அத்தியாயம் 29

பாரதிக்காக தனதறையில் காத்திருக்கலானான் விக்ரம்.

இந்த ஒருவாரமாக அவள் அவனது அறையில்தான் இருக்கின்றாள். அலங்காரத்திற்காக சூடப்பட்ட மலர்களையும் தாண்டி அவள் சுகந்தம் அறை முழுவதும் பரவியிருப்பது போல் பிரம்மை தோன்ற மூச்சை ஆழமாக இழுத்து விட்டான்.

தான் பேசியதற்கு அவள் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று முரண்டு பிடிக்கக் கூடும் என்றுதான் அவளறியாமலையே அதிரடியாக திருமணமும் செய்து கொண்டான்.

சிலநேரம் நம் கண்கள் கானல்நீரை பார்த்து ஏமாறும். ரதியென்று பார்கவியை பார்த்து நான் ஏமார்ந்ததும் அவ்வாறுதான். பார்கவி சொன்ன விஷயங்களை ஆராயாமல் என் ரதியை சந்தேகப்பட்டுவிட்டேன். அவள் சொல்ல வந்ததை கூட காது கொடுத்துக் கேட்கக் கூட தோணாமல் அவள் மீதே கோபம் கொண்டது என் முட்டாள்தனம்.

நான் இறந்து விடுவேன் என்று அவளை விலக்கவென பேசியது கூட தவறுதான். என் நிலையை அவளுக்கு எடுத்துக் கூறியிருந்தால், புரிந்துகொண்டிருப்பாள். எல்லாம் மறந்த நிலையிலும் நான் அவளை காதலிப்பதனால் என்றோ நாம் ஒன்று சேர்ந்திருக்கலாம். 

எல்லாம் ஞாபகம் வந்த பின்னும் அவளை புரிந்துகொள்ளாதது,  அவள் நிலை என்ன? அவள் சூழ்நிலை என்ன என்று கூட அறிந்துகொள்ளாதது என் மடத்தனம்.

என்னிடம் காதலை மட்டும் எதிர்பார்ப்பவளுக்கு இதுவரையில் வலியை தவிர எதையும் கொடுக்கவே இல்லை.

இனிமேலும் எந்த சூழ்நிலையிலும் அவளை இன்னலுக்கு உட்படுத்தக் கூடாது என்ற முடிவோடுதான் அன்று அவளை மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்தேன்.

எங்கே அவளோடு பேசினால் அழுது விடுவேனோ என்று அவள் முகம் பாராமல் அங்கிருந்து வந்தேன்.

எழுந்த உடன் அக்காவை பார்க்கணும் மாமாவை பார்க்கணும் என்றவளை அம்மா செல்ல விடாது தடுத்திருந்தாள். எந்நாளும் ரதி என்னோடு இருக்க திருமணம் ஒன்றே வழி என்று அவளை திருமணமும் செய்து கொண்டேன்.

ரதிக்கு என்னிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருக்கும். எனக்கு எல்லாம் ஞாபகம் வந்து விட்டது என்றறிந்தால் மகிழ்வாள் தான். ஆனால் இப்படி பேசிவிட்டாயே என்று கேட்டால் அவளை எவ்வாறு சமாதானப்படுத்துவது? என்றுமே நான் பேசியதை ஞாபகப்படுத்தி என்னை வார்த்தையால் வதைக்க மாட்டாள். பத்து வருடங்களாக நான் பேசியத்திற்கே கண்ணீர் வடித்தவள் இன்று பேசியதை எண்ணி என்னை பார்க்கும் பொழுதெல்லாம் மருகுவாள்.

எனக்கு எதுவுமே ஞாபகமில்லை என்று அவளோடு வாழ்ந்து விடலாம். அவள் அச்சத்தை பற்றி ரகு தெளிவாக கூறினானே. காலத்துக்கும் ரதி அதை நினைத்தே வாழ்வாள். என்ன செய்வது என்று யோசனைக்குள்ளானான் விக்ரம். எந்த வழியும் கிட்டவில்லை.

