அவன் நீட்டிய போட்டோவை கண்டுகொள்ளாமல், என்னவென்றே யூகிக்க முடியாதளவிற்கு ஓர் ஆழ்ந்த மெளனம் அவளிடம்
சத்ரியால் அந்த மௌனத்திற்கு விடை காணத் தான் முடியவில்லை. நெற்றி சுருங்க யோசிப்பதற்குள், அவன் கையிலிருந்த போட்டோவை நிதானமாய் தன்கைகளில் வாங்கிப் பார்த்தாள். ஓரிரு நொடிகளின் பின் “எனக்கு ஓகே… கல்யாண வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க..” என்றாள் சாத்வியும் நிதானமாய்
‘உப்ப்” என பெருமூச்சு சத்ரியிடமிருந்து கிளம்ப, அதையும் மீறி.. அவளது உடனடி பதிலில் மனம் ஆட்டம் கண்டதென்னவோ உண்மை.
“அவ்வளவு தானா….? வேற எதுவும் பேசனுமா..!” என சாத்வி கேட்க அவளது பதிலில் தன் குழப்பத்தை ஒதுக்கி வைத்து.
“ம்… பேசனும், ஆனா என்கிட்ட இல்லை.. உன் அம்மா அப்பாகிட்ட” என சொல்லி முடிக்கும் முன்பே
“ எனக்கு இஷ்டம் இல்லை… ”
“ம்ஹூம் நீ உன் அம்மா அப்பாகிட்ட பேசி தான் ஆகனும். நாளைக்கு வீட்டுக்கு வந்தே ஆகனும்” என அதிகாரமாய் பேச
“நீ என்ன சொன்னாலும் தலை ஆட்டிட்டு இருக்க என்னால் முடியாது“
“ஏனாம் ”
“எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கலை… ”
“யாரையும் பார்க்க பிடிக்கலையா….இல்லை உன் அம்மா அப்பாவை பார்க்க பிடிக்கலையா… ”
அவள் மௌனமே பேசியது… அது தான் என…
“அம்மா அப்பாட்ட ஏன் பேச மாட்ற… புதுசா எதுவும் காரணமிருக்கா..? இல்லை பழைய காரணம் தானா?”
“அதை உங்க அத்தை மாமாட்ட கேட்டு தெரிஞ்சிருக்கலாமே… ”
“காரணம் கேட்டா ‘ தெரியலைன்னு ‘ சொல்றாங்க“
“இதை கேட்க தான் வர சொன்னீங்களா???”
‘ பின்னே’ என்பது போல் பார்வை படற..…
“ இது தான் காரணம்னா… நான் கிளம்புறேன்..”
வரேன் என்பது போல் ஒரு பார்வை கூட இல்லை… கைப்பை சகிதம் கிளம்ப….
“ உட்கார் சாத்வி… ” என அவள் கை பிடித்து இழுத்து அமர வைத்தான்…
“சரி , என் அம்மா அப்பாவை பார்க்க வரலாம் இல்லையா! ம்” என வெள்ளை கொடி பறக்கவிட
“ப்ச்… வரலை” என்றாள் சட்டென
“ம்ப்ச் .. நடக்கப் போறது உன்னொட கல்யாணம்.. நம்ப குடும்பத்தை பத்தி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உனக்கு. கல்யாண பேச்சுக்கு அப்புறமும் நீ வீட்டுக்கு வராமல் இருந்தால் தப்பு. அதனால் காலையில் நீ வீட்டுக்கு வந்தே ஆகனும். பேருக்கு இருந்துட்டு கல்யாண விசயமா என்ன சொல்றாங்களோ கேட்டுட்டு கிளம்பு… அப்புறம் எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என சொல்ல
“எப்போ பாரு ஆளாளுக்கு அவங்க அவங்க இஷ்டத்துக்கு ஆட வேண்டியது. ஆனால் எல்லாரோட ஆட்டத்திலேயும் சிக்குறது நான் தான். இன்னும் என்னவெல்லாம் ஆடனுமோ நல்லா ஆடுங்க..” என விரக்தியாய் வந்தது வார்த்தைகள்.
