அத்தியாயம் 22

பாரதியின் வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்திய விக்ரம் “உள்ளே செல்லலாமா? இல்லை இப்படியே திரும்பிப் போய் விடலாமா?” நான் இங்கு வந்திருக்கக் கூடாதோ எனும் விதத்திலையே யோசிக்கலானான்.

வண்டிச் சத்தம் கேட்டு வெளியே வந்த கார்த்திகேயன் விக்ரம் வண்டியை விட்டு இறங்காமல் இருப்பதை பார்த்து “ஏதும் பிரச்சினையா?” என்று சைகையாலையே கேட்டிருக்க,

“இவன் வேற பார்த்துட்டானே. இனி உள்ளே போய்தானாகணும்” முணுமுத்த விக்ரம் வண்டியிலிருந்து இறங்கினான்.

“பாரதி வந்து வெல்கம் பண்ணாதான் உள்ள வருவீங்கன்னு நினச்சேன்” அன்று நடந்த எதுவும் விக்ரமின் ஞாபகத்தில் இல்லை என்று பாரதி கூறியிருக்க, சகஜமாக பேசலானான் கார்த்திகேயன். 

மீண்டும் பாரதியை சந்தேகப்பட்டு விக்ரம் பேசியதைத்தான் பாரதி கார்திகேயனிடம் பகிர்ந்திருக்கவில்லையே. தெரிந்திருந்தால் வீட்டில் நடக்கும் பிறந்தநாள் விழாவுக்கு விக்ரமை அழைத்திருக்க மாட்டானே. வாசலில் வந்து நின்ற விக்ரமின் சட்டையை மீண்டும் பிடித்து சண்டையிட்டுருப்பானே.

“பாரதி வந்து வெல்கம் பண்ணனுமா? என்ன நினைச்சுகிட்டு இருக்கான் இவன்? இவங்க ரெண்டு பேரும் போடும் நாடகத்த பார்க்க வந்தேன் என்று நினச்சானா?” எதற்காக வந்தோம் என்பதையும் மறந்து கார்த்திகேயன் பேசியதும் எவ்வளவுதான் கட்டுப்படுத்த முயன்றாலும் விக்ரம் கார்த்திகேயனை முறைக்கலானான்.  

விக்ரம் முறைக்கவும் “என்ன முறைக்கிறான்? ஒருவேளை பழசெல்லாம் ஞாபகம் வந்திருக்குமோ?” என்று கார்த்திகேயன் யோசிக்கலானான்.

“என்ன மாமா ஏன் ராம் உள்ள வராம இருக்கான்?” என்றவாறே வந்தாள் பாரதி. அவள் அவனைத்தான் அழைத்தாள், விக்ரமை கார்த்திகேயன் அழைத்தது தெரியாதே. அங்கே விக்ரம் நிற்கவும் திகைத்தவள் “உள்ள வா” என்று அழைத்தாள்.    

வீட்டுக்கு வந்தவனை “வெளியே போ” என்று சொல்லும் அளவுக்கு பாரதி கோபக்காரியல்லவே. வீடு தேடி வந்தானென்றால், ஒருவேளை நான் வேலையை விடுகிறேன் என்பதினால் பேச வந்தானோ? அதை வீட்டார் முன்னிலையில் எப்படி பேசுவது என்ற எண்ணம் பாரதியின் மனதை அலைக்கழித்தாலும், விக்ரமிடம் முகம் திருப்ப முடியாமல் அழைத்திருந்தாள்.

“எப்போ பார்த்தாலும் ராம்… அவனை மட்டும் தான் அழைத்தாளா?” வெறுப்பாக குரல் வந்த திசையை நோக்கிய விக்ரமின் கண்களில் பாரதி அவனை பார்த்ததும் திகைத்து நின்றது தெளிவாகவே விழுந்தது.

என்னையும் என் குடும்பத்தையும் பழிதீர்க்க திட்டம் போடுபவள் நான் இங்கு வருவேன் என்று எதிர்பார்த்து கார்த்திருந்தாளேயானால் எதற்கு திகைக்க வேண்டும்? என்ற கேள்வி அவன் மண்டையை குடைய, அவனை யோசிக்க விடாமல் ரகுராமின் குரல் தடுத்தது. 

