பகுதி 14

சிவ பாண்டியனை பார்த்ததும் அவனை  வரவழைத்த காரணம் நொடியில்  புரிந்து போனது சத்ரிக்கும் விநாயகத்திற்கும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள

“மாப்பிள்ள   இந்த சத்ரி பயலுக்கு, இரண்டு கழுதைகளும்  பழகினது நல்லாவே  தெரியும், எங்கே போனாங்கனுங்கனு கேட்டா.. அது மட்டும், தெரியாதாம்” என நக்கலாய் ஷிவா விடம் கூறியவர் பின்

  “ஒருவேளை  நான் கேட்கிற விதம் அவங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்… நீங்க உங்க ஸ்டைலில் விசாரிங்க மாப்பிள்ள. நான் கம்ப்ளையிண்ட் கொடுக்கிறேன்” என சங்கரன் உசிப்பி விட

க்ருத்திகாவின் மீது பெரும் ஆசை வைத்திருந்தவனுக்கு, அவள் வேறு ஒருவனுடன் ஓடி விட்டாள், அவனுடனே வாழ்க்கையை தொடங்கிவிட்டாள் என தெரிந்து கொண்ட ஷிவாவிற்கு மிகப் பெரிய தலைகுனிவாய் போய்விட்டது அவளின் செயல்..

இரண்டு மூன்று வருடங்களாய் காவல் துறையில் இருப்பவன்,  அவளுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்தான்.. க்ருத்திகாவின் படிப்பு முடிய காத்திருந்தான்.

ஆனால் நடந்து முடிந்ததை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. நாளை தனக்கு திருமண நிச்சயம் என கனவில் மிதந்தவனுக்கு  க்ருத்திகாவின் செயல் அவனின் கனவை கலைத்ததோடு, சொந்த பந்தங்களின் முன் தலை குனிவாய் இருக்க..  எப்படியாவது தேடி கண்டுபிடித்து அவளையே மணக்க வெறி கொண்டிருந்தான்..

அப்படி ஒரு வெறியில் இருந்தவனுக்கு  சங்கரின் பேச்சு உசுப்பேற்ற.. சத்ரியை தோலுரிக்க காத்திருந்தான். அண்ணன் போன இடம் தம்பிக்கு தெரியாமல் இருக்குமா என?

 வெங்க்கட் இருக்கும் இடம் தனக்கு தெரியவே தெரியாது  என உறுதியாய் பதில் சொன்ன விநாயகத்தின் மீது கம்ளைண்ட் கொடுக்க..  சங்கரனுக்கு மனம் வரவில்லை, அவர்களது நட்பு கூட தடுத்தது என கூறலாம்.

 ‘வெங்கட், க்ருத்தி பழகுவது கொஞ்ச நாள் தான் தெரியும்’ என உண்மையை கூறிய சத்ரியின் மீது தான் தயங்காமல் கம்ளைண்ட் கொடுக்க தீர்மானித்தார்.

ஷிவாவோ “கம்ளைண்ட் குடுங்க மாமா மத்ததை நான் பார்த்துக்கிறேன்” என சத்ரியை பார்த்துக் கொண்டே கூற

ஷிவாவின் பார்வையில் “எந்த விசாரனையாக இருந்தாலும் நான் ரெடி தான். எப்படி விசாரச்சாலும்  என்னோட பதில் ‘தெரியாது தான்’  ஏன்னா? அது தான் உண்மை, எனக்கு இவங்க எங்கே இருக்காங்கனு கூட தெரியாது” என தன் தந்தையை விட்டு ஷிவாவின் அருகிலேயே வந்து நின்று பேசினான் சத்ரி.

இவனது தைரியமான, நேர்மையான பேச்சு, போதாக்குறைக்கு அத்தனை அருகில் வந்து பேசியது,ஷிவாவிற்கு எரிச்சலையே கொடுக்க.

“உனக்கு என்ன அவ்வளவு தெனாவட்டா..  ஸ்டேஷன் வாடா…  உன் தெனாவட்டு எங்க போகுதுன்னு நானும் பார்க்கிறேன்” என மேலும் கீழும் அவனை பார்த்தான், சொந்த பந்தம் என்பதை மறந்து.

“சங்கரன்  சத்ரி மேல கம்ளைண்ட் கொடுக்காதடா.. வேண்டாண்டா.. அவனுக்கு நிஜமாவே தெரியாதுடா” நண்பனிடம் கெஞ்சினார் விநாயகம்.

  காவல் நிலையத்தின் படியேற தவிக்கும் சாதாரண அப்பாவாக துடித்தார் விநாயகம்.

ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல்.. சங்கரிடம் கம்ளைண்ட் வாங்கி…  சத்ரியை காவல் நிலையம் அழைத்துச் சென்றான் ஷிவா.

