“இதில் சாதம் இருக்கு, நீ கொண்டு வந்த குழம்பை ஊத்தி கொடு” என சிவஹாமி சொல்ல
தட்டில் குழம்பை ஊற்றி, இருந்த மொத்த கறியையும் இவன் தட்டில் இட்டு பரிமாறினாள்.
சத்ரி சாப்பிடும் வரை அவனுக்கு தேவையானதை பரிமாறிக் கொண்டிருந்தாள் சாத்வி சிரிப்புடன்.
சாப்பிடுவதை நிறுத்தி “ஏய் இப்போ… எதுக்கு நீ சிரிக்கிற” என சத்ரி கேட்க…
“உணவே மருந்து…. உணவே மருந்துன்னு கேள்வி பட்டிருக்கேன்… ஆனா இப்போ தான் அதை பார்க்கிறேன்.” என பூடகமாய் பதில் கூற..
அது நன்றாக புரிந்த சத்ரியோ , சாத்வியை நன்றாகவே முறைத்து பார்க்க…
அதில் சாத்விக்கு இன்னும் சிரிப்பு கூட “நேற்றில் இருந்து எழுந்து உக்கார முடியலை…. இப்போ கோழியை பார்த்ததும் சேவல் மாதிரி சிலிர்த்துக்கிட்டு எழுந்து உக்கார்ந்திட்டியே… அடி வாங்குனது நீ தானா.. எனக்கு சந்தேகமா இருக்கு சத்ரி“ என கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.
“ஏண்டி என் புள்ளையே அடி வாங்கிட்டு வந்து படுத்துக்கிடக்கான்…. உன்கென்னடி கிண்டல் கேலி வேண்டி கிடக்கு” என சிவஹாமி கண் கலங்க….
“உன் மகன் சின்ன புள்ள பாரு… அடி வாங்கிட்டான்னு அழுதுட்டு இருக்க“ என சிவஹாமியிடம் கூறியபடி….
“ஏண்டா எருமை மாதிரி வளர்ந்திருக்க…. பதிலுக்கு நாழு அடி அடிக்க வேண்டாமா” என சத்ரியிடம் பாய்ந்தாள் சாத்வி
அவள் ஏற்றி விடுவதை பார்த்து.. “ஆத்தி போலீஸ்காரனை அடிக்க என் புள்ளைய ஏவி விடுறியா நீ” என சிவஹாமி பதற
“பதிலுக்கு நீ அடிச்சா தானே அவன் உன் வழிக்கு வராம இருப்பான்… குடும்பமே பயந்து நடுங்குங்க.. பின்னே ஆடமாட்டான் அவன்” என வாய் பேசினாலும் சாத்வியின் கண்கள்
‘உன்னை இப்படி பண்ணினவனை சும்மா விட்டுட்டுயே’ என சத்ரியை குற்றம் சாட்டவும் மறக்கவில்லை…
“ஏண்டி சும்மா இருக்குறவனை ஏண்டி உசிப்பி விடுற… ஷிவா பய என்ன காரணம் கிடைக்கும் இவனை அடிக்கலாம்னு சுத்திட்டு இருக்கான்…. நீயே அதுக்கு தீணீ போட்டுடாதடி” என சாத்வியிடம் கூறிய சிவஹாமி…
சத்ரியிடம் திரும்பி… ”டேய், உன்னை வெளியில் கொண்டுவர உங்கப்பா படாத பாடு பட்டுட்டார். அந்த இரண்டு கழுதைகளும் செய்த வேலைக்கு நீ தண்டனை அனுபவிச்சிட்டே இதோட எல்லாத்தையும் தலை முழுகிடு. ஏதாவது செஞ்சு… எங்களை அனாதையா விட்டுடாத” என அழுகையில் முடிக்க…
‘ஏதுக்கு தான் இந்த பேச்சை பேசினோமோ‘ என சாத்வியின் தலையினுள் ஓட ஆரம்பிக்க
சாத்வியை முறைத்த சத்ரி… “எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன் மா..” என மிக அழுத்தமாய் சொல்லிய பின்பே… சத்ரியின் தலையை வருடி…
“ நீ எங்களுக்கு வேணும்யா.. பார்த்து நடந்துக்கோ… இந்த ஆடுகாலி பேச்சை கேட்காத” என சாத்வியை கடிக்க….
