தான் நினைத்ததை ரகுராம் கூறிவிட்டு சென்ற பின் பலவாறு யோசிக்கலானாள் பாரதி.
உண்மைதான் ரகுராம் கூறுவது உண்மைதான். விக்ரம் நடந்ததை மறந்து பேசுகிறானென்றால், நானும் அவனை புரிந்துக்கொள்ளாமல், அவனை விட்டு விலகிச் சென்றால் சரியா? விக்ரம் கூடவே இருந்து அவன் மனதை வெல்ல வேண்டாமா? அவனுக்கு உறுதுணையாக நிற்க வேண்டாமா? தன்னையே கேள்விக் கேட்டுக் கொண்டாள்.
அதுதான் விக்ரம் உன்னை மீண்டும் நெருங்கி வந்து விட்டானே என்று ஒரு மனம் கூற, மீண்டு மறந்து பேசி விடமாட்டானா? என்று கேலி செய்தது மறு மனம்.
மறந்தா கூடவே இருந்து ஞாபகப்படுத்துவேன் என்று சொல்லிக் கொண்டவளுக்கு திருமணம் நிகழ அவன் வீட்டார் சம்மதிக்க வேண்டாமா? என்று மீண்டும் அவள் மனம் கேள்வி எழுப்ப, சம்மதம் வாங்குவது அவன் பொறுப்பு. என்ன செய்கிறானென்று பாப்போம் என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டாள்.
பாரதிக்குள் இருக்கும் அச்சம் அவளை குழப்புகிறது என்றால், இவள் அக்கா வேறு இவள் வாழ்க்கையில் விளையாட திட்டமிட்டிருந்தாள்.
தூக்கம் வராமல் உருண்டு புரண்டவள் பார்கவியின் அறையில் சத்தமும், நடமாட்டமும் கேட்கவே அங்கே விரைந்தாள். மூச்சுத்திணறலில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த பார்கவியை கார்த்திகேயன் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆயத்தமாக, பதறிய பாரதியும் கவியை தூக்கிக் கொண்டு கூடவே சென்றாள்.
எதிர்பாராத நேரத்தில் விக்ரம் வந்தது, அடுத்து என்ன நடக்கும் என்ற பதட்டத்தில் இருந்த பார்கவி அன்றிரவு மாத்திரைகளை உட்கொள்ள மறந்தாள். கார்த்திகேயன் “மாத்திரை போட்டாயா?” என்று எடுத்துக் கொடுக்க முயல, எதோ ஞாபகத்தில் போட்டதாக கூறியிருக்க, மாத்திரை போடாததால் அவளே இழுத்துக் கொண்டதுதான். அது அவளுக்கே தெரியும். உயிர் போகும் பிரச்சினை இல்லையென்று அறிந்து போதிலும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள எண்ணி அமைதியாக மருத்துவமனைக்கு சென்றாள்.
பார்கவியின் உடையும், உடைமைகளும் கலைக்கப்பட்டு கார்த்திகேயனின் கையில் கொடுக்கப்பட, உடனடியாக பார்கவி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டாள். மனைவி கண்விழித்தால் உடனே அணிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கார்த்திகேயன் தாலியை மட்டும் தனது சட்டை பையில் பத்திரப்படுத்தினான்.
பார்கவியின் நிலைமை கொஞ்சம் சீரானதும், அவளை காண மருத்துவர் அனுமதித்தார்.
பிறந்ததிலிருந்தே பார்கவிக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் இருந்த போதிலும் ஒவ்வொரு தடவையும் அவளை மருத்துவமனை கட்டிலில் பார்க்கும் பொழுது உடைந்து போவான் கார்த்திகேயன்.
முதல்தடவை அவள் பிணியில் படுத்த பொழுது எவ்வளவு பதறினானோ, எவ்வளவு கவலையடைந்தானோ அதே நிலையில் கார்த்திகேயன் உள்ளே நுழைய, பாரதியும் கண்களில் கண்ணீரோடு பார்கவி அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.
