அத்தியாயம் -8

“ ஏன்டா அவசரக்கொடுக்கை  ஒருத்தன் என்ன சொல்ல வறான் என்று காது கொடுத்து கேட்க மாட்டியா? பாய்ஞ்சுக்கிட்டு வற??” என்று முன்னே சென்றுக்கொண்டிருந்த வேலுவை வறுத்தெடுத்துக்கொண்டே சென்றான் கணேசன். அவன் அமைதியாக செல்லவும் “ உங்க மீசை சொல்லலையா மாப்ளைய பத்தி??” என்றதும் அவன் சட்டென திரும்பி பார்த்தான். “ என்னா லுக்” என்று கேட்க ஒன்றுமில்லை என்ற ரீதியில் அவன் தலையசைக்கவும் “ இப்போ பேசுடா!! நீ தான் தைரியமான ஆளாச்சே பேசு” என்று   ஒரு வழி பண்ணிவிட்டான்.

அமைதியாக அவன் சாவிக்கொத்தை நீட்டவும் “ ரூம யாரு உங்க மீசை வந்து காட்டுவாறா??” என்றதும் அமைதியாக வீட்டை  நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டான்.

“ இவ்வளவு பேசுறேன் வாய திறக்கறானா பாரு “ என்று முணுமுணுத்தவன் “ ஏன்டா இப்படி நெடுநெடுன்னு வளர்ந்து இருக்கியே மூளை கொஞ்சமாவது இருக்கா??” என்று  தன் ஆத்திரம் தீரும் வரை வாய்வலிக்க திட்டியும் எந்த பயனும் இல்லை. திட்டி திட்டி சலித்தவன் ஒருகட்டத்தில் முடியாமல் விட்டுவிட்டான்.

வேலு அமைதியாக அவரவர் அறைகளை காட்டியவன் வந்திருந்த விருந்தினர்களுக்கு செய்திருந்த விருந்து ஏற்பாடுகளை கவனிக்க சென்றுவிட்டான்.

அவனின்றி அணுவும் அசையாது என்பதற்கேற்ப ஸ்ரீ இல்லத்தில் அனைத்துமே வேலுவின் கைவண்ணம் தான். என்னதான் அவன் உணர்ச்சிவசப்பட்டிருந்தாலும் கடமை என்று வரும்போது அனைத்தையும் பின்தள்ளியவன் வேலைகளை கவனிக்க ஆரம்பிததுவிட்டான்.

ஒருவாறு அனைத்தையும் சரி செய்தவன் மாப்பிள்ளை வீட்டினரையும் கவனிக்க தவறவில்லை.  கணேசன் தான் அவனை ஒரு வழிப்பணணிவிட்டான். பின் வேந்தன் தான் வனை அடக்கிவைத்தான்.  பந்தி முடிய வந்திருந்தவர்களை வழியனுப்ப  சந்திரனை அழைக்க அவரது அறைக்கு சென்றான்.

என்ன தான் சந்திரன் அவனை திட்டிச்சென்றிருந்தாலும் அவருக்கு மனசே கேட்கவில்லை. அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்று கொண்டிருந்தார்.

“ ஐயா  எல்லாரும் காத்திட்டு இருக்காங்க சீக்கிரம் வெளியே வாங்க” என்ற சத்தத்தில் அவசரமாக வந்து கதவை திறந்தவர் “ என்னடா வாங்க?? ஒருத்தன் அப்படி அடிக்கறேன்ல விலகி போறதுக்கு என்னவாம்!! அப்படியே அடியை வாங்கிட்டு நிற்கறே??” என்க

“ தப்பு பண்ணது நான் தானே ஐயா??” என்று தலையைக் குனிந்துக் கொண்டே கூறினான்.

“ நீ என்னடா தப்பு பண்ணின?? அவர் டாக்டர் என்று தெரியாம தானே பண்ணின? அதுவும் ஒருத்தி உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது வேற என்ன பண்ணுவாங்கலாம்??” என்றவர் அவனுக்காக பேச வேலு பக்கென்று சிரித்துவிட்டான்.