அவள் என்ன பேசுகிறாளென்று கவனித்து அதற்கேற்பது போல் பேசு என்று ரகுராம் அறிவுரை கூறியது ஞாபகத்தில் வந்தது.         

இத்தனை வருடங்களாக தன் இன்ப, துன்பத்தில் பங்கேற்ற்கும் நண்பனை எண்ணி புன்னகைத்தவன் அன்று நடந்ததை எண்ணிப்பார்த்தான்.

கார்த்திகேயன் திருமணத்தை எப்பொழுது வைத்துக்கொள்ளலாமென்று கேட்டது விக்ரமுக்கு ஞாபகம் இருந்தது. ஆனால் அவனுக்கு தன்னுடைய நிலை தெரியுமோ, தெரியாதோ. நான் மயங்கி விழுந்ததை பார்த்து இந்த திருமணம் நடக்காது என்று கூறிவிடுவானோ என்றுதான் “பாரதி வீட்டுல பேசணும். கார்த்திகேயன் நான் பாரதிய கல்யாணம் பண்ண சம்மதம் சொல்வானா?” என்று ரகுராமிடம் கேட்டிருந்தான்.

“ஆளவந்தானோட மகனுக்கு பாரதிய கொடுக்காட்டியும், சாந்தி அத்த பையனுக்கு கண்ணை மூடிக்கிட்டு கட்டி வைப்பான்” ரகுராம் கூறிய பதிலில் “அன்னை தங்களை விட்டுச் சென்றதில் இப்படியொரு நன்மை இருக்கிறதா? என்று புன்னகைத்தான்.

ரகுராம் யோசிப்பதை பார்த்து “ரதியோட டுவின் பார்கவி பத்தியா? யோசிக்கிற?” என்று கேட்டவன் பார்கவி தன்னிடம் பேசியதையும், தனக்கு இருக்கும் சந்தேகத்தையும் பகிர்ந்தான் விக்ரம்.

“பாரதிய போலவே ஒருத்தி என் கண் முன்னால வந்து நிப்பான்னு நான் என்ன கனவா கண்டேன்? ஏற்கனவே மூளை குழம்பிப் போய் இருக்குறேன். இதுல என் கோபம் தான் எனக்கு எதிரி. கோபத்தோடு ரதிய பார்க்கப் போய் அவ அக்கா பேசினத்துக்கு மயங்கி விழுந்துட்டேன்.

அன்னைக்கி அவ பேசின ஒவ்வொரு வார்த்தையும் ரதிய என்னை விட்டு தூர நிறுத்தணும் என்ற முடிவோடத்தான் பேசினா. மயங்கி விழுந்தது மட்டுமில்லாம, அவ பேசினதியே மறந்து திரும்ப அவகிட்ட பேசி நானே என் ரதிய கண்டபடி பேசிட்டேன்.

தங்கச்சி ஆசைப்பட்டவன கட்டிக்கிட்டு வாழக் கூடாது என்று நினைக்கிற அளவுக்கு அவளுக்கும், ரதிக்கும் என்ன பிரச்சினை. ஒருவேளை அவங்கப்பா சாவுக்கு எங்கப்பாதான் காரணம் எங்குறதாலையா புரியல” பார்கவி அன்று அவ்வாறுதான் பேசினாள், நான் பாரதியின் இரட்டையென்று தன்னை அறிமுகப்படுத்தி விட்டு கூறாமல், பாரதியாக ஏன் கூற வேண்டும்? அங்கே தான் விக்ரமுக்கு சந்தேகம் வழுத்திருந்தது.

“அப்போ உனக்கு எல்லாம் ஞாபகமிருக்கா?” கவி விஷயம் ஞாபகம் இருக்குமெனில் அதை பற்றி ஆராயாமல் இப்படி இவன் மனம் மாறி அவளுக்காக யோசிக்கிறானே என்று புரியாமல் நண்பனை பார்த்தான் ரகுராம்.

