அத்தியாயம் 24

பாரதியை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த விக்ரம் தான் பாரதியை காதலிப்பதை வீட்டில் போட்டுடைக்க, பாரதி யார் என்று அறிந்ததும் ஆளவந்தான் கத்த ஆரம்பித்தான்.

“அந்த ஒரு காரணம்தான் இருக்கா? இல்ல வேறாவதும் இருக்கா?” கணவனை தீர்க்கமாக பார்த்தாள் சாந்தி.

இத்தனை வருடங்கள் கடந்து வீட்டுக்கு வந்திருக்கின்றேன். எங்கே சென்றாய்? என்று கேட்கவுமில்லை. நல்லா இருக்கிறாயா? என்று நலம் விசாரிக்கவுமில்லை. குழந்தைகளை விட்டு ஏன் சென்றாய்? என்று அடித்திருந்தால் கூட சாந்தியின் மனம் மாறியிருக்கும். இல்லை இல்லை. மனதிலிருந்த ரணத்தை கொட்டியிருப்பாள். பிடிவாதமாக கணவன் நின்றிருக்க, இவளும் முகத்தை திருப்பினாள். 

தான் திருமணம் செய்த சாந்தி. அமைதியான பெண். குழந்தைகளை கூட அதட்ட மாட்டாள். அவள் சினத்தில் சிவந்து வார்த்தைகளை கொட்டி ஆளவந்தான் பார்த்ததேயில்லை. மனைவியின் இந்த அவதாரம் ஆளவந்தானுக்குப் புதிது. மகனுக்காக பேசுகிறாள் என்றெண்ணி “அந்தப் பொண்ணு அவங்கப்பன் சாவுக்கு பழிவாங்க இவன காதலிக்கிறதா சொல்லுறா. அத புரிஞ்சிக்காம பேசாதே” மனைவியை அதட்டினான் ஆளவந்தான்.

“ஓ… அவங்கப்பா சாவுக்கு நீங்கதான் காரணம் என்று ஒத்துக்கிட்டீங்களே. சந்தோசம்” கணவன் கூறுவது போல் பாரதி அவள் தந்தையின் இறப்புக்கு பழிவாங்க கிளம்பியிருந்தால். யார் காயப்படுவது? தன் குழந்தைகள் தானே. செய்த பாவத்தை எண்ணி வருந்தாமல் இன்னும் திருந்தாமல் இருக்கிறாரே இவர். தான் தன் குழந்தைகளை பிரிய தன் கணவனே காரணமாகிவிட்டானே என்ற கோபம் சாந்தியின் மனதை விட்டு என்றுமே நீங்காது. கோபத்தில் கணவனோடு பேசாதிருந்தவள் சந்தர்ப்பம் அமைந்ததும் கோபத்தை கக்கினாள்.

கணவனை வார்த்தைகளால் பந்தாடிப் பழக்கமில்லாதவள் இன்று விக்ரமுக்காக பேசுகிறாளென்று ஆளவந்தான் பேச, சாந்தியின் கூற்றில் ஒரு நொடி துணுக்குற்றவன், தான் என்ன சொன்னால் என்ன பேசுகிறாளென்று மனைவியை முறைக்கக் கூட முடியாமல் ஆயாசமாகப் பார்த்தவன் “திரும்பி வந்தது இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க என்றா சந்தோசம். எல்லாத்தையும் நீயே முன்ன நின்னு பண்ணு. ஆனா அந்த குடும்பத்து பொண்ணு வேண்டாம்” தன் முடிவில் உறுதியாக நின்றான்.

ரகுராமின் தந்தையாவது தனக்கு உதவப் போய் உயிர் நீத்தான். அவனையே மருமகனாக ஏற்க மறுக்கிறேன். இந்தப் பெண்ணின் குடும்பம் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். இத்தனை வருடங்கள் கடந்து விக்ரமை நெருங்கியது பழிதீர்க்க மட்டும் தானென்று ஆளவந்தான் உறுதியாக நம்பியதோடு, அதை மனைவிக்கு புரியவைக்கவும் முயன்றான். 

