காவியத் தலைவன் – 15
அந்த வார ஞாயிற்றுக்கிழமை மாலை பெசண்ட் நகர் பீச்சிற்கு ஆர்வமாக கிளம்பிக் கொண்டிருந்த சத்யேந்திரனை அவன் நண்பர்கள் வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“சீக்கிரம் கிளம்புங்களேன்டா. என்னையே பார்த்துட்டு இருந்தா எப்படி?”
“ஏன்டா மச்சான் அந்த ஸ்ட்ரீட் டே ஈவண்ட்க்காகவா எங்க சண்டேவை காலையிலிருந்து மொத்தமா வேஸ்ட் பண்ணிட்டு இருந்த?” ஆற்றாமையுடன் ஒருவன் கேட்க, சத்யா பலமாக முறைத்தான்.
“உங்க நொல்லை வேலையை எல்லாம் நைட் பார்த்துக்கங்க. இப்ப சீக்கிரம் கிளம்பறீங்களா?”
“எத? ஆறு மணி ஈவண்டுக்கு நாலு மணிக்கேவா?” ஒருவன் வாயைப் பிளக்க, “ம்ப்ச் இப்ப போனா தான்டா நல்லா இருக்கும். சீக்கிரம் சீக்கிரம்” என அவசரப்படுத்தினான்.
“உனக்கே இது நியாயமா தெரியுதா? சண்டே எந்திருச்சோமா சிக்கன், மட்டன்னு சைடிஷ் ரெடி செஞ்சோமா. கலர் கலரா பாட்டிலுங்களை வாங்கி பூஜையை தொடங்கினோமான்னு இல்லாம இப்படி சாயங்காலம் வரை ஒரு பாட்டிலை கூட தொட விடாம பண்ணிட்டியேடா?” ஆதங்கம் குறைய மறுத்தது அவன் நண்பர்களுக்கு.
“மச்சான்… வெண்ணிலாடா. அன்னைக்கு முழுக்க அவ அழகை புகழ்ந்து பேசுனீங்க. இன்னைக்கு அவ இன்வைட் செஞ்ச ஈவண்ட் போக இப்படி அழறீங்களே?” இலகுவாகப் பேசுபவனின் மண்டையை உடைக்கும் வெறியில் இருந்தார்கள் மற்றவர்கள்.
‘அந்த பொண்ணோட அழகை புகழ்ந்து பேச இவன் விட்டானாடா? அந்த பொண்ணு பேச்சு எடுத்தாலே என்னமா முறைச்சான்?’ என அவர்கள் தங்களுக்குள் புலம்பிக் கொண்டனர்.
ஒருவன் கடுப்புடன், “டேய்! அவளே ஒரு நம்பர் கூட குடுக்காம ஓடறா. இதுல இன்னைக்கு போயி கூட்டத்துல தான் அவளை கண்ணுல பார்க்க போறோமா? இதுக்காக யாராச்சும் சண்டேவை வேஸ்ட் செய்வாங்களா? எங்களுக்கு மேகா, நட்சத்திரா, வெண்ணிலா, ஏன் அந்த வானமே இறங்கி ஒரு பொண்ணா வந்தா கூட எங்களுக்கு யாருமே வேணாம்டா. ஒரு பாட்டில், ஒரே ஒரு பாட்டில், ஆளாளுக்கு ஒரு பாட்டில், கொஞ்சம் சிக்கன் எங்க சண்டேவை சொர்கமாக்க இது மட்டும் போதும்” கண்ணில் முழுதாய் நிரம்பிய பாட்டில்கள் கலர் கலராய் தெரிய சொக்கிப்போனவனாக சொல்ல, சத்யா அவன் தலையில் பலமாகக் கொட்டினான்.
“ஸ்ஸ்ஸ்… ஆஆ… மச்சான்…” என பாவமாக இழுக்க, “மரியாதையா கிளம்பிடுங்க” என்றான் விரல் நீட்டி எச்சரித்து.
“ஆமா ஆமா இப்ப போனா தானே ஈவண்ட் ஆர்கனைஸர்ஸை எல்லாம் பார்க்க முடியும். சீக்கிரம் கிளம்புங்கடா. சத்யா அங்கே முக்கியமான ஒருத்தங்களை பார்க்கணும்” என்று ஒருவன் சொல்ல, சத்யாவின் இதழ்களுக்குள் புன்னகை சிக்குண்டது.
புன்னகையை மறைத்தபடி, “காலையிலிருந்து புலம்பிட்டே இருக்கீங்கடா. சீக்கிரமா கிளம்புங்களேன்” என அவன் மீண்டும் சலித்துக் கொள்ள,
“மச்சான் இதெல்லாம் உனக்கே நியாயமாடா? பாட்டில்டா…” என மீண்டும் கண்களில் பாட்டில் கனவு மிதக்க சிலாகித்துப் பேசுபவர்களின் மீது கொலைவெறி வர, “உங்களை…” என பல்லைக்கடித்தபடி நெருங்கி வந்த சத்யா, “ஒழுங்கு மரியாதையா கிளம்பினா நைட் ஆச்சும் தண்ணி அடிக்க விடுவேன். இல்லையா ரூமில் இருக்கிற பாட்டிலை எல்லாம் ஹாஸ்டல் வார்டன் கிட்ட கொண்டு போய் தந்துட்டு, மாட்டி விட்டுட்டு போயிட்டே இருப்பேன்” என மிரட்டினான்.
