அவனுடன் வார்த்தையாட அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. ஆக, அவன் இருப்பதை கண்டுகொள்ளாமல் இவர்கள் மேலும் எதையோ தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, பூஜிதாவிற்கு மட்டும் அவனது அருகாமை பெரும் அவஸ்தையாக இருந்தது. அவள் எதுவும் பேசவும் முடியாமல், பேசுபவர்களின் மீது கவனம் வைக்கவும் முடியாமல் வெகுவாக தடுமாறிக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம் பார்த்து, “ஏன் பூஜி நானும் கூட ஜாயின் பண்ணிக்கலாமா?” என நேரடியாக அவளிடம் கேட்டு, அவளை விழிக்க வைத்தான்.

“ஹே உனக்கு தெரிஞ்சவராடி? முன்னாடியே சொல்லறதுக்கென்ன?” என அவளைச் சுற்றி இருந்தவர்கள் சலித்துவிட்டு, “டேன்ஸ், மியூசிக் தான் ப்ரோ. எப்படியும் ஆடியன்ஸ் கூட பார்ட்டிசிபேட் செய்யலாம். எப்ப பார்ட்டிசிபேஷன் தேவைப்படுமா அப்போ அனௌன்ஸ் செய்வோம். உங்களுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கிறதுல நீங்களும் ஜாயின் செஞ்சுக்கங்க”அவ்வளவு தான் விஷயம் என்பது போல, அவர்கள் மீதி பேச்சை தொடர, பூஜிதாவுக்கு தான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“ஆமா நீ என்ன செய்வ?” பூஜிதாவின் காதுக்குள் ரகசியம் பேசினான் அவன். மேனி சிலிர்த்தது பெண்ணுக்கு. வேகமாக அவன் முகம் பார்க்க, நெருங்கி நின்றவனுக்கு விலகும் எண்ணம் இல்லை போல. அதே நெருக்கத்தில் நிற்க, “எதுவா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம். நான் வேலையா இருக்கேன். முதல்ல இங்கிருந்து போங்க” என்றாள் தவிப்பாக. இருவரும் நேருக்கு நேர் பேசியே பல வருடங்கள் ஆகிறது. இப்படி திடீரென்று வந்து பேசினால் அவளும் என்னவென்று எதிர்வினையாற்ற முடியும்?

வீம்பும் திமிரும் அவனை விட்டு விலகி நின்றபோது அழகாகக் கைகொடுத்தது. இப்படி அவன் நெருங்கி நின்றால் அவள் எதை இழுத்து பிடிப்பதாம்?

இவள் அவஸ்தை புரியாமல், “நீ பேசிட்டு வாடி. நாங்க போயி டீஜேக்கு அரேஞ்மெண்ட்ஸ் பார்க்கிறோம்” என்றபடி அவளுடன் இருந்த மற்றவர்கள் நகர்ந்து விட, அதில் ஒரு சிலரின் கேலி பார்வையில் இவளுக்குத் தலையை முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

“ம்ப்ச் எல்லாரும் என்ன நினைப்பாங்க? எதுக்கு நீங்க இவ்வளவே கிளோஸா நிக்கறீங்க?” என்றபடி அவள் சற்று நகர, அவனோ, “நகராதடி” என்றான் உரிமையாக.

அவளின் இடையை வளைத்துப் பிடித்திருந்த அவனது திடகாத்திரமான கையை விழிகள் விரித்து பார்த்தவள், “சத்யா என்ன செய்யறீங்க நீங்க?” என்றாள் படபடப்புடன். இதனை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவனது நண்பர்களுக்கு வாயில் ஈ ஆடாத குறை தான்!

“என்னடா இவன்? சும்மா பார்ப்பான் பேசுவான்னு நினைச்சா கட்டி பிடிச்சிட்டு நிக்கிறான்?” என ஒருவன் வாயை பிளக்க, “அதுக்கு அந்த பொண்ணும் தள்ளி விடலை பாரேன்” என்றான் இன்னொருவன்.

“ஓங்கி அறையாட்டி கூட பரவாயில்லைடா. அவனை விட்டுத் தள்ளி நின்னாச்சும் பேச்சு வார்த்தை நடத்தலாம் தானே!” என ஒருவன் காதில் புகைவர சொல்லிக் கொண்டிருந்தான்.

“அதெல்லாம் மச்சானுக்கு அமையுதுடா. நாமளும் தான் இருக்கோமே! ஆனா அவன் திறமையோ திறமைடா” என்று சொன்ன இன்னொருவனுக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. “ம்ம் க்கும் அந்த சூட்சுமம் தெரியாம தானே நாம அவனை வேடிக்கை பார்த்துட்டு நின்னுட்டு இருக்கோம்” என்று மற்றொருவன் ஏக்கப் பெருமூச்சுடன் சொல்லிக் கொண்டிருந்தான்.

