இப்பொழுதாவது விக்ரம் பாரதியிடம் காதலை சொல்வான். இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்களென்று ரகுராம் பார்த்திருக்க, விக்ரமோ சாந்தி தேவியிடம் பெண் பார்க்குமாறு கூறி திருமணத்திற்கு சம்மதம் கூறிவிட்டான் என்று மோகனாவின் மூலம் அறிந்துக் கொண்டவன் கோபமாக வந்தாலும் நிதானமாகத்தான் விசாரித்தான்.
“என்னடா… நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல? யாரக் கேட்டு உங்கப்பா பார்த்த பொண்ண கல்யாணம் பண்ண சம்மதம் சொன்ன?” மோகனா விக்ரம் பெண் பார்க்குமாறு கூறியதாகத்தான் கூறினாள். ஆளவந்தான் தான் மணப்பெண்ணை காரியாலயத்துக்கே அனுப்பி வைக்கிறாரே. அதை எண்ணியே கேட்டான்.
“யாரை கேட்கணும்? கல்யாணம் பண்ணிக்கப் போறது நான். என் இஷ்டம். இதுல நீ யாரு ஒபினியன் சொல்ல?” விக்ரமும் அமைதியாக பதில் சொன்னான்.
அன்று பார்கவியிடம் பேசி விட்டு வீட்டுக்கு நடந்தவனின் இதயக் கூடு வெறுமையாக போய் இருந்தது.
எதையும் யோசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. சத்தமில்லாமல் கண்ணீர் வடித்தவன் எப்பொழுது தூங்கினானென்று தெரியவில்லை. அவன் நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. ரகுராம் வீடு வந்தால் தனிமை கிடைக்காது என்று ரகுராமை அழைத்தது இரண்டு நாட்களுக்கு வெளியே செல்வதாக மட்டும் கூறி ஒரு ஹோட்டல் அறையில் சென்று தங்கலானான்.
“டேய் என்னடா திடிரென்று? ஏதும் பிரச்சினையா?”
“டேய் நானே குழப்பத்துல இருக்கேன். என்ன கொஞ்சம் தனியா விடேன்” விக்ரம் அதிகாரத் தொனியில் கெஞ்சினான்.
“சரி… போன மட்டும் ஆப் பண்ணாத” பத்து வருட காலங்களை மறந்தவனின் மனநிலை எவ்வாறிருக்கும் என்று உணர்ந்து ரகுராம் நண்பனை தொந்தரவு செய்யவில்லை.
தனிமையின் பிடியில் நடந்த எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக யோசித்துப் பார்கலான்னான் விக்ரம்.
தான் அறிந்து வைத்திருந்த பாரதி அன்பான, அமைதியான, அடக்கமான, அப்பாவியான பெண். அவளுக்கொரு மறுமுகம் இருப்பதாக அவள் இரட்டையே கூறுகிறாளே. இதில் எது உண்மை?
பாரதிக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கும் நிலையில் எதற்காக அதை என்னிடம் மறைத்தாள்? இது ரகுராமுக்கு நிச்சயமாக தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால், அவளை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியிருக்க மாட்டான்.
என் நிலையறிந்து என்னிடம் கூறவில்லை என்று எடுத்துக்கொண்டாலும், ரகுராமிடம் ஏன் மறைத்தாள்?
“பழிதீர்க்க. அவள் அப்பாவை கொன்ற உன் தந்தையை பழிதீர்க்க உன்னை பயன் படுத்த போகிறாள்” என்றது அவன் ஆழ்மனம்.
“இருக்காது….” சத்தமிட்டே முணுமுணுத்தவனின் ஞாபக அடுக்கில் வைஷ்ணவி பேசியவைகள் வந்தன.
