சடங்கு, சம்ப்ரதாயம், குலதெய்வப்பூஜை என்று எல்லாவற்றையும் முடித்துக் கொண்டே ரகுராம் மோகனாவோடு அவன் வீட்டில் குடியேறினான்.
“இருக்கிறதே ஒரு பேரன், ஒரு பேத்தி. இவன் வீட்டுலையே தங்கல. வீட்டுல இருந்தவளும் வீட்டை விட்டுப் போனா எப்படி?” ஆளவந்தானோடு இருக்க மாட்டேனென்று விக்ரம் பாரதியை அழைத்துக்கொண்டு சென்று விடுவான். மோகனாவும் இல்லையென்றால், வீடே அமைதியாகும். தன்னால் இருக்க முடியாது என்பதை தான் தேவி இப்படி புலம்பினாள்.
“நான் என் பொண்டாட்டியோட நம்ம வீட்டுலதான் இருப்பேன். நீ மோகனாவ அழாம வழியனுப்பி வை” அப்பத்தாவின் கன்னம் கிள்ளி சமாதானம் செய்தான் விக்ரம்.
கூடல் முடிந்த உடன் “நான் இல்லாத இந்த ஒரு வாரத்துல எங்கப்பா உன்ன ஏதாவது பேசினாரா?” யோசனையாகக் கேட்டான் விக்ரம்
“அவர் என்கிட்ட முகம் கொடுத்தே பேசல. இதுல அவர் என்னய என்ன பேசிட போறாரு?” புரியாமல் கேட்டாள் பாரதி.
“கல்யாணம் நடக்குறவரைக்கும் அம்மாவும், அப்பத்தாவும் கல்யாணத்துக்கு பிறகு வீட்டுக்கு வருவதானேன்னு கேட்டுகிட்டே இருந்தாங்க. எனக்கு உன் நிம்மதியும், சந்தோஷமும்தான் முக்கியம். அவர் உன்னைப் பேச, நான் அவர பேச, வீடே ரணகளமாகும். நீ சொன்னா தனிக்குடித்தனம் போய்டலாம். அதுவும் உன் இஷ்டப்படி ஒரு வீட்டுல” அவளுக்காக அவன் தந்தையையே பழிவாங்கலாம் என்றவன்தானே. எனக்கு நீதான் முக்கியம் என்று மீண்டும் தெளிவாக புரியவைத்தான்.
புன்னகைத்த பாரதி “அத்தையும், அப்பத்தாவும் என்ன நல்லாத்தான் பாத்துக்கிறாங்க. நான் உன் கூடவே ஆபீஸ் போய் வந்துடுவேன். இருபத்திநாலு மணித்தியாலமும் உன் கூடவே இருக்குற என்ன அவர் என்ன சொல்லிடப் போறாரு?”
அன்னை உயிரோடிருந்தால் பகை வேண்டாம் என்றுதான் கூறியிருப்பாள். பாரதிக்கு ஆளவந்தானின் மேல் எந்தக் கோபமும் இல்லை. நடந்த எதையும் மாற்றவும் முடியாது. நடந்ததையே நினைத்துக்கொண்டு வாழ்ந்தால், நிம்மதியாகவும் இருக்க முடியாது. ஆளவந்தான் அவளை எதுவும் பேசாவிட்டாலும் முறைத்துப் பார்த்தே அவள் மனதில் கிலியை பரப்பியிருந்தாலும், விக்ரம் இல்லாத பொழுது எதுவும் பேசாதவர், அவன் இருக்கும் பொழுது நிச்சயமாக பேச மாட்டார் என்ற நம்பிக்கையில் விக்ரம் ஒருவனுக்காக அவரை மன்னித்து விடலாம் என்ற மனநிலையில்தான் இருந்தாள் பாரதி.
“அம்மா கூடவே இருந்தா எதுவும் பேச மாட்டாரு” தந்தையை அறிந்தவனாக கூறியவன் “ஏதாச்சும் சொன்னா என்கிட்ட மறைக்கவும் கூடாது. புரிஞ்சுதா” தந்தை ஏதாவது பேசி அதனால் இவள் மனதளவில் மருகக் கூடாதே என்று கொஞ்சம் அதட்டல் குரலில்தான் கூறியிருந்தான் விக்ரம்.