“எல்லாம் நல்லபடியா நடக்கும்… இப்போதைக்கு ஹேப்பியா இரு.. கல்யாணப் பொண்ணா… சிரிச்சிட்டு இரு.. உன் டென்சன் எல்லாத்தையும் என்கிட்ட விட்டுடு.. கோபமா? அதையும் என்கிட்டேயே கொடுத்துடு. நான் பார்த்துக்கிறேன்..” என பேச
அவன் மாறாத அன்பில் தானாகவே மென்னகை வந்து அமர்ந்து கொண்டது அவளின் உதடுகளில்…
“உன்கிட்ட பேசி பேசியே வயிறு பசிக்குது” என இவள் கூற
‘பேரர்’ என அழைத்து சில உணவு வகைகளை இவன் ஆர்டர் செய்ய
இருவரும் ஒன்றாய் உணவுண்டனர்.
சாப்பிட்டு விட்டு கிளம்பி சாத்வியின் பின்னேயே இவன் வர “நான் தனியாவே போய்ப்பேன். பக்கத்துல இருக்கிற அப்பார்ட்மெண்டில் தான் இருக்கேன்” என அவள் இருக்கும் அப்பார்ட்மெண்டின் ஏரியாவை சொல்ல.
“ஓ… இங்கே தான் இருக்கியா..” என கேட்டு அவள் கூடவே வந்து வழியனுப்பிவிட்டு
“காலையில் கண்டிப்பா வரணும் ” என கட்டளையிட்டே சென்றான்.
‘சரி’ என தலையசைத்து, அவளது காரை எடுத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
தன் அப்பார்ட் மெண்டிற்குள் நுழைந்தவள் ‘என் வாழ்க்கை உன்னோட கையில் தான் எதுவா இருந்தாலும் ஏத்துக்குறேன்’ என தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு.. அந்த நினைவுகளுடனே உறங்கிப்போனாள்..
வீட்டிற்கு வந்த சத்ரிக்கு அத்தனை நிம்மதி. “இன்னும் கூட என் பேச்சுக்கு அவ்வளவு மதிப்பு கொடுப்பியா சாவி.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இதுக்காகவே உனக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கனும் நடத்திக்காட்டுவேன்..” என ஏறக்குறைய சபதமே செய்தான்.
மறுநாள் பேங்கில் பெர்மிஷன் எடுத்து வந்தாள்.
காரை ஸ்டார்ட் செய்துவிட்டு “நான் கிளம்பிட்டேன் சத்ரி, அட்ரஸ் சொல்லு” என கேட்க , இவனும் அட்ரஸ் சொல்லி
“கூப்பிட வரவா” என கேட்ட சத்ரியையும் மறுத்து… “கார்.. இருக்கு …. நானே வரேன்” என அவளே வந்தாள்.
அவள் வருகிறாள் என காலையில் தான் சொன்னான் சத்ரி. பின்னே இரவே சொல்லியிருந்தால் தன்னை உறங்கவே விட மாட்டார்கள் என இப்போது காலையில் தான் சொன்னான்.
வருகிறாள் என்றதும் அனைவருக்கும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ள, வாசலையே பார்த்தவண்ணம் இருந்தனர்.
சொன்ன நேரத்திற்கு சரியாய் வந்தாள். உள்ளே நுழைந்தவளின் பார்வை சத்ரியின் மீது வெகு நேரமாய் பதிந்து பின் மீண்டது
“வா சாத்வி..” என சத்ரி தான் முதலில் தலையசைத்து அழைத்தான்.
அதை பார்த்த அடுத்த நொடி எந்த தயக்கமும் இல்லாமல் உள்ளே வந்தாள்
“ வாம்மா… ” என அழைத்த மஹா
“ வா சாத்வி… “ என பாசமாய் அழைத்த சிவஹாமி
“ எப்படிம்மா இருக்க” என கேட்ட விநாயகசுந்தரம்
என யாரையும் பார்க்க கூட இல்லை..
சங்கரன் ஒரு மூலையில் தேமே என நின்றிருக்க… க்ருத்திகாவும் வெங்க்கட்டும் ‘பெரியவங்க கிட்டேயே பேச மாட்றா, நம்மகிட்ட பேசுவாளா’ என நின்றிருந்தனர் அவள் யாருக்கும் பதில் சொல்லாமல் அழுத்தமாய் நின்றிருந்த விதத்தில் மற்ற அனைவரும் அப்படி ஒரு அமைதியில் இருந்தனர்..