“உன்ன பழிவாங்கணும் என்று உன் கூட பிரென்டா சுத்திக்கிட்டு இருக்காளே பாரதி, அவ யார் என்று உனக்குத் தெரியுமா? தெரிஞ்சிதான் நீ அவளை லவ் பண்ணுறியா? பல வருடங்களுக்கு முன்னாடி உங்க அப்பா பேக்டரில நடந்த ஒரு எக்சிடண்ட்டுல ஒருத்தர் செத்தது உனக்குத் தெரியுமா? தெரிஞ்சாலும் அது பாரதியோட அப்பான்னு உனக்கு தெரியாம இருக்கும். செமெஸ்டர் நடுவுல இந்த காலேஜுக்கு எதுக்காக மாறி வந்தான்னு நினைக்கிற? அவ அப்பா சாவுக்கு பழிவாங்க உன்ன பகடைகாயாக்கத்தான். லவ்வு என்ற ஒரு ஆயுதம் போதுமே. மரணத்தை விட வழியை கொடுக்குமே”
“இல்ல… என் ரதி அப்படிப்பட்டவளால…” காதுகளை கைகள் கொண்டு பொத்திக் கொண்டான்.
“என்ன இன்னும் உன் ரதி… எங்குற. அவ கார்திகேயனுடைய பாரு” அவன் மனம் இடித்துரைக்க.
“அப்படியென்றால் அவள் மீண்டும் என் வாழவில் வந்தது பழிவாங்கவா? ஆம் அப்படித்தானே அவள் அக்காவும் எதோ சொன்னாள்” பார்கவி என்ன சொன்னாள் என்பதை நினைவு கூர்ந்தான்.
“எங்கப்பா ஒரு பேக்டரி விபத்துல இறந்துட்டாரு. அதுக்கு காரணமானவன கண்டு பிடிச்சிட்டேன் என்று ஆஸ்திரேலியால இருந்து இங்க வரணும் என்று அடம்பிடிச்சி வந்தா”
வைஷ்ணவி கூறியது போல் காலேஜ் படிக்கும் பொழுது திட்டமிட்டு என்னோடு இருந்தவள் கார்த்திகேயனை ஏன் திருமணம் செய்து கொண்டாள்? அவள் உண்மை முகம் அறிந்து நான் அவளிடமிருந்து விலகி சென்றேனா?
எனக்கு எல்லாம் மறந்து விட்டது என்று அறிந்து கொண்டு பத்து வருடங்கள் கழித்து அவள் பழிவாங்க திட்டம் போட்டுத்தான் வந்தாளா? ரகுராமை கூட தன் நடிப்பால் ஏமாற்றி விட்டாளா?
நான் நினைத்ததற்கு மாறாக இவ்வளவு கீழ் தரமாக இறங்கி விட்டாளே. கொஞ்சமேனும் மனம் உறுத்தித்தான் என்னோடு ஒட்டியும், ஒட்டாமலும் இருந்தாளா? இருக்காது. உறுத்தல் கார்த்திகேயனுக்கு துரோகம் செய்வதை எண்ணி தான் வந்திருக்கும் என்றெண்ணியவனின் கண்களுக்குள் மின்னல் போல் அன்று நூலகத்தில் நடந்த சம்பவம் வந்து போனது.
“என்னமா நடிக்கிற? மாமா, மாமான்னு இவன கொஞ்சிகிட்டே என்ன லவ் பண்ணுறேன்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? பார்க்க நல்லாத்தான் இருக்கான். என்ன பணம், வசதி இல்ல என்று என்ன கல்யாணம் பண்ண திட்டம் போட்டியா? ஒருவேளை இவன் போட்டுக் கொடுத்த திட்டமா? ரெண்டு பேரும் கூட்டா?” விக்ரமின் தலை வலித்தது. தலையை இறுக்கப் பற்றியவன் மாத்திரையை உட்கொண்டான்.
“அன்று என்ன நடந்திருக்கும்? நான் ரதியிடம் இவ்வாறு பேசினேன் என்றால் அவள் உண்மை முகம் அறிந்துதான் பேசியிருப்பேன். இவளை போய் மீண்டும் காதலித்து விட்டேனே. என்னை சொல்லணும்” தன்னையே கடிந்துக் கொண்டான்.
நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்
நீயா பேசியது
என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது
என் அன்பே தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே
பொய் காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே
ஓர் ஊமை காதலன் நானடி
ஏதோ நான் இருந்தேன்
என் உள்ளே
காற்றாய் நீ கிடைத்தாய்
காற்றை மொழி பெயர்த்தேன்
அன்பே சொல்
மூச்சை ஏன் பறித்தாய்
இரவிங்கே பகல் இங்கே
தொடுவானம் போனதெங்கே
உடல் இங்கே உயிர் இங்கே
தடுமாறும் ஆவி எங்கே
உருகினேன் நான் உருகினேன்
இன்று உயிரில் பாதி கருகினேன்
வேரில் நான் அழுதேன்
என் பூவும் சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை
முன்நாளில் காதல் பழக்கமில்லை
உனக்கென்றே உயிர் கொண்டேன்
அதில் ஏதும் மாற்றம் இல்லை
பிரிவென்றால் உறவுண்டு
அதனாலே வாட்டம் இல்லை
மறைப்பதால் நீ மறைப்பதால்
என் காதல் மாய்ந்து போகுமா
என் தந்தை செய்ததற்கு நான் ஒருகாலமும் பொறுப்பாக மாட்டேன். அன்னை போல் பிராயச்சித்தம் தேடுவதாக புலம்பவும் மாட்டேன். ரதி பழிவாங்க வேண்டும் என்றால் என் அப்பாவை ஏதாவது செய்துகொள்ளட்டும். அதுவும் என்னை தாண்டி. அவளால் எனக்கோ என் குடும்பத்துக்கோ எந்த பாதகமும் வர விட மாட்டேன் என்று உறுதி பூண்டவன். முதலில் அவளை வேலையை விட்டு நிறுத்த வேண்டும் என்று ஒப்பந்த ஆவணங்களை தேடி எடுத்தான்.
“பொதுவாக மூன்று மாதம் தான் போடுவதாக ரகு சொன்னானே. இவளுக்கு மாத்திரம் எதற்காக ஒருவருடம் போட்டு வைத்திருக்கிறேன்?” தான் செய்ததையே மறந்து குழம்பினான் விக்ரம்.
பாரதியை வேலையிலிருந்து அனுப்ப முடியாது என்றதும் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவன் தனக்கு திருமணமாகாததால் தானே இன்னும் காதல் நாடகம் போடுகிறாள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாதென்று சாந்தி தேவியை சந்தித்தான்.
“என்னடா… பேராண்டி வீட்டை விட்டு போன பிறகு முதல் தடவ வீட்டுக்கு வந்திருக்க. போன்ல மட்டும் தானே பாட்டியை தெரியும்” முகத்தை திருப்பினாலும், நலம் விசாரித்தாள்.
“காரியமாகணும்னா வந்து தானே ஆகணும்” என்றவாறே அமர்ந்தவன் “மோகனாவுக்கும் வயசாகுது அவளுக்கு ஒரு கல்யாணத்த பண்ணனும். அவ கல்யாணம் பண்ணாதானே நான் கல்யாணம் பண்ண முடியும்” என்றான்.
“இப்போவாச்சும் கல்யாணம் பண்ணனும் என்று நினைக்கிறியே. நான் மோகனாகிட்ட பேசுறேன். அவ இப்போதைக்கு கல்யாணம் பண்ண மாட்டேன்னா என்ன செய்யுறது?” அண்ணனுக்கும் தங்கைக்கும் ஒரே மேடையில் திருமணம் நிகழ்ந்தால் நல்லது தான். பேரன் இறங்கி வந்தது போல் பேத்தியும் வர வேண்டுமல்லவா அதனாலே கேட்டாள்.
யார் மேல்லையும் எதையும் திணிக்க முடியாது. தனக்கு இருக்கும் அவசரம் மோகனாவுக்கு இல்லையே “அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். நீயே பொண்ணு பாரு” என்றவன் கிளம்பி விட்டான்.
மோகனா வீடு வந்ததும் சாந்தி தேவி ஆனந்தமாக விஷயத்தை கூற, அதிர்ந்தாள் மோகனா.
அண்ணன் என்ன பைத்தியமா? அதுக்குள்ள அண்ணிய மறந்துட்டானா? என்று ரகுராமை அழைத்து விஷயத்தை கூறியிருந்தாள்.
விக்ரமின் அறைக்குள் நுழைந்து விசாரிக்கலானான் ரகுராம்.
