ரகுராம் திருமணத்திற்கு சம்மதித்தை அறிந்ததும் அளவில்லாத ஆனந்தமடைந்த மோகனா உடனே அவனை அழைத்துப் பேச எண்ணினாள்.
“வெக்கமா இல்ல. அன்னக்கி வீட்டுக்கு வந்தப்போ என்ன பேச்சு பேசினான்? சாரி கூட கேட்டானா? அவனைப் பார்த்தா மட்டும் எல்லாத்தையும் மறந்து ஈன்னு இளிக்கிற? வேணாமென்ற அவன் தானே சம்மதம் சொன்னான் அவனே பேசட்டும்” என்று அவள் மனம் கூப்பாடு போட, அலைபேசியை தூக்கிப் போட்டாள்.
ரகுராம் அழைத்துப் பேசாததால் கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும், விக்ரம் பாரதியை அவளோடு இருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதில், பாரதியை கண்காணிக்க நேரிட்டவளுக்கு ரகுராமின் சிந்தனை கொஞ்சம் தூர ஓடத்தான் செய்தது.
அவ்வப்போது ரகுராம் அவள் கண்களுக்குள் வந்து நின்று புன்னகைக்க, “என்ன இவன் ஓகே சொன்னான். ஒரு போன் போட்டு பேசக் கூடவா எண்ணம் வரல. கொஞ்சிப் பேச வேணாம். ஆசையா நாலு வார்த்தக் கூடவா பேசக் கூடாது. ஒருவேளை அண்ணன் சொன்னதுக்காக என்ன கல்யாணம் பண்ண ஓகே சொன்னானா?” குழம்பிய மோகனா “நீ யாருக்காக வேணாலும் சம்மதம் சொல்லி இருக்கலாம். கல்யாணம் பண்ணப் போறது என்னைத்தானே. இருடா பார்த்துகிறேன்” கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தையே முறைத்தவள் பாரதியோடு பேசியல் செய்து கொண்டாள்.
பேசியல் செய்யவே வீட்டுக்கு வரவழைத்த விக்ரம் கல்யாணப்பட்டு, நகைகளை மட்டும் வெளியே சென்று வாங்க விடுவானா? தேவையான எல்லாம் வீட்டுக்கே வந்து சேர்ந்திருக்க, மோகனா அவளுக்கு என்ன தேவையோ அதை பார்த்துப் பார்த்து எடுத்ததோடு விக்ரம் பாரதிக்கு எடுத்தவைகளை அவளுக்கு திணிக்காத குறையாக கொடுக்க, மோகனா திக்குமுக்காடும் அளவுக்கு கேள்விகள் கேட்பாள் பாரதி. பாரதியை சாமர்த்தியமாக சமாளிப்பதற்காக அடுக்கடுக்காக காரணங்களை கூறினால் பாரதி வேறு சந்தேகமாக பார்த்து வைப்பாள்.
“இவங்கள சாமளிக்குறதுக்குள்ளேயே என் உசுரு போகுது. இதுல அவனை எப்படி சமாளிக்கப் போறேனோ” தன்னையே கடிந்துகொள்பவள் சாந்தியை பாவமாய் பார்ப்பாள்.
சாந்தி சொன்னால் பாரதி மறுபேச்சின்றி அமைதியாவாள்.
பாரதியை சமாளித்தே ரகுராமை மறந்த மோகனா தனக்குத்தான் திருமணம் என்பதையும் மறந்து எதோ விழாவுக்கு தயாராவது போல் தான் பம்பரமாக சுழன்றாள்.
பாரதியோடு மணமேடைக்கு செல்லும் வரையில் அவள் மனம் சஞ்சலம் கொள்ளவில்லை. மணமேடையை நெருங்க நெருங்க மோகனாவின் மனம் அடிக்க ஆரம்பிக்க, மந்திரம் ஓதும் ரகுராமை பார்த்ததும் அவள் இதயத்துடிப்பு அவளுக்கே கேக்கலானது.