“நீ என்னடா… இங்க பண்ணுற?” என்று வண்டியிலிருந்து இறங்கியவாறே ரகுராம் விக்ரமை கேட்க,

“பர்த்டே பார்ட்டிக்கு போகணும் என்று சொன்னேனே. நீ எங்க போன? நான் சொன்ன கிப்ட்ட வாங்கிட்டு வந்தியா?” என்று ரகுராமை முறைத்தவாறே கையிலிருந்த பரியையும் வாங்கிக் கொண்டான் விக்ரம்.

அதான் கார்த்திகேயன் தன்னையும் அழைத்தானே என்று எதோ நினைவில் பாரதியை காண வந்தவன் எதற்காக அழைத்தான் என்பதை மறந்துதான் வந்திருந்தான். பாரதி ரகுராமை ஆவலாக எதிரிபார்த்து காத்திருக்கின்றாள் என்றதும் பொறாமை வேறு எட்டிப்பார்த்திருக்க,  ரகுராம் வைத்திருந்த பரிசை பார்த்ததும் ஞாபகம் வந்ததுமில்லாமல், நண்பன் இப்படி கேட்டு கோர்த்து விட்டானே என்ற சினத்தில் வளமை போல் பேசினான்.   

“அடப்பாவி எதை மறந்தாலும், இப்படி பேசுறத மட்டும் மறக்கவே மாட்டியா?” விக்ரம் வருவானென்று எதிர்பார்த்த ரகுராம், அவனுக்கு முன்னால் வந்து நிற்பனென்றுதான் எதிர்பார்த்திருக்கவில்லை. கையை வீசிக் கொண்டு வந்தது மட்டுமில்லாம பாரதியை பார்த்ததும் சமாளிக்கிறானே என்று மனதுக்குள்ளேயே நண்பனை வசைபாடிவிட்டு வெளியே புன்னகை மட்டும் செய்தான்.

“உள்ள வர ஐடியா இல்லையா? இப்படியே வெளியே நின்னு பேசிட்டு போயிடுவீங்க போலயே” கார்த்திகேயன் சிரிக்க, இருவரும் ஒருவரையொருவர் முறைத்தவாறே உள்ளே வந்தனர்.

கவியின் பிறந்தநாள் விழாவுக்காக வீடு அலங்கரிக்கப்பட்டு, உணவுகளெல்லாம் தட்டில் அடுக்கப்பட்டு மேசையில் பரப்பி வைக்கப்பட்டிருக்க, வாசலில் யாரையும் காணவில்லை.

“பர்த்டே கார்ல் எங்க?” ரகுராம் குழந்தையை பார்த்தே இராததால் கேட்டிருக்க,

“அம்மாவும், பொண்ணும் இன்னும் ரெடியாகுறாங்க” கார்த்திகேயன் சாதாரணமாகவே பதில் கூறினான்.

விக்ரம் பாரதியை சட்டென்று பார்த்தான். “அம்மா இவதானே. இவ இங்கதான் இருக்கா? இவ அமைதியா இருக்குறதைப் பார்த்தா, இவன் சட்டென்று போட்ட திட்டமா? சட்டென்று போட்டால் இவள் அதிர்ந்து இவனை பார்த்திருப்பாளே. ரதி அதிர்ந்தது போல் தெரியவில்லை. பேசி வைத்து இப்படியும் பக்காவாக திட்டம் போடத்தான் முடியுமா?” என்று விக்ரம் குழம்பினான்.

அவன் மனதில் என்ன ஓடுகிறது என்று புரியாமல் “நான் குடிக்க ஏதாவது எடுத்து வரேன்” என்று உள்ளே சென்றாள் பாரதி.

உள்ளே இருப்பவர்கள் வந்துவிடும் முன் விக்ரமிடம் திருமணத்தை பற்றி பேச வேண்டும் என்று கார்த்திகேயன். “விக்ரம் நான் அடுத்த வாரம் ஆஸ்ரேலியா போகணும். எப்போ கல்யாணத்த வைக்கலாம்? உங்க வீட்டுல பேசினீங்களா?”

பாரதி யார் என்று அறிந்தால் ஆளவந்தான் திருமணத்திற்கு சம்மதிப்பாரா? என்ற கேள்வி கார்திகேயனுக்குள் இருக்கவே கேட்டிருந்தான்.