“ ஏன்டா சிரிக்கற?? பின்னே எதுக்கு அடிச்சேன்னா??ராஸ்கல்” என்றவர் “ எனக்கே தெரியாதுடா அவர் டாக்டர் என்று,  வெற்றி மாப்ள வீட்ட இருந்து வருவாங்க என்று மட்டும் தான் சொன்னான். நீ வேற அவருக்கு கைநீட்டுற நானும்  உணர்ச்சி வசத்துல அடிச்சிட்டேன்”!! பதிலுக்கு அடிக்காதீங்க என்று சொன்னா வாய் சுலிக்கிக்குமா உனக்கு?” என்று கேட்டு அடுத்த சொற்பொழிவுக்கு தயாராக “அய்யோ ஐயா முடியலைங்க விட்டுடுங்க!!” என்று கையெடுத்து கும்பிட்டவன் “அடிவாங்கி ரொம்ப சோர்வா இருக்கேன்  இதுக்கு மேல எனக்கு திட்டு வாங்க தெம்பில்லை” என்றான்.

அவனது அருகில் சென்றவர் கண்ணத்தை வருடி பார்க்க அவரது கைத்தடம் பட்டு வரி வரியாக தெரிந்தது. அதனை கண்ட பின்னர் “ மன்னிச்சிடு வேலு!! ரொம்ப வலிக்குதா??” என்ற மென்மையான குரலில் கேட்க அமைதியாக அவரை ஏறிட்டு பார்த்தான்.

இந்த சந்திரன் அவனுக்கு புதியது. எப்போதும் விறைப்பாக சுற்றுபவரிடம் இந்த பரிவும் மென்மையும் இதுவரை அவரின் பிள்ளைகளிடம்கூட காட்டியதில்லை. அவரை பொறுத்தவரை  பாசமோ கோபமோ அனைத்தையுமே கடுமையாக காடடத்தான் தெரியும் . அவரை பொறுததவரை மெனமை என்பது ஒருதலையசைபப்பு நலமா என்ற விசாரிப்பு. அப்படித்தான் அவருககு காட்ட தெரியும்‌. ஆனால் வேலு அவரை வெகுவாக பாதித்து இருந்தான்.

“ என்னடா வலிக்குதா??” என்று மீண்டும் கேட்க இல்லை எனும் ரீதியாக தலையசைத்தவன் “ எல்லாரும் காத்திட்டு இருக்காங்க வாங்க” என்று கூற “ நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்லுற” என்று அதட்டினார்.

“ வலிக்குது தான் ஆனால் இங்கே இல்லை இங்கேதான் “ என்று தன் கண்ணத்தை காடடியவன் பின் தனது இடதுபக்க மார்பை தொட்டுக்காட்டினான். பினபு “ உண்மைதானே நான் சாதாரண வேலைக்காரன் தானே!!” என்று விரக்தி புன்னகையை சிந்த மனிதர் உடைந்தேவிட்டார். “ யாருடா சொன்னா நீ வேலைக்காரன் என்று நீ” என்று உணர்ச்சி வசப்பட்டு ஏதோ கூறவந்தவர் பின் சுதாரித்துக்கொண்டு” என்னடா குத்திக்காட்டுரியா? எனக்கு உன்னை திட்ட உரிமையில்லையா ?? அப்போ நான் உனக்கு யாரோதானே??” என்றார். இப்போது குரலில் அதே கடினம் வந்திருந்தது.

“ ம்ம்ம், இதுதான் எங்க ஐயா!! இப்படி கம்பீரமா வந்து எல்லாரையும் அனுப்பிட்டு வாங்க பசிக்குது” என்று அவசரப்படுத்த மறுப்பேச்சில்லாமல் அவனது பின்னாலேயே சென்றார்.