இவளை பார்த்ததும் அவனோ பல வருடங்கள் காதலித்த காதலியை சந்திப்பது போல் கையசைத்து புன்னகைத்தான்.
மின்னலை போல் அவன் புன்னகை முகம் அவள் மனதை தொட்டு இதயத்தில் பதிந்து போனது.
அக்கணமும் அவன் பேசாதது ஞாபகத்தில் வரவே அவனை முறைக்கலானாள். அவள் மனம் கொஞ்சம் சமன்பட்டது.
“ஆகா முறைக்குறாளே. இவளை எப்படி சாமாதானப்படுத்துறது?” தான் மோகனாவிடம் பேசியதை எண்ணி முறைப்பதாக எண்ணினான் ரகுராம்.
ரகுராமுக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லாததால் ஆளவந்தானின் வீட்டிலையே சடங்குகளை செய்யலாமா என்று சாந்தி கேட்டிருக்க, இரண்டு வீட்டில் சடங்குகளை செய்தால் வீண் அலைச்சலென்று ரகுராம் மறுக்கவில்லை.
சடங்குகள் செய்யும் பொழுது இன்முகமாகத்தான் இருந்தாள் மோகனா.
எல்லா சடங்கும் முடிந்த பின் ரகுராமை கண்டு கொள்ளாமல் சாந்தி தேவியின் அறைக்குள் புகுந்துகொள்ள, அவன் வாசலில் அம்போ என விடப்பட்டான்.
அவனை கவனிக்கும் மனநிலையில் விக்ரம் இல்லை. இவனோடு இன்முகமாக பேச ஆளவந்தானோடும் சுமூகமான உறவும் இல்லை.
சாந்தியோ இரு ஜோடிகளுக்கு சாந்தி மூகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்க, அடிக்கடி சாந்திதேவி மட்டும் வந்து ஏதாவது வேண்டுமா என்று கேட்டுவிட்டு செல்வாள். பேந்த பேந்த முழிப்பவன் அசௌகரியமாக புன்னகைப்பான்.
எவ்வளவு நேரம்தான் தன்னை முறைத்தவாறு அமர்ந்திருக்கும் ஆளவந்தானை பார்த்துக் கொண்டிருப்பான்? மெதுவாக எழுந்து தோட்டத்துப்பக்கம் நடக்கலானான்.
மாலை தென்றல் இதமாக மேனியை தடவிவிட்டு செல்ல, மோகனாவை இதே வீட்டில் முதன் முதலாக சந்தித்த நாளும் ரகுராமின் கண்களுக்குள் அழகாக விரிந்தது.
விக்ரமோடு வீடு வந்தவனின் கண்களில் படிநெடிகிலும் பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடும் குட்டி மோகனா விழுந்தாள். பொம்மைகளோடு பொம்மைகளாக இருந்தவள் அன்றே அவன் நெஞ்சில் ஓவியமாக பதிந்துப்போக அவனே சென்று அவள் விளையாட்டில் ஐக்கியமானான்.
விக்ரம் மோகனாவோடு விளையாடினாலும் பொம்மைகளை வைத்து விளையாடுவதில்லை. தன்னோடு விளையாடும் ரகுராமை மோகனாவுக்கு பிடித்தது மட்டுமன்றி அவனோடு நன்றாகவே ஒட்டிக் கொண்டாள்.
ஞாயிறு விடிந்தால் போதும் ரகுராம் வரும்வரையில் காத்துக் கொண்டிருப்பவள் நாளாக, நாளாக விக்ரம் மற்றும் ரகுராமோடு ஊர் சுற்றக் கிளம்புவாள்.
விக்ரமிடம் எவ்வளவு உரிமை எடுத்துக்கொள்வாளோ அவ்வளவு உரிமையும் ரகுராமிடம் எடுத்துக்கொள்ளும் மோகனா அவன் “அண்ணா” என்று அழைக்க சொன்னதும் “நான் இவனையே அண்ணா என்று அழைக்க மாட்டேன். உன்ன எதுக்கு கூப்பிடனும்” என்றுதான் முதலில் மறுத்தாள்.
