தூரத்தில் வந்து கொண்டிருந்த சந்திரனை கண்டதும் கணேசனுக்கு திக்கென்று இருந்தது. “ அய்யோ மீசை ” என்று தலையில் கைவைத்தவன் வேந்தனை திரும்பி பார்க்காமல் அப்படியே நின்று விட்டான்.
“இவன் பாக்குற வேலைக்கு மாட்டினா மர்கயா தான்!! இப்போ ஏதாவது பண்ணணுமே” என யோசித்தவன் அவசரமாக கீழே படுத்துக்கொண்டான்.
பின்பு கண்ணைமூடி “ அய்யோ அம்மா போச்சே” என்று காலைப்பிடித்துக் கொண்டு அலற ஆரம்பித்துவிட்டான்.
கணேசனின் அலறல் சத்தம் கேட்டு முதலில் நிதானத்துக்கு வந்தது என்னவோ ஸ்ரீதான்.
அவனது முத்தத்தில் மூழ்கியிருந்தவள் கண்ணைத் திறந்து பார்க்க தான் இருக்கும் நிலையை உணர்ந்தவள் அதிர்ந்துவிட்டாள்.
அவனை தன்னில் இருந்து விலக்கப் பார்க்க அவன் விலகினால் தானே
பின்பு ஆக்ரோஷமாக அவன் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டாள்.
அவளது இதழுக்குள் மூழ்கி இருந்தவன் அவள் தள்ளிவிடவும் அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றான்.
அவன் நிதானத்துக்கு வரவே சிறிது நேரம் எடுத்தது.
தனது செயலின் வீரியம் புரிந்தவன்
“ ப்ச் வேந்தா என்னடா பண்ணியிருக்க!! சும்மாவே ஆடுவா இப்போ இதுக்கு வேற குதி குதின்னு குதிப்பாளே “ என்று நினைத்துக்கொண்டவன் நெற்றியை நீவிக்கொண்டே அவளை ஏறிட்டுப்பாரத்தான். அவன் சுதாரிக்கும் முன்பே தனது மொத்த சக்தியை திரட்டி வேந்தனின் கண்ணத்தில் ஓங்கி பளாரென அறைந்திருந்தாள் ஸ்ரீ.
எங்கிருந்து அவ்வளவு வலிமை வந்தது என்றே தெரியவில்லை.
கண்டிப்பாக அவனுக்கு வலித்தது.
அந்த சத்தத்தில் அலறிக்கொண்டிருந்த கணேசன் கூட திரும்பி பார்த்துவிட்டு
“ யம்மா என்னா அடி” என்று தனது கண்ணத்தை பொத்திக்கொண்டான்.
அவளால் இதனை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
நினைக்க நினைக்க தன் மீதே கோபமாக வந்தது.
அவளது இந்த நிலைக்கு அவன் மட்டும் தானே காரணம். எல்லாவற்றையும் செய்து விட்டு எதுவுமே நடவாதது போல் முத்தமிடுகிறான்.
அவளும் அதற்கு இசைந்துக் கொடுத்திருக்கிறாள்.
நினைக்க நினைக்க இன்னுமே அவளுக் கு தன் மீதே ஆத்திரமாக வந்தது.
அவளது மொத்த கோபத்திற்கும் வடிகாலாக இருந்தது எதிரில் நின்றிருந்த வேந்தன் தான்.
அவள் இப்படி அறைவாள் என்று எதிர்பாரக்காதவன் “ ஏய் “ என்று சீறிக்கொண்டே அவளை அடிப்பதற்கு கையை ஓங்கிவிட்டான்.
பின்பு அவளிருக்கும் நிலையை உணர்ந்தவன் கைகளை இறுக்கமாக மூடி தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
“ ச்ச” என்று கையை உதறியவன் “ உஃப்” என்று என்று பெருமூச்சு விட்டவன் அவளை பார்க்க
“ ஏன் கையை எறக்கிட்டீங்க??
அடிக்க வேண்டியது தானே??” என்று கட்டிக்கொண்டே கேட்டாள்.
அவன் அமைதியாக நிற்கவும்
“ இதை முன்னமே நான் பண்ணியிருக்கனும்டா” என்று சீறியவள்
“ நம்புனேன்டா!!! மொத்தமா ஏமாத்திட்ட இல்லை??” என்று உடைந்துப் போனக்குரலில் கேட்டாள்.
