5பொது இடத்தில் இப்படியா பிகேவ் பண்ணுவ? என மனசாட்சி கேட்டது.
‘என் சாத்வி தானே தப்பில்லை ’ என அவன் மனம் கூற
‘உன் அத்தை மாமா சொன்ன அப்பறம் தானே தெரியும் அவள் சாத்வின்னு! அதுக்கு முன்னாடியே கண்ணாடியில் உன் சேட்டையை காட்டிட்டியே’ என மனசாட்சி கூற
சட்டென கண் விழித்து நிமிர்ந்தவன் கண்ணாடியை திரும்பி பார்த்தவனுக்கு, ‘அய்நோ யாராவது பார்த்துட போறாங்க’ என டேபிளின் மீது இருந்த டிஸ்யூ பேப்பரை இடது கையினால் எடுத்து அருகில் இருந்த தம்ளர் தண்ணீரில் நனைத்து மெதுவாய் கண்ணாடியின் அருகே சென்றான்.
பார்வையை சுழற்றி யாரும் தன்னை கவனிக்காததை உறுதிபடுத்தி கொண்டு, டிஸ்யூவால் கட கட வென துடைத்த பின்பே கை கழுவ சென்றான்.
மீண்டும் வந்த போது ”சாத்வி காலையில் போனில் நல்லா தான் பேசினா மச்சான்.” என கவலையுடன் கேட்க….
“போனில் நல்லா பேசி இருந்தால், சாத்வி இப்போ ஏன் உதாசீனப்படுத்தனும்” என வெங்க்கட்டும் குழப்பபாய் கேட்க
“விடு சங்கரன், ஏதாவது அவசர வேலையாய் இருக்கும். திரும்ப இந்த வழியா தானே வருவாள் பார்த்துக்கலாம் ” என விநாயகசுந்தரம் சமாதானம் பேச
இவர்களின் பேச்சில் குழப்பமேற்பட “ சாத்வியை நேரில் பார்த்து பேசினீங்களா? எங்கே? எப்போ?” என பார்வை சங்கரனிடம் இருக்க வெங்க்கட்டிடம் கேள்வி கேட்டான் சத்ரி
“நேரில் பார்த்து எல்லாம் பேசலை சத்ரி, போனில் தான் பேசினா” என காலையில் ஹாஸ்டல் சென்றதையும் பின் வார்டன் மூலம் சாத்வியிடம் பேசியவைகளையும் கூற
“என்னது? சாத்வி உங்ககிட்ட பேசினாளா?” என ஆச்சர்யமாய் சங்கரனிடம் கேட்க…
ஏற்கனவே மகளின் உதாசீனத்தில் கடுப்பில் இருந்த சங்கரன்… “என் பொண்ணு என்கிட்ட பேசினதில் உனக்கென்னடா ஆச்சர்யம்” என இருந்த கோபத்தை சத்ரியிடம் காட்ட
“என்னது உங்க மகளா!” வேண்டுமென்றே ஆச்சர்யமாய் கேட்டு பின் “அவளை வீட்டை விட்டு அனுப்பும் போது தெரியலையா.. சாத்வி உங்க பொண்ணுன்னு? வீட்டை விட்டு வெளியேறினப்ப கவலை படலை.. இப்போ மகள் பேசாமல் போறாளாம். அதுக்கு கவலை படுறாரு. உங்க ப்ரண்ட் ரொம்ப ஓவரா பண்றாருப்பா” என சங்கரிடம் தொடங்கி விநாயகத்திடம் முடிக்க…
“நாங்க ஒன்னும் அவளை அனுப்பி வைக்கலை? அவள் தான் போனாள். போனவளுக்கு திரும்ப வர தெரியாதா..? இல்லை வர தெரியாத அளவு சின்ன பிள்ளையா..?” என பதிலுக்கு சாத்வியை குற்றம் சாட்டினார் சங்கரன்…
“ஆமாம. பண்றதெல்லாம் பண்ணிட்டு அவள் மேல பழியை போடுங்க“ என கடுப்பாய் பேசியவன் “ போனில் பேசினது நம்ப சாத்வின்னு தெரியுமா” என வழக்கம் போல் புளியை கரைக்க..
