பகுதி 16

மஹா, சங்கரன் இருவருமே, தொட்டதிற்கெல்லாம் குறை சொல்வதும் இல்லாமல், அதை செய்யாதே, இதை செய்யாதே என அட்வைஸ் என்ற பெயரில் சாத்வியின் காதில் இரத்தம் வரவழைத்துக் கொண்டருந்தனர். போதாகுறைக்கு…. சாத்வியிடம் ஒருவன் காதலை சொல்லி இருக்கிறான் என தெரிந்த  பின் சத்ரியின் வீட்டிற்கு செல்ல கூட தடா போட்டுவிட… வீட்டின் அருகில் உள்ள இடங்களுக்கு சுற்ற தொடங்கினாள் சாத்வி.

இந்நிலையில் தான் தருண் அவள் பின்னால் சுற்ற தொடங்கினான். போகும் இடங்களில் எல்லாம் கண்ணில் படும்படி நிற்க, பார்க்க தொடங்கினான்.

அவன் மேல் பயமிருந்தாலும் காட்டிக் கொள்ளதவளாய் இருந்தாள். முதலில் பின் தொடர மட்டுமே செய்தவன், ஆள் அரவரமற்ற இடங்களில்  கொஞ்ச கொஞ்சமாய் அவளை நெருங்கினான்.

பல நாட்களாய் சத்தமில்லாமல் பின் தொடர்ந்த தருண் சாத்வியின் அமைதியான நடவடிக்கையில் அவளை அழைத்தான் மெதுவாக.

“சாத்வி நில்லு” என சுற்றும் முற்றும் பார்த்தான் தருண்…

அவனிடமிருந்து நழுவும் எண்ணம் அவளிடம் இல்லை, பயந்தது போல் காட்டி தன் நிலையை விளக்கவும் தயாராயில்லை சாத்வி ‘என்ன’ என கேட்காத போதும்.  ஓர் ஆர்வம் தலையிட அப்படியே நின்றாள்.

அவள் நின்றதே போதும் என வேகமாய் அருகல் வந்து  . “சாரி….மன்னிச்சிடு” என தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே போல் கேட்டான்.

பார்க்க அவ்வளவு அழகாக இருந்தான் அந்த தருண்.. என்ன பேசப் போறானோ என பயத்துடன் இருந்தவள். கண்டிப்பாய் ‘சாரியை ‘எதிர்பார்க்கவில்லை அதன் பிரதிபிலிப்பை காட்டியபடி ‘எதுக்கு” என கேட்டாள்.

“உங்கப்பா உன்னை அடிச்சாங்கலாமே, என்னால தானே மன்னிச்சுடு சாத்வி” என அவள் அடி வாங்கயதை ,தான் வாங்கயது போலவே கூறி இவன் சிலாகிக்க

“பிடிக்கலைன்னா, எங்கிட்டயே  சொல்லி இருக்கலாம் இல்லையா…. எதுக்கு உங்க வீட்டில் சொன்ன…  சொல்லாமல் இருந்திருந்தா…. அடி வாங்கி இருக்க மாட்டேல்ல” என  கற்றுத் தேர்ந்தவனாய் அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தான் தருண்..

‘வீட்டில் சொல்லி இருக்க வேண்டாமோ ‘ ஏற்கனவே பலமுறை யோசித்து வந்தவளுக்கு…  அருணிண் பேச்சு எப்படி இருந்ததோ , தற்போது அவனுக்கு பதில் சொல்வது சரியல்ல என தோன்ற, அப்போதைக்கு  பேசாமல் சென்று விட்டாள்.

மறுநாளும் சாத்வியிடம் பேசினான். “நேத்து ஓவரா பேசிட்டேனோ… இன்றைக்கும் சாரி சாத்வி” என பாவம் போல கூறி

“உன்கிட்ட லவ் சொன்னது தப்பு தான்,.. நாம ப்ரண்டா இருக்கலாம்…  வேற எதுவும் வேண்டாம்…. காதுகளில் கை வைத்து தோப்புகரணம் போடுவது போல் மெதுவாய் செய்கை செய்ய

மெல்லிய சிரிப்பு அவளிதழ்களில் படிய “ப்ரண்ட் மட்டும் தான்.. சரின்னா பேசு…  இல்லைனா அப்படியே கிளம்பிடு.” என புன்னகை மாறாமல் சொன்னாள் சாத்வி…

இப்போதைக்கு இது போதும் என நினைத்து அப்போதைக்கு சரி என்றான்.

அதஐ காரணமாகவும் வைத்து கொண்டு தினமும் அவளிடம் சாதாரணமாய் பேசி தன் வலைக்குள் இழுத்தான் தருண்.

பார்வை பறிமாற்றங்களில் ஆரம்பித்து.. முகம் பார்த்து சிரித்து சாதாரண நிகழ்வுகளை விவாதத்து.. அவனுடன் கழிக்கும் நேரங்கள் அவளின் மனதிற்கு பிடித்த நிமிடங்களாய் மாறி  பெற்றோரிடம் கிடைக்காத அன்பை…  சத்ரியிடமிருந்து மறுக்கப்பட்ட தோழமையை வேறு இடத்தில் தேடிக் கொண்டது அந்த சிறு பெண்.

