அதிகாலை இளம் வெயில் முகத்தில் பட, சிலு சிலுவென்ற காற்று அவளது கற்றை கூந்தலை கலைக்க கடவுளின் அழகான படைப்பான இயற்கையை அந்த வேனில் இருந்தவாறு ரசித்து கொண்டிருந்தாள் ஹாசி.
ராஜ், “ஹாசிம்மா காபி எதுவும் குடுக்கறியாடா”
“வீட்டுக்கு போக இன்னும் எவ்வளவு நேரம் இருக்குதுப்பா” என்றவள் கேள்விக்கு பத்மா “வந்துட்டோம்மா இன்னும் ஒன் ஹவர்ல வீட்டுக்கு போயிடலாம்” என்றார்.
ஹாசி, “அதான் வந்துட்டோம்லப்பா வீட்ல போய் பார்த்துக்கலாம். ஆண்டி பாட்டிக்கு ஒன்னும் சிரமம் இருக்காதே”.
“அப்படி…….”
“ம்கூம்……. அவளுக்கு என்ன சிரமம் இருக்க போகுது. தும்முனா கூட தைலம் எடுத்துட்டு வந்து குடுக்க அருமையான மருமவ கெடச்சுருக்கா அவளுக்கு ஜம்முன்னு உட்கார்ந்துட்டு இருக்கவங்ககிட்ட வேலை ஏவிட்டு இருக்கா.
நீ குடிக்க போற அரை கப் காபி போடறதுல அவ ஒன்னும் குறைஞ்சுடமாட்டா” என்று தேவகி பாட்டி சொல்ல,
பத்மாவோ “ஏன் புருஷா உங்க அம்மாக்கு என்னை தவிர எல்லாரும் நல்லவங்கதான் அப்படிதானே” என்றவாறு கணவனை பார்க்க அவரோ ஜன்னல் கம்பியில் தலையை சாய்த்து கண்களை இறுக மூடி கொண்டார்.
கணவன் தூங்குவது போல் படுத்திருப்பதை கண்டவள் ‘இந்த மனுஷன் முழிச்சுருக்க மாதிரிதானே இருந்துச்சு இப்போ என்ன தூங்குறாரு. நான்தான் சரியா பார்க்கலையோ என்று நினைத்தவர் தலையை சொரிந்து கொண்டே திரும்பி கொண்டார்.
ஆம், அனைவரும் பத்மா அம்மா ஊரில் நடக்கும் திருவிழாவிற்குதான் சென்று கொண்டு இருக்கின்றனர்.
ஹாசி பெற்றோர் வந்த அன்று காலை உணவுக்காக கீழே இறங்கி வந்தவள் டேபிளில் அமர, அவள் கண்களை மூடியது ஒரு கரம். சிரித்து கொண்டே தன் கரங்களால் மூடிய கைகளை தொட்ட அடுத்த நிமிடம் அவள் கண்கள் கலங்க எலும்பாத குரலில் “ப்பா……” என்று வாயசைக்க,
அவளது திறந்த வாயினுள் ஒரு குலாப் ஜாமுன் திணிக்கப்பட்டது. முகம் நிறைந்த சிரிப்புடன் “டஜன்…….” என்று கத்தி கொண்டே திரும்பி பார்க்க. அவள் தந்தையும், அண்ணணும் சிரிப்புடன் நின்றிருந்தனர்.
“ப்பா……” என்று அவரை அணைத்து கொண்டவள் அண்ணன் கையைபற்றி கொண்டு “மிஸ் யூண்ணா……” என்க,
“ம்கூம்….. நானும் இங்கதான் இருக்கேன்” என்றவாறே அங்கு வந்தார் ரேவதி.
“ம்மா….” என்றவள் தந்தையைவிட்டு நகறவில்லை.
ரேவதி, “பார்த்தியா பத்மா. பத்து மாசம் சுமந்து வலிக்க பெத்தது நாம. இதுங்க வளர்ந்து எங்க போய் நிற்குதுங்க பார்த்தியா. எல்லாம் கால கொடுமை”.
பத்மா, “ஆமா ரேவா. என்னதான் நாம விழுந்து விழுந்து கவனிச்சாலும், இந்த புள்ளைங்களுக்கு அப்பான்னா ஒரு படி மேலதான். இங்கயும் அதே நிலைமைதான்” என்றார்.
ஹாசி இருவரையும் பார்த்து சிரித்து வைத்தாளே தவிர தந்தையைவிட்டு நகறவில்லை.
