“என் கூட விளையாட வரனும்னா, அவ நடக்கனுமேம்மா… அதான் கேட்டேன்” என தாயின் முகம் பார்க்க…

“இதுக்காடா…. இவ்வளவு அலம்பல் பண்ணினே” என தலையில் லேசாய் தட்ட

சின்ன சிணுங்கலை வெளிப்படுத்தியபடி “சொல்லும்மா ” என அழுத்தமாய் இவன் கேட்க

“அதற்கு இன்னும் ஒரு வருசம் ஆகும்டா…” என தான் விட்ட வேலையை பார்த்தபடி கூற

“அம்மா , சாத்வி எப்போ பேசுவா” என அடுத்த கேள்வியை கேட்க..

“ அதற்கும் ஒரு வருசம் ஆகும்டா ,.” என சிவஹாமியின் வாய் தானாகவே கூற

“ அம்மா, சாத்வி எப்போ எங்கூட விளையாட வருவா” என ஆசையாய் அடுத்த கேள்வியை முன் வைக்க…

“அதற்கும் இரண்டு மூணு வருசம் ஆகும்டா” இந்த முறை இழுத்துப்பிடித்த பொறுமையுடனே கூற

“ அம்மா” என இன்னும் அடுத்து ஏதோ கேட்க வர..

“டேய், இதுக்கும் மேல ஏதாவது கேள்வி கேட்ட, கொன்னுடுவேன் கொண்னு…. எழுந்து போடா, போய் ஹோம் ஒர்க் எழுதுற வேலையை பாரு” கையில் வைத்திருந்த கரண்டியை காட்டி சத்ரியை மிரட்டினார்.

கடுகடுப்பாய் பதில் கூறியதும் இல்லாமல் நிஜமாய் சத்ரியை மிரட்ட ஐந்து வயது பாலகன் உதட்டினை பிதுக்கி.. அழுகையை அடக்க முடியாமல் “தடுப்பூசி போட்டா சாத்வி சீக்கிரம் வளருவானு நீங்களும் சொன்னீங்க , அத்தையும் சொன்னாங்க..… அதான் எல்லா ஊசியும் போடுறீங்களே…. அப்புறம் ஏன் இன்னும் நடக்கலை.. அதுக்காக தான் கேட்டேன்… என்னை திட்டிட்டே இரு” கண்களை கசக்கியபடியே மாடிப்படியில் சென்று அமர்ந்து கொண்டான்.

சமையல் வேலையை விட்டு அவனருகில் வந்து “அவளுக்கு ஊசி போடுறது உனக்கெப்படி தெரியும்..” என சிவஹாமி கேட்க…

“அண்ணன் தான் சொன்னான்” என உதட்டினை பிதுக்கியபடி சொன்னான் சத்ரி..

அதையெல்லாம் வேடிக்கை பார்த்த படியே அவளின் அருகே வந்தான்…  சிவஹாமியின் எட்டு வயது மூத்த மகன் வெங்கடேஸ்வரன்.

“சாத்விக்கு ஊசி போடுறதை ஏண்டா இவன் கிட்ட சொன்ன.“ என வெங்க்கட்டை கேட்க…

திரு திரு வென விழித்துக் கொண்டிருந்தான் வெங்க்கட் ‘சத்ரியை அழ வைக்க வேண்டும் என்று தான் , சாத்விக்கு ஊசி போடுவதை சத்ரியின் காதுகளில் போடுவான் வெங்க்கட்…  அப்படி சொல்லும் நாட்களில் எல்லாம் சத்ரியை அழ வைக்காமல் விட்டதே இல்லை வெங்க்கட்.

‘சாத்வி….சாத்வி’ என காலையில் விடிவதில் இருந்து. இரவு அடையும் வரை சாத்வியின் புராணம் பாடும் சத்ரியின் மீது அளவு கடந்த கோபம்.

பின்னே சாத்வி பிறப்பதற்கு முன்பெல்லாம் அண்ணா… அண்ணா என புராணம் பாடியவன் ஆயிற்றே…. தன் பின்னே வால் பிடித்து கொண்டு இருந்தவன் இப்போது கண்டு கொள்ளவில்லை என்ற கோபம்…

வெங்க்கட் என்ன சொன்னாலும், என்ன கேட்டாலும் எளிதாய் விட்டுக் கொடுப்பவன்.

