“படி படின்னா… ஸ்கூலுக்கு போனால் தான் படிக்க முடியும்… ஸ்கூல் போனால் அப்பா கொன்றுவேன்னு மிரட்டுறாங்க… அம்மாவும் அப்பாக்கு தான் சப்போர்ட் பண்றாங்க. அதை செய்யாத இதை செய்யாத அப்படி பண்ணாத இப்படி பண்ணாதன்னு டெய்லி நூறு அட்வைஸ் பண்றாங்க.. தப்பு அவ செய்ய.. தண்டனை எனக்கா.. இதில் உன்கிட்ட கூட பேசக் கூடாதாம்.. நீயாவது என்னை தேடி வருவன்னு பார்த்தேன்… நீயும் வரலை” என தன் மனதின் ஏக்கத்தை அப்படியே காட்டினாள்.
திகைத்து தான் போனான் சத்ரி… என்னை தேடினாளா..? என்ற கேள்வி எழுப்பி அவனை புரட்டி தான் போட்டது.. வெங்க்கட் பிரச்சனை முடிந்த தருவாயில், சத்ரிக்கு மூன்றாவது செமஸ்டர் முடிந்திருக்க…. சாத்வியை பார்க்க நினைக்கவில்லை. ஏனெனில் சங்கரன் அதற்கு முட்டுகட்டையாய் இருந்தார்.
நினைத்தாலும் பார்க்க முடியவில்லை அவளை.. அதை சொல்வதை விட வீட்டின் நிலையை தெளிவாய் கூறுவதே நல்லது என முடிவு செய்தான்.
“யாரையாவது சார்ந்து இருக்கிறது முதலில் நிப்பாட்டிடு சாவி.., எனக்கு இப்படிபட்ட அப்பா தான் வேணும், என்னை தாங்குற அம்மா தான் வேணும்..சிரிச்சு பேசறதுக்கு நல்ல ப்ரண்ட்ஸ் வேணும்னு நினைக்கிறது எல்லோரோட இயல்பு.. ஆனா அது ஒரு லிமிட்ல நின்னா தான் நல்லது.. அதுக்கு மேல போச்சு..அது தான் ப்ரச்சனையோட ஆரம்பம், ஒவ்வொரு ஏக்கமும் உன் உணர்வுகளை தூண்டி வேற வழி தேட வச்சிடும்.. உன் உணர்வுகளுக்கு ஒரு நாளும் வடிகால் தேடாத சாவி.. அது என்னைக்குமே ஆபத்து தான்.. க்ருத்திகா போனதால்.. உன் அம்மா பட்ற கஷ்டத்தை நீயும் பாரக்கிறேல…. ஊருக்குள்ள எவ்வளவு அசிங்கப்படறாங்கன்னு தெரியும் இல்லையா.. எங்கே நீயும் அப்படி போய்டுவியோன்னு பயந்து தான் அப்படி நடந்துகிறாங்க… இப்போ நான் பார்க்கலைன்னா அது தான் நடந்திருக்கும்” என இறுதியாய் தருண் விசயத்தில் உறுதிபடாத ஒன்றை தூக்கி அவள் தலையில் வைத்தான் சத்ரி…
“இல்லை இல்லை அப்படி எல்லாம் நான் செய்ய மாட்டேன்” என அவ்வளவு நேரமும் சத்ரியின் பேச்சுக்களுக்கு தன் காதை கொடுத்தவள்.. கடைசியில் கோபமாய் பதில் கூற
“சரி செய்ய மாட்ட…. இனிமேலும் செய்ய மாட்டேன்னு என்ன உறுதி” என கேட்க…
சட்டென அவன் தலையில் கை வைத்து “உன் மேல சத்தியமா…. நான் யாரையும் லவ் பண்ண மாட்டேன் சத்ரி.. அக்கா பண்ணின தப்பை நான் செய்ய மாட்டேன்.. நிஜமா செய்ய மாட்டேன்” என அழுகையும் வெடிக்க…. அவன் தலையிலிருந்த கையை எடுத்து தன் கைகளில் வைத்தபடி, அவள் கண்ணீரை துடைத்தவன் “இது அழுக வேண்டிய நேரம் இல்லை சாவி…. யோசிக்க வேண்டிய நேரம். இதிலிருந்து வெளியே வந்தாகனும்…. கண்டவனை எல்லாம் உன்கிட்ட விடுற… நீ ரஃப்பா இருந்திருந்தா அவன் உன்கிட்ட இப்படி பேசிட்டு இருக்க மாட்டான். ‘இரண்டு பேரும் விரும்புறோம்ன்னு‘ உன்னையும் இதில் இழுத்து விட்டிருக்க மாட்டான்” என பல்லைக் கடித்தான் சத்ரி.