“எப்படி, எப்படி நான் வளர்த்த பொண்ணு. என் கண்முன்னாடி வளர்ந்த பொண்ணு. உங்க பையன பழிதீர்க்க கல்யாணம் பண்ணிக்கிறாளா? உங்க பையன் என்ன பாவம் பண்ணான்? உங்கள விட்டுட்டு அவ இவன பிடிக்க?”

அன்னை வீட்டை விட்டு சென்றதற்கு தந்தை தான் காரணம் என்று தெரிந்தமையால் “அம்மா…” ஆளவந்தானின் மகன் என்றதில் விக்ரம் வெகுண்டெழுந்திருக்க, அவனை பார்வையினாலையே அடக்கினாள் சாந்தி.

“என்ன சொல்கிறாள்? என்று ஆளவந்தானோடு, தேவியும் பார்த்திருக்க, “அம்மா எனக்கு ரகுவை பிடிக்கும். அவனும் பழிவாங்கத்தான் வந்திருக்கிறான்னு இவர் அவனை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு சொல்லுறாரு” சோகமாக முறையிட்டாள் மோகனா.

அண்ணன் இருக்க பயமேன்? என்றிருந்தவளுக்கு விக்ரம் கொடுத்த அறையில் அவன் உதவி கிட்டாது என்று புரிய அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கும் பொழுதுதான் சாந்தி தேவதையாக வரம் தந்திருந்தாள். அன்னை வந்ததும் முறையிட எவ்வளவோ மனதில் சேமித்து வைத்திருந்தாலும், மற்றவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட இப்பொழுது அவளுக்கு வேண்டியதெல்லாம் ரகுராம்  மட்டுமென்பதினால் அழுது கரைந்தாள்.

“இவ ஒருத்தி… சைக்கிள் கேப் கிடைச்சா போதும். அவ நினைச்சதை சாதிக்கப் பாக்குறா” தங்கையை பார்த்து மென்னகை செய்தான் விக்ரம். 

அன்னையும், தந்தையும் பேசாமல் இருக்கிறார்கள். பேசினால் தானே இருவரின் மனதிலும் என்ன இருக்கிறது என்று ஒரு முடிவுக்கு வர முடியும் என்று நினைத்த விக்ரம் மோகனாவின் திருமணத்தை பற்றி ஏன் பேசவில்லையென்றால், சாந்திக்கு ரகுராமை பற்றித் தெரியாதுதான் முக்கியமான காரணம்.

ஆனால் பாரதி அன்னை கூடவே இருந்தவள் அதனால் தான் தன் திருமணத்தை முன் நிறுத்தி பிரச்சினையை இழுத்து விட்டான்.

“என்னமா சொல்லுற நீ வளர்த்த பொண்ணா?” தேவி புரிந்தும், புரியாமலும் கேட்க,

சாந்தி வீட்டை விட்டு சென்ற பின் எங்கு இருந்தாள், எப்படி பாரதியின் வீட்டையடைந்தாள். அவர்கள் இவளை எவ்வாறு பார்த்துக்கொண்டார்களென்று சுருக்கமாக கூறியவள் “இவர் பண்ண பாவத்துக்கு பிராயச்சித்தமா பாரதி இந்த வீட்டு மருமகளானாத்தான் உண்டு” என்றாள்.   

பாரதி விக்ரமின் காரியாலயத்தில் வேலைக்கு வந்த பின் அவளை பற்றி விசாரித்ததில் அவள் குடும்பம் ஆஸ்ரேலியாவில் இருப்பதாக தகவல் கிடைத்ததும் மேலும் விசாரிக்காமல் விக்ரமுக்கு அவளை பிடித்தால் திருமணம் செய்து வைக்கலாமென்று மகனிடம் தேவி கூறியிருக்க, தன் மகனால் பாதிப்படைந்த குடும்பமா? அந்த பெண்ணையா விக்ரம் விரும்புகிறான் என்று ஆளவந்தானை போல் கோபம் கொள்ளாமல் “ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்குன்னா கல்யாணம் பண்ணி வைக்கலாம். பிராயச்சித்தம் அது, இது என்று பேச வேணாம்” பாரதியோ அவள் குடும்பமோ பழிதீர்க்க எண்ணவில்லை  என்று மருமகள் கூறியதும் மகனை போலல்லாது தன் பேரன் இறுதிவரை மனைவி குடும்பம் என்று வாழ வேண்டும். பிராயச்சித்தம் என்று கூறி பாரதியின் மனதில் ரணத்தை விதைத்தால், விக்ரம் எவ்வாறு நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ முடியும்? என்று தன் முடிவை கூறினாள் தேவி.

