அத்தியாயம் 18

“எங்க கிளம்பிட்ட?” விக்ரம் அவசரமாக வெளியேறுவதை பார்த்த ரகுராம் கேட்டான்.

“வேலை செஞ்சது போதும் நான் ரெஸ்ட் எடுக்கணும்” என்றான் விக்ரம். 

பொதுவாக விக்ரம் வேலை என்று வந்தால் முடிக்காமல் ஓயமாட்டான். உண்மையிலயே சோர்வடைந்தானா என்று பதட்டமடைந்த ரகுராம் “உடம்புக்கு ஒண்ணுமில்லையே” என்று கேட்டான்.

ஒன்றுமில்லையென்றால் ரகுராம் சந்தேகமாகப் பார்ப்பானென்று “என்னனு தெரியல. தூக்கம் தூக்கமா வருது. நல்லா தூங்கினா சரி” புன்னகைத்தான்.

“மாத்திரை போடுறல்ல சைட் எபெக்ட்டாக இருக்கும். சரி தனியா வண்டியோட்டாத ட்ரைவர் கூட போ” அக்கறையாக கூறினான் ரகுராம்.

பதில் சொல்லாமல் தலையசைத்தவாறே கிளம்பினான் விக்ரம்.

வண்டியில் ஏறி அமர்ந்த விக்ரமுக்கு குழப்பம் மட்டும்தான் எஞ்சியிருந்தது.

கார்த்திகேயன் மற்றும் பார்கவியின் திருமணப் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கையில் மற்றுமொரு புகைப்படம் மின்னஞ்சலில் வந்திருந்தது. அதில் கார்த்திகேயன் பார்கவி மட்டுமல்லாது குழந்தை கவிபாரதியும் இருந்தாள்.

“கல்யாணமாகி குழந்தையே இருக்கா? அது சரி பத்து வருஷமா எனக்காக காத்துகிட்டு இருப்பாளா? நான்தான் லவ்வ சொல்லவே இல்லையே” விக்ரமின் கண்கள் கலங்க முதன்முறையாக காரியாலயத்தில் விக்ரம் மயங்கி விழும் முன் கார்த்திகேயன் குழந்தையை சுமந்து கொண்டு வந்ததும் பாரதி ஓடிச்சென்று குழந்தையை தூக்கிக் கொண்டு சிரித்தது விக்ரமின் கண்களுக்குள் மின்னல் போல் வந்து போனது.  

“நான் கனவு காண்கிறேனா? இல்ல… இது என் ஞாபகங்கள். அப்போ உண்மையிலயே ரதிக்கு கல்யாணமாகிரிச்சா? அப்போ ரகு ரதிய உடனே கல்யாணம் செய்துகொள்ளும்படி ஏன் கூறினான்? அப்போ ரதியோட ஹஸ்பன் இறந்துட்டானா? அதான் அவ கூட இருந்தும் ஒதுங்கி இருந்தாளா? இல்லையே. குழந்தையோடு ரெண்டு பேரும் இருந்த காட்ச்சி சமீபத்துல பார்த்தது போல இல்ல இருக்கு.

ஒருவேளை எனக்கு இருக்குற பிரச்சினை எங்கப்பாக்கு தெரிஞ்சி ரதிய மிரட்டி இருக்க வச்சாரா? மிரட்டினா அவ மசியமாட்டான்னு குழந்தையை கடத்தி இருப்பாரோ. ஹஸ்பன கொன்னுட்டாரோ. அதான் ரகு ரதிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க சொன்னானா?      

குழப்பத்தில் ஆழ்ந்தவன் {steering wheel} திசைமாற்றியின் மேல் தலையை வைக்க ரகுராமின் தந்தை சிறை செல்லவும், சிறையிலையே இறக்கவும் தன் தந்தைதான் காரணம் என்பது ஞாபகத்தில் வந்தது.

