அந்த அரசியல்காரனுக்கு மனையாளின் பார்வை அசாத்திய நம்பிக்கையை பரிசளித்து விட்டது போலும். தன் புன்னகையில் கட்டுண்டவளின் அடிபட்ட கையை பெருமூச்சுடன் வருடியபடி, “எப்ப அடி பட்டுச்சு” என ஆதீஸ்வரன் விசாரித்தான்.
தாரகேஸ்வரியின் கண நேரம் மயக்கம் சட்டென்று கலைய, “ம்ப்ச்…” என்ற சலிப்புடன் முகம் திருப்பிக் கொண்டாள்.
“தாரா பிளீஸ். தப்பு நிறைய என் பேர்ல தான். ஆனா, நீ நல்லா இருப்பேன்னு நம்பிக்கையில தான் நான் ஓடிட்டு இருக்கேன். இங்கே நீ இந்த நிலைமையில… ம்ப்ச் சொன்னா நீ நம்ப மாட்ட. பட் என்னால இப்படி உன்னை பார்க்க முடியலை. ரொம்ப கஷ்டமா இருக்கு. உன்னை கவனிக்காம விட்டுட்டேன்னு குற்றவுணர்வா இருக்கு” மிகவும் இறங்கி வந்து பேசினான்.
இப்படி பேசி எல்லாம் அவனுக்குப் பழக்கமே இருந்திருக்காது என அவனது முக பாவனையிலும் குரலிலுமே புரிந்துகொள்ள முடிந்தது. அதற்காக இத்தனை நாட்கள் அவள் அனுபவித்த மனவேதனை? அதற்கு யார் பொறுப்பேற்பார்களாம்?
இவளா வந்து இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று நின்றாள். அந்த பெண் பிரவீணா, அவளை இவளுக்குப் பரிச்சயம் கூட கிடையாது. கனிகாவுக்கு உதவுகிறேன் என்கிற பெயரில் அவளாக இவர்களை இணைத்து புகைப்படங்களை எடுத்து, அதனை இவர் வீட்டுக்கு அனுப்பி வைத்து என அத்தனை தகிடுதத்தம் செய்து வைத்திருக்க, அதில் இவரது கெளரவம் குறைந்து விடக்கூடாது என திருமணம் செய்து கொண்டார்.
அதற்கான மறுப்பு சொல்லக்கூட இவளுக்கு அவகாசம் வழங்கப்படவில்லை. இருந்தும் இந்த திருமணத்தை அங்கீகரிக்கத் தொடங்கினாளே! அதற்கு கிடைத்த பரிசு தான் என்ன?
திருமணம் என்பதே நமக்கென துணை கிடைக்கும் ஒரு பந்தம் தானே? இங்கே இவள் அனுபவிப்பது என்ன? நேரத்திற்கு உணவும், தங்க பாதுகாப்பான இடமும் என்றிருக்கும் இந்த நிலை தான் அவள் திருமண வாழ்வா?
உள்ளே பொங்கிய குமுறலின் வலியும் வேதனையும் தாங்கமாட்டாமல், “தாங்கள் இத்தனை விசதீகரிக்கெண்டதில்லா” என்று பட்டென்று உங்கள் விளக்கம் எதுவும் வேண்டாம் என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லி விட்டாள்.
“ஏன்? நான் தப்பே செய்யக்கூடாதா? இல்லை அது தப்புன்னு புரியும் போது மன்னிப்பு கேட்கக் கூடாதா?” பிழை தான், அதற்கான விளக்கம் கூட அவன் தரக்கூடாதா என்ன எங்கிற ஆதங்கம் அவனுக்கு.
“ஆஹா! நிங்களுடே மன்னிப்பு? நான் அது எந்த செய்யணாம்?”
