சத்ரியின் பின்னால் இன்னும் நான்கு தலையனைகளை வைத்து, ஸ்பூனினால் ஊட்ட தொடங்கினாள்.
‘சாப்பிடு சத்ரி’ என்ற அதட்டலும் இல்லை, கெஞ்சலும் இல்லை.. நேரடியாக அவள் ஊட்ட ஆரம்பித்ததிலேயே அவளின் ‘உணவுண்ணாமல் நான் உன்னை விட மாட்டேன்’ என்ற பிடிவாதம் இருக்க
சத்ரியும் சாப்பிட தொடங்கினான்…. சிறிது சென்ற பின், அவன் வாங்க மறுக்க.. அவளின் முறைப்பை பார்த்து… “கஞ்சி வாய்க்கு நல்லாவேயில்லை போதும் விட்டுடு” என படுத்துப் கொண்டான்.
டெபிளில் கிடந்த துண்டை இவன் மேல் போர்த்திவிட்டு வெளியே வந்தாள். “அத்தை சத்ரி மிச்சம் வச்சுட்டான்” என மீதத்தை சிவஹாமியின் கையிலேயே கொடுத்து விட்டாள்.
“என்ன சிவஹாமி, சாப்பிடலைன்னா எப்படி உடம்பு தேறும்” என உணர்வுகளை முகத்தில் காட்டினார் மஹா.
“ம்மா.. அப்பாவோன பைக் சவுண்ட் மாதிரி இருக்கு” சாத்வி சொன்ன நொடி, “நா அப்புறம் வரேன்” என சாத்வியை இழுத்து கொண்டு ஓடினார் மஹா.
சத்ரியனுக்கோ அவனது குடும்பத்தினருக்கோ வார்த்தைகளால் ஆறுதல் அளிக்க முன்வரவில்லை மஹா. முன் வரவிடவில்லை சங்கரன்.
ஆனாலும் அது எந்த வகையிலும் சத்ரியனையோ? அவனது குடும்பத்தையோ தேற்றாது என தெரிந்து, முடிந்தளவு சங்கரன் இல்லாத சமையங்களில், அவனை நேரில் பார்ப்பதோடு, சாத்வியை சிவஹாமியின் உதவிக்கு அனுப்பி வைத்தார் மஹா..
அதை காரணாமாய் வைத்து கொண்டு இவளும் பள்ளிக்கு செல்லவில்லை.
ஏற்கனவே இரண்டு நாட்கள் பள்ளி செல்லாத காரணத்தால் அவளது நண்பர்கள் பட்டாளம் சாத்வியின் வீட்டிற்கே வந்துவிட்டனர்.
“சங்கரன் இருக்கும் வரை அமைதியாய் இருந்த பட்டாளம், அவர் மறைந்ததும் சாத்வியை கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
“உன் அக்கா ஓடி போய்ட்டாங்களாமே..” என எடுத்தவுடன் கயல் கேட்க. சாத்வி முறைத்த முறையில் அடுத்து அந்த கேள்வியை யாரும் கேட்கவில்லை.
“கயலு நீ வாயை பொத்து” என கயலிடம் பாய்ந்து “என்னடி சத்ரியன் அண்ணவை, உங்க ஷிவா மாமா அடிச்சுட்டாங்களாமே” என சாத்வியிடம் முடித்தாள் சரண்யா
“ ம், ஆமா சரண்யா” என்றவளுக்கு முகம் கசங்கியது.
“ஆமா ஆமா எங்க அம்மா கூட சொன்னாங்க… அண்ணாக்கு ரொம்ப அடியாமே என மீண்டும் கயல் கேட்டாள்.
“ம்..ஆமா…. ரொம்ப அடிச்சிட்டாங்க மாமா” என கூறியவளின் முன் சத்ரியின் அடிவாங்கிய உடல் நினைவு வர தனக்கும் வலிப்பதை உணர்ந்தாள்…
“இல்லை , நீ சத்ரியை பார்க்க முடியாது” என சொல்லிவிட்டு நகத்தை பற்களால் பிய்த்துக் கொண்டிருந்தாள் சாத்வி
“ஏய் எங்களுக்கு ஒழுங்கா பதில் சொல்லாமல் என்னத்தடி யோசிக்கிற” என கயல் அவளை இடிக்க….