இவர்கள் போடும் நாடகத்தை நான் கண்டு பிடித்து விட்டேன் என்று பாரதி இவனிடம் சொல்லவில்லையா? சொல்லியிருந்தால் இவன் இவ்வாறு கேட்டிருக்க மாட்டானே! குழப்பமான முகபாவனையோடு “என்ன?” என்று புரியாமல் கேட்டான் விக்ரம்.

ஆளவந்தான் சம்மதித்தால் என்ன? மறுத்தால் என்ன? விக்ரம் முடிவு செய்தால் திருமணம் நடக்கும். ஆனால் அவன் தான் குழந்தை விஷயம் அறிந்து பாரதியை சந்தேகமா பார்த்து பேசி வேறு வைத்திருக்கின்றானே.  பாரதி கவியை பற்றி கூறிய உண்மையை பற்றி தெளிவு படுத்திக்கொண்டால் தான் விக்ரமை சமாதானப்படுத்த முடியுமென்று என்று எண்ணினான் ரகுராம். கார்த்திகேயன் திருமணத்தை பற்றி பேசியதும் விக்ரம் பாரதியை பேசியதை கூட அவள் கார்திகேயனிடம் சொல்லவில்லை என்பதை ரகுராம் புரிந்துக்கொண்டான். 

“அதெல்லாம் பாட்டி பார்த்துப்பாங்க கார்த்திகேயன். பாரதி கவிய அவ பெத்தான்னு ஏதோ சொன்னா? அது…”

விக்ரம் சந்தேகப்படுவது போல் கார்த்திகேயன் பாரதியை திருமணம் செய்திருந்தால், விக்ரம் பாரதியை தூற்றிய பின்னும் அவன் திருமணத்தை பற்றி பேசியிருக்க மாட்டான். நிச்சயமாக பார்கவிதான் அவன் மனைவி. காதல் திருமணமா என்று கேட்டு கார்த்திகேயனின் வாயை கிளறலாம் என்று ரகுராம் நினைக்க, அதற்கு இடம் கொடுக்காமல் கார்த்திகேயன் பேசியிருக்க, வேறு வழியில்லாமல் ரகுராம் நேரடியாகவே கேட்டிருந்தான். 

“என்ன இவன் லூசுத்தனமா பேசுறான். அதான் நான் பெத்த பொண்ணு என்று அவளே சொன்னாளே” என்று விக்ரம் நண்பனை பார்த்திருக்க,

“ஓஹ்… பாரு சொல்லிட்டாளா? சொல்லித்தானேயாக வேண்டும்” மறைக்கக் கூடிய விஷயமா இது என்று புதிரோடு கூறினான் கார்த்திகேயன்.

“இப்போ என்ன பொய்யை சொல்லி சமாளிக்கப் போறானோ” என்று கார்த்திகேயனை முறைப்போடு பார்த்திருந்தான் விக்ரம்.  

குவளைகள் இரண்டில் குளிர்பானம் ஏந்தியவாறு அங்கே வந்த சாந்தி ப்ரியா ஒன்றை ரகுராமிடம் கொடுத்தவள் “தம்பி… உங்களுக்கு சூடா ஏதாவது கொண்டு வரட்டுமா?” என்று கார்திகேயனிடம் வினவியவாறே மற்ற குவளையை விக்ரமிடம் நீட்டியிருந்தாள்.

விக்ரம் கார்த்திகேயனின் முன்னிலையில் ஏதாவது பேசி விடுவானோ என்று குளிர்பானம் எடுத்து வருவதாக பாரதி உள்ளே சென்றவள், விக்ரமை தவிர்க்க சாந்தி ப்ரியாவிடம் குவளைகளை கொடுத்தனுப்பியவள் மறைவாக நின்று விக்ரமை கவனிக்கலானாள்.

விக்ரமின் மூளைதான் பாரதியை சந்தேகப்பட்டு பேசியது போலும் அவன் மனம் அடங்காமல் உள்ளே சென்றவள் வருவாளோ என்று அவனையறியாமலே அவன் கண்கள் பாரதியை தேடித் தவிக்க, சாந்தி ப்ரியாவை பார்த்ததும் “அம்மா….” என்று அதிர்ந்தவாறே எழுந்து கொண்டான் விக்ரம்.

