கண்டும் காணாமல் இருந்த சங்கரனுக்கும், நடந்த கூத்தில், முகத்தில் லேசாய் புன்னகை படர்ந்தது .
அதை பார்த்த விநாயகத்திற்கும் நிம்மதி லேசாய் படற.. இளைய மகனை பார்வையாலேயே ‘பேசினால் குறைஞ்சா போவ?’ என யாசிக்க
சட்டென்று முகம் இறுகியது சத்ரிக்கு விளையாட்டை கைவிட்டவனாய், ‘பேச மாட்டேன்’ என இடவலமாய் தலையை அசைத்து திமிராய் நின்றிருந்தான்.
‘இவன் அடங்கவே மாட்டான் போல’ மற்ற மூன்று ஆண்களின் எண்ணமும் ஒரே போல் தான் ஓடியது.
அவர்களை கண்டுகொள்ளவே இல்லை, அவன்பாட்டிற்க்கு அங்கிருந்த பெரிய எல் ஈ டி டிவியை ஆன் செய்து சேனல்களை மாற்றி மாற்றி ரிமோட்டை துவம்சம் செய்து கொண்டிருந்தான்.
இந்த கூத்தையெல்லாம் பார்த்த படி அப்போது தான் ஹாலுக்கு வந்தனர் மஹாவும் சிவஹாமியும்..
இவன் அலம்பல் செய்வதை பொறுக்காமல் ‘என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு என்ன இந்த கூத்து செஞ்சிட்டு இருக்கான்’ என சிவஹாமி மகனின் அருகே வேகமாய் வந்தார்.
‘ஏற்கனவே மருமகள் சிறியவனை குறை சொன்னது, இப்போதைய சத்ரியின் நடவடிக்கை, சங்கரன் மீதான உதாசீனம் எல்லாம் சேர
“எதுக்குடா இப்போ உனக்கு இவ்வளவு கோபம், அண்ணன் அப்படி என்ன செஞ்சிட்டாரு” என சத்ரிஇன் அருகே சென்று பல்லை கடித்தபடி மெதுவாய் கேட்டார்
அடுத்து நீங்களா, உங்க டேர்னா? என கள்ளமாய் சிரித்தவன் ஒரு மயக்கும் புன்னகையோடு “நான் கேஷூவலா தான் இருக்கேன். இப்போ நீங்க தான் கோபப் படுறீங்க” என நக்கலாய் கூறினான்
‘அடப்பாவி..’ என கோரசாக வந்தது வார்த்தைகள் வேறு யாரிடமிருந்து? எல்லாம் வெங்க்கட் மற்றும் விநாயகத்திடமிருந்து தான்.
அவஸ்தையாய் நெளிந்தது சங்கரன் மட்டும் தான்.
ஒரு நிமிடம் குழம்பினாலும் சட்டென சுதாரித்த சிவஹாமி ”இப்படி பேசாத சத்ரி பெரியவங்களே கோபத்தை விட்டுடாங்க, எப்போதோ முடிஞ்சு போன பிரச்சனையை, மறுபடியும் நீ ஆரம்பிச்சு வைக்காத” என கடுப்புடனே கூற
“என்ன கோபம்? நான் என்ன ஆரம்பிச்சேன்?” வேண்டுமென்றே வம்பிழுக்க
“சங்கரண்ணா கிட்ட பேச தானே சொல்றோம்,சமாதானமா போக தானே சொல்றோம், இதுக்கு இத்தனை அக்கப்போரா?” இத்தனை நேரம் விநாயகசுந்தரம் போராடிய போராட்டத்தை ஒரே வார்தையில் வெளிப்படையாய் கூற
‘ ஹப்பாடா..’ என இருந்தது விநாயகத்திற்கு
ஆனால் சங்கருக்கோ “ஹய்யோடா, ” என இருந்தது…
ஆனால் சத்ரியோ சற்றும் யோசிக்காது.. “அதான் ‘வாங்க’ சொன்னேனே.. இனி என்ன செய்யனும்?” என கடுப்புடன் கூற….
