அத்தியாயம் 32

மறுவார்த்தை பேசாதே

மடிமீது நீ தூங்கிடு

இமை போல நான் காக்க

கனவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே

விரல் உன்னை வருடும்

மனப்பாடமாய்

உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக

இமைத்தாண்ட கூடாதென

துளியாக நான் சேர்த்தேன்

கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான்

உன்னை நினைக்காத

நாள் இல்லையே

பிரிந்தாலும் என் அன்பு

ஒருபோதும் பொய்

இல்லையே ………………….

தொலைதூரம்

சென்றாலும் தொடு வானம்

என்றாலும் நீ விழியோரம்

தானே மறைந்தாய்

உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் எனும்

மலர் கொண்டு

கடிதங்கள் வரைந்தாய்

பதில் நானும் தரும் முன்பே

கனவாகி கலைந்தாய்

மறவாதே மனம்

மடிந்தாலும் வரும்

முதல் நீ முடிவும் நீ

அலர் நீ அகிலம் நீ

சில வருடங்களுக்குப் பிறகு

அசந்து தூங்கிக் கொண்டிருந்தான் விக்ரம்.

“அப்பா… அப்பா… எந்திரி. வா விளையாட…” விக்ரமை உலுக்கிக் கொண்டிருந்தாள் அவனது இரண்டாவது தவப்புதல்வி விஷாகா.

“அப்பா தூங்கும் போது டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்கல்ல” தங்கையை அதட்டினான் மூத்தவன் விகாஷ்.

பிள்ளைகளின் சத்தத்தில் கண்விழித்த விக்ரம் “டேய் குட்டிச் சாத்தான்ஸ் யார்டா நீங்க? என் தூக்கத்தை கெடுத்துட்டீங்களே” கடுப்பின் உச்சத்தில் கத்தினான்.

“அப்பா….” விஷாகா விம்ம ஆரம்பிக்க,

“அப்பாவா?” அதிர்ந்தவன் கண்ணாடியில் தெரிந்த தன் விம்பத்தை பார்த்து மேலும் அதிர்ந்தான்.

பக்கவாட்டில் இருந்த சுவர் முழுவதும் விக்ரம் மற்றும் பாரதியின் திருமணப் புகைப்படமும், குழந்தைகள் உண்டானது முதல் தற்போதைய வயது வரையிலான புகைப்படங்களும் இருக்க ஓரளவு ஊகித்தவன் “இருங்கடா வரேன்” என்று குளியலறைக்குள் புகுந்து தன் முகத்தை பார்த்தவன் திருவாசகம் போல் கண்ணாடியில் ஒட்டியிருந்த “பிளேத ரெக்காடர்” என்றதை வாசித்து குளியலறை டாரவரில் இருந்த ரெக்காடரை தேடி எடுத்து கேட்டவன் புன்னகை முகமாக வெளியே வந்த தன் குழந்தைகளை கொஞ்சலானான்.

விஷாகா பிறக்கும் வரையில் விக்ரமுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. நாற்பது வயது தாண்டியதும் சில விஷயங்களை மறக்க ஆரம்பித்தவன் நாட்கள் செல்ல செல்ல வீட்டாரையும் அடிக்கடி மறக்க ஆரம்பித்தான். 

ஒருநாள் வீட்டுக்கு வந்தவன் சாந்தியை பார்த்து வீட்டில் வேலை பார்க்கும் பெண் என்று நினைத்துப் பேச “என்னாச்சு உனக்கு?” என்று கேட்ட சாந்தி “நான் வயசாகிட்டதால உனக்கு என்ன பிடிக்காம போச்சா?” என்று கண்ணை கசக்கினாள். பாரதி ஒருவாறு சாந்தியை சமாதானப்படுத்தி விக்ரமுக்கு உண்மையை புரிய வைத்திருந்தாள்.

விக்ரமுக்கு ஏதும் பிரச்சினையோ என்று அப்பொழுது வராத சந்தேகம் ஆளவந்தானை சதா முறைத்துக் கொண்டு திரிபவன் “அப்பா…” என்று செல்லம் கொஞ்ச அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு சந்தேகமாகவும் பார்த்து வைத்தனர்.