“பார்ட்டில பார்கவி பார்த்ததும் அவதான் கார்திகேயனோட வைப் என்று தெரிஞ்சிகிட்டேன். பாரதி ஏன் கார்திகேயனோட குழந்தையை சுமந்தான்னு அவளே சொல்லட்டும். நான் திரும்ப எல்லாத்தையும் மறந்ததாக அவ நினைக்கிறா இல்ல. கல்யாணம் முடியும் வரைக்கும் அப்படியே இருக்கட்டும். இல்லனா அவ என்ன விட்டு எவ்வளவு தூரத்துக்கு ஓட முடியுமோ ஓடத்தான் பார்ப்பா” என்றான் விக்ரம்.

சத்தமாக சிரித்த ரகுராம் பாரதி ஆஸ்ரேலியா செல்லும் முடிவில் இருந்தாள். தான் அவளிடம் பேசி விட்டு வந்ததை கூறினான்.

விக்ரம் பதில் சொல்லாது மெளனமாக இருக்க “என்ன” என்று நண்பனை உலுக்கினான்.

ரகுராமுக்கு பதில் கூறாது அன்னையை அலைபேசியில் அழைத்தவன் “நான் பாரதிய பத்தி தெரிஞ்சிக்கணும். அதுவும் என் அம்மா சொன்னா நல்லா இருக்கும். நீதானே சொன்ன அவ எனக்காக கல்யாணம் பண்ணாம இருந்தானு”

“இப்போதான் அம்மாவ வீட்டுல விட்டுட்டு வந்த? அதுக்குள்ள பாரதி மேல உள்ள அக்கறைய சக்கரையா தெளிக்கிறியே. நீ தேறிட்ட” நண்பனை கேலியாக பார்த்தான் ரகுராம்.

சாந்தி என்ன சொன்னாளோ வண்டிச் சாவியை கைப்பற்றிய விக்ரம் ரகுராமுக்கு கண்களையே கூறிக் கொண்டு வெளியே கிளம்பினான். 

விக்ரம் பார்கவியை பற்றித்தான் கேட்க எண்ணினான். கூடவே இருந்த அன்னைக்கு தெரியாதா? ஆனால் பாரதியை காதலிப்பதாக கூறியவன் எதற்காக பார்கவியை பற்றி கேட்கிறான். ஒருவேளை பார்கவியை தான் நேசித்தானா? ஆள்மாறாட்டம் நடந்து விட்டதா என்று அன்னை குழம்பக் கூடாதே.

பாரதியை பற்றிக் கூறும் பொழுது பார்கவியை பற்றியும் விசாரிக்கலாம் என்றுதான் பேச்சை ஆரம்பித்தான். அலைபேசியில் பேசுவதை விட நேரில் சென்று பேசினால் அன்னையிடம் தனக்குத் தேவையான தகவல்களை பெறலாமென்றுதான் கிளம்பினான் விக்ரம்.

“நீ என்ன பண்ணுவியோ, எது பண்ணுவியோ எனக்குத் தெரியாது. சீக்கிரம் அவளை கல்யாணம் பண்ணு” லவ் பண்ணவனுக்கே கட்டிக்கப்போறவள பத்தி தெரியாதாம்.  கடைசி வாக்கியத்தை கொஞ்சம் கோபமாகத்தான் கூறினாள் சாந்தி.

வண்டியை ஓட்டியவாறே “லவ் பண்ணுறேன் தான். ஆனா அத அவகிட்ட இன்னும் சொல்லல. சொல்லாட்டியும் நான் அவளை லவ் பண்ணுறது அவளுக்குத் தெரியும். அவளும்..”