“ஒருவேளை அப்பாவை பழிவாங்க ரகுராம் திட்டம் தீட்டி என்னை பயன்படுத்திக்க நினைக்கின்றானா? பாரதிக்கு திருமணம் நிகழ்ந்ததை என்னிடம் மறைத்து, அவளிடம் ஏதாவது காரணத்தை கூறி என்னோடு இருக்க சம்மதம் வாங்கியிருப்பானோ? இல்ல… இப்போ கூட வண்டியோட்டாத. ட்ரைவர் கூட போன்னு அக்கறையா சொன்னானே. ஒருவேளை நடிக்கிறானோ. அவன் நடிகன் தானே” என்றுமே சந்தேகப்படாத நண்பனை சட்டென்று சந்தேகம் கொண்டான் விக்ரம்.

“எது உண்மை? எது பொய்? கனவா? நிஜமா? யாரை நம்புவது? முற்றாக குழம்பினான் விக்ரம்.

புகைப்படத்தை தனக்கு யார் அனுப்பி வைத்திருப்பார்கள்? அவர்களின் நோக்கம் தான் என்ன? உண்மையை நான் அறிய வேண்டும் என்று நினைக்கிறார்களா? அல்லது என் அப்பா பண்ணதுக்கு பழிதீர்க்க திட்டம் போடுகிறார்களா?

அவன் சிந்தனையில் வைஷ்ணவி வந்து நின்றாள். பத்து வருட காலங்களை மறந்தவனுக்கு, கல்லூரி வாழ்க்கை மட்டும்தானே ஞாபகத்தில் இருந்தது. அதை வைத்து யோசித்தான். 

“என்னை காதலிப்பதாக கூறியவள் நான் மறுத்ததும் ரதியின் தந்தையை பற்றி கூறி என்னையும், என் ரதியையும் பிரிக்க நினைத்தவள் வைஷ்ணவி. ஒருவேளை அவள் தான் இந்தப்புகைப்படங்களை எனக்கு அனுப்பியிருப்பாளோ? நடந்த எக்சிடண்ட்டுல நான் என் ரதியையே மறந்துட்டதால, என்ன ஒன்னும் செய்யாம போனவ திரும்ப நானும் என் ரதியும் ஒன்னு சேர கூடாதென்று திட்டம் போடுறாளோ!  ரதியின் அப்பா மரணத்துக்கு என் அப்பாதான் காரணமென்று என்னிடம் சொன்னவள் ரதியிடமும் கூறியிருப்பாளோ. அதனால் தான் ரதி என்னோடு இருந்தும் சரியாக பேசாமல் இருக்கின்றாளோ! இல்லை… வைஷ்ணவி கூறினாலும் என் அப்பா பண்ணதுக்கு நான் காரணமில்லையென்றுதான் ரதி கூறியிருப்பாள். எக்சிடன்டுல நான் என் ரதியை மறந்த உடன் நானும் அவளும் காதலர்கள் என்று வைஷ்ணவி என்னை நெருங்கி இருப்பாள். நான் அவளை திருமணம் கூட செய்திருப்பேன். ரதியை மறந்தும் நான் வைஷ்ணவியை காதலிக்கவில்லையோ? காதலிக்கவில்லையென்று வைஷ்ணவி பத்து வருடங்களாக பழிதீர்க்க நினைப்பாளா? அவள் யாரையாவது திருமணம் செய்து கொண்டு அவள் வாழ்க்கையை பார்ப்பாலாக இருக்கும் என்றெண்ணியவன் வைஷ்ணவியை புரிந்து வைத்திருப்பதை வைத்து, “வைஷ்ணவியின் திருமண வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினையாகி அதற்கு காரணம் நான் அவள் காதலை மறுத்தது தான் என்று முட்டாள்தனமாக நினைத்து ஏதாவது செய்ய நினைக்கின்றாளா?”  வைஷ்ணவிதான் காரணமா என்று பலவாறு யோசித்துப் பார்த்தவனுக்கு வைஷ்ணவிதான் காரணமென்றானால் பாரதி தன்னோடு இதை பற்றி பேசியிருப்பாள் என்று தோன்றவே தன் சந்தேக வட்டத்திலிருந்து வைஷ்ணவியை நீக்கினான்.