அந்த சந்தேகம் விக்ரமுக்கு ஏதும் ஆகியிருக்கோமோ என்றல்ல. தாமரை இல்லை தண்ணீர் போல் ஒட்டியும், ஒட்டாமலும் ஒரே வீட்டில் இருக்கும் தனது தாயையும், தந்தையையும் ஒன்று சேர்க்க திட்டமிடுகிறான் என்றுதான் எண்ணினர்.

ஆளவந்தான் மனைவியிடம் என்ன பேசுவது? எப்படி பேசுவது என்று திணறி ஒதுங்கி நிற்க, “நான் என்ன தப்பு பண்ணேன்? நான் போய் பேசணுமா? அவர் பண்ண தப்ப உணர்ந்து யார் யார்கிட்ட மன்னிப்புக் கேட்கணுமோ கேட்கட்டும் அப்பொறம் யோசிக்கிறேன்” என்று பொருமுவாள் சாந்தி.

விக்ரமுக்கு மோகனாவுக்கும்  ஆளவந்தானிடமிருந்து தான் பிடிவாதக் குணம் வந்திருக்குமென்று எண்ணினால் அது சாந்தியிடமிருந்து தான் வந்திருக்கிறது.

கணவன் குழந்தைகள் தான் உலகம் என்று இருந்தவள் கணவன் செய்த செயலால் பிராயச்சித்தம் என்று வீட்டை விட்டு சென்றிருந்தாலும், குழந்தைகளின் ஞாபகம் வந்த போதிலும் அவளுடைய பிடிவாதக் குணத்தால் தான் இத்தனை வருடங்களாக வீட்டுக்கு வராமல் இருந்தாள் என்பதுதான் உண்மை.

இவர்கள் பேசினாலே பிரச்சினை தீர்ந்திருக்கும். எல்லாவற்றுக்கும் நேரம், காலம் கூடி வரவேண்டும் என்பது விதி. அந்தநாளும் வந்தது.

விகாஷின் பிறந்தநாள் விழா வீட்டில் ஏற்பாடு செய்திருக்க, அதை மறந்து வீடு வந்த விக்ரம் ரகுராமையே யார் எனக் கேட்டதும்தான் அவனுக்கு இருக்கும் பிரச்சினையையும், அவன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் வீட்டார் அறிந்துக் கொண்டனர்.

சாந்தி, தேவி மட்டுமல்லாது ஆளவந்தான் கூட கதறியழுதான். ஏன் தங்களிடம் கூறவில்லையென்று சாந்தி குறைபட, ரகுராமை கையெடுத்துக் கும்பிட்டான் ஆளவந்தான்.

தான் செய்த பாவம்தான் தன் மகனுக்கு இப்படியொரு நிலை ஏற்படுவிட்டது என்று உணர்ந்துக் கொண்ட ஆளவந்தான் ரகுராமையும் நன்றாகவே புரிந்துக் கொண்டிருந்தான்.

விக்ரம் மற்றும் ரகுராமின் புனிதமான நட்பை புரிந்துக் கொண்டிருந்தாலே ரகுராமை ஏற்றுக் கொண்டிருந்திருப்பான்.

ஆளவந்தானின் தந்தை இருக்கும் வரை  நண்பர்களோடு ஊர் சுற்றியவன் தந்தை இறந்த பின்தான் தொழிலில் கால்பதித்தான். நண்பர்களை நம்பி பொறுப்புக்களை ஒப்படைக்க, இவனிடமிருந்து பணத்தை கையாடல் செய்து காணாமல் போகவும் விழித்துக் கொண்டவன் எப்படியோ சமாளித்து தொழிலை கைப்பற்றியிருந்தான்.

அந்த சம்பவத்திற்கு பின் யாரையும் நம்பாதவனுக்கு நண்பர்கள் என்று யாருமில்லை. பணம் இருந்தால் தான் மதிப்பு என்று பணத்தை ஈட்டுவதில் மும்முரம் காட்டினான். அவன் அனுபவம் நண்பர்கள் என்றாலே கொள்ளையர்கள் என்ற எண்ணத்தை தோற்றுவித்திருக்க, தன்னால் பாதிக்கப்பட்டவனின் மகன் தன் மகனின் உயிர்நண்பன் என்றதை ஏற்றுக்கொள்ள மனம் முரண்டியது என்பது மறுக்க முடியாத உண்மை. 