“அம்மா…” அன்னையின் முடிவை ஆளவந்தானால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

விக்ரமின் நிலை தெரியாமல் “என்ன அம்மா…? நீ பண்ணதுக்கு யார் செஞ்ச புண்ணியமோ என் பேரபாசங்க பாதிக்காம இருந்தாங்க. ஆனா உனக்கு பொண்டாட்டிய பிரிஞ்சி இருந்த தண்டனை போதாது போலயே. உனக்கு இஷ்டமில்லன்னா நீ வீட்டை விட்டு போ. நீ போனா என் பேரன் வீட்டுக்கு வருவான்” ரகுராமின் தந்தைக்கு செய்ததையே அவனுக்கும் செய்ய ஆளவந்தான் திட்டமிட்டதை அறிந்து தந்தையோடு இருக்கப் பிடிக்காமல் தானே விக்ரம் வீட்டை விட்டு சென்றான் என்பதை கோடிட்டுக் காட்டினாள்.  

மகன் தப்பே செய்தாலும் அமைதியாக இருந்தவள். எந்த ஒரு விஷயத்திலும் மகனை விட்டுக் கொடுக்காதவள் தேவி. பேரப்பிள்ளைகள் வாழ்க்கை என்றதும் மகனையே வீட்டை விட்டு வெளியே போ என்று விட்டாள்.

இத்தனை வருடங்கள் கழித்து மனைவி வீட்டுக்கு வந்திருக்கிறாள். அவளை பிரிந்து நான் செல்வதா? அன்னை கூறியதை கேட்டு திகைத்த ஆளவந்தான் “என்னமோ பண்ணிக்கோங்க. பட்டாத்தான் உங்க எல்லாருக்கும் புரியும்” என்று விட்டு உள்ளே சென்றான்.    

“அண்ணன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடீங்க. அப்போ என் கல்யாணம்?” பாட்டியை முறைத்தாள் பேத்தி.

“இவ ஒருத்தி. அவன் தன் உன்ன விரும்பலைன்னு சொல்லுறானே. நீ முதல்ல அவன சம்மதிக்க வை” அன்று ரகுராம் தெளிவாக கூறிவிட்டு சென்றானே. அதன் பின் அவனிடம் என்ன பேச? அவனே சம்மதித்தால் தான் உண்டு என்று பேசினாள் தேவி.

“இதோ இவன் பேசினா ரகு மாட்டேன்னு சொல்ல மாட்டான்” அண்ணனை தீப்பார்வை பார்த்தாள் மோகனா. அன்று அடித்த அடியை அவள் மறக்கவில்லை. விக்ரம் மட்டும் நடந்ததை மறந்திருக்கவில்லையாயின் மன்னித்திருக்கவும் மாட்டாள். ரகுராம் பேசியதற்கு அவனை திருமணம் செய்து கோபத்தை காட்டலாம். அதற்கு அவனை திருமணம் செய்ய வேண்டுமே. அண்ணன் சொன்னால் அவன் கேட்பான். காரியம்தான் பெரிதென்று விக்ரமிடம் முகம் திருப்பாமல் இருந்தாள் மோகனா.

“ரகு… உன் கூட வந்த தம்பி தானே” சற்று முன்தான் ரகுவை சந்தித்திருந்தாள் சாந்தி. அவன் நடந்து கொண்ட முறையில் கண்ணுக்குள் கொண்டு வந்தவள் “ரொம்ப நல்ல பையன். நீ சொன்னா கேட்பானா? இல்ல நான் பேசவா?” என்று மகனை ஏறிட்டவள் மகளை பார்த்து “உனக்காகத்தான் ஆதி கல்யாணம் பண்ணாதான் அவன் கல்யாணம் பண்ண முடியும் என்று சொன்னானா?” சிரித்தாள்.