அவள் வயதுக்கு வந்தபின் ரகுராம் காட்டிய ஒதுக்கத்தில் தன் மனதை உணர்ந்துக்கொண்டவள் அவன் விலகி நிற்பது பிடிக்காமல் தான் அவனிடம் கடுமையாக நடந்தும் கொண்டாள்.
“டேய் உன்ன உள்ள வரவாம்” பழைய நினைவுகளில் இருந்த ரகுராமை ஆளவந்தானின் கடுமையான குரல் மீட்டுக் கொண்டு வந்திருக்க,
“மாப்பிள்ளை என்ற மரியாதை கூட கொடுக்க மாட்டாரா?” ஆளவந்தானை வெறுப்பாக பார்த்தவன் “ஓஹ்… கூப்பிட்டாங்களா? யாரு உங்க பொண்ணா? ஐயோ தப்பா கேட்டுட்டேனே. என் பொண்டாட்டியான்னு தானே கேட்கணும் மாமா” நான் உனக்கு மருமகன் முன்பு போல் நடத்தாதே என்று மறைமுகமாக கேலி செய்தான்.
தான் எது பேசினாலும் அமைதியாக இருப்பவனுக்கு பொண்ணை கொடுத்து பேச வைத்து விட்டாளே என்று மனைவியின் மேல் கோபம் வந்தாலும் ஆளவந்தான் கோபத்தை ரகுராம் மீதுதான் காட்டினான்.
“யாருக்கு யாருடா மாமா? ஒண்ணுமில்லாத பய. என்ன என் பொண்ண கட்டிக்கிட்டு என் சொத்தையெல்லாம் ஆளலாமென்று நினைப்போ…” அனலாய் கக்கினான் ஆளவந்தான்.
“ஆமா.. இந்த வீடு எவ்வளவு தேறும் என்று பார்த்தேன்” உள்ளுக்குள் கடுப்பான ரகுராமோ “எனக்கெதுக்கு மாமா உங்க சொத்து? எதை கொடுத்தாலும் உங்க பொண்ணுக்கு கொடுங்க. அவ என் பொண்டாட்டிதானே. அவளுக்கு கொடுத்தா என்ன? எனக்கு கொடுத்தது போலத்தான்” பணத்தை தவிர இவர் வாயில் எதுவும் வராதா? எப்போவும் மனிதர்களை பணத்தால் மட்டும்தான் அளவிடுவாரா? என்ற கோபம் வரவே “உன் பொண்ணு என் மனைவி. நீ அவளுக்கு எதை கொடுத்தாலும், அது எனக்கும் சேரும் என்று கிண்டலாக கூறியவன் ஆளவந்தானிடம் மல்லுக்கட்டாமல் உள்ளே சென்றான்.
அவன் நினைத்திருந்தால் உன் சொத்து எனக்கெதுக்கு? நான் தான் சம்பாதிக்கிறேனே. சொந்தமா வீடு கூட இருக்கு. தொழில்சார்ந்தவர்களை தவிர உன்னை யாருக்குத் தெரியும்? என்னை இந்த தமிழ்நாடே அறிந்து வைத்திருக்கிறது என்று பெருமைப் பாடி உன் பொண்ணை தவிர உனக்கும், எனக்கும் எந்த தொடர்பும் தேவையில்லை என்று முகத்தில் அடித்தது போல் கூறிவிடலாம்.
புத்தி உள்ளவர்களிடம் தான் இவ்வாறு பேச வேண்டும்.
ஆளவந்தானுக்கு ரகுராமை இன்று, நேற்று அல்ல அவனின் குழந்தை பருவத்திலிருந்தே தெரியும். ஆளவந்தான் செய்ததற்கு பழிவாங்குகிறேன் என்று ரகுராம் துரும்பைக் கூட கிள்ளி எரிந்ததில்லை. “தன் மீது இவருக்கு இன்னுமா நம்பிக்கை வரவில்லை” என்று ஆளவந்தானை ஆயாசமாக பார்த்தாலும், இப்பொழுது சொந்தமருமகனாகிட்டானே என்று கொஞ்சமாவது நல்ல முறையில் நடத்தலாமே என்ற ஆதங்கம் ரகுராமின் உள்ளுக்குள் கனறவே அவ்வாறு பேசினான்.