‘இந்த தமிழச்சி எதுக்கு அடிக்கடி கதகளி ஆடுவாளோ?’ என கடுப்பாக வந்தது ஆதீஸ்வரனுக்கு. “இப்ப என்ன சொல்ல வர? இவ்வளவு நாளும் முட்டாளா இருந்திருக்கேன். இனியும் அப்படியே இருந்துக்கடா மடையான்னு சொல்ல வரியா?” என்றான் கொஞ்சம் கோபத்தைக் கையில் எடுத்தவனாய்.
அவசரமாக, “நான் எப்ப அப்படி சொன்னேன்?” என கேட்டவளுக்கு கோபத்தில் தான் மலையாளத்துக்குத் தாவி விட்டதால் அதை எதையும் தப்பாக அர்த்தம் கண்டு கொண்டானோ என்று தோன்றிட உடனே தமிழுக்குத் திரும்பி விட்டாள். அதுவும் முட்டாள் என்று பொருள் படும்படி தான் ஒன்றும் சொன்னதாக நினைவில் இல்லையே என்று உள்ளே பதைபதைத்தது.
“ம்ப்ச்… நானே தான் என்னையே தான் முட்டாள்ன்னு சொல்லிக்கிறேன். நீ ஒன்னும் சொல்லலை சரியா? இப்ப என்ன இன்னைக்கு முழுக்க சமாதானம் செஞ்சுட்டே இருக்கணுமா? இல்லை கொஞ்சம் சீக்கிரம் சமாதானம் ஆயிடுவியா?” அவனுக்கு இறங்கிப் போய் பேசி எல்லாம் பழக்கமே இல்லை. இவளைப் பார்த்த மனவருத்தத்தில் தன்னாலான முயற்சியை எடுத்திருக்க, இவளோ பிடிகொடுக்க மறுத்து சோதிக்கிறாள். அந்த கடுப்பில் தன் பொறுமையை முற்றிலும் கைவிட்டு விட்டான்.
“எனக்கு நிஜமாவே புரியலை. சமாதானம் செஞ்சு மட்டும் இங்கே என்ன மாறிட போகுது சொல்லுங்க? உங்க தம்பிக்கு பெரிய ஆக்சிடெண்ட். அது பத்தி எனக்கு துளி விவரம் தெரியாது. உங்ககிட்ட விசாரிக்க வந்தப்ப என்னை எவ்வளவு மோசமா பேசுனீங்க. அதுமட்டுமா இன்னைக்கு வரைக்கும் நீங்க எங்கே இருக்கீங்க, என்ன செய்யறீங்கன்னு எதுவும் எனக்கு தெரிய வந்ததில்லை. ஏன் எப்ப நீங்க சென்னை வந்துட்டு போறீங்கன்னு கூட எனக்குத் தெரியாது. உங்களுக்கு பெயரளவு மனைவியா உங்க வீட்டுல இருக்கேன். இதுல என்னை நீங்க சமாதானம் செஞ்சு மட்டும் ஆகப்போறது என்ன?”
அவளின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கேட்டவனுக்கு அத்தனை ஆத்திரம். திருமணமான முதல் நாளே இவளிடம், ‘இந்த திருமணத்தில் எனக்கு பூரண சம்மதம். உனக்கான கால அவகாசத்தை எடுத்துக் கொள்’ என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறான் தானே! பிறகும் என்ன பெயரளவு மனைவியாம்?
“சத்யாவோட ஆக்சிடெண்ட் விஷயம் உனக்கு மட்டுமில்லை. நான் யாருக்குமே சொல்லலை. ஏன் பாட்டிக்கு கூட இப்ப வரைக்கும் தெரியாது. அது உனக்கும் தெரியும் தானே? வீரா மாமாவுக்கும், இந்துஜாவுக்கும் எப்படியோ விஷயம் கசிஞ்சிடுச்சு. அதோட நான் அப்ப இருந்த மனநிலை என்னன்னும் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். இப்ப திரும்பவும் அதையே பேசினா எப்படி? அண்ட் மத்த விஷயம் எல்லாம் இனி அப்படி இருக்காது. என்னை நீ நம்பலாம்” என்று இழுத்துப்பிடித்த பொறுமையுடன் விளக்கம் சொன்னவனைக் கண்டு அவளுக்குத் தலையை வலித்தது. எல்லாவற்றிற்கும் விளக்கம் சொல்லிக்கொண்டே போனால்?