தங்கை நலனை விசாரித்த நிரஞ்சன் கண்கள் நாலா புறமும் யாரையோ தேடி கொண்டே இருந்தது. அதை கவனித்த ஹாசி “உன் ஆளு இனிமேதான் கீழ வருவா. ரொம்ப தேடாத”.
நிரஞ்சன், “ச்ச…. ச்ச….. நான் அவளை தேடலையே. சும்மா வீட்ட சுத்தி பார்த்தேன்”.
“டேய்…. டேய்…. நடிக்காத…” என்னும்போதே “அத்த……” என்று கத்தி கொண்டே ஓடி வந்தாள் மித்ரா.
ரேவதி மகளை நீ வராட்டி போ. மித்து எனக்கு இருக்கா என்ற பார்வையோடு அவளை அன்போடு அணைத்து கொண்டவர் “எப்படிடா இருக்க. வேலை எல்லாம் எப்படி போகுது” என்று கேட்க,
“அதெல்லாம் சூப்பரா போகுது அத்த. என்ன உங்க கார குழம்பை ரொம்ப மிஸ் பண்ணுனேன்” என்றவாறு அவளும் அவருடன் பேச துவங்கி விட,
வாயில் கை வைத்த ஹாசி “டேய் அண்ணா என்னமா புழுகுறா பாருடா. கார குழம்பை மிஸ் பண்றாளாம். நான்லாம் அதை குழம்பு லிஸ்ட்லயே சேர்க்க மாட்டேன். இவ என்னடான்னா……” என்றவாறே அண்ணனை அவள் பார்க்க,
அவனோ ஆகாய நீல நிற சுடியில் நின்ற. தன்னவளை இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான்.
ஹாசி, “டேய் அண்ணா வாட்டர் பால்ஸ குளோஸ் பண்ணுடா. அவ மொத்த குடும்பமும் இங்கதான் இருக்கு. வரை முறை இல்லாம சைட் அடிக்கறடா இது எல்லாம் நல்லதுக்கு இல்ல சொல்லிட்டேன்” என்றவள் குரலை எங்கு அவன் கவனித்தான்.
வெகுநாட்கள் கடந்து தன்னவளை பார்த்த மகிழ்ச்சியில் இருந்தவன் அப்படியே நின்றிருக்க, அவன் இடையில் கிள்ளி தன்னிலை அடைய வைத்த ஹாசி “வாயில நாலு கொசு, ரெண்டு ஈ போயிட்டு வந்துடுச்சுடா கொஞ்சம் ம்ம்ம்ம்….” என்று வாயில் கை வைத்து மூடுமாறு சொல்ல,
அவனும் வழிசல் சிரிப்புடன் சிரித்து மழுப்பி வைத்தான். அதன் பின் அனைவரும் சென்று ரெப்ரஷ் ஆகி வர, ஒன்றாக அமர்ந்து காலை உணவை எடுத்து கொண்டனர்.
ஹர்ஷா ஹாசி எங்கே தங்களுக்குள் நடந்ததை சொல்லிவிடுவாளோ என்று அவளையும் சாப்பாட்டையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தான்.
அவனை கவனித்த ஹாசி தன்னவன் தன்னை பார்த்து கொண்டே இருப்பதை நினைத்து மனதில் மகிழ்ந்தாலும், அவனுடன் விளையாட எண்ணி வெளியே முறைத்து வைத்தாள்.
பெண்ணவள் முறைப்பை கண்டு மனதில் அரண்டவனுக்கு சாப்பிட்ட உணவு புரையேற இருமியவனை கண்டு அவளுக்கு சிரிப்பு வர தண்ணீரை குடித்து அதை மறைத்தவள் அமைதியாக சாப்பிட துவங்கினாள்.
பாட்டி, “டேய் அர்ஷா என்னடா மெதுவா சாப்பிடு. யாரும் உன் சாப்பாட்டை புடுங்கமாட்டாங்க. காணாத கண்ட மாதிரி அந்த புள்ளைய பாக்காரதை விட்டுட்டு ஒழுங்கா தட்ட பாத்து சாப்பிடு” என்க,
அவ்வளவு அப்பட்டமாவா தெரியுது என்று அப்பாவியாக விழித்தவன் மற்றவர்களை பார்க்க அவர்களோ சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு அமர்ந்திருந்தனர்.