“இப்போ எதுக்கு அவரப்பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ணுற?” விக்ரமின் மனநிலையை மாற்ற பாரதி பேச,
“அதானே…” நீ சொன்னால் நான் நிறைவேற்றாமலா இருப்பேன் என்பது போல் அவளை தன் வசமாக்கிக் கொண்டான்.
இதோ இப்பொழுதும் கண்களாலையே “உனக்கு ஓகே தானே” என்று மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பின்தான் தேவியை சமாதானப்படுத்தினான்.
அது சாந்தியின் கண்களிலும் விழுந்தது, ஆளவந்தானின் கண்களிலும் விழுந்தது.
“அப்பாவை போலவே இருக்கான்” என்று சாந்தி கணவனை பார்க்க, “என்ன?” கண்களாளேயே கேட்ட ஆளவந்தான் என்ன நினைத்தானோ வெடுக்கென உள்ளே சென்று மறைந்தான்.
அவனை கண்டுகொள்ளும் மனநிலை அங்கு யாருக்குமில்லை. மோகனாவையும், ரகுராமையும் வழியனுப்பி வைத்த விட்டு பாரதியின் புறம் திரும்பிய விக்ரம் அவள் தோளில் கைபோட்டு அணைத்தவாறே ஹனிமூன் எங்கே போகலாமெனக் கேட்டான்.
“கட்டாயம் போகணுமா?” பாவமாய் அவனை பார்த்தாள் அவன் மனையாள்.
இத்தனை வருடங்கள் கழித்து சாந்தி வீட்டுக்கு வந்திருக்கின்றாள். தேன்நிலவுக்கு செல்வதால் விக்ரம் சாந்தியை பிரிய நேரிடுமே. கொஞ்சம் நாட்களேயானாலும் தன்னால் இருவரும் பிரிந்திருக்க வேண்டுமா என்று யோசித்தவளுக்கு இத்தனை வருடங்களாக விக்ரம் வீட்டில் தங்கவில்லையென்று தேவி புலம்பியதும் ஞாபகத்தில் வரவே கேட்டிருந்தாள்.
“என் மேல கோபப்பட மாட்டேன்னு சொன்ன? குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு சொல்வாங்க. பஸ்ட நைட்டுல கூட நைட்டு சொன்னது காலைல மறந்துடுமா? இல்ல காரியம் சாதிக்க பொய் சொன்னியா?” அவன் கோபம் கொள்ளவும் இவள் மனைவியின் அவதாரமெடுத்து அவனை அதட்டினாள்.
“நான் எத சொன்னாலும் கண்ணை கசக்குறவ இப்படி கல்யாணமாகி ஒரே நைட்டுல மாறிட்டாளே” என்று மனைவியை மலைத்துப் பார்த்த விக்ரம் குரும்புத் தலைதூக்க, “நேத்து நைட்டுக்கு அப்பொறம் ஒரு மார்கமாகத்தாண்டி இருக்க. நைட் எடுத்த கிளாஸ் போஸ் பத்தலையோ? வா இப்போவே கிளாஸ் எடுக்குறேன்” என்று அவள் கையை பிடித்திழுத்தான்.
அவன் பேச்சில் வெக்கத்தோடு மிரண்டவள் “காலையிலையே ஆரம்பிக்காத” என்று அவனிடமிருந்து விலக முயன்றாள்.
“அப்போ நைட் மட்டும் போதும் எங்குற. ஆனா எனக்குப் பத்தாதே. ஆபீஸ்லயும் ஒரு மினி பெட் போடலாமென்று யோசிக்கிறேன். நீ என்ன நினைக்கிற?” அவளை வம்பிழுத்தான்.
“அப்போ நீ ஆபீஸ்க்கு வேலை பார்க்க போகல” ரகுராமிடம் கேலி, கிண்டல் செய்தாலும் தன்னிடம் எல்லை மீறாதவன் கணவனானதில் எடுத்திருக்கும் புது அவதாரம் பிடித்ததில் பாரதியின் வாய்ப்பூட்டும் கழன்றிருந்தது.
