அத்தியாயம் 26

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

“கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லியவாறே தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தனது கையை உயர்த்தி சைகையும் காட்டினார் புரோகிதர்.

முகம்கொள்ளா புன்னகையில் பாரதியின் கழுத்தில் பொன்தாலியை பூட்டியிருந்தான் விக்ரம்.

அதே மேடையில் அதே முகூர்த்தத்தில் மோகனாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான் ரகுராம். 

ஆளவந்தான் மற்றும் பார்கவி முறைத்துக் கொண்டிருக்க மற்றவர்கள் ஆனந்தமாக திருமணத்தில் கலந்துக்கொண்டிருந்தனர்.

பாரதிக்கு நடப்பது கனவா? நிஜமா? என்ற குழப்பம்.

மருத்துவமனையில் விக்ரமை பார்த்த பொழுது தான் என்ன செய்ய விழைந்தோம் என்பதே அவள் புத்தியில் உரைத்தது.

அன்று விக்ரம் அவளை சந்தேகப்பட்டு பேசிய பின் இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால், பாரதியின் மனம் சஞ்சலப்பட்டிருக்காதோ என்னவோ. விக்ரம் வீட்டுக்கு வந்து, சென்ற பின் அவள் மனம் மீண்டும் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்த நிலையில் அவனை பார்த்ததும் குற்ற குணர்ச்சியில் துவண்டாள்.

விக்ரமோ அவள் மீது கோபம் கொள்ளாமல் சூழ்நிலையை புரிந்துகொண்ட பேசிய நிம்மதியில் அவன் நெஞ்சின் மீது கதறியவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. அது விக்ரம் இல்லாத வாழ்க்கையை அவளால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது என்பதே.

“கார்த்தி உன் பொண்டாட்டிய பார்த்துக்க நான் என் மருமகள எங்க வீட்டுக்கே கூட்டிட்டு போறேன்” என்ற சாந்தி பதில் எதிர்பார்க்காமல் கவியையும் அழைத்துக் கொண்டு வீடு வந்தாள்.

வண்டியில் மயான அமைதி நிலவியது போதாதென்று வண்டியை விட்டிறங்கிய விக்ரம் அவளோடு எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட, சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற மட்டும் பொய்யுரைத்தானா? கோபமாக இருக்கின்றானா? அவன் மனதில் என்ன ஓடுகிறது என்று பாரதியால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

சாந்தி நான்கு முறை “உள்ள வா” என்று அழைத்த பின்தான் சுயநினைவுக்கு வந்தவளாக உள்ளே சென்றாள் பாரதி.

அவளுக்கான அறையை மோகனா காட்ட, கவி எங்கே எனக் கேட்டாள்.

“அம்மா ரூம்ல” என்ற மோகனாவிடம் குழந்தை தன்னோடு தூங்கட்டும் என்று கூற முடியாமல் சாந்தியை தேடிச் சென்றாள்.

“போ… போய் நிம்மதியாகத் தூங்கு. கவி கண்விழிச்சா நான் பாத்துக்கிறேன்” அவள் மனநிலையை உணர்ந்து துரத்தினாள் சாந்தி.

 அவளுக்கு கொடுக்கப்பட்டது விக்ரமின் அறை. அவன் தான் வீட்டில் தங்க மாட்டானே. அது அவன் அறை என்று தெரியாமல், அறையை ஆராயும் எண்ணம் கூட இல்லாமல் கட்டிலில் விழுந்தவள் மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை நினைத்து தூக்கத்தை தொலைத்தாள். 

விக்ரமை மறந்து தன்னால் அப்படியொரு முடிவை எப்படி எடுக்க முடிந்தது? அக்காவின் நிலையை பார்த்ததும் தன் வாயாலையே மாமாவிடம் தாலியை கட்டுமாறு கூற எனக்குள் எப்படி தைரியம் வந்தது? மாமா மட்டும் தாலியை கட்டியிருந்தால் என்னவாகியிருக்கும்?  என்றெண்ணியவளின் உடல் உதறியது.

தாலி கட்டிய பின் விக்ரம் வந்திருந்தால் அவனுக்கு எப்படி பதில் கூறியிருப்பேனோ?

