“வேற எதுக்கு சூப் வச்சு குடிக்க தான்” என பட்டென போட்டு உடைக்க

“சூப்பா..?” இவன் யோசிக்க

“உடம்பு தோறனும்ல.. சும்மா தேறுமா?”இவள் நக்கலாய் கேட்க

சூப், உடல் தேறுமா? என்றவுடன் ஷிவாவிற்கு பல்ப் எறிந்தது “ஏய், அந்த சத்ரிக்காகவா திருடின?” என அதிர்வாய் இவன் கேட்க

“ஆமா… சத்ரிக்காக தான் திருடினேன், அவனுக்கு சூப் வச்சு குடுக்க தான் திருடினேன். அவனுக்கு உடம்பு தேறனும்னு தான் திருடினேன்” என மார்புக்கு மத்தியில் கை கட்டியபடி பதில் கூறினாள் சாத்வி…

“அதுக்கு எதுக்கு சாத்வி என் வீட்டில் திருடனும்” என கேட்க

“பொருளை உடச்சவன்கிட்ட தானே சரி பண்ண ஜார்ஜ் வாங்கனும், நீ சரி பண்ண மாட்டே அதான் நானே சரி பண்ணிட்டேன்” என வார்தைகளில் விளையாட

இப்படி ஒரு பதிலை எதிர்பாராதவனுக்கு ஆச்சர்யம் தான். நையன்த் தானே படிக்கிறா? இந்த சாத்வி. வார்த்தையில் இப்படி விளையாடுறாளே.. என ஆச்சர்யபட்டலும், சத்ரியின் மீது அப்படி என்ன பாசம்.  அப்படி ஒரு ஆத்திரம் கிளர்ந்தெள “ஓ… அவனை அடிச்சதுக்கு…  நீ இப்படி திருட கிளம்பிட்டியா” என முறைத்தான் ஷிவா

“இன்னும் கிளம்பவே இல்லையே மாமா” என ஒரு மார்க்கமாய் சிரிக்க…

அவளின் சிரிப்பு வேறு எதையோ கூற “என்ன?” என புரியாமல் கேட்டவன்..

“விசயம் தெரியாமல் அந்த பயலுக்கு சப்போர்ட் பண்ற சாத்வி” என இவன் கண்டித்தான்.

“எனக்கு  சத்ரியை பத்தி முழுசா  தெரியும்…. நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்” என திமிறாய் பேசினாள் சாத்வி

“ நீ திருடினதை உன் அப்பாகிட்ட சொன்னால் என்னாகும் தெரியுமா?”

“ நீ சொல்லி தான் பாரேன்“ என நக்கலாய் கூறியவள்  “ நீ சொன்னாலும் ஒன்றும் பண்ண மாட்டாங்க எங்க அப்பா. என் மேல அவ்வளவு பாசம் வச்சிருக்காங்க” என பெருமையாய் கூறினாள்.

ஹா ஹா ஹா…  என வாய் விட்டு சிரித்தவன் “ஆமா ஆமா…  உன்னை ஒன்னும் செய்ய மாட்டாங்க.. ஆனா சத்ரிக்காக தான் செஞ்சேன்னு தெரிஞ்சதுன்னா.. சத்ரியை எங்கிட்ட அனுப்பிடுவார்..” என சாத்வியிடம் பயத்தை விதைக்க

சத்ரி என்றதும் எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ “சத்ரியை அடிச்சன்னு ஏற்கனவே உங்க மேல கோபமா இருக்கேன் மாமா. அவனை மறுபடியும் அடிச்சீங்க.. மாமான்னு கூட பார்க்கமாட்டேன் கொன்னுடுவேன்” என பதிலுக்கு அவள் மிரட்ட..

“நீ…. என்னை கொல்ல போறியா..” என சிரித்தே விட்டான் ஷிவா “அந்தளவு தைரியம் இருக்கா உனக்கு, என்னை கொல்றது இருக்கட்டும் முதலில் என்னை அடி பார்ப்போம்” என சாத்வியின் ஒடிசலான தேகத்தை பார்த்து கூறியவன   “நீ அடிச்சு எனக்கு வலிக்க போகுதா?” என சிரிப்புடன் கேள்வி கேட்டான்.

