“ இல்லக்கா என்னமோ தெரியலை!! மனசுக்கு எதுவும் சரியாப்படலை!!”என கூறினாள்.
“ அதெல்லாம் ஒன்னுமில்லை ப்ரீயா விடுங்க!! என்றவள் “ வாங்க நானே உங்களை ரெடி பண்ணுறேன்” என்று கூற
“ இதுவே போதும் விடுங்கக்கா” என்று சலித்துக்கொண்டாள்.
“ நான் சொல்லுறேன் இல்லை வாங்கம்மா” என்றவள் உரிமையாக கையைப்பிடித்து டிரசிங் டேபிள் அருகே அழைத்துச்சென்று அமரவைத்து ஸ்ரீயை அலங்கரிக்கத்தொடங்கினாள்.
“ இந்த அம்மாவ விட்டுத்தான் தொலைங்களேன் அக்கா !! வாயசான போல ஃபீல் ஆகுது” எனவும் “ அது மட்டும் முடியாதுமா “ என சிரத்துக்கொண்டே கூறவும் “ உங்களைவிட உங்களைவிட 3 மாசம் சின்னப்பொன்னுதானே அட்லீஸ்ட் பெயர் சொல்லியாவது கூப்பிடுங்க!!” என்று கூறவும் அதற்கு சின்னசிரிப்பையே பதிலாக அளித்தாள்.
“ இப்படி சிரிச்சே மழுப்பறீங்க பாருங்க!!” என்று இவர்கள் பேசிக்கொண்டே இருக்கவும் கதவை படாரென திறந்தேக்கொண்டே வந்தாள் பார்வதி.
“ அக்கா மாமா பூ கொடுத்துவிட்டாங்க!!” என்று சொல்லிக்கொண்டே வந்தவள் கொண்டுவந்த மல்லிகை பூபந்தை கனகாவிடம் நீட்டினாள்.
“ அது யாரு புதுசா எனக்கு தெரியாத மாமா” என்று அலங்காரத்தில் கவனமாக இருந்தவள் அதனை ஒற்றை கையால் வாங்கி மேசையில் வைத்துக்கொண்டே கேட்டாள்.
“ அதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச மாமா தான் அக்கா!!” என்று இழுக்கவும்
“ என்னடி உளறுற! ஒழுங்கா யாரு என்று சொல்லு!!” எனவும் “ வேலு மாமாதான் அக்கா” என்கவும் அவளுக்கு புசுபுசுவென கோபம் வந்து விட்டது.
“ அடிச்சேன்னா பாரு அண்ணா என்று சொல்லுடி” அவள் கையில் நறுக்கென்று கிள்ளிவிட்டாள். “அவுச் வலிக்குது அக்கா!!” என்றவள் கையை தேய்த்துக்கொண்டே “ அண்ணாவெல்லாம் இல்லை மாமா முறைதான் “ என்று மீண்டும் கூறவும் கடுப்பாகிவிட்டாள்.
“ கொஞ்சம் கிட்டவாடிம்மா என்னமுறைனு நான் சொல்லுறேன் “ என்று அவள் அருகே வர “ எஸ்கேப்” என்றவள் தள்ளி நின்றுகொண்டே ” ஏன்கா இப்படி டியூப்லைட்டா இருக்கீங்க!” எனக்கத்திவிட்டு வெளியேறப்போக கதவில் இடித்துக்கொண்டாள்.
“ பார்த்து போடி “ என கனகாவும் “ பாரு பார்த்துடி “ என ஸ்ரீயும் ஒருசேர குரல் கொடுத்தனர். “ அச்சோ “ என்று ஸ்ரீ நாக்கை கடித்துக்கொண்டே கனகாவை ஏறிட்டு பார்க்க அவள் எங்கே இவளை கவனித்தாள்..
அவள் யார் என்னவென்று ஸ்ரீயும் கேட்கவில்லை, அவள் பெயர் எப்படி தெரியும் என்று கனகாவும் கேட்கவில்லை. மொத்தத்தில் அவள் இந்த உலகிலேயே இல்லை ஸ்ரீயிடம் ஆறுதலாக பேசினாலும் மனதளவில் சோர்ந்து தான் போய்விட்டாள்.
எல்லாம் காதல் படுத்தும் பாடு.