குழந்தை பருவத்தில் விட்டுச் சென்றாள். பிள்ளைகளின் எந்த ஆசையையும் நிறைவேற்ற முடியவில்லை. பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். இப்பொழுதாவது அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற சந்தர்ப்பம் அமையாதா என்று ஏங்கிய தாயுள்ளம் அல்லவா. பிள்ளைகளின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யலாமென்ற மனநிலையில் கேட்டிருந்தாள்.

“அவனெல்லாம் ஒரு ஆளு. கட்டுடா தாலிய என்றா கட்டிடப் போறான்” மோகனாவை வெறுப்பேத்தலானான் விக்ரம்.

மோகனா முறைக்க, விக்ரமின் காதை திருகினாள் சாந்தி.

“அவன் உன் தோழனா இருக்கலாம். வீட்டுக்கு வரப்போற மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுக்கணும்” என்று மிரட்டினாள் சாந்தி.

“இன்னும் நல்லா போடுமா?” அண்ணன் அடித்ததை கூற முடியாமல் ஏற்றி விடலானாள் மோகனா.

தன் மருமகள் வீடு வந்ததில் வீடே கலகலவென இருக்க ஆனந்தமாக பார்த்திருந்தாள் தேவி.

வெரசா போகையில

புதுசா போறவளே

இதுவரையில குளிர் எடுக்கல பெண்ணால

அவ சிரிச்சதும் தல உறையுது தன்னால

என் பேச்சு மூச்சு எங்க காணல…

இது நானா என்ன

பழசு எல்லாம் எங்க

புது சந்தேகங்கள் உண்டாகுது

இது திண்டாட்டமா இல்ல துள்ளாட்டமா

மண்ண விட்டு ரெண்டு கால் தாவுது

எப்போதும் நான் போகும் பாதை இது

இப்போது நிற்காமல் ஏன் நீளுது

என்னுள்ளம் லேசாக கைநீளுது

நல்ல கச்சிதமா

என்ன பிச்சி சும்மா

தைச்சி சோ்க்குறது

உன் வேலையா…

சுற்று வட்டாரத்தில்

தந்த பட்டமெல்லாம்

இப்ப நூல் அறுந்த காத்தாடியா

நேத்தோட நீ வேற நான் வேறையா

இப்போ நீ என்  நெஞ்சின் மேற்கூரையா

என்னுள்ளே நீ பாதி நான் மீதியா

தூங்க ஆயத்தமான ரகுராம் விக்ரம் வீடு வந்ததை ஆச்சரியமாக பார்த்தான்.

“என்ன?” எனும் விதமாக நண்பனை முறைத்தவனுக்கு அவன் பார்வையின் அர்த்தம் புரிந்துதான் இருந்தது.

“அம்மா மடில படுத்து செல்லம் கொஞ்சிகிட்டு இருப்பியோன்னு நினச்சேன். நீ வளர்ந்துட்ட விக்ரம் வளர்ந்துட்ட” நெஞ்சில் அடித்தவாறு சோகமாக சொல்வது போல் நடித்தான்.

“எங்க எனக்கென்னு ஒருத்தி வீட்டுல இருக்காளே அம்மாகிட்ட நெருங்கக் கூட விடாம, முதல்ல அவளை கல்யாணம் பண்ணிக் கொடுத்து வீட்டை விட்டுத் துரத்தனும் என்றவன் நண்பனை பார்த்தான்.

பெருமூச்சு விட்ட ரகுராம் பதில் சொல்லாமல் கொட்டாவி விட்டான்.

சம்மதம் சொன்னவனே மறந்துட்டான். தானும் மோகனாவை வீணாக பேசி வைத்திருக்கிறோம். வேணாமென்று முடிவெடுத்த பின் அவள் யாரை திருமணம் செய்தால் தான் என்ன? அவளை பற்றியோ, அவள் திருமணத்தை பற்றியோ கருத்து சொல்ல எனக்கு எந்த உரிமையுமில்லை என்று பதில் பேசாமல் தவிர்த்தான். 