“பாருங்க உங்க கிட்ட பேசும் அளவுக்கு எனக்குத் தெம்பில்லை. நான் கொஞ்சம் தூங்கணும். பிளீஸ் நீங்க சண்டை போடறீங்களோ சமாதானம் செய்யறீங்களோ அதை எனக்கு உடம்பு குணமானதும் செஞ்சுக்கங்க. இப்ப உங்களுக்கு வேலை நிறைய இருக்கும். அதை பார்க்க கிளம்புங்க பிளீஸ்…” என்று சொல்லியவள், அவன் கிளம்பும் முன்பே கண்ணை மூடிக்கொள்ள, அவனுக்கு சங்கடமாகிப் போய்விட்டது.
இவள் விஷயத்தில் மட்டும் நிதானமாக எதையும் செய்வதில்லை என்கிற குற்றவுணர்வை இப்பொழுதும் அதிகப்படுத்தியது மனையாளின் சொற்கள்.
அவள் உடல்நிலை தேறும் முன்பு தன் மன்னிப்பைக் கோரி நிற்கிறான். அதுவும் அவள் அதனை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தியபடி! தான் ஏன் தான் இப்படி இருக்கிறோமே என்று அவனுக்கே ஆயாசமாக இருந்தது.
வெளியில் காத்திருந்த சீதாம்மாவிடம் தான் தாராவுடன் இருந்து கொள்கிறேன் நீங்கள் வீட்டுக்குக் கிளம்புங்கள் என்று வற்புறுத்தி அனுப்பி வைத்தவன், ஓய்ந்து போனவனாக தாரா இருந்த அறைக்குள் போட்டிருந்த இன்னொரு படுக்கையில் படுத்தான்.
ஒவ்வொரு விஷயமும் போராட்டமாகவே கழிந்தால், அவனுக்கு நிம்மதி என்பது எப்போது தான் கிட்டும்?
எதை எதையோ யோசித்தபடி அயர்வுடன் கண் மூடிக்கொண்டான். அவன் நன்றாக ஓய்வெடுத்து வெகு நாட்கள் ஆகியிருந்தது.
மறுநாள் கண்விழிக்கையில் அங்கே மற்றொரு படுக்கையில் படுத்திருந்த ஆதீஸ்வரனை தாரகேஸ்வரி நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இரவோடு இரவாக தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்து அடித்து பிடித்து ஓடி வந்திருக்கிறான். அவனிடம் போய் நான் உனக்கு வெறும் பெயரளவு மனைவி தானே என கேட்டு வைத்திருக்கிறாள். அந்த சொற்கள் அவனை எந்தளவிற்குப் பாதித்ததோ?
தங்களுக்குள்ளான உறவு எப்பொழுது நேராகுமோ என அவளுக்கு ஆயாசமாக இருந்தது. இருவரும் மனம் விட்டுப் பேச முடிந்தால் கூட நன்றாக இருக்கும் என எண்ணினாள்.
அவளின் சிந்தனை பயணித்துக் கொண்டிருந்தபோதே ஆதியிடம் அசைவு தெரிந்தது. படபடப்புடன் வேகமாகக் கண்ணை மூடிக் கொண்டாள். இல்லை இல்லை விழித்திருப்பதை கண்டுபிடித்து விடுவான் என யோசித்தவள், அவசரமாகக் கண்விழித்து வாசல் கதவை வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.