“யாரு தம்பி நீ…” சாந்தி ப்ரியா மகனை அடையாளம் தெரியாமல் கேட்டிருந்தாள்.

விக்ரமின் கைகள் நடுங்க, உதடுகள் துடிக்க, “நீ பெத்த பையன் என்னையே உனக்கு அடையாளம் தெரியலையா? ஏன்மா… எங்களை விட்டுட்டு போன?” அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் விக்ரம் தவித்தவாறே அன்னையை கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தான்.

“ஆதியா… நீ. என் பையன் ஆதியா?” சாந்தி ப்ரியா விக்ரமாதித்யா எனும் விக்ரமை ஆதி என்று தான் அழைப்பாள். பல வருடங்கள் கழித்து சந்தித்த மகனை கட்டிக் கொண்டு அழுதவள் முத்தமழை பொழியலானாள்.

விக்ரம் “அம்மா…” என்று அதிர்ந்து விழிக்கும் பொழுதே சாந்தி ப்ரியாவின் கையிலிருந்த தட்டை கைப்பற்றியிருந்தான் ரகுராம். 

விக்ரம் அன்னையை பற்றி அதிகம் பேசி இருக்கவுமில்லை. ரகுராம் சாந்தி ப்ரியாவை போட்டோவில் கூட பார்த்ததில்லை. நடந்த பாக்டரி விபத்தால் சாந்தி ப்ரியா ஆளவந்தானோடு சண்டையிட்டு வீட்டை விட்டு சென்றதாக மோகனாவின் மூலம் அறிந்து வைத்திருந்தான். அன்னையை பற்றி பேசா விட்டாலும் துப்பறியும் நிறுவனத்தை விக்ரம் அணுகினான் என்பதும் தெரியும். சில விஷயங்களை பற்றி விக்ரம் நண்பனேயானாலும் பகிரமாட்டான். ரகுராமும் அவனே சொல்லட்டும் என்று குடைந்து, விசாரிக்கமாட்டான். ஒருவழியாக அன்னையை கண்டு பிடித்து விட்டானே என்று மகிழ்ந்தாலும், விக்ரமின் அம்மா எப்படி பாரதியின் வீட்டில் என்ற கேள்வி அவன் மண்டையை குடையத்தான் செய்தது.

“சாந்தி அம்மா… விக்ரமின் அம்மாவா?” கார்த்திகேயனுக்கு எதோ புரிவது போல் இருக்க, ரகுராமை பார்த்தான்.  அவனோ அன்னைக்கும் மகனுக்கும் நேரம் கொடுத்து வெளியே செல்லலாமென்று சைகையாலையே கூறலானான். சாந்தி ப்ரியா இங்கே எப்படி வந்தாளென்று கார்திகேயனிடமே கேட்டறிந்துக் கொள்ளலாமே!

சாந்தி ப்ரியாவை பற்றி பாரதி அவளிடமே கேட்டிருக்க, தன்னை பற்றியோ, தன் குடும்பத்தை பற்றியோ எதுவும் கூற மறுத்தாலும் அவளது புலம்பல்களை வைத்து என்ன நடந்திருக்கும் என்று புரிந்துபோக கண்ணீரோடு பார்த்திருந்தாள்.

இருவரும் வெளியே சென்றது கூட தெரியாமல் விக்ரம் அன்னையிடம் செல்லம் கொஞ்சியவாறே விட்டுச் சென்றதை கூறி குற்றம் சாட்டினான்.

“ஏன்மா என்ன விட்டுட்டுப்போன? என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போய் இருக்கலாம்ல” ஞாபகம் தெரிந்த நாளிலிருந்து அன்னையின் முந்தானையை பிடித்துக் கொண்டு திரிந்தவன் தானே.

கணவன் செய்தவற்றுக்கு பிராயச்சித்தம் தேடுவதாக வெளியேறியவள் குழந்தைகளை தன்னோடு அழைத்து செல்ல மனம் ஓலமிட்டாலும் “நானே… எங்க போவேன். என்ன பண்ண போறேன்னு தெரியாம போனேன். உன்ன எப்படி கூட்டிட்டு போறது?” அன்று மனதில் இப்படித்தான் எண்ணி குழந்தைகளை விட்டுச் சென்றாள். 