மித்ரா, “அண்ணா மானம் போகுது. உன்னோட ஜொல்லு மழைய கொஞ்சம் நிப்பாட்டு” என்க,
தங்கையை அதிர்ந்து போய் பார்த்தவன் ‘நான் அவளை பார்த்து ஜொல்லுவிட்டேனா. என்னடா இது புது புரளியா இருக்கு’ என்று நினைத்து தங்கையிடம் “நான் அவளை சைட் அடிச்சேன் அதை நீ பார்த்த….” என்று பற்களை கடித்து கொண்டு கேட்க,
தங்கையோ ஆர்வமாக சாப்பிட்டு கொண்டே ஆமாம் என்று வேகமாக தலையசைத்தாள். அதில் கடுப்பானவன் அவள் தலையில் ஓங்கி கொட்ட,
“ம்மா….. இவனை பாருங்கம்மா கொட்டிட்டான்.” என்று சிணுங்க, ரஞ்சன் அவனை முறைக்க துவங்கினான்.
பத்மா மகனை பார்க்க அவனோ “ம்மா…. அவளை வாய மூடிட்டு சாப்பிட சொல்லுங்க. தேவையில்லாம வயசுக்கு மீறி பேசறா”.
“வாய மூடிட்டு எப்படிடா சாப்பிடறது”.
“அடியேய் மொக்க போட்ட கொன்னுடுவேன். கொட்டிக்கதானே வந்த அந்த வேலைய பாரு. அவனவன் இருக்க டென்ஷன் புரியாம” என்று புலம்பியவன் எதிரில் பார்க்க,
ரஞ்சன் கொலைவெறியில் அவனை பார்த்து கொண்டு இருந்தான். இந்த தயிர் சாதம் எதுக்கு இப்போ மொறச்சுட்டு இருக்கான்னு தெரியலையே நேத்துல இருந்து எனக்கு நேரமே சரியில்ல. பேசாம சாப்பிட்டு கிளம்புவோம். அப்புறமா எப்போவாவது டைம் கிடைக்கும்போது ஹாசினிக்கிட்ட சாரி கேட்டுக்கலாம் என்று நினைத்தவன் வேகமாக சாப்பிட்டுவிட்டு ஆபிசிற்கு கிளம்பிவிட்டான்.
ரஞ்சன் அன்று முழுவதும் ஓய்வெடுத்தவன் மாலை வெளியில் சென்று வீட்டிற்கு தேவையான அனைத்தையும் வாங்கி அவர்கள் இருக்க போகும் வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டான்.
அடுத்த நாள் பால் காய்ச்சி மொத்த குடும்பமும் அந்த வீட்டிற்கு சென்றுவிட, அன்றுதான் ஹாசியை கடைசியாக பார்த்தான்.
அன்றும் மன்னிப்பு கேட்க முயன்றவனுக்கு முடியாமல் போக, சரி பாரின்ல வளர்ந்த பொண்ணுக்கு இது எல்லாம் பெரிய விஷயமா இருக்காது. பார்த்துக்கலாம் என்று விட்டுவிட்டான்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல, பத்மா அம்மா ஊரான பஞ்சு பட்டி கிராம திருவிழாவிற்கு செல்லும் நாளும் வந்தது.
அனைவரும் ஒன்றாக செல்ல ஏற்பாடு செய்ய, வர மாட்டேன் வேலை இருக்கிறது என்றவனை மொத்த குடும்பமும் தூக்கி வண்டியில் போட்டு கொண்டு இதோ இப்போது ஊருக்கும் வந்து சேர்ந்துவிட்டனர்.
பேச்சியம்மாள் பத்மாவின் தாய் அவர்களை ஆர்வமாக வரவேற்றவர் மகளை கண்டவுடன் “என் ராசாத்தி எப்படி துரும்பா இளச்சு போயிட்ட. ரொம்ப வேலையாடா தங்கம்” என்று மகளிடம் பேச,
இங்கு தேவகி பாட்டியோ “ம்கூம்…. உன் மக இளச்சு இருக்கும்போதே அங்க எங்க வீட்டு வாசப்படிய இடிச்சு கட்ட வேண்டியதா இருக்கு. இன்னும் நல்லா இருந்தா என் வீட்டு நிலைமை…’ என்று நெஞ்சில் கைவைக்க,
பாட்டியின் பேச்சை கேட்டு மித்ரா, ஹாசி இருவரும் சிரிக்க, அவர்களை கவனித்த பாட்டி “ஏன் மித்தும்மா உன் ஆத்தால அவ ஆத்தா தங்கம்னு சொல்றாளே அந்த கட்ட விரலை மட்டும் கட் பண்ணி குடேன் ஒரு மோதிரம் செஞ்சு போட்டுக்கறேன்” என்று சொல்ல,
அதற்கு மேல் அடக்க முடியாமல் தோழிகள் இருவரும் சத்தமாக சிரிக்க துவங்கினர்.