“என் ரதி என்னோடு ஒட்டாமல் போக இந்த போட்டோஸ்தான் காரணமாக இருக்குமா? அல்லது வேறு ஏதாவதா? என் ரதி மீண்டும் என் ஞாபகத்தில் வந்ததால் நடந்த எதையும் நான் அறிந்துக்கொள்ளக் கூடாதென்று தானோ ரகு என்னை அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்?” மருத்துவமனையில் கண்விழித்தது முதல் நடந்த அனைத்தையும் ஓட்டிப் பார்த்தவனுக்கு ரகுராம் தன்னை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பது தெளிவாக புரிந்தது.

“என் வாழ்க்கையில் என்ன நடந்தது?” முதலில் நான் என்னை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணியவன் கைபேசியை தான் நாடினான்.

இளம்தொழிலதிபரான அவனை பற்றி வலைத்தளங்களில் இருந்த செய்தியை கொண்டு தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று அகமகிழந்தான். கூடவே ரகுராம் மற்றும் அவனை சேர்த்து வைத்து வந்த செய்தியும் கண்களில் பட்டது.

“யார் இப்படியொரு செய்தியை பரப்பியிருப்பார்கள்? வைஷ்ணவி? வாய்ப்பில்லை. அவளே வந்து நாம் காதலர்கள் என்று கூறியிருந்தால், நிச்சயமாக ரகுராம் அமைதியாக இருந்திருக்க மாட்டான். அவளை அடித்துத் துரத்தியிருப்பான்” நண்பனின் மேலிருந்த சந்தேகம் பனியாக உருகி கரைந்தோடியதும் “அப்படியென்றால் ரகுராம் பாரதியை திருமணம் செய்துகொள்ளச் சொன்னதில் பொய்யில்லை. இந்த போட்டோஸ்? மார்பின்ங் செய்யப்பட்டதாகத்தான் இருக்கும்” என்று நிம்மதியடைந்தவனின் கண்களில் மீண்டும் கார்த்தியேன் மற்றும் பாரதி குழந்தையோடு வந்து நின்றனர்.

கார்த்திகேயன் மற்றும் பார்கவியின் திருமண புகைப்படத்தை பார்த்த உடனே ரகுராமை அழைத்து காட்டியிருப்பான். சட்டையை பிடித்து ரதிய திருமணம் செய்துகொள்ளும்படி ஏன் கூறினாய் என்று கூட கேட்டிருப்பான். பத்து வருட காலத்தை மறந்து, ரகுராமுக்கும் தனக்கும் இடையில் இருக்கும் பலமான நட்பை மறந்தவன், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரிமால் தவிப்பவன் யாரை நம்புவது? யார் சொல்வது உண்மை என்று புரிமால் தானே விசாரிக்கலாமென்று கிளம்பினான்.  

எங்கே சென்று யாரிடம் என்ன கேட்பது? பேசாமல் ரதியிடமே சென்று புகைப்படங்களை காட்டி விசாரிக்கலாமா? அவள் வேறு முகத்தை தூக்கி வைத்திருக்கின்றாள். எல்லாம் மறந்த நிலையில் ஏதாவது ஏடாகூடமாகக் கேட்டு சிக்கலை உண்டு பண்ணவும் கூடாதே. எங்கிருந்து ஆரம்பிப்பது? புரியாமல் குழப்பமாகவே வண்டியை இயக்கி செலுத்த ஆரம்பித்தவன் எங்கு செல்கிறோம் என்று புரியாமலே ஓட்டியிருந்தான்.

விக்ரம் வீட்டுக்குத்தான் வந்து சேர்ந்தான். வாயிலின் அருகே வந்தவன் வண்டியை விட்டு இறங்காமல் “நான் மறந்தாலும், என் உள்ளுணர்வு எனக்கு பொய் சொல்வதுமில்லை. தடம் மாறுவதுமில்லை” என்று புன்னகைத்தான்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பாதையை வெறித்தவன் பார்கவி கோவிலுக்கு சென்று வீடு திரும்புவதை கண்டான்.