விக்ரமோடு அமர்ந்து இரவு உணவை உண்ணும் பொழுது “ஏன்டா பொண்டாட்டி வந்து பரிமாற மாட்டாளா?” என்று வளமை போல் விக்ரமின் வாயை பிடுங்கினான்.
“யாரக் கேக்குற மோகனாவையா?” அவளிடம் நீ இதையெல்லாம் எதிர்பார்க்கவே கூடாது எனும் தொனியில் சீண்டினான் விக்ரம்.
“நான் உன் பொண்டாட்டிய சொன்னேன்” என்று பதில் கொடுத்தான் ரகுராம்.
“என் பொண்டாட்டிய வேலையெல்லாம் வாங்க மாட்டேன். நீ அவளை ஆபீஸ்ல அதிகாரம் பண்ணாம இரு” நண்பனுக்கு கொட்டு வைத்தான்.
“இவன் கிட்ட வாய கொடுத்து வாங்கிக் காட்டுகிறதே என் வேல. இவனே இப்படின்னா? என் பொண்டாட்டி எப்படி இருப்பா?” மோகனாவை மனைவியாக ஏற்றுக்கொண்டதன் விளைவாக “உன் தங்கச்சி” என்று கூறுபவன் இன்று தாலி கட்டிய உரிமையில் முணுமுத்தான்.
ரகுராம் பேசியது விக்ரமின் காதில் விழத்தான் செய்தது. பாரதியை தனதறையில் சந்திக்க போவதை எண்ணி மகிழ்ந்தவனுக்கு ரகுராமை கண்டுகொள்ள நேரமில்லாமல் அவசரமாக உண்டு விட்டு எழுந்தான்.
“பாரதிய பார்த்த மட்டும் பேக்கர் கிடைச்ச பெக்கர் மாதிரி இளிக்கிறான்” ஒருவழியாக இவன் பாரதியை திருமணம் செய்து கொண்டானே என்ற ஆனந்தம் இருக்கவே திட்டியவாறு புன்னகைத்தான்.
ரகுராம் கதவை பார்த்தவாறு மோகனாவின் அறையில் அவளுக்காக காத்திருந்தான்.
சிறுவயதில் அவள் அறைக்கு பலதடவை வந்திருக்கின்றான். அவள் வயதுக்கு வந்தபின் வீட்டுக்கே வருவதையே தவிர்த்திருக்க, இதுதான் முதல் தடவை.
அவள் அறையில் இருந்த பொம்மைகளும், அவள் படிக்கவென இருந்த மேசை, கதிரையும் குட்டிக் கட்டிலும் காணாமல் போய் மூவர் தூங்கக் கூடிய அளவில் பெரிய கட்டில், ஆளுயரக் கண்ணாடி மேசையில் வித விதமான அழகு சாதனப் பொருட்கள் வீற்றிருக்க, அறையே மனம் வீசியது.
அவள் அறையில் நடந்தவைகளை மீட்டிக் கொண்டிருந்தவன் கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தான். மோகனா கையில் பால் டம்ளரோடு உள்ளே வந்தாள்.
இவன் அவளை பார்த்து புன்னகைக்க, அவளோ இவனை கண்டு கொள்ளாது டம்ளரை மேசையில் வைத்தவள் தலை அலங்காரத்தை கலைக்கலானாள்.
“அதானே டம்ளரை கைல கொடுத்து கால்ல விழுந்தா அது மோகனாவாக இருக்க முடியுமா?” இவளிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? என்று அவளை பார்த்தவன் “என்ன பண்ணுறா இவ?” அவளை பார்த்தவன் “இப்போ நான் ஹெல்ப் பண்ணனுமா?” எத்தனை சினிமாவில் நடித்திருப்பான். இரண்டு முதலிரவு காட்ச்சிகள் இருந்திருக்குமா? அந்த அனுபவம் பத்தாதென்று காதலிக்கு ஒன்றென்றால் ஓடி ஓடி உதவி செய்யும் ஹீரோவாக இருந்திருக்கின்றான். மனைவிக்கு உதவி செய்ய மாட்டானா?