பந்தியில் அமர்ந்து விருந்தை ஒருகட்டு கட்டிக்கொண்டிருந்த கணேசன் இருவரும் சேர்ந்து வருவதை கண்டவன் “ டேய் மாப்ள இவனை மீசை வீட்டை விட்டு துறத்தி விட்டிடும் என்று பார்த்தா, ரெண்டு பேரும் ஜோடியா வராங்க??”என்று பக்கத்தில் அமர்ந்திருந்தவேந்தனின் காதை கடிக்க அவன் கணேசனை கொடூரமாக முறைத்துக்கொண்டிருந்தான்.

அவனைத்திரும்பி என்னவென்பது போல் பார்க்க “துரோகி  நான் அவ்வளவு சொல்லியும் அதே ரூம்ல போய் டேரா போட்டு இருக்க?? இதுல எப்படி அவன் உன்மேல கைவைக்கலாம்னு பாசமலர் பெர்ஃபாமென்ஸ் வேற”

“ அது ஃபீலிங்ஸ் வேற டிபார்ட்மெண்ட் ஆனால் இது உயிர் சம்பந்தப்பட்ட விசயம்!! உனக்காக உயிரையெல்லாம் பணயம் வைக்க முடியாதுடா” என்றவனை

“ உன்னை” அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று சுற்றிமுற்றி தேடினான்.

“ எனர்ஜி வேஸ்ட் பண்ணாத மாப்ள!! பாரு பெரிய குடும்பம் னு சொல்லிட்டு சாம்பாரை ஊத்துறானுங்க!! வாயா இதுக்கு ஒருத்தன் சட்டைய பிடிச்சு கேட்போம்” என்று அடுத்த சண்டைக்கு தயாராக

“ நானும் இந்த சாம்பாரும் ஒன்ன மாம்சு”

“ எனக்கு ஒன்னுதான்டா!!நானே கல்யாணம் முடியற வரைக்கும் இந்த சாம்பாரையும் கீரையையும் போட்டே முடிச்சுவிட்டுவானுங்கலோ அப்படிங்கற பீதியிலே சுத்திக்கிட்டு இருக்கேன் இவன் வேற” என்று அந்த டாப்பிக்கை கிடப்பில் வைத்துவிட்டு “ யோவ் பாயாசம் கேடடு எம்புட்டு நேரமாச்சு?? இதுதான் மாப்ள வீட்டுக்கு கொடுக்கற மரியாதையா??”எனறு என்று பரிமாறுபவரிடம் வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டான்.

அவனை பார்த்து சலிப்பாக தலையில் அடித்து கொண்டவன் என்னையும் கொஞ்சம் கவனியேன் என்று கெஞ்சிய வயிற்றை கவனிக்க ஆரம்பித்துவிட்டான்.

மாலைநேரம் ஒருவாறு அனைவரும் கலைந்து சென்றிருக்க வெற்றியின் ராங்லர் ஜீப்  ஸ்ரீ இல்லத்தினுள் நுழைந்தது.

வண்டியிலிருந்து இறங்கியவன் மறுபக்கம் வந்து கதவை திறந்து வா என்பதுபோல் கையை நீட்ட தயங்கி தயங்கித்தான் அவனது கைகளை பற்றினாள் கயல்விழி.

அவளது கையை இறுக்கமாக பற்றியவன் விறுவிறுவென வீட்டினுள் நுழையப்போக “ நில்லுங்க தம்பி” என்ற லெட்சுமியின் குரலில் அவனது கால்கள அப்படியே நின்றது.

என்னவென்பதுபோல் ஏறிட்டு பார்க்க “ கல்யாணம் ஆகி முதன்முதலாக வீட்டுக்குள்ள வறீங்க கொஞ்சம் பொறுங்க ஆரத்தி எடுத்ததும் உள்ளே வரலாம்” என்றிட ஆரத்தி தட்டுடன் பார்வதி வந்தாள்.

