நேற்றிலிருந்து நடக்கும் ஒவ்வொன்றையும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த க்ருத்திகாவும்  “அம்மா.. சாத்வி ஏன் அப்பா மேல கோபமா  இருக்கனும்.. அப்பாகிட்ட தானே அவ போனில் பேசினா? அப்பறம் ஏன் நீங்க எல்லாரும் இவ்வளவு ஆச்சர்யமா கேட்குறீங்க…  வெங்க்கட்டுக்கும் எனக்கும் தான் எதுவும் தெரியலை. ஏதோ மறைக்கிறீங்க…. நேற்றில் இருந்து ‘சாத்வி ‘ பத்தின விசயம் மட்டும் உறுத்திட்டே இருக்கு” என கிருத்தி அவள் சந்தேகத்தை கேட்டாள்.

“இப்போ இவ்வளவு தெளிவா இருந்தவள், அப்போவும் தெளிவா இருந்திருந்தா இந்த பிரச்சனையே இல்லை.. இப்போ இதை தெரிஞ்சுகிட்டு உனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை…. போய் வேலையை பாரு” என சுள்ளென விழுந்தார் மஹா

என்ன இருந்தாலும் மாமியார் முன்னால் இப்படி பேச முகம் சுருங்க சென்று விட்டாள்..கிருத்தி.

சாத்வியை பார்க்கும் ஆர்வம் ஒவ்வொருவரிடமும் அப்படியே தெரிந்தது.. சாத்வியைப் பார்க்க மஹா சங்கரன் வெங்க்கட் என மூவரும் கிளம்ப…  நானும் வரேன் மா… என கிருத்தியும் கிளம்ப… திவ்யா சொல்லாமலேயே கிளம்பினாள்..

“நைட் தானே வர சொன்னா? இப்போவே எல்லாரும் கிளம்பிட்டீங்க..” என விநாயகசுந்தரம்  பரபரப்பாக கிளம்பியவர்களை பார்த்துக் கேட்க….

  “மலைக்கோட்டையில் இன்றைக்கு பங்குனி விசேசம் மாமா…  அதுதான் அம்மா அப்பாவை கோவில் கூட்டிட்டு போய்ட்டு வரலாம்ன்னு… ” என இழுக்க

“ஆமா சங்கரன் நான் கூட மறந்துட்டேன்…. பங்குனி விசேசம் , சூரியனே வந்து பூஜை செய்யுற நாள் . போய்ட்டு வா.. சாத்வியோட கல்யாண விசேசமா வேற வந்து இருக்க.. நல்லது நடக்கும்” என விநாயகமும் பேச

மஹாவோ “நீங்களும் வாங்க அண்ணே…. நீயும் வாயேன் சிவஹாமி” என சேர்த்தே அழைத்தார்

மறு பேச்சு பேசாமல் எல்லோருமே கிளம்பினர்.. வெங்க்கட் லீவ் போட்டிருக்க சத்ரி மெக்கானிக் ஷாப் சென்றதால் அவனை  தவிர்த்து அனைவரும் கிளம்பினர்.

கோவில் சென்று தரிசித்துவிட்டு காரில் ஏற “மாமா பக்கத்தில் ஒரு ஹோட்டல் இருக்கு சாப்பிட்டு போகலாம்” என அங்கே அழைத்துச் சென்றான் வெங்க்கட்

“சத்ரிக்கும் வேலை முடிஞ்சிருக்கும் வெங்க்கட்.. அவனையும் வரச் சொல்லு..  சேர்ந்து சாப்பிடலாம்” என சிவஹாமி கூற

சத்ரியிடம் சொல்லி வெங்கட் வரவழைக்க, ‘சரி’ என கூறிவிட்டு எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி வந்தான் சத்ரி.

வெங்கட் சொன்ன ஹோட்டலின் உள்ளே நுழைந்தவனின் பார்வை இவர்களை தேடியது. முழுவதும் கண்ணாடிகளால் பிரிக்கப்பட்டிருந்த  பேமிலி டேபிள் ஒன்றில் பதிய, எல்லோரும் அமர்ந்து கலகலப்பாய் பேசிக் கொண்டும்,   வேண்டியதை ஆர்டர் செய்தும் கொண்டிருக்க, அவர்களை பார்த்தபடியே அமைதியாய் வந்து அமர்ந்தான்.

“வாடா” என்றபடி வைங்கட் அவனுக்கு சேரை இழுத்து போட, ஒரு நொடி அவனின் மீது பார்வை பதிந்து மீண்டது. பின் மீண்டும் தத்தமது உரையாடல்களை தொடர்ந்தனர்.

கல கலவென இருந்தது அவர்கள் குடும்பம். பழைய நட்பு கிடைத்த மகிழ்ச்சி பெரியவர்களிடம்.

வெகு வருடங்களாய்  உறுத்திக் கொண்டிருந்த  குற்ற உணர்வு தகர்ந்ததில்  வெங்க்கட் ,க்ருத்திகாவிடம்.

புதிதாய் ஒரு தாத்தா பாட்டி கிடைத்தத குதூகலம் திவ்யாவிடம்.