“வேலைதான் வேலைதான் வேலைக்கு நடுவே ரிலேக்ஸ் பண்ண பார்க்கும் வேலை” அவளை அணைக்க
“ஆதி… வா சாப்பிட. பாரதி நீயும் வா” சாந்தியின் குரல் கேட்கவும் பாரதி திடுக்கிட்டு விலக முயல. அவள் தோளில் கைபோட்டவாறே நடந்தான் விக்ரம்.
“ஒருவாரத்துல கல்யாணத்த பண்ணிக்கிட்டது போல, ஒரு வருஷத்துல கொள்ளுப்பேரனையோ, பேத்தியையோ பெத்துக் கொடுத்தீன்னா என் நேரம் போகும்” விக்ரம் அமரும் பொழுதே கூறினாள் தேவி.
“காலேஜ் முடிச்ச கையோட வேலை. வேலை கிடைச்ச கையோட கல்யாணமா?” என்று அன்று கேட்டவன் “இந்நேரத்துக்கு ரெண்டு பசங்களாவது இருந்திருக்கணும். எங்க இவ சொல்லாம, கொள்ளாம என்னைவிட்டு மறஞ்சி போய்ட்டாளே. அதான் வந்துட்டால்ல. ஒரே வருஷத்துல ரெண்டு புள்ளைய பெத்து கொடுக்க முயற்சி பண்ணுறேன்னு சொல்லுறேன் கேக்க மாட்டேங்குறா” சிரிக்காமல் விக்ரம் பேச,
“நான் மறஞ்சி போய்ட்டேனா? நீதான் என்னையே மறந்து போயிட்ட” என்று நினைத்தவள் அவன் அடுத்துப் பேசியதில் “என்ன இப்படி வெக்கமே இல்லாம சொல்லுறான்” என்று விக்ரமை முறைக்க முடியாமல் அமர்ந்திருந்தாள் பாரதி.
தர்மசங்கடமான நிலையில் அமர்ந்திருக்கும் மனையாளின் முகத்தை பார்க்க சிரிப்பு வந்தாலும், “ஹனிமூன் போக கூப்பிட்டா. வரமாட்டேன். அம்மாவை பாத்துக்கணும், அப்பத்தாவை பாத்துக்கணும் என்று சொல்லுறா. நீயே என்னனு கேளு” தேவியிடம் பாரதியை கோர்த்துவிட்டு அமைதியாக உண்ணலானான்.
பேரனின் குறும்பு தேவிக்கு புரியவில்லை. “ஹனிமூனோ, புல்மூனோ குழந்தையை பெத்துக்கிட்டு போங்க”
“அது செக்கன் ஹனிமூன் ஆகிடுமே. அதுவரைக்கும் என்னால வைட் பண்ண முடியாது” பாரதியின் காதுக்குள் சொன்னவன். “ஒழுங்கா போய் டிரஸ் பேக் பண்ணு. இல்லையா அடுத்து அம்மா, அப்பொறம் அப்பா நெக்ஸ்ட் ரகு மோகனா என்று பஞ்சாயத்துப் பண்ணுவேன்” சிரித்தவாறே மிரட்டினான்.
சாந்தியும் அங்குதான் இருந்தாள். இவர்களின் பேச்சை கவனிக்காதவள் போல் உணவருந்திக் கொண்டிந்தவள் வீட்டாரை எண்ணித்தான் பாரதி மறுக்கிறாள் என்று புரிய, “என் அத்தைய என்னால பார்த்துக்க முடியும். நீ என் பையன பார்த்துக்க. ஏதாவது குறை வச்ச…அப்பொறம் நான் பொல்லாதவளாகிடுவேன்” மாமியாராக பாரதியை முறைத்தாள்.
எப்பொழுதுமே தன் நலனில் மட்டும் அக்கறை செலுத்தும் சாந்தி தன் மகனுக்காக தன்னையே முறைத்ததும் சிரித்தாள் பாரதி.