அவன் பேச்சில் குறுக்கிட்ட சாந்தி “ஏன் அக்கா… அக்கான்னும் ஒருத்தி இருக்காளே அவ வேணாம்னு சொல்லுவான்னு உன்ன ஒதுக்கிட்டாளா?” பாரதிக்கு கார்த்திகேயன் பார்க்கும் வரன்களை பார்கவி எவ்வாறெல்லாம் தட்டிக் கழித்தாள் என்று கூட இருந்தே கண்கூடாக பார்த்தவல்லவா. “குடும்பத்துல ஒருத்தங்க பிரச்சினை பண்ணவே இருக்காங்களே…” கண்டிப்பாக பார்கவி அமைதியாக இருக்க மாட்டாள். அவள் அடுத்து என்ன செய்வாளோ என்ற அச்சம் இருக்கவே வெறுமையாக வந்தது சாந்தியின் பதில்.

அன்னையின் பேச்சில் தன் சந்தேகம் உறுதியானத்தில் “அப்போ பார்கவி பிரச்சினை பண்ணுவான்னு சொல்லுற”

“நான் உங்கப்பாவை சொன்னேன்” சமாளித்தாள் சாந்தி.      

ஒருவேளை கார்த்திகேயன் பார்கவி என நினைத்து போதையில் பாரதியை… அதனால் தான் கவி பிறந்தாளோ. அதனால் கார்த்திகேயனை திருமணம் செய்து கொண்டிருப்பாளோ? அவள் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது.

அப்படியொரு சம்பவம் நடந்த பின்னும் ஏன் அவள் அவர்களோடு இருக்கின்றாள்? குழந்தைக்காகவா? அக்காவுக்காகவா? என்ற எண்ணம் கூட விக்ரமுக்கு வந்ததென்னமோ உண்மைதான்.

நிகழ்ந்த அவலத்தை தன்னிடம் பகிர முடியாமல் தான் ஓடி ஒழியைப் பார்க்கின்றாளா? எந்த சூழ்நிலையிலும் நான் அவளோடு இருக்கிறேன் என்ற நம்பிக்கையை கூட நான் அவளுக்கு கொடுக்கவில்லையே என்று கூட வருந்தினான்.

கார்த்திகேயனை பார்த்தால் தப்பானவனாக தெரியவில்லை. ஒருவேளை அவளுக்கு கார்த்திகேயனை பிடித்திருக்குமோ? இந்த பத்து வருடத்தில் அவள் எண்ணங்களும், காதலும் மாறியிருக்கக் கூடும். என்னால் மட்டும் எந்த சூழ்நிலையிலும் அவளை மறக்க முடியாதது ஏன்? தன்னை நினைத்தே கோபம் கொண்டவன், தன் மனதை அடக்க வழி தெரியாமல் தான் பாரதியை இறுதியாக ஒருதடவை, ஒரே ஒருதடவை பார்த்து விட்டு வரலாமென்று கவியின் பிறந்தநாள் விழாவுக்கு கிளம்பினான். 

பார்கவிதான் கார்த்திகேயனின் மனைவி என்று அறிந்து கொண்ட நொடி சொல்ல முடியாத இதம் நெஞ்சை ஊடுருவுவதை உணர்ந்தவன் அவள் நிலையை எண்ணி வருந்தியதால் தான் மயங்கியும் விழுந்தான்.

வழக்கமாக மயங்கி விழுந்தால் எல்லாவற்றையும் மறந்து விடுபவன். இந்த முறை ஆழ்ந்து உறங்கியதாலையே என்னவோ அன்று பார்கவியை சந்தித்து பேசியது அவன் கனவில் வந்தது. கூடவே அவன் பாரதியை பேசியதும்.

தான் எதற்காக அவளை அன்று அவ்வாறு பேசினேன் என்று புரிந்த பொழுது அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிய அருகிலிருந்த சாந்தி புடவை முந்தானையால் துடைத்திருந்தாள்.