“டேய் நான் கல்யாணம் பண்ண வேணாம்னு சொல்ல. பாரதிக்கு என்ன பதில் சொல்ல போற? திரும்ப உனக்கு ஏதாவது பிரச்சினையா? அவளை உன் லைப்ல இருந்து தூர நிறுத்த முயற்சி செய்யிறியா?” கண்விழித்ததிலிருந்து “ரதி… ரதி…” என்று பாரதியின் பின்னால் அலைந்தவன் காரணமில்லாமல் இவ்வாறானதொரு முடிவை எடுக்க மாட்டானே என்ற அச்சத்தில் தான் கேட்டான் ரகுராம்.
“நான் எதுக்கு அவளுக்கு பதில் சொல்லணும்? இது என் லைப். என் முடிவு. என் இஷ்டம்”
“எதுக்குடா சொல்லணும். பார்த்தாலே தெரியாதா? அவ எப்படியெல்லாம் உன்ன ஹாஸ்பிடல்ல இருந்து பார்த்துக்கிட்டா” நடந்த எதுவும் விக்ரமின் ஞாபகத்தில் இல்லையென்றாலும், மயங்கி விழுந்தவன் கண்விழித்ததிலிருந்து பாரதி அவன் கூடவே தானே இருக்கிறாள். அதை கூட புரிந்துகொள்ளாமல் பேசுகிறான் என்று ரகுராமுக்கு கோபம் கனன்றாலும், விக்ரமின் நிலையை எண்ணி பொறுமை பொறுமை என்று தன்னையே அமைதிப்படுத்தியவனாகத்தான் பேசினான்.
புகைபடத்தை பார்த்த பின் எழுந்த சந்தேகம் பார்கவி கூறியதை வைத்து உறுதியானாலும், பாரதி அவனிடமிருந்து ஒதுங்கி செல்வதால் தான் எல்லாம் உண்மையென்று நம்பினான் விக்ரம்.
அவளே அச்சத்தில் இருக்க, நெருங்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் தவிக்கிறாளென்று இவனுக்கு யார் புரியவைப்பது?.
“முட்டாள். முட்டாள். அவ நடிக்கிறது கூடவா உனக்குத் தெரியல. அது சரி நீயும் ஒரு நடிகன் தானே. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறீங்களா?” கோபமும், ஆத்திரமும் விக்ரமின் குருதியில் பாய்ந்து என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல் பேசினான்.
“டேய் என்னடா ஆச்சு?” திடிரென்று இவனுக்கு என்னதான் ஆச்சு என்று நண்பனின் தோளை தொட ரகுராமின் கையை தட்டிவிட்டு வாசலுக்கு வந்தான் விக்ரம். அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டு அங்கே சிலையாக நின்றிருந்தாள் பாரதி.
அவளை அங்கே அந்த நேரத்தில் எதிர்பார்க்காத முகபாவத்தை விக்ரம் கொடுத்தது மட்டுமல்லாது, அவன் பின்னால் வந்த ரகுராமும் கொடுத்தான்.
“என்ன பாரதி விக்ரமுக்காக சமைச்சி எடுத்துட்டு வந்தியா?” நிலைமையை சீர் செய்ய அவள் கைகளில் இருந்த கூடையை பார்த்துக் கேட்டான் ரகுராம்.
பாரதியின் இதயம் வலித்து மூக்கு விடைக்க, பெருகும் கண்ணீரை கட்டுக்குள் கொண்டு வந்தவளாக தலையசைத்து மெலிதாக புன்னகைத்தவள் கூடையை மேசையின் மீது வைத்து விட்டு அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.
விக்ரம் ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்திருக்கின்றான். அது காதில் விழுந்த பின்னும் ஏன் என்று கேட்க மாட்டாளா? தனக்காக பேச மாட்டாளா? ரகுராமுக்கு பாரதியின் மேல் கோபம் வந்தது.
“பாரதி நில்லு எங்க கிளம்பிட்ட? இவன் சொன்னது உன் காதுலையும் விழுந்தது தானே. என்னன்னு கேட்க மாட்டியா? உனக்காக நீ என்னைக்கு பேசப் போற? எல்லாம் நடந்து முடிஞ்ச பிறகா?”
“எனக்கு வயசு முப்பதாகிருச்சு. விக்ரம் அவனுக்கு பிடிச்சது போல இளமையா, அழகா ஒரு பொண்ண கல்யாணம் பண்ணனும் என்று நினைக்கிறான். அது அவன் இஷ்டம்” தான் அவனருகில் இருந்தால் அவனுக்கு நடந்ததெல்லாம் ஞாபகத்தில் வந்து விடும் என்று அஞ்சியவளல்லவா.