“ஆமா… வந்தவன் கல்யாணத்த நிறுத்தினான் தான். ஆனா, என்ன? ஏது என்று ஒரு வார்த்தைக்கு கேட்டானா? எதுக்கு கோபப்படணுமோ அதுக்கு கோபப்பட மாட்டான்” விக்ரமை திட்ட ஆரம்பித்தவள் “ஆமா அவன் எப்படி கரெக்ட்டா அங்க வந்தான்” என்று யோசித்தாள். 

“நீதான் ஆஸ்பிடல் போகும் போது சாந்தி அம்மாக்கு போன் பண்ணி சொன்னியே, அவங்க அவன் கூடத்தான் வந்திருப்பாங்க” அவள் மனசாட்ச்சி எடுத்துக் கொடுக்க, 

“ஆனா… சாந்தி அம்மா மட்டும் தானே உள்ள வந்தாங்க. அவங்க கிட்ட கவிய கொடுத்துட்டுத் தானே நானும் மாமாவும் அக்காவை பார்க்க உள்ள போனோம். அப்போ கூட அவன் வரலையே”

“வண்டிய பார்க் பண்ண போய் இருப்பான்” அவள் மனம் காரணம் கூற,

“எப்படியோ கரெக்ட்டான டைமுக்கு வந்து காப்பாத்திட்டானே” நிம்மதி பெருமூச்சு விட்டவளின் மனமோ “விக்ரம் பேசாததை பார்த்தா வேதாளம் திரும்ப முருங்கை மரம் ஏறிருச்சு போல. உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது” என்றது.

விக்ரம் மருத்துவமனையில் நடந்து கொண்டதையும், வண்டியில் அமைதியாக இருந்ததையும், வீட்டுக்கு வந்த பின் பேசாதையும் எண்ணி யோசித்தவள் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தூங்கியும் போனாள்.

நேரம் சென்றுதான் கண்விழித்தாள் பாரதி. எங்கே இருக்கிறோம் என்று உணரவே அவளுக்கு சில கணங்கள் எடுக்க, நேற்று நடந்தது ஞாபகத்தில் வந்தது மட்டுமல்லாது அந்த அறை விக்ரமின் அறையென்றும் புரிந்தது. அவனுடைய பாலிய வயது முதல் கல்லூரி வயது வரையிலான புகைப்படங்கள் மட்டுமிருக்க, ரகுராமோடு சென்று தங்கிய பின் எடுத்துக் கொண்ட எந்தப் புகைப்படமும் இங்கு இல்லை என்பதும் புரிந்தது.

அறையை சுற்றி முற்றி பார்த்தவள் கண்களில் அவள் குளித்து தயாராக அனைத்து பொருட்களும் இருக்கவே குளித்து விட்டு சாந்தியை தேடி வந்தாள்.

“வாம்மா… முதல்ல சாப்பிடு” கவிக்கு ஊட்டியவாறே கூறினாள் சாந்தி.

மறுக்காமல் அமர்ந்தவளின் கண்களோ விக்ரமை தேடி அலைய, அதை பார்த்த சாந்தி “ஆதி நைட்டே ரகுராம் வீட்டுக்கு போய்ட்டான்” என்றாள்.

“ஓஹ்….” என்ற பாரதி அமைதியாக சாப்பிட்டு விட்டு வெளியே கிளம்ப தயாரானதை பார்த்த சாந்தி “எங்க கிளம்பிட்ட?” கொஞ்சம் அதட்டலோடு கேட்டாள்.

“அக்காவை பார்க்க, என்ன ஆச்சோ தெரியல. மாமா தனியா எப்படி பார்த்துப்பாரு?”

சாந்திக்கு பார்கவியின் நிலை நன்றாகத் தெரியும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மூவரும் மாறி மாறித்தான் பார்த்துக்கொள்வார்கள். சாந்தி அவளது குடும்பத்தோடு இணைந்து விட்டாள். அவளிடம் உதவி எதிர்பார்க்க முடியுமா? கார்த்திகேயன் சாப்பிட்டானோ என்னவோ. அக்காவின் நிலை என்னவோ என்றுதான் பாரதி மருத்துவமனைக்கு கிளம்பினாள்.