ஆலம் சுற்றி முடிய “வலது கால் எடுத்து வச்சு உள்ளே வாம்மா” என்று கயல்விழியிடம் கூற அவள் பயந்து வெற்றியின் பின் பதுங்கினாள்.  .

ஒரு ஆழ்ந்த பெருமூச்செடுத்தவன் பதிலேதும் அவள் கையைப்பிடித்தப்படி வீட்டினுள் நுழைந்தான்.

 “ சாமிக்கும்பிட்டு போங்க” என்றவர்” பூஜையறை எங்கே இருக்கு” என்று அவனிடமே கேட்டார்.

இந்தப்பக்கம் என்பதுபோல் கைகாட்டியவன் முன்னே செல்ல சந்திரனை அழைத்துக்கொண்டு அவரும் பின்னாலேயே சென்றார்.

சந்திரன் ஆரத்திக்காட்ட  சாமிக்கும்பிட்டவர்கள் . “ அண்ணே  காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க “ என்றிட சந்திரனிடம் ஆசிவாங்கியவன் லெட்சுமியின் காலில் விழப்போக அவசரமாக அவனை தடுத்தவர் “ தம்பி நீங்க வாழப்போறவங்க!! என்  கிட்ட போய்” என்று தயங்கி நிற்க “ வாழ்த்த நல்ல மனசு இருந்தா போதும் அத்தை!  ஆசிர்வாதம் பண்ணுங்க நாங்க நல்லா இருப்போம்!!” என்றவன் கயலின் கையைப்பிடித்து கொண்டு அவரது காலில் விழுந்து ஆசி வாங்க “ பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழனும்! எழுந்திருங்க!!” என்று மனதார வாழ்த்தினார்.

பின்பு சம்பிரதாயமாக சிறிது பால் பழம் சாப்பிட வைக்க அனைத்தையும் மறுப்பில்லாமல் செய்து முடித்தவன் தனது அறைக்குள் சென்றுவிட்டான். அவனுக்கு நிதானிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது. எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அலைந்துத்திரிந்து உடலும் மனமும் சோர்ந்து போயிருந்தது.

அறைக்குள் நுழைந்தவன் அப்போதுதான் தனது கைப்பிடியில் இருந்தவள் கையை விட்டான்.  அப்போதும் விலகாமல் அவனது முதுகுப்புறமாக சட்டையைபிடித்துக்கொண்டு நின்றிருந்தவளை கைவிட்டு முன்னே கொண்டுவந்தவன் “ அங்கே போய் உட்காரு குளிச்சிட்டு வந்துடுறேன்” என்று அங்கிருந்த கட்டிலை காட்ட மறுப்பாக தலையசைத்தவள் அவனது கைகளை இறுக்கப்பிடித்துக்கொண்டாள்.

அவளது பிடியிலிருந்து தனது கைகளை விடுவித்தவன் அவள் முகத்தை தனது கைகளில் ஏந்திக்கொண்டு அவளது பிறைநெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

 “ஒன்னுமில்லை நான் இருக்கேன் இல்லை இரு” என்று அமர வைத்தவன் குளியலறைக்குள் நுழைந்துக்கொண்டான்.

ஷவரின் கீழ் சுவற்றில் கை ஊன்றி சிறிது நேரம் கண்மூடி நிற்க திடீரென பொருட்கள் உடைந்து விழும் சத்தத்தோடு “ கொலை கொலை” என்ற பெண் குரலில்  அவசரமாக வேஷ்டியை மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வந்தான். அங்கே பொருட்கள் எல்லாம் கீழே விழுந்து சிதறிக் கிடந்தது. அறையே அலங்கோலமாக கிடந்தது.

கையில் பூ வாஸை வைத்துக்கொண்டு காட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்துக்கொண்டிருந்தாள் கயல்விழி.

