“என்ன பாட்டி என்ன விஷயம். எதுக்கு உடனே வரச் சொன்னீங்க?” அதற்குள் பெண் பார்த்து விட்டாளா? உள்ளம் சுணங்கினாலும் தான் எடுத்த முடிவுதானே தலையை உலுக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த விக்ரம் அப்பத்தாவிடம் விசாரித்தவாறே அமர்ந்தான்.
“எல்லாம் உன் தங்கச்சி செய்யும் சேட்டை தான். என்னன்னு நீயே கேளு” முகத்தை திருப்பினாள் சாந்தி தேவி.
“சேட்டை செய்ய அவள் என்ன குழந்தையா? அப்படி என்ன செய்துட்டா?” அப்பத்தா தன்னை பார்க்க வேண்டுமென்று பொய்யாக காரணங்களை கூறி வீட்டுக்கு வரவழைப்பாளென்றும், அதை மோகனா கூறுவதால் இவன் வீட்டுக்குச் செல்லாமல், ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி பாட்டியை வெளியே சந்திப்பானென்றும் மோகனா கூறியிருக்க, இன்றும் அதே போல் தான் அழைத்திருப்பாளென்று அமைதியாகக் கேட்டான்.
“உன் கல்யாணத்தோட இவ கல்யாணத்தையும் ஒரே மேடையில பண்ணலாம்னு இவளுக்கு மாப்புள பார்க்கவான்னு கேட்டா, இவ உன் ப்ரெண்டத்தான் கட்டுவாளாம்” அங்கே வந்த மோகனாவை பார்த்து கூறினாள் சாந்தி தேவி.
விக்ரம் தனக்கு பெண் பார்க்குமானு கூறியதை மோகனாவிடம் கூறியதும் அதிர்ந்தவள் விஷயத்தை ரகுராமின் காதில் போட அலைபேசியோடு ஓடியதில் பேத்தியின் திருமணத்தை பற்றி சாந்தி தேவியால் பேச முடியாமல் போக, மீண்டும் அவள் வீடு வந்த உடன் கேட்டிருந்தாள். மோகனா முடிவாக தான் ரகுராமை தான் திருமணம் செய்வதாக கூறியிருக்க, ஆளவந்தானுக்கு கண்மண் தெரியாத கோபம் வந்து கத்தலானான்.
சாந்தி தேவி மகனை சமாதானப்படுத்தி பேரனிடம் விசாரிக்கலாமென்று விக்ரமை வீட்டுக்கு அழைத்திருந்தாள்.
“பிரெண்டு என்று நாய கூட்டிட்டு வந்து நடுவீட்டுல வச்சா அது மனிஷன போல நடந்துக்குமா என்ன? அது அதோட புத்தியைத்தான் காட்டும்” தான் பெற்ற பிள்ளைகளை முறைத்தவாறே அமர்ந்தான் ஆளவந்தான்.
“என்னது ரகுவும் மோகனாவும் காதலிக்கிறார்களா? எப்போல இருந்து? ரகு ஏன் என்னிடம் சொல்லவில்லை? ஒருவேளை அவன் அப்பா சாவுக்கு பழிவாங்க மோகனாவை பயன்படுத்திக்க நினைக்கிறானோ?
அவன் தான் ரதியை என்னிடம் வேலை பார்க்க அழைத்து வந்ததாக கூறினான். அப்படியென்றால் இருவரும் சேர்ந்து என் குடும்பத்தை பழிதீர்க்க திட்டம் போட்டார்களா?” விக்ரமுக்கு நடப்பவைகளால் நண்பன் மீது அடிக்கடி சந்தேகம் தோன்றினாலும், ரகுராமின் நடவடிக்கைகளை கொண்டு சந்தேகத்தை துரத்தியடிப்பான். தன் காதல் பொய்த்துப் போனதில், காதலி ஏமாற்றியதில் மனமுடைந்த விக்ரம் தனக்கு நடந்தது தானோ தன் தங்கையும் நேர்கிறது என்று மீண்டும் ரகுராமை சந்தேகம் கொண்டு கோபமாக ரகுராமை அழைத்து உடனே வீட்டுக்கு வரச் சொன்னான்.