ஷிவா, சங்கரனின் அக்கா மகன். க்ருத்தியின் மேல் எப்போதுமே பிடிப்பு கொண்டவன். அவளென்றால் தனி ப்ரியம் தான்.

ஷிவா தான் “படிப்பு மெடிஞ்சதே மாமா, க்ருத்தியை எனக்கு கட்டி கொடுங்க” என கேட்டதால் தான், உடனடியாக திருமணத்தை நிச்சயம் செய்ய ஒப்பு கொண்டதே..

சங்கரனின் முழு சப்போர்ட்டும் ஷிவாவிற்கு இருந்தது ஒரு பக்க பலமென்றால், அதே ஊரில்  சப் இன்ஸ்பெக்டராக இருப்பவனை, யராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

விநாயகம் மன்றாடுவதை காதில் வாங்கி கொள்ளாமல், பைக்கின் பின்னால் சத்ரியை அமர்த்தி கொண்டு, ஸ்டேஷன் சென்றான் ஷிவா.

 அவர்கள் முன்னே செல்ல..  விநாயகம் அவர்களின் பின்னாலேயே, மகனை அடித்து விடுவார்களோ என பயத்துடனே இவரும் ஸ்டேஷன் வந்து சேர்ந்தார்.

முகமெல்லாம் வேர்த்து, சட்டை எல்லாம் வேர்த்து பார்க்கவே அப்படி ஒரு கோலத்தில் இருந்தார் விநாயகம்.

இவரது கோலத்தை ஒரு வித குரூரத்துடன் பார்த்தபடி சங்கரனும் அங்கே வந்தார்.

“சங்கரன், தெரியாதுனு சொல்ற பையனை ஏன்டா படுத்துற, படிக்கிற புள்ளையா…விட்டுடுடா, இனி உன் வழிக்கு நாங்க வரவே மாட்டோம்”  இதோ காவல் நிலையம் என்று கூட பாராது, சங்கரனின் காலில் விழாத குறையாய் விநாயகம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

அவரின் கெஞ்சல்களுக்கு எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லாமல் எவன் எக்கேடு கெட்டு போன எனக்கென்ன…எனக்கு என் பொண்ணு வேணும் என்ற ரீதியில் சங்கரன் நின்றிருந்தார் அவர்.

“யோவ் காண்ஸ்டபிள்.. இவனை செல்லுக்கு கூட்டிட்டு போய்யா” என அங்கிருந்த காண்டபிளிடம் சத்ரியை விட்டுவிட்டு, விநாயகத்தை முறைத்தபடி, கல்லாய் நின்றிருந்த சங்கரனிம் வந்தான்.

“ மாமா, இங்க வாங்க” ஷிவா தனியாய் அழைக்க

‘என்ன…. மாப்ள’  என்ற கேள்வியுடன் வந்தவரிடம் விநாயகத்தை கண்களாலே காட்டி “இவரை இங்க வச்சுகிட்டு என்னால் சத்ரியன்யை விசாரிக்க முடியாது. அவரை இங்க இருந்து கூட்டிட்டு போங்க, நீங்க இருந்தாலும் அது பிரச்சனை தான், அப்படியே நீங்களும் கிளம்புங்க ” என சங்கரின் காதில் ஓத

“ம்… அப்படிநே ஆகட்டும் மாப்பிள்ளை” என விலகியவர் மீண்டும், அவனிடம் திரும்பி “மாப்ள…. நீங்க இவனை விசாரிக்கிறதில், இவன் அண்ணன் எங்க இருந்தாலும் துண்ட காணோம் துணிய காணோம்னு இங்கே வரணும்” என ஏற்றிட விடவும் மறக்கவில்லை..

இவர்கள் சற்று தள்ளி பேசிக்கொண்டிருந்தாலும் சங்கரன் மற்றும் ஷிவாவின் பேச்சு இவர் காதுகளில் வந்து விழ உயிரையே உருவி எறிந்தது போல் துடித்துப் போனார் விநாயகசம்..

கதியற்று நின்றிருந்த  விநாயகத்திடம் சென்றவர் “என் பொண்ணு வராம, உன் பையன் உங்கிட்ட வரமாட்டான்…கிளம்பு” என யாரோ மூன்றாம் மனிதரிடம் சொல்வது போல் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்..

“மச்சான் ,வேண்டாம் மச்சான், என் புள்ளைய விட்ரு அவனை ஒன்றும் பண்ணிடாதா” புலம்பி கண்ணீர் வடித்தவரை அங்குள்ள இரண்டு கான்ஸ்டபிள்ஸ் அவரை வெளியே தள்ளாத குறையாய் அனுப்பினர்.

விநாயகம் வெளியேறியது தான் தாமதம்… லத்தியை எடுத்துக் கொண்டு அவனிருந்த செல்லிற்கு சென்றான். ஷிவா.