எக்காரணத்தைக் கொண்டும் ரகுராமை நம்பாதவன் பழிவாங்குகிறேன் என்று மோகனாவை ஏதாவது செய்து விடுவானோ என்று சந்தேகக் கண்ணை வைத்துக் கொண்டே இருந்தான். அவன் கவனித்ததில் ரகுராம்  மோகனாவை புரிந்து கொண்டு அவளோடு நல்லமுறையில் தான் நடந்து கொள்ளலானான்.

எப்பவோ ஒருநாள் வீடு வரும் ரகுராமையே புரிந்துகொண்டவன் வீட்டில் இருக்கும் பாரதியை புரிந்துக் கொண்டிருக்க மாட்டானா? அவளிடம் மனசார மன்னிப்பு வேண்டி நின்றான்.

“நடந்தது விபத்து மாமா. அதனால எங்க குடும்பம் மட்டுமல்ல. நீங்களும் அத்தையை பிரிஞ்சி மனவருத்தப்பட்டீங்களே. எதுக்கு இப்போ பழசை பேசணும்” இன்முகமாகவே கூறினாள்.

பாரதியிடம் அதிகம் பேசாவிட்டாலும் முறைக்காமல், இன்முகமாக நடந்துக் கொள்ளும் கணவனை பார்த்த சாந்திக்கு நிம்மதி பிறந்தாலும், பாரதியிடம் மன்னிப்புக் கேட்டது தெரியாததால், எட்ட நின்றே கணவனுக்கு சேவகம் செய்யலானாள்.

பாரதியிடம் சட்டென்று மன்னிப்பு கேட்ட ஆளவந்தானால் ரகுராமிடம் மன்னிப்புக் கேட்க முடியவில்லை. காரணம் அவன் தந்தையை பலியாடாக்கியது போதாதென்று இவனை வேறு பலிகொடுக்க முனைந்தது மட்டுமல்லாமல், காணும் பொழுதெல்லாம் எதையாவது சொல்லி விடுவதுதான்.

விக்ரமின் நிலையை அறிந்ததும் ரகுராம் அவனுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தான் என்பதும் புரிந்துப்போக கையெடுத்துக் கும்பிட்டவன் மன்னிப்புக் கேட்டான்.

மனம் வருந்தி கண்ணீரோடு கணவன் மன்னிப்புக் கேட்டதில் சாந்தியும் அழுது விட்டாள். ஆளவந்தானை அவள் தான் சமாதப்படுத்தியுமிருந்தாள்.

ரகுராம் அதிகம் பேசாமல் பெருந்தன்மையாக ஆளவந்தானை மன்னித்தவன், மோகனாவை சீண்ட ஆளவந்தான் மன்னிப்புக் கேட்டதை சொல்லி வெறுப்பேத்துவான்.

“என்னமோ என் பையன வச்சி எங்கப்பா முகத்துல உச்சா அடிக்க வைப்பேன்னு சொன்ன. பொண்ண பெத்து வச்சிருக்க” என்று இவள் அவனுக்கு பதில் கூறுவாள்.

ஆம். மோகனாவுக்கு ரகுராமுக்கு பூக்குவியல் போல் ஒரே ஒரு பெண்குழந்தை. பெயர் மிளிர்.

“அதுக்கென்ன அடுத்தது பையன பெத்துக்கலாம். ஆனா நீதான் கோப்பரேட் பண்ண மாட்டேங்குறியே” இவனும் பதில் பேசுவான்.

“நீ எனக்கு ப்ரொபேஸ் பண்ணல. பொண்ணு வேற பொறந்துட்டா. உனக்கு பையன் வேற வேணுமா?” என்று கடுப்படிப்பாள்.

“பொண்ணே பொறந்துட்டா. இன்னுமா நீ இத பிடிச்சிக்கிட்டு சண்டை போடுற?” என்று கிண்டல் செய்தவன் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பொழுது மோகனாவை மேடைக்கு அழைத்து சப்ரைசாக அவளுக்கு ப்ரொபோஸ் செய்தான்.

ஆனந்தத்தில் கூச்சலிட்ட மோகனா. அவனை கட்டிக் கொண்டு கண்கலங்கியவள் அங்கேயே அவன் கன்னத்தில் முத்தமிட்டிருந்தாள். இக்காட்ச்சி புகைபடங்களாகி வலைத்தளங்களில் வளம் வர ரகுராம் மனம் குளிர்ந்தான்.