“கிராதகா. நீ எல்லாம் நல்லா வருவடா. உன்கூட போயி பிரண்ட்ஷிப் வெச்சிருக்கோம் பாரு. பார்க்கிறேன். அங்கே போனதுக்கு உருப்படியா அந்த பொண்ணை நிறுத்தி ரெண்டு வார்த்தையாச்சும் நீ பேசிக் காட்டற. அப்படி முடியாதா வேற ஒரு பொண்ணையாச்சும் கரெக்ட் பண்ணற. இன்னும் லவ் பெயிலியர்ன்னு உடைஞ்சு போன வீணையை வாசிச்சியா… அப்பறம் உன்னை நாங்க வாசிக்க தொடங்கிடுவோம்” என பேசியவன் புலம்பியபடியே கிளம்பினான்.
இன்னொருவனும், “டேய்! அந்த பொண்ணுகிட்ட பேசறதெல்லாம் மச்சானுக்கு அசால்ட்டு டா. அன்னைக்கு பார்த்தே உனக்கு புரியலையா? இவனுக்கு கண்டிப்பா அந்த பொண்ணை நல்லா தெரியும். சும்மா தெரியாத மாதிரி சீன் போடறான். இன்னைக்கு பாரு மச்சானோட பெர்பாமென்ஸை. சும்மா ரவுண்டு கட்டி அடிப்பான்” என சொல்லியபடி கிளம்ப, மற்றவர்களும் வேறு வழியில்லாமல் நண்பனைத் திட்டியபடி கிளம்பினார்கள்.
“லூசுங்களா?” என்றுவிட்டு சத்யா சிரித்தானே தவிர, பூஜிதாவைப் பற்றி ஒரு வார்த்தை உதிர்க்கவில்லை.
நண்பர்களுக்கு அன்று அவள் நோட்டீஸ் தந்த போது இருந்த ஆர்வம், இன்று அங்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே ஜலப்பிரதாபங்களை நண்பன் தொடக் கூட விடாததால் காணாமல் போயிருந்தது. அப்படி அங்கு போய்தான் ஆக வேண்டுமாக்கும் என நொடித்துக் கொண்டார்கள்.
ஆனால், சத்யேந்திரன் விடுவானா? இன்னைக்கு போயே ஆகணும் என பிடிவாதம் பிடித்து இவர்களை ஒருவழியாகக் கிளப்பிக்கொண்டு சென்று சேர்ந்தான்.
வேண்டா வெறுப்பாகக் கிளம்பி வந்தவர்களும் அங்கு பல வண்ண பட்டாம்பூச்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாய் தெரியவும், “அப்பப்ப மச்சான் செய்யறதுல ஏதோ ஒரு நல்லதும் அமைஞ்சிடுதுடா. சிங்கிளா இருக்கிறவனுங்களுக்கு எல்லாம் இங்கேயாச்சும் மிங்கிளாக ஏதாவது வழி கிடைக்குதா பார்க்கலாம்” என உற்சாகமாகச் சொல்லியபடி சீக்கி அடிக்க, அங்கே வந்ததிலிருந்து சத்யாவின் பார்வை மட்டும் இன்சு விடாமல் அவ்விடத்தை அலசிக் கொண்டிருந்தது.
“பாரு யாருன்னே தெரியாதுன்னு அளந்து விடறான். இங்கே வந்ததும் கண்ணு எப்படி எக்ஸ்ரே பண்ணுது பாரு” என ஒருவன் இன்னொருவனின் தோளில் இடித்தபடி சொல்ல,
இடி வாங்கியவனோ, “ஏன்டா மச்சான், இப்ப நாங்க எல்லாம் உன் கண்ணுக்குத் தெரிய மாட்டோமே” என சத்யாவிடம் வம்பிழுத்தான்.
“ம்ப்ச்… சும்மா நொய் நொய்ங்காம அவ எங்கேயாச்சும் கண்ணுக்கு தெரியறாளான்னு பாருங்க” என வேலையைக் கொடுக்க, “டேய்! இங்கே எவ்வளவு அழகான பொண்ணுங்க எல்லாம் இருக்காங்க, நாங்க வந்ததுக்கு ஆசை தீர சைட் அடிச்சுட்டு, கொஞ்சம் அவங்களை இம்பிரஸ் பண்ணற வேலையை எல்லாம் பார்க்கிறோம்டா… சும்மா எங்களை போயி” என நழுவப் பார்க்க,
“கழுத்தைத் திருகி காக்காக்கு போட்டுடுவேன். முதல்ல அவளைத் தேடி கொடுத்திட்டு அப்பறம் மத்த வேலைக்குப் போங்க” என சீறினான் சத்யா.