பார்கவி உணவகத்தில் வைத்து பாரதியாக பேசும் பொழுது ஒரு முகமும், வீட்டுக்கு வந்த பொழுது அப்பாவியாக பேசிய விதமும் விக்ரமின் கண்களுக்குள் வந்து நிற்க, அவளிடம் தான் எதோ தப்பாக இருக்கிறது என்று புரிந்துக் கொண்டான். அதை உறுதிப்படுத்தும் விதமாக  பார்ட்டியில் என்னை பார்த்ததும் அவள் முகம்மாறிய விதமே அவளை காட்டிக் கொடுத்திருந்தது. அன்னை தன்னை மகன் என்று அறிமுகப் படுத்திய பொழுது அவள் அடைந்த பதட்டம் அவள் தன்னிடம் விளையாடியதை கண்டு கொண்டானா என்றுதான் இருந்தது.

இந்த பத்து வருடங்களாக பாரதியின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்று கூட இருந்த அன்னைக்குத்தானே நன்றாகத் தெரியும். பாரதியை பிரிந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. மேலும் தாமதிக்கக் கூடாது என்றுதான் உடனே கிளம்பினான் விக்ரம்.

“கொஞ்சம் வெளிய வா உன்கிட்ட பேசணும்”

“போன்ல பேசிக்கிட்டுத்தானே இருக்கோம்” என்ற சாந்தி வண்டிச் சத்தத்தில் எட்டிப் பார்த்தவள் விக்ரமை கண்டு அலைபேசியை அணைத்தவாறே வெளியே சென்றாள்.

“என்னடா… இப்போ தானே கிளம்பின. அதுக்குள்ள என்ன பிரச்சினை?” புரியாமல் கேட்டாள் சாந்தி.

தனக்கிருக்கும் மறதி பிரச்சினையை கூறாது. “நான் பாரதிய கல்யாணம் பண்ணலாம். அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணலாம் என்று முடிவெடுத்த பொழுது எனக்கு ரெண்டு போட்டோ வந்தது. ஒன்னு கார்திகேயனோட கல்யாணப் போட்டோ. இன்னொன்னு குழந்தையோட குடும்பமா இருக்கும் போட்டோ.

பாரதிக்கு பார்கவி என்றொரு டுவின் சிஸ்டர் இருக்கான்னு தெரியாததனால பாரதிக்கு கல்யாணம் ஆச்சுன்னு நினச்சேன். ஆனா பார்ட்டில வச்சு பார்கவி பார்த்தப்போ யாரோ வேண்டுமென்றே போட்டோஸ அனுப்பியிருக்காங்க என்று தெரிஞ்சது. ஒருவேளை கார்த்திகேயன்…” விக்ரமுக்கு கார்த்திகேயன் மீது சந்தேகம் இல்லை. இப்படிப் பேசினால் தானே சாந்தி வாய் திறப்பாள்.

“கார்த்தி அப்படியெல்லாம் பண்ண மாட்டாப்பா.. கண்டிப்பா அவதான்…” பார்கவியின் பெயரை கூறாமல் சாந்தி கூறிய விதத்திலையே எதோ சரியில்லை என்று மட்டும் புரியவே விக்ரம் அன்னையை குடைந்தான். 

“நான் பாரதி குடும்பத்துல போய் சேரும் பொழுது பாரதி காலேஜ் முடிச்சிருந்தா”   

என்று ஆரம்பித்தவள் பார்கவி தன்னை பெற்ற தாயையும், தன்னோடு பிறந்தவளையும் எப்படி நடத்துவாள் என்று கூறியதோடு, வளர்த்த அத்தையிடம் எப்படி நடந்து கொண்டாள் என்றும் கூற,

“அப்போ கார்த்திகேயன்?”