சத்ரியை அடித்து துவைத்திருந்தவன் மீது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்தவளுக்கு  ஷிவாவின் பேச்சு  வேப்பிலை அடிக்க.. அவளின் மூளை மீண்டும் குறுக்காய் யோசிக்க ஆரம்பித்தது…

இளங்குமரியாய் இருந்தவளுக்கு மூளையும் வெகு வேகமாய் வேலை செய்து உதவ.. சுற்றிமுற்றி பார்வையை ஓட்டி.. ஷிவாவையும் ஓரக்கண்ணால் நோக்கினாள்.. பின் அவன் மப்டியில் இருப்பதை பார்த்து கொஞ்சம் முகத்தில் பயத்தை கொண்டு வந்து..  “ ஐயோ அம்மா யாராவது காப்பாத்துங்களேன்…. இந்தாளு எங்கிட்ட தப்பா நடக்குறான்..” என கத்தியே விட்டாள்… சாத்வி.

சரண்யா கயல் இருவரும் வாய்க்குள் சிரிப்பை அடக்கினர்…  பின்னே சாத்வி செய்ய போகும் செயல் அவர்களுக்கு புரிந்துவிட்டதே.

“ஏய், என்ன பேசற நீ..முதலில் , வாயை மூடு ” என ஷிவா…  சாத்வியின் இடது முழங்கையை பிடித்து தன்னருகில் நிறுத்தி, வலது கையினால் அவள் வாயை மூட

“நான் எங்கே அப்படி நடந்தேன்” என பல்லைக் கடித்தான்.

ஏற்கனவே பள்ளி மாணவியிடம் யாரோ கோபமாய் பேசுவதை ஒரு சிலர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சாத்வியின் சத்தமும், ஷிவாவின் செயலும்..

ஒரு சிலரை சாத்வியின் பக்கமாக வேகமாய் வரவழைத்தது வந்தவர்கள்..

“ஏன்யா….அறிவில்லை ,சின்னபிள்ளைகிட்ட வம்பிழுத்துட்டு இருக்கே” என சகட்டுமேனிக்கு திட்டியபடி

“நீ அங்கிட்டு போமா” என சாத்வியை விலக்கி சிலர்  ஷிவாவை சூழ

“யோவ்…  நான் போலீஸ்யா.. அவ என்னோட மாமா பொண்ணு “ என ஷிவா கூற

அதை நம்பாத பார்வையுடன் பார்த்தவர்கள்…

“இந்த மாதிரி ஆளுங்க எங்கையா உண்மை பேச போறாங்க.“

“இந்த மொகறையப் பார்த்தால் போலீஸ் மாதிரியா இருக்கு.” என ஒவ்வொருவராய் பேச ஆரம்பிக்க..

“பொம்பளை புள்ளைகிட்ட வம்பிழுத்தவன்கிட்ட என்னைய பேச்சு வேண்டி கிடக்கு.. . அடிங்கையா இவனை” என கூட்டத்தில் ஒருவன் ஊசுப்பேற்ற

 அது பள்ளியை சுற்றியிருந்த வளாகம் ஆதலால் ஆங்காங்கே.. கடையில் இருந்தவர்கள்  போவோர் வருவோர்  என அனைவரும் சேர்ந்து அவனை மொத்த ஆரம்பத்தனர்..  சாத்விக்கோ…. சத்ரியின் அடி வாங்கிய உடல் கண்களில் நிற்க…. கொஞ்சமும் இறக்கப்பட வில்லை.. சற்று தள்ளி நின்று கொண்டாள்.

“இனி பொம்பளை புள்ள பக்கம் போன அவ்வளவு தான்” என அவனை விட்டுவிட்டு ஆளாளுக்கு சென்று விட

அடிகளையும் உதைகளையும் வாங்கி நடக்க சிரம்பட்டவன்.. அங்கே இருக்க பிடிக்காமல் கொஞ்ச தூரம் நடந்தே வந்து, ஒரு பெரிய மரத்தடியில் சாய்ந்து அமர்ந்தான்.. அடி வாங்கி கொடுத்த சாத்வியையும் மறந்தவனாய்…

“ஏய், வர வர ரொம்ப அட்டகாசம் பண்றடி” என  திட்ட ஆரம்பித்த கயலை ஒரு முறை முறைத்து பார்வையாலேயே “நீ போ இன்னும் எனக்கு வேலை இருக்கு” என அவர்களை அங்கிருந்து செல்ல சொல்லி ஷிவாவின் பின்னாடியே வந்தாள் சாத்வி.