நேற்று அப்படியொரு சம்பவம் நடந்திருக்க, இன்னும் இவள் மனமிழகுகிறாளே பாரதியை முறைத்த சாந்தி “பார்கவிய பார்த்துக்க ஆதி ஆள் ஏற்பாடு பண்ணிட்டான். நேத்து நடந்த சம்பவத்தால் கார்த்திகேயன் உன் முகத்துல முழிப்பானா? அவனுக்கு கொஞ்சம் டைம் கொடு” கடுடுத்தாள்.

“நீ போனாள் உன் அக்கா உன்னை சும்மா விடுவாளா? வார்த்தையால் குத்திக் கொதறி விடமாட்டாளா?” என்று கூறினாள் பாரதி சாந்தியை சமாதானப்படுத்தி விட்டு கிளம்பிவிடுவாளென்றுதான் சாந்தி இவ்வாறு கூறினாள்.

கார்த்திகேயன் பார்கவியின் மீது வைத்திருக்கும் காதலையும், அவன் சுபாவத்தையும் அறிந்தமையால் சாந்தி கூறியது புரியவே அமைதியாக உள்ளே சென்றாள் பாரதி.  

பாரதியோடு ஆஸ்ரேலியா சென்ற சாந்தி பாரதியை பார்த்துக் கொண்டதை விட, பாரதி காலநிலை மாற்றத்தால் அவதியுறும் பொழுதெல்லாம் சாந்தியை நன்றாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

யாரோ எவரோ, சுப்பு லட்ச்சுமி கோவிலில் சந்தித்தாள். சம்பளமில்லாத வேலைக்காரியாக வைத்துக் கொள்ளலாமென்று எண்ணாது  வேலைக்கு செல்ல முன்பு இவள் சமைத்து வைத்து சாந்தியை ஓய்வெடுக்கும்படி கூறுவாள்.

பாரதிக்காக ஏதாவது வாங்கினால், சாந்திக்கும் சேர்த்தே வாங்குவாள். விடுமுறை தினங்களில் சாந்தியோடு ஊர் சுற்றவும் மறக்க மாட்டாள்.

பாரதிக்கு நேரெதிராகத்தான் பார்கவி இருந்தாள். பாரதி சாந்தியை அம்மாவாக பார்த்தாலென்றால், பார்கவி வேலைக்காரியை விட மோசமாக நடத்தினாள்.

பிணியில் அவதியுறுபவள் என்று சாந்தியும் பொறுத்துத்தான் போவாள்.

கார்திகேயனுக்கே பாரதியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பார்கவி கார்திகேயனிடம் பேசுவதை கேட்ட பொழுதும் குழந்தையை எண்ணியும், கணவனை எண்ணியும் மட்டுமன்றி யாரையோ காதலித்து மனதளவில் துவளும் தங்கையும் எண்ணி நோயால் வாடுபவள் தன்னையே வருத்திக் கொள்வதாக கருதினாள்.

பாரதி மற்றும் கார்த்திகேயன் வேலைக்கு சென்றால் பார்கவிக் கூடவே இருக்கும் சாந்தி பார்கவியின் உண்மையாக முகத்தையும், எண்ணத்தையும் கண்டுகொண்டாள். பாரதியிடம் அல்லது கார்திகேயனிடம் கூறினால், தன்னை நம்புவார்களோ! மாட்டார்களோ! தன்னால் இந்தக் குடும்பத்தில் பிரச்சினை வேண்டாம் என்பதற்காக மட்டுமன்றி பார்கவி இல்லையென்றால் கவிக்காக பாரதியும், கார்த்திகேயனும் சேர்ந்தால் நல்லது என்றெண்ணியே அமைதியாக இருந்தாள்.

பார்கவி கார்த்திகேயனை பாரதியை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதும் சாந்தியே பாரதியிடமும், கார்திகேயனிடம் பேசியிருக்கின்றாள். அவர்கள் மனது அவளுக்கு நன்றாகவே தெரியும். சாந்தி பேசியதை அறிந்து பார்கவி சாந்தியை திட்டியது தனிக்கதை. தான் பேசியதால் தான் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும். சாந்தி பேசி மனம் மாறி இந்தத் திருமணம் நடக்கக் கூடாது என்ற தீய எண்ணம்தான். பார்கவி தங்கள் விஷயத்தில் தலையிடாதே என்று சாந்தியை பேசியது. அது சாந்திக்கு நன்றாகவே புரிந்தது.    

