பெங்களூருவில் அப்போது தான் மழைவிட்டு நின்றிருந்தது போலும். ஜில்லென்று இருக்க, மூன்றாவது தளத்தில் தான் சித்தார்த்தின் இருப்பிடம் என்பதால், குளிர்ச்சிக்கு சொல்லவே வேண்டியதில்லை. இரண்டு படுக்கையறை கொண்ட, எல்லாவித நவீன வசதிகளும் கொண்ட வீடது.
தவமணிக்கு ‘மகள் எப்படி இங்கே சமாளிப்பாள்…’ என்ற எண்ணமே.
புதிய ஊர். புதிய ஆட்கள்.. புதிய வாழ்வு.. கூடவே ஒரு சிறுவன். ஒரு அன்னையாய் அவளை எண்ணி கொஞ்சம் பயமாய் இருந்தது. எல்லாம் சரிவர நடந்திட வேண்டும் இல்லையா.
அவரது முகமே அவரின் கலக்கத்தை காட்டிக் கொடுக்க “என்ன அத்தை?” என்றான் சித்தார்த்.
“ஒ.. ஒண்ணுமில்லை…” என்று அவர் சொல்ல,
“நீங்க எதை நினைச்சும் கவலைப்பட வேண்டாம். வேலைக்கு ஒரு அம்மா வருவாங்க. காலைல பத்து மணியில இருந்து மதியம் ரெண்டு மணி வரைக்கும் கூட இருக்கச் சொல்லிருக்கேன். கடைக்கு போறது எல்லாம் அவங்களே போயிட்டு வந்துடுவாங்க. நான் இருக்கேன்.. நல்லாவே உங்க பொண்ண பார்த்துப்பேன்…” என,
அங்கே தமயந்தியும், பூங்கொடியும் பால் காய்ச்ச ஏற்பாடு செய்துகொண்டு இருக்க, சிறுவனோ இன்னும் துயில் எழவில்லை.
“அண்ணி வாங்க…” என்று தமயந்தி அழைக்க, தவமணிக்கு சித்தார்த்தின் வார்த்தைகள் ஒரு தைரியம் கொடுக்க, தெளிந்த மனதோடு அவரும் சென்று அங்கே நிற்க, அடுத்த சில நிமிடங்களில் விளக்கேற்றி, பால் காய்ச்சி அந்த சம்பிரதாயங்களை முடித்திருந்தனர்.
“ம்மா திங்க்ஸ் செட் பண்றது எல்லாம் கொஞ்ச நேரம் கழிச்சு பண்ணிக்கலாம். நீங்களும் அத்தையும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க…” என்று சித்தார்த் சொல்லிட,
“இல்ல சித்து.. டிபனுக்கு என்னனு பார்க்கணும்…” என்றார்.
“டிபன் ஆகாஸ் கொண்டு வர்றேன் சொல்லிருக்கான் ம்மா…” என, தவமணியும், பூங்கொடியும் யாரது என்று பார்த்தார்கள்.
“என்னோட பிரண்ட் கொடி. இங்கதான் பிப்த் ப்ளோர்ல இருக்காங்க. அவனும் டாக்டர் தான். ஸ்கூல் படிக்கும்போது இருந்தே நானும் அவனும் தோஸ்த்…” என,
“அப்போ பால் காய்ச்சும் போதே கூப்பிட்டு இருக்கலாம் தானே…” என்றாள் பூங்கொடி.
“அவனுக்கும் நாம் ஆர்யன் போல ஒரு பொண்ணு. சோ குழந்தையை கிளம்பி வரணும்னு தான் வர சொல்லல. அதுமில்லாம இப்படியான பார்மாலிட்டீஸ் எல்லாம் அவனும் பார்க்க மாட்டான்…” என்றிட, அடுத்து ஆர்யனும் விழித்துவிட, அவனை கவனிக்கவே சரியாய் போனது.