ஆனால் மோகனாவோ “கஞ்சபிஸ்னரி… எவனோ அம்புட்டு செலவு செஞ்சி விழா ஏற்பாடு பண்ணா. நீ நோகாம ப்ரொபோஸ் பண்ணிட்டியே” என்று கிண்டல் செய்தாள். 

“போடி பொண்டாட்டி… என்ன பண்ணாலும் நீ திருப்தியாகவே மாட்டேங்குற. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தா நான் நீயாகவும், நீ நானாகவும் பொறக்கணும்” அவள் முகவாயை இடித்து விட்டு செல்வான்.

இவர்களின் வாழ்க்கை நாளொரு வம்பு, பொழுதோடு கிண்டல் என்று சுமூகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

விக்ரமுக்கு உடலில் எந்த பிரச்சினையுமில்லை. வழமையாக செய்யும் வேலைகளையும் ஒழுங்காகவே பார்த்தான். என்ன ஒன்று சிலநேரம் செய்த வேலையை திரும்பவும் செய்வான். அல்லது செய்வதற்கே மறந்து விடுவான்.

அவனை சரியாக வழிநடத்துவது பாரதி ஒருத்தியே. இதுவரையில் அவன் அவளை மட்டும் மறக்கவே இல்லை என்பது விந்தை.

அவள் கூடவே இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. உடனே அவள் சொல்லுக்கு கட்டுப்படுவான். குழந்தைகள் வளர, வளர தான் பாரதிக்கு அவன் நிலை பூதாகரமாக தெரிந்தது. இவன் குழந்தைகளை பேசி அதனால் அவர்கள் மனக்காயமடைந்தால் என்ன செய்வது குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்கவும் முடியாதே.

மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்க மருத்துவர் விக்ரம் யார்? என்ன? என்று குரல் பதிவு செய்து வைத்துக்கொள்ளுமாறு விக்ரமிடம் கூறியதாக கூறினார்.

அறையில் புகைப்படங்களை வைத்தவள். காரியாலயத்தில் சில புகைப்படங்களை வைத்தாள். விக்ரம்தான் அவன் குரலிலையே நடந்தது, நடப்பது என்று பதிவு செய்திருந்ததை மறந்திருக்க, ஞாபகம் வந்த போது பாரதியின் கையில் கொடுத்திருந்தான். அதை அவன் இருக்கும் இடமெல்லாம் வைத்திருந்தாள்.

தூங்கி கண்விழிப்பதனால் மட்டும் விக்ரம் மறந்து விடுவாயாயின் தூங்கும் இடத்தில் மட்டும் பதிவை வைக்கலாம். சில நேரம் வேலை பார்ப்பவன் என்ன வேலை பார்த்துக் கொண்டிருந்தானென்பதையே மறந்து விடுவதால் பாரதி அவனோடே இருப்பாள். அதனாலயே என்னமோ அவன் ஒருபொழுதும் அவளை மட்டும் மறக்கவே இல்லை.

“பெத்த அம்மாவும் அப்பாவும் ஞாபகத்துல இல்ல. பொண்டாட்டி மட்டும் எப்படித்தான் ஞாபகத்துல இருக்கோ தெரியல. வளர்த்த என்னையே மறந்துட்டான். இவன் ஒருத்தன் இப்படி இருக்கான். இவன் அப்பன் அதுக்கு மேல இருக்கான்” மகனையும் மருமகளையும் எண்ணி புலம்புவாள் தேவி.  

விக்ரமின் நிலையை அறிந்துகொண்ட பின் ஆளவந்தான் மற்றும் சாந்திக்கிடையில் இருந்த கசப்பு நீங்கி இருவரும் நேரடியாகவே பேசிக்கொள்ளலாயினர். இருந்தாலும் முன்பு இருந்த ஒட்டுதல் சட்டென்று வருமா? அவர்களை இணைக்கத்தான் பேரக் குழந்தைகள் இருக்கின்றார்களே அவர்களோடு ஒன்றியத்தில் இருவரின் இடைவெளியும் குறைந்து குழந்தைகளாகவே மாறியிருந்தனர்.

மகனும் மருமகளும் ராசியானத்தில் கோவில், குளமென்று சென்று விட்டாள் தேவி.

“அப்பாவை எழுப்பிட்டீங்களா?” என்றவாறே வந்த பாரதி விக்ரமுக்கு டீயை கொடுத்தாள்.