“ஆமாம் சத்ரி ப்ரண்டா இருப்போம்னு சொல்லிட்டு, இப்படி பேசினது எனக்கே அசிங்கமா தான் இருக்கு சத்ரி” என மூக்கை உறிஞ்சியவள்… “அம்மா அப்பா இரண்டு பேருமே முன்னெல்லாம் நல்லா பார்த்துப்பாங்க…. எனக்கு என்ன என்ன தேவைன்னு பார்த்து பார்த்து செஞ்சாங்க…. கூடவே நீயும் இருந்த… என்கூட சண்டைபோட, வம்பு இழுக்க…. இப்படி தனியா பீல் பண்ணினதே இல்லை… யாருமே பேச மாட்றீங்க… நீ கூட” என அவளை தனிமை படுத்தி இருப்பதை அப்படியே கூற..
சத்ரிக்கு அவளின் உணர்வுகள் சரியாய் புரிந்தது..
“ ஸ்கூல் போக விடலை.. செந்தில் கயல் சரண்யா மூணு பேரையும் அப்பா திட்டி அனுப்பிட்டாங்க.. டிவி கூட பார்க்க விட மாட்றாங்க… சின்ன சண்டை வந்தா கூட என்னை தான் திட்றாங்க, என்னை தான் அடிக்கிறாங்க… நான் என்ன தான் செய்றது.. தனியா வீட்டுக்குள்ளயே நான் எவ்வளவு நேரம் இருக்க முடியும்“ என விடாமல் பேசிக்கொண்டிருந்தாள் சாத்வி…
“ சரி நீ ஸ்கூல் போக ஏதாவது வழி பண்றேன்… ”
“ வேண்டாம் “
“ ஏன்?”
“இப்போ ஒரு மாசமா போகாமல்.. இப்போ போனால் எல்லாரும் கேட்பாங்க.. அதுவும் இல்லாமல்…. அந்த அந்த தருண் அங்கே தான் இருக்கான்.அசிங்கமா இருக்கு நான் போகலை..”
“இதோ பார் சாத்வி, உன் வாழ்க்கையை நீ தான் பாத்துக்கணும், அடுத்தவங்க என்ன வேணும்னாலும் பேசுவாங்க, செய்வாங்க, இதையெல்லாம் தலைக்குள்ள அனுப்பாத… என்ன தோணுதொ செய்.. நேர்மையா இரு… எதுவா இருந்தாலும் துணிஞ்சு செய்… ஆனா நல்லதை மட்டும்…. சரியா” என சத்ரியன் கூற
“இல்லை நீ பேசறது எல்லாமே நல்லாதான் இருக்கு, ஆனா… எப்பவும் யாராவது காயப்படுத்திட்டே இருந்தா… கஷ்டமா இருக்கு…. அதில் எப்படிகான்சன்ட்ரேட் பண்ணி படிப்பேன் ”
“சாத்வி… அம்மாவும் அப்பாவும் செய்றதெல்லாம் உன் நல்லதுக்காக தான். அதை முதலில் உன் மைண்ட்ல செட் பண்ணிக்க… க்ருத்திகா செஞ்ச தப்பை நீயும் செய்யக்கூடாதுன்னு தான்… உன்னை இந்தளவு இறுக்கி பிடிக்கிறாங்க.
‘நான் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை… நான் நல்ல பொண்ணு தான், நேர்மையான பொண்ணு தான்னு உன் அம்மா அப்பாக்கு நீ புரிய வை’ அப்பறம் கண்டிப்பா எந்த பிரச்சனையும் உன்னை முழுங்காது.. பிரச்சனை எல்லாத்தையும் நீ முழுங்கிடுவ! இந்த உலகத்தில் நீ மட்டும் தான் உனக்கு நல்ல ப்ரண்ட், அட்வைசர் ,வெல்விசர்…
எதுவா இருந்தாலும் உன் மனசாட்சிக்கிட்ட அமைதியா பேசு…. அது கண்டிப்பா உன்னை ஒருமுகப்படுத்தும், நல்ல வழியில் கொண்டு போய் விடும். ஒரு வயசு வரை தான் உன்னை கண்டிக்க முடியும், ஆனா அந்த வயசு வர வரைக்கும் நல்ல பழக்கத்தை மட்டும் கத்துக்க… நல்லதை மட்டும் நினைச்சக்க..”
எந்த நேரமா இருந்தாலும் உண்மையை பேசு.. அதுவே உனக்கு பெரிய மரியாதையை திருப்பி தரும். எதுக்கு பொய் சொல்லனும், தப்பு செஞ்சவங்க தான் பொய் சொல்லனும், பயப்படனும்… நீ எதுக்கு பயப்படனும் ”
சத்ரியின் கண்கள் அவளில் கலந்திருக்க.. அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளில் கலந்தது.. அவன் சொல்வதெல்லாம் உண்மை தான் என நிதர்சனம் உரைத்தாலும் அவள் வயதோ அதற்கு ஒத்துழைக்க மறுப்பதை அப்படியே உணர்ந்தாள்.