“நான் சொன்னது காதுலையே வீழாதது போல நடிக்கிறத பாரு” உள்ளுக்குள் சிரித்த விக்ரம் “மோகனா கட்டினா உன்னைத்தான் கட்டுவேன்னு வீட்டுல சொல்லிட்டா. ஒருவழியா வீட்டுல எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க”

“வீட்டுல எல்லாரும் என்றா உங்கப்பாவுமா” கேட்டான் ரகுராம். ஆளவந்தான் பிரச்சினை செய்யாமல் இருக்க மாட்டார் என்பது அவன் கணிப்பு.

அவன் கேள்வியிலையே அவன் சம்மதம் புரிய புன்னகை செய்த விக்ரம் “அவர் ஓகே சொல்லலைனா வீட்டை விட்டு போகச்ச சொல்லி பாட்டி சொல்லிட்டாங்க. அம்மா வந்த நேரம் அவர் வீட்டை விட்டு கிளம்புவாரா? ஏதாவது பண்ணிக்கோங்க என்றாரு. அதாவது கல்யாணம் பண்ணிக்கோங்க என்றுதான் சொன்னாரு” உன் தந்தையின் சம்மதமில்லாமல் உன் தங்கையின் கழுத்தில் தாலி கட்ட மாட்டென்று ரகுராம் கூறி விடுவானோ என்றுதான் இந்த விளக்கம்.

மோகனா சம்மதம் கூறாவிடினும் விக்ரமின் சம்மதம் மட்டும்தான் ரகுராமுக்கு வேண்டும். “நான் ஓகே சொன்ன பிறகு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி விடுமோ” என்று நண்பனை பார்த்த ரகுராம் “திரும்ப நீ மறந்து என் சட்டையை பிடிக்க மாட்டியே” என்று கிண்டல் செய்தான்.

“நீ மாட்டேன்னு சொன்னாலும் வேறு வழியில்லை. உன்ன தர தரன்னு இழுத்துகிட்டு போய் மண்டபத்துல உக்கார வச்சி என் தங்கச்சி கழுத்துல தாலி கட்ட வைப்பேன்” பொய்யாய் மிரட்டினான் விக்ரம்.

“நான் பொண்ணா பொறந்து அவ மட்டும் பையனா பொறந்திருந்தா, எனக்கு எப்பயோ கல்யாணம் நடந்திருக்கும்” மோகனாவின் பிடிவாதம் தெரியுமென்பதால் அவள் இவன் கழுத்தில் தாலி கட்டுவது போல் நினைத்துப் பார்த்தவன் புன்னகைத்தவாறே தலையை உலுக்கிக் கொண்டான் ரகுராம்.

“பாரதி வீட்டுல பேசணும். கார்த்திகேயன் நான் பாரதிய கல்யாணம் பண்ண சம்மதம் சொல்வானா?” தான் அன்னையோடு இருந்த பொழுது ரகு கார்திகேயனிடம் பேசினான் என்பதை அறிந்துக் கேட்டான் விக்ரம்.

கார்த்திகேயன் திருமணத்தை எப்பொழுது வைத்துக்கொள்ளலாமென்று கேட்டானே. விக்ரம் மறந்து விட்டானா? என்ற பார்வையோடு “ஆளவந்தானோட மகனுக்கு பாரதிய கொடுக்காட்டியும், சாந்தி அத்த பையனுக்கு கண்ணை மூடிக்கிட்டு கட்டி வைப்பான்” கார்த்திகேயன் சாந்தியை பற்றி கூறியதை வைத்து சொன்ன ரகுராம் கவியை பற்றி சொல்லலாமா? பாரதியை பேசியதையும் இவன் மறந்துட்டானா என்று யோசித்தான்.

“என்ன யோசிக்கிற? ரதியோட டுவின் பார்கவி பத்தியா?” என்று விக்ரம் கேட்க புரியாமல் முழித்தான் ரகுராம்.

ரகுராம் பார்கவியை சந்தித்ததேயில்லை. அன்று கவியின் பிறந்தநாள் விழாவில் பார்த்தும் புன்னகை செய்தானே ஒழிய பேசவில்லை. விக்ரம் ஏன் கேட்டான். அவன் மீண்டும் சந்தேகம் கொள்கிறானா? என்று நண்பனை பார்த்தான்.

“பார்கவிகிட்ட எதோ சரியில்ல”

“நீ என்ன சொல்லவர? பாரதியும், பார்கவியும் ஆள்மாறாட்டம் பண்ணுறாங்களோன்னு உனக்கு சந்தேகமாக இருக்கா?”