சத்யா, “உன்கூட பேசணும் போல இருக்கு. கொஞ்ச நேரம் நில்லு பிளீஸ்” என்றான்.

பூஜிதா பதறியபடி, “இப்பவா?” என்று சத்யாவிடம் கேட்டாள். அவளின் கரங்கள் அவன் கரத்தை அகற்ற முயற்சி செய்தது.

அதை கவனிக்காமல், “ஏன் நல்ல நேரம் எதுவும் பார்க்கணுமா? நீ வந்து காதல் சொன்னப்ப அதெல்லாம் பார்த்தியா என்ன? முளைச்சு மூணு இலை கூட விடாதப்ப வந்து காதலை சொல்லற. எனக்கு எப்படி இருக்கும் சொல்லு? அட்லீஸ்ட் கொஞ்சம் வளர்ந்த அப்பறம் சொல்லியிருக்க வேண்டியது தானே” என ஆதங்கத்தில் புலம்புபவனை என்ன சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. அதுவும் அனைவரும் பார்க்க அவன் கரங்களுக்குள் சிக்குண்டபடி.

“கடவுளே! இதென்ன விளையாட்டு? பிளீஸ் யாரும் பார்த்தா… ஹையோ எனக்கு ரொம்ப எம்பேரிஷிங்கா இருக்கு. முதல்ல விலகி நின்னு பேசுங்க” என்று அவன் கையை அடித்தாள்.

அவனே அவளின் இடை வளைத்ததை உணரவில்லை போலும். சட்டென்று சுதாரித்து வேகமாகக் கையை விலக்கிக் கொண்டு ஓரடி தள்ளி நின்றவன், “ஹே சாரி… சாரி… நான் கவனிக்கலை. சும்மா நீ விலகி போறியேன்னு நிறுத்த நினைச்சேன். மத்தபடி” என பதறியபடி யாரெல்லாம் கவனித்தார்கள் என்று சுற்றியும் பார்வையால் அலச, அவளுக்கோ எல்லையற்ற எரிச்சல்.

“ம்ப்ச்… என் மானமே போச்சு. இப்ப பிரண்ட்ஸ் கிட்ட எல்லாம் நான் என்னன்னு சொல்லுவேன். முதல்ல போங்க இங்கிருந்து” என்று சிடுசிடுத்துவிட்டு விலகிப் போக, “பூஜி முதல்ல நில்லு. உன்கிட்ட நான் பேசணும்” என்றான் மீண்டும் அடமாக.

“இப்ப என்ன பேச போறீங்க நீங்க? எனக்கு வேலை இருக்கு” என பூஜிதா அவனைப் பார்ப்பதை தவிர்த்தபடி படபடப்புடன் சொல்ல, அவனும் அவளைப் பார்க்க வேண்டும், அவளிடம் பேச வேண்டும் என்று தான் வந்தானே தவிர, என்ன பேச வேண்டும் என்றெல்லாம் யோசித்திருக்கவில்லை.

எதையாவது சொல்ல வேண்டுமே என்று, “நான் உன்னை திட்டிட்டே இருந்தேன்டி. அதுதான் சாரி சொல்லணும்ன்னு நினைச்சேன்” என உளறியவனை, ‘நீ என்ன லூசா?’ என்பது போல பார்த்தாள். பின்னே அவனை அவள் திட்டாததா? எத்தனை நாட்கள் எத்தனை விதமாய் வறுத்தெடுத்திருப்பாள்? அதற்கெல்லாமா மன்னிப்பு கேட்பது.

“நிஜமா தான். ஆனா, உனக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்துக்கு எல்லாம் நான் உன்னை திட்டி இருக்கக் கூடாது” என சொன்னவனின் கையை நறுக்கென கிள்ளி வைத்தாள். இதற்குமேல் இவனது உளறல்களை எல்லாம் கேட்பதற்கு அவளுக்கு நேரம் இருக்கவில்லை.

“ஸ்ஸ்ஸ்… ஆஆ… ராட்சசி” என சத்யா அலற, “நானே வேலை இருக்குன்னு சொல்லறேன். இப்ப தான் நிறுத்தி வெச்சு கண்டபடி உளறுவீங்களா? இப்ப நான் போகலை. அவளுங்க என்னை கட்டையைத் தூக்கிட்டு அடிக்க வருவாங்க. பேசாம போயி ஈவண்ட்ஸ் பாருங்க. நாம இன்னொரு நாள் மீட் பண்ணிக்கலாம்” என கண்டிப்புடன் சொல்ல,

“அதுக்கு முதல்ல என் நம்பரை நீ பிளாக்ல இருந்து தூக்கு” என்றான் அவன் அசராமல்.