இன்முகமாக பெற்றுக் கொண்டவன் அருந்தியவாறே முதன் முதலாக பார்ப்பது போல் மனைவியை ரசிக்கலானான்.

குழந்தைகளைப் வரவால் கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் பிரிவும் இவர்களுக்கிடையில் இல்லை. வீட்டுப் பிரச்சினை தொழில் பிரச்சினை என்று வரும் பொழுது வரும் பிரச்சினையும் இல்லை.

எல்லாம் மறந்து விக்ரம் பாரதியை காதலாக பார்ப்பதும், பாரதி பதில் பார்வை பார்ப்பதுமாக காதலோடு இன்றும் அவர்கள் நாட்கள் நகர்கிறது.

ஒரு பெண்ணுக்கு கணவனால் பிரச்சினை. நாத்தனாரால் பிரச்சினை, மாமியாரால் பிரச்சினை ஏன் மாமனாரால் கூட பிரச்சினை ஏற்படலாம். ஆனால் பாரதிக்கு அவளோடு பிறந்தவாளால் மட்டும் தான் பிரச்சினை.

தான் நினைத்தது நடக்கவில்லையென்று மருத்துவமனையில் படுத்துக் கிடந்த பார்கவி வீட்டுக்கு சென்று தங்கையை உண்டு இல்லையென்று ஒரு வழி பண்ண வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால், மருத்துவர் ஒரு சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூற, தனக்கு ஒன்றுமில்லையென்று கூறிப்பார்த்தும் “நீ டாக்டரா? நான் டாக்டராம்மா?” என்று அவள் வாயை அடைத்தவர் அவளுக்கு சேவகம் செய்ய மூன்று பேரை வேறு ஏற்பாடு செய்திருந்தார்.

தனக்குத்தான் ஒன்றுமில்லையே என்று கடிந்தவள் வெளியே சொல்ல முடியாமல் திணற, கார்த்திகேயன் மனைவிக்கு என்னமோ என்று பயந்து விட்டான்.

பார்கவி வீட்டுக்கு செல்ல வேண்டும். கவியை காண வேண்டும் என்று கணவனிடம் போராட, மருத்துவர் அனுமதித்தால் செல்லலாம். கவி பாரதியோடு இருக்கின்றாள் என்று சமாதானப்படுத்த முயன்றான்.

விக்ரமின் வீட்டில் பாரதி இருப்பது தெரியாமல் அமைதியடைந்தவள் மருத்துவமனையிலிருந்து நேரடியாக சென்றது பாரதியின் கல்யாணத்தில் கலந்துகொள்ள என்று தெரிந்ததும் கோபத்தின் உச்சிக்கே சென்றாலும் கார்த்திகேயனின் முன்னால் எதுவும் பேசவும் முடியாமலும் பொருமிக் கொண்டிருந்தவள் தங்கையை தனியாக சந்தித்து நாலு வார்த்தை நறுக்கென கேட்டிட வேண்டும் என்று காத்திருந்தாள்.

அவள் எண்ணத்தை விக்ரம் போட்டுடைத்ததுமில்லாமல், சாந்தி வேறு நோயாளி என்று துரத்தி விட்டதில் ஏதாவது செய்தேயாக வேண்டும். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவளை வேலையை காரணம் காட்டி ஆஸ்ரேலியாவுக்கு அழைத்து சென்று விட்டான் கார்த்திகேயன்.

தூர இருந்து அவளால் என்ன செய்ய முடியும் என்று விக்ரம் நினைக்க, பார்கவியோ அலைபேசி அழைப்பு விடுத்து பாரதியை திட்டித் தீர்க்கலானாள்.

தான் திட்டினால் குற்ற உணர்ச்சியில் தங்கை மறுக்குவாள். மனதளவில் நொறுங்குவாள் என்று பார்கவி எதிர்பார்க்க, அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கும் பாரதி அக்காவின் மனநிலையை புரிந்து பதில் பேசமாட்டாள். பார்கவி எதிர்பார்த்தது போல பாரதி ஒன்றும் குற்ற உணர்ச்சியில் தத்தளிக்கவில்லை. விக்ரமை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் தன்னிலைமை என்னவோ என்று அஞ்சியவள், அதைவிட விக்ரமின் நிலை என்னவாகவும் என்று எண்ணி வருந்தியவள் விக்ரம் தன்னை அதிரடியாக திருமணம் செய்ததை எண்ணி அகமகிழ்ந்தாள்.