“அதையே தான் நானும் சொல்வேன்” என்று தேவி சாந்தியை பார்த்தாள்.
“உங்க பையனுக்கு இப்போதான் கல்யாணமாக்கிருச்சு பாருங்க. அவர் பின்னும், முன்னும் நான் அலைய. இவர்கள் வரும் முன் உண்டு விட்டு காரியாலயம் செல்ல தயாராகி வந்த ஆளவந்தானை பார்த்தவாறுதான் கூறினாள் சாந்தி.
“ஆமா… ரெண்டு புள்ளைய பெத்த உடனே ஓடிப்போனவ இப்போ வந்துதான் என்ன பார்த்துக்கணும்? இத்தனை வருஷமா நான் தனியாகத்தான் இருந்தேன். எனக்கே என்ன பார்த்துக்க முடியும்” மனதுக்குள் பொறுமியவாறே காலில் ஷூவை மாட்டினான் ஆளவந்தான்.
கணவனோடு பேச மாட்டேன் என்று சாந்தி முறுக்கிக் கொண்டாலும் மாமியாரோடு மல்லுக்கு கட்டுவது போல் கணவனுக்கு பதிலடி கொடுப்பதும். அதற்கு ஆளவந்தான் மனதுக்குள்ளேயே பதில் சொல்வதும் வழமையாக மாறியிருந்தது.
வாய் திறந்து பதில் சொல்ல ஆளவந்தான் தயங்குவது மனைவியின் மீது இருக்கும் கோபத்தினாலையோ, அல்லது அச்சத்தினாலையோ அல்ல. தான் ஏதாவது பேசப் போய் மனைவியும் ஏடாகூடமாக பேசி சண்டையிட்டு மீண்டும் அவள் வீட்டை விட்டு சென்று விடுவாளோ என்ற எண்ணம் அலைக்கழிக்கவே பேசி அவளை துரத்துவதை விட மெளனமாக இருந்து அவளை கண் பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது என்பது அவர் கருத்தும், முடிவும்.
மகனை பார்த்ததும் “எனக்கு என்னைய பார்த்துக்க தெரியும். நீ உன் புருஷன மட்டும் பார்த்துக்க” சாந்தியையும், பாரதியையும் மாறி மாறி பார்த்த தேவி “நானும் கோவில், குளம் என்று போய்டுவேன்” என் பொறுப்பில் இருந்தவனை நீ எடுத்துக்கொள் என்றுதான் கூறினாள். அது ஆணித்தரமாக மருமகளுக்கு கூறப்பட்டது.
“நீயும் அப்பாவும் பேசாம எங்கயாச்சும் போயிட்டு வாயேன். நான் வேணா டிக்கட் போடட்டா? என்று அன்னையை கேட்ட விக்ரம் முதுகுக்குப் பின்னால் நின்ற ஆளவந்தானை கவனிக்கவில்லை.
“இது கூட நல்லாத்தான் இருக்கு” என்று தேவி கூற, தான் அழைத்தால், மனையாள் வருவாளோ, மாட்டாளோ என்று அதையே ஆளவந்தானும் யோசிக்கலானான்.
கணவனை பார்த்த சாந்தியோ “நானும் ஹனிமூன் போனதோடு சரி. என் புருஷன் என்னைய எங்கேயும் கூட்டிட்டு போகல. நீயாச்சும் புருஷன் கூப்பிட்ட உடனே போ. அப்பொறம் வேல, வேலைன்னு ஆபீஸையே கட்டிக்கிட்டு அழுவான்” பாரதிக்கு புத்திமதி சொல்வது போல் கணவனை குறை கூறினாள்.
“இப்போ இவ என்ன சொல்ல வரா? கூட்டிட்டு போகலான்னு குறை சொல்லுறாளா? இல்ல கூட்டிட்டு போன்னு சொல்லுறாளா?” மனைவியை முறைத்த ஆளவந்தான் வெளியே கிளம்பினான்.