கண் விழித்தவன் இவளும் எழுந்து விட்டிருந்ததைப் பார்த்து, “குட் மார்னிங்” என்று சொன்னபடி, அவள் பதிலுக்கு வாழ்த்து சொல்வதற்குள் அவளின் கட்டில் அருகே வந்து நெற்றி, கழுத்து எல்லாம் தொட்டுப் பார்த்து, “நேத்து ராத்திரி அளவுக்கு இப்ப கண்ணு சிவப்பேறிக் கிடைக்கலை. காய்ச்சலும் குறைஞ்ச மாதிரி தான் இருக்கு. ரொம்பவும் பயப்படுத்திட்ட டாக்டரம்மா” என்று சொல்லிவிட்டு, ஓய்வறை சென்று புத்துணர்வாகி வந்தான்.
இத்தனை இலகுவான பேச்சுவார்த்தையை எதிர்பார்க்காமல் அவள் தான் பே என்று விழிக்க வேண்டியதாய் இருந்தது.
வெளியே வந்தவன், “நீ இன்னும் ரிப்ரெஷ் ஆகலை போல?” என்று கேட்க, “இப்ப போகணும்” என்றபடி மெல்ல எழுந்து போனாள். அன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு வரும் வரைக்கும் கூட அவளுடனேயே தான் இருந்தான். கையில் எப்படி அடிபட்டது என்று அதன்பிறகு அந்த பேச்சை எடுக்கவே இல்லை. அவளுக்கு சொல்ல விருப்பமில்லை, இவனுக்கு அவளைத்தாண்டி வேறொருவரிடம் விசாரிக்க மனமில்லை.
இருவருக்குள்ளேயும் அமைதி மாத்திரமே! தேவைக்கு சில பேச்சுகள் இருந்தாலும், தாரா அவனது கேள்விகளுக்கு அளந்தே பதில் சொன்னாள்.
அது புரிந்தாலும் துளியும் கண்டுகொள்ளாமல், அன்று முழுக்க அவளின் அருகிலேயே தான் உலாவிக் கொண்டிருந்தான். அவ்வப்பொழுது கைப்பேசியில் சில உத்தரவுகளை மாத்திரம் பிறப்பித்துக் கொண்டு அவளை விட்டு விலகாமல் சுற்றி வந்தான்.
“எனக்கு உடம்பு குணமாயிடுச்சு” இப்படி வேலையை விட்டுவிட்டு வந்து தன்னோடே அமர்ந்திருக்கிறானே என்ற பரிதாபத்தில் சொன்னாள். அவனது கைப்பேசி அழைப்புகளும், அதற்கு அவன் தரும் உத்தரவுகளும், சில சூடான விவாதங்களும் ஏதோ முக்கியமான வேலை பாதியில் நிற்கிறது என்றளவில் அவளுக்குப் புரியவைத்திருந்தது.
“ஏன் நான் கூட இருக்கிறது இடைஞ்சலா எதுவும் இருக்கா?” என்று கேட்டவனை, “ஐயோ! அப்படி எல்லாம் எதுவும் இல்லை” என வேகமாக சொன்னவள், “நீங்க ஏதோ ரொம்ப டென்ஷனா பேசிட்டு இருக்கீங்க. அதுதான் முக்கியமான வேலையா இருக்குமோன்னு…” என தயக்கமாக இழுத்தாள்.
ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்தவன், “ஹ்ம்ம் ரொம்ப முக்கியமான வேலை தான்! ஆனா நான் நாயா பேயா அலைஞ்சாலும் சின்ன துப்பு கூட கிடைக்காம முட்டுச்சந்துல முட்டி நிற்கிற மாதிரி இருக்கு” என்று அலுப்புடன் சொன்னவன், “ஏதாவது துருப்புச்சீட்டு கிடைக்கும். அதுக்கு தான் அல்லாடறேன்” என இரு கைகளாலும் முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டான்.
அவனது ஓய்ந்த தோற்றமே மிகவும் பரிதாபமாக இருந்தது. ஆறுதலாக, “சீக்கிரம் கிடைச்சுடும்” என அவள் சொல்லியபோது, சின்ன சிரிப்புடன், “டாக்டரம்மா என் மேல கோபத்துல இருக்கீங்க” என்று எடுத்துத் தந்தான்.