“உடம்பு முடியாம இருந்த அவளுக்கு ஒரே ஆறுதல், உறுதுணை கார்த்தி மட்டும் தான். கார்த்திய யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டா” பார்கவி கார்த்திகேயன் மீது வைத்திருக்கும் அன்பால் வீட்டில் என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்பட்டது என்று கூறியவள் “உடம்பு முடியாதவன்னு கார்த்திகேயன் ரொம்ப அனுசரணையான போவான். தனக்கிருக்கும் ஒரே சொந்தம் அக்கான்னு பாரதியும் பார்கவி கண்ணீர் வடிச்சா போதும் சட்டுன்னு மனமிழக்குவா. தனக்கொரு குழந்தை வேண்டும் என்று ஏதேதோ பேசி கார்திகேயனையும், பாரதியையும் சரிக்கட்டி கூடப் பிறந்த தங்கச்சி வாழ்க என்னாகும் என்று கொஞ்சம் கூட யோசிக்காம, பாரதியையே வாடகை தாயாக்கி கவிய பெத்துக்கிட்டா.

நான் பாரதிக்கிட்ட எவ்வளவோ சொல்லியும் கேட்காம அக்காவுக்காகன்னு கவிய சுமந்தா.

அன்னைக்கி ஆஸ்பிடல்ல கவிய பெத்தெடுக்க பாரதி எவ்வளவு சிரமப்பட்டான்னு கூட இருந்து பார்த்தவ நான். கவிய பாரதி கண்ணுல கூட காட்டாம பார்கவி அவ பாட்டுக்கு குழந்தையை தூக்கிட்டு போய்ட்டா.

தாய்ப்பால் கூட கொடுக்கவிடாம, அழிச்சாட்டியம் பண்ணா. அவளே திடிரென்று தங்கச்சி மேல பாசம் பொங்கி குடும்பத்தோட வந்து நின்னது மட்டுமில்லாம, குழந்தையை வேற பாரதி கைல கொடுத்து என்னமோ அடுத்த செக்கன் அவ செத்து போய்ட போறது போலவே பேசி பாரதிய நம்ப வச்சா.

ஆனா நான் அவமேல சந்தேகக் கண்ணோடத்தான் இருந்தேன்” கார்த்திகேயனுக்கு பாரதியை திருமணம் செய்து வைப்பதுதான் பார்கவியின் திட்டம். “அத அவ குழந்தைக்காகவோ, கார்த்திக்காகவோ, ஏன் பாரதிக்காகவோ பண்ணனும் என்று நினைக்கல. அவ மனசு முழுக்க வஞ்சம் மட்டும்தான். அவளை விட்டு விலகி இருந்தாலே பாரதி நிம்மதியாக இருப்பா. ஏன் சுயமா சிந்திக்கக் கூட செய்வா” பாசம் இருக்க வேண்டியாது தான் அதற்காக தன் குடும்பம் என்றதும் கண்மூடித்தனமாக செயல்படுகிறாளே என்ற கோபம்தான் சாந்திக்குள் இருந்தது. அதை தெளிவாக கூறி பாரதியை உடனே திருமணம் செய்துகொள் என்றாள்.

அதிர்ச்சியோடும், வேதனையாகவும் பார்த்திருந்தான் விக்ரம்.

