களாக மறைத்துவந்தார். அடிக்கடி ஏதோ ஓர் யோசனையில் இருப்பவர் சில நேரங்களில் கண் இமைக்காமல் எங்காவது வெறிப்பதையும் பார்த்த சத்ரிக்கு. ஏதோ சரியில்லை என பட்டுக் கொண்டே இருந்தது.  இப்போது  அதற்கான காரணம் தெளிவாய் தெரிந்த பின்பும் அமைதியை விட்டு தந்தையை துளைத்து எடுத்துவிட்டான்.

 குத்தகை பணம், நகை எல்லாம் வெங்க்கட் எடுத்துச் சென்றிருப்பதாகவும், செல்லில் இருந்து சத்ரியை மீட்க பஞ்சாயத்து தலைவரிடம் வாங்கிய பணத்திற்கு வட்டியும், குத்தகை பணத்தையும் கேட்பதாகவும் கூறி அமர்ந்துவிட்டார்.

“பணம் கொடுத்து  தான் என்னை கூட்டிட்டு வந்தீங்களா?”  இதில் வெங்க்கட் வேற!  இவ்ளோ நடந்திருக்கே, ஏற்ப என்கிட்ட சொல்லி இருக்கலாம்லப்பா” என தந்தையை நொந்து கொண்டவன் எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டான்.

 கேட்டவனுக்கோ ‘அடி மேல் அடி விழுந்தால்… எப்படி எழும்புவது’ என பெருமூச்சு கிளம்பியது.

 “ஐயா வீட்டுக்கு நானும் வரேன்பா, வாங்க பேசி பார்ப்போம்” என இருவருமே கிளம்பி அவரை பார்க்க சென்றனர்.

சத்ரியின் மீதும் அவ்வளவு பாரத்தை வைக்க தோன்றாமல் ஏற்கனவே எடுத்த முடிவுடன் தான் அவரை பார்க்க சென்றார் விநாயகம்.

 வீடு, குத்தகை நிலம் தவிர்த்து தங்களுக்கான விவசாய நிலம் என இரண்டையும் விற்று கடன் அடைப்பதாக அவரிடம் கூறி இரண்டு மூனு நாளில் மொத்தமா கொடுத்து விடுவதாக கூற

சத்ரிக்குமே சற்று அதிர்வாய் இருந்தது. “எல்லாத்தையும் வித்துட்டு நீ எப்படியா உன் பொழப்பை ஓட்டுவ?” என சத்ரியின் மனதில் உதித்த வார்த்தைகளையே பஞ்சாயத்து தலைவரும் கேட்க…

“பிறந்து வாழ்ந்த இடத்தில், இன்னொருத்தன்கிட்ட கையேந்தி நீக்க முடியாது இல்லையா…  சிவஹாமியோட அக்கா திருச்சியில் தான் இருக்காங்க…. அங்கே வர சொல்றாங்க… விதி எங்கே கூப்பிட்டாலும் போகனுமே” என  சொல்லிவிட்டு விரக்தியாய் பேசி அங்கிருந்து கிளம்பினர்

“என்னப்பா திடீர்ன்னு வேற ஊருக்கு எப்படி ?” என சத்ரி கேட்க

“போய்தான் ஆகனும், சத்ரி…. நம்ப நிலைக்கு நாம தான் காரணம் இருந்தாலும் ஒரு சில நேரம் சங்கரனை பார்க்கும் போது வர்ற கோபத்தை என்னால் அடக்க முடியலை…  என்னைக்காவது ஒரு நாள்    அது பிரச்சனையாயிடும் சத்ரி. எங்களுக்கு நீயாவது வேணும். நாம திருச்சி கிளம்பினால் தான் வீடு நிலம் இரண்டையும் விற்க வசதியாய் இருக்கும்…. கிளம்பலாம்” என விநாயகசுந்தரம் முடித்துவிட்டார்.

“நீ வீட்டுக்கு போ…  நிலத்தை விலை பேச ஆள் வராங்க நான் போய்ட்டு வரேன்” என சத்ரியை அனுப்பி வைத்தார்.

திரும்பி வரும் பொது தான் சாத்வியையும் தருணையும் பார்த்தது…  பார்த்தவனுக்கு எந்த ஒரு விகல்பமும் தோன்றவில்லை…. மாறாக… சாத்வி எந்த வம்பிலும் சிக்கி விடக் கூடாது என்பதில் மட்டுமே சத்ரியின் எண்ணம. அழுத்தமாய் விழ…  மிக கவனமாய் அவளை கையாண்டான்…  ஷிவாவிடம் பேசினான்…. சாத்விக்கு பாதுகாப்பு அமைத்த பின்னரே…. தன் வாழ்க்கையை நோக்கி பயணப்பட்டான்… சத்ரி…

அன்று தான் அவளை பார்த்த கடைசி நாள்…. அதன் பிறகு இருவருமே சந்திக்கவில்லை. அதைவிட வாய்ப்புகள் அமையவில்லை என்றே கூறலாம்.

சிவஹாமி விநாயகசுந்தரம் இருவருக்குமே வருத்தம் தான், மகன் ஆசையாய் எடுத்த படிப்பை கூட  விடும் நிலை.

“கடனோட கடனா… நீயும் படிக்கலாம்லயா” என விநாயகசுந்தரம் கேட்க

“மூன்று செமஸ்டர் தான்பா முடிஞ்சிருக்கு இன்னும் ஐந்து சைமஸ்டர் இருக்கு படிப்புக்கு கடன் வாங்கினா…  மற்ற செலவுக்கெல்லாம் என்ன செய்ய“ என சத்ரி பதிலுக்கு கேட்க…

பதிலில்லை விநாயகத்திடம்….

“இருந்தாலும் இன்ஜினியரிங் , நீ ஆசைபட்டு எடுத்தியேடா..” என சிவஹாமி வேதனையாய் கேட்க…

“அதைவிட , நீங்களும் அம்மாவும் எனக்கு முக்கியம் பா..நடக்கிறது எல்லாமே நல்லதுக்குன்னே நினைச்சுப்போம் பா வருத்தப்படாதீங்க” என சத்ரி தான் தேற்றும்படி ஆயிற்று…. படிப்பை விட்டு…. கடமையை கையில் எடுத்துக் கொண்டான்.