“ டேய், அவங்க உன் மாமா அத்தைடா..? யாரோ மாதிரி ‘வாங்கன்னு சொல்லிட்டு போய்ட்டா சொன்னா சரியா போச்சா?” என அதற்குள் பொறுமையற்று விநாயகசுந்தரம் தலையிட
“என்னது.. அத்தை.. மாமாவா?” என இழுத்தவன், சங்கரனின் முகத்தை பார்த்து கொஞ்சமும் பாவப்படாமல் “அத்தை உங்கூட பிறந்தாங்களா? இல்லை மாமா உங்க வீட்டம்மா கூட பிறந்தாங்களா?” என அழுத்தமாய் கேட்க , அங்கிருந்த அத்தனைபேருக்கும் பேரதிர்ச்சி தான்.
அதுவரை விளையாட்டாய் இருந்த வெங்க்கட்டும் புருவம் சுளித்தபடி என்ன நடக்கிறது என்பது போல் பார்த்திருந்தான். சத்ரியன் பேசிய வார்த்தைகளின் வீரியம் வெங்க்கட்டை யோசிக்க செய்தது..
‘அன்று விநாயகத்திடம் தான் கேட்ட அதே வார்த்தைகள் எல்லாம், இன்று சத்ரியின் வார்த்தைகளாய் உருவம் பெற்று வர, அன்று தெரியாத அதன் வீரியம் இப்போது சற்று அதிகமாய் உரைத்தது, சங்கரனுக்கு ’
ஆனால் தான் நடந்து கொண்ட விதம் எதுவுமே வெங்க்கட்டிற்கு தெரியாதே, இதே அவன் மனைவி, தன் மகள், க்ருத்திக்கும் தெரியாதே!
அவர்களின் முன்னிலையில், இவன் இப்போது இப்படி போட்டு உடைக்க வேண்டுமா..? என சங்கரன் முகம் சுருக்க
அதற்குள் சத்ரியை அடக்கினார் சிவஹாமி “டேய் அடங்கவே மாட்டியா நீ? என்ன பேசுறோம், ஏது பேசுறோம்னு தெரிஞ்சே பேச மாட்டியா?“ என வெங்க்கட்டை கண்ணால் காட்டியபடி கண்டிக்க
ஆனால் சத்ரியின் மனநிலை எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை போலும்.
“தெரிஞ்சு தான் பேசுறேன். புரிந்து தான் பேசுறேன். நடந்ததை, இவர் நடத்தி முடிச்சதை, நீங்க வேணா மறக்கலாம் ஆனா நான் மறக்க மாட்டேன்” ‘என்ன சொன்னால், சங்கருக்கு புரியுமோ’ அப்படி வார்த்தைகளை கையாண்டான் சத்ரியன்.
‘எதற்கு இவனுக்கு இவ்வளவு கோபம்’ என வெங்கட் தவிர்த்து மற்ற அனைவருக்கும் இது தெரிந்தாலும், ‘இவனது கோபம் சற்று அதிகப்படி தான்’ என தான் தோன்றியது .
ஆனால் வெங்கட்டிற்கு எதுவுமே புரியவில்லை. இருந்தும் சத்ரியை தான் நோட்டம் விட்டு கொண்டிருந்தான்.
ஏனென்றால் தன் தம்பியை பற்றி நன்றாகவே தெரிந்தவன் வெங்கட் ‘மரியாதை தெரிந்தவன். இதுவரை மரியாதை குறைவாய் யாரையும் நடத்தியிராதவன். அவ்வளவு எளிதில் ஒருவரை தூக்கி எறிந்து பேச மாட்டான்! அதுவும் சங்கரனை, தன் மாமனாரை பேசுவதென்றால்? ஏதோ மூளையை குடைந்தது..’