 “அடி கொஞ்சம் தான் போல” என வீங்கியிருந்த முகத்தையும் அவன் நடந்து வந்த ஸ்டைலையும், அமர முடியாமல் அமர்ந்த விதத்தையும் பார்த்தவாறு கேட்டாள் சாத்வி.

திடீரென கேட்ட குரலில் மரத்தில் சாய்ந்தபடி மூடியிருந்த கண்களை பட்டென திறந்து சாத்வியை தீப்பார்வை பார்த்தான் ஷிவா. அவள் மேல் அடங்காத கோபம் கனன்று கொண்டிருந்தாலும், அடிவாங்கிய உடல் வேலை செய்ய மறுக்க..

“தப்பே செய்யாத என்னை எதுக்கு கோர்த்துவிட்டு அடிவாங்க வச்ச சாத்வி. அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லையா” என கோபமாய் கேட்க வந்தவனின் குரல் சோர்வினுடே வந்து விழுந்தது.

“சத்ரி மட்டும் என்ன தப்பு செஞ்சான்னு ,அவனை அடிச்ச?” என சாத்வி அசையாமல் கேட்க..

ஷிவாவின் மனமே ஒரு நொடி அசைந்தது… ….

“என் சத்ரிக்கு இப்படி தானே வலிச்சிருக்கும்” என கண்களில் அமைதியை காட்டி ஒரே வரியில் சொல்ல…  அதிர்ச்சியில் அப்படியே  கண்களை இறுக மூடிக்கொண்டான் ஷிவா..

“தப்பு செஞ்சா அவனை அடிங்க மாமா.. ஆனால் இங்கே தப்பு செஞ்சது க்ருத்தியும், வெங்கட்டும் தான். மைரியம் இருந்தா அவங்களை அடிங்க. அதை விட்டுட்டு எதுவுமே தெரியாத சத்ரியை எதுக்கு அடிச்சீங்க. நெஞ்சில், முதுகில் எல்லாம் எவ்வளவு காயம் தெரியுமா?  அவன் ரொம்ப நல்லவன் அது எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும் மாமா. அதை நீயும் மறந்திட்டு இப்படியா அடிப்படை?” என கூறியவள்

அவனின் தொய்வான நிலையை கண்டு “மன்னிசிடுங்க மாமா,எனக்கு உங்களை விட சத்ரி தான் முக்கியம்” என சொல்லிவிட்டு விறு  விறு வென சென்று மறைந்தாள்.

சத்ரியின் மீதான சாத்வியின் அன்பை நினைத்து புல்லரித்தது ஷிவாவிற்கு.

இந்த பத்து நாட்களில்,சத்ரிக்கு காயங்கள் முற்றிலும் சரியாகிவிட்டிருந்தாலும், மேலும் இரு நாட்கள் கழிந்த பின், அன்று காலை கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் சத்ரி.

 தலைவாரிக் கொண்டிருந்தவனின் காதுகளில் சாத்வியின் அழுகுரல் காதை கிழிக்க இடையிலேயே..

 “தப்….தப்” என அடிவிழும் சத்தமும் “அப்பா வேண்டாம்பா.. வலிக்குதுபா… வலிக்குதுபா“ என சாத்வியின் குரலும் சேர்ந்து ஒலிக்க

இரு வீட்டிற்கும் நடுவே இருந்த ஒற்றை சுவர்  சங்கரனின் வீட்டு நடப்பை அப்படியே கூற

“டேய்… .சாத்வி அழறாடா என்னன்னு போய் பாரு” என விநாயகசுந்தரம் கூற..

  அவளின் அழுகுரலை தாங்காதவனாய்.. சாத்வியின் வீட்டினுள் புகுந்தான் சத்ரியன், சங்கரின் செயல்களை மறந்தவனாய்

“ஓழுங்கா இருப்பியா…  இருப்பியா” என சொல்லி சொல்லி தடியான ஒரு குச்சியை வைத்து சாத்வியை அடித்துக் கொண்டிருந்தார் சங்கரன்.