விக்ரம் தன் மகன் என்று அறிய முன்பு மருத்துவமனையில் நடந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால், சாந்தியே கார்த்திகேயன் கையில் தாலியை கொடுத்து கட்ட சொல்லிக் கூட இருப்பாள். தன் மகன் விரும்பும் பெண் பாரதி என்றதும் விக்ரமுக்கு அன்னையாக மட்டும் தான் யோசித்தாள்.   

“இப்போ எங்க கிளம்புற?” பையோடு வந்த பாரதியை வழி மறைத்தாள் சாந்தி.

“ஆபீஸ்க்கு…” இவள் தான் வேலையை விடுவதாக மெயில் அனுப்பியிருந்தாளே. அதை சாக்காக வைத்து விக்ரமை பார்த்து பேசி விடலாமென்று தான் கிளம்பினாள்.

“உன்னைத்தான் என் பையன் வேலையில இருந்து தூக்கிட்டானே. உனக்கு ஆபீஸ்ல என்ன வேல?”

“தூக்கிட்டானா? அப்படின்னா… அவன் கோபமாகத்தான் இருக்கிறானா? காப்பாத்த பொய் சொன்னானா?” பாரதியின் மனம் ஏதேதோ சிந்திக்க,

“என்னம்மா… நீ வேலைல இருந்து அண்ணா, அண்ணிய தூக்கல. ஒரு மாசம் லீவ் கொடுத்திருக்கான். நீ வேற பீதியை கிளப்பாதே” என்றவாறே வந்தாள் மோகனா.

மோகனா அண்ணி என்றது காதில் விழுந்தாலும், பாரதியின் புத்தியை எட்டவில்லை “ஒரு மாசமா? எதுக்கு?” தனக்கு எதுக்கு லீவு?” புரியாமல் பார்த்தாள்.

“வேறு எதுக்கு என் பேத்திக்கு கல்யாணம். கூட, மாட ஒத்தாசைக்கு ஆள் வேணாம்?” அங்கே நடப்பதை அமைதியாக பார்த்திருந்த சாந்தி தேவி வாய் திறந்தாள்.

“ஆமா…. வாங்க என் லவ் ஸ்டோரிய சொல்லுறேன். பியூட்டி பாலர்ல இருந்து ஆள் வருவாங்க. பேசியல் பண்ணிக்கலாம்” என்று பாரதியை இழுத்துச் சென்றாள் மோகனா. 

 பாரதியை வீட்டில் பார்த்ததும் இவள் தான் விக்ரம் விரும்பும் பெண் என்று அறிந்துக் கொண்டு தேவி அன்பாகத்தான் பாரதியை அணுகினாள்.

சாந்தி மாமியாராக மாறி பாரதியை அதட்டுவதை பார்த்ததும் “என்ன கல்யாணமாக முன்னாடியே மாமியார் அவதாரம் எடுத்துட்டியா? நான் கூட உன்ன இப்படி அதட்டல்ல. நீ பண்ணுறது உனக்கே சரின்னு தோணுதா?” மருமகளை கடிந்தாள் தேவி.

“பார்க்கத்தான் படிச்ச, புத்திசாலியா இருக்கா. மத்தவங்க புரிஞ்சி நடத்துகிறேன் என்று அவ உசுரைக் கூட கொடுத்துட்டுத்தான் மறுவேலை பார்ப்பா. இவளை இப்படி அடக்கி வைக்கலானா, உங்க பேரன் காலத்துக்கும் கல்யாணம் பண்ணாம கடைசிவரைக்கும் இருப்பான் பரவாலையா?” என்று மாமியாரை மிரட்டினாள் சாந்தி,

விக்ரமின் வாழ்க்கை என்றதும் தேவி அமைதியானாலும் “ஆனாலும் நீ எனக்கு மாமியாராகாத. நான் தான் உன் மாமியார்” அம்மாஞ்சியா இருந்தவ பல வருடங்கள் கடந்து வந்து என்னையே மிரட்டுகிறாளே என்று மருமகளுக்கு கொட்டு வைத்தாள் தேவி.

“ரொம்பத்தான். அப்போவே என்ன அடக்கி வச்சிருந்தா, உங்க பையன் கூட வாழ்ந்திருப்பேனோ என்னவோ” சாந்தியும் விடாது மாமியாரை வம்பிழுத்தாள்.