இடையில் தலையிட்டது சங்கரன் தான், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என பேசியே பழக்கப்படவர் “பழிக்கு பழியா? அன்னைக்கு நான் செஞ்சதுக்கு, பேசினதுக்கு உங்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்றியா, சத்ரியா?” என நேரடியாய் கேட்க,
வெங்க்கட் அதிர்ந்து போனான் ‘என்ன நடக்குது’ இங்கே என
“அப்போ என் கோபத்திற்கான காரணம் இது தான்னு நீங்களே முடிவு பண்ணியாச்சு அப்படித் தானே” என மேலும் சத்ரி கோபம் கொள்ள
‘இது என்ன வந்த முதல் நாளே ஆரம்பிக்கனுமா’ வெங்க்கட் தவிர்த்து எல்லோரின் மனதிலும் இதே எண்ணம் தான்.
“நீ நடந்துக்கிறதை, பேசுறதை பார்த்தா அப்படித் தான் தெரியுது” என சங்கரனும் நேரடியாகவே சாட
அவர் பதிலில் சப்தமில்லாமல் சிரித்தான் சத்ரி “ஓ, நான் நடந்துக்கிறதை வச்சு, நீங்க என்னை புரிஞ்சுகிட்டீங்களோ” நக்கலடித்து “இதை நான் நம்பனுமா..” என எகிறியவன் கூர்மையான பார்வையுடன் “யாரை தான் நீங்க சரியா புரிஞ்சுக்கிட்டீங்க, என்னை புரிஞ்சுக்கிறதுக்கு” என அழுத்தமாய் பார்க்க..
“யாரை நான் புரிஞ்சுக்கலை!” வீம்புக்கெனவே இவர் கேட்க
“பெத்த பொண்ணையே புரிஞ்சு அவளை சந்தோசமா வாழ வைக்க முடியலை. இதில் என்னை புரிஞ்சிகிட்டாராம்”
அவன் செல்ல வருவதை புரிந்து கொண்டார் சங்கரன், இவனிடம் தோற்பதா? என பழைய கோபம் தலை தூக்க “பெத்தவனை விட மத்தவனுக்கு எதுக்கு இந்த அக்கறை” இவரும் எடுத்தெறிந்து பேசினார்..
“அக்கறை….! ஓ…. அது உங்களுக்கு நிறைய இருக்கிறதா நினைப்போ” இவனும் எகிற
“ஏன் இல்லாமல், என் பொண்ணு மேல எனக்கு இல்லாத அக்கறையா? ” சண்டையிட தயாரானார் சங்கரன்.
“ஓ…அப்படியா” என தன் தாடையை தடவியவன் “எப்போ இருந்து உங்க பொண்ணு இங்கே, இந்த ஊரில் வேலை செய்யுறா ” என கிண்டலாய் கேட்க…
“நாழு, ஐந்து வருசமா” சொல்லும் போதே அவரின் அக்கறையின் அளவு அவருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தெரிந்தது..
“எத்தனை வருஷம்னு நியாபகம் கூட இல்லை.. ம்.. எங்கே தங்கி இருக்கா..” இம்முறை இன்னும் நக்கல் குரலில் கேட்டான்.
அவருக்கு தெரியவில்லை, ஆனால் பதில் வந்ததோ மஹாவிடமிருந்து ஒரு ஹாஸ்டலின் பெயரை கூறி ‘அந்த ஹாஸ்டலில் தான் இருக்குறா’ என்றார் மஹா
“அப்படினா அவள் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து இத்தனை வருஷமா இப்போ வரை, அவளை பார்க்கவே வரலை நீங்க” அப்படித்தானே என்றவன் “இதிலேயே தெரியலையா? உங்க அக்கறையோட லட்சனம்” அசராமல் கொடுத்தான் பதிலடியை.