எதிரில் இருந்த தாயிடம் பார்வையை பதித்து..
“இத்தனை வருசம் இல்லாத பாசம் இப்போ என்ன திடீர்ன்னு” என கேட்க… மஹாவிற்கு இடியே விழுந்தாற் போல் இருந்தது அவளின் கேள்வியில்.
அனைவரும் கோபமாய் சாத்வியையே பார்க்க..
மஹா மட்டும்.. சங்கரனையே பார்க்க…
சங்கரனுக்கோ… முகத்தை எங்கே வைப்பது என கடுகடுவென நின்றிருந்தார்.
சங்கரனிடமிருந்து பதில் வராததை உணர்ந்து “வயசு ஏறுதில்லையாம்மா… கால காலத்தில் உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கணுமில்லையா” என மஹா முகம் கன்ற கூற
“இந்த பாசம் தானா வந்தது மாதிரி தெரியலையே,யார் சொல்லி என் கல்யாணத்தை முடிவு செஞ்சீங்க” என நக்கலாய் கேட்டாள் சாத்வி…
உண்மை தானே… ஊரில் மற்றவர்கள் சொல்லி தானே சாத்வியை பற்றிய எண்ணமே சங்கருக்கு வந்தது… உண்மையான பாசம் இருப்பவராக இருந்தால் சாத்விக்கு என்றோ திருமணம் முடிந்திருக்குமே.. என சத்ரி வாய் விட்டு சொல்லியது இன்று அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது…
‘ நீ நல்லா கேளும்மா…. அப்போவாவது உன் அப்பாவுக்கு உரைக்குதான்னு பாப்போம்’ என மஹா மனதோடு பேச….
“ ஏய் ஆமா… ஒருத்தி மானத்தை வாங்கிட்டு போய்ட்டா.. உனக்காவது ஒழுங்கா மத்தங்க வாயில் விழாத மாதிரி கல்யாணம் செஞ்சு வைக்கனும்னு நினைச்சேன். அது தான் எனக்கு மரியாதையும் கூட ” சட்டென உள் புகுந்து சங்கரன் கிட்டதட்ட கத்த துவங்கினார். க்ருத்திகாவோ வெங்க்கட்டை பார்க்க
‘அனுபவிச்சு தான் ஆகனும் வேற வழியில்லை’ என மெதுவாக வெங்க்கட் கூற, இருவருமே அமைதியாய் நின்றிருந்தனர்.
“அதானே பார்த்தேன்… இன்னும் நீங்க மத்தவங்களுக்காக தானே வாழுறீங்க… பெத்த பொண்ணுங்களுக்காக எப்போ தான் வாழ போறீங்களோ” என சாத்வி கேட்க…
“திமிரா பேசுறதையெல்லாம் வேற எங்கையாவது வச்சிக்க… ” என சங்கரன் எகிற
“வேற எங்கையாவது வச்சிக்கன்னா… ? எதுக்கு என்னை இங்கே வர சொல்லனும்? எதுக்கு என் கல்யாணத்தை பத்தி நீங்க பேசனும்”
“பெத்தாச்சு இல்லையா, செய்ய வேண்டிய கடமை இருக்கே… ”
“ உனக்கெல்லாம் கல்யாணம் பேசறதே பெரிசு… இதில் பெரிய இடம் பார்த்திருக்கேன் கல்யாணம் பண்ண கசக்குதோ”
“கல்யாணம் பண்ண கசக்கல, நீங்க முடிவு பண்ணின கல்யாணம்ன்றதினாலே தான் கசக்குது” என உண்மையை போட்டுடைத்தாள்.
“ஏன்… நான் பார்த்தால் கல்யாணம் செஞ்சுக்க மாட்டியா?” அதிர்ந்து போய் கேட்டார்.
“ ஆமாம். நிச்சயம் பண்ணிக்க மாட்டேன்” என தெளிவாக கூற
“அப்புறம் இப்போ மட்டும் எப்படி கல்யாணத்திற்கு சம்மதம் சொன்ன? இல்லை பொய் சொன்னியா” என கேள்வி கேட்க?