ரொமான்டிக்காக இருக்கட்டும் என்று கட்டிலின் அருகில் இருந்த ரோஜாவை வாயால் கவ்வியவாறே அவள் அருகில் மெதுவாக நடந்தான்.
அவன் செய்வதை கண்ணாடியினூடாக கண்டும் காணாதது போல் பார்த்த மோகனா அவன் அவளை நெருங்கும் முன் அங்கிருந்து நகர்ந்து கட்டிலில் ஏறி படுத்துக்க கொண்டாள்.
வட போச்சே என்ற பாவனையில் அவளை பார்த்தவன் மோகனா கோபமாக இருப்பதால் அவளை சமாதானப்படுத்த எண்ணி சிறு வயதில் அவள் பாடும் ரைம்ஸை பாடலானான்.
“இவனுக்கு இது கூட ஞாபகம் இருக்கா?” ஆச்சரியம் எட்டிப் பார்த்தாலும் கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு தூங்குவது போல் பாசாங்கு செய்யலானாள்.
“ஆகா… பாட்டுப் பாடியும் கோபம் போகலையா? என்ன சொன்னா இவ கோபம் போகும்?” என்று சிந்தித்தவன் குரூரமாக புன்னகைத்து விட்டு “மோகனாம்பாள்” என்ற அவள் முழுப்பெயரை கத்தி அழைத்தான்.
திடுக்கிட்டு துள்ளிக் குதிக்காத குறையாக கட்டிலை விட்டு தாவி இறங்கியவள் ரகுராமின் வாயை பொத்த முயன்றவாறே அவனை அடிக்கலானாள் மோகனா எனும் மோகனாம்பாள்.
தனக்கு எதுக்கு இப்படியொரு பழமையான பெயரை வைத்ததாக தேவியிடம் மல்லுகட்டுபவள் தன்னை மோகனா என்று அழைக்குமாறு வீட்டில் இருப்பவர்களுக்கு உத்தரவிட்டிருந்தாள். சிறு வயதில் விக்ரமோடு சண்டையிட்டு முறுக்கிக் கொண்டிருப்பவளை முழுப்பெயர் கூறி அழைத்து விக்ரம் வெறுப்பேத்த, அவனை அடிக்கத் துரத்தும் மோகனாவை சமாதானம் செய்வது ரகுராமின் வேலை.
இன்று அவனே அழைக்கவும் கோபம் வந்தது மட்டுமல்லாது, அழைக்காதே என்று அவனை அடக்க முயன்றவளை தன் “கைக்குள் சிறையெடுத்தவன் “என்ன பேச மாட்டியா? கோபமாக இருந்தாலும் பேசணும். குடிச்சா மட்டுமல்ல. கோபத்திலும் சில நேரம் உண்மை வெளிய வரும்” இவன் அவளை அதிகாரம் செய்யலானான்.
“நான் எதுக்கு உன்கிட்ட பேசணும்? உன் ப்ரெண்ட்டு பேச்ச மீற முடியாம என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டியே. போ… போய் அவன் கூடவே குடும்பம் நடாத்து” அவன் தோளில் லாவகமாக கைகளை கோர்த்தவாறு கூறினாள்.
“அய்யய்யோ மீண்டும் மீண்டுமா? பத்து வருஷமா அவன் கூடத்தானே குப்பை கொட்டினேன். அவனை இனிமேல் பாரதி சமாளிக்கட்டும். நாம நம்ம வாழ்க்கையை பார்க்கலாம்” மெதுவாக அவள் இதழ் நோக்கி குனிய, அவன் வாயில் அடித்தாள் மோகனா.
“பொம்பள சொக்கு கேக்குதா? நீ என்ன லவ் பண்ணியா என்ன நீ முத்தம் கொடுத்தா வாங்கிக்க?”