காதல் என்னை

பிழிகிறதே கண்ணீா்

நதியாய் வழிகிறதே

நினைப்பதும் தொல்லை

மறப்பதும் தொல்லை

வாழ்வே வலிக்கிறதே

காட்டில் தொலைந்த

மழை துளி போல் கண்ணே

நீயும் தொலைந்ததென்ன

நீாினை தேடும் வோரினை போல

பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்

கண்கள் ரெண்டும்

மூடும் போதும் நூறு வண்ணம்

தோன்றுதே மீண்டும் கண்கள்

பார்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே

சிறுபொழுது பிாிந்ததற்கே

பல பொழுது கதறி விட்டாய்

ஜென்மங்களாய் பெண் துயரம்

அறிவாயோ நீ

தொடு வானம்

தொடுகின்ற நேரம்

தொலைவினில் போகும்

அட தொலைந்துமே போகும்

தொடு வானமாய்

பக்கமாகிறாய் தொடும்

போதிலே தொலைவாகிறாய்

இதயத்திலே

தீபிடித்து கனவெல்லாம்

கருகியதே உயிரே நீ

உருகும்முன்னே

கண்ணே காண்பேனோ

இலை மேலே

பனித்துளி போல் இங்கும்

அங்குமாய் உலவுகின்றோம்

காற்றடித்தால் சிதறுகின்றோம்

பொன்னே பூந்தேனே

வலியென்றால் காதலின்

வலிதான் வலிகளில் பொிது

அது வாழ்வினும் கொடிது

உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்

வான் நீளத்தில் என்னை புதைகிறேன்

சாந்தியின் அலைபேசி அடித்தது. பாரதியின் எண் மின்னவும் இணைத்தவள் “சொல்லுமா…” என்றதும் பார்கவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி கேட்டு விக்ரமை உடனே வண்டியை எடுக்கச் சொன்னாள்.

விக்ரம் வண்டியை விட்டு வந்த பொழுது சாந்தி மட்டும் குழந்தையோடு இருக்க, சிகிச்சை அறையை எட்டிப் பார்த்த விக்ரமுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றவும் உற்று கவனித்தான்.

ஒரு கையால் பாரதியை விடாமல் பற்றிக் கொண்டு மறுகையால் கார்திகேயனோடு போராடும் பார்கவியின் கையிலிருந்த தாலியை பார்த்ததும் விக்ரமின் இரத்தம் கொதித்தது.

சாந்தியின் மடியில் துயிலும் கவியை சோபாவில் கிடத்தி நடப்பதை சாந்திக்கு காட்ட, அப்பொழுது தான் பாரதி கார்திகேயனிடம் தாலி கட்டுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“என்ன காரியம் பண்ணுறா பாரு. விட்டா இவ உசுரைக் கொடுத்து அவ உசுரைக் காப்பாத்துவா போல” கோபமாக சாந்தி உள்ளே நுழைய, விக்ரம் பாரதியை நன்றாகவே புரிந்துக் கொண்டான்.

எதையும் யோசிக்காமல் உதவி என்று நினைத்து இப்படியொரு காரியத்தை செய்ய நினைப்பவள் நிச்சயமாக தப்பானவளாக இருக்கவே முடியாது.

அவள் மீது அவனுக்கு கோபம் வரவில்லை. இப்படி இருக்கின்றாள் என்று பரிதாபம்தான் வந்தது.

சந்தர்ப்ப சூழ்நிலையால் நாம் எடுக்கும் முடிவுகளால் வாழ்க்கையின் திசை எவ்வாறெல்லாம் மாறும் என்று விக்ரம் தன் வாழ்க்கையிலிருந்தே கற்று, அனுபவித்திருந்தான்.

பாரதி விஷயத்தில் கண்மண் தெரியாமல் கோபம் கொள்பவன் முதன் முறையாக நிதானமாக யோசித்துப் பேசியிருந்தான்.

திருமணத்திற்கு தந்தை எந்த உதவியையும் செய்யப்போவதில்லை. உடனடியாக திருமணம் நிகழ வேண்டும் என்பதால் ரகுராமோடு ஓடிக்கொண்டிருந்தவன் பாரதியின் பொறுப்பை அன்னையிடமும், தங்கையிடமும் விட்டிருந்தான். 

இதில் அதே நாளில், அதே முகூர்த்தத்தில் மோகனாவின் திருமணமும் நிகழ வேண்டும் என்பது தேவியின் உத்தரவு.

ரகுராமுக்கு விக்ரமும், விக்ரமுக்கு ரகுராமும் மாத்திரம்தான் உதவ முடியும். இருவரும் சேர்ந்தே கல்யாண வேலைகளை பார்த்ததோடு, கம்பனியையும் பார்க்க வேண்டியதில் ரகுராமால் மோகனாவிடம் பேச முடியவில்லை என்பதுதான் உண்மை.