இது தெரியாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் தங்கை வருந்த வேண்டும் என்று அலைபேசியிலையே உரையாடிய பார்கவி உடல்நிலை மோசனமானத்தில் இந்தியா வரமுடியாமலே போனது.

பார்கவி அலைபேசி விடுப்பது விக்ரமுக்கு தெரியாமலில்லை. அக்காள் பேசி வைத்ததும் முகம் சுணங்கும் மனையாளை பார்த்து ஆறுதல் கூட கூற முடியாமல் தவிப்பவன் கார்த்திகேயனை அழைத்து பார்கவி கார்த்திகேயனின் மறுமணத்தை பற்றி பேசியதாக கூறி வைப்பான். வீட்டுக்கு சென்று மனைவியை திட்ட முடியாமல் புத்திமதி கூறுவான் கார்த்திகேயன்.

“அதுக்குள்ள புருஷன் கிட்ட போட்டுக் கொடுத்துட்டாளா?” பொருமும் பார்கவி அடுத்த அலைபேசியில் அதையும் சேர்த்தே கூறுவாள்.

பாரதி வேறு விக்ரமை பிடி பிடியென்று பிடிக்க, “நீயே புரிந்துகொள்ளும் வரை இனி நான் பேச மாட்டேன்” என்று சிரிப்பான்.

மூத்தவன் விகாஷ் பிறந்த பின்னும் பார்கவியின் இப்பேச்சு தீரவில்லை. என்ன நினைத்தாளோ “எனக்கு கல்யாணமாகி குழந்தையே பொறந்திருச்சு. நீ இன்னுமா இந்த பேச்ச விடல. உனக்கு மாமாவை பத்தி கவலைனா நான் என் புருஷன் கிட்ட சொல்லி பொண்ணு பாக்குறேன். அவர் சொன்னது போல கவியையும் தத்தெடுக்குறேன்” சொல்லி விட்டாள் பாரதி.

“என் புருஷனுக்கு பொண்ணு பார்க்க நீ யாருடி…” கோபத்தில் பார்கவி கத்தி விட,

“சொல்ல வேண்டியதை நான் சொல்லிட்டேன். என்ன என் புருஷன் கூட நிம்மதியா வாழவிடு” என்று அலைபேசியை துண்டித்திருந்தாள் பாரதி.

ஒரே வயிற்றில் பிறந்தால் ஒரே குணம் வந்து விடுமா? என்று கேட்பவர்கள் ஒரே உருவத்தில் பிறந்த பாரதி மற்றும் பார்கவி மட்டும் ஒரே குணத்தில், ஒரே விதமாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு.

விக்ரம் காப்பாற்றாவிட்டால் என்றோ விபத்தில் உயிர் நீத்திருக்க வேண்டியவள். தங்கையையும் புரிந்துக்கொள்ளாது வாழ்வது பார்கவியின் தலையெழுத்து.

மனைவி பேசுவதை அமைதியாக பார்த்திருந்த விக்ரம் “ஒருவழியா இவ புரிஞ்சிகிட்டா” என்று நிம்மதியாக புன்னகைத்தான்.

ரகுராமை மறந்தவன் பார்கவியை நினைவில் வைத்திருப்பானா? அவன் நினைவில் இருந்ததும், இருப்பதும் பாரதி ஒருத்தியே.

டீயை அருந்தி முடித்தவன் கப்பை பாரதியின் கையில் கொடுத்தவாறே “பசங்களுக்கு எப்போ ஸ்கூல் லீவு? நாம எங்கயாச்சும் வெளில போயிட்டு வரலாமே” என்று கேட்டான்.

வந்த சிரிப்பை அடக்கியவாறு தலையசைத்தாள் பாரதி.

அவனுக்கும் அவளுக்குமிடையில் பெரிதாக சண்டைகள் இல்லாவிடினும். குழந்தைகளால் வாக்குவாதம் நடைபெறுவதும் பாரதி முறைப்பதும், விக்ரம் முறிக்கிக் கொள்வதும் வழமைதான். அதை மறந்து அவனே பிள்ளைகளை கொஞ்சுவதும், இவளிடம் கெஞ்சுவதும் உடனே நடந்தேறும்.

போன வாரம்தான் விக்ரம் குடும்பத்தை அழைத்துக் கொண்டு காஷ்மீர் சென்று வந்தான். அதை மறந்து கேட்டதால்தான் சிரித்தாள் பாரதி. 