“ பைத்தியக்காரி புரியாம உளறிட்டுப் போறா” என முணுமுணுத்தவள் அத்தனை பூக்களையும் ஸ்ரீ மறக்க மறுக்க அவள் தலையில் வைத்துவிட்டு “ இப்பத்தான் லட்சனமாக இருக்கீங்க இப்படியொரு அழகியை தூக்கிட்டு போக எவன் வரானோ” என்று கையால் திருஷ்டி சுற்றியவள் கண்மையால் திருஷ்டி பொட்டும் வைத்துவிட்டு விருந்தினர்களை கவனிக்க வெளியேறிச்சென்றுவிட்டாள். இதே சமயம்
“ இன்னும் எவ்வளவு நேரம் மாம்சு?? முடியலை” என்று சலித்துக்கொண்டே கேட்டான் வேந்தன்.
“ எத்தனை தடவடா சொல்றது?? பத்து நிமிஷம் போய் சேர்ந்திடலாம்” என்று சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டினான் கணேசன்.
“இதையே தான் ஒரு மணி நேரமா சொல்லிகிட்டு இருக்க!! நீ காரை ஓட்டுறியா இல்லை உருட்டிரியான்னே தெரியலை, இந்த ஸ்பீட்ல போனா அடுத்த வாரம் தான் பொண்ணு வீட்டுக்கு போய் சேர முடியும்” என்றவன்
“ ஏன்டா நான் உயிரோடு இருக்கறது பிடிக்கலயா?? இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா!!” என்றார் அவசரமாக “சைக்கிள் காரனெல்லாம் ஓவர்டேக் பண்ணி போறனுங்க மாம்சு , ஒரு நூறுலயாவது போயா” என்றான்.
“ வாய மூடிட்டு அமைதியா அடக்க ஒடுக்கமா வாடா எங்களுக்கு தெரியும்!! இதுவே போதும்” என்று ரோட்டை பார்த்துக்கொண்டே சொல்லவும் கடுப்பானவன் “ இப்ப மட்டும் நீ வண்டிய நிறுத்தல இப்படியே குதிச்சு ஓடிடுவேன் பார்த்துக்க,!!” என்று கார் கதவை திறக்க போக
“டேய் குதிச்சிடாத இருடா ” என்றவர் வண்டியை ஓரமாக நிறுத்த
“அப்படி வா வழிக்கு !! யாருகிட்ட” என்றவன் வம்படியாக டிரைவர் சென்று சீட்டில் அமர்ந்தான்.
பக்கத்து சீட்டில் அமர்ந்த கணேசன் முதலில் சீட் பெல்ட்டை போட்டுக்கொண்டு பின்னால் உட்கார்ந்து இருந்த லெட்சுமியை பார்க்க அவர் சீட் பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்தார்.
“ அக்கா முதலில் சீட் பெல்ட்ட போடு இவன் ஸ்பீடுக்கெல்லாம் நீ தாங்கமாட்ட!!” என்றதும் ஏதோ யோசித்துக்கொண்டிருந்தவர் “ ஹான் என்ன கணேசா??” என்று சிந்தனை கலைந்து கேட்க “ சுத்தம் “ என்று தலையில் அடித்துக்கொண்டவர் “ நான் சொல்றது எது உனக்கு கேட்டு இருக்கு !! சீட் பெல்ட்டை போடு “ என்றவர்
“ ரூட்டு தெரியுமாடா” என்று கேட்கவும் அவனை ஒரு மாதிரியாக திரும்பி பார்த்தவன் “ நீயே சொல்லு மாம்சு!! நான் பிக்கப் பண்ணிக்கறேன்” என்றான்.
“ இப்படியே நேரா” என்றதுதான் தாமதம் அவன் கைகளில் கார் பறந்தது
“ மெதுவாடா மெதுவா” என்ற கணேசனின் அலறல்கள் எதுவும் அவன் காதில் விழவே இல்லை.
அடுத்த அரைமணி நேரத்தில் ஸ்ரீ இல்லம் முன்பு வந்து நின்றது வேந்தன் வந்த கார்.
“ ஏன்டா இப்படி உயிரை எடுக்கிற??” என புலம்பிக்கொண்டே வண்டியிலிருந்து இறங்கினான் கணேசன்.
“ எல்லாம் ஒரு கிலுகிலுப்புக்குத்தான் மாம்சு!!” என கணேசனிடம் வம்பிழுத்துக்கொண்டே வண்டியிலிருந்து இறங்கினான் வேந்தன்.
வாசலில் அவர்களை வரவேற்ப்பதற்காக சந்திரனும் வேலுவும் நின்றிரருந்தனர்.
“ வாங்க சம்மந்தி வாங்க மாப்பிள்ளை!!” என்று சந்திரன் வரவேற்க ஒரு சிறு தலையசைப்பை மட்டுமே பதிலாக அளித்தவன் மௌனமாகவே அவர்களை பின்தொடர்ந்து வீட்டினுள் நுழைந்தான்.