.கட்டிலின் அடியில் இருந்து” தெரியாம வந்துட்டேன் விட்டுடுங்க அக்கா!! இனி ஆயுசுக்கும் யாரையும் சாப்பாடு வேணுமானு கேட்கமாட்டேன்!!” என்று சத்தம் மட்டும் வர பூ வாஸை அந்த பக்கம் தூக்கி எறிந்து இருந்தாள். “ அம்மா என்னை கொல்லப்பாக்குறாங்க யாராவது வாங்களேன்” என்று கத்தியது அந்த பெண்குரல்.

வேறு ஏதாவது பொருள் கிடைக்குமா எனறு சுற்றி முற்றி தேடியவள் எதுவும் கிடைக்காதலால் பழக்கூடையில் இருந்த பழங்களை ஒவ்வொன்றாக கட்டிலின் அவளை நோக்கி எரிய ஆரம்பித்தாள்.

“ ய்மமா தாயே வழியே விடு இப்படியே ஓடிப்போயிடுறேன்!! இந்த பக்கமே வரல!!” என்றிட.

பழக்கூடையை காலி செய்தவள் கடைசியாக பழம் வெட்ட வைத்திருந்த கத்தியை கையில் எடுக்க “ கொலை கொலை இப்படி அல்ப்ப ஆயுசுல போயிடுவேன்  போலிருக்கே யாராவது வாங்களேன்“ என்று கத்த ஆரம்பித்துவிட்டாள்.

உடலில் நீர் வடிய அடித்து பிடித்து ஓடி வந்த வெற்றிவேல்  கயலின் அருகில் சென்று அவளது கைகளில் இருந்த கத்தியை பிடுங்க பார்க்க “ மாமா விடுங்க மாமா, அவளை கொல்லனும்!! இல்லனா நெருப்பு வச்சிடுவா” என்று அவனை தள்ளிவிட்டவள் மீண்டும் கட்டிலருகே செல்ல “ கயல் அவ ஒண்ணும் பண்ணமாட்ட!! கத்தியை முதலில் கீழே போடு” என்றவன்  அவளை பின்னால் இருந்து இறுக்க பிடித்து கொண்டான். “ உங்களுக்கு தெரியாது மாமா இருட்டில நெருப்பு வச்சிடுவா!! அவளை கொல்லனும் “ என்று கத்திக்கொண்டே அவன் பிடியில் இருந்து திமிறினாள்.

“ தாயே நான் சமைக்கறதுக்குக்கூட நெருப்பு ஏத்தமாட்டேன் தயவுப்பண்ணி  விட்டுடுமா” என்று குரல்க்கொடுத்தவள் “ சார் என்னை எப்படியாவது காப்பத்துங்க !! உங்களுக்கு புண்ணியமா போகும் “ என்றாள்.

“நீ கொஞ்சம் சும்மா இரும்மா” என்றவன் தன் பிடியில் திமிறிக்கொண்டிருந்தவளை இழுத்துக்கொண்டு அறைக்குள்ளேயே இருந்த சிறிய ரூமில் தள்ளியவன் கதவை வெளிப்பக்கமாக தாழிட்டிருந்தான்.

“ மாமா கதவை திறங்க!! அவளை கொல்லனும் !! தனியா போகாதீங்க!!” என்று கதவை படபடவென தட்டினாள்.

 கட்டிலின் அருகில் வந்த வெற்றியோ   “ யாருமா அது வெளியே வா” என்று குரல் கொடுக்க  “ஏன்  நீங்களும் எதையாவது தூக்கி அடிக்கவா??” என்று குரல் கொடுத்தாள்.

“ இப்ப மட்டும் நீ வரல அப்பறம் அந்த  கதவை போய் திறந்துவிட்டுவிடுவேன் பார்த்துக்க வெளியே வா”

“ அய்யோ சார் அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க” என்றவள் “ நீங்க என்னை அடிக்கமாட்டேன் என்று முதலில் சத்தியம் பண்ணுங்க அப்பறம் நான் வறேன்” என்றவள் தலையை மட்டும் வெளியே நீட்டி பார்த்தாள் பார்வதி.