இப்போது அப்படியே சாத்வியை நோக்கி அந்தர் பல்டி அடித்தால்….கோபம் வராதா….வந்தே விட்டது.

அதை நேரடியாக்காண்பிக்காது… சாத்வியை காரணம் காட்டி சத்ரியை அழ வைத்துக் கொண்டிருப்பான்… இந்த திருட்டு தனத்தை  தாயிடம் காட்டாது. அங்கிருந்து ஓட்டம் பிடித்தான் வெங்க்கட்…

அதை சாதாரணமாய் எடுத்துக் கொண்டு “ இன்னும் ஒரு வருஷத்தில் சாத்வி உன் கூட விளையாட வந்திடுவா..  சரியா…  இப்போ நீ போய் அவ கூட விளையாட போ  “ என சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள் சிவஹாமி…

‘ சாத்வி என்றதும் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடினான் சத்ரி..’

ஏற்கனவே சத்ரியின் பிறப்பின் பின் “வெங்க்கட், நீ இப்ப பெரிய பையனா வளர்ந்திட்ட தானே, அம்மா தம்பியை கவனிக்கனுமாம். அம்மாவ ரொம்ப தொந்தரவு பண்ணாதடா…அம்மா பாவம் இல்லையா” என தந்தை , அத்தை, மாமா, கடைசியாய் சிவஹாமி என அனைவரும் அட்வைஸ் மழை பொழிய… அவர்களிடம் இருந்து ஒதுங்கினான்.

அவனைப் போலவே இன்னொரு ஜீவனுக்கும் இன்றைக்கு மஹாவின் வீட்டில் ஓதிக் கொண்டிருந்தனர். அது வேறு யாரும் இல்லை மஹா- சங்கரின் மூத்த புதல்வி க்ருத்திகா தான்.

தினசரி நேரத்திற்கு உணவு உண்கிறாளா? பள்ளி செல்கிறாளா? வீட்டில் என்ன செய்கிறாள்? என இதை மட்டுமாவது கவனித்தவர்கள்..சாத்வி பிறந்த பின் அதையும் கண்டு கொள்வதேயில்லை

க்ருத்திகாவிற்கும் கிட்ட தட்ட வெங்க்கட்டின் நிலை தான்  இருவருமே தந்தை தாயின் பாசத்தை உணர மறுத்தனர். பெற்றவர்கள் காட்ட மறந்து போயினர்.

சாத்வி பிறந்த போதும்,, பொக்கை வாயை காட்டி சிரிக்கும் போதும் , குப்புற, விழும் போதும், தவளும் போதும், எழுந்து அமரும் போதும் எல்லோரையும் தன் புறமாய் இழுத்துக் கொண்டிருந்தாள் சாத்வி.. ஆனாலும் எல்லோரையும்  விட சத்ரி தான் சற்று அதிகமாய் குதுகலித்துக் கொண்டிருப்பான்.

எழுந்து நடக்கும் போது பொத் பொத் என விழ சத்ரி  தான் கைபிடித்து நடக்க துணைவருவான்…   சாத்வியின் வரவை எளிதாக  சத்ரி ஏற்றுக் கொண்டாலும்.. தங்களுடைய அன்பு முற்றிலுமாய் இழந்து விட்டதாக நினைத்துக் கொண்டனர் வெங்க்கட்டும் க்ருத்திகாவும்..

ஒன்றரை வயதில் சாத்விக்கு முதல் மொட்டை என குல தெய்வம் கோவிலில்   அனைத்தையும் தயார் செய்து கொண்டிருக்க..

வீடே அதிரும் படி வந்து குதித்தான் சத்ரி “அத்தை வேணாம்” என சத்ரியின்  குரல் வீட்டையே அதிரவைத்தது…

“ஆரம்பிச்சுடான்டா….ஆரம்பிச்சிடான்டா…” என அங்கிருந்த மஹா சங்கரன், சிவஹாமி விநாயகசுந்தரம் என  அனைவரும் கோரசாக கத்த

‘இதெயெல்லாம் நான் கண்டுக்கவே மாட்டேன்’ என்ற ரீதியில்….

“சாத்விக்கு..… மொட்டைஐஐஐஐஐஐஐ.. வேண்டாம்….” என மீண்டும் அலற…

“ ஏண்டா ராசா…. வேண்டாம்..” என ‘மிகுந்த ‘ பாசாமாய் சிவஹாமி அழைக்க…

அவள் அழைப்பிலேயே தெரிந்து போனது சத்ரிக்கு அடி விழப் போகிறது என..