மொத்தத்தில் அவர்களது பால்ய ஊர்க்கதை தான் ஓடிக்கொண்டிருந்தது.

சத்ரிக்கும் சேர்த்து உணவு ஆர்டர் செய்திருந்ததால் அவனுக்கும் வந்தது. மனதில் தோன்றிய மகிழ்ச்சியை  முகத்தில்  பிரதிபலித்தபடி   அனைவரும் உணவை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தனர்.

சத்ரியன் மட்டும் யோசனையில் நெற்றி சுருங்க, கைகள் தட்டினை கலைத்த வண்ணம் இருந்தன.யோசனை முழுவதும் சாத்வியை சுற்றி மட்டுமே!

“எங்கே இருக்காளோ இவள்?”

“இவளை எப்படி கண்டுபிடிக்க?” என மூளையை உடைத்துக் கொண்டிருந்தான்.

மூளை இதற்கு மேல் வேலை செய்ய மாட்டேன் என அடம்பிடிக்க, சாப்பிடவும் பிடிக்கவில்லை. உணவு இறங்க மறுக்க, எப்போதும் சாப்பிடும் அளவை விட குறைவாகவே உண்டு கை கழுவ எழுந்தான்.

அதற்குள்ளேயும் சாப்பிட்டானா? என மற்றவர்கள் அவனை விசித்திரமாய் பார்க்க போதும்” என சேரை பின்புறமாய் தள்ளி எழுந்து திரும்பியவன், ஷாக் அடித்தாற் போல் நின்றான்.

சத்ரியின் கூர் விழிகள் , ஆச்சர்யத்தில் விரிந்து..  தன் முன் நின்றிருந்த உருவத்தை  அழகாய் உள் வாங்கிக் கொண்டிருந்தது.

வலது கை தானாகவே எழுந்து சுருள் சுருளாய் இருந்த கூந்தலின் உச்சியிலிருந்து படர்ந்து, மேடு பள்ளங்களால் அழகுற அமைந்த  அழகு முகத்தை வருடி கழுத்தில் நிலை பெற்று.. பின் அதற்கு கீழும் சற்றும் தயங்காமல் அவள் தேகத்தின் வளைவு நெளிவுகளை வருடியது..

வருட மட்டுமே முடிந்தது..  ஆனால் அவனால் அந்த மாசுமருவற்ற பால் வெள்ளை தேகத்தை உணரமுடியவில்லை. . ஆம் உணர முடியவேயில்லை.

அவன் கை வருடியது என்னவோ அவளை தான்.  ஆனால் உணர்ந்து கொண்டிருந்ததோ இருவருக்கும்   இருந்த கண்ணாடியைத் தான். கண்ணாடி தடுப்பை தான்.

சட்டென கையை கீழே இறக்கி, இதயத்தில் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த மூச்சு காற்றை வெளியேற்றி அடைத்த மூச்சை சரி செய்து மீண்டும் அந்த உருவத்தை  பார்க்க

 அவளின் விழிகளோ  தன் ஒட்டு மொத்த குடும்பத்தின் மீதும் படர்ந்திருந்தது சற்று அழுத்தமாய், சிறிது கோபமாய் என விழிகள் பேசியது அவனிடம்.

 கொஞ்சமும் புன்னகை இல்லா முகம் , கொஞ்சமும் இளக மாட்டேன் என  மற்றவர்களை தள்ளி நிறுத்தும் தீட்சன்ய கண்கள் , முதுகு வரை இருந்தாலும் கேர்லிங் செய்த  கூந்தல், இடப்புற கழுத்தை முன்புறம் மறைத்து, மீதி முதுகின் வலபுறத்தை மறைத்திருந்தது. கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் இளம் பச்சை வண்ண காட்டன் புடவை உடுத்தி  முகம் சுளிக்கா வண்ணம் நளினமாய் அதை அணிந்திருக்க..யாருக்குமே பார்வையை திருப்ப முடியவில்லை..

‘நம்ப பேமிலியை ஏன் இப்படி பார்க்குறா?’ என அவள் பார்வையை பின் பற்றி அவனும் பார்க்க..

கை கழுவ போகாம என்ன செஞ்சிட்டு இருக்கான் ‘அவனை பார்த்த மற்றவர்கள்…   சத்ரியனையும் கண்ணாடிக்கு அப்பால் இருந்த பெண்ணையும்  மாற்றி மாற்றி பார்த்திருந்தனர்.

‘இவ்ளோ அழகான பெண்ணா’ என க்ருத்தி நினைக்க

‘அவசரப்பட்டுட்டோமோ, கொஞ்சம். வெயிட் பண்ணி இருந்திருக்கலாமோ’ என வெங்க்கட்..

‘நம்ப பையனுக்கு தெரிஞ்ச பொண்ணா?’  சிவஹாமி விநாயகசுந்தரம் என ஒவ்வொருவரின் நினைவும் ஒவ்வொரு புறமும் ஓடியது.