  பார்த்த சத்ரிக்கு, சங்கரனின் மீது பற்றிக் கொண்டுவர, கூடவே என்ன செஞ்சு வச்சாளோ என சாத்வியின் மீதும் கோபம் எழ வேகமாய் அவர்களை நெருங்கினான்.

அடியை தடுக்க மஹா சிறிதும் நினைக்கவில்லை… மஹாவும் ‘இந்த அடி இவளுக்கு தேவை தான் ’ என்பது போல் முகத்தை வேறு புறம் திருப்பியபடி நின்றிருந்தார்.

அதுவும் சேர்ந்து சத்ரிக்கு ஆத்திரத்தை கொடுக்க…  இருவருக்கும் இடையில் புகுந்து சங்கரின் கையிலிருந்த குச்சியை அதே ஆத்திரத்துடன்  பிடுங்கி..  ஒரே வீச்சில் வீசி எறிந்து சாத்வியை மறைத்தபடி நிற்க, சத்ரியை கண்டதும், வலியை மறந்து அவன் பின்னே வேகமாய் மறைந்து கொண்டாள் சாத்வி.

சாத்வியை தன் முன்னால் வேகமாய் இழுத்து…நிறுத்தி   “என்ன தப்பு பண்ணின” என ஆத்திரமாய் கேட்டான் சத்ரி…

“நான் எந்த தப்பும் பண்ணலை சத்ரி” என்ற அழுகையாய் வந்தது சாத்வியின் குரல்

“ சும்மா உன்னை அடிக்க…  உங்கப்பன் என்ன லூசா” என சங்கரின் முன்னாலேயே கேட்க…  அழுகையிலும் சிரிப்பு வந்தது சாத்விக்கு…

மஹா “ நீ விடு சத்ரி, அவளை இன்னும் நாழு போட்டால் தான் ஒழுங்கா இருப்பாள்” என மஹாவும் கூற

தன்னை லூசு என தன் முன்னே கூறிய சத்ரியை கண்டு பற்றிக் கொண்டு வந்த்து சங்கருக்கு அதற்குள்

“என்ன செஞ்ச  நீ  ” என சாத்வியை முறைத்தான் சத்ரி…

 “ஸ்கூலில் ஒரு பையன்.. என் பின்னாடி சுத்திட்டே இருந்தான்…  நேத்து ஸ்கூல் முடிஞ்சு வரும் போது லவ் பண்றேன்னு சொன்னான் சத்ரி. அப்பாகிட்ட ணொல்ல பயமா இருந்தது. சொல்லாமல் இருக்க முடியாது! அதான் பயந்து போய் அம்மாகிட்ட சொல்லிட்டு இருக்கும் போது, அப்பா கேட்டுட்டு, அக்காவை திட்டின மாதிரி என்னையும் திட்டி ‘நீ எவன்கூட ஓட போறன்னு’ கேட்டு அடிக்கிறாங்க சத்ரி, அம்மாவும் சேர்ந்து திட்றாங்க, அப்பா அடிக்காங்க” என முகத்தில் வடிந்த கண்ணீரை இடது கையில் துடைத்தபடி..  கூறினாள் சாத்வி.

அதுவரை அமைதியாய் இருந்த சங்கரன் டேய் நீ எதுக்குடா இங்க வந்த…  ஸ்டேசன்ல வச்சு அடி வாங்கனதை மறந்துட்ட போல…  நியாபகப் படுத்தனுமா” என சீறி

“ஏய், உன் அக்கா காரி, இவன் அண்ணனை இழுத்துட்டுப் போய் அசிங்கப்படுத்தினா.. நீ எவனோட ஓட போற” என சாத்வியை பார்த்துக் கேட்க..