தன்னை காதலிக்கிறேன் என்றவன் இப்படியொரு முடிவெடுக்க காரணமில்லாமலா இருக்கும்? அதை கேட்டு மேலும் அவனை துன்பமடைய செய்ய வேண்டுமா என்று அமைதியாக அங்கிருந்து கிளம்ப நினைத்தவளிடம் தான் ரகுராம் கருத்துக் கேட்கலானான்.
“இவன் ஒரு முட்டாள். என்ன செய்யுறோம், என்ன பேசுறோம் என்று புரியாம பண்ணுறான். என்ன இந்த வயசுல உன்னால குழந்தை பெத்துக்க முடியலைன்னு நீயும் இவனுக்கு ஒத்தூதுரியா?” விக்ரமின் நிலையை எண்ணி அஞ்சிக் கொண்டிருப்பவள் முட்டாள்தனமாக முடிவெடுப்பதாக திட்டினான்.
“என்னது முப்பது வயசுல கொழந்த பெத்துக்க முடியாதா? இவளுக்கு என்ன பிரச்சினை? அதான் ஏற்கனவே ஒரு குழந்தையை பெத்தெடுத்தாளே” தன்னை முட்டாள் என்று நண்பன் திட்டியதற்காக ஒன்றும் விக்ரம் பேசவில்லை. நண்பன் முட்டாளாகக் கூடாதென்று, இனிமேலும் பாரதியின் பேச்சில் மயங்கி ஏமாறக் கூடாதென்று பேசினான்.
“என்ன உளறுகிறான் இவன்? பாரதிக்கு குழந்தையா? அப்படியென்றால் பாரதி மற்றும் விக்ரமுக்கு பிறந்த குழந்தையா? இது எப்படி சாத்தியம். குழந்தையை பற்றி பாரதி விக்ரமிடம் மறைத்தாளா? அதை வெளிக் கொண்டுவரத்தான் திருமண நாடகமா? ஏதேதோ ரகுராம் எண்ணுகையில்…
“நீ என்ன சொல்லுற?” என்று கேட்டிருந்தாள் பாரதி.
“நான் சரியாகத்தான் கேட்டேன். கவிபாரதி யார்? கார்த்திகேயனுக்கு பிறந்த குழந்தை தானே. நீ சுமந்து பெத்த குழந்தை தானே. உங்க ரெண்டு பேரையும் சேர்த்துத்துத்தானே குழந்தைக்கு பேரே வச்சீங்க” உறுமலோடு கேட்டான் விக்ரம்.
“ஆமா…. ஆனா… கவி” பாரதி விளக்கம் கொடுக்க முனைந்தாள்.
“என்ன ஆனா… ஈனான்னு சமாளிக்கப் பாக்குற? உங்கப்பா சாவுக்கு எங்கப்பா காரணமென்று என்னை பழிவாங்க காதலிக்கிறதா நடிக்கிறியா?” கோபம். கோபம். கோபம். கண்மண் தெரியாத கோபம். தன் காதல் பொய்த்து போனதன் கோபம். தன் காதலி ஏமாற்றியதன் கோபம் மட்டுமே விக்ரமிடம் எஞ்சியிருந்தது.
கவி தான் பெற்றக் குழந்தை என்று பாரதி ஒப்புக் கொண்டதில் ரகுராம் அதிர்ந்து நிற்க, அடுத்து விக்ரம் சொன்னதில் “டேய் என்னடா உளறுற?” இங்கு என்னதான் நடக்கிறது என்று புரியாமல் கத்தினான்.
