பெயருக்கு தங்களை வரவேற்று ,அத்துடன் முடிந்தது என விலக எண்ணியவன், சாத்வியின் பேச்சை கேட்டு அங்கேயே நின்றதும்.. பின் கோபம் கொண்டு அறைக்குள் அடைந்து கொண்டதையும் பார்த்த சங்கரன் இன்னும் முகம் சுருங்க அமர்ந்திருந்தார். இதற்கு மேலும் அவமானம் தேவையா? என
மஹாவுக்குமே சற்று சங்கடம் தான்.. ஆனாலும் சத்ரியிடம் இவ்வளவு பொறுமையையும் எதிர் பார்க்கவில்லை..
‘அவன் தங்களை இந்த வீட்டிற்குள் விட்டதே பெரிது தான்.. இவருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்’ என ஓடியது மஹாவின் எண்ணம்..
நடப்பதையெல்லாம் பார்த்த விநாயகசுந்தரம் ஒரு முடிவுடன் சிவஹாமியை கண் அசைவில் அழைத்தார்….மற்றவர்களின் கவனத்தை கவரா வண்ணம் விநாயகசுந்தரம் அருகே சென்று நிற்க…
சிவஹாமியின் காதருகில் குனிந்து “மஹாவை அழைச்சிட்டுப் போ, அப்படியே க்ருத்தகாவையும்” என சொல்ல
எதற்கு என்பது போல் பார்த்த சிவஹாமி “ஏன்…. எங்களை அனுப்பிட்டு நீங்க மூன்று பேரும் என்ன செய்ய போறீங்க” என கிண்டலாய் கேட்க
“சொன்னதை செய்ற பழக்கம் உன்கிட்ட எப்போ தான் வருமோ? கிழவி ஆகிட்ட இது கூட நான் சொல்லி தான் தெரியனுமா..” என வழக்கடிக்க
கிழவி என்றதும் சிவஹாமியின் முறைப்பு அதிகமாக…
விநாயகசுந்தரம் தான் இறங்க வேண்டியதாயிற்று “ சரி சரி முறைக்காத.. சங்கரன் முகமே சரியில்ல, தனியா கொஞ்சம் பேசனும் சொன்னதை செய்” என்றார் விநாயகசுந்தரம்
அதற்கும் சரி என்றால் அது சத்ரியின் அன்னை இல்லையே.. “முதலில் எதுக்குன்னு சொல்லுங்க, அப்பறமா நீங்க சொல்றதை நான் செய்றேன்” என
நர நர வென பல்லைக் கடித்தார் விநாயகசுந்தரம் “கட்டினது அடங்கனாவுல, பெத்ததும் அடங்க போகுதுக எனக்குனு வந்து வாய்ச்சிருங்கீங்களே” என நிஜமாகவே குறைப்பட்டு கொண்ட விநாயகசுந்தரம் “ஏய், சொன்னதை செய்டி, காரணமில்லாம சொல்ல மாட்டேன்” என கடிக்க
இதற்கு மேல் கண்டிப்பாய் வாதாட முடியாது.. என நாசூக்காய் அங்கிருந்து மஹாவையும், க்ருத்திகாவையும் அழைத்து சென்றார் சிவஹாமி.
க்ருத்திகா கோபமாய் சமையலறை சென்று வீட்டு வேலைகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் பின்னேயே வந்த மஹாவும் சிவஹாமியும் சமையலறை வாசலிலே அமர்ந்து சாத்வியை பற்றி பேச்செடுக்க, அதை கவனிக்காத க்ருத்திகா கட கட வென பாத்திரங்களை உருட்ட அதில் ஒன்று தரையில் நங்கென விழ
“க்ருத்தி , பார்த்துமா காலில் போட்டுடாத” என சிவஹாமி கண்டிக்க
“என் காலில் படலை அத்தை” என கிருத்தி பதில் சொல்ல
“உன் காலில் இல்லைடி, எங்க காலில் போட்டுடாத” என இந்தமுறை மஹா கூற
சிரித்துவிட்டார் சிவஹாமி.. “புள்ளையை எத்தனை வருசம் கழிச்சு பார்க்கிற… நல்ல வார்த்தையா பேசாமல் இதென்ன பேச்சு” என மஹாவையும் கண்டிக்க
“நல்ல வார்த்தை பேசற அளவுக்கு நான் புள்ளைகளை பெறலையே என்ன பண்றது சிவஹாமி” என கிருத்திக்கு கொட்டுவைக்கவும் தவறவில்லை மஹா
அதில் உள்குத்து இருந்தது என்னவோ உண்மை. ஏற்கனவே தன் தந்தையுடன் பேசாமல் இங்கே அழைத்து வந்த கோபத்தில் இருந்தவளை, மஹாவின் பேச்சு சீண்டி விட