 விசாரனை என்ற பெயரால் சத்ரியை பின்னி எடுத்துவிட்டான். அத்தனை அடி அடித்தும் அவனிடம் வந்த பதிலென்னவோ “தெரியவே தெரியாது” என்பது தான்.

அவனை அடித்து ஒய்ந்த ஷிவா..  சங்கருக்கு போன் செய்தான் பலத்த யோசனையின் ஊடே “சத்ரியன் பயலுக்கு, இவங்க இருக்குற இடம் தெரியல போல மாமா” என தாடையை தடவியபடி பேச

மகள் வந்துவிடுவாள், இல்லை ஷிவா வர வழைத்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்த சங்கருக்கு அந்த பதில் சற்றும் யோசிக்கவிடாமல் “அவன் நடிக்கிறான்  மாப்பிள்ளை, இவனுக்கு எப்படி தெரியாமல் இருக்கும்” என கூற

“போலீஸ் அடினா சும்மாவா, உண்மையை மறைக்கவும் முடியாது. உண்மையை சொல்லாம இருக்க முடியாது மாமா” என்றவன் “சத்ரிக்கு நிஜமாவே தெரியல்லை” என கோபமாய் பேசினான்.

ஷிவாவின் பதிலில் நிறையவே தளர்ந்து போனார் சங்கரன்.. சற்று நேர அமைதியின் பின் “என்ன மாப்பிள்ளை பண்றது, அந்த ஓடுகாலி எங்கே இருக்காளோ.. இன்னும் நாலு சாத்து சாத்தி கேளுங்க மாப்பிள்ளை ,அடி எவ்வளவு நேரம் தாங்குவான்..” என மேலும் உசுப்பேற்ற..

“இதுக்கு மேல அடிச்சா, செத்துற போறான்.. மாமா நானே வேலைக்கு சேர்ந்து இரண்டு மூணு வருசம் தான் ஆகுது, என் வேலை்க்கு ஆப்பு வச்சிடாதீங்க.. நான் இன்னும் கொஞ்சம் ஆள் அனுப்புறேன்.. தேட சொல்லுவோம். அதுவரை சத்ரியை  ஸ்டேஷன்லையே வச்சிருக்கேன், க்ருத்திகா வந்தால் தான் இவனை ரிலீஸ் பண்ணுவேன்னு செக் வைப்போம். இவங்க அப்பனுக்கு. அப்பாக்கும் மகனுக்கும் கொடுக்குற குடைச்சலில் வெங்கடே உங்க பொண்ணை கொண்டு வந்து விட்ருவான்“ என ஷிவா உறுதியாய் கூற.

“ஏன் மாப்ள வேற போலீஸ் எல்லாம் வச்சு தேட முடியாதா ” என சங்கரன் கேட்க….

“மாமா, உங்க பொண்ணு மேஜர், அவளுக்கு தான் ஃபுல் சப்போர்ட் பண்ணுவாங்க..  நான் பேருக்கு தான் கம்ளைண்ட் வாங்கினேன். எப்ஐஆர் கூட போடலை. போடவும் முடியாது.. மீறி ஸ்டெப் எடுத்தால் பிரச்சனை நம்ப பக்கம் திரும்பிடும்” என ஷிவா கூற

“இப்போ என்ன பண்றது..மாப்ள…”என சங்கரன் கேட்க….

“சத்ரியனை இங்கே வச்சிருக்கிறதை எவனாது வெங்கடேஷன் காதில் போடாமல் இருக்க மாட்டான்.. கண்டிப்பா தேடி வருவான். அது வரை  இந்த பயலை செல்லுலேயே வச்சிடறேன்.. எவன் கேட்க போறான்“ என போனை வைத்துவிட்டான்.

இதுவரை எந்த பிரச்சினைகள் வந்தாலும் சங்கரின் தயவால், ஷிவாவின் மூலமே நடத்திக் கொள்ளும் விநாயகசுந்தரம், இப்போது யாரைப் பார்த்து தன் மகனை காக்க என தெரியாது பைத்தியம் பிடித்தவர் போல் நின்றார்.

பின் பஞ்சாயத்து தலைவரின் நியாபகம் வர, வேக வேகமாய் அங்கே சென்றார். நேரில்  பார்த்து உதவி கேட்க விரைந்தார்.

அவரோ “நடவடிக்கை எடுக்க சொன்னது, உன் மச்சான், எடுக்கிறது அவன் அக்கா மகன். இரண்டு பயலுகளும் அடங்காதவனுங்க, பஞ்சாயத்து கூட்டினா வேனா என்னால் எதாவது செய்ய முடியும். இப்ப ஒன்றும் பண்ண முடியாதுயா.வேணா அவனை விட கொஞ்சம் பெரிய அதிகாரிங்க கிட்ட போய் பாரு” என தனக்கு தெரிந்த ஒரு இன்ஸ்பெக்டரிடம் அனுப்பி வைத்தார்.