அன்னைக்கி கொடுத்தப்போ அமைதியாக அனுமதிச்சியே. இன்னைக்கி புருஷன் என்ற உரிமையில்லை கொடுக்கிறான். கசக்குதா? அவள் மனசாட்ச்சி காறித்துப்ப. “நானும் தான் கொடுத்தேன். இவன் ஆழ்ந்து அனுபவிக்கலையா? அது கல்யாணத்துக்கு முன் இது கல்யாணத்துக்கு பின்” மனசாட்ச்சியை அடக்கினாள்.
“லவ் பண்ணலையா? லவ் பண்ணாமாத்தான் உன்ன கல்யாணம் பண்ணிகிட்டேனா?” தன்னையும், தான் நடந்துகொண்ட முறையையும் மோகனா புரிந்து வைத்திருக்கின்றாள் என்ற எண்ணத்தில் ரகுராம் பேச, முறைக்கலானாள்.
“அன்னைக்கி இதே வீட்டுல நின்னு தானே! ‘நாம எப்போ லவ் பண்ண ஆரம்பிச்சோம்? நான் எப்பயாவது உன்ன லவ் பண்ணுறேன்னு சொன்னேனா? இல்ல கல்யாணம் பண்ணுவேன் என்று உன் கூட ஊரைச் சுத்தினேனா?’ இன்னும் எதோ கேட்டியே…” யோசிப்பது போல் பாவனை செய்தவள் “ஆ… ‘என்னால நீ கர்ப்பமா இருக்கிறியா என்ன?’ அப்படித்தானே கேட்ட? லவ்வே பண்ணலையாம் இதுல புள்ள வரம் மட்டும் கொடுப்பாராம். மூடிக்கிட்டு போய் தூங்கு” சட்டென்று அவளை தள்ளி விட்டவள் மீண்டும் கட்டிலில் ஏறி தூங்க முயன்றாள்.
விக்ரம் மோகனாவை திருமணம் செய்ய சம்மதம் கூறியதும், காதலை சொல்ல என்னவெல்லாம் திட்டம் போட்டான். ஏன் சொல்ல முடியாமல் போனது என்று இவளிடம் கூறினாலும் புரிந்துகொள்ள மாட்டாள் என்று நொந்தவன் அமைதியாக சென்று மறுபக்கம் படுத்துக் கொண்டு முத்துகாட்டியவாறு உறங்குபவளின் முதுகை சுரண்டினான்.
“உன் கூட எனக்கு பேச ஒண்ணுமில்ல. நான் தூங்கணும்”
“நீ கோபமாக இருந்தா என்னால தூங்க முடியாது. சோ பேசி தீர்த்துட்டு தூங்கலாம்” சிறுவயதில் அவள் கோபப்பட்டால் எப்படியாவது சமாதாப்படுத்துபவனுக்கு அவளை சமாளிக்கத் தெரியாதா என்ன?
“சரி என்ன சொல்லணும்?” அவன் புறம் திரும்பியவள் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
அவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன் “எனக்கு உன்ன சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும். அதுக்காக உன்ன சின்ன வயசுல இருந்தே லவ் பண்ணுறேன்னு பொய் சொல்ல மாட்டேன். நீ வளர வளர உங்கப்பாவாள எந்த பிரச்சினையும் வந்துடக் கூடாதுன்னு உன்ன விட்டு ஒதுங்கிப் போனேன். நீ என்ன ஒதுக்கவும், ஒதுங்கவும் ஆரம்பிச்சுப்பாரு அப்போ சொல்ல முடியாத ஒரு வலி இங்க…” நெஞ்சை நீவிக் கொண்டவன் தொடர்ந்தான்.
அப்போ கூட உன்ன லவ்தான் பண்ணுறேன்னு இந்த மரமண்டைக்கு புரியல பாரேன்” மோகனா முறைக்கவும் சிரித்தான்.