ஐடென்டிகள் டுவின்சாக இருப்பவர்கள் இதை தானே செய்வார்கள். ஒருவேளை பாடசாலையில் சந்தித்தது பார்கவி, கல்லூரியில் சந்தித்தது பாரதியாக இருக்குமோ என்று யோசித்தவன் வேறு ஏதாவதா? என்று விக்ரமை பார்த்தான் ரகுராம்.

.”ப்ச்… பார்கவி என் ரதியென்று நான் ஏமார்ந்திருக்கேன்” என்றவனின் கண்ணுக்குள் காட்ச்சிகள் தோன்றி மறைய தலையை உலுக்கிக் கொண்டவன் “நான் சொல்லுறது வேற” என்று பார்கவி பாரதியை பற்றி என்ன சொன்னாள் என்பதை கூறினான்.

“என்ன? ஏன் அப்படிச் சொன்னா? அதான் நீ…” பாரதியை பேசினாயா என்று கேட்க நினைத்த ரகுராம் விக்ரம் மறந்து விட்டால், தான் அதை மீண்டும் ஞாபகப்படுத்தக் கூடாது என்று அமைதியானான். 

“பார்கவி சொன்னது போல பாரதி இல்ல. அவ சொன்னது அவளை பத்தி என்று அவள் பாரதிய அதட்டின தொனியிலையே புரிஞ்சது. இவளை போய் கார்த்திகேயன் எப்படி கல்யாணம் பண்ணான்? வம்படியாகத்தான் தாலி கட்ட வச்சிருப்பா” தன் தங்கை நண்பனை திருமணம் செய்ய என்ன வேண்டுமானாலும் செய்வாள் என்று தெரியுமென்பதால் பார்கவியை புரிந்துக்கொண்டான்.

பார்கவி சொன்னதை கேட்டு இவன் பாரதியை பேசி வைத்திருக்கின்றான். இவன் எல்லாத்தையும் மறந்து குழைவானாம். அவள் கண்ணீரை மறைந்து இவனை ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். 

“அவ சொல்லித்தான் உனக்கு பாரதிய பத்தி தெரியனுமா?” சட்டென்று நண்பன் மீது கோபம் கொண்டான் ரகுராம்.

 பெருமூச்சு விட்ட விக்ரம் “உனக்கு அவளை பத்தி தெரிஞ்ச அளவுக்கு கூட எனக்குத் தெரியாது” அவன் மனக்கண்ணில் அவனுக்கும், அவளுக்குமான பொழுதுகள் ஓடி மறைய, “அவ வாயத்தொறந்து பேசினாவே போதும். இப்படி மௌனமா இருந்து என்ன கொல்லுறா”

“அவ அவளுக்காகவே பேச மாட்டா” நண்பன் என்ன அர்த்தத்தில் கூறுகிறானென்று புரியாமல் கூறினான் ரகுராம். 

 “சீக்கிரம் கல்யாணம் பண்ணி அவளை என் கூடவே வச்சுக்கணும்”

“முதல்ல அத பண்ணு”

“விடிஞ்ச உடனே கல்யாணத்த பத்திதான் பேசணும்” சிரித்தான் விக்ரம்.

பாவம் பார்கவி என்றொருத்தி இருக்கும் வரையில் விக்ரமுக்கு திருமணம் என்பது கிட்டுமா என்று சந்தேகம்தான்.

அன்றிரவு மூச்சுத்தி திணரலால் உடனடியாக பார்கவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

மருத்துவமனையில் இருந்தவளோ கார்திகேயனையும், பாரதியையும் அழைத்து தான் பிழைக்க மாட்டேனென்று கவியின் பொறுப்பை பாரதியிடம் ஒப்படைத்ததோடு “மாமாவை பார்த்துக்க… பாரு. அவருக்கு நம்மள விட்டா யாருமில்ல” திணறித் திணறிப் பேசியவள் கார்த்திகேயனின் கையிலிருந்த தனது மாங்கல்யத்தை பார்த்தவள் பாரதியின் கழுத்தில் கட்டக் சொல்லி மன்றாடினாள்.