இருந்த கோபத்தில், சமையலறையை விட்டு வெளியே வந்து “எத்தனை வருசம் கழிச்சு அம்மா அப்பா வந்திருக்காங்க, கோபப் பட வேண்டிய பெரியவங்க அமைதியா ஆயிட்டாங்க.. உங்க சின்ன மகனுக்கு என்ன வந்ததாம்.. இரண்டு வார்த்தை பேசினா இமேஜ் போயிடுமோ? அப்படி என்ன கோபம் அத்தை உனக்கு மகனுக்கு” என தன் மாமியாரிடமே மல்லுக்கு நிற்க
அதுவரை க்ருத்திகாவிடம் பேசாமல் நின்றிருந்த அவளின் அன்னை ”அப்படியே வாயில் போட்டேனா தெரியும் அதென்ன மகனை பத்தி அம்மாகிட்டயே குறை சொல்ற அதுவும் சத்ரியை பேசுற? வாயை குறை” என மஹா சத்தம் போட
“இப்போ நான் என்ன சொன்னேன்னு திட்றீங்க? சத்ரியனை பேசினதுக்கு அத்தை தான் கோபப்படனும். நீங்க கோபப்படுறதில் நியாயமே இல்லை” என தாயுடனும் சண்டையிட
“இந்த வீட்டுக்கு நீ வாழ வந்த நாளில் இருந்து சத்ரி எதுவும் உன்னை சொன்னானா.. இல்லை ஏதாவது ஜாடைமாடையா? இப்படி எதுவும் பேசினானா?” என கேள்வியை அடுக்க…
வந்த நாளில் இருந்து யோசித்துப் பார்த்தவளுக்கு ‘இல்லை ‘ என தானகவே தலை ஆடியது
“நீயே சொல்ற, இல்லைன்னு.. பின்னே அவனை எதுக்கு பேசுற? சொல்ல போனா உனக்கு அவனை பேசற தகுதியே இல்லை” என கோபமாய் கூற
“பெத்த பொண்னைவிட உங்களுக்கு சத்ரி பெரிசா போயிட்டானோ” கேட்ட பின் தான் சிவஹாமியும் அங்கிருப்பதை உணர்ந்து பேச்சை நிறுத்தினாள் க்ருத்திகா
மஹாவோ இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் “ஆமாண்டி எனக்கு சத்ரி தான் முக்கியம் நீ இல்லை” என போட்டுடைக்க
‘ ஏன் தான் சத்ரியை இழுத்தோம் ‘ என நொந்தே போனாள் கிருத்தி.. அதை விட ஒரு தாய் மகளை இந்தளவிற்கு அவமானப்படுத்தவே முடியாது..
ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
“சரி நான் முக்கியமில்லை, அவன் தான் முக்கியம் அதுக்காக இரண்டு வார்த்தை அப்பாகிட்ட பேசினா தப்பில்லையே” என தன் ஏமாற்றத்தை குரலில் வெளிப்படுத்தி.. “ பாருங்க அப்பா ‘உம்னு’ ஆயிட்டாங்க முகமே சரியில்லை” என உண்மையான வருத்தத்துடன் கூற..
“அப்பா பாசம் எப்போவும் ஒரே மாதிரி இருக்கணும்.. நேரத்துக்கு தகுந்த மாதிரி மாறினா.. அது பாசம் இல்லை வேசம்” என வார்த்தை ஜாலம் காட்டி “இப்போ கூட உனக்கு அப்பா தான் முக்கியம் இல்லையா? நீ சுயநலவாதி தாண்டி, நீ செய்த காரியத்தோட வீரியம் இன்னும் உனக்கு புரியலை”
தன் அன்னை தன் தவறை சுட்டிக் காட்டுவது புரிய தான் செய்தது. ஆனால் அதை சரி செய்யும் காலம் போய் இதோ அதை மறக்கும் நிலைக்கு வந்திருந்தாள். இவள் மட்டுமல்ல கிட்டதட்ட எல்லோரும் மறந்த ஓர் விசயம்.
அதை திடீரென தன் அன்னை ஞாயபகப் படுத்த அவமானமாய் இருந்தது. ஆனாலும் அப்போதும் அடங்காமல் “சரிமா நான் செய்தது தப்பு தான், வேசம் தான், அப்படியே வச்சுக்கங்க.. ஆனால் எனக்கு இதற்கு பதில் வேணும். நாங்க பண்ணின வேலையில் சிரமப்படுவது, அவமானப்படுவது எல்லாம் நீங்க இரண்டு பேரு தான். இதில் சத்ரிக்கு எதுக்கு நீங்க சப்போர்ட் பண்ணனும்?” என நிஜமாகவே புரிந்து கொள்ளமுடியாமல் கேட்டாள்.
‘இவள் என்ன இப்படி பேசுகிறாள்?’ என பார்வையை சிவஹாமியின் புறம் திருப்ப
‘க்ருத்திக்கு எதுவும் தெரியாது’ என வாயை அசைத்து ஜாடை சிவஹாமி பேச இம்முறை உரிமையாய் கோபத்தை வெளிக்காட்டினார் மஹா.