புதிய இடம் என்பதால் உறங்கி எழவும், சுற்றி சுற்றி பார்த்து விழித்துக்கொண்டு இருந்தான் ஆர்யன். என்னவோ அப்பாவை விட்டு நகருவேனா என்று சித்தார்த் தோள் மீதே ஒட்டிக்கொள்ள, தமயந்தியும், தவமணியும் என்னென்ன பொருட்களை எங்கே வைப்பது என்று எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தனர்.
“கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு பண்ணலாம் தானே ம்மா…” என்று பூங்கொடியும் சொல்ல,
“அதெல்லாம் வேணாம். மதிய சமையல் நம்ம இங்க பண்ணிடலாம். எல்லாமே இருக்குதானே. கொஞ்சம் எடுத்து வைச்சா போதும். பின்ன உனக்கு என்னென்ன வேணுமோ அதை மட்டும் யூஸ் பண்ணிக்கோ…” என்று தவமணி சொல்லிட,
தமயந்தியோ “கேசரி மட்டும் முதல்ல சமைச்சிடு பூங்கொடி…” என்றார்.
“ம்ம் சரிங்கத்தை…” என்றவள், பாலை ஆற்றிக்கொண்டு அறைக்கு செல்ல, சித்தார்த்தின் அந்த மாஸ்டர் பெட்ரூம் மிகப் பெரியது தான். பல்கனியே ஒரு அறை அளவிற்கு இருக்க, என்னவோ படத்தில் வரும் ஸ்டார் ஹோட்டல் அறைகள் போலிருந்தது.
“வாடா ஆருக்குட்டி… உன் ப்பூ பால் கொண்டு வந்திருக்கா பாரு…” என்றபடி சித்தார்த்தே அவனுக்கு குடிக்க வைக்க, பூங்கொடி பால்கனிக்கு சென்று நின்று பார்த்தாள்.
ஜில்லென்ற காற்று வந்து அவள் முகத்தில் மோத, மனதும் ஒருவித இதமாய் இருந்தது. இனி இது உனக்கும் வீடு. இங்கேதான் உனக்கான வாழ்வு. நல்லபடியாய் எதையும் யோசி. நல்லபடியாய் உன் வாழ்வை தொடங்கு என்று அவளது மனம் அதிசயத்திலும் அதிசயமாய் நல்லவிதமாய் யோசிக்க, முகத்தில் உறைந்த ஒரு புன்னகையோடு நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
கீழே, ஒருபக்கம் சின்னதாய் விநாயகர் கோவில் ஒன்று இருப்பது தெரிய, பின் சற்று தள்ளி சிறுவர்கள் விளையாடும் பகுதியும் இருக்க, எல்லாமே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“என்ன கொடி, எப்படி இருக்கு?” என்று சித்தார்த் கேட்க,
“ம்ம் நல்லாருக்கு.. ஆனா வாடகை நிறைய இருக்குமே…” என்றாள்.
“பின்ன முப்பதாயிரம். கீழ ஜிம், ஸ்விம்மிங் பூல், லைப்ரரின்னு எல்லாமே இருக்கு. ஒரு கேண்டீன் கூட இருக்கு…” என,
“ஓ!” என்றாள்.
மனதோ முப்பதாயிடம். பொதுவாய் ஒருவரின் மாதச் சம்பளம். இங்கே வீட்டு வாடகைக்கே இத்தனை பணம் என்று யோசிக்க “நீங்க மட்டும் தானே இங்க இருந்தீங்க. இத்தனை பெரிய வீடு தேவையா?” என்றாள் சாதாரணமாய்.