“அதுவும் ஒரு பக்கம் இருக்கு தான். அதுக்காக நீங்க கவலையில இருக்கும்போது சந்தோசப்படுவேன்னு நினைச்சீங்களா?”
“ம்ம் ஹ்ம்ம்… என்ன கவலையா இருக்கீங்கன்னு கேட்க கூட மாட்டேன்னு நினைச்சேன். ஆனா, நீ என்னை மாதிரி பேட் ஹஸ்பண்ட் மெட்டீரியல் இல்லை. குட் வைப் மெட்டீரியல் தான்” என சிறு புன்னகையுடன் சொல்ல, என்னவோ அவனை அவனே இறக்கி பேசுவதும் தாராவுக்கு பிடிக்கவில்லை. “அது ஒன்னுமில்லா. நீங்க பார்க்க ஜோலி நிறையா கிடக்கு. நான் இவ்விட என்ட்ரண்ஸ்க்கு பிரிபேர் செய்யறதை தாண்டி என்ன செய்யறேனாம்?” என அவனுக்கு அவனிடமே சப்போர்ட் செய்தாள்.
மனையாளின் இணக்கமான சொற்கள், தனக்காக தன் வேலைக்காக அவள் அக்கறையாகப் பேசுவது எல்லாம் புரிந்து மனம் நிறைந்தது.
‘என்னை அரசியல்வாதியாக ஏற்றுக்கொண்டது போல உன் ஆதி மாமாவாகவும் சீக்கிரம் ஏற்றுக்கொள்ளடி’ என மானசீகமாக தன் மனையாளிடம் உருகி நின்றான்.
“சரி மாத்திரை போட்டுட்டியா? தூங்கலாமா?” என்றபடி விளக்குகளை அணைத்துவிட்டு, இரவு விளக்கை மாத்திரம் ஒளிர விட்டவன், உள்ளறைக்குச் செல்லாமல் அதே கட்டிலின் மற்றைய பக்கத்துக்கு வந்து படுக்க தாராவுக்கு திக்கென்று இருந்தது.
காற்றாகிவிட்ட குரலில், “நீங்க அகத்துக்கு உறங்குனில்லா?” என படபடப்பாகக் கேட்க, “இல்லை இனி சென்னையில இருக்கும்போது இங்கே தான் தூங்க போறேன்” என அறிவித்தவனை அவள் மிரண்டு போய் பார்த்தாள்.
“இது வேற அவசர கல்யாணமாச்சே, என் பொண்டாட்டிக்கு என்னை ஏத்துக்க கொஞ்சம் அவகாசம் தரலாம்ன்னு யோசிச்சு நாம ஒன்னை பண்ணினா அவளுக்கு கண்ட கண்ட சந்தேகமெல்லாம் வருது. அவ பேருக்கு எல்லாம் பொண்டாட்டி இல்லை. என் கடைசி நிமிஷம் வரைக்கும் என் வாழ்க்கையில அவ மட்டும் தான் எனக்கு பொண்டாட்டின்னு அவளுக்கு புரியணும் தானே”
அவள் இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்கவில்லையே! எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டவளுக்கு அடுத்ததாய் எதுவும் பேசவே முடியவில்லை.
அவளின் அச்சம் புரிந்து, “ஒரே கட்டில்ல தான் தூங்கறேன். மத்தபடி உனக்கு கொடுத்த கால அவகாசம் இன்னும் அப்படியே தான் இருக்கு. உன் முழு சம்மதம் இல்லாம வேற எதுவும் செய்யும் உத்தேசம் எனக்கில்லை” என சொல்லும்போது, அவனை பிரமிப்போடு பார்த்தாள்.
இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் மெனக்கெட்டுச் செய்பவன், சில நேரங்களில் மோசமாக நோகடிக்கிறான். இவனை புரிந்துகொள்ளவே முடிவதில்லை என்று தான் அவளுக்குத் தோன்றியது.