ஆளவந்தான் வெளியேறிய சத்தத்தில் திரும்பிப் பார்த்த விக்ரம் “ஆகா…நம்ம அறிவாளின்னு நினச்சா, அம்மாவும், அப்பத்தாவும் அதுக்கு மேல இல்ல இருக்காங்க” தன் பெற்றோர்கள் ஆடும் கண்ணாமூச்சியை பார்த்து புன்னகைத்தவன் “ரதி வா நாம ஹனிமூன் கிளம்பலாம்” இங்கே நடந்த எதுவும் தனக்கு தெரியாதது போல் மனைவியை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றான்.
ரகுராம் மோகனாவை அழைத்துக் கொண்டு தேனிலவுக்காக சுவிஸ்லாந்து சென்றுவிட்டான்.
“அண்ணனும் அண்ணியும் நம்ம கூடவா வராங்க” என்று மோகனா கேட்க,
“பத்து வருஷமா அவனை கூட்டிகிட்டு சுத்தினது போதாதா? நாம தனியா போலாம்”
“என்ன எங்கப்பாவ பழிவாங்க என்ன கடத்திட்டு போறது போலவே பேசுற?” ரகுராமை வம்பிழுக்காவிட்டால் மோகனாவுக்கு நாளே கடக்காது. அவன் எது பேசினாலும் ஏடாகூடமாக எதையாவது சொல்லிவிட்டுத்தான் அமைதியாவாள்.
“ஆமா… ஆமா… கடத்திட்டு போய், குழந்தை வரம் கொடுத்து திருப்பி அனுப்பினா, உங்கப்பா முகத்துல என் பையன் உச்சா அடிப்பான் அதை பார்த்து கைகொட்டி சிரிக்கலாம் பாரு” அவள் வம்பிழுப்பது ரகுராமுக்கு நன்றாகவே புரிந்தாலும் அவளுக்கு பதில் சொல்வான்.
“அதென்ன பையன். ஏன் பொண்ணு பொறந்தா தூக்கி கடாசிடுவியா?” அதற்கும் இவள் பேச,
“என்னடி நீ… பையன் தாண்டி கரெக்ட்டா குறி பார்த்து உன் அப்பா மூஞ்சில உச்சா அடிப்பான். அதுவே பொண்ணுனா…” அவன் எடுத்துக் கூற முன் அவனை அடித்தவள் “எல்லாத்துக்கும் கூட, கூட பேசிகிட்டு. கொஞ்சம் அமைதியா இரு” அவனை அதட்டினாள்.
அந்நாட்டு காலநிலையால் என்னவோ மோகனாவின் கோபமும் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்க, கணவனோடு இணக்கமாகவே நடந்துகொண்டாள்.
ரகுராமும் அவள் மனநிலையை புரிந்துக் கொண்டு கெஞ்சி, கொஞ்சி, தாஜா செய்து வந்த காரியத்தில் கண்ணாக இருந்தான்.
விக்ரம் ரகுராமை அழைத்து கம்பனியை பார்த்துக்கொள்ளுமாறு கூற “டேய் பத்து வருஷம் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டான்னு ஊர் சுத்த கிளம்பினவனே. எனக்கும் உன் வயசுதான். இப்போதான் கல்யாணமும் ஆச்சு. நானும் என் பொண்டாட்டி கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்” என்று கடிந்தான்.
“டேய் பாட்டனர் போன மோகனாக்கு கொடு நான் அவ கிட்ட பேசுகிறேன்” என்று நண்பனை மிரட்டுவான் விக்ரம்.
அவளிடம் அலைபேசி கைமாறினால் தனக்குத்தான் தர்ம அடி கிடைக்கும் என்று அறிந்திருந்தமையால் “உன் தங்கச்சிய எனக்கு எதுக்கு கட்டி வச்சான்னு இப்போ புரியுதுடா. நான் பழிவாங்குவேன்னு உங்கப்பா சொல்லுறாரு. நீ வாங்குறதுதான்டா பழிக்குப்பழி” நண்பனை வசைபாடிவிட்டு அலைபேசியை துண்டித்தான் ரகுராம்.