அவளை ஒரு பார்வை பார்த்தவன் “சரியான கேள்விதான். ஆனா நிஜமா எனக்கு பதில் சொல்லத் தெரியலை. ஆகாஸ் தான் இங்க முதல்ல வந்தான். பின்ன இங்க காலியா இருக்குன்னு சொல்லவும், எனக்கும் பிடிச்சிருந்தது. சோ வந்துட்டேன். வேற பார்க்கனும்னு எல்லாம் தோனல…” என,
ஆர்யன் பால் குடித்து முடிக்கவும், விளையாடும் எண்ணம் வந்துவிட, அவனது பொம்மைகளை தேடவும், பூங்கொடி அவனுக்கு பொம்மைகள் எடுத்துவந்து கொடுக்க, சித்தார்த்தும் வீட்டினில் அங்கே இங்கே என்று சிறு சிறு வேலைகள் செய்துகொண்டு இருக்க, காலிங் பெல் சத்தம் கேட்கவும்
“ஆகாஸ் தான்…” என்றவன் கதவு திறக்க, ஆகாஸ் குடும்ப சகிதமாய் வந்திருந்தான் கையினில் அவர்களுக்கான காலை உணவோடு.
சித்தார்த் முறைப்படி அனைவரையும் அறிமுகம் செய்துவைக்க, ஆகாஸ் மற்றும் அவனின் மனைவி ரஜனி, குழந்தை மோனி என்று எல்லாரையுமே பூங்கொடிக்கு பார்த்ததும் பிடித்துவிட்டது.
அவர்களை பார்த்ததுமே மனதில் நல்லவிதமாய் ஒரு எண்ணம்.
“எப்படி ஆகாஸ் இருக்க?” என்று தமயந்தி கேட்க,
“சூப்பரா இருக்கேன் ம்மா…” என்றவன், பூங்கொடியிடம் “ரொம்ப தேங்க்ஸ் ம்மா தங்கச்சி. இவன் முகத்துல இப்போதான் பழைய சந்தோசம் தெரியுது…” என்று சொல்லிட,
“டேய்…” என்று சித்தார்த், அவன் தோளை இறுக்கி பிடிக்க, பூங்கொடியோ கணவனை கேள்வியாய் பார்த்தாள்.
ரஜனியோ “எல்லாம் சாப்பிடுங்க.. சூடா இருக்கு…” என்று அவளே டைனிங் டேபிள் மீது எல்லாம் எடுத்து வைக்க,
“ஏன் ம்மா இத்தனை பண்ணிட்டு வந்திருக்க. இட்லி சாம்பார் போதாதா?” என்றபடி தமயந்தியும் எடுத்து வைக்க, தவமணியோ “போய் உதவி செய்…” என்று மகளிடம் கண்களில் பேசினார்.
“இல்ல அவளுக்கு நேரமாகும். நீங்க எல்லாம் சாப்பிடுங்க…” என்று ரஜனி சொல்ல,
“ஆர்யனும் இப்போதானே பால் குடிச்சான். நம்ம எல்லாம் சாப்பிட்டு அவங்களுக்கு ஊட்ட சரியா இருக்கும்…” என்ற தமயந்தி “சித்து, ஆகாஸ்…” என்று அழைக்க, அவர்களும் இங்கே வந்து அமர்ந்துவிட்டனர்.
“சீக்கிரம் சாப்பிட்டு பிள்ளைங்களுக்கு ஊட்டுங்க. அடுத்து நாங்க நாலுபேரும் ஒண்ணா உக்காந்துக்கிறோம்…“ என்று ரஜனி சொல்லிட,
“போச்சுடா…” என்று தலையில் கை வைத்துக்கொண்டான் ஆகாஸ்.
“என்னடா?!” என்று சித்தார்த் கேட்க,
“பிள்ளைக்கு ஊட்டுற மாதிரி கஷ்டமான வேலை வேற எதுவுமில்லைடா…” என்று பாவமாய் சொல்ல,
“தினமும் நாங்க செய்றோம்தானே. ஒருநாளைக்கு நீங்க ஊட்டினா என்னாகும்…” என்ற ரஜனி “பூங்கொடி இப்போவே சொல்லிடுறேன் சித்தண்ணா வீட்ல இருக்க நேரமெல்லாம் ஆர்யனுக்கு ஊட்டிவிடுற வேலை அவங்கக்கிட்ட கொடுத்துடு…” என,
“இப்போவே அவங்கதான் முக்கால்வாசி நேரம் ஊட்டுறாங்க அக்கா…” என்றாள் பூங்கொடி.