அவர்களை பார்த்து சோபையாக புன்னகைத்த பார்கவியின் கண்கள் கார்த்திகேயனின் வெள்ளை சட்டைப்பையினுள் திணிக்கப்பட்ட மஞ்சள் தாலியின் மேல் நிலைக்கவே அவளது குறுக்குப் புத்தி உடனடியாக ஒரு திட்டத்தை போடலானது.
“நான் உசுரோட திரும்பி வரமாட்டேன். கவிய நீ தான் பார்த்துக்கணும். மாமாவை பார்த்துக்க… பாரு. அவருக்கு நம்மள விட்டா யாருமில்ல” கண்ணீரோடும், மூச்சுத் திணறலோடும் பார்கவி பேச,
“நான் பாத்துக்கிறேன். நான் பாத்துக்கிறேன். நீ பேசாத. பாரு மூச்சுத்தி திணறுது” அக்கா படும் அவஸ்தையை பார்த்து பொறுக்க முடியாமல் அழுதவாறே அவளை சமாதானப்படுத்த முயன்றாள் பாரதி.
“இல்ல. இல்ல. நான் நம்ப மாட்டேன். நான் இல்லனா நீ மாமாவை விட்டுப் போய்டுவ. அப்பொறம் கவிய யார் பார்த்துக்கிறது? நீ மாமா கூடவே இருந்தா தான் கவியையும் பார்த்துப்ப. மாமாவையும் பார்த்துப்ப” என்றவள் கார்த்திகேயனை தன் புறம் இழுத்து அவனது சட்டைப்பையில் இருந்த தாலியை எடுத்தவள் அவன் கையில் திணித்தவாறே பாரதியின் கழுத்தில் கட்டுமாறு மன்றாடினாள்.
கார்திகேயனோடு பேசினாலே பொறாமையில் பொங்கி எழும் பார்கவி, விக்ரமின் விஷயமறிந்த பின் மட்டுமல்ல, தான் இல்லையென்றால் குழந்தையின் நிலை என்னவாகுமோ என்ற அச்சத்திலும் தான் பாரதியை ஏற்றுக் கொண்டதாகத்தான் கார்த்திகேயனும், பாரதியும் நினைத்தனர். தங்கையை புரிந்துக்கொண்ட பின் அன்றாடம் பார்கவி சொல்வதுதானேயென்று கார்த்திகேயனும் பாரதியும் அதிர்ச்சியடையவில்லை. மாறாக அவளை சமாதானப்படுத்தவே முயன்றனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளாவிடின் தான் நினைத்தது என்றுமே நிறைவேறாதென்று பார்கவிக்கு நன்றாகவே புலப்பட்டது.
“இது என்னோட கடைசி ஆச. இதை கூட நீ நிறைவேத்த மாட்டியா?” கண்ணீரோடு தங்கையை ஏறிட்டாள் பார்கவி.
“கடைசி ஆசைன்னு ஏன் பேசுற கவி. கொஞ்சம் அமைதியாக இரு” மனைவியை அதட்டினான் கார்த்திகேயன்.
“நீங்களும் என்ன புரிஞ்சிக்கவே மாட்டேங்குறீங்க. பாருவைத்தான் கவி அம்மாவா நினைக்கிறா. அவளை விட்டா நம்ம பொண்ண யாரு பார்த்துப்பாங்க. சொல்லுங்க? எனக்காக வேணாம் கவிக்காகவாவது என் ஆசைய நிறைவேத்துங்க” கெஞ்சினாள்.
கார்த்திகேயன் இறங்கி வரவேயில்லை. “கவி… பாருக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கு. விக்ரமுக்கு என்ன பதில் சொல்லப் போற? பிடிக்காத ஒரு கல்யாணத்தப் பண்ணிக் கொண்டு பாரு எந்நாளும் கஷ்டப்படணுமா?” மனைவிக்கு பொறுமையாக எடுத்துரைக்க முயன்றான்.