“இந்த ஆண்டி ,ரொம்ப அழகா இருக்காங்க இல்லையாம்மா” என அனைவர் மனதில் ஓடியதை சரியாக வாய் விட்டே கூறினாள் திவ்யா

இவர்கள் அனைவரின் எண்ண ஓட்டத்தை நிறுத்தும் வண்ணம் “சாத்வி…  வாம்மா,  ஏன் அங்கேயே நின்னுட்ட  வா” என மஹா தடுமாறி தயங்கி, அழகின் மொத்த உருவமாய் நின்றிருந்த மகளை ஆசைபொங்க அழைக்க

 சங்கரன் எந்த தடுமாற்றமும் இன்றி.. சாத்வியை ஒருமுறை உற்று கவனித்தவர் “ஊர் சுத்தி கழுதை, எப்படி வந்து நிக்குது பாரு” என  கருவினாலும் தன்னை உதாசீனப்படுத்த தான் நினைத்தார். ஆனால் “அப்பா அப்பா” என ஹாஸ்டலில்  போனில் பேசியது நினைவு வர

“ஏன், அங்கேயே நின்னுட்ட..வா” என சங்கரனும் மனதார அழைத்தார்.

மஹா மற்றும் சங்கரின் ‘ சாத்வி’ என்ற அழைப்பில், அங்கே அமர்ந்திருந்த அத்தனை பேரும் மற்ற அனைவரும் அதிர்ந்தனர், சத்ரி உட்பட

வெகு நேரமாய் சத்ரியனையே பார்த்திருந்தவள், இறுதியில் ஒரு நிமிடமே ஆனாலும்  அதில் தந்தையின் கடுகடுப்பையும், தாயின் தடுமாற்றத்தையும் எளிதாக கண்டு கொண்டாள். கூடவே க்ருத்திகா, வெங்க்கட் அருகில் ஆர்வமாய் தன்னை நோக்கும் சிறு பெண் அவர்களின் பெற்றோர்,   அனைவரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியையும் கண்டு கொண்டாள்.

“மேம், கான்பரன்ஸ் ஹால் அந்த பக்கம்” என சாத்வி பின்னாலேயே  வந்தவன் கூற

இவர்களின் மேல் இருந்த பார்வையை இவன் புறம் திருப்பி, “ம், போகலாம்” என கூறிவிட்டு, இவர்களை திரும்பியும்  பாராமல் நிமிர்ந்த நடையுடன் தன் அழகிய ஹை ஹீல்ஸ் தரையில் தாளம் பதிக்க கூந்தல் நளினமாய் அசைய  பந்தாவாய் லிப்டினுள் சென்று மறைந்தாள்..

 பெற்றவர்களை வெளிப்படையாகவே உதாசீனப்படுத்திவிட்டாள் சாத்வி. அது மட்டும் அங்கிருந்த அனைவருக்கும் தெள்ளத்தெளிவானது.

யாராலும் எதுவும் பேச முடியவில்லை. பேச வார்த்தைகள் வரவில்லை அது தான் உண்மை.

“நம்ப சாத்வியா….அண்ணா… ” இன்னும் அவள் போன பாதையில் விழியை பதித்ததபடி அதிர்ச்சி விலகாமல் சிவஹாமி கேட்க

‘போனில் நன்றாக தானே பேசினாள் இவள். இப்போது ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்?’ என மனதில் கேள்வி எழுந்தாலும் அதை அடக்கி “ஆமா  சிவஹாமி… நம்ப சாத்வி தான்” என கோபத்தை அடக்கி கூறினார்.

ஐந்து வருடங்களுக்கு முன் பார்த்த மகளை எளிதாக கண்டு கொண்டனர் மஹாவும், சங்கரனும்.

ஆனால் கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு முன்  பார்த்த சிறு பெண் தான் இந்த அழகி சாத்வி என சத்ரியின் குடும்பத்திற்கு தெரியவில்லை! அறிந்த பிறகோ…

சத்ரிக்கு இதயம் துடிக்கும் ஓசை வெளியே கேட்கும் உணர்வை அடக்கமுடியவில்லை!

 கண்களை அவள் சென்று மறைந்த திசையில் இருந்து பார்வையை வேறு புறம் திருப்ப அவன் பார்வையில் பட்டது. சாத்வியை உணரவைத்த கண்ணாடியும் அதில்  அவளின் வரிவடிவத்தை வரைந்த  பிசு பிசுப்பான தடமும்   விரல்களை தன் முகத்திற்கு நேராய் நீட்டிப் பார்க்க கைகழுவாமல் காய்ந்து போய் கிடந்தது அவன் விரல்கள்

தன் செயல்களில் அதிர்ந்து போனான் ‘இப்படி வெளிப்படையாகவா நடந்து கொண்டோம்’ என அவனை பார்வை சுழன்று ஒவ்வொருவராய் கீழ் கண்ணால் நோக்கினான்.

அனைவரும் சாத்வியைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தனர் ‘ஃஉஃப்ப்ப்….’ பெரு மூச்சை வெளியேற்றி கண்களை மூடி அப்படியே கண்ணாடியிலேயே சாய்ந்து கொண்டான் சத்ரி  உணர்வுகள் கூட போராடுமா..! போராடிக் கொண்டிருந்தது அவனுக்குள்..!