பலவற்றை யோசித்ததினாலையோ என்னமோ மயக்கம் வருவது போல் இருக்க விக்ரம் பாரதியின் தோளில் சாய்ந்ததும் மகனுக்கு என்னவோ என்று சாந்தி பிரியா கத்தியிருந்தாள்.
அந்த சத்தத்தில் என்னவோ, ஏதோவென்று உள்ளே வந்த ரகுராமும், கார்த்திகேயனும் விக்ரம் மூச்சு விடும் சத்தத்திலையே அவன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பது புரிய, அவனை பாரதியின் அறையில் தூங்க வைத்து என்ன நடந்தது என்று பாரதியிடம் கேட்கலாயினர்.
சாந்தி ப்ரியாவை பார்த்த ஆனந்த அதிர்ச்சி, அன்னை விட்டுச் சென்ற கவலை என்று அவனை ஆட்டிப் படைத்ததில் அவனுக்கு ஓய்வு தேவை என்று அவன் மூளை சொன்னதோ என்னவோ ஆழந்த உறக்கத்தில் இருந்தான் விக்ரம்.
தன் மகனுக்கு என்ன பிரச்சினை? ரகுராமையும், பாரதியையும் ஏறிட்டாள் சாந்தி ப்ரியா.
ரகுராம் விக்ரமோடுதான் வந்திருப்பானென்று அவளே கணித்திருக்க, இத்தனை வருடங்கள் கடந்து சந்தித்த அன்னையை மறந்து விக்ரம் பாரதியை “ரதி…” என்று அவள் தோளில் சாய்ந்ததை பார்த்த பின்னும் சாந்தி ப்ரியாவுக்கு அவர்களின் உறவு எத்தகையது என்று புரியாவிட்டாலும், தன் மகனுக்கு பாரதியை தெரியும் என்று புரிந்துகொண்டிருந்தாள்.
சாந்திக்கு விக்ரமின் நிலையை எவ்வாறு புரிய வைப்பது? சொன்னால் புரிந்துக்கொள்வாளா? என்று ரகுராம் பாரதியை பார்த்தான்.
அவர்களுக்கு அந்த சிரமத்தை கொடுக்காமல், “அப்பா… கேக் எப்போ கட் பண்ண போறோம்?” வீட்டில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தன்னுடைய பிறந்தநாள் விழாவை கொண்டாட காத்திருந்தாள் கவி.
“மயங்கிட்டானா… நல்லது” தான் போட்ட திட்டம் தவிடு போட்டியானது கூட புரியாமல், கார்த்திகேயனின் முன்னிலையில் விக்ரமிடம் நடிக்க அவசியமற்று போனதை எண்ணி மகிழ்ந்தது பார்கவி ஒருத்தி மட்டும் தான்.
“வாங்க, வாங்க கேக் வெட்டலாம். கவிக் குட்டியோட பர்த்டே இல்ல” சூழ்நிலையை சரி செய்வது போல் பேச முயன்றாள் பார்கவி.
நடப்பவைகளை குழந்தைகளுக்கு புரியவைக்கவும் முடியாது. அவர்களை சமாதானப்படுத்தவும் முடியாது என்பதினால், விக்ரமை தொந்தரவு செய்யாமல் கவிக்காக அமைதியாக பிறந்தநாள் விழா ஆரம்பமானது.
மகனுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. இப்பொழுது விசாரிப்பதை விட, மகனோடு இருக்க வேண்டும் என்று சாந்தி நினைக்க, கவி அவளை விடுவதாக இல்லை. “பாட்டி… பாட்டி…” என்று அவளை தன்னோடு பிடித்து நிறுத்திக்கொள்ள, உள்ளுக்குள் கவலை இருந்தாலும் குழந்தைக்காக இன்முகமாக கூட இருந்தாள் சாந்தி.
மற்றவர்களின் முகங்களும் கலவையான உணர்ச்சிகளை காட்ட, ஆனந்தமாக கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடலானாள் கவி.
கேக் வெட்டிய உடன் கவியோடு புகைப்படங்களை எடுத்துக்கொண்ட சாந்தி மகனிடம் சென்றிருக்க, விக்ரம் கண்விழித்தால், என்ன கேட்பான்? என்ன சொல்லி சமாளிப்பது? அன்று பேசியதை கார்திகேயனிடம் கூறினால் என்ன செய்வது என்ற பதட்டத்தில் இருந்த பார்கவி மட்டும் அறைக்குள் சென்றுவிட்டாள்.