கேட்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் விழவா எனக்கேட்டுக்கொண்டே தேங்கி விட்டது. அவனுக்கு முன்னே அழக்கூடாது என நினைத்தவள் அடக்கிக்கொண்டே நின்றிருந்தாள்.
“ நீயே முடிவுப் பண்ணிட்டா எப்படி டி?? நான் சொல்லுறது கொஞ்சம் கேளேன்??” என்றான் ஆற்றாமையுடன்
“ம்ம்ம்” என்று கைநீட்டி தடுத்தவள்
“ போதும் டா சாமி!! நீ சொன்னதெல்லாம் கேட்டுதான் இந்த நிலைமயில் வந்து நிக்கறேன்!!
இனி கேட்க ஒன்னுமே இல்லை!!
என் மூஞ்சியில இனிமே முழிக்காத!! இதுதான் நான் உன்னை பார்க்கறது கடைசியா இருக்கனும் “ என்று விரல் கூறியவள் விறுவிறுவென வீட்டிற்குள் சென்று விட்டாள்.
“ சொல்லுறத கேட்கவே மாட்டோங்கறா!! அவசரக்கொடுக்கை” என வாய்விட்டே திட்டினான்.
“ உன் நிலைமை ரொம்ப கஷ்டம்டா!! விடு பார்த்துக்கலாம்!!” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டே திரும்பினான். அங்கே படுத்தவாக்கிலேயே இருந்துக்கொண்டு
“ என்னடா நடக்குது இங்கே” என்பது போல் பார்த்துக்கொண்டிருந்தான் கணேசன்.
அவன் அருகில் சென்றவன் “ யோவ் என்னய்யா இது” என்று இடுப்பில் கை வைத்துக்கொண்டே கேட்டான்.
“ அதை நான் கேட்கனும்டா!!” என்றவன் “ எங்கே வந்து என்ன வேலைடா பார்க்குற?? உள்ளே பார்த்தில்ல ஊரே இங்கே தான் இருக்கும் போல!! ஒவ்வொருத்தனும் எப்படி இருக்கானுங்க?? ஒரு அடி தாங்குவோமா ரெண்டு பேரும்” என்று பேசிக்கொண்டே இருக்க “ இருக்கற பிரச்சனையில இவர் வேற” என்று நினைத்தவன் “ வயசானவன் விழுந்துக்கிடக்கிறியே என்று ஹெல்ப் பண்ண வந்தா ரொம்ப பேசுற!! போயா நான் போறேன்” என்றவன் வீட்டிற்குள் நுழைந்துவிட்டான்.
“ வயசானவனா!! எல்லாம் என் நேரம்” என்று புலம்பியவன் எழுந்து கொண்டே வீட்டிற்குள் செல்லப் போக வழியில் இருந்த கல்லில் இடறி விழுந்து விட்டான். இம்முறை நிஜமாகவே காலில் அடிப்பட்டுவிட்டது.
தோட்டத்தின் பக்கம் வந்த சந்திரனோ நேறாக மாட்டுத்தொழுவத்திற்கு தான் சென்றுக்கொண்டிருந்தார்.
வழியில் வேலு வர “ எப்படி வேலு நடந்தது” என்றுக்கேட்டுக்கொண்டே தொழுவத்திற்கு சென்றனர்.
“ தெரியலைங்கயா மாட்டுக்கு தண்ணிக் காட்ட வந்த ராமையா தான் பார்த்து இருக்கான், இப்போதான் பண்ணியிருக்காங்க, கண்டிப்பாக வெளியூர் காரனாத்தான் இருக்கனும்” என்று சொல்லிக்கொண்டே வற அங்கே வெற்றி ஆசையாக வளர்த்தக்கொண்டிருக்கும் காங்கேயம் காளைகள் இரண்டும் வாயில் மூக்கில் ரத்தம் வந்துப் படுத்துக்கொண்டிருந்தன.
அருகில் இருவர் பச்சிலை மூலிகைகளை கரைத்து அதற்கு புகட்டிக்கொண்டிருந்தனர்.