அது தெரியாத சத்ரி.. வழக்கம் போல் தாயின் முந்தானையை கையில் பிடித்தபடி” சாத்விக்கு மொட்டை வேணாம், அவ முடி எல்லாம் போய்டும்….காது குத்த வேணாம் அவளுக்கு வலிக்கும்” என அவன் அழுகைக் குரலில் சொல்ல….

“ எங்க அந்த வெளக்கமாற எடு” என அவனின் அன்னை அவனை அடிக்க விளக்குமாறை தேட…அதற்குள் ஓட்டம் எடுத்தவன்  அவனின் அத்தையின் பின்னே ஒளிந்து கொண்டான்.

“விடு சிவஹாமி…. எப்போ பாரு சத்ரியை திட்டிட்டே இருக்க.. பாவம் பய அழறான் பாரு..” என சத்ரியை தூக்கி வைத்தபடி அவன் கண்களை துடைத்து விட..

“நீங்க சும்மா இருங்கன்னே.. எப்போ பார்த்தாலும் ஏடாகூடாமாவே பேசிட்டு இருக்கான்..…  ஒரு நல்ல காரியம் பண்ண விட மாட்றான்…  ‘வேண்டாம்மா’ ன்னு முதல் ஆளா வந்து குதிக்கிறான் எடுபட்ட பய..” என கண்டபடி திட்ட.. சங்கரனின் பின்னே போய் மறைந்து கொண்டு அவரை அழுத்தமாய் பிடித்துக் கொண்டான் சத்ரி.

“இனி மேல் சாத்விக்கு வலிக்கும், அதை செய்யாத…  இதை செய்யாதன்னு  சொல்லு.. உனக்கு வலிக்கிற மாதரி ஏதாவது செய்றேன்” என சிவஹாமி சத்ரியை மிரட்ட…

“விடு சின்ன புள்ளையை மிரட்டிட்டே இருக்க.. “ என விநாயகசுந்தரம் தான் சமாதானம் செய்து சத்ரியை அழைத்துச் சென்றார்

பட்டுப் பாவடையில் தத்தி தத்தி நடை பழகிய சாத்வியை…  போலியாய் விரட்டுவது போல் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான் சத்ரி  அவனுக்கென்றே பிரத்யேகமாய் தைத்திருந்த வேஷ்டி சட்டையில்..

இருவரும் தூண்களுக்கு பின்னால், ஒளிந்து விளையாடுவதும் ஒருவரை ஒருவர் நேராக பார்க்கும் போது கிளுக்கி சிரிப்பதும்.. பின் சாத்வி சத்ரியை விரட்டுவதும் என அங்கிருந்த நிறைய பேரின் பார்வைகளை தங்களின் பின்னே திருப்பிக் கொண்டருந்தனர் இருவரும்.

மொட்டையிடும் நேரமும் வந்தது. சத்ரியோடு விளையாடிக்கொண்டிருந்தவளை தோளில் ஏந்தியபடி சங்கரன் தூக்கி சென்றார்.

 சாத்வி சிரித்துக் கொண்டே செல்ல “சிரிச்சிட்டே போற.. காது குத்தி உன்னை அழ வைக்கபோறாங்க” மனதினுள் நினைத்தபடியே சத்ரி தான் அழுகைக்கு தயாரானான்.

மொட்டையிடும் போதும், காது குத்தும் போதும் சாத்வி அழுததை விட சத்ரியின் அழு குரல் தான் அங்கிருந்த எல்லோரின் காது சவ்வினை கிழித்தது.

அவனுக்கு பதில் சொல்லி யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.

அன்று அவன் செய்த அலப்பரையால், சாத்விக்கு அதுவே முதல் மற்றும் கடைசி மொட்டையாக போனது.

இருவரின் குறும்புகளும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் சென்றது

“சாத்வி இப்ப நீ சாப்பிட போறியா….இல்ல என்கிட்ட அனப்பு வாங்க போறியா ” என்ற மிரட்டலில், ஏற்கனவே சிணுங்கிக் கொண்டிருந்த சாத்வி இன்னும் பலமாய் கத்த அதற்காகவே காத்திருந்ததை போல ஓடி வந்தான் சத்ரி .