“ஓ! அப்படி. அப்போ என் கட்சிக்கு ஆள் இல்லையா…” என்றபடி ஆகாஸ் உண்ண, சித்தார்த்தோ, எதுவும் பேசமால் அமைதியாய் உண்டுகொண்டு இருந்தான்.
“என்ன சித்தண்ணா, எப்படி இருக்கு..?” என்று ரஜனி அவனோடு சகஜமாய் பேச,
“வழக்கம் போல் உன் சமையல் சூப்பர் தான்…” என்றான் சித்தார்த்தும்.
பூங்கொடிக்கு இவர்களின் சம்பாசனை ஆச்சர்யமாய் இருந்தது. நண்பனின் மனைவியிடம் இத்தனை சகஜமாய் பேசுவார்களா என்று. சித்தார்த்திற்கு அவளின் எண்ணம் புரிந்ததுவோ என்னவோ “கொடி, ரஜனி எங்க ஜூனியர். எப்படின்னா நாங்க யூகேஜி. மேடம் எல்கேஜி… அப்போ இருந்து எங்களுக்குத் தெரியும்…” என,
“ஓ..! அப்போ எல்லாரும் ஒரே ஸ்கூலா…” என்றாள் பூங்கொடி.
அவளுக்கு என்னவோ கதை கேட்கும் பாங்கு.
“ம்ம்.. ஒரே ஸ்கூல்.. ஒரே ஸ்கூல் பஸ்.. ஒரே டியூசன்… எல்லாமே ஒண்ணுதான். அதனால தான் சார் போய் எய்த் படிக்கும்போதே ப்ரொபோஸ் பண்ணிட்டான்…” என்று அடுத்து, எடுத்துவிட,
“லவ் மேரேஜா?!” என்றாள் வியந்து அடுத்து.
“ம்ம் ஆமா…” என்று புன்னகை செய்த ஆகாஸ் “சித் மட்டும் இல்லைன்னா, நாங்க இப்போ இன்னிக்கு இப்படி இல்லை…” என, பூங்கொடி கேள்வியாய் பார்க்க,
“ம்ம் ஆமா, ரெண்டு பேர் வீட்லயும் சம்மதிக்கவே இல்லை. அதுவும் இவர் வேற டாக்டருக்கு படிச்சிட்டார். நான் நார்மல் டிகிரி தான். இவங்க வீட்ல சம்மதிக்கவே இல்லை. எங்கவீட்ல அதுக்கும் மேல. யாருமே நாங்க சொல்றதை கேட்கற ஐடியால இல்லை. சொல்லி சொல்லி பார்த்தோம். எனக்கு வேற மாப்ள பார்த்துட்டாங்க. வேற வழி தெரியலை. சோ வீட்டை விட்டு வந்துட்டேன். சித்தண்ணா தான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வச்சார்…” என்று ரஜனி சொல்ல,
‘இந்த டாக்டர் சரியான எமகாதகர் போலவே. செய்யாத வேலை எல்லாம் இல்லை போல…’ என்று எண்ணிக்கொண்டாள் பூங்கொடி.
“டேய் போதும் போதும்… என்னோட வீர தீர பராக்கிரமத்தை எல்லாம் சொன்னது போதும்…” என்று சிரித்த சித்தார்த், லேசாய் அதிர்ந்து போயிருந்த பூங்கொடியைப் பார்த்து கண் சிமிட்ட, அவளோ வேகமாய் பார்வையை திருப்பிக்கொண்டாள்.