சிவஹாமியின் சீண்டலில்…. “இவனை நீ பொம்பள புள்ளையா பெத்து இருக்கலாம் அத்தே.. இப்படி பொத்தி பொத்தி வைக்கிறியே..” என சிரிப்புடன் சொல்ல…
“அப்படியே வாயிலேயே போடுவேன்… நீ முதலில் இங்கே இருந்து கிளம்பு.” என சொல்லி சிவஹாமி அங்கிருந்து செல்ல…
“போகாமல் இங்கே இருந்து நான் என்ன செய்ய போறேன் நான்” என அவளும் வீம்பாய் கிளம்ப… சாத்வியின் கையை பிடித்து தன் புறமாய் திருப்பினான் சத்ரி.
அவன் இழுப்பில் அவன் மேலேயே வந்து விழுந்தாள் சாத்வி. ஏற்கனவே இருந்த ஊமையடி அதிலேயே இவளும் விழ “அம்மா….” என சத்தமும் வர…. அவன் மேலே இருந்த வாக்கிலேயே சத்ரியின் வாயை பொத்தினாள் சாத்வி..
அவளிடமிருந்து திமிறி “ஏய் எழுந்து உக்கார்டி” என சத்ரி கடுப்பாய் கூற
அவன் மீதிருந்து எழுந்தவாறே “ ஐய்ய…. நானா வந்து விழுந்தேன்… நீ தானடா இழுத்த எருமை” என முறைத்து… ”உன் வீரத்தை அந்த ஷிவாகிட்ட காட்ட வேண்டியது தானே. பொம்பள பிள்ளை எம்மேல காட்டுற” என வம்பிழுத்தபடி, ‘ஷிவா மாமாவை எதுவமே செய்ய மாட்டியா’என பார்த்தாள்.
அவளின் பார்வையை பார்த்து “உன் பார்வையே சரியில்லை சாவி. ஒழுங்கா படிக்கற வேலையை பாரு… ஏடாகூடமா எதுவும் செஞ்சிடாத.. இது பெரியவங்க பிரச்சனை… அவங்க பார்த்துப்பங்க..இதை சொல்ல தான் உன்னை நிறுத்தினேன்..” சத்ரி முறைக்க
மற்றதையெல்லாம் காற்றில் விட்டுவிட்டு.. “ஆமா ஆளாளுக்கு உக்கார்ந்து அழுதுட்டு இருக்காங்க… இவங்க எங்க பார்க்க போறாங்க.. நான் பார்த்துக்கிறேன்..” என சிவஹாமியையும் விநாயகத்தையும் நினைவில் வைத்து கூற….
“ஏய்…. சாவி உன் வால் தனத்தை இதில் காட்டாத.. படிக்கிற வேலைய மட்டும் பாரு.. வேற வேலை எதுவும் பார்த்தன்னு காதுக்கு வந்தது…. தோலை உரிச்சிடுவேன்… நியாபகம் வச்சிக்க“ என சாத்வியை அதட்டினான் சத்ரி…. இப்படி கடுமையாய் பேசுபவன் இல்லை சத்ரி… அதை புரிந்தவளாய்…
“ம்ம்….சரி” என தலையை நன்றாகவே உருட்டி.. அங்கிருந்து கிளம்பினாள்
முதல் நாளன்று வந்த மஹா.. கணவனின் உருட்டல் மிரட்டிலுக்கு பயந்து, அவ்வப்போது தலையை காட்டிவிட்டு மறைந்துவிடுவார். அதை தனக்கு சாதகமாக பயண்படுத்தி செந்திலின் அம்மா செய்து தரும் கோழி வகையறாக்களை மஹா செய்ததாக கூறி…. தினமும் சத்ரியை தேற்றி வந்தாள் சாத்வி…
இதற்கிடையில் க்ருத்திகாவும் வெங்க்கட்டும் எப்படி மாயமென மறைந்தார்கள் என தெரியாமல் ஷிவா, சங்கரன், விநாயகசுந்தரம் என மூன்று குடும்பத்திற்கும் குழப்பமே மிஞ்சியது..