திருமணமான கையேடு காரியாலயத்தில் அமர்ந்திருக்க முடியுமா? எல்லா வேலைகளையும் முடித்து விட்டு குறைந்தது இரண்டு வாரங்களாவது மோகனாவோடு தேன்நிலவுக்கு செல்ல வேண்டும் என்பது அவன் திட்டம்.

அதே காரணத்துக்காகத்தான் விக்ரமும் பாரதிக்கு ஒரு மாதம் ஓய்வு கொடுத்து வீட்டில் முடக்கியிருந்தான். வெளியே சென்றால் தானே அவள் பார்கவியை சந்திப்பாள். அதை தடுத்ததும் போலாச்சு.

பார்கவியை அனுமதித்திருந்த மருத்துவமனை தலைமை மருத்துவரை அணுகி தான் ஆளவந்தானின் மகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் பார்கவி தனது மனைவியின் சகோதரி என்று கூறி அவளை மேலும் ஒரு வாரம் மருத்துவமனையில் வைத்து நன்றாக பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான்.

எதற்காகவும் தன்னுடைய தந்தையின் பெயரை உபயோகிக்கக் கூடாது என்றிருந்தவன் பாரதிக்காக பார்கவியை மருத்துவமனையில் சிறை வைத்ததோடு, அவளை கண்காணிக்க பராமரிப்பாளர்களாக மூவரை நியமித்தான்.

அவள் எந்த தகுடுத்தத்த வேலையையும் செய்யக் கூடாதென்று மூகூர்த்தத்துக்கு நேரம் நெருங்கும் பொழுதுதான் கார்திகேயனிடம் விஷயத்தை கூறி மண்டபத்துக்கே வரவைதைத்தான்.

கார்த்திகேயன் விக்ரமிடம் மன்னிப்புக் கேட்க, “உங்க சூழ்நிலையும் புரியுது. உங்க மனைவி சூழ்நிலையும் நல்லாவே புரியுது. பாரதிய இனி நான் பார்த்துகிறேன். கவலைபடாம நீங்க உங்க வாழ்க்கையை பார்த்துக்கோங்க. கார்த்திகேயன் நீங்க மறுமணம் செய்ய நினச்சா கவிய பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாதீங்க. நான் தத்தெடுக்கிறேன், எனக்குத்தான் எல்லாம் ஞாபகம் வந்துருச்சே. உங்க வைப் வேற உங்களுக்கு இரண்டாவது கல்யாணம் செய்யாம ஓயாமாட்டாங்க. பிஸ்னஸ் சேர்க்குள்ள பொண்ணு பார்த்துடலாம்” ஏதோ விக்ரம் கார்த்திகேயனின் சஞ்சலப்பட்ட மனதை சமாதானப்படுத்த கேலியாக பேசுவதாக கார்த்திகேயன் நினைக்க,  “கவியை காரணமாக்கியா நீ என் ரதிய மிரட்டினாய். இரு உன் கவலையை போக்குகிறேன்” என்று கார்திகேயனிடம் பேசுவது போல் அனைத்தையும் பார்கவியை முறைத்தவாறே கூறியவன் “உன் குட்டு உடைந்து விட்டது. உன் திட்டம் அம்பலமானது. இனி நீ பாரதியை நெருங்கினால், உன்னை பற்றி கார்த்திகேயன் அறிந்த்துகொள்வானென்ற மறைமுக அச்சுறுத்தல் தான் விடுத்தான்.

திருமணமான கையேடு பார்கவியிடம் விடைபெறக் கூட விடாமல், பாரதியை வீட்டுக்கு அழைத்து வந்தவன், சடங்குகள் நடைபெறும் பொழுது அவளிடம் என்ன பேசுவது என்று குழப்பத்தில் அமர்ந்திருந்தவன் பாரதி உள்ளே வரவும் இன்முகமாக எழுந்து நின்றான்.