“பத்து வருஷம் எல்லாமே இருந்தவன் இல்லனா எப்படி. அதான் அப்போ அப்போ ஊறுகாயா யூஸ் பண்ணுறேன்” என்று சிரித்தான். பாரதியும் சேர்ந்து சிரித்தாள்.
தேனிலவு என்று விக்ரம் பாரதியை வெளிநாட்டுக்கெல்லாம் அழைத்துச் செல்லவில்லை. அவளை முதன்முதலாக சந்தித்த அவன் படித்த பாடசாலைக்கு சென்றவர்கள் அதன் பின் சுற்றுலா சென்ற பொழுது அவன் விழுந்த குளத்தை பார்க்க அங்கே அறையெடுத்துக் தங்கினான்.
அவளுடன் கடந்த பொழுதுகளை மீட்டிப் பார்க்க வேண்டும் என்று அவளை அழைத்துச் சென்றவன் அவளோடு சேர்ந்து அன்றைய நாளில் நடந்தவைகளை பேசியதோடு, குரலை பதிவு செய்யும் கருவி மூலம் எல்லாவற்றையும் பதிவு செய்யலானான்.
விக்ரமுக்கு எதுவும் ஞாபகம் இல்லையென்று எண்ணி பாரதி பேச, விக்ரம் கூறும் பதிலில் விழித்தவள் “உனக்கு எல்லாம் ஞாபகம் வந்திருச்சா? எப்போ?” ஆனந்தமாக இருந்தாலும் சங்கடமாகவே கேட்டாள்.
“என்னால என் வாழ்க்கைல இருந்து உன்ன என்னைக்குமே விலக்கி வைக்க முடியாது என்று புரிஞ்சிகிட்டேனோ அப்போ” அவளை எண்ணி வருந்திய கதையை கூறினால், அவள் கவலையடைவாளென்று இவன் இவ்வாறு கூறினான்.
“எல்லாம் ஞாபகம் வந்ததுல நீ வருத்தப் படாதே. நீ பேசினத நான் மறந்துட்டேன். இனிமேல் நாம நடந்தத பத்தி பேச வேணாம் ஓகே” அவனை சமாதானப்படுத்தினாள்.
“பஸ்ட் நைட் அன்னைக்கி நான் பேசினத்த கேட்டு எனக்கு எல்லாம் ஞாபகம் வந்திருக்கும் என்று நீ கண்டு பிடிச்சிருப்பான்னு நினச்சேன். நீ டிம்விட் தான்” வம்பிழுத்தான்.
“சாரி… நீ பேசினத நினைச்சி நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்ப. நான் தான் கூட இருந்து புரிய வச்சிருக்கணும். சாரி…” அவனை எண்ணி வருந்தலானாள்.
இவள் இப்படித்தான் இவளை மாற்ற முடியாது என்று காதலோடு பார்த்தவன் “ஹப்பா… மன்னிச்சிட்டியா? இப்போ சொல்லு எங்கெல்லாம் போகணும். போலாம்” பேச்சை மாற்ற முயன்றான்.
“நீ கூட இருந்தா, எங்க வேணா போகலாம்” ஆத்மார்த்தமாக கூறினாள்.
“பார்டா… கவிதை. கவிதை…” அவள் எதையும் எண்ணி தீவீரமாக சிந்திக்கவும் கூடாது. கவலைகொள்ளவும் கூடாது என்று அவளை இயல்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கிண்டல் செய்தான்.
“ரகுராம் இல்லை என்றதும் என்ன கிண்டல் செய்யிறியா?” அவன் நினைத்தது போலவே பாரதி அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
அவள் கைகளை பற்றித் தடுத்தவன் “தேங்க்ஸ். நீ இல்லனா நானே இல்ல” அவன் அதை உணர்ந்து மட்டும் சொல்லவில்லை. அர்த்தத்தோடுதான் சொன்னான்.
“பார்டா…. கவிதை கவிதை” அவனை நகல் செய்து சிரித்தாள் பாரதி.