ஆண்கள் உண்டுமுடித்து, அவர்கள் பிள்ளைகளுக்கு ஊட்டப் போக, பெண்கள் நால்வரும் ஒன்றாய் அமர்ந்து உண்ணத் தொடங்க, பேச்சும் உணவுமாய் தான் போனது அங்கே.
இங்கே மோனியும், ஆர்யனும் அதற்குள் நட்பாகிவிட, அவர்களின் பின்னே ஓடிக்கொண்டே தான் உணவுண்ண வைக்கவேண்டியதாய் இருந்தது அப்பாக்களுக்கு.
சித்தார்த் பரவாயில்லை ஓராளவு சமாளிக்க, ஆகாஸ் எப்போதும் இப்படியெல்லாம் சிக்கமாட்டான். ஆனால் இன்று அவனும் பாவமாய் ஓடிக்கொண்டே ஊட்ட “சந்தோசமா இருக்கு சித்…” என்றான் மனதார நண்பனிடம்.
“ம்ம்…” என்று சித்தார்த் சிரிக்க,
“எங்க பழைய சித் திரும்ப வந்துட்டான்…” என்று அப்போதும் உளமார்ந்து பேச,
“டேய் போதும்டா…” என்று புன்னகை பூத்தான் மருத்துவன்.
“பழசை எல்லாம் தூக்கி போட்டுடு டா. பூங்கொடி பார்க்க நல்ல டைப் போலத்தான் இருக்கு. நல்லபடியா சந்தோசமா வாழு…” என,
“பழசை எல்லாம் தூக்கி போட்டதுனால தானே டா, இப்போ கல்யாணமே பண்ணிருக்கேன். ஆனா கொடிக்கு எதுவும் தெரியாது. என்னை அவ இப்படியே ஏத்துக்கணும் அதுதான் முக்கியம். ஆர்யானோட அப்பாவா ஏத்துக்கணும். அத்தை மகனா ஏத்துக்கணும்…” என்று பேச,
சித்தார்த்தோ பதில் சொல்லாமல் சிரிக்க “இவனொருத்தன் சிரிச்சே சமாளிப்பான். இங்கபாரு என்னவோ செய் ஆனா சந்தோசமா இரு. அவ்வளோதான்…” என்று முடிக்க,
பூங்கொடி மனதிலோ ‘சின்னதுல இருந்து பிரண்ட்ஸ் அப்படின்னா, இவங்களுக்கு எல்லாம், ஆர்யன் அம்மாவையும் தெரிஞ்சு இருக்கணும் தானே. கொஞ்ச நாள் போகட்டும். மெல்ல மெல்ல பேசி பேசி என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கணும்…’ என்று எண்ணிக்கொண்டாள்.
ஆகாஸ் மோனிக்கு ஊட்டி முடித்துவிட்டு “ஓகே மா நான் கிளம்புறேன்…” என்று பொதுவாய் சொல்லி, மனைவியிடம் ஒரு தலையசைப்பை கொடுத்துவிட்டு
“நீ எப்போடா?” என்று சித்தார்த்திடம் கேட்க,
“நாளைக்கு வர லீவ்.. நாளன்னைக்கு நானும் வந்துடுவேன்…” என்றிட,
“ஓகே பாய்…” என்று கிளம்பிவிட்டான்.
அடுத்து ரஜனியும் கிளம்ப “இங்கயே இரும்மா.. மதியம் இங்க சாப்பிடலாம். நீயும்தான் எங்க போற…” என்று சொல்லி தமயந்தி அவளை இங்கேயே இருக்கச்
பிள்ளைகள் இருவரும் உண்டுமுடித்து, ஆடிய களைப்பில் கண்ணை கசக்க ரஜனியோ “ம்மா அங்க எல்லாம் அப்படியே போட்டுட்டு வந்துட்டேன். இவளை தூங்க வச்சிட்டு, வீடு மட்டும் கொஞ்சம் ஒதுங்க பண்ணிட்டு வந்திடுறேன்..” என,
தமயந்தி “சரி என்றிட…”
“பாப்பா முழிக்கவும் கண்டிப்பா வந்திடுங்க…” என்று சொல்லியே பூங்கொடியும், ஆர்யனை அறைக்கு கொண்டு வர, ரெடிமேட் தொட்டில் வாங்கி மாட்டி இருந்தான் சித்தார்த்.