தன் பின்னால் சுற்றித் திரிந்தவன் தன் தோளுக்கு மேல் வளர்ந்து நிற்பதை பார்த்து கணவன் பிள்ளைகளுக்கு எந்த குறையும் வைக்கவில்லை என்று மனமகிழ்வோடு, கணவனையும் விட்டுக் கொடுக்காமல் “உன் அப்பா கூட இருந்தா தான் நீ ஆசைப்படுற வாழ்க்கை கிடைக்கும்” என்று மட்டும் கூறினாள்.    

“அவர் கூட ….” தன்னையும் தன் தங்கையையும் பாட்டிதான் வளர்த்தாள் என்று கூறாமல், “என்ன விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்தது? நீ இல்லாம நான் எத்தனை நைட் அழுதேன் தெரியுமா? நீ என் பக்கத்துலதான் இருந்திருக்க. ஒருநாள் கூடவா வந்து எங்களை பார்க்கணும் என்று தோணல” பெற்ற பிள்ளைகளே வேண்டாம் என்று என்னும் அளவுக்கு அப்படியென்ன தந்தை கொடுமை இழைத்து விட்டார்? தந்தையின் மீது கோபம் வந்ததுமில்லாமல் கண்முன் நிற்கும் அன்னையின் மீதும் கோபம் கொண்டான்.  

விக்ரமின் கோபமெல்லாம் சாந்தி ப்ரியாவின் கண்களுக்கு குழந்தையில் அவன் அடம்பிடித்து கோபமுற்றது தான் நினைவூட்டியது. அவன் கோபம் கூட தன் மீது இருக்கும் அளவு கடந்த பாசம் என்பதை புரிந்து கொண்டவள் தான் எதற்காக அவர்களை விட்டுச் சென்றோம் என்பதை கூற முடியாமல் அமைதியாக கண்களாளேயே மகனிடம் மன்னிப்பு வேண்டினாள்.

இவனே விவரம் தெரிந்த குழந்தை. பால் குடிக்கும் குழந்தையையே விட்டு வந்தேனே என்ற ஞாபகம் வர “மோகனா… எப்படி இருக்கா? நல்லா வளர்ந்திருப்பாளே…, அத்த….” சாந்தி தேவி எப்படி இருக்கிறாள் என்று கேட்கப் போனவள், உயிரோடு இருக்கிறாளா என்று கேட்க முடியாமல் நிருத்தினாள்.

“என்ன அடுத்தது அப்பா தானே… அவருக்கென்ன நல்லாத்தான் இருக்காரு” வெறுப்பாக பதில் சொன்னான் விக்ரம்.

“அவர் மாறவேயில்லையா…” கண்ணீரோடு சாந்தி கேட்க 

“அவரை விடு… வா வீட்டுக்கு போகலாம்” கலங்கிய கண்களோடு அன்னையின் கண்களை துடைத்தவாறே கூறினான் விக்ரம்.

இந்தியா வந்த உடன் தான் பெற்ற பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் சாந்தி ப்ரியாவுக்கு வராமலில்லை. உற்றார் உறவினர்கள் தூற்றியதால் கணவனும், மாமியாரும் கோபத்தில் பேசியிருப்பார்கள். அதை கேட்டு தான் விட்டுச் சென்றதால் குழந்தைகள் இருவரும் தன் மீது கோபத்தில் இருப்பார்கள். தான் சென்றால் வரவேற்பார்களா? துரத்தியடிக்க மாட்டார்களா? “அந்த வீட்டுக்கா….” குழம்பிய முகபாவனையிலையே கேட்டாள் சாந்தி.

அன்னையின் மனதில் பிரளயமே நடப்பது அறியாமல், தந்தை இருக்கும் வீட்டுக்கு வர பிடிக்கவில்லை என்றெண்ணி “உனக்கு அந்த வீட்டுக்கு போக பிடிக்கலைன்னா, நீ என் வீட்டுக்கு வா” அவனே இருப்பது ரகுராமின் வீட்டில். நண்பனின் வீட்டுக்கு அழைத்து செல்ல அவன் எண்ணவில்லை. அவன் தான் இப்பொழுது சம்பாதிக்கின்றானே. அன்னைக்காக வீடு வாங்க மாட்டேனா என்று உரிமையாக அழைத்தான். 