பேத்தியையும் தன் அண்ணியையும் அப்போதுதான் கவனித்த பேச்சி “வாங்க அண்ணி. உங்களுக்காகதான் காத்திட்டு இருக்கேன். நல்லா இருக்கீங்களா” என்று கேட்க,
பாட்டியோ ‘இது வரைக்கும் நல்லாதான் இருக்கேன். இனி எப்படி ஆக போறேனோ’ என்று முணு முணுத்து “ஹிஹிஹி….. நல்லா இருக்கேன் பேச்சி. நீ நல்லா இருக்கியா புள்ளைங்க எல்லாம் நல்லா இருக்கா. உள்ள வாங்க அண்ணி காபி தண்ணி குடிக்கலாம்”.
“ஹிஹி…. இல்ல பேச்சி எனக்கு தண்ணி எல்லாம் வேண்டாம் காபி மட்டும் போதும்” என்றவர் சொல்ல,
“அட போங்க அண்ணி எப்போ பார்த்தாலும் உங்களுக்கு கிண்டல்தான். மகா…. மகா எல்லாரும் வந்துட்டாங்க பாரு” என்று தன் மகனை அழைக்க,
தேவகி பாட்டியோ ‘ஹையோ செண்டிமெண்ட் படம் ஓட்ட ஆரம்பிச்சாங்கன்னா கேப் இல்லாம ஓட்டுவனுங்களே. நானும் ஒவ்வொரு முறை வரும்போதும் பார்க்கறேன். அண்ணா….. தங்கச்சின்னு மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டு பார்த்துட்டே இருப்பாங்க.
அதுக்கு மேல என்ன பேசணும்னு இந்த ரைட்டர் அவங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதி குடுக்கலையானு தெரில. நானும் எத்தனை வருஷம்தான்டா வலிக்காத மாதிரி நடிக்கறது’ என்று புலம்ப,
“அட ஏம்மா நீ வேற. நான் செண்டிமெண்ட் சீன்னே வைக்க மாட்டேன்னு சொன்னதுக்கு என் கழுத்துல கத்தி வச்சு, பாசமலர் படத்துல வர்ற மாதிரி நானும் என் அண்ணனும் பாச மழை பொலியனும் அதை பார்த்து என் மாமியார் கிழவி நவ துவாரத்துலயும் புகை வரணும். ஒழுங்கா சீன் வைனு மிரட்டி இந்த சீன வாங்குனுச்சும்மா உன் மருமக”.
“இவங்க பாச மழையை கண்டு நான் வயிறெரிஞ்சுட்டாலும். ஆமா….. நீ யாரு”
“நான்தான் அந்த அப்பாவி ரைட்டர்”.
“ஏம்மா ஒரு குடும்பமா நாங்க பேசிட்டு இருக்கும்போது குறுக்க வர்றியே இது எல்லாம் ஒரு பெரிய மனுஷிக்கு அழகா. போமா அங்குட்டு அடுத்த வீட்டு கதை கேட்க ஓடிவந்துருக்கு பாரு”
“கிழவி நீதானே என்ன கூப்பிட்ட”.
“நினைச்சேன் கூப்பிடல. நினைச்ச உடனே இப்படி வந்து நிற்பன்னு நான் என்ன கனவா கண்டேன்”.
“கிழவி இரு இங்க இருந்து போகறதுக்குள்ள உனக்கு ஒரு பொங்கல் வைக்கறேன்”
“ஆமா…. உனக்கு முதல்ல பொங்கல் வைக்க தெரியுமா. எந்த பொங்கலா இருந்தாலும் நான் அசால்ட்டா ஹேண்டில் பண்ணுவேன். என் மருமவளையே வச்சு மேய்க்கறேன் நீ எம்மாத்திரம் போமா”.
“ம்ம்….
அசிங்க படரதே நமக்கு பொழப்பா போச்சு” என்றவாறு வந்துவிட்டேன் மக்களே.
பத்மா,“அண்ணா…….”
மகாலிங்கம், “தங்கச்சி……” என்று வர,
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றிருக்க, இதையெல்லாம் பார்க்க எனக்கு தெம்பில்ல முருகா’ என்று புலம்பிய பாட்டி “கிருஷ்ணா எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்குடா” என்று தலையில் கை வைத்து கொண்டு சாய,
எல்லோரின் கவனமும் அவர் புறம் சாய்ந்தது. பதறிய அனைவரும் அவரை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுக்க, அதை வாங்கி குடித்தவர்.