காதலா எனக் கேட்டால்   நிச்சயம் இல்லை தான்…  உணர்வுகளை புரிந்து கொள்ள ஒரு உணர்வுள்ள மனதினை தேடினாள். அதற்கு வடிகாலாய் வந்தான் தருண்.

சத்ரியின் அன்பை அவனிடம் தேடி தேடி தோற்று போனாள் ஆனாலும் கிடைத்த இந்த நட்பை விடவும் மனதில்லை.

‘வேண்டாம்…. செய்யாதே’ என்பது போன்ற கட்டளைகள்…  இரண்டும் கெட்டான் வயதில் ‘வேண்டும் செய்வேன்’ என வீம்பாய் திசை திருப்ப வைக்கும்…  அப்படி ஒரு நிலையில் இருந்தாள் சாத்வி.. தருணுடனான தோழமையும் வளர்ந்தது நாளுக்கு நாள்.

இதோ ஒரு மாதம் ஓடு மறைந்தது. இந்த ஒரு மாதமாய் பள்ளிக்கும் செல்லவில்லை சாத்வி.

இவளுக்காகவே மாலை நேரத்தை ஒதுக்கி பள்ளியில் இருந்து நேராக இவளை காண வந்து விடுவான். அப்படி ஒரு நாள் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது… இருவரையும் சத்ரியன் பார்த்துவிட்டான்.

 அன்று முதல் கல்லூரிக்கு செமஸ்டர் விடுமுறை விட்டிருக்க, விநாயகம் சார்பாக  பஞ்சாயத்து தலைவரை காண சென்றான். அங்கே ஒரு வழியாய் பேச முடித்துவிட்டு, யோசனையோடு இவன் வீட்டிற்கு வந்து  கொண்டிருக்கும் போது சிரித்த முகத்துடன் சாதாரணமாய் பேசும் சாத்வியும்  அவளை சிரிக்க வைத்துக் கொண்டிருந்த ஒரு பையனும் கண்களில் பட, அவன் கண்களுக்கு தப்பாக தெரியவில்லை…  ஆனால் எதுவும் சாத்வியை பிரச்சனையில் இழுத்து விட்டால்? என்ற ஒரு கேள்வி தொக்கி நிற்க ‘இனி இவன் சாத்வியை திரும்பி கூட பார்க்க கூடாது’ என முடிவு செய்தான் நொடியில். கூடவே இவள் அடிவாங்கியதும் நினைவு வர, முடிவே செய்து விட்டான்

மெதுவாய் அவர்களின் அருகில் சென்று “சாவி…. இங்கே என்ன செய்யுற யார் இவன்” என கேட்டபடி தருணை முறைத்தான் சத்ரியன்.

அவனை பார்த்ததும் லேசாய் தடுமாற்றம் இருந்தாலும், மனதில் தவறு இல்லாத சாத்வி “எங்க ஸ்கூலில் பிளஸ்டூ படிக்கிறான் பேரு தருண், என பிரண்ட்” என சாத்வி கூற

“உங்கிட்ட லவ் சொன்னவன் அப்படி தானே” என நொடியில் சரியாய் ஊகித்து தருணின் அருகில் செல்ல தருணின் பார்வை திருட்டு பார்வையாய் மாற… தன்னை அடிக்க வருவதாய் நினைத்து இரண்டடி பின் நகர்ந்தான்.

“என்னை பார்த்து எதுக்கு பம்முற ஒருவேளை , ஐயா பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பேசுவீங்களோ” என அவனின் சட்டை காலரை பிடித்து இழுத்தான்.

“சத்ரி , அவனை விடு விடு” என  சாத்வி சத்ரியை தடுக்க…

சாத்வி தனக்கு சப்போர்ட் செய்வதை பார்த்து சத்ரியின் கையை தட்டி விட அந்தோ பரிதாபம் சத்ரியின் உடும்பு பிடியை சிறிதும் தளர வைக்க முடியவில்லை  தருணிற்கு..

அவன் பிடி தளராததை பார்த்து “சாத்வி..  விட சொல்லு, இவனை” என சாத்வியை துணைக்கு அழைத்தான்.

“ விடு சத்ரி…. ஏன் பிரச்சனை பண்ற“ என தருணிற்காய் பேசினாள்.

 “ நீ இப்போ ஓரமா போகலை.. உன் கன்னம் பழுத்துடும்” என சத்ரியின் பற்களுக்கிடையில் வார்த்தைகள் பறக்க..

சத்ரியின் கோபம் அறிந்த அவளும் மூச்சே காட்டாது, அப்படியே நின்றிருந்தாள்….நடப்பதை வேடிக்கை பார்த்தபடி

சாத்வியிடமிருந்து பதிலே வரவில்லை…  சத்ரியின் தீப்பார்வை அவளை அப்படியே உறை வைத்திருந்தது..