“ஏன், அத்தை சாத்வியை அடிக்கிறீங்க, சாத்வி பாவம், அழறா”

வந்துட்டான்யா பாசக்கார பயபுள்ள…  என சிரித்தபடியே.. “டேய் அவ அடிக்காமலேயே அழறான்னா.. நீ எதுக்கு அடிக்கிறன்னு சண்டைக்கே வந்திட்டியேடா.” என இடுப்பில் கை வைத்து முறைத்தாள் மஹா…

பதில் சொல்ல தெரியாமல் நிற்கும் சத்ரியின் மனம் புரிந்து.

“சாப்பிடவே மாட்றா.. சத்ரி.. சாப்பிட சொன்னதுக்கு இவ்வளவு அழுகை” என  என சலித்துக் கொள்ள

சற்றும் யோசிக்கவே இல்லை..

இரண்டு வயதில் இருந்த சாத்விக்கு “நான் ஊட்டி விடுறேன்” அத்தை என்றான் ஏழுவயது சத்ரியன்.

எப்படியாவது உணவுண்டால் போதும் என அவன் கையில் கிண்ணத்தை கொடுக்க, அதை வாங்கியவன் “நாம வெளியில் போய் சாப்பிடலாம் “ என அழைத்து கொண்டு வெளியே வந்தான்.

நன்றாக நடை பழகியவளுக்கு விளையாட்டு காட்டி ஊட்டி விட்டான் சத்ரி.. சத்ரியை பார்த்தாலே சிரிப்பை வெளிக் காட்டும் சாத்விக்கு…  அவனே ஊட்டி விட்டதும் , தானாகவே வாய் திறந்தாள். கொஞ்சம் உணவு இறங்கிய பின் சாப்பிட மறுத்தாள் சாத்வி..

ஏழு வயது சிறுவன் ஊட்டிவிட்ட தடம் அப்படியே சாத்வியின் முகத்தில் பிரதிபலித்தது. வெண்ணெய் தின்ற கண்ணனை போல வாயை சுற்றி பிசு பிசுவென மசித்த சாதம் ஒட்டியிருக்க அவளை ஒரு கையில் பிடித்து , கின்னத்தை மறு கையில் பிடித்தபடி , கவனமாக அவளை வீட்டினுள் அழைத்து வந்தான் சத்ரியன்.

அதை கண்ட மஹா, சங்கரின் மனதில் அது அழகோவியமாய் பதிந்து போக, அர்த்தத்துடன் தன் கணவனை பார்க்க, அதற்கு சம்மதமாய் தலை அசைத்தான் சங்கரன்.

“அத்தே சாத்வி இவ்வளவு தான் சாப்பிட்டா… இதுக்கு மேல் சாப்பிட மாட்றா” கிண்ணத்தில் பாதியாக இருந்த மீத சாதத்தை காட்டினான் சத்ரி.

அப்போது தான் க்ருத்திக்கு சாப்பாடு ஊட்டி முடித்து, அவனிடம் வந்த மஹா.

“போதும் சத்ரியா.. எப்பவும் சாப்பிட அடம் பண்ணுவா, சாத்வி இவ்வளவு சாப்பிட்டதே பெரிசு…கின்னத்தை அங்க வச்சுடு சத்ரி” என பாத்திரங்கள் விளக்கும் இடத்தைக் காட்ட

மீதமிருந்த சாதத்தை சில நொடிகள் உன்னிப்பாய் பார்த்து..

“சாப்பாடை வேஸ்ட் பண்ண கூடாதாம், எங்க மிஸ் சொன்னாங்க, அத்தை.” என தீவர யோசனையின் பின்..

“நான் சாப்பிட்டுக்கவா” என அத்தையின் முகத்தை பார்க்க…  “ டேய் அது எச்சிடா..” என மஹா பதில் கூற

“பரவாயில்லை” என சாத்விக்காய் வாங்கியிருந்த சின்ன சேரில் அமர்ந்தவன் மீதமிருந்த சாதத்தை அவனே உண்டுமுடித்தான்..

அவனை பார்த்தபடியே சாத்வியும் நிற்க அவனும் மீத சாதத்தை உண்டு அவளுடன் விளையாட தொடங்கினான்..

அன்றிலிருந்து பள்ளி நேரம் தவிர அவளுக்கு விளையாட்டு காட்டி சாப்பிட ,தூங்க வைப்பது எல்லாம் சத்ரி தான்.