புன்னகைத்த தேவி கோபம் கொள்ளவில்லை. நடந்ததை மாற்றவும் முடியாது. நடந்ததை இப்பொழுது பேசி மனக்கசப்பை உண்டு பண்ண வேண்டுமா? என்றுதான் எதுவும் பேசாமல் இருந்தாள். மகனும், மருமகளும் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும் என்று விட்டவள் சாந்தியோடு நல்ல முறையில் நடந்து கொள்வதோடு, மகனையும் மனைவியின் பேச்சைக் கேட்டு நடந்துகொள்ளுமாறு மிரட்டினாள்.

“ஆமா… நான் சொல்லுறது இந்த வீட்டுல எப்போ நடந்திருக்கு?” பாரதியை முறைத்து விட்டு சென்றான்  ஆளவந்தான்.

பாரதிக்கு ஆளவந்தானின் மேல் கோபமெல்லாம் இல்லை. விக்ரமின் தந்தை, சாந்தியின் கணவன் என்று பார்த்தாலே ஒழிய, பேசக் கூட எண்ணவில்லை.

பாரதி இந்த ஒரு வாரமாக மோகனாவோடு அவள் திருமணத்திற்கு தயாராக உதவி செய்தாள். விக்ரமை சந்திக்கவுமில்லை. கவி கூடவே இருந்ததினால் வீட்டுக்கு போக எண்ணவுமில்லை. கார்த்திகேயன் அழைத்து சாந்தியிடம் பேசினான் என்று கவி சொல்லித்தான் தெரிந்துக் கொண்டாள்.

நடந்ததை எண்ணி கார்த்திகேயன் மனவருத்தத்தில் இருப்பான் அவனே அழைக்கட்டும் என்று பாரதி அமைதியாக மோகனாவின் திருமண வேலைகளில் ஈடுபட்டாள். சாந்தி அம்மா இத்தனை வருடங்கள் தங்களுக்காக செய்தவற்றுக்கு கைமாறாக அவளது மகள் கல்யாணத்திலாவது உதவி செய்ய முடிந்ததே என்று நினைத்தாள். 

மருத்துவமனையில் தன்னை மருமகள் என்று விழித்தவள் வீட்டில் வைத்து தனக்கும் விக்ரமுக்கு என்ன உறவு என்று கூட கேளாதவள் விக்ரமின் மூலம் விஷயமறிந்து “உனக்கு இவள் வேண்டாம்” என்று கூறியிருப்பாள். அன்னையின் சொல்லை தட்ட முடியாமல், விக்ரம் என்னை ஒதுக்க முடியாமல் என் கண்முன்னால் வராமல் இருக்கின்றான் போலும். 

விக்ரமுக்கு, எனக்கும் இந்த ஜென்மத்தில் திருமணம் நிகழாது. மோகனாவின் திருமணம் நடந்த பின் கவியை அழைத்துக் கொண்டு கிளம்பலாம் என்றெண்ணினாள்.

மோகனா திருமணம் செய்துக்கொள்ளப் போவது தன் நண்பன் ராமை என்று தெரியாமல், அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம்  இசைந்தாள் பாரதி.

விடிந்ததும் கல்யாணம் என்ற நிலையில் கூட விக்ரம் வீட்டுக்கு வரவில்லை. கேட்டால் பதில் சொல்வார்கள்தான். “ஏன் கேட்டாய்” என்று திருப்பிக் கேட்டால் என்ன பதில் சொல்வாள்? நாளை மண்டபத்திலையே அவனை சந்திக்கலாம். சந்தித்து கூறிக் கொண்டு கிளம்பிவிடலாம் என்று முடிவு செய்தவள் மோகனாவோடு மண்டபத்துக்கு கிளம்பினாள்.

மோகனாவை அலங்கரித்த பாலர் பெண்கள் இவளையும் அலங்கரித்திருக்க, அவள் அணிந்திருந்த புடவையை போலவே ஜரிகை கொண்ட புடவை, நிறம் மட்டும் வேறதாக இருக்க, மனதில் எழும் கேள்விகளை மோகனாவிடம் கண்களாளேயே கேட்டு வைத்தாள்.