கவிக்கு ஊட்டி விட்டவர்களுக்கு உண்ணும் மனநிலை இல்லாததால், கவி கொடுத்த கேக்கோடு அங்கங்கே அமர்ந்து கொண்டனர்.
“விக்ரம டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக தேவையில்லையா?” கவலையோடு ரகுராமை கேட்டாள் பாரதி.
“அவனுக்கு எந்த பிரச்சினையுமில்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு. அம்மாவை பார்த்ததும் அதிர்ச்சியடைஞ்சிட்டான் போல” அவன் அதிர்ச்சியடைவதும், அமைதியடைவதும் பாரதி என்பவளால் மட்டும் தானென்று புரியாமல் கூறினான் ரகுராம்.
என் அன்னை எங்களை விட்டு போகக் காரணம் உன் அன்னைதான் என்று விக்ரம் கூறியிருக்க “சாந்தி அம்மா…. ரொம்ப வருஷமா எங்க கூடத்தான் இருக்காங்க” என்ற பாரதியின் குரல் கமறியது.
ஆளவந்தானின் கவனயீனத்தால் தன் தந்தை இறந்தார் என்பதை மறந்து, விக்ரம் அன்னையில்லாமல் வளர என் குடும்பம் காரணமாயிர்றே. அதை எவ்வாறு ஈடு செய்வது என்று கவலையுர்றாள் பாரதி.
கார்திகேயனிடம் சாந்தி ப்ரியா எவ்வாறு அவர்களோடு இருக்கின்றாளென்று விசாரித்திருந்தமையால் “நீ அப்பா இல்லாம வளர்ந்த, அவன் அம்மா இல்லாம வளர்ந்தான். அதுக்கு இது சரியா போச்சு” கிண்டல் செய்வது போல் சமாதானம் செய்யலானான் ரகுராம்.
“என்ன பார்கவி… ட்ரெஸ் பண்ண ரெண்டவருக்கு மேல எடுத்துக்கிட்ட, அரைமணித்தியாலம் கூட இல்ல அதுக்குள்ள ட்ரெஸ்ஸ மாத்திட்டியா?” என்றுமில்லாமல் அன்னையும், மகளும் ஆடை அலங்காரத்தில் ஜொலித்திருக்க, அவர்களை பார்த்து ரசிக்கக் கூடிய சூழ்நிலை அமையவில்லையே என்ற குறையோடு அறைக்குள் வந்த கார்த்திகேயன் மனைவியிடம் கேட்கலானான்.
தனக்கு குங்குமம் என்றால் அலர்ஜி என்று அறிந்தும் ஒருவேளை இதுதான் தன் குடும்பத்தோடு கழிக்கும் கவியின் இறுதி பிறந்தநாளாகக் கூட இருக்கலாமென்று புகைப்படம் எடுத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், நேரம் செலவழித்து தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் பார்கவி. அதை கணவனிடம் காட்டி மகிழக் கூட விடாமல் விழாவுக்கு வந்த விக்ரம் செய்து விட்டானே என்ற கோபத்தில் இருந்தவள், அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத்தான் அறைக்கு வந்தாள்.
ஆடை அசௌகரியத்தைக் கொடுத்திருக்க, வழமையாக போடும் உடைக்கு மாறியிருந்தவளைத்தான் வம்பிழுத்தான் கார்த்திகேயன்,
“யாரு அந்த விக்ரம நம்ம வீட்டுக்கு கூப்பிட்டது? அவன் இங்க வந்து மயங்கி விழுந்து, எல்லாம் நாசமா போச்சு” கோபத்தில் சீறினாள்.
“என்ன நீ இப்படி பேசுற? அவன் நிலை தெரியாதா? அவன் இப்படியிருக்கும் பொழுது, நம்ம சந்தோசம் முக்கியமா? பாரு சந்தோசமா இருக்காளா? சாந்தி அம்மா தான் சந்தோசமா இருக்காங்களா?”