“ஸ்கூல்ல வச்சி சந்திச்சப்போவே இவளுக்கு நான் யாரென்று தெரிஞ்சிருக்கு. அதான் நாம படிக்கிற காலேஜுக்கு இடையில வந்தா. கார்த்திகேயனை லவ் பண்ணுறவ என்னை பழிவாங்க என்னை காதலிக்கிறதா நாடகமாடினா. இவ குட்டு உடைஞ்சி நான் இவளை துரத்தியடிச்சா, எனக்கு எல்லாம் மறந்து நான் நிம்மதியா இருக்குறது பிடிக்காம புருஷனையும் குழந்தையையும் கூட்டிகிட்டு இங்க வந்து திரும்ப லவ் பண்ணுறது போல நாடகமாடுறா. அவ்வளவுக்கு பழிவெறி. எங்கப்பா பண்ணதுக்கு நான் என்ன செய்ய? அவர் கிட்ட மோத முடியாம கோழை போல லவ் கேம் ஆடுறா. இதுக்கு இவ புருஷனும் கூட்டு. சரியான மானம்கெட்டவ”
விக்ரம் பேசப் பேச அதிர்ச்சியில் உறைந்த பாரதி. அவள் அவனை பழிதீர்க்க காதலித்ததாக நடித்ததாக கூறியதும் கதறியழுதாள்.
“டேய் என்னடா சொல்லுற?” ரகுராம் அறிந்திருந்த விக்ரம் தீர விசாரிக்காமல் எதையும் செய்யமாட்டான் என்பதே. ஒருவேளை அன்று கல்லூரியில் வைத்து நடந்தது இதுவோ. அதனால் தான் பாரதி காலேஜை விட்டு சென்றாளோ” ஒருநொடி அவளை சந்தேகமாக பார்த்தவன் தலையை உலுக்கிக் கொண்டான்.
விக்ரம்தான் எல்லாவாற்றையும் மறந்து பேசுகிறான். ரகுராம் எதையும் மறக்கவில்லையே. அன்று பாரதி அழுத அழுகையும் பொய்யில்லை. இதோ அவன் மருத்துவமனையில் படுத்திருந்த பொழுது அழுத அழுகையும் பொய்யில்லையே. எங்கேயோ எதோ தவறு நடந்திருக்கிறது. நிச்சயமாக பாரதி பழிவாங்க காதலிக்கவுமில்லை. காதலிப்பது போல் நடிக்கவுமில்லை என்பதும் உண்மை என்று புரிய, அழும் அவளை சமாதானப்படுத்த முயன்றான்.
“போதும் ராம். என்னால முடியல. நான் இவன லவ் பண்ணதும் போதும். இவன் என்ன சந்தேகப்பட்டதும் போதும். இதுக்கு மேலையும் என்னால முடியாது. பத்து வருஷமா இவன் பேசின பேச்சு தினமும் என்ன கொன்னுக்கிட்டே இருந்தது. இவனுக்கு ஏதாவது ஆகிடும் என்று நான் எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சு பண்ணா. இவன் என்ன சந்தேகப்பட்டுக்கிட்டே இருக்கான். என்ன நடந்தது என்று என்கிட்டே விளக்கம் கேட்க கூட நினைக்காதவனுக்கு என்னால எதையும் புரிய வைக்க முடியாது” கண்களை துடைத்துக் கொண்டவள் அங்கிருக்க பிடிக்காமல் யாருடைய பதிலையும் எதிர்பாராமல் கிளம்பி விட்டாள்.
“டேய் என்னதான்டா நடந்தது?…” ரகுராம் விக்ரமின் பின்னால் காரணம் கேட்டு அலைய,
“சொல்லுறதுக்கு ஒண்ணுமில்ல. அதான் அவளே எல்லாத்தையும் சொல்லிட்டு போய்ட்டாளே. அவ ஒரு வேஷக்காரி. உன்னையும் என்னையும் சம்பந்தப்படுத்தி ஆன்லைன்ல நியூஸ் பரப்பிவிட்டு எந்த பொண்ணும் என்ன நெருங்கமா பண்ணியிருக்கா”
“என்ன? டேய் நீ பண்ணதெல்லாம் எதுக்கு அவ பண்ணதாக சொல்லுற? விக்ரம் நீ திரும்பத் திரும்ப ஒரே தப்ப பண்ணுற” நிச்சயமாக விக்ரம் பாரதியை தவறாக கருதியிருக்கிறான் என்று உறுதியாக நம்பினான் ரகுராம்.
“ஆமாண்டா… எல்லா தப்பையும் நான் தான் பண்ணேன். போதுமா…” கதவை அடைத்து விக்ரம் சாத்தியிருக்க, கத்தியவாறே தட்டிக் கொண்டே இருந்தான் ரகுராம்.