“ரதி… ரதி இந்த நேரத்துக்கு ஆபீஸ்ல இல்ல இருப்பா. இங்க என்ன பண்ணுறா?”

விக்ரம் மருத்துவமனையிலிருந்து வீடு வந்த அன்று இரவாகியும் பாரதி செல்லாததால் அவள் தன்னோடு தங்க முடிவெடுத்தாளா? என்று உள்ளுக்குள் விக்ரம் மகிழ்ந்துக்கொண்டிருக்க, “அப்போ நான் கிளம்புறேன்” என்று வந்து நின்றாள் பாரதி.

“லேட் நைட்டாகிருச்சு. இந்த நேரத்துல எப்படி போவ?”

“நான் இங்க பக்கத்துல தான் இருக்கேன். நடந்தே போய்டுவேன்” விக்ரமுக்குத்தான் எல்லாம் மறந்து விட்டதே என்று கூறினாள் பாரதி.

ஆனால் விக்ரமுக்கு பாரதி அருகில்தான் குடியிருக்கிறாள் என்று தெரியவில்லை. ரகுராம் கூறியிருக்கவுமில்லை.

“என்ன ஆஸ்பிடல்ல உன்ன பார்த்துக்கொண்டவ, வீட்டுலையும் இருப்பான்னு நினைச்சியா? தாலி எங்குற லைசன் இல்லையே” கிண்டல் செய்தான் ரகுராம்.

“ஆமா… இங்கதான் இருக்கா…” என்றவாறே வண்டியை விட்டிறங்கி பாரதியாக நினைத்து பார்கவியை பின் தொடர்ந்தான்.

பார்கவி வாயிலை பூட்ட எண்ணுகையில் கைவைத்து தடுத்திருந்தான் விக்ரம். அவள் அவனை அந்த நேரத்தில் எதிர்பார்த்திருக்கவில்லையென்பதால் அதிர்ச்சியை அப்பட்டமாகவே முகத்தில் காட்டினாள். அதை விக்ரம் நன்றாக கவனித்தான்.

விக்ரமும் பாரதியும் என்றுமே ஒன்று சேர கூடாது. அதற்கான முதல்படியாகத்தான் பார்கவி புகைப்படங்களை அனுப்பி வைத்தாள். விக்ரம் நம்பினால் சரி. நம்பி மீண்டும் மயங்கி விழுந்து அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் நல்ல்லது தானே.

ஒருவேளை நம்பாமல், பாரதியிடம் கேட்டால் உண்மை தெரிந்து விடுமே என்று யோசித்தாள். தெரிந்தால் என்ன சொல்ல வேண்டும் என்பதையும் தீர்மாத்துத்தான் இருந்தாள். 

விக்ரம் தன்னை அறிந்துகொண்டானா? அனறு பேசியது நான் தான் என்று கண்டு பிடித்தானா? என்றுதான் பார்கவி அதிர்ந்தாள்.

“நீ… நீ… என் ரதி இல்ல. யார் நீ” கலையிழந்த அவள் முகம் மட்டுமல்லாது பாரதியின் அழகை கூட்டும் அவள் உதட்டோர மச்சம் காணாமல் போனதில் இவள் பாரதியல்ல என்பதை கண்டுகொண்டான்.   

விக்ரம் தன்னை அறிந்துகொண்டு இங்கே வரவில்லை. எதேச்சையாக பார்த்திருக்கிறான் என்று புரிந்துக்கொண்டவள் ஆசுவாசம் அடைந்ததோடு “நீ… யார்?” அவனை கேட்டாள்.

“நான் யாரென்றே இவளுக்குத் தெரியாதா? அதனால்தான் அதிர்ந்தாளா?” விக்ரமுக்கு சொல்ல முடியாத நிம்மதி உள்ளுக்குள் பரவலானது. “இவள் பாரதியின் இரட்டையா? இவளை பற்றி அவள் என்னிடம் ஏன் கூறவில்லை” என்று நினைத்தவன் “நான் விக்ரம் பாரதி என் கம்பனிலதான் வேலை பாக்குறா. உள்ள வரலாமா?” வாயிலை தள்ளி உள்ளே நுழைந்தான்.