அரவணைப்பாய் இருக்க வேண்டிய தாய் தந்தையே வேலி என்ற பெயரில் கொடியை சுற்றும் முள்ளாய் படர்ந்தருக்க அதிலிருந்து வெளிவர துடிக்கும் , பற்றிக் கொள்ள கொம்பை தேடும் கொடியாய் இருந்தாள் சாத்வி்.
சாத்விக்கு தேவையானது மனதை நிறைவு செய்யும் , நிறைக்க செய்யும் ஒரு செயல் அவள் மனதினை கட்டுப்படுத்தும் ஒரு கருவி..
குறிப்பிட்ட வயதில் தறிகெட்டு ஓடத் தான் செய்யும். ஆனால் யார் சொன்னாலும் கட்டுப்படாத மனது அவர் அவர்களுக்கு மட்டுமே கட்டுப்படும்… கட்டுபடுத்துவதற்கு அவர்களுக்கு பிடித்தமான இன்னொரு செயலில் இறக்கி விட வேண்டும்… இதை அறிந்த சத்ரி… அவளை கடவுளை நோக்கித் திருப்பினான்…
“யார் பற்றியும் கவலை படாத சாத்வி, யாரையும் கேர் பண்ணாத…. உன்னோட கடமையை முழு மனசா செய் போதும், அதுக்கு நீ உன் மைண்ட்ட கண்ட்ரேல் பண்ணனும்…. அதுக்கு நீ…. உன் மைண்டை டைவர்ட் பண்ணு சாத்வி“
“எப்படி” என குழப்பத்துடன் சாத்வி கேட்க….
எப்படி என யோசித்தவனும்…. “ம்… உனக்கு தான் ஆஞ்சநேயர்னா ரொம்ப பிடிக்கும் இல்லையா..ஸ்ரீ ராம ஜெயம் எழுது. மைண்ட் ப்ரியா ஆகுறவரை எழுது. அப்பறம் படி கண்டிப்பா முடியும்” என முடிந்தளவு அவளை ப்ரைன் வாஷ் செய்தான்.
அவன் பேசுவதில் நம்பிக்கை இல்லாத போதும், சத்ரி தனக்கு நல்லதை தான் செய்திருக்கிறான் என தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டு.. அவனுக்கு “ சரி” என தலையசைக்க….
“சாத்வி…” என அழைக்க…. நிமிர்ந்து அவனை பார்த்தாள்…
“ ரொம்ப அட்வைஸ் பண்ணினதா நினைக்காத சாத்வி. இனி உன்னை என்னால் பார்க்க முடியுமான்னு தெரியலை… நான் பேசினது எல்லாம் உன் மூளைக்குள் போய் சேர்ந்திச்சான்னும் தெரியலை.. நான் சொல்ல வந்ததை சரியா புரிஞ்சுகிட்டயான்னும் தெரியலை… ஆனால் நியாபகம் வச்சுக்க…. உனக்கு ஏஜ் ஏற ஏற கண்டிப்பா புரியும்…. சாத்வி ஆனால் நான் பேசினதை என்னைக்கும் மறக்காத..”
அவன் பேசயதை கிரகிக்க வெகு நிமிடங்களானது “நீயும் என்னை விட்டு போக போறியா…” என கேட்டாள் அதிர்ந்து போய்.
“ஆமா… சாத்வி… யாரோ சொல்லி தெரிவதற்கு… . நானே சொல்லிடறேன்…. அம்மா அப்பாவை கூட்டிட்டு வேற ஊர் போறேன்…. இனி எப்போ பார்ப்பேன்னு தெரியாது… ஆனால் உன்னை என்னைக்காவது நான் பார்க்கிற நேரம் வந்தா.. நீ இருக்கிற நிலையை பார்த்து எனக்குள்ள சந்தோஷம் மட்டும் தான் வரனும்… அதை மீறி வேற எந்த ஒரு நிலையிலும் நீ இருக்க கூடாது… ஆரம்பத்தில் இருந்து நான் பேசினது உனக்கு புரிஞ்சதுன்னா.. உன்னை சுத்தி இருக்கிறவங்க கிட்ட ஒரு கோடு போட்டு அவங்களுக்குரிய இடத்தில் நிறுத்திடு… அதை தாண்டி நீயும் போகாதே…. யாரையும் உள்ளே விடாதே..” என்றவன்…
போ என்பது போல் தலையசைக்க.. “என்னை தனியா விட்டுட்டு நீ மட்டும் போறல… போ.. போ… வராத… திரும்பி வராத” என ஆத்திரத்துடன் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவனை நெருங்கி அடித்தவள் “போ” என அழுது கொண்டே ஓடி விட்டாள்..
அழும் அவளை தேற்ற முடியாமல் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்தவனுக்கும் கண்கள் கலங்கியது.
அடுத்து இவன் நேராக சென்றது ஷிவாவின் வீட்டிற்கு தான். அப்போது தான் ட்யூட்டிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவன் “ஷிவாண்ணா!” என்ற இவனின் சத்தம் கேட்டு வெளியே வந்தான் ஷிவா