கிட்டதட்ட ‘ நீ வேணாம்’ ‘ எக்கேடும் கெட்டுப் போ… ’ என தலை முழுகிய இரண்டாவது மகள் தான் சாத்வி.
அவளுக்கும் அவளது தந்தைக்கும் பலத்த விவாதம் இன்று. சில நாட்களாய் கணன்று கொண்டிருந்தது இன்றோ நெருப்பாய் பற்றி எரிய துவங்கியது.
“கடவுள் கொடுத்த வரத்தை என்னால் எட்டி உதைக்க முடியாது. போதும் இந்தளவுக்கு என்னை வளர்த்து ‘பெரிய’ ஆளாக ஆக்கினதே போதும்.. இனியும் எனக்காக நீங்க உழைக்க வேணாம்.. என்னை நானே பார்த்துப்பேன்“ பேசி முடித்தவளின் மனதில் ஏதோ பாரம் ஏறிய உணர்வு. அதே நேரம் கூண்டை விட்டு பறக்கும் பறவையின் சந்தோசம். இரு உணர்வுகளையும் சிறிதும் வெளிக்காட்டவில்லை சாத்வி…
‘பெண்கள் அடங்கித்தான் போக வேண்டும், மற்றவர்களை சார்ந்து தான் இருக்க வேண்டும்‘ என பேச்சில்.. செயல்களில் காட்டும் தந்தையை ‘என்ன செய்து சரி செய்வது’ என நாளும் பொழுதும் யோசித்து யோசித்து ஒரு கட்டத்தில் அறவே தவிர்த்துவிட்டாள் தன்னால் ஒன்றுமே செய்யமுடியாது என. இது அவராக உணர வேண்டிய ஒன்று.
ஒரு காகிதத்தில் சாத்வியின் கைகள் ஏதோ ஒரு விலாசத்தை பட படவென எழுதி அதை தன் தாயின் கரங்களில் நிதானமாய் திணித்தாள்
“நான் தங்க போற ஹாஸ்டலோட அட்ரெஸ்” என கூறிவிட்டு, ‘வருகிறேன்’ என்ற சின்ன தலையசைப்புடன்,, அடக்கமாய் இருந்த சிறு பேக்கையும் எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.
இத்தனையெம் நடக்க சங்கரன், ஒரு வார்த்தை கூட பேசாமல் எனக்கென்ன? என்றபடி நின்றிருக்க, மஹாவோ மகள் வீட்டை விட்டு செல்வதை தடுக்க முடியாமல் தவிர்த்தார்.
இதோ கல்லூரி படிப்பு முடித்து, கையோடு வேலையையும் உறுதிபடுத்தி கொண்டவள், இந்த சாத்வி. ‘என்னை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும்’ என்ற உறுதி, ஆணவம் சாத்வியின் கண்களில் தெளிவாய் தெரிந்தது.
ஆணவம் ஆண்களுக்கு மட்டும் உரியதென்றாலும் பெண்களால் அது போற்றப்படுவதும் இல்லையே….!
பெண்களுக்கான ஆணவம் – வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ‘ தவறான வியூகத்தை கொடுக்கும் ‘
ஆனால் அந்த ஆணவத்தை கவசமாய் அணிந்த பெண்களுக்கு அது பாதுகாப்பு தானே, என்றும் எப்போதும் மற்றவர்களை எளிதாக தள்ளி நிறுத்தும் ஒரு தற்காப்பு ஆயுதம் தானே.
அன்று வீட்டை விட்டு வெளியேறிய சாத்விக்கும் இதே எண்ணம் தான் போலும். சிறிதும் பயமின்றி தன் வாழ்க்கை பயணத்தை அன்றே துவங்கிவிட்டாள்.
வருடங்கள் ஏறியதே தவிர மகள் வரும் வழியை காணவில்லை.
“என்ன சங்கரன் உன் இரண்டாவது மகளை ஆளையே காணோம்.“
“ஏதோ வேலை பார்க்கான்னு சொன்ன.. எத்தனை வருசம் தான் பார்க்குறா… அவளுக்கும் கல்யாணம் பண்ணி பார்க்க உனக்கு ஆசையில்லையா..”
“உன் மூத்த பொண்ணு தான் சொல் பேச்சு கேக்காம போய்டுச்சு… அதுக்காக அதே மாதிரி இரண்டாவது பொண்ணையும் நினைக்கலாமா?”
“எத்தனை வருசத்துக்கு தான் கோபத்தை இழுத்து பிடிச்சு வப்ப… உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற வழியைப் பாருய்யா“
“எந்த பொண்ணுயா எனக்கு கல்யாணம் பண்ணி வைன்னு தானா வந்து சொல்லி இருக்குது.. வயசும் ஏறுதில்லையா..” என ஊரில் இருக்கும் சொந்த பந்தங்கள் அனைவரும் வித விதமாய் சொன்ன ஒரே விசயம் ‘பொண்ணை பெத்துட்ட, அதோட நல்லது கெட்டது எல்லாம் உன் பொறுப்பு ‘ என்பது தான்.