“நீ விக்ரம் என்று எனக்குத் தெரியாதா?” உள்ளுக்குள் பொறுமியவள் “அப்படியா? ஆனா பாரு… ஆபிஸ்ல இல்ல இருப்பா” என்றாள். தாங்கள் இரட்டையர்கள் என்பதை எந்நாளும் விக்ரமிடம் மறைக்க முடியாது. புகைப்படத்தை அனுப்பிய பின் என்ன செய்வது என்று தீர்மானித்தவளுக்கு எவ்வாறு செய்வது என்று புரியாமல் குழம்பித் தவிக்க, விக்ரமே வந்து நின்றதில் உள்ளுக்குள் சிரித்தவள் “உள்ள வாங்க…” அவனை உள்ளே அழைத்து அமர சொன்னாள்.

“என்ன விஷயமாக வீட்டுக்கு வந்திருக்குறீங்க? பொதுவாக பாரு வீட்டுக்கு யாரையும் கூப்பிடமாட்டா” யோசனை செய்வது போல் விக்ரமை ஏறிட்டாள் பார்கவி.

“மிஸ்டர் கார்த்திகேயன்?”

“மாமா குழந்தையோடு வெளியே போய் இருக்காரு”

அவன் உயிரோடுதான் இருக்கின்றான். அவனை தந்தை எதுவும் செய்துவிடவில்லை. பாரதியை யாரும் மிரட்டவோ, கட்டாயப்படுத்தவுமில்லை. 

“உங்களுக்கு கல்யாணமாகிருச்சா?” குங்குமம், விபூதி அவளுக்கு அலர்ஜியை கொடுக்கும் என்பதினால் கோவிலுக்கு சென்று வந்தவள் குங்குமம் கூட வைத்திருக்கவில்லை. வைத்திருந்தால், விக்ரமின் சந்தேகம் நீங்கி இருக்கும். வீட்டுச் சுவரில் எந்த ஒரு புகைப்படமும் இல்லை. தனக்கு அனுப்பப்பட்ட புகைப்படங்களில் இருப்பது இவளாகத்தான் இருக்க வேண்டும். அதை உறுதி செய்துகொள்ளவே கேட்டான்.

“கல்யாணமா? எனக்கா? பிறந்த உடனே செத்துடுவேன் என்று டாக்டர் சொன்னாரு. சீக்காளியாகவே இருந்ததால சின்ன வயசுல இருந்தே பாரதிக்கு என்னை பிடிக்காது. அவ செய்யிற கொடுமைகளை நான் யார்கிட்டயும் சொன்னதில்லை. அழுதா கூட சத்தம் வராமத்தான் அழுவேன். ஒருநாள் அம்மா பார்த்துட்டு பாரதிகிட்ட இருந்து என்ன காப்பாத்துறதா நினைச்சி அத்த வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.

அத்த நல்லாத்தான் பார்த்துக்கிட்டாங்க. மாமா கூட என் மேல பாசமா இருந்தாரு. எல்லாம் பாரதி எங்க கூட வந்து தங்குற வரைக்கும் தான். நான் மாமா கூட பேசினாலே அவ கோபப்படுவா…” தான் செய்த அனைத்தையும் பாரதி செய்ததாக கூறியவள் திருமணமானதை கூறாமல் “நான் ஒருத்தி வீட்டுக்கு வந்தவங்ககிட்ட ஏதேதோ பேசிகிட்டு. இருங்க உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே சென்றாள்.

“இவள் என்ன சொல்கிறாள்? என் ரதி அவ்வளவு கொடுமைக்காரியா?” விக்ரமால் ஏறுகொள்ளவே முடியவில்லை. தனக்கு வந்த புகைப்படத்தை பெரிதாக்கி உதட்டின் ஓரம் மச்சம் இருக்கிறதா என்று பார்கலானான்.