“உன் வீட்டுக்கா?” சட்டென்று மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி, மகன் எவ்வளவு வளர்ந்துட்டான் என்று புன்னகைத்த சாந்தி “அதுக்கு உன் பொண்டாட்டி சம்மதிக்கணுமே” தான் வீட்டை விட்டு வரும் பொழுது மகனுக்கு ஏழு வயது. இந்நேரம் அவனுக்கு திருமணமாகி குழந்தை கூட இருக்கும் என்ற எண்ணத்தில் கேலி செய்தாள்.  

“பொண்டாட்டியா? அப்படி ஒருத்தி இருந்தா தானே” பாரதி சென்ற திசையை கோபமாக வெறித்தவன் அன்னை சோகமாக பார்க்கவும் “நீயே பொண்ணு பாரு. நீ சொல்லுற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன். ஓகேவா? இப்போ வீட்டுக்கு போலாமா?”

“அம்மா எப்படி ரதியின் வீட்டில்?” என்ற கேள்வி விக்ரமை குடையாமலில்லை. ஆனால் பதில் தெரிந்துகொள்ளும் ஆவல்தான் வரவில்லை. இங்கிருந்து அன்னையை அழைத்து சென்றால் போதும் என்றே பேசினான்.

“போலாம்டா… கவி பர்த்டே பார்ட்டி முடியட்டும்” என்று சாந்தி ப்ரியா கூறிக் கொண்டிருக்கும் பொழுதே

“பாரு இங்க நின்னுகிட்டு என்ன பண்ணுற?” அதட்டும் தொனியிலையே கவியை அழைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள் பார்கவி.

பாரதி சாதாரண சுடியில் இருக்க, பார்கவியும், கவியும் ஒரே மாதிரியான துணியில் ஆடை தைத்துப் போட்டிருக்க, இருவரும் அன்னை மகள் என்று கூறாமல் கூறினாள் பார்கவி. 

அவள் தான் கார்த்திகேயனின் மனைவி என்ற அடையாளங்கள் அலங்காரத்தில் இருக்க, விக்ரம் சரியாக கண்டு கொண்டான்.

விக்ரமை அங்கு சற்றும் எதிர்பாராது அதிர்ச்சியை அப்பட்டமாகவே முகத்தில் காட்டியிருந்தாள் பார்கவி.

“வாம்மா… இது என் பையன்” என்று பொதுவாகவே அக்கா, தங்கைக்கு மகனை அறிமுகப்படுத்தினாள் சாந்தி.

பார்கவியை கண்டுகொள்ளாது பாரதியை பார்த்தவனின் பார்வையே மாறிப்போய் இருந்தது.

சாந்தி ப்ரியாவுக்காக பாரதி அவனை முதல் முறை பார்ப்பது போல் தலையை மட்டும் அசைத்தாள்.   

“என்னது இவன் இந்தம்மா பையனா?” மேலும் அதிர்ந்த பார்கவி பதில் கூறாது, இந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்று புரியாமல் பதட்டமாக அவளுக்கு இருக்கும் ஒரே அன்பான உறவு கார்த்திகேயன் மட்டும் தான் என்று எண்ணிக் கொண்டிருப்பவள் “மாமா எங்க?” என்று கார்த்திகேயனை தேடினாள். 

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிர் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க

கடை கண்கள் நீ வீச

கொக்கை போல நாள்தோறும்

ஒற்றை காலில் நின்றேன் கண்மணி

பார்கவி தான் கார்த்திகேயனின் மனைவி என்றால், கவி என் குழந்தையென்று ரதி ஏன் சொன்னாள்? விக்ரமுக்குள் ஆயிரம் கேள்விகள். குழப்பங்கள். கண்முன் நடப்பதை புரிந்துகொள்ள முடியாமல், மனம் தடுமாற, தலை வேறு வலிக்க, தலையை பிடித்துக் கொண்டான்.

“விக்ரம் என்ன பண்ணுது?” பதட்டமாக பாரதி அவனை நெருக்கி இருக்க, “ரதி…” என்று அவள் தோளில் சாய்ந்தான் விக்ரம்.