“ம்ம்ம்…. இப்போ பரவால்லம்மா. நான் கொஞ்ச நேரம் போய் படுக்கறேன். நைட் முழுக்க வண்டில வந்தது எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்றவர் பேத்தியையும், ஹாசியையும் இழுத்து கொண்டு சென்றுவிட்டார்.
மூவரையும் ஒரு அறைக்கு அழைத்து சென்ற பேச்சியின் மருமகள் “அம்மா இந்த ரூம்ல தங்கிக்கோங்க. நான் போய் உங்களுக்கு குடிக்க எதாவது எடுத்துட்டு வரேன்” என்றவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அவர் சென்றுவிட்டாரா என்று குறை கண் போட்டு பார்த்து கொண்டிருந்த பாட்டி. அவர் சென்றுவிட்டார் என்று உறுதியான பின் மித்து, ஹாசி இருவரின் கையை உதறி விட்டவர்.
“ஹப்பாடா நல்ல வேலை தப்பிச்சுட்டோம். ஏன்டி மித்து உங்க அம்மா திருந்தவே மாட்டாளா. அதுசரி அவ என்னைக்கு மாறி இருக்கா” என்று புலம்ப,
அவரை ஓடி போய் அணைத்து கொண்ட மித்து “தேங்க் யூ பாட்டி தப்பிக்க வச்சதுக்கு” என்று சொல்ல,
ஹாசி இருவரையும் புரியாமல் பார்த்து கொண்டு நின்றிருந்தாள்.
பாட்டி, “தேங்கு யாருக்கு வேணும். உன் அப்பனுக்கு தெரியாம ஊருக்கு போன உடனே எனக்கு பிஸ்ஸா வாங்கி தரணும் ஓகேவா”
மித்து, “டபுள் ஓகே. எவ்ளோ பெரிய உதவி செஞ்சுருக்கீங்க” என்று சொன்னவள் அப்போதுதான் ஹாசியை கவனித்தாள்.
“என்ன ஹாசி? ஏன் இப்படி முழிக்கற?”
ஹாசி, “என்னடி நடக்குது இங்க?” என்றவளிடம் மித்து தன் தாய் மற்றும் மாமாவின் செயலை சொல்லி, “எவ்ளோ கஷ்டம் தெரியுமாடி அதை பார்க்கறது. கொஞ்ச நேரத்துல முடியாது. குறைஞ்சது ஒரு மணி நேரம் அண்ணன்…தங்கச்சின்னே ஓடும்.
சின்னதுல இதை எல்லாம் பார்த்து எவ்ளோ கடுப்பாகி இருக்கேன் தெரியுமா? இன்னைக்கு எஸ்கேப் பாட்டி புண்ணியத்துல” என்றாள்.
அதற்குள் சூடான காபியும், குழி பணியாரமும் வர, மூவரும் அதை ரசித்து சாப்பிட்டு கொண்டே பேச துவங்கினர்.
எவ்வளவு நேரம் ஆனதோ கிருஷ்ணன் டயர்டாக அறையின் உள்ளே நுழைய, அவர் தோற்றத்தை கண்டு வருத்தப்பட்ட பாட்டி,
“என்னடா கண்ணா அடி பலமோ….”
“ரொம்ப……” என்று சலிப்பாக சொன்னவர் “ஆமா, உங்களுக்கு உடம்பு இப்போ பரவால்லையா?”
“எனக்கென்ன நான் கல்லு குண்டாட்டம் நல்லாதானே இருக்கேன்” என்ற தாயை கிருஷ்ணன் புரியாமல் பார்க்க,
அவரோ ஒரு குழி பணியாரத்தை எடுத்து வாயில் போட்டவாறு “அவளை கல்யாணம் பண்ணுனதுக்கு நீ அனுபவிக்கணும் மை சன் ஒய் மீ”.
“ம்மா……” என்ற மகனின் அதிர்ச்சியை கண்டு சிரித்த பாட்டி “விடு மை சன் போய் ரெஸ்ட் எடு” என்று அனுப்பி வைத்தார்.
மகிழ்ச்சியாக திருவிழாவிற்கு வந்தவர்கள் அதே மன நிலையில் மீண்டும் சென்னைக்கு கிளம்புவார்களா காத்திருந்து பார்ப்போம்.