அதிர்ந்த முகத்துடன் சாத்வி, சத்ரியை பார்க்க…  அவனோ கோபத்துடன். “யோவ் மாமா…  அறிவில்லை உனக்கு.. லவ் லெட்டர் கொடுத்ததை மறைக்காமல் வீட்டில் சொல்லற அளவு  தெளிவா இருக்கா அவள்.  கண்டமாதிரி பேசி அவ மனசுல ஏன்யா ,நஞ்சை விதைக்கற.. ஒழுக்கமான புள்ளைய உன் நார வாயால கெடுத்துடாத.. க்ருத்திகா பண்ணினதுக்கு இவளை ஏன் அடிக்கிற முடிஞ்சா உன் ஆத்திரத்தை அவ கிட்ட காட்டு.. இல்லை இவ பின்னாடி சுத்துறவன்கிட்ட காட்டு.. அதை விட்டுட்டு சின்னபுள்ளை மேல காட்ற.. ஒழுங்கு மரியாதையா அவளை படிக்கவிடு” என சத்ரியும் தன் பங்கிற்கு கத்தினான்…

“இனி அவளை அடிக்கற சத்தம் கேட்டுச்சு” என இன்னும் சிறிது நேரம் இருந்தால் கண்டிப்பாய் சண்டை வரும் என  முறைத்துவிட்டு சென்றுவிட்டான்…

அடி கொடுத்து களைத்திருந்த சங்கரன்… .

“உன் அக்காவை விட்ட மாதரி உன்னையும் விட்டுட மாட்டேன்.. ஸ்கூலுக்கு போனால் தானே அவன் உன் பின்னாடி வருவான்…  நீ ஸ்கூல் போகலைனா எப்படி வருவான்” என சாத்வியை முறைத்து…   “ஒருத்தியால் ஏற்கனவே மானம் போச்சு..  இவளும் ஏதாவது தகிடுதத்தம் பண்ணினா.. உயிரோட கொன்றுவேன்.. அவளை இனிமேல் ஸ்கூலுக்கு அனுப்பின உன்னையும் சேர்த்து கொன்றுவேன்” மனைவியிடம் கர்ஜித்துவிட்டு  அவளின் பள்ளி வாழ்க்கைக்கே முழுக்கு போட்டார் சங்கரன்.

ஆண்குழந்தை வேண்டுமென  ஆசையாய் இருந்தவருக்கு என்று இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததோ,  அன்றிலிருந்து சங்கரின் குணம் தலைகீழாய் மாறிப் போக…  மஹா தான் எல்லா விசயத்திலும் விட்டு கொடுக்க வேண்டியதாய் இருக்க.. அதை தனக்கு சாதகமாய் மாற்றி, தன் அதிகாரத்தை நிலைநாட்டியிருந்தார் சங்கரன்.

க்ருத்திகா செய்த செயலில் சாத்வியின் மீது இருவருமே கடுமையை காட்ட தொடங்கினர்…

“அவ ஸ்கூலுக்கு போக மாட்டாள் நான் பார்த்துகிறேன்“ என சங்கரிடம் கூறிவிட்டு “வீட்டு வாசப்படியை தாண்டு..  இருக்கு உனக்கு“ என மஹாவும் சங்கருக்கு சப்போர்ட்டாய் நடந்து கொள்ள அழுதபடியே உள்ளே சென்றுவிட்டாள் சாத்வி..

“வீட்டில் சொல்லி இருக்கவே கூடாது.  சொன்னதால தானே இவ்வளவு பிரச்சனையும்… சொல்லாமலேயே இருந்திருக்கலாம்” என குறும்புகார சாத்வியின் குணத்தை சிறிது சிறிதாய் மாற்றிக் கொண்டிருந்தனர் சங்கரும் மஹாவும்.

‘இவளையாவது நல்லபடியா வளர்க்கனும்’ என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கிய மஹாவிற்கு வயதிற்கேற்ற சுதந்திரம் கொடுக்க மறுக்கிறோமே என சற்றும் தோன்றவில்லை..

அன்றிலிருந்து சாத்வி செய்யும் அத்தனை வேலைகளுக்கும் குறை கூறுவதே வழக்கமாகி போயிற்று…  சத்ரியின் வீட்டிற்கு கூட அனுமதிக்க வில்லை…  சத்ரியின் மூலம் அறிந்து கொண்ட சிவஹாமிக்கும் விநாயகத்திற்கும் வருத்தம் மட்டுமே மிஞ்சியது அதை தாண்டி எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர் அவர்கள்.