எத்தனை போலீஸ் ஸ்டேஷன் இருந்தாலும் இன்னமும் பஞ்சாயத்து செய்தே பிரச்சனைகளை தீர்த்து ஊர் அடக்குமுறைகளை கையாழும் அழகிய ஊர், பூஞ்சை கிராமம்.
இன்றைக்கு என்ன பஞ்சாயத்து இருக்கு என வாய்க்கு அவல் தேடும் கூட்டத்தில் ‘சாத்வி’ யை பற்றி அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் கேட்காமல் இருந்தால் தான் அதிசயம்..
பின்னே வீட்டையே சுற்றி சுற்றி வரும் பெண்பிள்ளை திடீரென சில வருடங்கள் மாயமானால்… கேட்கத் தானே செய்வார்கள். கேட்டார்கள்.. முதலில் முதுகின் பின்னால் பேசியவர்கள் இப்போது முகத்தின் முன்னேயே கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
விதவிதமாய் கேள்வி கேட்ட அனைவருக்கும் சங்கரன் சொன்னது என்னவோ ஒரே பதில் தான் “வேலை பார்க்கிறாப்பா.. கொஞ்ச நாள் பார்க்கட்டும்” என சமாளித்து வந்தார்.
அவள் இருக்கும் இடம் தான் தெரியும்.. மற்ற எதுவும் அவளை பற்றி தெரியாது என சொன்னால் காறி துப்பிவிடுவார்களே
“நீ எல்லாம் ஒரு அப்பனா… ” என முகத்திற்கு நேராக கேட்டாலும் தப்பில்லை என சங்கரனுக்கே தோன்றியது.
சில வருடங்களாய் இளைய மகளின் நடமாட்டம் அவர்கள் ஊரில் இல்லாது போகவே “இரண்டாவது பொண்ணும் சரியில்லை போல” என சங்கரின் முகத்திற்கு முன்பே பேச இதற்கு மேல் பொறுத்திருக்க முடியாது.. என அவள் மேல் இருந்த வெறுப்பை ஒரு புறமாய் ஒதுக்கினார்.
‘இவளையாவது ஊர் மெச்சுற வகையில் கல்யாணம் பண்ணி கொடுத்தா தான் மரியாதை… ’ என சாத்வியை தேடிக்கொண்டு கிளம்பினர் தன் மனைவியோடு..
கணவரின் கோபத்தை தாண்டி ஒன்றும் செய்யமுடியாத.. செய்ய தயங்கும் சாதாரண பெண் அவளின் அன்னை மஹா..
அதையும் மீறி ‘தன் பெண் தைரியமானவள், கையில் வேலையோடு தான் போகிறாள். சங்கரனிடம் படும் பாடிற்கு கண் காணாத இடத்தில் இவள் நிம்மதியாய் இருந்தாலே போதும்’ இந்த எண்ணம் தான் அவரின் அமைதிக்கு மற்றொரு காரணமாய் இருந்தது.
ஆனாலும் குற்றம் ஒருவர் செய்திருக்க, தண்டனை வேறொருவருக்கா? மூத்த மகள் செய்த தவறுக்கு, இளைய மகள் அனுபவித்த தண்டணைகள் தான் எத்தனை?
“ பொறுப்புள்ளவர்களுக்கு தான் பெண்பிள்ளை”
“பொறுப்பில்லாதவருக்கு கிடைத்தால்… நம் நிலைமை தான்” எப்போதுமே மஹாவின் மனதில் எப்போதுமே உதிக்கும் ஓர் எண்ணம் இது தான்.
மனம் என்ற ஒன்று எப்போதும், எந்த நேரமும் சாத்வியின் நினைவில் இருந்தாலும் மஹா வெளியில் காட்டிக் கொள்வதில்லை.
“கோபத்தில் செல்பவள் எங்கே செல்ல போகிறாள்” ‘மீண்டும் இங்கு தானே வந்தாக வேண்டும்’ என்ற தைரியம். அதைவிட ‘தப்பான வழிக்கு செல்லும் அளவிற்கு நான் பிள்ளை பெறவில்லை’ என்ற அசைக்க முடியாத சாத்வியின் மீதான நம்பிக்கை தான் முழு காரணம், இது சங்கரனின் எண்ணம்.
சொந்த ஊரில் இருப்பவர்களே சாத்வியை பற்றி கேட்கும் போது, தங்கள் சொந்த பந்தங்களும் கேட்க தானே செய்வார்கள். ‘நெருங்கிய சொந்தத்தில் இருந்து சாத்விக்கு வரண் ஒன்றும் வந்திருக்க’ அதை கப்பென பிடித்து கொண்டார் மஹா. சொந்தங்கள் பேச ஆரம்பிக்கும் முன்பே சங்கரனிடம் பேச ஆரம்பித்திருந்தார் மஹா.
“சாத்விக்கு.. நிம்மதியான வாழ்க்கையை தான் கொடுக்காமல் போய்ட்டோம்.. இனியாவது நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கனும், ஒரு நல்ல பையன் கையில் பிடிச்சு கொடுக்கும்” கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அடிக்கடி சங்கரனின் காதுகளில் போட்டு கொண்டே இருப்பார் மஹா. ஆனால் வேறு வேறு வார்த்தைகளை கோர்த்து..