நீ வேற சொல்லாம கொள்ளாம அமேரிக்கா போயிட்ட. போன்ல பேசினாலும் திட்டுற. அதனாலயும் நான் என் மனச ஆராயாம விட்டுட்டேன். திரும்ப நீ வந்து தேவதை மாதிரி என் கண் முன்னாடி நின்னியே அப்போ இங்க கொஞ்சம் ஆட்டம் கண்டிருச்சு” நெஞ்சை தட்டியவன் அன்னைக்கி உன்ன கிஸ் பண்ணப்போ கூட பயம் தான் வந்தது. அப்போ கூட உன்ன விட்டுடக் கூடாது என்று தோணல.
அன்னைக்கி அந்த சதீஷ் கூட பேசிகிட்டு இருக்குறத பார்த்தப்போ அப்படியொரு கோவம். எதனாலன்னு யோசிக்க விடாம நீ பாட்டுக்கு கிஸ் பண்ணிட்டு போயிட்ட. மெல்ல மெல்ல எனக்கு உன் மேல இருக்குறது லவ்தான்னு புரிஞ்சது. ஆனா… அத உன்கிட்ட சொல்ல முடியாது. ஏன்னா… விக்ரம் என்ன தப்பா நினைக்கக் கூடாதில்ல”
“ஆமா… உனக்கு என்ன விட அவன்தான் முக்கியம்” அவன் தோளை நன்றாக கிள்ளி விட்டாள்.
வலித்ததை முகத்தில் மட்டும் காட்டியவன் “எங்கப்பாக்கும் உங்கப்பாக்கும் நடுவுல என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியும் தானே. உங்கப்பா ஏதாவது சொன்னா கூட பாதிப்பிருக்காது. எனக்காக உங்கப்பாகிட்டயே சண்டை போட்ட உங்கண்ண ஏதாவது சொன்னா… அது காலத்துக்கும் நெஞ்சுகுத்திகிட்டே இருக்கும்” பெருமூச்சு விட்டான் ரகுராம்.
“அது அவன் சம்மதம் சொன்னதை மறந்து பேசிட்டான். அவன் சம்மதம் சொன்னதும் உனக்கு ப்ரொபோஸ் பண்ணலாம்னு பிளான் பண்ணேன். அதுக்குள்ள அவனுக்கு இப்படியாகிருச்சு” பார்கவியை சந்தித்துப் பேசியதால் தான் விக்ரம் மயங்கி விழுந்து நடந்ததையெல்லாம் மறந்து விட்டான் என்றதை கூறாமல் மறைத்தான் ரகுராம்.
“என்ன ப்ரொபோஸ் பண்ண பிளான் பண்ணியா? பாஸ்ட் நைட் ரூம்ல சொல்லவென்றே பொய் பொய்யா ரெடி பண்ணிட்டு வந்தியா? யாரு எழுத்திக் கொடுத்ததை நீ பேசிகிட்டு இருக்க?” நீ நடிகன்டா… என்று சாடினாள் மோகனா.
இதை சொன்னால் நம்பமாட்டாளென்று அறிந்தமையாளையே சொல்லாமல் இருந்தான். “சரி விடு க்ராண்டா ஒரு ப்ரோபோசல் பண்ணிடலாம்” என்று கண்சிமிட்டினான்.
“நீயும் உன் ப்ரோபோசலும். ப்ரொபோஸ் பண்ண பிளான் பண்ணவன்தான் கல்யாணம் பண்ண போறோம் என்று முடிவு பண்ண பிறகு ஒரு போன் கூட பண்ணாம இருந்தியாக்கும்?” அவன் அன்று பேசியதை விட பேசாமல் இருந்ததுதான் வலித்தது என்று ஏகத்துக்கும் முறைக்கலானாள்.
அவள் எதற்காக கோபம் கொண்டாலென்று உணர்ந்த நொடி “நீ இன்னும் கொழந்தடி… உங்கண்ணன் போல எதுக்கு கோபப்படணுமோ அதுக்கு கோபப்படாம எதுக்கெல்லாமோ கோவத்தை காட்டுற” அவளை தன் புறம் இழுத்தவன் வலுக்கட்டாயமாக முத்தமிட்டான்.