திருமண புகைப்படத்தில் மஞ்சள் தடவியிருக்க, குழந்தையோடு இருந்த புகைப்படத்தில் குழந்தையை முத்தமிட்டுக் கொண்டிருந்ததினால் பாரதியா? பார்கவியா? என்று விக்ரமால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தன்னை முற்றாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு விக்ரமிடம் என்னென்ன சொல்ல வேண்டும் என்ற முடிவோடு விக்ரமுக்கு அருந்த குளிர்பானத்தை கொடுத்தவள் “எங்கப்பா ஒரு பேக்டரி விபத்துல இறந்துட்டாரு. அதுக்கு காரணமானவன கண்டு பிடிச்சிட்டேன் என்று ஆஸ்திரேலியால இருந்து இங்க வரணும் என்று அடம்பிடிச்சி வந்தா. அவளை விட்டு கார்த்திகேயன் மாமாவாளையும், பாப்பாவாளையும் இருக்க முடியாதில்ல. அவங்களும் வந்தாங்க. உடம்பு முடியாத நான் மட்டும் தனியா அங்க என்ன பண்ண? நானும் கூடவே வந்துட்டேன்” கார்த்திகேயனுக்கு பாரதிக்கும்தான் திருமணமாச்சு மடையா என்று சொல்லாமல் சொன்னாள் பார்கவி. 

தங்களுடைய தந்தையின் இறப்புக்கு உன் தந்தைதான் காரணம். பாரதி பழிவாங்க கிளம்பி வந்தாள் என்ற விம்பத்தை விக்ரமின் மனதில் புகுத்த முயன்றாள் பார்கவி. ஆனால் காதல் கொண்ட விக்ரமின் உள்ளமோ அதை யோசிக்காமல் “குழந்தையும் ஆஸ்ரேலியாளத்தான் பொறந்தாளா?” பார்கவியின் பேச்சில் தான் தேடிய பதில் கிடைக்கவில்லையென்று அவளை மேலும் குடைந்தான் விக்ரம்.

அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு தான் ஒரு வெகுளி போல் விக்ரம் எதற்காக கேட்கிறான் என்று புரியாதது போலவே பதில் சொல்லலானாள் பார்கவி.  

“ஆமா… ஆஸ்ரேலியாளத்தான் கவிபாரதி பொறந்தா. பிரசவத்தப்போ பாரதி ரொம்ப கஷ்டப்பட்ட. அவ பேர் இருக்கணும் என்று தான் மாமா குழந்தைக்கு கவிபாரதி என்று பேர் வச்சாரு”

பார்கவி துளியளவேனும் பொய்யுரைக்கவில்லை. பார்கவியின் குழந்தை கவிபாரதியின் வாடகைத்தாய் பார்கவி ஆகிற்றே. கவிபாரதியை சுமந்தவள், பெற்றெடுத்தவள் பாரதியல்லவோ. குழந்தைக்கு கவிபாரதி என்று பெயர் வைத்தது இரண்டு அன்னையர்கள் பெயரை கொண்டல்லவா.

ஆனால் விக்ரமுக்கு கார்த்திகேயனின் முதல் எழுத்தோடு பாரதியின் பெயரை வைத்திருப்பதாகத்தான் தோன்றியது.

இதற்கு மேல் அவன் புகைப்படத்தை பற்றி என்னவென்று விசாரிக்க? தெள்ளது தெளிவாக எல்லா உண்மையும் புலப்பட்டு விட்டதே. விக்ரமின் தலை வின் வின் என்று வலிக்க ஆரம்பிக்க, மாத்திரையை முழுங்கிக் கொண்டான்.

கண்கள் கலங்கி, நெஞ்சம் இறுக, அங்கே இருக்கப் பிடிக்காமல் பார்கவியிடம் சொல்லிக்கொள்ளாமலே கிளம்பினான் விக்ரம்.

அவன் நிலையை பார்த்து பரிதாபப்படாமல், ஏளனமாக சிரித்தாள் பார்கவி.