பார்கவி எல்லாவற்றுக்கும் கோபப்படுபவள் தான். ஆனால் தன்னை போல் ஒருவன் உடல் உபாதையில் கிடக்க, தன் சந்தோசம் பறிபோய் விட்டதே என்று கோபப்படுகிறாளா? என்று கார்த்திகேயன் மனைவியை வினோதமாக பார்த்தான்.
நாய் வேஷம் போட்டால் குறைத்துத்தானேயாக வேண்டும். கார்த்திகேயனின் அனுதாபத்தை சம்பாதிக்க நடிக்க ஆரம்பித்தவள் வாழ்நாள் முழுக்க நடிக்க வேண்டியிருக்க, அவ்வப்போது அவளையறியாமலே கோபத்தில் அவள் வேஷம் கலைக்கப்படுவதால் சமாளிக்கவும் தெரிந்துதான் வைத்திருந்தாள்.
“நான் எனக்காக கோபப்படலைங்க. கவி பாவமில்லயா? யார் முகத்திலையும் சந்தோஷமில்லாம போட்டோல இருந்தா, கவி வளர்ந்த பிறகு கேட்க மாட்டாளா?” கார்த்திகேயனின் சட்டை பட்டனை பிடித்து திருக்கியவாறே குழந்தை போல் கொஞ்சினாள்.
கணவனானவன் கூடவே வளர்ந்தவன், தோழனாக இருப்பவன். அவன் எண்ணங்கள், சிந்தனை, பேச்சு, கோபம், பாசம், காதல் எவ்வாறிருக்கும் என்று இத்தனை வருடங்களாக கூட இருந்து அறிந்து வைத்திருக்கின்றாளே. தான் கோபத்தில் பேசினாலும், கார்த்திகேயன் அமைதியாகத்தான் பேசுவான். அவன் கேள்வி கேட்குமளவுக்கு இவள் கோபம் கொள்ளவும் மாட்டாள். அவன் கேள்வி கேட்கிறானென்றால் அபாயமணி அடிப்பதாக அர்த்தம். கொஞ்சம் காதலோடு குழைந்தால் போதும் மதிமயங்கி விடுவான். அதுதான் பார்கவியின் ஆயுதம்.
“அவ வளர்ந்தா அவளே புரிஞ்சிப்பா. ரொம்ப நாளைக்கு பிறகு அழகாக டிரஸ் பண்ணியிருக்க, நம்ம புருஷன் பார்க்க கொடுத்து வைக்கவில்லையே என்று உனக்கு கோபம். அத சொல்லாம கவிய சாக்கா சொல்லுறியா?” காதலாக உருகினான் கார்த்திகேயன்.
கார்த்திகேயனின் நெஞ்சில் சாய்ந்தவாறு அன்று தான் பேசியதற்கு விக்ரம் தன்னை என்னென்ன கேள்வி கேட்பான். அதை எவ்வாறு சமாளிப்பது என்று யோசிக்கலானாள்.
மெதுவாக கண்விழித்த விக்ரம் அன்னை தன்னை கலங்கிய கண்களோடு பார்ப்பதை பார்த்து தன்னை பற்றி அறிந்துகொண்டாளா என்று அசௌகரியமாக புன்னகைத்தான்.
“ஏன் ஆதி உனக்கு உடம்புக்கு என்ன பண்ணுது?”
“எனக்கென்ன? ஜம்மும்னு இருக்கேன். வேல வேலைன்னு டே அண்ட் நைட் ஓடுறேன் இல்ல அதான்… டயடுலு தூங்கிட்டேன்”
நண்பன் அன்னையிடம் ஏதும் கூறி வைத்தானோ என்று அன்னையின் முகத்தை கவனித்தவாறே தான் பேசினான்.
“கூடவே உன் மருமகள வச்சிக்கிட்டு எனக்கு நீ எங்க போய் பொண்ணு பார்க்கப் போற?” எனக்கு பாரதியை பிடிச்சிருக்கு. அவளையே திருமணம் செய்து வை என்று மறைமுகமாக அன்னைக்கு தெரிவுபடுத்தினான்.
“ஆமா… பாரு இருக்கல்ல” விக்ரம் பாரதியின் தோளில் சாய்ந்தது ஞாபகம் வரவே “அவ உன் கூடத்தான் வேலை பாக்குறாளா? அப்போ அவ உனக்காகத்தான் கல்யாணமே பண்ணிக்கலையா? அதுசரி… நீயும் அவளுக்காகத்தான் காத்திருந்தியா?” பாரதியின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்ததென்று கூடவே இருந்து பார்த்தவல்லவா சிரித்தவாறே தன் சம்மத்தை கூறினாள் சாந்தி.