சத்ரியிடம் எவ்வளவு தான் அவமானப்பட்டு நிற்பது என்ற கோபமே மேலிட “ என் பொண்ணு குரல் எனக்கு தெரியாதா? அவள் தான் பேசினா… மச்சான் சொன்ன மாதிரி ஏதாவது அவசர வேலையாய் இருக்கும்… வந்துடுவா” என தனக்கும் சேர்த்து சொல்லிக் கொண்டார்..
“ம்ஹூம்” என தலையசைத்து மறுத்தவன் போனில் பேசினது வேற பொண்ணு” அசராமல் பதில் கொடுத்தான் இவன்.
இருந்த அத்தனை பேருக்கும் அதிர்ச்சி தான், இவனது நிதானமான பதிலில்.
“இல்லையில்லை, போனில் பேசினது என் பொண்ணு தான், சாத்வி தான்” என சங்கரன் சொல்லி முடிக்கும் முன்
“அவளாவது உங்க கிட்ட பேசுறதாவது” என சலிப்புடன் சொல்லி அத்துடன் பேச்சு முடிந்தது என எழுந்து வேறு புறம் சென்று விட்டான் சத்ரியன்.
“சிவஹாமி, சத்ரி சொன்ன மாதிரி சங்கரன் வேற பொண்ணுகிட்ட பேசி இருப்பானோ“ என விநாயகசுந்தரமும் கவலையாய் கேட்க
“அதான் வெங்க்கட்ட்டும் கூட போய் இருந்தானே, அவனுமா பொய் சொல்ல போறான்?” என சிவஹாமி பதில் கூற
“அது எப்படி சிவஹாமி, காலையில் நல்லா பேசினவள், இப்போ எப்படி கண்டுக்காமல் போவாள்? எனகக்கு சந்தேகமா தான் இருக்கு” என மஹாவும் சிவஹாமியும் பயத்துடன் பேசிக்கொண்டிருக்க
வெங்க்கட்டும் கிருத்தியும் தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாய் அனைவரின் வாயையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ ஏங்க..”
“ம்”
“வெங்க்கட்….”
“ம்.ம்..”
“டேய்… ”
“ ஏய் என்னடி” என சுள்ளென விழுந்தான் வெங்க்கட்…
அவன் முகத்தை நேருக்கு நேராய் பார்த்தவள் “என்ன வெங்க்கட் நடக்குது இங்கே தலையும் புரியலை வாலும் புரியலை. ஏதோ புரியாத பாதையில் படம் பார்க்குற மாதிரி இருக்கு”க்ருத்தி கேட்க
“எனக்கும் தான் எதுவும் புரியலை , ஏதோ ஒரு பிரச்சனையை நமக்கு தெரியாமல் மறைக்கிறாங்க! நான் அம்மாகிட்ட மெதுவா விசாரிக்குறேன் கிருத்தி்.. அதுவரை என்னை படுத்தாதே” என அவளை முன்கூட்டியே அடக்க அமைதியானாள் க்ருத்தி
இவர்கள் பேச்சில் நேரம் நிமிடங்களாய் கடந்தது. வெகு நேரம் கழித்தே வந்தாள் சாத்வி. அதுவும் இள வயது ஒருவனுடன் மிக ஆர்வமாய் பேசியபடி வந்தாள்.
அருகில் இருந்தவனை பார்க்க கூட இல்லை, சத்ரியனின் கண்கள் கபடி ஆடி அவளை அழுத்தமாய் பிடித்துக்கொண்டது. கண்களில் நிரம்பி வழிந்தவளை ,மனதிற்குள் அடைத்து வைத்து கொண்டான்.
அவனோடு பேசியபடியே தங்களின் அருகே சாத்வி வந்துவிட்ட போதும், துணிந்து யாரும் அவளிடம் பேசவும் முடியவில்லை. அவளை பெயர் சொல்லி அழைக்க கூட முடியவில்லை. கண்டுகொள்ளாமல் செல்பவளை தடுக்கும் வழி அங்கிருக்கும் யாருக்கும் தெரியவில்லை.
முகமே கருத்து போனது அத்தனை பேருக்கும்.