மருத்துவம் பார்த்து முடியவும் சந்திரனிடம் வந்த வைத்தியர் “ சரியான நேரத்தில் பார்த்ததால் உயிருக்கு ஒன்னும் பயமில்லங்க ஐயா!! கால் தொய்யறதுக்கு முன்னே மாத்து மருந்து கொடுத்தாச்சு, விஷம் ராத்திரிக்குள்ள முறிஞ்சிடும், காலையில் எழுந்து காளை ரெண்டும் நின்னுடும் ஐயா” என்றுக்கூறினார்.
மேலும்சில அறிவுரைகளும் மருந்தையும் கொடுத்துவிட்டு “ இந்த மருந்தை மூனு நாளைக்கு கொடுத்துடுங்க!! மருந்து ரொம்ப வீரியமா இருக்க” என்று தொடர்ந்தவரோ “ ஐயா” என்று தயங்கி நிற்கவும் “என்னாச்சு வைத்தியரே! ஏன் தயங்கறீங்க ” என்று வேலு தான் கேட்டான்.
“ அது வந்துங்கயா யாரோ வேணுமின்னு பண்ணியிருக்காங்க ஐயா, ஏன்னா இந்த மருந்து சுலபமாக கிடைக்காது, இதுக்கென்னே பத்தியமா இருந்து செய்றவங்க இருக்காங்க!!
ஆனால் நம்ம ஊரு பக்கம் இந்த மருந்து கிடைக்காதுங்க!!
எதுக்கும் பாத்து இருந்துக்கங்க ஐயா!” என்று கூறினார்.
அதனை கேட்டப்பிறகு சந்திரனுக்கு குழப்பம் மட்டுமே எஞ்சியது. அப்படி யார் எதிரி இருக்கிறார்கள். அதுவும் ஈவு இரக்கமில்லாம் வாயில்லா ஜீவனை கொல்லுமளவுக்கு என்று தான் யோசித்துக்கொண்டிருந்தார்.
வேலு வைத்தியர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தவன்” கவலைப்படாதீங்க ஐயா ராத்திரிக்குள்ள பண்ணவனை உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன்!! நம்ம வீட்டுக்குளள் வர எவனுக்குமே இனி தைரியம் வரக்கூடாது!!” எனவும்
அவரது முதுகையே இரு ஜோடிக்கண்கள் குரூரமாக பார்த்துக்கொண்டிருந்தன.
வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த கனகா வேலு இருக்கும் இடத்திற்கு வர, அங்கே மணியுடன் பேச்கொண்டு நின்றிருந்தான் அவன். அவனது முதுகுப்புறம் மட்டுமே தெரிந்தது.
அவனை பார்த்தவள் விறுவிறுவென அவனிடம் செல்ல பேசிக்கொண்டிருந்தவன் அவளது கொலுசு சத்தத்தில் திரும்பி பார்த்தான். பின்பு மறுபடியும் மணியிடம் கதைக்க ஆரம்பித்துவிட்டான்.
அவ்வளவு தான் கால்கள் பின்னிக்கொண்டன. இத்தனை நேரம் இருந்த தைரியம் எங்கே சென்றன என்று தெரியவில்லை. அமைதியான சுபாவம் கொண்ட பெண்தான். அதற்காக தைரியமில்லை என்றெல்லாம் கிடையாது. மனதளவில் முதிர்ச்சியானவள். இந்த சிறுவயதில் அவள் அடைந்த துயர்கள் ஏராளம்.
சிறுவயதில்அவள் எஸ்எஸ்எல்சி பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற பெண்தான். இப்போது தான் இந்த ஊர் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதற்கு வெற்றிதான் முழுமுதற்காரணம் எனலாம். ஆனால் அந்த காலத்தில் மேற்படிப்புக்கு வெளியூர் சென்று தான் படிக்க வேண்டும்.
கடன் வாங்கித்தான் அவளது தாய் பர்வதமும் தந்தை சண்முகமும் வெளியூரில் படிக்க வைத்தனர். திடீரென ஒரு தீவிபத்தில் அவளது தந்தை சண்முகம் இறந்துவிட குடும்ப பாரம் மொத்தமும் பர்வதத்தின் மேல்தான் வந்து விழுந்தது.