மனைவியின் மனநிலையும், சூழ்நிலையும் கார்த்திகேயனுக்கு புரியாமலில்லை. அவன் மனைவி மேல் வைத்த அளவில்லாத காதல் மனைவியின் இரட்டையென்றானாலும் அவளை ஏற்க மாட்டேன் என்று அவன் மனம் கூறினாலும், மீண்டும் விக்ரம் பாரதியின் வாழ்க்கையில் வராவிட்டால் ஒருவேளை சம்மதிருக்கவும் கூடும். அவளுக்கென்று ஆசை இருக்கிறதே. காதல் இருக்கிறதே. வாழ்க்கை இருக்கிறதே அதில் குறுக்கிடலாமா? என்றுதான் மறுக்கின்றான்.
விக்ரமின் பெயரை கேட்ட உடனே பார்கவிக்கு எரிந்தது. மீண்டும் மூச்சுத்தினறல் ஏற்பட பாரதி மருத்துவரை அழைக்க செல்ல முயல, அவளை கையை விடாது பிடித்திருந்த பார்கவி “என்ன மன்னிச்சுடு பாரு. நான் சுயநலமாக யோசிக்கிறேன்னு நினைக்காத. கவிக்காகத்தான் கேட்டேன். உன் ஆசைத்தான் உனக்கு முக்கியம் என்றால், உன் விருப்பப்படியே செய். உன் சந்தோசம்தான் முக்கியம்” தான் சுயநலமாக கேட்பதாக கூறியவள் நீ தான் சுயநலத்தின் மொத்த உருவம் என்று தங்கையை குற்றம் சாட்டினாள் பார்கவி.
கவியை கைவிட்டால், தான் மரணிக்கும் வரையில் குற்ற உணர்ச்சியோடு தான் இருப்பேன் என்று பாரதியின் உள்ளத்தில் உதிக்க, அக்கணம் விக்ரமை மறந்துதான் போனாள்.
“என்ன அக்கா என் சந்தோசம் என்று பிரிச்சி பேசுற? கவிக்காக என்ன வேணாலும் செய்வேன் என்று உனக்குத் தெரியாதா?” மனதில் இருந்ததை தான் பாரதி கூறினாள்.
அதையே பார்கவி பிடித்துக் கொண்டு “உன் வாய்தான் சொல்லுது. மனசார நீ கவிய உன் பொண்ணு என்று நினைச்சிருந்தா, என் கடைசி ஆசைய நிறைவேத்தி இருப்ப. உன்ன சொல்லி குத்தமில்ல. என்னோட நிலையாலதானே நான் உன்கிட்ட கெஞ்ச வேண்டியிருக்கு” கண்ணீரோடு இருமினாள் பார்கவி.
“அமைதியா இரு கவி… எதுக்கு உன்னையே வருத்திக்கிற?” மனைவியின் கண்ணீரை பொறுக்க முடியாமல் அவளை அமைதிப்படுத்த முயன்றான் கார்த்திகேயன்.
“நான் இல்லனா மாமா இன்னொரு கல்யாணம் கண்டிப்பாக பண்ணிக்கணும். வரவ என் பொண்ண நல்லா பார்த்துப்பாளா? நான் இல்லனா என் பொண்ணு நிலைமை என்னாகுமோ தெரியலையே” கவி எங்கே என்று கேளாமல் அவளை நினைத்து மூச்சுத் திணறலோடு அழுதாள் பார்கவி.
அக்காவின் இந்தநிலையை பார்க்க முடியாமல் “இப்போ என்ன? நான் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா, நீ அமைதியா இருப்பியா?” கண்ணீரோடு கேட்டாள் பாரதி. கவிக்காக மட்டுமன்றி, அக்காவுக்காகவும் மனமிறங்கினாள்.
“பாரு என்ன பேசுற?” மனைவின் ஆசை முக்கியம் தான். ஆனால் பாரதியின் ஆசைக்கும், காதலுக்கும் கார்த்திகேயன் எவ்வாறு பதில் சொல்வது? விக்ரம். அவனிடம் என்ன சொல்வது? பாரதியை மறந்தும், மறவாமலும் காதலிப்பவனுக்கு பதில் சொல்ல வேண்டாமா?