“இப்போவும் எனக்கு மாப்பிள்ளையை… ஏன் கல்யாணமே பிடிக்கலை… சத்ரி சொன்னான். அந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும் தான் நான் சம்மதிக்கிறேன்” என கூறிவிட
‘என்ன?’ அனைவரின் பார்வையும் சத்ரியின் மேல் தேங்கியது என்றால், சங்கரன் ஒருபடி மேலே போய்..
“பெத்தவங்க எங்களை விட அவன் உனக்கு முக்கியமாக போய்ட்டானா..”என நேரடியாகவே கேட்க..
“ஆமாம், எனக்கு உங்களை விட சத்ரி தான் முக்கியம்… அவன் சொன்னா கல்யாணம் என்ன தற்கொலை கூட பண்ணிப்பேன் ” என கூறியவளுக்கு இத்தனை வருட கோபமும் வெடித்து சிதறியது.
குண்டூசி விழுந்தாலும் கேட்கும் நிசப்தம் நிலவியது…
பின் சத்ரியிடம் அருகில் போய் “நிச்சயதார்த்தம் நீங்க பார்த்துக்கோங்க… கல்யாண டேட் சொல்லுங்க வரேன். இப்போ கிளம்புறேன்” என வந்தபடியே அப்படியே கிளம்பிச் சென்றுவிட்டாள்.
அங்கே இருந்த யாருக்கும் அங்கே நடந்த பேச்சு வார்த்தைகளையும் நிறுத்தமுடியவில்லை.. அவளையும் நிறுத்தமுடியவில்லை..
காபி, ஏன் ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்கவில்லை..
யாரும் தரவில்லை… .
சாத்வி ஒவ்வொரு முறையும் பேச்சினாலும் செயலினாலும் சாட்டையாய் சுழன்றடிக்க.. மஹாவும் சங்கரும் நொந்தே போயினர்.
எப்படி இந்த திருமணத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிக்கப் போகிறோம் என சங்கரின் மனதில் பயமே உருப்பெற்றது.
சாத்வி பேசிய பேச்சுக்கள் சங்கருக்கு அப்படி ஒரு கோபத்தை தூண்டியது… எங்களை மதிக்காமல் இருக்கும் உன்னை நல்ல இடத்தில் கொடுக்க நான் ஏன் இவ்வளவு கஷ்டபடனும்.. போ… உன் கல்யாணத்தை நீயே நடத்திக்க, உனக்கு எவனை பிடிச்சிருக்கோ நீயே பார்த்துக்கோ… என ஆவேசமாய் கத்தும் வேகம் சங்கருக்கு…
ஆனாலும் கிடைத்த சந்தர்ப்பத்தை விட மனதில்லை… ஊராரின் முன் தலை நிமிர்ந்து நிற்பது தான் முக்கியம், முதலில் தன் மனதிற்குள்ளாவது எழுந்து நிற்க வேண்டும். ஏற்கனவே சாத்வியின் மீதிருந்த கோபமும் ஆத்திரமும் அப்படியே வந்து அமர்ந்து கொள்ள
‘உன் கல்யாணம் என் இஷ்டபடி தான் நடக்கும்’ என உறுதி பூண்டவராய்
திருமணத்திற்கு சம்மதம் சொன்னதும் தான் தாமதம்… சங்கரன் எல்லா ஏற்பாடுகளையும் துரிதமாக்கினார்…
ஏற்கனவே கோதண்டமிடம் விநாயகமும், சங்கரனும் பேசியிருக்க.. ‘சாத்வி சம்மதம் சொன்னதை அடுத்து. மீண்டும் கோதண்டமிடம் நிச்சயம் பற்றி பேசினார் சங்கரன்..
“ கல்யாணத்திற்கு முந்தின நாள் நிச்சயம் வச்சுப்போம். அது தானே நம்ம வழக்கம்.. ரமேஷ் அடுத்த மாதம் முதல் தேதியில் வரான்.. அவனுக்கும் வசதிப்படற நாள் பார்த்து கல்யாணத்திற்கு தேதி குறிப்போம்” என சொல்லிவிட்டார்.