“இத்தனை பெரிய வீடு. ஆனா பிள்ளைங்களுக்கு தொட்டில் போட கம்பி விட்டு இருக்காங்களா…” என்றபடி ஆர்யனை உறங்கவைக்க,
“எல்லா வசதியும் வேணும்னான்னு நீங்கதானே சொன்னீங்க. இதுவும் நமக்கு தேவையான வசதிதான்…” என்று பூங்கொடி திருப்பிக் கொடுக்க,
“சரிதான்…” என்று தலையை உருட்டியவன் “உனக்கு பூங்கொடின்னு வச்சதுக்கு பதிலா புயல்கொடின்னு வச்சிருக்கலாம்…” என்று கிண்டல் செய்ய,
“நீங்கமட்டுமே என்னவாம். துப்பாக்கி வச்சு மிரட்டுறீங்க. நினைச்சா ஒருத்தனை நாடு விட்டு நாடு அனுப்புறீங்க. இதோ இப்படி இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க. இன்னும் என்னென்ன வேலை எல்லாம் இருக்கு டாக்டரே…” என்று கேட்க,
“அடியேன் திறமை அவ்வளவுதான்..” என்றான் மலர்ந்து புன்னகைத்து.
அவனது இந்த புன்னகை தானே அவளை மேலும் மேலும் அவன்பால் இழுப்பது. இப்போதும் அவளது பார்வை அவன் முகத்தில் நிறைந்து நிற்க “என்னவாம் பார்வை மாறுது?” என்றவன் உடைகளை எல்லாம் எடுத்து அடுக்கத் தொடங்கி இருந்தான்.
“ஒரு மாற்றமும் இல்லை…” என்றவள் “ஆனா லவ் மேரேஜ் சூப்பர்ல…” என்று பேச,
“ம்ம் சூப்பர்தான்…” என்று அவனும் சொல்ல,
“என்ன இருந்தாலும் லவ் பண்ணி கல்யாணம் பண்றது அது ஒரு பீல் அப்படித்தானே…” என்றாள் பூங்கொடி.
அவளுக்கு எப்போதுமே இந்த காதல் திருமணங்கள் மீது இப்படி ஒரு ஆச்சர்யம். எப்படி காதல் வருகிறது? எப்படி அசாத்திய நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கிறது? பெற்றவர்கள், குடும்பம் எல்லாம் விட்டு நீதான் எனக்கு எல்லாம் என்று எப்படி எண்ண வைக்கிறது இந்த காதல் என்று அவளுக்கு எப்போதுமே ஒரு பிரம்மிப்பு.
அதனால் இப்போதும் இப்படி பேச, இது தெரியாத சித்தார்த்தோ “ம்ம் லவ் பண்ணக் கூடாது. பண்ணிட்டா, என்ன நடந்தாலும் சரி, யார் எதிர்த்தாலும் சரின்னு கல்யாணம் பண்ணிடனும்…” என,
அவனின் குரலில் இருந்த தீவிரம் கண்டவள் “ம்ம் ஆனா அது எல்லாருக்கும் சூழ்நிலை ஒத்துவரனும் தானே…” என்றாள் யோசனையாய்.
“என்ன சூழ்நிலை. புடலங்கா சூழ்நிலை…” என்று எதையோ கோபமாய் பேச வந்தவன், தான் என்ன பேசுகிறோம் என்பதனை உணர்ந்து அப்படியே பேச்சினை நிறுத்த, பூங்கொடியோ அவனை அர்த்தமாய் பார்த்துக்கொண்டு இருந்தாள்.