“அதில்லை…. சத்ரிக்கு சீக்கரம் சரியாகனும். ஹாஸ்பிடல்ல கேட்டால், ஊமையடி ரொம்ப விழுந்திருக்கு… கொஞ்சம் லேட் ஆகும்னு சொல்றாங்க” என யோசித்தபடி “சத்ரிக்கு சீக்கரமா சரியா ஆகனும்னா என்னடி செய்யனும்… வேற டாக்டர்கிட்ட போகலாமா… ” என மூளையை கசக்க..
“வேற டாக்டர் பார்த்தாலும் அதை தான் சொல்ல போறாங்க..… எங்கப்பா கீழே விழுந்து அடி பட்டு வந்தப்ப டாக்டர்கிட்ட எங்கப்பா போகவே இல்லை. பத்து நாளைக்கு நாட்டு கோழி அடிச்சு வச்சாங்கடி…. சூப்பு, குழம்பு தான்.. சீக்கிரமா சரியாடுச்சுடி“ என சரண்யா செல்ல .
நகம் கடிப்பதை நிறுத்தி “நிஜமாவா” என
“நீ வேணா எங்கம்மா கிட்ட கேளு”
“ஆனால் நாட்டுக் கோழிக்கு நான் எங்கடி போவேன்” என கடுப்பாய் கேட்டாள் சாத்வி.
“உங்க அத்தைகிட்ட சொல்லு, வைத்து கொடுக்க சொல்லு” என செந்தில் கூற…
“அத்தை வீட்டில் அசைவம் சாப்பிட மாட்டாங்க, சத்ரியே வெளிய தான் சாப்பிடுவான்“ என வழி கண்டுபிடிக்கும் பணியில் இருந்தாள் சாத்வி..
“அப்போ நீங்க கவுச்சி சாப்பிடுவீங்க தானே.. உங்க அம்மாட்ட சொல்லி வைச்சு தர சொல்லு” என மீண்டும் கயல் கூற…
“அக்கா ஓடிப் போய்டான்னு அம்மா வீட்டை விட்டு வெளிய வர மாட்றாங்க… வீட்டில் அப்பாக்கு தெரியாமல் செய்ய முடியாதுதே வாசனையே காட்டி குடுத்துடும்” என கவலையாய் கூற..
“அப்போ ஒன்றும் செய்ய முடியாது “ என செந்தில் முறுக்கிக் கொள்ள…
சட்டென முகம் பளிச்சென ஆக “ ஏலே…. உங்க கறி கடையில் நீ தான கோழி ஆடெல்லாம் உரிப்ப..” என கேட்க…
“ஆமா , அப்பா இல்லாத நேரம் நான் உரிச்சுக் கொடுப்பேன்” என கூற…
“அப்போ நான் கோழி கொண்டுட்டு வாரேன்டா… நீ உரிச்சு குடுடா.. ஆனால் யாருக்கும் தெரய கூடாது.” என சாத்வி மகிழ்ச்சியாய் கூற..
“ஒரு கோழி எவ்வளவு ரூவா தெரியுமா…. காசுக்கு எங்க புள்ள போவ… ” என கயல்விழி கேட்க..
“கோழிக்கு ரெடி பண்ணிடுவ.. சூப் குழம்பு எல்லாம் யாரு வப்பா..” என செந்தில் கேட்க..
அப்படியே தொப் என அமர்ந்தாள் சாத்வி “ஆமால குழம்பு யார் வப்பா, எனக்கும் வைக்க தெரியாதே..” என முகம் அஷ்ட கோனலாக மாற..
“ நீ கோழிக்கு ரெடி பண்ணு நான் எங்கம்மா கிட்ட வைக்க சொல்றேன்… சத்ரி அண்ணனுக்குனா வச்சு கொடுக்கும்..” என செந்திலே அதற்கு வழி கொடுக்க..
“ வச்சு குடுக்க சொல்லுடா.. உங்கம்மாக்கு புண்ணியமா போகும்” என முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாட.. “இன்னைக்கே கோழியோட வரேன்..” என தன் நண்பர்களை அனுப்புவிட்டு..
ஸ்கூல் பேக்கை மாட்டிக்கொண்டு வீட்டில் இருந்து நேராக சிவ பாண்டியினின் பாட்டி வீட்டிற்கு சென்றாள்.. சற்று தூரம் தான் இருந்தாலும் சற்றும் பயமில்லாது நடந்தே சென்றாள்.