அவர்களை வீட்டினுள் அழைத்துச்செல்ல உள்ளே சென்றவர்களுக்கு மயக்கமே வராத குறைதான்
“ என்னக்கா பொண்ணு தானே பார்க்க வந்து இருக்கோம்!! அதுக்கு ஏன் இவ்வளவு பேரு !!” என்று அங்கே கூடியிருந்த கூட்டத்தைப்பார்த்து ஆச்சர்யமாக கேட்க “ ரொம்ப அதிகமில்லை தம்பி நெருங்கின சொந்தம் மட்டும் தான் வந்து இருக்காங்க” என்று சந்திரன் தான் பதிலளித்தார். “ நெருங்கினவங்களே இவ்வளவா” என்று சொல்ல “ கொஞ்சம் சும்மா இரு கணேசா” என்ற லெட்சுமியின் குரலில் அமைதியானான்.
வரவேற்பறை உள்ளே வந்தவர்களை சோஃபாவில் அமர செய்தவர் தானும் அவர்களுக்கு எதிராக அமர்ந்துக் கொண்டார். அருகில் வந்து வேலுவும் நின்றுக்கொண்டான்.
சிறிது நேரம் சம்பிரதாயமாக பேசிக்கொண்டிருந்த லெட்சுமி “ அண்ணே பொண்ணை வரச்சொல்லுங்க பார்த்திடலாம் ” எனவும் கையில் காஃபி ட்ரேயுடன் ஸ்ரீ வரவழைக்கப்பட்டாள்.
மூன்று பேர் மட்டுமே பெண்பார்க்க வந்திருந்தனர். லெட்சுமி முதலில் அமர்ந்திருக்க பக்கத்தில் கணேசன் அமர்ந்திருந்தார். கடைசியாக போனை பார்த்துக்கொண்டே வேந்தன் அமர்ந்து இருந்தான்.
முதலில் லெட்சுமி மற்றும் கணேசனுக்கு காஃபியை கொடுத்தவள் கடைசியாக தலையை நிமிர்த்தாமல் ட்ரேவை நீட்ட கடைசிவரை கப் எடுக்கப்படாம்ல இருக்கவும் மெல்ல தலையை நிமிர்த்தி பார்த்தவளுக்கு கட்டுக்கடங்காமல் ஆத்திரம் வந்துவிட்டது.
உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க பெரும்பாடு பாட்டாள்.
கையில் இருந்த ட்ரேயை அழுத்தமாக பிடித்துக் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டாள்.
கணேசன் வேந்தனின் தோளில் இடித்து “ டேய் எடுடா!! ட்ரேய தூக்கி அடிச்சிடப்போகுது!!” என மெல்ல சிரித்துக்கொண்டே சொல்ல அவன் கேட்டால் தானே “ இல்லை நோ தேங்க்ஸ்” என்று கையை நீட்டி சொன்னவன் மீண்டும் குனிந்துக்கொண்டான்.
“ படுபாவி இந்த நேரத்தில் தான் கரெக்டா பழிவாங்குவான்” என பல்லை கடித்த கணேசன்
“ மாப்பிள்ளைக்கு டீ காஃபி குடிக்கற பழக்கம் இல்லை அதான்” என்கவும் ம்ம்ம் என்கிற ரீதியில் தலையாட்டியவர்
“முன்னாடியே சொன்னதுதான் சம்மந்தி வற 5 ஆம் தேதி கல்யாணம் அதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னே கோவிலில் வச்சு சிம்பிளா நிச்சயம் பண்ணிடலாம்” என்று லெட்சுமியிடம் நேராக திருமண விசயங்களை பேச ஆரம்பித்து விட்டார்.
ஏற்கனவே பேசிவைத்ததுதான் என்பதால் ஆமோதிப்பமாக தலையசைத்தவர் “ வெற்றித்தம்பி முன்னாடியே பேசிட்டாரு அண்ணே!! எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை!!உங்க விருப்பம்!!” என்று திருப்தியாக புன்னகைக்கவும் மேலும் சில திருமண விசயங்களை இருவரும் பேசிக்கொண்டிருக்க கணேசனோ
“ பொண்ணு போட்டோல பார்த்தமாதிரியே தான் இருக்கு!! அப்போ போட்டோக்கு ஃபில்டர் எதுவும் போடல போல!! என நினைத்தவர் சந்திரனையும் ஸ்ரீயையும் மாறி மாறி பார்த்தான்.
“பொண்ணு உன் மாமியார் ஜாடை போல மாப்ள தப்பிச்சிட்ட!!” என வேந்தனின் காதில் கிசுகிசுக்க அவனை திரும்பி கேவலமாக ஒரு லுக் விட்டவன் அப்போதும் அவளை கண்டுக்கொள்ளவே இல்லை.