“மாமா என் மேல பாசமா இருக்காருன்னு நெனச்சேன். ஆனா அவர் என் நிலைமையை பத்தியோ, என் பயத்த பத்தியோ கொஞ்சம் கூட பொருட்படுத்த மாட்டேங்குறாரு”
பார்கவிக்கு நன்றாகவே தெரியும் தங்கையை எப்படியாவது சம்மதிக்க வைக்க முடியும், ஆனால் அவள் கணவன் ஒருகாலமும் சம்மதிக்க மாட்டான். அவனை உணர்வுபூர்வமாக மிரட்டக் கூட முடியாது. அவன் சம்மதித்திருந்தால் தானே என்றோ பாரதிக்கும், அவனுக்கும் திருமணம் நிகழ்ந்திருக்கும்.
“வேண்டாம் மாமா. வேண்டாம். நீங்க என் மேல அக்கறை பட்டதும் போதும். அன்பு வச்சதும் போதும். உங்களுக்கென்றொரு வாழ்க்கை இருக்கு. என்ன இப்படியே விட்டுடுங்க. ஆஸ்பிடல்ல இருந்து நான் வீடு வருவேனா, மாட்டேன்னானு தெரியல. குணமானாலும் நான் வரமாட்டேன். கண்காணாத இடத்துக்கு போய்டுவேன்” என்று கணவனை மிரட்டலானாள்.
கார்த்திகேயனுக்கு பார்கவி மீது அப்படி என்ன பாசமோ அவள் விட்டுச் செல்கிறேன் என்றதும் கண்ணீர் சிந்தியவன் “உனக்கு என்னதான்டி பிரச்சினை? எத்தனை முறை சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டியா? நீயும் பாருவும் பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும், எனக்கு என்னைக்குமே நீதான்டி வேணும்” என்றான்.
பார்கவிக்கு அது நன்றாகத் தெரியுமே. பாசம் என்ற ஒன்றால் அவனை கட்டிப் போட்டு காதல் கடலில் மூழ்கடித்தல்லவா வைத்திருக்கின்றாள். அவளை தவிர அவன் வேறு எந்த பெண்ணையும் இந்த ஜென்மத்தில் நினைத்துக் கூட பார்க்க மாட்டான்.
தன் கணவன் அப்படியே இருந்திடக் கூடாது என்பதற்காகவா அவள் தன் இரட்டையை தன் கணவனுக்கு திருமணம் செய்து வைக்க முயல்கிறாள்? அவள் இரட்டை அவளை போலவே இருந்து கொண்டு சுகமாக எல்லா சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பாளாம். நான் மட்டும் ஆசைப்பட்ட எதையும் செய்ய முடியாமல் பிணியில் அவதியுறணுமா? என்னால் செய்ய முடியாத அனைத்தையும் அவள் செய்யும் பொழுது அதை பார்த்துக்கொண்டு இருக்கத்தான் முடியுமா? தனக்கு கிடைக்காத எதுவும் மட்டுமல்ல, தனக்கு கிடைத்த எதுவும் கூட பாரதிக்கு கிடைக்க கூடாதென்று தானே கணவனுக்கு தன் தங்கையை திருமணம் செய்து வைக்க எண்ணினாள்.
வியாதியோடு பிறந்தது என் தவறா? அன்னை என் மேல் பாசமே வைக்காதது இவள் என் கூட பிறந்ததினால் தானே. நான் தனியாக பிறந்திருந்தால் அம்மா என்னை கண்ணும் கருத்துமாக, பாசத்தை பொழிந்து பார்த்துக்கொண்டிருப்பாள்.
பாரதியை திருமணம் செய்து கொள்ளும்படி கார்த்திகேயன் கூறும் பொழுதெல்லாம் கோபத்தில் சிவக்கும் பார்கவி. விக்ரமை விட்டு பாரதி யாரை திருமணம் செய்தாலும் சந்தோசமாக வாழ மாட்டாளென்று புரிய, கணவனின் கூற்றுக்கு ஒத்துதூவாள்.