“வா… வா… உன் மருமக கிட்ட நீ சந்தோசமா சம்மதிச்சத சொல்லாம்” என்று அன்னையை இழுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தவன் பாரதியை பார்த்து குதூகலத்தில் குதித்தவன் அவளை தட்டமலை சுற்றியவாறே அன்னை திருமணத்திற்கு சம்மதித்ததை கூறினான் விக்ரம்.
எனக்கென ஏற்கனவே
பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி
இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…
என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே அதை
என்னென்று அறியேனடி
ஓரப்பார்வை பார்கும் போது
உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும்
உாரிமை உனக்கே உனக்கே
கண்ணே உன்னை
காட்டியதால் என் கண்ணே
சிறந்ததடி உன் கண்களைக்
கண்டதும் இன்னொரு கிரகம்
கண்முன் பிறந்ததடி
காதல் என்ற ஒற்றை
நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது…..
காதல் என்ற ஒற்றை நூல்தான்
கனவுகள் தொடுக்கின்றது அது
காலத்தை தட்டுகின்றது
என் மனம் என்னும் கோப்பையில்
இன்று உன் உயிர் நிறைகின்றது
மார்புக்கு திரையிட்டு
மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே
என் வயதையும் வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும்
வார்த்தை பேசுமடி என் புன்னகை
ராணி ஒரு மொழி சொன்னால்
காதழும் வாழுமடி
வார்த்தை என்னை
கைவிடும் போது
மௌனம் பேசுகிறேன்
என் கண்ணீா் பேசுகிறேன்
எல்லா மொழிக்கும்
கண்ணீா் புாரியும்
உனக்கேன் புாரியவில்லை
விக்ரம் இன்முகமா சாந்தியோடு அறையிலிருந்து வெளிப்பட்டதும் அவன் நிலையென்னவோ என்று அமர்ந்திருந்த ரகுராமும், பாரதியும் ஒரே நேரத்தில் எழுந்திருக்க, பாரதியின் அருகில் வந்த விக்ரம் அவளை தூக்கி தட்டாமாலை சுற்றவும் அதிர்ந்தவள் அவன் சொன்ன செய்தியில் திகைத்தாள்.
“என்ன சொல்கிறான் இவன்? கல்யாணமா? பேசினதெல்லாத்தையும் திரும்ப மறந்துட்டான?” விக்ரமிடமிடமிருந்து விடுபட்டவள் யோசனையாக அவனை பார்த்தாள்.
அதையேதான் ரகுராமும் யோசித்தான்.
“எப்ப கல்யாணத்த வைக்கலாம்? இவன் கல்யாணம் பண்ணாதான் நான் கல்யாணம் பண்ண முடியும்” பாரதி யோசிப்பதை பார்த்து அவள் அச்சத்தோடு குழப்பத்திலும் இருக்கின்றாளேறு புரிந்தும் வரும் பிரச்சனைகளை திருமணம் செய்துகொண்டு சமாளிக்கட்டும் என்று பேசினான் ரகுராம்.
“ரொம்பநாள் இவளுக்காக காத்திருந்தேன். இனிமேல் முடியாது. அடுத்த முகூர்த்தத்திலையே கல்யாணம் தான்” என்ற விக்ரம் எந்த கோவில் திருமணத்தை வைக்கலாமென்று அன்னையிடம் ஆலோசனை கேட்டான்.
என்ன இவன் மாத்தி, மாத்தி பேசுறானே. இங்க என்ன நடக்கிறது? திருமணத்திற்கு பின் தான் பேசியது ஞாபகம் வந்தால் என்ன செய்வான்? நான் பேசியது தவறு என்று மன்னிப்புக் கேட்பானா? அன்று பேசியதை போல் மீண்டும் சந்தேகப்பட்டு பேச மாட்டானென்று என்ன நிச்சயம்? சந்தேகப்பட்டுக் கொண்டே வாழத்தான் முடியுமா? இந்த திருமணம் நடக்கக் கூடாது என்று நினைத்தாள் பாரதி.