“ஏய், நானும் சாத்வியும். விரும்புறோம்… எதுக்கு எங்களுக்கு நடுவில் வர்ற” என சொல்லி முடித்த அடுத்த நொடி தருண் கீழே விழுந்து கிடந்தான்  சத்ரியின் ஓர் அறையில்.

  கீழே விழுந்தவன் அடுத்து எழுந்து ஓட  அவன் பத்தடி செல்வதற்குள் ,சத்ரியன் ஐந்தடிகளில் அவனை கடந்து, ஓடிக் கொண்டிருந்தவனின் சட்டையை பின்னால் இருந்து இழுத்து அப்படியே கீழே தள்ள  ஓடிய வேகத்திற்கு பல மடங்கு அதிகமாக கீழே தடார் என விழுந்தான் தருண்.

விழுந்தவனுக்கு , சத்ரியின் கையால் தர்ம அடி கிடைக்க, அவனால் எழக்கூட முடியவில்லை..

சத்ரியின் வாய் எதுவும் பேசவே இல்லை, பேசியதெல்லாம் அவனது கை தான்..  அவன் கை பேசும் தோரணை பயத்தை கொடுக்க “இனி சாத்வி பின்னாடி நான் வரமாட்டேன்னே, விட்டுடுங்கன்னே” என தருணின் வாயிலிருந்து வரும் வரை  அவன் ஆத்திரம் தீரும் மட்டும் வெழுத்து வாங்கினான்.

“இனி இவ பின்னாடி சுத்தினே! என் கையால் அடி வாங்கியே நீ சாவது உறுதி” என மேலும் இரண்டடி வைத்து அனுப்பினான்..தள்ளாடிக் கொண்டே சென்று மறைந்தான் தருண்.. தருண் சென்றதும் சாத்வியை பார்க்க  அவள் பயத்துடன் சத்ரியை பார்த்திருந்தாள்..

“படிப்பை மட்டும் பாருன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது…  கேட்கவே மாட்டியா..  நீ இப்போ செய்ற ஒவ்வொரு விசயமும் பின்னாடி உன் லைப்பை தான் பாதிக்கும் சாத்வி. ஏன் உனக்கு புரிய மாட்டுது…  ஒரு சில விசயத்தில் பெரிய பொண்ணா.., மெச்சூர்ட்டா இருக்கிற நீ அலார்ட்டா இருக்க வேண்டிய இடத்தில் எப்படி தான் இப்படி அசால்டா இருக்கியோ! சத்தியமா எனக்கு புரியல!

 எப்படி இந்த சாக்கடையை எல்லாம் உன் கிட்ட விடுற…  இந்த மாதிரி விசயத்தில் உன் மூளையை யார்கிட்டையும் கடன் குடுத்துடுவியா” என சத்ரியின் குரல் அமைதியாய் வந்தாலும்…  கோபத்தை அடக்கிக் கொண்டிருக்கிறான் என புரிய….

“அப்பா மாதிரி நீயும் என் மேல் நம்பிக்கை இல்லாத மாதிரி பேசாத சத்ரி…  நம்பு நான் ப்ரண்ட்லியா தான் பேசிட்டு இருந்தேன்” என கூற

நம்பிக்கை என்ற வார்த்தில் சற்று விரைத்தவன்.. அதை அப்படியே உதறி தள்ளி….

“என்னது.. பிரண்டா.. இதோ பார் சாத்வி உனக்கு பர்ஸ்ட் அண்ட் லாஸ்டா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ.. காதலை சொன்னவன்கிட்ட கண்டிப்பா தோழமையை பார்க்க முடியாது   இத இத மட்டும் என்னைக்கும் நீ மறக்க கூடாது” என அவளின் கண்களுக்குள் பாய்ந்தவன்..

பின்…. “செந்திலும் உனக்கு ப்ரண்ட் தானே…. அவன் எப்பவாவது உன்கிட்ட இப்படி தனியா வந்து பேசி இருக்கானா..  இல்லை தினமும் உன் பின்னாடியே வந்து இருக்கானா….  சொல்லு”

“கயல், சரண்யா இரண்டு பேரும் உன் கூட இருக்கும் போது தான் பேசுவான்….  இல்லை நீங்க மூனு பேரும் ஒன்றாக இருக்கும் போது தான் வருவான்…. எனக்கு தெரிஞ்சு அவன் தான் உனக்கு உண்மையான ப்ரண்ட்…  இவன் கிடையாது” என்றவன்…

அவள் முகம் அழுகைக்கு தயாராவதை பார்த்து கடுமையை குறைத்து “இந்த வயசுல…. நீ படிச்சு தான் ஆகனும்.. படிக்கிற வேலையை மட்டும் பாரு..” என்றவன்.. மீண்டும் அமைதியாய்  “ஒழுங்கா படி” என..

சத்ரியன் வார்த்தைகள் சாத்விக்கு கோபத்தை கொடுக்க..அவளுள் அடங்கி இருந்த உணர்வுகள் வெடிக்க ஆரம்பித்தது..