மறுநாளும் அவளுடனேயே அவன் கழிக்க, வெறும் காய்ச்சலுக்காக இப்படி கூடவே நிற்கிறானே என அவளுக்குத் தான் சங்கடமாக இருந்தது. போக சொன்னாலும் மறுக்கிறான் என்கிற போது அவளாலும் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை.
ஆதீஸ்வரன் சத்யேந்திரனுக்கு கவுன்சிலிங் தரும் மருத்துவருக்கு அழைத்து, “எதுவும் முன்னேற்றம் இருக்கிறதா?” என்று விசாரித்தான்.
“இந்த சில நாளா கொஞ்ச இம்ப்ரூவ்மெண்ட்ஸ் தெரியுது. அவரோட பாதிப்புல இருந்து மீள தொடங்கியிருக்கணும்ன்னு நினைக்கிறேன். கொஞ்சம் அவரை பேச வைக்க முடியுது” என மருத்துவர் நம்பிக்கை தரும்படி பேச, பூஜிதாவை பார்த்த பிறகு என குறித்துக் கொண்டது அவன் மனம்.
“தேங்க்ஸ் டாக்டர்” என்று விட்டு கைப்பேசி அணைப்பைத் துண்டித்தவனுக்கு, தம்பியை முந்தைய இழப்பிலிருந்தே இன்னும் மீட்டெடுக்க முடியவில்லையே என்று ஆயாசமாக இருந்தது. அவன் மட்டும் தன் பாதிப்புகளிலிருந்து மீண்டு வந்து இயல்பான வாழ்க்கை வாழ்வான் என்றால் அதைவிடப் பெரிய விஷயம் இவனுக்கு வேறொன்றும் இல்லை.
தம்பியின் நிலைக்காகவே அவனால் ஏழுமலையை எந்த காலத்திலும் மன்னிக்க முடியாது. அவர் தாராவின் தந்தையாக இருந்த போதும் என பெருமூச்சோடு எண்ணிக் கொண்டான்.
அவனையே கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு அவனுடைய அலைப்புறுதல் மிகவும் கஷ்டமாக இருந்தது. “சீதாம்மாகிட்ட சொல்லி உங்களுக்குக் குடிக்க எதுவும் கொண்டு வர சொல்லட்டுமா?” என அக்கறையுடன் விசாரித்தாள்.
அவள் தன்னையே கவனித்துக் கொண்டிருப்பதில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. இவளுக்கு என் மேல் கோபம் என்று வேறு சொல்வாள் என எண்ணியவன், “தாரா…” என்றான் மென்மையாக.
“எதுவும் வேணுமா?” என வந்து நின்றவளிடம், “இப்ப எதுவும் வேணாம். உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
“ம்ம் சொல்லுங்க” என பொறுப்பாகக் கேட்டு நின்றவளிடம், தடதடத்த மனதுடன், “உன்னோட பேரண்ட்ஸ் பத்தி…” என இழுக்க, அவளுக்கு கண்ணில் நீர் நிறைந்தது. அதனை உள்ளிழுத்தபடி, “அம்மா தவறிட்டாங்க. அப்பாவை விட்டு சின்ன வயசுலயே பிரிஞ்சுட்டோம்” என்றாள் வருந்திய குரலில். “ஆனா யார் கேட்டாலும் அப்பாவும் இல்லைன்னு தான் அம்மா சொல்ல சொல்லியிருக்காங்க” எனவும் சேர்த்துச் சொல்ல,
“நீங்க பிரிஞ்சதுக்கப்பறம் உங்க அப்பாவை நீ பார்க்கவே இல்லையா?”