தனி ஆளாக இரண்டு பெண்பிள்ளைகளை எந்தவித பற்றுக்கோளும் இல்லாமல் வளர்ப்பதற்கு பெரும்பாடு பட்டார் பர்வதம். கடன்களோ கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டன. பர்வதத்தால் சமாளிக்க முடியாத கட்டத்தில் தன் பிள்ளைகளின் படிப்பை நிறுத்தியிருந்தார். கையில் பணமில்லை சொத்துக்கள் என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. கடன் மட்டும் ஏறிக்கொண்டே தான் சென்றது. வேறுவழியின்றி தனது பிள்ளைகள் இருவரையும் வேலைக்கு அனுப்பினார் பர்வதம். அவரும் ஊரில் உள்ள சிறு வேலைகள் பார்த்துக்கொண்டுதான் குடும்பம் ஓடியது. வரும் வருமானம் வட்டிக்கே செலவாகிவிட எங்கிருந்து வீட்டைப் பார்ப்பது. கனகா சந்திரனின் வீட்டில் வேலைக்கு சேரும்போது அவளுக்கு வயது 16 . சிறகடித்து பறக்க வேண்டிய வயது.
ஆனால் வறுமையோ அவளது வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற அத்தியாத்தையே அழித்திருந்தது. அவளது துருத்துருத்தனம் விளையாட்டுத்தனம் எதுக்கும் இடமில்லை என்பதைவிட நேரமில்லை. வாழ்க்கையின் ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருப்பவள்.
அவளால் முடிந்தது தனக்கு கிடைக்காத படிப்பு தன் தங்கைக்காவது கிடைக்க வேண்டும் என்று நினைத்தவள் தனது தங்கை லெட்சுமியை படிக்க வைத்தாள். இப்போது அவள் இளங்கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறாள்.
ஆசைகள் என்பதே அற்றது அவள் வாழ்வு. அப்படிப்பட்டவள் முதன்முதலில் ஆசைப்பட்டது வேலுவைத் தான்.
இந்த ஆசையும் நிராசையாகி விடக்கூடாது என்பதுதான் எப்போதும் அவளது வேண்டுதலாக இருக்கும்.
கால்கள் தள்ளாட அவனருகில் வந்து நின்றாள். அவள் வந்துவிட்டாள் என்று தெரிந்தும் அவன் திரும்பவில்லை.
“ திரும்பினாத்தான் என்னவாம்” என்று நினைத்தவள் மணியிடம் “ போ “ என்பதுபோல் வேலுவின் பின்னால் இருந்து சைகை செய்தாள்.
அதனை புரிந்துக்கொண்டவனும் “ ஜமாய்ங்க அண்ணே!! வறேன் அண்ணே”என்றவன் எட்டி கனகாவிடம் “ வறேன் அண்ணி” என்று சொல்லி விட்டு செல்ல “ டேய் புண்ணாக்கு வாங்கனும் கேட்டுட்டுபோடா” என கத்தினான்.
“ முதலில் அங்க என்ன சொல்லுறாங்க என்று கேளுங்க,அப்பறம் புண்ணாக்க பாக்கலாம்” என்று சொல்லிக்கொண்டே அவன் சென்றுவிட்டான்.
“ம்ம்ம்” என்று பெருமூச்சு விட்டவன் அங்கொருத்தி இருப்பதையே கண்டுக்கொள்ளாமல் நகர முற்பட
“ உங்க உங்கக்கிட்ட பேசனும்” என்று திக்கித்திக்கி தான் வார்த்தை வந்தது.
திரும்பி அவளை ஏறிட்டு பார்த்தவன் “ நீ என்ன பேசப் போறன்னு எனக்கு தெரியும் , அதுமட்டும் வேண்டாம், வேற ஏதாவது பேசு” என்று நேறாக கூறிவிட்டான்.
அதைத்தவிற அவளுக்கு பேச என்ன இருக்கும்
“ நான் என்ன பேசனும்னு நீங்க எப்படி சொல்வீங்க!!
நான் கேட்கறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க போதும்” என்றாள் தலையைக்குனிந்தபடி
அவன் அமைதியாக நின்றானே தவிர எதுவும் சொல்லவில்லை
“ சரி இல்லைனு ஏதாவது சொல்லுங்களேன்!! இப்படியே இருந்தா என்னன்னு எடுத்துக்கறது”
“ நீ தானே சொன்ன கேட்கறதுக்கு மட்டும் பதில் சொல்லுன்னு!! கேளு” என்றான்.