“உங்கள விட்டுட்டு நான் எப்படி பேசியல் பண்ண முடியும்?” என்று ஆரம்பித்தவள் தான் பாரதி கேள்வி கேட்க்கும் பொழுதெல்லாம் காரணங்களை கூறி வாயை அடைத்திருக்க, பாரதியால் அவளிடம் எதுவும் கேட்கத் தோணவில்லை.

ஐயர் “பொண்ண அழைச்சிண்டு வாங்கோ” என்று அழைக்கும் வரையில் மோகனா பாரதியை தன்னோடு இருத்திக் கொண்டிருக்க, அவளை அழைத்துக் கொண்டு மணமேடைக்கு சென்றவளின் விழிகளோ விக்ரமை நாலாபுறமும் தேடியலையாலானது. 

மேடை எறியவளின் கழுத்தில் பெரிய ரோஜா மாலையை சாந்தி அணிவித்த பொழுது அவளை கேள்வியாக ஏறிட்டவளை யோசிக்க விடாமல் விக்ரமின் அருகில் அமரவைத்த பின்தான் அவள் அவனையே பார்த்தாள். அவனோ இவளை திரும்பிக் கூட பார்க்காமல், மந்திரம் ஓதுவது தான் முக்கியமாக விடயெமென்று மும்முரம் காட்டினான். 

“என்ன இவன் திரும்பிக் கூட பார்க்க மாட்டேங்குறான்?” மருத்துவமனையில் தான் செய்ய விளைந்த காரியத்தால் இன்னும் கோபமாக இருக்கின்றானா? என்றெண்ணியவளுக்கு தனக்குத்தான் திருமணம் என்ற மகிழ்ச்சிகூட எழவில்லை.

வாழ்க பல்லாண்டு…

கல்யாண வாழ்க்கை நூறாண்டு…

உதயமாகும் புதிய ராகம்…

இசையில் யாவும் புனிதமாகும்…

இனிய வேளையிலே…

சந்தோஷ கவிதை கேள் குயிலே…

நிலவைப்போல…

மனைவி வந்தால்…

இரவும் கூட வெளிச்சமாகும்…

மலர்கள் போல…

மனது கொண்டால்…

கணவன் பெயரும் கவிதையாகும்…

காதலே..ஹோ..ஓ…ஹோ..ஓ…

வாழ்க்கையா….

தோழனும் ஹ..ஆ..ஹ..ஆ…

தோழியா…..

காலம் முழுதும்…

வாழ வேண்டும்…

காதல் உலகை ஆள வேண்டும்…

காதல் செய்த….

ஜோடி எல்லாம்…

கணவன் மனைவி ஆவதில்லை…

கணவன் மனைவி…

ஆன பின்னும்…

காதல் செய்தால் தோல்வி இல்லை…

இதயமே ஹோ..ஓ..ஹோ..ஓ…

இணையவே…..

இருவரும் ஹ..ஆ..ஹ..ஆ…

ஒருவரா….

கூடி வாழ்ந்தால்…

கோடி நன்மை…

குடும்பம் கோயில் ஆகும் உண்மை…

சடங்குகள் நடக்கும் பொழுதுதான் அக்காவும், மாமாவும் இருப்பதையே பார்த்தாள்.

“இனிமேலாவது நீ உனக்காக வாழு” என்று கார்த்திகேயன் கூற, “எப்படியோ நீ நினைச்சதை சாதிச்சிட்ட” என்றாள் பார்கவி. 

“சாரி மாமா…” என்று கார்த்திகேயனுக்கு பதில் கூறியவள், அக்காவை பார்த்து புன்னகை மட்டும் சிந்தினாள்.

பாரதியை பார்கவியிடம் அதிகம் பேசவிடாது, சடங்குகள் செய்ய வேண்டும் என்று சாந்தி அழைத்துக் கொண்டு சென்றதுமில்லாமல், பாரதியோடு இருந்தால், குதர்க்கமாக ஏதாவது பேசிவிடுவாளென்று வீட்டில் நடக்கும் சடங்குகளை தான் பார்த்துக்கொள்வதாகவும் உடம்பு முடியாமல் இருக்கும் நீ உன் வீட்டுக்கு போய் ஓய்வெடு என்று கார்த்திகேயனின் முன்னிலையில் கூறி பார்கவியை வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்.