“நான் இப்போதான் வீட்டுக்கு வந்தேன். நீ எங்க?” தன் வீட்டில் விக்ரமை தேடியவாறே கூறினான் ரகுராம்.
“நான் என் வீட்டுக்கு வரச் சொன்னேன்”
“ஏதாவது பிரச்சினையா?” என்று ரகுராம் கேட்கும் பொழுதே விக்ரம் அலைபேசியை துண்டித்திருந்தான்.
தன்னோடு தங்க வந்தபின் ஒருநாளும் விக்ரம் பிரித்துப் பார்த்ததுமில்லை. பேசியதுமில்லை. இன்று “என் வீடு” என்று கூறியதில் பிரச்சினை பெரிது என்று உடனே கிளம்பினான் ரகுராம்.
“இப்போ எதுக்கு அவனை வீட்டுக்கு வரச் சொல்லுற? அவனுக்கு உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடிவு பண்ணிட்டியா? இந்த ஜென்மத்துல அது நடக்காது” என்று ஆளவந்தான் மகனை முறைக்க,
“நான் யாரை கல்யாணம் பண்ணனும், யார் கூட வாழனும் எங்குறது என் இஷ்டம். உங்க இஷ்டத்துக்கு என்னால வாழ முடியாது” தந்தையை முறைத்தாள் மோகனா. ரகுராம் தன்னை காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் அவனை காதலிக்கிறேனே. அது போதும் என் காதல் அவனை மாற்றும் என்று எண்ணியவள் ரகுராம் தன்னிடம் நடந்துகொள்ளும் முறையை வைத்து ரகுராமுக்கு தன் மீது காதல் இருந்தும் அவன் மறைகிறான். அவன் காதலுக்காக எதுவும் செய்ய மாட்டான். நான் தான் என் காதலுக்காகவும், இருவருக்காகவும் போராட வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். அண்ணன் இருக்கும் நிலையில் சொல்ல அவளும் நினைக்கவில்லை. அவளது திருமணத்தை பற்றி பேசினால் கூறித்தானேயாக வேண்டும்.
“அப்பாகிட்ட இப்படித்தான் கூட கூட பேசுவியா?” சாந்தி தேவி பேத்தியை அதட்டினாள்.
மோகனா தன் விருப்பத்தை கூறிய பொழுது சாந்தி தேவிக்கு ரகுராமை மறுக்க காரணம் ஏதும் இல்லை. மகனிடம் சென்று பேசினாள். ஆளவந்தான் கடுமையாக எதிர்த்ததோடு, தான் எதற்காக மறுக்கிறேன் என்ற காரணத்தையும் தெளிவாக கூறியிருக்க, மகன் செய்து வைத்திருப்பவைகளால் பேரப்பிள்ளைகள் அவதியுறுவார்களோ, மகனின் அச்சம் போல் நடந்து விடுமோ என்று சம்மதம் கூற தயங்கினாள்.
“இங்க பாரு அப்பத்தா… திரும்ப சொல்லுறேன். நான் ரகுவைதான் கல்யாணம் பண்ணுவேன். இல்லனா கடைசி வரைக்கும்…” மோகனா முடிக்கவில்லை அவள் கன்னம் தீயாய் எரிந்தது. விக்ரம் தான் அடித்திருந்தான்.
அதை அங்கிருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. ஏன் விக்ரம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டான்.
பத்து வருட காலத்தை மறந்து, தன் காதலியை மீண்டும் காதலித்ததை மறந்து அவள் ஏமாற்றிவிட்டதாக எண்ணிக் கொண்டிருப்பவனுக்கு யாரை பார்த்தாலும் சந்தேகம், எதை பேசினாலும் கோபம் மட்டும் தானே வரும். தன்னை போல் தன் தங்கையும் ஏமார்ந்து விடக் கூடாதே என்ற ஆதங்கம். கண்முன் நடப்பவைகளை புரிந்துகொள்ளாமல் இருக்கின்றாளே என்ற கோபத்தில் அடித்திருந்தான்.