ஹோட்டல் விட்டு வெளிவந்த பின் இருவரும் தலையை லேசாய் அசைத்தபடி விடை பெற்று ஆளாளுக்கு வேறு வழியில் செல்ல, அதற்காகவே காத்திருந்தார்ப் போல்
“அம்மாடி சாத்வி” என்ற மஹாவின் குரல் அவளின் காதில் விழுந்தது.
‘இங்கே நிற்காதே! போ இங்கே இருந்து போ..’ என உத்தரவிட்ட மூளையை அலட்சியம் செய்தாள். நேருக்கு நேர் சந்திப்போம்! என்னதான் ஆகின்றது என கண்களை அழுத்தமாய் மூடி நிதானத்திற்கு வந்தவள்.. அமைதியாய் அப்படியே நின்றுவிட்டாள்.
அவள் நிற்பதே பெரிது என அவளிடம் வந்த மஹா “எப்படி இருக்க சாத்வி.. உன்னை தேடி தாம்மா திருச்சி வந்தோம்” மகள் தன்னிடமாவது பேச வேண்டுமே, என்ற பயத்தை அப்படியே முகத்தில் தெரிந்தது. அதற்குள் சங்கரனும் இவளருகே வந்துவிட்டார்.
முகத்தை கூட தாயின் புறம் திருப்பாமல். “ஓ.. பெத்த பொண்ணை பார்க்க உங்களுக்கு முமுசா அஞ்சு வருசம் ஆச்சோ” என கண்களால் எரித்தாள் தாய் தந்தை என கூட பார்க்காதுசங்கரன் பதிலுக்கு வாய் திறக்கும் முன்பே..
பார்க்கிங்கில் இருந்து கார் வர.. எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து பின் காரில் ஏறி அமர்ந்தாள். அவளின் பார்வையை வெங்க்கட் க்ருத்திகா தவிர்த்து மற்ற அனைவரும் அறிந்து கொண்டனர் அவள் பார்வையின் பொருளை.
அவள் பேசும் தோரணையும் சரியில்லை, நடந்து கொள்ளும் முறையும் சரியில்லை என, அங்கிருந்த அனைவரும் திகைத்து போய் இருந்தனர்.
“அவ அம்மா அப்பா மேலே தான் கோபம்.. நம்ம கிட்ட கூட பேசவே இல்லையே….” என சிவஹாமியும் கேட்க… அங்கே பேரமைதி நிலவியது.
சங்கரன் குழப்பத்தில் இருந்ததால் சூழ்நிலையை தன் கையில் எடுத்து “வெங்க்கட், எல்லோரையும் வீட்டுக்கு கூட்டிட்டு போ… நானும் சத்ரியும் ஹாஸ்டல் போய்.. பார்த்துட்டு வரோம்” என விநாயகசுந்தரம் கூறினார்.
அவர்கள் எதற்கு செல்கிறார்கள் என புரிந்து கொண்டு “நான் வேனா வரட்டுமாப்பா” என சங்கரன் கேட்க நினைத்ததை வெங்க்கட் கேட்க…
“ஆமாம், நீங்க இரண்டு பேரும் போய் விசாரிச்ச லட்சனத்தை தான் நேரிலேயே பார்த்தாச்சசே! சாத்வின்னு நினைச்சு வேற பொண்ணுட்ட பேசிட்டு வந்திருக்கீங்க… இவன் என்னடானா… இரண்டே இரண்டு கேள்வி தான் கேட்டான், நீங்க சொன்ன பதிலிலேயே.. நேரில் பார்த்த மாதிரி அது சாத்வியே இல்லைன்னு சொல்றான் சத்ரி. ஹாஸ்டல் போய் என்னத்தை கிழிச்சீங்களோ” என சங்கரையும் சேர்த்துக் திட்டினார் விநாயகசுந்தரம்.
“சத்ரி வாடா” என அவனை பைக் எடுக்க சொல்லி… “எல்லாரும் வீட்டிற்கு போங்க , நாங்க வந்துடுறோம்..” என பைக்கில் ஏறி அமர்ந்தார் விநாயக சுந்தரம்.