சூடு பறக்க ஆரம்பித்த தேடல் வேட்டை… நாட்கள் ஏற ஏற… அதன் சூடும் தணிந்து கொண்டிருந்தது. இருவரும் வரவே மாட்டார்கள் என்ற நிலைக்கு மற்றவர்கள் சென்றாலும் சங்கரன் எப்போது இருந்தாலும் ஷிவாவை தன் மாப்ப்பிள்ளை ஆக்கிக் கொள்வதில் அத்தனை ஆர்மவமாய் சென்றாலும்.
ஆனால் அதற்கு க்ருத்திகா கிடைக்க வேண்டுமே! அது எப்போதும் கேள்விக் குறி தான் என யாருக்கும் தெரியாமல் போய்விட்டது..
ஒரு நாள் கூட விடாமல், சாத்வி சிவபாண்டியனின் பாட்டி வீட்டிற்கு செல்வதும், ஏதாவதொரு தில்லாலங்கடி வேலை செய்து வீடு திரும்பும் போது கோழியுடன் வருவதும் , அதை நண்பனின் உதவியுடன் கசாப்பு போட்டு அதை சத்ரிக்கு காலையும் மாலையும் கொடுக்க தவறவில்லை சாத்வி. பத்து நாட்களில் சத்ரியின் உடலும் தேற ஆரம்பித்தது.
அது சாத்வியின் அக்கறையினாலா இல்லை, சத்ரி சாப்பிடும் மாத்திரைகளாலா என தெரியாமல் நல்ல முன்னேற்றம் காண ஆரம்பித்தது.
முதலில் சிறுதும் பெரிதுமென இருக்கும் வெட கோழிகள் அனுதினமும் காணாமல் போக ,முதலில் கண்டுகொள்ளாமல் இருந்த ஷிவாவின் பாட்டி ரத்தினம்மாள் தொடர்ந்து கோழிகள் மட்டும் காணாமல் போவதை உணர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தார்.
அப்படி கண்காணித்த நாட்களில், ஒரு நாள் சாத்வி கோழியை திருடுவதையும் பார்த்துவிட்டார். ‘இவளுக்கு எதுக்கு இந்த வேலை?’ என சங்கரனிடம் சொல்லி அவளை மிரட்ட எத்தனித்தவர், ‘ஏற்கனவே அவன் வீட்டில் பிரச்சனையா கிடக்கு’ என யோசித்தவாறு அதை அப்படியே சிவ பாண்டியனிடம் கூறிவிட்டார்.
மாமா மகள் தான். ஆனால் அதை அப்படியே விட மனமில்லாமல் ‘எதற்காக திருடும் அளவு செல்ல வேண்டும் ’ என்ற எண்ணம் மேலோங்க.. சாத்வியை கண்டிக்க சென்றான் அவர்கள் வீட்டிற்கு.
யூனிபார்மை தவிர்த்து , சாதாரண உடையில் பைக்கில் சென்றான்.
“மாமா” என அழைத்தபடியே சங்கரின் வீட்டினுள் நுழைந்தான் ஷிவா.
“வாங்க மாப்ள.. “ என சங்கடமாய் அவனை அழைத்தார் சங்கரன்.
“நம்ப அனுப்பின ஆளுங்களால இரண்டு பேரையும் கண்டுபிடிக்கமுடியலை மாமா.. எங்கே போய் ஒளிஞ்சு இருக்காங்கன்னு தெரியலை” என ஷிவாவும் சற்று தயக்கத்துடனே தாடையை தடவிய படி கூற..
அவனின் யோசனையை பார்த்த சங்கரன்… “இன்னும் கொஞ்சம் நாளில் எப்படியும் கண்டுபிடுச்சுடலாம் மாப்ள..நீங்க ” என பேசிக் கொண்டிருந்தவரை தடுத்து…
“இத்தனை நாளில் அவள் வெங்க்கட்டுக்கு மனைவியாய் மாறி இருப்பா மாமா அதையும் மீறி என்னால் அம்மாவை மீறி எதுவும் செய்ய முடியாது… சத்ரியை விசாரிச்சா கண்டிப்பா தெரிஞ்சிடும்ன்னு முழுசா நம்பி தான் அவன் மேல் கை வச்சேன்…. இப்போ அதுக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லாமல் போய்டுச்சு.. இத்தோட விட்டுடுங்க மாமா. அம்மா அப்பா நான் மூனு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது..” என அடுத்து என்ன பேச என தெரியாமல் மஹாவின் முகம் பார்க்க.