“டேய் என்னடா இது புதுப்பழக்கம்” சாந்தி தேவி பேரனை அதட்டும் பொழுதே,
“டேய் என்னடா…” கத்தினான் ஆளவந்தான். என்னதான் பிள்ளைகள் இருவரும் முகம் திருப்பினாலும், தனக்கு பிடிக்காததை செய்தாலும், சத்தம் போடுவானே ஒழிய, அடித்ததில்லை. தானே தன் செல்லமகளை கைநீட்டியதில்லை. தன் மகன் கைநீட்டிட்டானே என்ற ஆதங்கம் ஆளவந்தானின் சத்தத்தில் எதிரொலித்தது.
அதிர்ந்து நின்ற மோகனா அண்ணனிடம் எதிர்ப்பை எதிர்பார்த்திருக்கவில்லை. தான் திருமணம் செய்தால் ரகுராமைதான் திருமணம் செய்வதாக தெளிவாக அன்று கூறியிருந்தாளே. தான் கூறியதை அண்ணன் மறந்து விட்டானென்று அக்கணம் மோகனாவும் மறந்துதான் போயிருந்தாள்.
“என்னடா… எப்பயுமில்லாத பழக்கம் பொம்பள புள்ளைய கைநீட்டுற” சாந்தி தேவி பேரனை அதட்டிக் கொண்டிருக்கும் பொழுதே ரகுராம் உள்ளே நுழைந்தான்.
விக்ரம் வீட்டை விட்டு ரகுராமோடு வந்து தங்கிய பின் ரகுராம் இந்த வீட்டுக்கு வந்ததேயில்லை. ஒருநாளுமில்லாமல் நண்பன் எதற்காக இங்கு வரச் சொன்னான். ஒருவேளை மோகனாவை தனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியது ஞாபகத்தில் வந்திருக்குமோ? அதுதான் விஷயமென்றாலும் ரகுராமால் உவகைக்கொள்ள முடியவில்லை. இதையறிந்தால் ஆளவந்தான் எவ்வளவு கோபப்படுவார் என்று அவனுக்குத் தெரியாதா? விக்ரம் அவரை சம்மதிக்க வைக்க முயன்று தோற்றுத்தான் தன்னை அழைத்தானோ? மோகனா… அவள் ஏடா கூடமாக ஏதும் செய்து விட்டாளோ?
என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடியாமல் உள்ளே வந்தவனுக்கு மோகனாவை அடித்து விட்டதாக சாந்தி தேவி கூறியது காதில் விழவும் யாரையும் கண்டுகொள்ளாமல் அவளிடம் ஓடியிருந்தான். அவளோ கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அழுகையை அடக்கியவாறு பிடிவாதமாக நின்றிருந்தவள் ரகுராமை பாவமாய் பார்த்தாள்.
சிவந்திருந்த அவள் கன்னத்தை பார்த்தவனுக்கு தன்னால்தான் இந்த அடியென்று புரிந்து போக “ஏன் சார் என்னதான் இருந்தாலும் உங்க பொண்ண அடிப்பீங்களா?” அடித்தது தன் நண்பன் என்று தெரியாமல் ஆளவந்தானை கேட்டான்.
ரகுராம் தனக்காக பேசினான் என்றதும் தன்னிலை மறந்த மோகனா அவன் மீது விழுந்து கேவலானாள்.
என்ன பேசி வைத்தாளோ, எதற்காக அடித்தாரோ எண்றதெல்லாம் தாண்டி அவள் மீதிருந்த காதல் மெதுவாக எட்டிப் பார்க்க, ரகுராமும் அனிச்சையாக அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்.
அதை பார்த்து கொதித்த விக்ரம் மோகனாவை தன்பக்கம் இழுத்தவாறே “என்னடா… நண்பனா இருந்து கொண்டு துரோகம் செய்யிறியா?” என்று ரகுராமை முறைத்தான்.
ஒருநொடி அதிர்ந்த ரகுராம் சத்தமாக சிரித்தான். தான் உயிருக்கு உயிராக காதலித்தவளையே வேஷகராறி என்றவன் தன்னை பேச எவ்வளவு நேரமாகும்? எல்லாவற்றையும் மறந்து இப்படி இம்சை செய்கிறானே என்று விக்ரமின் மேல் ரகுராமுக்கு பரிதாபம்தான் வந்தது.