அவளின் புன்னகையை வைத்தே ஊகித்தவன் “நீ சிரிக்கிறதப் பார்த்தா போனவாரம் போயிட்டு வந்ததையே மறந்துட்டேன் போல” என்றவாறு அவளை இழுத்து தன்னருகில் அமர்த்திக் கொண்டவன் “ரதி உனக்கு என் மேல கோபம் இல்லையே. இப்படி ஒருத்தன கட்டிக்கிட்டோமே என்று வருத்தம் இருக்கா?”  பிரச்சினைகள் இல்லையென்றாலும், பிறந்தநாள், கல்யாண நாள் என்று எல்லா முக்கியமான நாட்களையும் விக்ரம் மறந்து விடுவதால் எந்த எதிர்பார்ப்பையும் பாரதியால் வளர்த்துக்கொள்ள முடியாது என்று உணர்ந்துதான் கேட்டான்.

கையிலிருந்த டீ கப்பை மேசையில் வைத்தவள் அவன் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டு “பொதுவா புருஷன் என்றாலே பர்த்டே, வெட்டிங் அனிவாஸரி என்று எல்லாத்தையும் மறக்குற ரகம்தான், கடவுள் ஆம்பளைங்கள அப்படி படைச்சிட்டான். என்ன உனக்கு மறதி கொஞ்சம் அதிகம் அவ்வளவுதான். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வாங்க. அப்போ கணவன் அமைவதெல்லாம் கடவுள் செய்த சதி தானே” என்று சிரித்தாள்.

அவள் இப்பொழுது என்ன பேசினாலும் அவன் மறந்துவிடத்தான் போகிறான். ஆனால் அவள் எதையும் மறக்க மாட்டாள். அவனோடு இருக்கும் பொழுதுகள் அவளுக்கு சொர்கம். முயன்ற மட்டும் ஆனந்தமாக இருக்க முயற்சசி செய்கிறாள். அதை அவனுக்கு கூறி மகிழ்வாள்.

“எனக்காக ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தையே டேமேஜ் பண்ணிட்டியே” விக்ரமும் சிரித்தான்.

“உனக்கிருக்குற பிரச்சினையால் கொஞ்சம் அப்படி, இப்படி இருந்தாலும், நன்மைதான் அதிகம். ஒரு வருஷத்துல என் பர்த்டேய எத்தனை தடவ செலெப்ரெட் பண்ணியிருப்ப? கல்யாண நாள ரெண்டு தடவ செலெப்ரெட் பண்ண. சிரிப்பாக இருந்தாலும் ஐம் ஹாப்பி…” என்று அவன் கன்னம் கடித்தாள்.

“நீ ஹாப்பியா இருந்தா நான் எவ்வளவு வேணாலும் செலவு பண்ணுறேண்டி…”

“அப்போ பேச்சு மாறாக கூடாது. உடனே பெட்டியை பேக் பண்ணுறோம். கிளம்புறோம்”

“ஓ… போலாமே. இந்த தடவ நாம ரெண்டு பேர் மட்டும் போலாம்” இளமை திரும்பியவானாக விக்ரம் பேச

“நானும் வருவேன். நானும் வருவேன்” என்று விகாஸும், விஷாகாவும் அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டனர்.

பாரதி சத்தமாக சிரிக்க விக்ரம் அவளை காதலாக பார்த்தான்.  

வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை மறக்க முடியாமல் திண்டாடுபவர்களுக்கு மத்தியில் விக்ரமின் மறதி கூட அவனுக்கு வரம்தான். இனிமையான தருணங்களை ஞாபகப்படுத்த அவனோடு தான் அவன் மனையாள் பாரதி இருக்கின்றாளே.

அதனால்தான் என்னவோ அவனுக்கு ஞாபகங்களை அள்ளிக் கொடுத்து விட்டு மறைந்து சென்றவளை மறந்த நிலையிலும் காதலித்து கரம் பற்றியிருந்தான் விக்ரம். ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ வரம் பெற்றவன் அவன் ஒருவனே.

இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் வாழ்க்கையில் தினமும் இன்பம் அனுபவிக்கும் ஒரே காதல் கணவனாகிப் போனவன் விக்ரம். அவன் காதலில் மூழ்கும் பாரதி.  

நன்றி

வணக்கம்

MILA