“பொண்ணுங்களை பெத்தா மட்டும் போதுமா..? கூட வச்சு பார்த்துக்க தெரியலை..! நீங்க எல்லாம் எதுக்கு பிள்ளையை பெத்துக்கணும்”
அடக்கி வைத்த ஆத்தரம் வார்த்தைகளில் ஒட்டு மொத்தமாய் கொட்டியது.. அவ்வளவு ஆத்திரம் வயது வித்யாசம் பாராது வறுத்தெடுத்துவிட்டான்..
அவன் பேசுவதை அனைவரும் கவனித்திருந்தனரே ஒழிய தடுப்பார் யாரும் இல்லை..
சங்கருக்கு ஏற்கனவே சத்ரி பேசியதிலேயே ஏறி இருந்த ஆத்திரம் இப்போது இதில் இன்னும் கோபமும் கூட
விநாயகத்திடம் திரும்பினார் சங்கரன் “சின்ன பையனை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறியா மச்சான். அந்த ஓடுகாலி கழுதை என்னைக்கு சொல் பேச்சு கேட்டா.. கேட்கிற மாதரியா பிள்ளை பெத்து வச்சிருக்கேன்.. என்னவோ எல்லாத்துக்கும் நான் தான் காரணம்ன்ற மாதிரி பேசுறான். நீயும் பார்த்துட்டு இருக்க”
அதற்கு விநாயகசுந்தரம் பதில் பேசும் முன், சத்ரி “ சொல் பேச்சு கேட்க மாட்டாளா? யாரு சாத்வியா?” என அவரிடம் கோபமாய் கேட்டவன்
“நீங்க சொல்லுங்கப்பா சாத்வி சொல் பேச்சு கேட்க மாட்டாளா? சொல்லுங்க?” என தந்தையிடமும் ஆத்திரமாய் கேட்டான்.
யார் பக்கம் பேச என குழம்பிபோனார் விநாயகசுந்தரம் மகனுக்காகவா? நண்பனுக்காவா?
“டேய் விடுடா….” என விநாயகசுந்தரம் இடையில் வர
“அப்படிலாம் விட முடியாது“ என சங்கரிடமே கூறியவன் “இத்தனை வருஷமா வராதவங்க, இப்போ எதுக்கு இங்கே வந்து இருக்காங்க?” நேரடியாய் கேட்க.
இதுக்கு என்ன சொல்ல போறானோ.. என பயந்து “சாத்விக்கு கல்யாணம் பேசி முடிக்க தான்!” என சங்கரை பார்த்தபடியே கூறினார் விநாயகசுந்தரம்.
“ஓ அப்போ அவளுக்கு எதுவும் சொல்லாமல் எல்லாமே ரெடி பண்ணிட்டு தான் இங்கே அவளை தேடி வந்திருக்காங்க..ம்..” என இழுத்தான்.
“சாத்விக்காக பேசறன்னு புரியுதுடா.. ஆனா அவ அவங்க பொண்ணு.. அவங்க பண்ணதும் தப்பு தான். அதுக்காக வயசுக்கு மரியாதை இல்லையா? இப்படி நிற்க வச்சு கேள்வி கேட்பியா “ பதமாகவே விநாயகசுந்தரம் கூற..
“அப்படித் தான் கேட்பேன்.. எனக்கு உரிமை இருக்கு கேட்பேன்.. இன்னமும் நான் அதே சத்ரியன் தான், அவளும் அதே சாத்வி தான்.. அவளுக்காக நான் பேசுவேன். வயசு பொண்ணை தனியா அனுப்பி வச்சு இருக்காங்கப்பா. டெய்லி நீங்களும் நியூஸ் பார்க்குறீங்க தானே.. ஏதாவது ஆச்சுனா” ஆதங்கமாய் கேட்டான்..
“ஏண்டா அந்த லெவளுக்கெல்லாம் போற” என பயந்தே போனார் விநாயகசுந்தரம்.