ரகுராமின் சிரிப்பு விக்ரமுக்கு எரிச்சலையூட்டியது.
“என்ன உன் குட்டு உடைந்ததென்று பைத்தியம் பிடிச்சிருச்சா? உன் அப்பா சாவுக்கு எங்கப்பா காரணமென்று பழிவாங்க லவ்வ ஆயுதமா எடுத்தியா? அதுக்கு பலியாடு என் தங்கச்சியா?” விக்ரம் கூறி முடிக்கவில்லை.
“அண்ணா…” அதிர்ந்தாள் மோகனா.
ரகுராம் கொஞ்சம் கூட அதிர்ச்சியடையவில்லை. பாரதியை பேசியவன், மோகனா விசயமறிந்தால் தன்னையும் இவ்வாறுதான் பேசுவானென்று எதிர்பார்த்தான். அதனாலயே மோகனாவிடம் தன் காதலை சொல்ல கூடாதென்று முடிவேத்திருந்தான்.
நேற்று ரகுராம் கதவை தட்டிக் கொண்டே இருக்க, “இதை பற்றி பேசுவதாயின் நான் வீட்டை விட்டு செல்கிறேன்” என்று மிரட்டினான் விக்ரம்.
இவனிடம் பேசி புரியவைக்க முடியாது. முதலில் பாரதியை சமாதானப்படுத்தலாமென்று கிளம்பினான். அவள் வீட்டிலில்லை. எங்கு சென்றாலென்று அலைபேசியில் அழைத்தால் அவளோ எடுக்கவேயில்லை. அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு படப்பிடிப்பு இருக்கவே கிளம்பியிருந்தான்.
படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வந்து பேசலாமென்று எண்ணியிருந்தான். நண்பன் தன்னை துரோகி என்றதில் புதிதாக மோகனா ஒரு பிரச்சினையை இழுத்து வைத்திருக்கிறாள் என்பது தெளிவாக புரிந்தது. தான் வேண்டாம், வேண்டாமென்றாலும் மோகனா விடமாட்டாளென்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வந்து நிற்கும் என்றுதான் அவன் எதிர்பார்க்கவில்லை.
தன்னை சந்தேகம் கொண்டிருந்தால் விக்ரம் என்றோ வீட்டை விட்டு சென்றிருப்பான். இது சந்தர்ப்ப சூழ்நிலையால் வந்த சந்தேகம். அதை துடைத்தெறிய வேண்டியது என் கடமை. பாரதியின் பிரச்சினை தீர்ந்திருந்தால், விக்ரம் தன்னை புரிந்துகொண்டிருப்பான். எல்லாம் மறந்த அவன் இப்பொழுது இவ்வாறுதான் பேசுவான். அதற்கேற்றது போல் தானும் பேச வேண்டும் என்று முடிவு செய்தான் ரகுராம்.
“என்ன காரணமென்று சொல்லாம என்ன வீட்டுக்கு வரச் சொன்ன. வந்தா மோகனா அறைவாங்கி நிக்கிறா. நான் பார்த்து வளர்ந்த பொண்ணு. உரிமையில என்னனு கேட்டேன். ஆனா நீ என்னையே குத்தம் சொல்லுற. என்னனு சொன்னா நான் விளக்கம் கொடுப்பேன். குத்தம் சொன்னா நான் ஒன்னும் பேசாம கிளம்பிடுவேன்” என்றான்.
“என்னடா நடிக்கிறியா?” ஆளவந்தான் பாய்ந்து ரகுராமை அடித்திருக்க, மோகனா தந்தையை தள்ளி விட்டாள்.
“ஐயோ ஆளா…” சாந்தி தேவி பதற, விக்ரம் தந்தையை தாங்கிப் பிடித்திருந்தான்.
“ரகு… வா போலாம். நமக்கு யாரும் வேண்டாம்” மோகனா அவனை இழுக்க,
ரகுராமின் நோக்கம் புரியாமல் இப்படி நடந்துகொள்கிறாளே என்று தங்கையை எரிச்சலோடு பார்த்த விக்ரம் “என்னை மீறி என் தங்கையை அழைத்து சென்று விடுவாயா?” என்று ரகுராமை கொலைவெறியோடு முறைக்க வேறு செய்தான்.