இப்பொழுதும் விழிகள் விரிந்தது அவளுக்கு. “எனக்கு போன் பண்ணுனீங்களா என்ன?”

“ஏன்டி உன்னை தேடி தான் இன்னைக்கு இங்கேயே வந்திருக்கேன். போன் பண்ணறது எல்லாம் பெரிய விஷயமா?” சிறு சிரிப்பைச் சிந்தி அவளைத் தடுமாறச் செய்தான்.

“சரி சரி… பை…” என்று அவசரமாக உரைத்துவிட்டுப் போனவள், அப்படி தடாலடியாக எல்லாம் அவனின் எண்ணை பிளாக் லிஸ்ட்டில் இருந்தெல்லாம் எடுக்க முடியாது. ஏனென்றால் பூஜிதாவிற்கு கோபம் வரும்போதெல்லாம் சத்யாவிடம் தான் பக்கம் பக்கமாகப் புலம்பி வாய்ஸ் நோட்ஸ் அனுப்பி வைப்பாள். அவனது நம்பர் தான் அவளுடைய டைரி என்று சொல்லலாம்.

இப்பொழுது பிளாக் லிஸ்ட் நீக்கினால் அந்த ஒட்டுமொத்த புலம்பல்களும் உரியவனிடம் போய் சேர்ந்து விடுமே! அதை எல்லாம் மொத்தமாக அழித்து விட்டோ அல்லது வேறு எங்காவது மாற்றி விட்டோ அல்லவா பிளாக் லிஸ்ட்டிலிருந்து எடுக்க முடியும்.

ஆனால், அன்றைய தினம் பூஜிதாவுக்கு சத்யாவின் இம்சைகள் அத்தோடு முடிவதாக இல்லை. அவள் ஆர்கனைஸ் செய்த ஈவண்டுகளில் வாண்டடாக வந்து பார்ட்டிசிபேட் செய்து அவளைத் திணறடித்தான். அவர்கள் நடனம் ஆடும்போது அவளோடு இணைந்து நின்று கொண்டு அவளை வெகுவாக சோதித்தான்.

“ஏன்டா என்ன பாட்டுக்கு என்ன டேன்ஸ் ஆடிட்டு இருக்கான் இவன்?” என அவனது நண்பர்களால் அவன் செய்யும் அலும்பு தாங்க முடியாமல் வழக்கம்போல புலம்பத்தான் முடிந்தது.

“எனக்கு தெரிஞ்சு அந்த கனிகா கழட்டி விட்டுட்டு போனதுல இவனுக்கு மறை கழண்டு இருக்கும்ன்னு தோணுதுடா” என ஒருவன் தீவிரமாக சொல்ல, “டேய் லவ் பெயிலியர்ன்னு நீ அப்பப்ப சொல்லறதுக்கே முன்னாடி எல்லாம் கண்டுக்காம இருந்தவன், இப்பவெல்லாம் செம காண்டாயிட்டு வரான். இதுல நீ மட்டும் அவன் முன்னாடி கனிகாங்கிற பேரை எடுத்த அப்பறம் நீ கைமா தான் பாத்துக்க” என எச்சரிக்கை கொடுக்க,

“நீ சொல்லறதும் சரி தான் மச்சி. சாகற அளவுக்கு போய் வந்திருக்கான். எந்த சாமி புண்ணியமோ இப்படி அவனாவே டைவர்ட் ஆகி இருக்கான். இவன் இதே புலோ ல போயி மீண்டு வந்துட்டா சரிதான். இனிமே அவன் பழைய லவ் விஷயத்துல நான் கப்சிப்” என முதலில் சொன்னவன் சொல்லிவிட்டான்.

சத்யாவிற்கு பூஜிதாவின் மீது இப்பொழுது தோன்றிய பிடிப்புக்குக் காரணம் என்னவாக இருக்கும்? இத்தனை நாட்கள் திரும்பியும் பாராதவன், தன்னை தேடி வந்ததில் பூஜிதாவின் நிலை என்னவாக இருக்கும்? அவனை அவள் ஏற்பாளா? புறக்கணிப்பாளா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

((கதை மொத்தமும் சீரியஸ் ஜோன்ல தான் இருக்கு. அட்லீஸ்ட் இவங்க காதல் போர்ஷனாச்சும் கொஞ்சம் ஜாலியா தர ட்ரை செய்யறேன். அதுனால இவங்க போர்ஷன்ல மட்டும் லாஜிக் யோசிக்காம எழுத போறேன். மறக்காம கமெண்ட்ஸ் சொல்லிட்டு போங்கோ டியர்ஸ்… தேங்க்ஸ் ஹேமா அண்ட் லக்ஷ்மி கமெண்ட்ஸ் செஞ்சதுக்கு))