‘இத்தனை வருடம் இது தெரியாமல் தெரிந்து கொள்ளாமல் எப்படி இங்கே இருந்தாள்’ என தான் யோசனை ஓடியது மஹாவினுள்.
இவர்களின் சண்டை இப்போதைக்கு முடியாது என மஹாவின் அருகில் வந்தவர் “சத்ரி பத்தின விசயம் எதுவும் வெங்க்கட், கிருத்தி இரண்டு பேருக்குமே தெரியாது” என மெதுவாய் கூறிவிட்னு பின் க்ருத்தியின் புறம் திரும்பியவர்
“மஹாக்கு உன் மேல ஏதோ கோபம், சத்ரி மேல ஏதோ பாசம்.. விடேன். அதை விட்டுட்டு மறுத்து பேசிட்டே இருக்கனுமா ” என கிருத்தியை மனம் நோகாமல் பேசி
“நான் சத்ரிகிட்ட பேசி அவனை சரி பண்றேன். நீ போய் சாப்பாடு ஏதாவது செய்..” என சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
மஹாவோ ,சிவஹாமியை தான் பார்த்திருந்தார்.
“எதுக்கு மஹா இப்போ முறைக்கிற” என
“வீட்டுக்கு வந்ததும் இவள் எப்படி கூட்டு குடும்பத்தை சமாளிக்கறாளோன்னனு நினைச்சேன், ம்ஹூம் அது தப்பு.. அவளை தான் நீங்க எல்லாரும் சமாளிக்கிறீங்க..” என மெதுவாய் சிரித்தபடி கூறினார்.
“எல்லாம் ஒன்னா வளர்ந்த கழுதைகள் தானே மஹா… இரண்டு தடிமாடுகளை சமாளிக்க முடியாம திண்டாடுனேன். அந்த வகையில் ஒரு தடிமாட்டுக்கு உன் பொண்ணு பொறுப்பு எடுத்துக்கிட்டா.. அதுக்கே அவளுக்கு என்ன வேணா செய்யலாம்” என சிவஹாமியும் முகத்தில் உறைந்த புன்னகையோடு கூறி..
“அவள் சமையலை பார்த்துப்பா.. நீ வா, நாம ஹாலுக்கு போகலாம்” என பேசியபடி இருவரும் ஹாலுக்கு வர
ஆண்கள் இருவரும் ஹாலில் பெரிய சண்டையே போட்டுக் கொண்டிருந்தனர்.
பெண்கள் மூவரும் சமையலறை செல்வதை உறுதி செய்து, தன் மாமனாரிடம் கடலை போட்டுக்கொண்டிருந்த வெங்க்கட்டை அழைத்தார் விநாயகசுந்தரம் “போய் சத்ரியை கூட்டி வா” என அனுப்பி வைத்தார்.
இவனும் போய் அழைத்து வந்தான்.
வந்தவன் அமைதியாய் தன் இடத்தில் அமர்ந்து கொள்ள,
“என்னப்பா..?” என வந்த சத்ரியோ தன் தந்தையை முறைக்க
அவனை பதிலுக்கு முறைத்தவரோ, ச வீட்டுக்கு வந்தவங்களை இப்படி தான் அவமானப் படுத்துவியா?” என கோபத்துடன் கேட்க
இதை எதிர்பாரத சங்கரனோ ”ஐயோ விடு மச்சான், இதைப் போய் பெரிசு பண்ணிகிட்டு” என கூறிவிட்டு
‘இவன் கிட்ட வாயை கொடுக்காதவரை நமக்கு தான் நல்லது’ என வீட்டை சுற்றிலும் பார்வையை ஓட்டி மற்றவர்களின் பார்வையில் இருந்து தப்பினார்.
சத்ரி எதுக்கு இப்படி கோபப்படறான் என குழம்பியவரோ, இப்போதைக்கு இருவரையும் பேச வைப்போம் என்ற எண்ணமே பிரதானமாய் வெளிப்பட,
“உன் கோபத்தை அப்புறமா காட்டிக்கலாம். வந்தவங்களை வான்னு கேளு, முதலில் சங்கரனோட பேசு” என விநாயகசுந்தரம் சத்ரியிடம் மெதுவாய் கூற
“என்னப்பா சொன்னீங்க?” புரிந்தாலும் புரியாதது போல் இவன் பேச
“ப்ச்…. சங்கரன்ட்ட பேசுடா..” உதட்டசைவில் கூற
“என்ன சொல்றீங்கப்பா, ஒன்னும் புரியலை” என தெளிவாய் கூறி, பின் சுட்டுவிரலால் காதைக் குடைந்து இவன் வேண்டுமென்றே வம்பிழுக்க