அவளிடமிருந்து தன் கையை அகற்றியவாறே “நாம எப்போ லவ் பண்ண ஆரம்பிச்சோம்? நான் எப்பயாவது உன்ன லவ் பண்ணுறேன்னு சொன்னேனா? இல்ல கல்யாணம் பண்ணுவேன் என்று உன் கூட ஊரைச் சுத்தினேனா. இல்ல என்னால நீ கர்ப்பமா இருக்கிறியா என்ன? யாரும் வேணாம் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்லுற? எதோ புரியாம பேசிகிட்டு இருக்கன்னு நினச்சா, என்ன உங்கப்பா கூட கோர்த்து விட்டு என்னையும் என் பிரெண்டையும் பிரிக்கப் பாக்குறியா?” அண்ணனின் நிலை புரியாமல் நடந்துகொள்கிறாளே என்ற கோபம் இருக்க, மோகனாவை கடுமையாக சாடியவாறே குற்றம் சாட்டினான் ரகுராம்.
“நீ என்ன சொல்ல? நீ சொல்லுறவரைக்கும் என்னால காத்துகிட்டு இருக்க முடியாது. நான் உன்னத தவிர யாரையும் கல்யாணம் பண்ணவும் மாட்டேன். உன்னையும் என்னை தவிர யாரையும் கல்யாணம் பண்ண விட மாட்டேன்”
அண்ணன் எல்லாவற்றையும் மறந்தாலும் ரகுராம் எதையும் மறக்கவில்லையே. நிச்சயமாக அண்ணன் இவனிடம் பேசியிருப்பான். அதை சொல்வான். அண்ணனையும், பாரதியையும் கூட சேர்த்து வைப்பான் என்று இவள் நினைக்க, அவனோ வளமை போல் காதலிக்கவில்லை என்று கூறுகிறான்.
தான் ரகுராமை தான் திருமணம் செய்வேன் என்று கூறினால், தந்தை கத்துவார் அண்ணன் பார்த்துக்கொள்வான் என்று எண்ணியிருக்க, அவள் நினைத்ததற்கு மாறாக விக்ரம் எதிர்த்தானென்றால், அவள் காதலிப்பவன் அவளை ஏற்றுக்கொள்ளாமல் பேசினால் என்னதான் செய்வதாம்?
இவனுக்கு என்னை விட என் அண்ணன் முக்கியமா? அதான் அண்ணன் “துரோகி” என்று பெரிய ஆப்பை சொருகிவிட்டானே. இவன் முகத்தை எங்கு கொண்டு வைப்பது? ரகுராமை முயன்ற மட்டும் முறைக்கலானாள்.
இவன் என்ன சொல்கிறான் என்று ஆளவந்தானும், சாந்தி தேவியும் புரியாமல் பார்த்திருக்க, மோகனா பேசியதில் உண்மை புரிய அவளை முறைக்கலாயினர்.
“இவன் மோகனாவை காதலிக்கவில்லையா?” என்று அதிர்ந்த விக்ரம் தான் இவ்வளவு பேசியும் இவன் என்னை நண்பன் என்கின்றானே என்று புரியாமல் பார்த்தான். மோகனா பேசியதில் அவள் மீதுதான் தவறு என்று புரிய தன்னையே நொந்தான்.
“என்னடா… நடிக்கிறியா? உன் திறமையை என் வீட்டுல காட்டாதே” ஆளவந்தான் எகிறினான். தான் பெற்ற மகள் போயும் போயும் இவன் மேல் பைத்தியமாக இருக்கின்றாளே. மகள் மீது காட்ட முடியாத கோபத்தை ரகுராம் மீது செலுத்தினான்.
“இங்க பாருங்க சார். லவ் பண்ணுறதாக அவ கிட்ட சொன்னதுமில்லை. கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று வாக்கு கொடுக்கவுமில்லை. என் நண்பனே என்ன புரிஞ்சிக்கலானா இனிமேல் இதை பத்தி பேச ஒண்ணுமில்ல” ஆளவந்தானை அடக்கியவன் மறந்து தான் மோகனாவை காதலிக்கவில்லை என்று கூறவில்லை. அவனால் அப்படியொரு பொய்யை சொல்ல முடியவில்லை. சொல்லவும் மனம் வரவில்லை.