“கல்யாணத்த பத்தி அப்பொறம் பேசலாம் விக்ரம். முதல்ல அம்மாவ வீட்டுக்கு கூட்டிட்டு போ. மோகனா அம்மாவை பார்க்க வேணாமா?” விக்ரம் இங்கிருந்து போனால் போதும். சாந்தி திரும்ப வீடு வந்த ஆனந்தத்தில் வீட்டார் கொஞ்சம் நாள் திருமணத்தை பற்றி பேச மாட்டார்கள். அதற்குள் நான் ஆஸ்ரேலியா சென்று விட வேண்டும் என்று எண்ணினாள்.
அவளிடம் கோபம்கொள்ள முடியாமல் விக்ரமை முறைத்தாள் பாரதி.
பாரதி முறைத்தது தன் அன்னை தன் குடும்பத்தோடு சேர விடும் என்று எண்ணிய விக்ரம் புன்னகை செய்தான். பாரதி தனக்கு கட்டளையிட்டால் நிறைவேற்றாமல் இருப்பானா விக்ரம்? இதோ கிளம்பிட்டோம் என்று உடனே அன்னையை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
அவர்களுக்கு விடைகொடுத்த ரகுராம் பாரதியிடம் திரும்பி “என்ன கல்யாணத்துக்கு பிறகு விக்ரம் திரும்ப பேசுவானென்று அவனை அனுப்பிட்டு ஆஸ்ரேலியா பிளைட்டை புடிக்க ஓடப்போறியா?” என்று அவள் எண்ணத்தை சரியாக படித்து விட்டு கிண்டல் செய்யலானான்.
திகைத்த பாரதி “நீ இன்னும் கிளம்பலையா?” என்றும் விதமாக ரகுராமை முறைக்கலானாள்.
“ஆஸ்ரேலியா என்ன செவ்வாக்கிரகத்திலையா இருக்கு. ஓடி ஒழிய? நீ போனா அடுத்த பிளைட்டுல விக்ரம் வந்து உன் முன்னாடி நிப்பான். உன்ன விட்டு அவனால இருக்க முடியாது. என்ன பண்ணாலும், என்ன பேசினாலும், அங்க சுத்தி இங்க சுத்தி உன் கிட்டத்தான் வருவான். உன்னாலையும் அவனை விட்டுட்டு இருக்க முடியாது. முதல்ல அவனை கல்யாணம் பண்ணிக் கூடவே இருந்து பிரச்சினையை சமாளிக்கப் பாரு” பாரதிக்கு புரியும்படி உரைத்தவிட்டு கிளம்பினான் ரகுராம்.
வீட்டுக்கு போக உனக்கு எந்த பிரச்சினையுமில்லையா? திரும்ப அந்த வீட்டுக்கு போகணுமா? என்று தோண்றினா நாம மோகனாவையும், பாட்டியையும் வெளியே சந்திக்கலாம் என்று அன்னை தந்தையை சந்திக்க விரும்ப மாட்டாள் என்று எண்ணி கேட்டான் விக்ரம்.
“எனக்கு ஒரு பிரச்சினையுமில்ல. உன் அப்பா பண்ணதுக்குத்தான் நான் வீட்டை விட்டு போனேன். இப்போவும் அவர் திருந்தலைனா ஒன்னும் பண்ண முடியாது. அதுக்காக நான் என் வீட்டுக்கு போகாம இருக்க முடியுமா?”
“எது உன் வீடு? நீ எப்போ வீட்டை விட்டு கிளம்புவான்னு காத்திருந்தவரு, நீ போன உடனே இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாரு” என்றான் விக்ரம்.
தந்தை செய்தது தவறுதான், கூடவே இருந்து திருத்த முயற்சி செய்திருக்க வேண்டாமா? அதற்காக பிராயச்சித்தம் என்று பெற்ற குழந்தைகளை விட்டுச் செல்வாளா? இதுவே தந்தை போனவள் என் வாழ்க்கையில் மீண்டும் வேண்டவே வேண்டாமென்று முடிவு செய்து மறுமணம் செய்திருந்தால் என்னவாகியிருக்கும்? சித்தி என்பவளினால் நம் வாழ்க்கை என்னவாகியிருக்குமோ? அன்னை இதை புரிந்துகொள்ள வேண்டும் என்று கேலி போல் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.