போ நீ போ

போ நீ போ

தனியாக தவிக்கின்றேன்

துணைவேண்டாம் அன்பே போ

பிணமாக நடக்கின்றேன் உயிர்

வேண்டாம் தூரம் போ

நீ தொட்ட இடமெல்லாம்

எாரிகிறது அன்பே போ

நான் போகும் நிமிடங்கள்

உனதாகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ

நிஜம் தேடும் பெண்ணே போ

உயிரோடு விளையாட

விதி செய்தாய் அன்பே போ

உன்னாலே உயிர் வாழ்கிறேன்

உனக்காக பெண்ணே

உயிர் காதல் நீ காட்டினாய்

மறவேனே பெண்ணே

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்

மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா

இருளிளே தேடிய தேடல்கள் எல்லாம்

விடியலை காணவும் விதி இல்லையா

போடி போ

போடி போ

என் காதல் புாரியலையா

உன் இஷ்டம் அன்பே போ

என் கனவு கலைந்தாலும்

நீ இருந்தாய் அன்பே போ

விக்ரம் செல்வதை தூர இருந்தே பார்த்த சாந்தி ப்ரியாவுக்கு தன் மகனை அடையாளம் தெரியவில்லை. கவிபாரதியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தவள் “யாரும்மா அந்த தம்பி நம்ம வீட்டுக்கு வந்துட்டு போறாரு” என்று பார்கவியிடம் விசாரித்தாள்.

ஒருநாள் சுப்பு லட்ச்சுமி கோவிலுக்கு சென்றிருந்த பொழுது சாந்தி ப்ரியாவை சந்தித்தாள். சுப்பு லட்ச்சுமியை அடையாளம் கண்டு கொண்டவள் அவளிடம் வந்து மன்னிப்புக் கேட்க, சுப்பு லட்ச்சுமிக்கு அவள் யாரென்றே தெரியவில்லை.

தெரிந்திருந்தால் தான் சாபம் விட்டதுக்கு மன்னிப்புக் கேட்டு குழந்தைகளோடு சென்று வாழச் சொல்லியிருப்பாள்.

கணவன் செய்தவைகளுக்கு பிராயச்சித்தம் செய்வதாக எண்ணி சுப்பு லட்ச்சுமியின் காலில் விழுந்து தனக்கென்று யாருமில்லை. தனக்கு ஏதாவது ஒரு வேலை கொடுக்குமாறு கெஞ்சிக் கூத்தாடினாள்.

வேறு வழியில்லாமல் அவளை வீட்டுக்கு அழைத்து வர, அதற்கும் பார்கவி பேசத்தான் செய்தாள். பாரதி ஆஸ்திரேலியா செல்லும் பொழுது தனியாக செல்ல வேண்டாமென்று சாந்தி ப்ரியாவை கூட அனுப்பி வைத்திருந்தான் கார்த்திகேயன். அதனால் தான் ஆளவந்தான் எங்கு தேடியும் சாந்தி ப்ரியா அவனுக்கு கிடைக்காமலே போனாள். 

ஆஸ்திரேலியாவில் இருந்து கார்திகேயனோடு வந்தவளை கோயில் குளம் என்று சுற்றலா அனுப்பி வைத்திருக்க, இரண்டு நாட்களுக்கு முன்புதான் வீடு வந்ததினால் வீட்டில் நடந்த எதுவும் தெரியவில்லை. தலையிடவும் மாட்டாள்.     

 “இந்தம்மா வேற நொய் நொய் என்று எல்லாத்துக்கும் மூக்கை நுழைப்பாங்க” சந்திப் ப்ரியாவை தீப்பார்வை பார்த்தவள் “எனகென்னத் தெரியும். வீடு மாறி வந்திருப்பார்” என்றாள் பார்கவி.

கார்த்திகேயனை தேடி வந்தானென்றோ, பாரதியை தேடி வந்தானென்றோ கூறினால், அவர்கள் வந்த உடன் காதில் வைப்பாளென்றுதான் வேண்டா வெறுப்பாக கூறினாள். சாந்தி ப்ரியா தலையசைத்து விட்டு உள்ளே சென்றாள்.