பாரதி ஆஸ்ரேலியாவில் இருந்தால் அவளை கண்காணிக்க முடியாதென்று குழந்தையை பார்த்துக்கொள்ள முடியாது என்ற காரணத்தை கூறி அவளை தங்களோடு அழைத்தவள், பாரதி மறுத்ததும் கணவனை நச்சரித்து ஆஸ்ரேலியா சென்று பாரதியோடு தங்கியது எதற்காக?
கார்த்திகேயன் அடிக்கடி பாரதியின் திருமணத்தை பற்றி பேசுவதாலும், தன்னை போலவே இருந்தாலும் கார்த்திகேயன் பாரதியை திரும்பிக் கூட பார்பதில்லையென்பதினாலும் கணவனையே பாரதிக்கு திருமணம் செய்து வைத்தால் அவளை கண்காணித்தது போலுமாச்சு, அவள் நினைத்த வாழ்க்கை அமையாதகால் சோகத்திலையே காலத்தை கடப்பால் என்று குரூரமாக திட்டமிட்டவள் குழந்தையை காரணம் காட்டி பாரதியை திருமணம் செய்து கொள்ளுமாறு கணவனை வற்புறுத்தலானாள்.
ஆண்களின் அழகை பற்றியெல்லாம் பார்கவிக்கு கவலையில்லை. விக்ரம் கார்த்திகேயனை விட பணம், அந்தஸ்து என்று உயர்ந்து நிற்க, பாரதிக்கு அவன் கிடைக்கவே கூடாது என்ற வன்மம். தன்னால் குழந்தை கூட பெற்றெடுக்க முடியாது தன்னை விட வசதியிலும், உடல் சுகத்திலும், குழந்தை பெற்று வாழ்வாளா? கூடாதே என்ற பொறாமை. தன்னை போலவே இருப்பவள் தன்னைவிட நன்றாக வாழக் கூடாது என்ற வஞ்சம்.
என்று தங்கை அன்னையோடு கார்த்திகேயன் வீட்டுக்கு வந்தாளோ பார்கவியின் மனதில் அன்றே தங்கை மீது வெறுப்பும், கோபமும் பெருகியிருக்க, நாளாக நாளாக மனதில் வஞ்சத்தை வளர்த்துக் கொண்டிருந்தாள். கூடவே இருந்து குழிபறிக்க வேண்டும் என்பதுதான் அவள் திட்டம். அவள் கார்திகேயனிடம் மாட்டிக்கொள்ளவும் கூடாது. அவனுக்கு ஒரு முகம் மற்றவர்களுக்கு இன்னொரு முகத்தை காட்டியவள் பாரதியிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதும் சுயநலம் தான்.
கார்த்திகேயன் கேட்ட உடன் பாரதி கவியை சுமக்க தயாரானது அக்காவுக்காக என்றால், அந்த எண்ணத்தை கார்த்திகேயன் மனதில் விதைத்தது கூட பார்கவிதான்.
விக்ரமை நினைத்துக் கொண்டிருக்கும் பாரதி குழந்தை பெற்றதை காரணம் காட்டியே திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்ற எண்ணம் பார்கவிக்குள் இருக்க, கார்த்திகேயன் அழைத்து வந்த வாடகை தாய்களிடம் குறையை மட்டுமே கண்டாள்.
“என் குழந்தை என்னை போலவே இருக்க வேண்டும். என்னை போலவே இருந்தால் நல்லது. நம்ம வீட்டு சாயல், நம்ம குணம், நம்ம இரத்தம்” என்று ஏதேதோ பேசி பாரதிதான் தன் குழந்தையின் வாடகைத்தாயாக வேண்டும் என்று கணவனின் மனதில் புகுத்தினாள்.
மனைவியின் எண்ணத்தை புரிந்துகொள்ளாமல், கார்த்திகேயன் பாரதியிடம் புலம்ப, தன் எதிர்காலத்தைக் கூட யோசிக்காமல் பிணியில் இருக்கும் அக்காவுக்காக தன் கர்ப்பப்பையை தியாகம் செய்தாள்.