தந்தையின் மீது இருந்த கோபத்தில் தந்தை அன்னையை தேடுவதாக ஊருக்கு பாசாங்கு காட்டுவதாக பேசிக் கொண்டிருந்தவன் தந்தை அன்னை மீது வைத்திருக்கும் பாசத்தை விக்ரம் உணர்ந்து கொண்டது அவன் பாரதியை காதலிக்க ஆரம்பித்ததன் பின்னால் தான்.
ஒருவேளை அவருடைய அந்த நல்ல குணம் தான் இவனிடம் ஒட்டிக் கொண்டு எல்லாம் மறந்த நிலையிலும் பாரதியை காதலிக்கின்றானோ, என்னவோ.
“யாரு உங்கப்பாவா? என் புருஷன பத்தி என் கிட்ட குறை சொல்லாதே. அவர் பணம் சம்பாதிக்க தப்பு பண்ணுவார்த்தான். என்னை தவிர இன்னொரு பெண்ணை திரும்பிக் கூட பார்க்க மாட்டாரு” உறுதியாக கூறினாள் சாந்தி.
“அதான் தைரியமா விட்டுட்டு போனியாக்கும். ஒருவேளை எங்களை நோட்டம்விட்டுகிட்டு இருந்தியா?
“ஆமா ஆஸ்ரேலியால இருந்து கண்காணிச்சுக்கிட்டு இருந்தேன் பாரு” சாந்தியும் விக்ரமை கிண்டல் செய்தாள்.
வீட்டையடைந்ததும் சாந்தியின் பேச்சு நின்றது. பழைய ஞாபகங்கள் வந்து நெஞ்சில் முட்டி மோத, கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழியலானது. அன்னையை தாங்கிப் பிடித்தவாறு விக்ரம் வீட்டுக்குள் அழைத்து சென்றான்.
மருமகளை கண்டு சாந்தி தேவி திகைக்க, “அத்த…” என்று கண்ணீரோடு காலில் விழுந்தாள் சாந்தி.
“என்னம்மா, எங்கம்மா போன….” தன் மகனிடம் தவறிருக்க, மருமகளை என்ன பேசுவது? சாந்தி தேவியும் கண்ணீர் சிந்தினாள்.
சத்தம் கேட்டு வந்த மோகனா மீண்டும் ஒருமுறை விக்ரம் பேசிய அனைத்தையும் பேசி அன்னையோடு சேர்ந்து அழுதாள்.
ஆளவந்தான் வீட்டிலில்லை. அவன் வீட்டுக்கு வரும் பொழுது விக்ரம் வீட்டில் இருப்பதை என்றுமில்லாமல் மகன் வந்திருக்கின்றானே என்று ஆனந்த அதிர்ச்சியோடுதான் உள்ளே வந்தான். மனைவியை பார்த்ததும் கண்கள் கலங்க ஏன் விட்டுச் சென்றாய் என்று கண்களால் கேட்டவன் அவளிடம் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை.
சாந்தியும் கணவனிடம் முகம் திருப்பலானாள்.
“என்ன ரெண்டு பேரையும் குறுகுறுன்னு பாக்குற? கோபமா இருக்காங்கன்னு கவலை படுறியா?” அன்னையும் தந்தையும் பேசிக்கொள்ளாமல் இருப்பதை பார்த்து மோகனா கவலையாக பார்த்திருக்க, தங்கையிடம் கேட்டான் விகாரம்.
அவள் பாவமாய் தலையசைக்க, “அம்மாவ இத்தனை வருஷமா தேடினவர் பேசாம இருக்காராருன்னா ஈகோ தான் காரணம். அம்மாக்கு அவர் மன்னிப்பு கேட்கலையேன்னு கோபம். ரெண்டு பேரையும் பேச வைக்கிறேன் என்ற விக்ரம் “பாட்டி…” என்று தேவியை அழைத்தவன் இத்தனை வருஷமா அம்மா வரும்வரைக்கும் நான் கல்யாணம் பண்ணாம இருந்தேன். அதான் வந்துட்டாங்கல்ல. பொண்ணையும் பார்த்துட்டேன்” என்றவன் பாரதி யாருடைய மகள் என்று கூற, ஆளவந்தான் கத்த ஆரம்பித்தான்.