இடுப்பில் கைவைத்து அவளை முறைத்துபார்த்தவன் வெளியே வா என்பதுபோல் கைகளால் சைகை செய்தான். “ உங்களை நம்பித்தான் வெளியே வறேன் !! எது நடந்தாலும் நீங்கதான் பொறுப்பு” என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தவள் கயலை பூட்டியிருந்த கதவை ஒருகணம் திரும்பி பார்த்துவிட்டு “ நல்லா தாழ்ப்பாள் போட்டீங்கல்ல ?? முடிஞ்சா ஒரு பெரிய பூட்டா எடுத்து பூட்டுங்க!” என்றாள். அவளை முறைத்தவன் “ என் பொண்டாட்டிய எப்படி பார்த்துக்கொள்ளனும் என்று எனக்கு தெரியும்!! உன்னை யாரு உள்ளே வரச்சொன்னது?? “ என்றான்.

“ எனக்கொன்னும் வாலண்ட்ரியா வந்து இந்த பைத்தியத்துக்கிட்ட அடி வாங்கிட்டு போக ஆசையெல்லாம கிடையாது!! கீழே சாப்பிட வரச்சொன்னாங்க அதான் வந்தேன்!! நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க திடீரென்று கத்த ஆரம்பிச்சிட்டாங்க!!” என்று சொல்லவும்

“ ஷட் அப்!! நான்சென்ஸ் “ என்று கத்தியவன் “ கெட் அவுட் “ என்று அவளை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக அறையை விட்டு வெளியே துரத்திவிட்டு கதவை இழுத்து சாற்றியிருந்தான்.

கதவையே வெறித்து பார்த்தவள் “இப்ப என்ன சொல்லிட்டேன்னு இதுங்க இப்படி ரியாக்ட் பண்ணுதுங்க?? லூசுங்க பெரிய குடும்பம் என்று சொன்னாங்க எல்லாம் ஒரு லூசாவே சுத்துதுங்க” என்றவள்  “ புருஷன் பொண்டாட்டி சண்டைனா செவனேன்னு வந்த என்மேல தான் பாயனுமா?? ஜஸ்ட் மிஸ் இல்லன்னா கன்னி கழியாமலேயோ நம்ம உயிர் போயிருக்கும்!! வேலையாவது மண்ணாவது முதலில் ஊர் போய் சேரனும்டா சாமி!!” என்று புலம்பிக்கொண்டே வர வேந்தனை விரட்டிக்கொண்டு எதிரில் ஓடிவந்த கணேசனின் மீது மோதியிருந்தாள்.

கீழே விழப்போனவள் பிடிமானத்திற்காக அவனது சட்டைபிடித்துக்கொள்ள அவளை விழாமல் இடையோடு பிடித்துக்கொண்டான் கணேசன்.

இருவருது விழிகளும் ஒருகணம்  உரசிச்செல்ல ‌சட்டென தன்னிலிருந்து கணேசனை தள்ளி விட்டவள்

உஃப் என்று வாயைக் குவித்து ஊதினாள். “ யோவ் அறிவு இருக்கா உனக்கு!! ஆள்வரது கண்ணுக்கு தெரியலை இப்படி மேல வந்து விழுகிற” என்று கணேசனின் முன் விரல் நீட்டி கேட்டாள்.

“ ஏய் குள்ள கத்திரிக்காய் யாரை பார்த்து வாயா போயாங்கறே!! பல்ல பேத்துடுவேன் மரியாதையா பேசு!!”

“ பேப்படா பேப்ப எங்க கை என்ன பூப்பறிச்சுக்கிட்டு இருக்குமா!! மண்டையை உடைசசு மாவிளக்கு போட்டுடுவேன் பார்த்துக்க”

“ டாவா” எனறு அதிர்ந்தவன் “ யேய் மரியாதையா பேசுடி!!” என்றான்.  “ அப்படி தான்டா பேசுவேன் டால்டா!! என்னடா பண்ணுவே??” என்று சண்டைக்கு நின்றாள்.

~ தொடரும்