“ஏ புள்ள.. உங்க வீடு அந்த பக்கம்லே.. இங்கன என்ன செய்ற” என ஒருத்தி கேட்க…
திரு திரு வென விழுத்தவள்… ஸ்கூலுக்கு இரண்டு நாள் போகலைல… அதான் கயலு வீட்டுக்கு போய், எழுத போரேன்” என அத்தனை பல்லையும் காட்ட…
“நீயும் ஊரை சுத்தி உங்கக்கா மாதிரி போய்டாத…. பெரியபுள்ளையாயிட்ட நியாபகம் வச்சுக்க” என நக்கலாய் அவள் கூற…
“வச்சிக்கிறேன், வச்சிக்கிறேன்” என அவளும் நக்கலாய் கூறி ஷிவாவின் பாட்டி வீட்டிற்கு நடந்தாள்.
வீட்டிற்கு வெளியே நிறைய கோழிகள் ஆடுகள் என அனைத்தையும் மேய்ச்சலுக்காய் திறந்து விட்டிருக்க.. அதனுடன் விளையாடுவது போல்.. சிறிது நேரம் வரை ரோட்டில் போவோர் வருவோர்க்கு சந்தேகம் வராத வண்ணம்… ஆடுகளுடன் விளையாண்டவள்…
ஒரு வெட கோழியை மட்டும் விரட்டிக் கொண்டு ஆள் அரமற்ற இடத்திற்கு வந்தாள்.. சுற்றி முற்றி யாரும் இருக்கிறார்களா என பார்த்தாள்…. யாருமில்லை என உறுதி படுத்திக் கொண்டு… பேக்கில் வைத்திருந்த அரிசியை எடுத்து வீச… ஒரு நிமிடம் ‘கக்’ ககக்கக்….’ என சத்தமிட்டபடி அந்த கோழியும் அரிசியை உண்ண துவங்க..அதே தான் நேரம் என
தன் கையில் இருந்த ஈரத் துணியை அதன் மேல் போட்டு கப்பென பிடித்து யாரும் பார்க்கும் முன் தன் ஸ்கூல் பேக்கில் அடைத்து போட்டு மாலை கவிழ்வதற்குள் செந்திலிடம் சேர்த்தாள்..
சேர்த்தபின் ‘ அப்பாடா…. ‘ என பெருமூச்சுடன் நிம்மதியும் கிளம்ப.. சங்கரன் வருவதற்கு முன்பே தன் வீட்டிற்கு ஓட்டம் பிடித்திருந்தாள்..
காலையில் கம கம மணத்துடன் ஒரு பாத்திரத்தில் நாட்டுக் கோழி சூப், மற்றொன்றில் நாட்டு கோழி குழம்பையும் செந்தில் இவனிடம் கொடுத்து விட்டு சென்றான்.
அதை வாங்கி கொண்டவள், தன் வீட்டிற்கு கூட செல்லாமல், சத்ரி வீட்டினுள் நுழைந்தாள்.
வீட்டிற்குள் நுழைந்ததும் சிவஹாமி மூக்கை பொத்திக் கொண்டார்.
“ஏண்டி காலங்காலத்தல என்ன கர்மத்தை கொண்டாந்திருக்க “ என முகம் சுருக்க..
“ கர்மமா… ! நீ பாத்ரூம் கழுவுற ஹார்பிக்கை வச்சு உன் வாயை கழுவு….அத்தை!என்ன மனமா இருக்கு.. கர்மமாம் கர்மம், நீர் முதலில் வழி விடு” என வீட்டை பழையபடி சகஜமாக்கியபடி சத்ரி அறைக்கு அதை கொண்டு சென்றாள் சாத்வி
“ஏன்மா , காலையலேயே ஆரம்பிச்சுட்டீங்களா..” என விநாயகமும் வர….
“சத்ரிக்கு அம்மா கோழி கொழம்பு குடுத்துவிட்டுச்சு மாமா” என அறை வாசலில் நின்றபடி அவரிடம் அமைதியாய் பொய் பேசினாள் சாத்வி..
“சாப்பாடு கொண்டாந்த புள்ளைகிட்ட என்ன வம்பு பண்ற” என சிவஹாமியிடம் சாடியவர் “நீ தான் செஞ்சு தர மாட்ட.. அவளாவது கொண்டு வரட்டுமே” என திட்டியவர் “அவன் சாப்பிடற நேரம் தான்மா…. நீ போய் குடுமா சாத்வி.” என சாத்வியை அனுப்ப.
அவனது கட்டிலுக்கருகில் எல்லாவற்றையும் எடுத்து வெளியே வைத்தாள்.