“சரி அவ்வளவு போக வேண்டாம், ஐஞ்சு வருசமா இங்கே, இதே திருச்சியில் தானே இருக்கா எப்படியும் ப்ரண்ட்ஸ் இல்லாம இருக்க மாட்டா? அதில் ஏதாவது கெட்ட பசங்க சவகாசம்? இல்லை கெட்ட பொண்ணுங்களோட சவகாசம் ஏதாவது இருந்து அவள் வழி மாறி இருந்தா? இல்லை இதோ நம்ப க்ருத்திகா மாதிரி ஏதாவது வேலை பார்த்திருந்தா?” என சாத்வியின் மீதான அவர்களின் உதாசினத்தை அப்பட்டமாய் எடுத்துக் கூற
சங்கரன் பயந்தே போனார் இருந்தும் மனதை மாற்றிக் கொண்டு பயத்தை மறைத்து
“அவள் அப்படியெல்லாம் போற ஆள் கிடையாது.. சத்ரியா.. வீட்டுக்கே அடங்காதவ அவ… நாங்க தப்பு பண்ணினாலே முகத்துக்கு நேரா செல்றவ.. அவ எப்படி இப்படி தவறான வழியில் போவாள்..” என கேட்ட சங்கரின் குரல் சற்று நடுங்கித் தான் போயிற்று.. நடுங்க வைத்தான் சத்ரியன்..
அதே நடுக்கத்துடன் “ஏண்டா வயித்துல புளியை கரைக்க.” என சத்ரியிடம் சற்று உரிமையாகவே அதே நடுங்கிய குரலில் கேட்க
“புளியை கரைக்கறனா? யோவ் மாமா.. உனக்கு இன்னும் புரியவே இல்லையா? அவ ஸ்கூல் படிக்கும் போதே லவ் மேட்டரில் சிக்கினவ.. ஒழுக்கமா இருந்த சாத்வியை ஒழுங்கில்லாம ஆக்கினது நீ தான்.. மறந்திட்டு பேசுறீங்களோ” என மேலும் திரியை கொழுத்திப் போட நெஞ்சே அடைக்கும் உணர்வு சங்கருக்கு..
“ டேய் அடங்கவே மாட்டியாடா நீ..” என விநாயகசுந்தரம் தான் அடக்கும்படியாயிற்று…
ஆனாலும் அடங்குமா நம் காளை… ?
“ பின்னே சாத்வியை நிம்மதியில்லாம ஆக்கிட்டு , இவர் இங்கே கல்யாணம் பண்ண பிளான் போடுறாராம். அதுவும் அவளோட இஷ்டம் இல்லாமல்.. நாம இருக்கும் போதே அந்த பாடு படுத்துவாரு.. அதுக்கப்பறம் சாத்வியை எப்படியெல்லாம் படுத்தினாரோ.. இங்கே தனியா என்ன பண்றாளோ..” என ஆத்திரம் கொள்ள மனமோ பீதியில் உரைந்தது..
சத்ரி வாயால் சொல்லிவிட்டான், ஆனால் அவர்கள் சொல்லவில்லை அவ்வளவு தான் வித்யாசம்.
ஒரு மகளை நினைத்து ஒரு தந்தை கொள்ள வேண்டிய அனைத்து அக்கறையும் ஒரு இம்மியளவு கூடகுறையாமல் சத்ரியிடம் வெளிப்பட்டதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உரைந்தனர், அன்பின் உச்சம் அது.
வெங்க்கட் கூட நினைத்திருக்கிறான்.
காதலில், திருமணத்தில் ஏன் தங்கள் உறவின் போது கூட உணராத உணர்த்தியிராத உணர்வு அது.. காதல், அன்பு, பாசம் ,அக்கறை என அனைத்தையும் தாண்டிய ஆத்மார்த்மான உணர்வாய் தான் தோன்றியது சாத்வியின் மீதான சத்ரியின் அன்பு.