விக்ரமின் நிலை ஆளவந்தானுக்கும், சாந்தி தேவிக்கும் தெரியாதே. நண்பன் மறந்து விட்டானென்று நட்பை தூக்கி ஏறிய முடியுமா? அவனை வழிக்கு கொண்டு வர வேணாடாமா?
விக்ரமை பார்த்து “மிஸ்டர் விக்ரம். உங்களுக்கும் எனக்குமான நட்பு இன்னையோட முடிஞ்சது. இனிமேல் உன்… உங்க கூட வேலை பார்க்கவும் எனக்கு இஷ்டமில்லை. நாளைக்கு காலைல ஆபீஸ் வந்து பேசி முடிக்கிறேன்” என்றவன் கிளம்பலானான்.
மோகனா அவனை தடுக்க முயல, நெஞ்சம் வலித்தாலும் கண்டுகொள்ளாமல் கையை உதறினான். மோகனா விடாது ஏதேதோ பேச, அவனோ அவளை கண்டுகொள்ளவேயில்லை. இரும்பாக இறுகி இதயத்தை பூட்டினான்.
“ஏம்பா ரகு கொஞ்சம் நில்லு” ரகுராமை நிறுத்திய சாந்தி தேவி “என் பேத்திக்கு என்ன குறைச்சல்? என் பேத்தியையே வேணாம்னு சொல்லுற?” ரகுராம் பேசியதில் அவன் தன் குடும்பத்தை பழிதீர்க்க நினைக்கவில்லை என்று நிம்மதியடைந்ததோடு, தன் பேத்தியின் விருப்பம் இவன். தன் குடும்பத்தை அறிந்து வைத்திருக்கும் இவனை விட நல்ல மாப்பிள்ளை மோகனாவுக்கு அமையுமா? என்று தோன்றவே கேட்டிருந்தாள்.
“இங்க பாருங்க பாட்டி எனக்கு உங்க மேல நிறைய மரியாதை இருக்கு. எங்கப்பா சாவுக்கு இவர்தான் காரணமென்று நான் ஒருநாள் சொன்னதில்லை. எங்கப்பா எடுத்த முடிவுக்கு அவர் மட்டும் தான் காரணம். பிராயச்சித்தமா இவர் என்னை படிக்க வச்சாரோ, ஐயோ பாவம் என்று படிக்க வச்சாரோ. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண நான் ஒருநாளும் நினைக்க மாட்டேன். இவனே என்ன புரிஞ்சிக்கல. இதுக்கு மேல இதை பத்தி பேசாதீங்க” என்றவன் கிளம்பி விட்டான்.
மோகனா அழுது கரைய, விக்ரமுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டான்.
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே
கண்களில் கண்ணீர் வந்து
உன் பெயரையே எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உளறுதே
நான் என்னை காணாமல்
தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில்
நமக்காக ஒரு மாலை சூடினேன்
உள்ளிருக்கும் இதயத்துக்கு
எனை புரியும்
யாருக்குத்தான் நம் காதல்
விடை தெரியும்
காதல் சிறகானது
இன்று சருகானது என் உள்
நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது
என் பயணம் அது
பனி திரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள்
நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி விளையாட
நான் காதல் பொம்மையா
“பத்து வருடத்துல இதுதாண்டா நடந்தது” என்று கூறினாலும் விக்ரம் புரிந்துகொள்ளும் மனநிலையில் இல்லை. பாரதி குழந்தை பெற்ற விஷயமறிந்து அவளை “ஏமாற்றுக்காரி” என்றவன், மோகனா விஷயத்தில் தன்னை “துரோகி” என்று சொல்வதில் தவறில்லை.
நல்லவேளை நான் மோகனாவுக்கு எந்த வாக்கும் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால், விக்ரமை என்றென்றைக்கும் இழந்திருப்பேன். முதலில் பாரதியின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று அவளை காணச் சென்றான் ரகுராம்.