“டேய் சத்தியமா உன்கூட முடியலைடா. நீ பேசாம லவ் பெயிலியர் சோக கீதத்தையே கன்டினியூ பண்ணு மச்சான். நாங்க கொஞ்சம் பிழைச்சு போறோம்”
“மவனுங்களா இன்னொரு தடவை லவ்வு, பெயிலர்ன்னு மொக்கை போட்டுட்டு இருந்தீங்களா? அப்பறம் எதை தூக்கி அடிப்பேன்னு தெரியாது” என காண்டாக அவன் கத்தியதில் இவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“இவன் நம்மகிட்ட மாட்டலைடா. நம்ம எல்லாரும் தான் இவன்கிட்ட மாட்டிட்டு இருக்கோம்” என அழாத குறையாக ஒருத்தன் சொல்ல, “விடுடா. இத்தனை நாளா இவனை பார்க்கவே சகிக்கலை. இப்பதான் மனசு வந்து வேற விஷயத்தைப் பத்தி யோசிக்கிறான். பொழைச்சு போறான். அந்த வெண்ணிலாவை தேடுவோம்” என சொன்னவர்களும் அவ்விடத்தைப் பார்வையால் அலசினார்கள்.
ஸ்டேஜுக்கு பின்புறம், புளூ ஜீன்ஸ் போட்டுக்கொண்டு காலர் வைத்த வெண்ணிற டீஷர்ட்டுடனும், அதே வண்ணத்தில் தொப்பிகளுடனும் சிலர் சுற்றிக்கொண்டிருக்க, அங்கு நகர்ந்தவனின் பின்னேயே இவர்களும் நகர்ந்தார்கள்.
அங்கே ஒரு கூட்டத்தில் பூஜிதா தெரிய, “அதோ மச்சான் வெண்ணிலா அங்கே” என ஆர்வமாக நண்பனிடம் கைகாட்டியவன், சத்யா ஏற்கனவே தன் பார்வையை அங்கே பதித்திருப்பதை கண்டு, “இனி கண்டினியூ பண்ணிக்க…” என மற்றவன் சொல்லி முடிக்கவில்லை. “சரிடா நீங்க சுத்திட்டு இருங்க, நான் வந்துடறேன்” என இவர்களைக் கழட்டி விட்டு அங்கே ஓடினான்.
“அடப்பாவி” என அவர்கள் கத்தியதை அவன் காதில் வாங்கினால் தானே!
“வாங்கடா அவன் வரட்டும் நம்ம கொஞ்சம் உலாத்தலாம்” என ஒருவன் அழைக்க, “ஸ்ஸ்ஸ்… மச்சானோட பர்பாமென்ஸை பார்த்துட்டு போலாம். பேசாம வாங்கடா…” என அனைவரும் சத்யா சென்ற திசையை நோக்கிச் சென்றார்கள். சென்றவனோ படமே ஓட்டி விட்டு இவர்களை நெஞ்சைப் பிடிக்கச் செய்துவிடுவான் என தெரியவில்லை பாவம்.
சத்யா பூஜிதாவின் பின்புறம் கையைக்கட்டி நின்றுகொண்டு, அவள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருக்க, கொஞ்ச நேரம் பேச்சு மும்மரத்தில் அவனை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் அவனைக் கவனித்து விட்டு, “ஹலோ பாஸ், நீங்க யாரு?” என ஒருவன் கேட்க, அங்கே இருந்த மற்றவர்களும் அவனை திரும்பி பார்த்தார்கள். தனக்கு நேர் பின்னால் நெருங்கி நின்றவனைச் சாதாரணமாக திரும்பிப் பார்த்த பூஜிதாவின் விழிகளும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.
நீருக்குள் மூழ்கியவள் போல மூச்செடுக்க அவள் திணற, சின்னதாய் சிரித்தபடி சுவாரஸ்யமாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையை எதிர்கொள்ள பயந்து வேகமாகத் திரும்பிக் கொண்டவளுக்கு, இன்னமும் மூச்சு விடச் சிரமமாக இருந்தது.
“உங்களை தான். யார் நீங்க? இங்கே என்ன செய்யறீங்க?” மீண்டும் ஒருவன் கேட்க, அவன் வேண்டுமென்றே பதில் சொல்லாமல் நின்றிருந்தான்.
“சார் ஈவண்ட் பார்க்க வந்தீங்கன்னா ஸ்டேஜுக்கு முன்னாடி போயி வெயிட் பண்ணுங்க சார்” என ஒருவன் மீண்டும் பொறுமையாகக் கூற, “நான் ஈவண்ட் பார்க்க வரலையே” என்றான் அசால்ட்டாக.
“சார் எங்களுக்கு நிறைய வேலை இருக்கு சார். இங்கே நின்னு இப்படி வேடிக்கை பார்த்துட்டு இருந்தீங்கன்னா நாங்க என்ன செய்யறது?” என சலிப்புடன் ஒரு பெண் கூற,
“ஓ ரியலி சாரி. ஏம் ஐ டிஸ்டர்பிங்?” என போலியாகக் கேட்டவனை என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.