“ம்ம் ஹ்ம்ம். நான் சின்ன பொண்ணா இருக்கும்போது அப்பாவை போலீஸ் பிடிச்சுட்டு போயிட்டாங்க. அம்மாவும் அப்பாவும் விவாகரத்தும் வாங்கிட்டாங்க. அதுக்கப்பறம் என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியலை” என வலியுடன் கூறியவள்,
“ஆனா எனக்கு நல்லா தெரியும் எங்க அப்பா எந்த தப்பும் செஞ்சிருக்க மாட்டாருன்னு. இப்ப நீங்க இருக்கீங்க, உங்க தம்பி மேல எவ்வளவு பாசம் வெச்சிருக்கீங்கன்னு எனக்கு புரிஞ்சுக்க முடியும் தானே, ஒரு பேச்சுக்கு சொல்லறேன், உங்க தம்பிக்கு ஏதாவது தப்பா நடக்குது அங்கே நீங்க இருக்கீங்கன்னு வெச்சுக்கங்க. அதுக்காக உங்களை நான் சந்தேகப்பட முடியுமா சொல்லுங்க. என் அப்பாவும் அப்படி ஒரு இக்கட்டுல தான் இருந்தாரு, எல்லாரும் அவரை கொலைகாரன்னு சொன்னாங்க. கொலை செய்ய ஒரு மோட்டிவ் வேணும் தானே? அம்மா கொஞ்சம் பேராசை பிடிச்சவங்க தான். அதுனால எங்க குடுமபத்துக்கும் எங்க மாமா குடும்பத்துக்கும் சின்ன மனஸ்தாபம் இருந்தது என்னவோ உண்மை தான். ஆனா அதுக்காக… அதுக்காக… எங்க அப்பா எப்படி அத்தனை தூரம் போவாங்க. அதுனால அவருக்கு என்ன லாபம் இருக்க போகுது? இப்பவரை என்ன யோசிச்சாலும் எனக்கு சுத்தமா புரியலை. நாங்க ஏன் இப்படி ஏதோ ஒரு ஊருக்கு போயி அப்பா இல்லாம கஷ்டப்பட்டு வளர்ந்துன்னு இருக்கணும்” என முகம் மூடி அவள் அழுக, ஆதீஸ்வரன் அவளின் கோணத்தில் ஸ்தம்பித்தான்.
அவள் சொல்லும் எல்லாம் சரி தான்! ஏழுமலை மாமா தன் அப்பாவிடம் கொண்டிருந்த அபிமானம் இவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அன்று இரவு என்ன நடந்திருக்கும்? அவரின்றி வேறு யார் தாய், தந்தையைக் கொன்றிருப்பார்கள்? இல்லை தன் அப்பா மீது பிரியம் வைத்திருக்கும் ஒரு பெண்ணின் புலம்பல் பேச்சைக் கேட்டு நான் தான் குழப்பிக் கொள்கிறேனா?
ஆதீஸ்வரனுக்கு மண்டை சூடானது தான் மிச்சம். அவனுக்கும் பெரிதாக விவரம் தெரியும் வயதில்லையே அது! அந்த சம்பவத்தின் பிறகு பெரிதாக அன்றைய நிகழ்வை அலசி ஆராயும் நிலையிலும் அவன் இல்லை. அப்படி யோசித்திருந்தால் கூட இந்தளவிற்கு அவர்கள் பக்கத்தை அவன் யோசித்திருப்பானா என்பது சந்தேகம் தான்!
இப்பொழுது யோசித்தால் அந்த சம்பத்தின் பிறகு ஏழுமலையின் குடும்பம் இழந்தது தான் அதிகம். ஒருவேளை நூற்றில் ஒரு பங்கு வாய்ப்பாக ஏழுமலை குற்றவாளியாக இல்லாமல் இருந்தால்?
தலையை அழுந்த பிடித்துக்கொண்டு ஆதி அமர்ந்துவிட, அழுகையைக் கட்டுக்குள் கொண்டுவரத் தெரியாமல் வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் அவனின் மனையாள்.
((உங்கள் நீண்ட நாள் காத்திருப்புக்கு நன்றி டியர்ஸ். இன்றிலிருந்து தொடர்ந்து கதையோடு பயணிக்கலாம். மறக்காம உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க. கருத்துக்கள் வந்தா கொஞ்சம் எழுத ஊக்கமா இருக்கும்.))