மஹாவோ, ஊருக்குள் தலை காட்ட முடியாமல் இருந்தவர், ஷிவாவிற்கு முகத்தை கூட காட்ட வில்லை. ஷிவாவின் பேச்சில் முகம் சுழித்து நின்றிருந்தார் மஹா.. அவ்வளவு அவமானப்பட்டிருந்தார் மஹா…. க்ருத்திகாவினால்..
“அப்போ… க்ருத்திகாவை நீங்க… ஆசைபடலையா… ” என சங்கரன் கேட்க….
“ஆசைபட போய் தானே, அம்மாவை விட்டு கேட்க வச்சேன்… அதுக்காக அடுத்தவன் பொண்டாட்டி மேல கண் வைக்கற அளவு கேவலமானவனும் இல்லை மாமா இதோட விட்டுடுங்க… மாமா” என க்ருத்தி விஷயத்தை அத்தோடு முடித்து விட்டு
“சாத்வி எங்க மாமா….” என பேச்சை மாற்றினான் ஷிவா.
ஷிவாவை போல் அவ்வளவு எளிதாக விட முடியவில்லை சங்கருக்கு..ஆனாலும் முகத்தை சாதாரணமாக வைத்து…. “ஸ்கூலுக்கு போயிருக்கா மாப்ள… வர நேரம் தான்… ஏன் கேட்குறீங்க“ என சங்கரன் கேட்டார..
“இல்லை சும்மா தான் கேட்டேன் மாமா…” என ஷிவா சமாளிக்க…
இவளை கண்டிக்காமல் விட கூடாது. வீட்டில் வைத்து கண்டிக்க முடியாது, சங்கரனுக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகி விடும் என சாத்வியை தேடி அவளின் பள்ளிக்கு சென்றான் ஷிவா. இரண்டு கிராமங்களுக்கு பொதுவான பள்ளி அது.
பள்ளி வாசலின் முன் இருந்த பெரிய மரத்தடியின் கீழ் சாத்வி கயல் சரண்யா என அவர்கள் பட்டாளம் கொட்டமடித்துக் கொண்டிருந்தது.
“ ஏய் , அந்த கிழவி வீட்டிலேயே போய் , கோழி திருடிட்டு வந்திருக்கியே கில்லாடி தாண்டி நீ.” என கயல் கேட்க….
“அதுவும் பத்து கோழியை ஆட்டைய போட்டுட்டியேடி ” என சரண்யா சிலாகிக்க….
“ஏய் ரொம்ப பாராட்டாதீங்கடி… ஒன்னு ரெண்டு காணாமல் போய் இருந்தால் கிழவி கண்டு பிடிச்சிருக்காது. முழுசா பத்து காணாமல் போய் இருக்கு சந்தேகம் வராமல் இருந்திருக்காது. எப்படியும் ஒரு நாள் நான் மாட்ட போறேன்” என பேசிக்க கொண்டிருக்கும் போதே…
“அப்போ… பத்து கோழியையும் திருடினது நீ தான்… அப்படி தானே ” என வில்லன் போல் ஷிவா சாத்வியின் முன் நிற்க… பயலும் சரண்யாவும், இரண்டடி பின்னே தள்ளி்நின்று கொண்டனர்..
கொஞ்சமும் பயமில்லாமல் அவன் முன் சுவாதீனமாய் எழுந்து நின்றாள்.
ஒரு நாளில்லை ஒரு நாள் தான் மாட்ட தான் போகிறோம் என எதற்கும் தயாராய் இருந்தவள்
“ஆமா, பத்து கோழியையும் நான் தான் ஆட்டைய போட்டேன் ” என நிமிர்ந்து தைரியமாய் பதில் சொல்ல, அவளது நிமிர்வும், காட்டிய பார்வையும் ஷிவாவிற்கு அப்படியே சத்ரியை பார்ப்பது போல் இருந்தது.
இருந்தாலும் அதை மறைத்தவனாய் “கேட்டால் வாங்கி கொடுக்க உன் அப்பா இருக்காங்க, இல்லை மாமா நான் இருக்கேன். அப்படி இருக்கும் போது எதுக்கு திருடின, அதுவும் பத்து கோழியை?” எனகேட்டான் தன்மாமான் மகளிடம்