மற்றவர்களை வெங்க்கட் அழைத்துச் செல்ல, எல்லோரும் காரில் வந்து அமர்ந்தனர்.. யாருக்கும் யாரிடமும் பேச முடியவில்லை… கிருத்தி தாயின் முகத்தை பார்த்தவாரே வர, சிவஹாமி மஹாவின் கைகளை பிடித்து அவரை தேற்றியபடியே அமர்ந்திருக்க மௌனமே ஆட்சி செய்தது அவர்களிடையில்.
“யாரும்மா அந்த ஆண்டி” என விடாமல் திவ்யா கேட்டுக் கொண்டே இருக்க…
“வாயை மூடப் போறியா இல்லையா” என கிருத்தி அதட்டுவதும், “இல்லை, சொல்லு” என திவ்யா வம்பிழுப்பதும் என இருவரின் குரல் மட்டுமே காரினுள் கேட்டுக் கொண்டிருந்தது..
விநாயகசுந்தரம், சத்ரி இருவரும் ஹாஸ்டல் சென்று .. சாத்வியைப் பற்றி வார்டனிடம் விசாரித்துக் கொண்டிருக்க… அப்போது தான் வேலை முடித்து வந்த சாத்வியும், தன்பெயர் அடிபடுவதை உணர்ந்து அவர்கள் அருகில் வந்தாள்.
“வா சாத்வி.. உன்னை தான் தேடி வந்து இருக்காங்க.. காலையில் உன் அப்பாவும் கூடவே இன்னொருத்தரும் வந்தாங்க! இப்போ வேற இரண்டு பேர் வந்திருக்காங்க” என சாத்வியை கூர்மையாய் பார்த்தார் வாடர்ன்.
வார்டனை பயத்துடன் பார்த்து பின் அவர்களை பார்த்த சாத்வி “நீங்க…யாரு… என்னை எதுக்கு தேடி வந்தீங்க… ” என தயங்கி கேட்டாள்
‘ஓ… இந்த பொண்ணு பேரும் சாத்வியா’ என ஒரே பார்வையில் புரிந்து கொண்டான் சத்ரி..
அவளை பார்த்து பின் வார்டனிடம் “சாத்வி பெயரில் இவங்க ஒருத்தர் தான் இருக்காங்களா” என கேட்டான்.
குழப்பத்துடன் “ஆமா” என்றவர் “பின் “உங்களுக்கு எந்த சாத்வி வேணும்” என கேட்க…
“அந்த பொண்ணு பேரும் சாத்வி , அப்பா பேர் சங்கரன், ஊர்ர் பூஞ்சை” என
“இல்லை சார் , சாத்வி பேரில் இவங்க ஒருத்தர் தான்… நான் தான் இங்கே வார்டன்… எனக்கு தெரியாமல் வேற சாத்வி இங்கே இல்லை” என முடித்துவிட்டார் அவர்.
“அஞ்சு வருசத்துக்கு முன்னாடி , இந்த ஹாஸ்டலில் தான் வந்து ஸ்டே பண்ணி இருக்காங்க. இந்த அட்ரெஸ் கொடுத்துட்டு தான் வந்திருக்காங்க” என மேலும் விபரம் கேட்டான் சத்ரி.
“ஓ எனக்கு அப்படி யாரும் நியாபகம் இல்லை! அஞ்சு வருசம் முன்னாடின்னு சொல்றீங்க… லெட்ஜர் எடுத்துப் பார்த்தா தான் தெரியும்.. நீங்க நாளைக்கு வந்தீங்கன்னா பார்க்கலாம்” என வார்டன் கூறினார்.
“ ம்… தேங்கஸ்… மேடம்” என வார்டனிடம் கூறி
காலையில் சங்கரும் வெங்க்கட்டும் பேசியது இந்த சாத்வியிடம் தான், என அறிந்து காலையில் சங்கரன் பேசியதை கூறி “சாரி, எங்க ரிலேட்டிவ் சாத்வின்னு நினைச்சுட்டோம்” என ஒருவாறு அங்கிருந்து கிளம்பி வந்தனர்.
அந்த பெண் வார்டனை பார்த்தபடியே நிற்க “அவங்க தேடி வந்த பொண்ணு நீ இல்லைன்னு அவங்களே சொல்லிட்டாங்களே, அப்பறம் ஏன் நிக்கிற… போ!” என வார்டன் கூறிய பின்பே நிம்மதியாய் சென்றாள் அந்த பெண்.