அதற்கும் கணவனிடம் காய்ந்தாள் பார்கவி. தான் தான் மூலக்காரணம் என்று யாருக்கும், எந்த சந்தேகமும் வரக்கூடாதென்று தெளிவாக திட்டமிட்டு காய் நகர்த்தினாள்.
குழந்தாய் கிடைத்த பின் எங்கே கவி தன்னை விட பாரதியின் மேல் அன்பு செலுத்துவாளோ என்ற அச்சத்தில் பாரதியை கண்டபடி பேசியவள் தங்கையை தன் கணவனுக்கு இரண்டாம் தாரமாக கட்டிவைக்க முயல்வது குழந்தைக்காக என்று கூறினாலும் அதில் மறைந்திருந்தது வன்மம் மட்டும்தான்.
தன்னை போலவே தங்கை இருந்தாலும் கணவன் ஒருநாளும் அவளை திரும்பிக் கூட பார்க்க மாட்டான் என்று உறுதியாக தெரியுமென்பதால் தான் இந்த முடிவு.
பாரதி தன் கணவனை திருமணம் செய்துகொண்டு, விக்ரமை நினைத்துக் கொண்டு கடைசிவரை என் பிள்ளைக்கு ஆயா வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் பார்கவியின் திட்டம். அதற்குத் தானே விக்ரமை பாரதியிடம் நெருங்க விடாமல் செய்ய முயன்றாள்.
குழந்தைக்காக பாரதி மனம் மாறி கார்திகேயனோடு வாழ நினைத்தாலும் அவன் சம்மதிக்க முடியாதபடி தன்னை போலவே இருப்பவளை மணந்தால் தன் கணவன் என்றெல்லாம் தன்னை மறக்க முடியாமல் அவளை நெருங்கவும் முடியாமல் தவிப்பான். தன் கணவன் தன்னை நினைத்துக்கொண்டே வாழ்ந்தது போலவுமாகிற்று, கணவன் இருந்தும் கவனிப்பற்று பாரதியின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிடும் என்பது பார்கவியின் கணிப்பு.
வேண்டா வெறுப்பாக பார்கவி பாரதியை நடாத்திய போதிலே அக்காவுக்கு உதவி செய்யத் துணிந்தவள் பார்கவி கண்ணீரோடு மன்றாடிக் கேட்கும் பொழுது மனம் இளக்காதா? விக்ரம் தன்னை மறந்தாலும் அவனோடு இருப்பேன் என்றவள் அவனை மறந்து அக்காவுக்கு வாக்கு கொடுத்திருந்தாள்.
பாரதி மனமிறங்கிய பின்னும் கணவன் மறுப்பதை பொறுக்க முடியாமல் பார்கவி “சரி அப்போ நான் உங்கள விட்டு நிரந்தரமா போயிடுறேன்” என்று அவள் கையிலும் நெஞ்சிலும் பொருத்தியிருந்த மருத்துவ உபகரணங்களை கழட்ட முயன்றாள்.
“என்ன பண்ணுற?” பதறிய கார்த்திகேயன் “இப்போ என்ன நான் உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கணும். அவ்வளவு தானே. கண்டிப்பா முறையா கோவில்ல வச்சி கல்யாணம் பண்ணுறேன்” இப்போதைக்கு பார்கவியை சமாதானப்படுத்தினால் போதும் என்று பேசினான் கார்த்திகேயன்.
கணவனின் திட்டம் பார்கவிக்கு புரியாமளா இருக்கும்? “என் கழுத்துல ஆஸ்பிடல்ல வச்சிதானே தாலி காட்டுனீங்க? அப்போ சரியென்று பட்டது இப்போ மட்டும் தவறா தெரியுதா? நான் என் கடைசி ஆசையை சொல்லியும் அத நீங்க நிறைவேத்த முடியாது என்று பிடிவாதமாக இருக்கிறீங்க. உங்க இஷ்டம் மாமா. இனிமேல் நீங்க என்ன உசுரோடவே பார்க்க முடியாது” மிரட்டினாள்.