விக்ரமுக்கு எல்லாம் ஞாபகம் வந்த பின் திருமண வேலைகள் இழுத்துக் கொண்டாலும் மருத்துவரை நாடியிருந்தான். தனக்கு எல்லாம் ஞாபகம் வந்து விட்டது. ஆனால் மீண்டும் எல்லாம் மறந்து விடுமோ என்ற அச்சமும் இருக்கிறது. இப்பொழுது எந்நிலை என்ன? நான் முற்றாக குணமடைந்து விட்டேனா?” என்று தனக்கிருக்கும் சந்தேகங்களை கேட்கலானான்.
“பத்து வருஷத்துக்கு முன்னாடி மூணு மாசத்துல செத்துடுவ. ஆபரேஷன் பண்ணாலும் ஆறுமாசம்தான் உயிரோட இருப்பான்னு சொன்னேனே ஞாபகம் இருக்கா?” என்று மருத்துவர் கேட்க “ஆம்” என தலையசைத்தான் விக்ரம்.
“உனக்கு கேன்சர் மட்டுமல்ல எப்பயோ தலைல அடிபட்டதினால இரத்தம் உறைந்து அந்த இடத்துல ஒரு கட்டியிருந்தது. எப்படியாவது உன்ன காப்பாத்திடனும் என்று எனக்குள் எழுந்த உத்வேகத்தினால உன்ன பத்தி விசாரிச்சேன்.
சின்ன வயசுல நீ கடத்தப்பட்டிருக்க, மயங்கி விழுந்திருந்த உன்ன யாரோ ஆஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. நீ ஏன் மயங்கி விழுந்தான்னு உனக்கே தெரியலன்னு போலீஸ்கிட்ட சொல்லியிருக்க.
என் ஊகம் சரியென்றா, எதுலையோ உன் தலை மோதினதால நீ மயங்கியிருக்க. அப்போ தான் மூளைல இரத்தம் உறைஞ்சி இருக்கணும். நீ வளர்ந்தும் எந்த பாதிப்பும் இல்லாம, அமைதியா உறங்கிக் கிட்டு இருந்தது திரும்ப எக்சிடண்ட்டுல தலை பட்டு ஏக்டிவ் ஆகியிருக்கணும். இதுல கேன்சர் கட்டி வேற.
நடந்த எக்சிடண்ட்டுல கெட்டது நடந்தாலும் டியூமர கண்டு பிடிச்சிட்டோம். பேபியா இருந்தத அகற்றினா உனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. பிரச்சினையே எப்பயோ நடந்த ப்ளாட் க்ளோட் தான். அதனால் பேரலைஸ் ஆகலாம். காலத்துக்கு ஐம்புலன்கள்ள எதோ ஒன்னு இல்ல எல்லாம் கூட வேலை செய்யாம போகலாம். இல்ல கோமாக்கு போகலாம். இல்லனா உச்சகட்டமா மரணம் கூட வரலாம். மொத்தத்துல உயிரோட இருந்தாலும் பொணம் என்ற நிலைதான்.
இதுல திரும்ப கேன்சர் வந்தா? நீ பொழைக்கவே மாட்ட” இப்படியெல்லாம் பிரச்சினை இருக்க. நீ பொழச்சி எல்லாத்தையும் மறந்த. பேரலைஸ் ஆனாலும் குணமான. அதுக்கு உன் மனதைரியம், ஆரோக்கியம் மட்டுமல்ல உன் காதலும்தான்” என்று சிரித்தவர் “பிரச்சினை இனி இல்லனு என்னால கேரண்டி கொடுக்க முடியாது. மறதிதான் பிரச்சினை. மறந்திடும் என்று பயம் இருந்தா, மெமொரிச கிரேட் பண்ணு. எல்லாம் நல்லதாகவே நடக்கும்” என்றிருந்தார்.
அதனால்தான் தேனிலவுக்கு செல்லும் சாக்கில் நடந்தவைகளை மறக்கக் கூடாதென்று பதிவு பண்ணலானான் விக்ரம்.
கடந்தகாலத்தை மீட்டியவன் அதன்பின்தான் பாரதியிடம் கேட்டு அவளுக்கு பிடித்தமான இடங்களுக்கு அழைத்து சென்றான்.