ஸ்ரீயின் அருகில் நின்றிருந்த கனகாவோ பட்டு வேஷ்டி சட்டையில் சந்திரனின் அருகில் கம்பீரமாக நின்றிருந்த வேலுவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
எப்போதும் கட்டம் போட்ட சட்டைதான் அணிவான்.
அதுவே அவனை பேரழகனாக காட்டும்.
இன்று விசேஷத்திற்காக வெள்ளை சட்டை வேஷ்டி அணிந்து இருந்தான்.
அது இன்னுமே அவனது தோற்றத்தை மெருகேற்றியிருந்தது.
அவனை உச்சிமுதல் பாதம் வரை ரசித்தாள்.
அவன் அதனை கவனித்தாலும் அவள்புறம் திரும்பவில்லை.
தோட்டத்தில் வேலை செய்யும் மணி வந்து அவனிடம் ஏதோ கூற ஆமோதிப்பாக தலையசைத்தவன் கையில் இருந்த ஐம்பொன் காப்பை மேலே ஏற்றிக்கொண்டே அவசரமாக அவனோடு பின்பக்கமாக சென்றான்.
அதனை கவனித்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக யார் கவனத்தையும் ஈர்க்காமல் சிறிது நேரம் கழித்து அவனை பின்தொடர்நது சென்றாள்.
“டேய் கணேசா!!பொண்ணு வந்து இவ்வளோ நேரம் ஆகுது, அவனை நிமிர்ந்து முகத்தை பார்க்க சொல்லுடா” என லட்சுமி தன் தம்பி காதை கடிக்க
“ம்க்கும்!! இது வேறயா?? அவன் வந்ததே பெருசு!!” என போனை நோண்டி கொண்டிருந்த வேந்தனை பார்த்து கொண்டே சொல்ல
“ சம்பந்தி பார்வையே சரியில்லை!! ஒழுங்கா பார்க்க சொல்லு!!
வீடு போய் சேரனும்” என தன் முறுக்கு மீசை திருகிகொண்டே வேந்தனை ஆராந்து கொண்டிருந்த சந்திரனை கண்களால் சுட்டிகாட்ட
“ சரி இரு” என அவன் சொல்லி வாய் திறக்கவில்லை
“ எனக்கு பொண்ணு கிட்ட தனியா பேசணும்” என கேட்டிருந்தான் வேந்தன்.
லெட்சுமியும் கணேசனும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்து கொள்ள
“மாப்பிள்ளை என்ன சொல்றாரு” என கணேசனை பார்க்க
“சொன்னது நான் !! எனக்கு பொண்ணு கிட்ட தனியா பேசணும்!!” என மீண்டும் கூற
“அது வந்து” என கணேசன் ஏதோ சொல்ல வர
அவரை கை நீட்டி தடுத்த சந்திரன் “ ம்ம்ம்” என்றார்.
ஸ்ரீ எழுந்து முன்னே நடக்க வேந்தன் அவளை தொடர்ந்து பின்னாலேயே சென்றான்.
“டேய் அவன் ஏதாவது பேசி காரியத்தை கெடுத்துட போறான்!! போடா!!’’ என கணேசன் காதை கடிக்க
“என்ன ரொம்ப நேரமா குசுகுசுன்னு பேசிக்கறீங்க ரெண்டு பேரும்” என சந்திரன் கேட்க
“அது ஒண்ணுமில்ல அண்ணா!! என அவருடன் பேச ஆரம்பித்து விட்டார்.
கணேசனும் “பாத்ரூம் எங்கே?? “ என கேட்டுக்கொண்டே பின்னால் வர
ஸ்ரீ தோட்டத்து பக்கம் சென்று ஒரு மரத்தின் அருகே நின்று வேந்தனின் முகத்தை பார்க்க
அவள் அருகில் வந்தவன், அவள் முகத்தை கையில் ஏந்தி அதிரடியாக அவள் இதழை சிறை செய்திருந்தான் அவன்.
அவனிடமிருந்து விலக முயற்சித்தவள் அவன் இதழணைப்பில் மெல்ல சுயம் மறந்து இமைகளை மூடி முத்தத்தில் லயித்தாள்.
பின்னாலேயே வந்த கணேசன் அங்கு கண்ட காட்சியில்
“ஆத்தாடி” என நெஞ்சில் கைவைத்து திரும்பி வீட்டிற்குள் செல்ல முற்பட
மீசையை திருகி கொண்டே சந்திரன வந்து கொண்டிருந்தார்.