கார்த்திகேயனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
“என்ன மாமா… அக்கா இவ்வளவு சொல்லியும் முரண்டு பிடிக்கிறீங்க? அவளுக்கு ஏதாவது ஆகிடாப் போகுது” தன் வாழ்க்கையையே பணயம் வைக்கிறோம் என்று புரியாமல் அக்காவுக்காக மாமாவிடம் மன்றாடினாள் பாரதி.
மனைவி தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்க மாட்டாள். திருமணம் என்ன விளையாட்டா? இவள் புரிந்து பேசுகிறாளா? புரியாமல் பேசுகிறாளா என்று பாரதியை ஏறிட்டு “இதுதான் உன் முடிவா?” கார்த்திகேயன் கேட்டான்.
அக்காவின் தும்பத்திற்கு முன் எதையும் சிந்திக்கும் மனநிலையில் இல்லாத பாரதியோ கண்ணீரோடு தலையசைத்தாள்.
பெருமூச்சோடு கார்த்திகேயன் பார்கவி கையில் திணித்த தாலியை பார்த்தான்.
அப்பொழுதும் கட்டவா? வேண்டாமா? என்ற போராட்டம்தான் அவன் மனதில் ஓடலானது.
பார்கவியின் மூச்சுத் திணறல் அதிகரிக்க, அக்காவின் ஆசையை நிறைவேற்ற எண்ணி முடிவெடுத்தவளின் கண்களுக்குள் விக்ரம் வந்து நின்றான். “என்ன மன்னிச்சுடு விக்ரம் இந்த ஜென்மத்துல நாம ஒன்னு சேர முடியாது. இதுதான் நம்ம விதி” மனதுக்குள் மறுக்கினாள்.
செய்வதறியாது தாலியை கையில் எடுத்த கார்த்திகேயன் பாரதியின் கழுத்தை நோக்கி கொண்டு செல்ல “என் மருமக கழுத்துல நீ எப்படிப்பா தாலி கட்டுவ?” கவியோடு உள்ளே நுழைந்தாள் சாந்தி ப்ரியா.
பாரதி வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது சாந்திக்கு தகவல் கூறி விட்டுத்தான் வந்திருந்தாள். அவள் வந்ததும் யாரோடு வந்தாய் என்று கேட்கக் கூட நேரமில்லாமல், கவியை அவளிடம் கொடுத்து விட்டுத்தான் கார்திகேயனோடு பார்கவியை அனுமதித்திருந்த அறைக்கு வந்திருந்தாள் பாரதி.
சாந்தி தன்னை மருமகள் என்றழைத்தது காதில் விழ, அவள் பின்னால் வந்து நின்ற விக்ரமைதான் பார்த்தாள்.
அக்காவுக்காக கார்த்திகேயனை திருமணம் செய்ய சம்மதித்தவளின் மனதைரியம் விக்ரம் பார்த்த பார்வையில் சுக்குநூறாகிப்போக “விக்ரம்…” என்று பாரதி அதிர்ந்து விழிக்க, கார்த்திகேயன் கூனிக்குறுகி நின்றான்.
பாரதியை ஒரு பெருமூச்சோடு பார்த்த விக்ரம் “நான் தான் எல்லாத்தையும் மறக்குறேன்னு நினச்சேன். ஆனா நீ என் பொண்டாட்டி எங்குறதையே மறந்துட்டியே” என்று கண்சிமிட்டி புன்னகைத்தான்.
“என்ன சொல்கிறான் இவன்? நமக்கு எப்போ கல்யாணமாச்சு?” என்று புரியாமல் அவனை பார்த்தவளுக்கு அவன் கண்சிமிட்டியதும் சூழ்நிலையிலிருந்து தன்னை காப்பாற்ற விக்ரம் பொய்யுரைத்தது புரிந்து போக, அளவில்லாத நிம்மதியடைந்தவள் விக்ரமின் நெஞ்சில் சாய்ந்து கதறி அழலானாள்.