அப்போதெல்லாம் மஹாவின் பேச்சில் அசையாத சங்கரன், ஊராரின் பேச்சில் சற்று அசைந்து தான் கொடுத்தார்.
இன்றைய கலி உலகில் யார் தனக்காக வாழ்கிறார்கள், அடுத்தவர் என்ன நினைப்பாரோ, என அடுத்தவரின் ரசனைகேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் மனிதர்களில் சங்கரும் ஒருவர்.. மனையாளின் சொல்லுக்கு செவி சாய்க்காதவர் ஊராரின் சொல்லுக்கு செவி கொடுத்தார்…
தவிர அவரால் ஒப்புக கொள்ளவே முடியாத ஒரு விஷயம் தன் பிடிவாதம் தகர்ந்ததை தான், இப்போது வரை ஒரு நாளும் ஒப்புக்கொண்டதே இல்லை.
வயது ஏற ஏற, பிடித்து வைத்திருந்த பிடிவாதமும் தகர்ந்து, இரண்டு மகள்களையும் எண்ண தொடங்கிவிட்டார் சில வருடங்களுக்கு முன்பே்
மூத்தவளுக்கு எப்படியும் ஒன்னு இல்லை இரண்டு குழந்தையாவது இருக்கும். சின்னவ! இன்னும் கோபமா தான் இருப்பாளோ.. ஒரு தடவையாவது இரண்டு பேரையும் பார்க்கனும் என மனதில் அவ்வப்போது உதிக்கும் ஆசையை நினைத்து இப்போதும் கசந்த புன்னகை…. தன் ஆசைகள் நிறைவேறுமா? என
ஆம் அன்று வீட்டை விட்டு சென்றவளை தேடி இன்று கிளம்பியேவிட்டனர் அவளின் பெற்றோர் சங்கரன்- மஹாலட்சுமி.
இதோ விதி அவர்களை சாத்வியிடமே அழைத்து வந்திருந்தது.
கிளம்பும் முன் திருமணம் சம்பந்தப்பட்ட வேலைகளை முடித்துக் கொண்டு , ஒரு தீர்மானத்துடன் கிளம்பிச் சென்றனர்.. .
அவள் தங்கி இருந்த ஹாஸ்டலின் அட்ரெஸ் மட்டுமே மஹாவிற்கு அவளை பற்றி அறிந்த ஒன்று.. தவிர என்ன வேலை எவ்வளவு சம்பளம், யாருடன் இருக்கின்றாள்.. இத்யாயி…இத்யாயி.. இப்படி எதுவுமே அவர்களுக்கு தெரியாது.
இப்போது வருவாள், அடுத்த சில மாதங்களில் வருவாள், என காத்திருந்த மஹாவிற்கு பெருத்த ஏமாற்றம் தான்.
ஒரு புறம் வருடங்கள் கடந்தும் வரவில்லை என்ற ஆதங்கம், மறுபுறம் ‘இவ்வளவு வைராக்கியம் கூடாது இந்த சாத்விக்கு… என்ற கோபம்.
அவள் வரப்போவதில்லை என்பதை தன் பெற்றோருக்கு தன் செயல்களாலேயே ஸ்தீரமாய் உணர்த்திக் கொண்டிருந்தாள் சாத்வி.
எனவே அவளை தேடிச் செல்ல சங்கரன் மஹா இருவரும் ஆயத்தமாயினர்..
இரண்டு பஸ்கள் மாறிய பின்னும், அடைய வேண்டிய ஹாஸ்டல் தூரம் என்பதால் எப்படி செல்வது என ஆட்டோ ஸ்டேண்டில் சாத்வி தங்கி இருக்கும் ஹாஸ்டலை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர்.
பஸ்ஸில் இருந்து இறங்கிய பொழுதே கவனித்துவிட்ட க்ருத்திகா ,ஒரு கையில் ஸ்கூட்டியை பிடித்தபடி அவர்களையே பார்த்திருந்தாள்.. தயக்கத்தை விட பயமே அதிகமாய் இருக்க…. அந்த பயத்தை தகர்த்தது பெற்றோரின் மீதான பாசம்.
ஸ்கூட்டியை அப்படியே நிறுத்தி, அதில் அமர்ந்திருந்த மகளை கையில் பிடித்தபடி.. மெது மெதுவாய் தன் நடையை எட்டிப் போட்டாள்.
அவர்களை நோக்கி முன்னேறியவள் தன் பெற்றோரை எடை போட தவறவில்லை.. அதே கம்பீரத்துடன் தந்தை ஆனால் சற்று நரைத்த தலைமுடியுடன் மங்களகரமாய் இருக்கும் தாய்… ஆனால் சற்று கவலை படிந்த முகத்துடன்.
இருவரிடமும் பேச மனம் ஆசை கொண்டாலும் அவளது மூளை அதற்கு ஒத்துழைக்கவில்லை. அருகில் வந்தவளும், தன் பெற்றவர்களை ‘அம்மா அப்பா’ என அழைக்கும் வழியையும் காணவில்லை.