அத்தியாயம் 17

“டேய் யார் வீடுடா இது?” இத்தனை வருடங்களாக தான் தங்கியிருந்த வீட்டையே புதிதாக பார்த்தான் விக்ரம்.

“வீடு என் வீடுதான். அந்த ரூம் உன்னோட ரூம்” விக்ரம் தங்கியிருக்கும் அறையை காட்டினான் ரகுராம்.

“என்ன நான் உன் கூட உன் வீட்டுல தங்கியிருக்கேனா? எங்கப்பா வில்லன் ஆளவந்தான் ஒன்னும் சொல்லலையா? என் அப்பத்தா எப்படி சம்மதிச்சாங்க?”

“உன் அப்பத்தா சம்மதிச்சதுமில்லாம, உங்க அப்பாவையே சமாளிக்கவும் செஞ்சாங்க. இல்லனா நீ என் கூட எப்படி இருக்க முடியும்” புதிதாய் கற்க ஆரம்பிக்கும் குழந்தை கேள்வி கேட்பது போல் விக்ரம் கேள்விகளை தொடுத்துக் கொண்டேயிருக்க, ரகுராம் அவனுக்கு பொறுமையாக பதில் கூறிக் கொண்டிருந்தான்.

ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். பாரதியின் கையை பற்றிக் கொண்டு “என்ன மன்னிச்சுடு ரதி. நான் உன்ன லவ் பண்ணுறதையே மறந்து உன்ன ஏதேதோ பேசிட்டேன்” என்று கண்கள் கலங்கலானான்.

விக்ரமிடம் என்ன கூறி வைத்திருக்கிறேன் என்று ரகுராம் கூறியிருந்ததால், பாரதியால் அவனை சமாளிக்கவும், சமாதானப்படுத்தவும் முடிந்தது. என்ன நடந்ததென்று விக்ரமிடம் கூறாமல் அவனை ஏமாற்றுகிறோமோ என்ற குற்ற உணர்ச்சி பாரதிக்குள் வராமலில்லை. உண்மையை கூறுவதால், மீண்டும் அவன் மயங்கி விழுந்து ஏதாவது ஆகிவிடுமோ என்று அஞ்சியே அமைதி காத்தாள்.

விக்ரம் அவளை காதலாக பார்ப்பதும். அவர்களுக்கு இடையே நடந்தவற்றை பேசுவதும் என்று அவளை அவனோடு நிறுத்திவைக்க முயல, பாரதியால் விக்ரமோடு சட்டென்று ஒட்ட முடியவில்லை. கொஞ்சம் இடைவெளியை கடைபிடிக்கலானாள்.

“நா உனக்கு என்னெல்லாம் கஷ்டம் கொடுத்தேனோ! நீ என் கூட சரியாகவே பேச மாட்டேங்குற. இதோ இந்த ரகு கூட சிரிச்சி பேசுற. என்கிட்டே மட்டும் ஒழுங்காவே பேச மாட்டேங்குற. வாங்க, போங்கன்னு ரொம்ப மரியாதை கொடுக்குற. என்ன நீ மன்னிக்கவேயில்லையா?” தான் என்ன பிழை இளைத்துவிட்டோம் என்று புரியாமலையே பாரதியிடம் மன்னிப்பு வேண்டினான்.

இயல்பில்லையே பாரதி அதிகம் பேசத்தவள். அவள் உணர்வுகளை சொல்ல முடியாமல் திணறுகிறாள். தான் சிரமப்படும் பொழுது அவளுக்குள் இருக்கும், பதட்டமும், அன்பு வழியும் அவள் பார்வையும் விக்ரமுக்கு பாரதி அவனை எவ்வளவு நேசிக்கின்றாளேன்று புரியவைக்க போதுமாக இருந்தது. ஆனால் அவன் கேள்வி கேட்டால் மட்டும் பேசுவது அவனுக்கு புதிதாக இருந்தது, அவள் அவனை ஒதுக்காவிட்டாலும், ஒதுங்கி நிற்பதை உணரவே பொறுக்க முடியாமல் கேட்டிருந்தான்.

“டேய் டேய் உனக்கு இன்னும் காலேஜ் பையன் என்று நினைப்பா? நான் பாரதியோட பேசினா பொறாமைப்படுற? உனக்கும் வயசாகிருச்சு. அவளும் மெச்சுவார்ட் ஆகிட்டா” சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பதென்று இவ்வாறு கூறினான் ரகுராம்.

“அப்போ நீ என்ன அங்கிள் என்று சொல்லுறியா? நீதான்டா கிழவன்” ரகுராமை அடிக்கத் துரத்தினான் விக்ரம்.

பாரதி விக்ரமை நெருங்க தடையாக இருப்பது அவனேதான் என்று அவள் அவனுக்கு எவ்வாறு புரியவைப்பாள்?

கண்டிப்பாக அவன் திருமணத்தை பற்றிப் பேசுவான். திருமணம் செய்துக்கொள்ளலாமா என்று கேட்பான். அவனது ஞாபகங்கள் வராதவரையில் திருமணம் செய்துகொள்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை.

அவன் ஞாபகங்கள் மீண்டு விட்டால், அவன் அவளை பேசியதெல்லாம் மீண்டும் அவன் ஞாபகத்தில் வந்து விட்டால் அவன் நிலை என்னவாகுமோ? தான் அவனோடு இருந்தால் அவன் ஞாபகங்கள் வந்து விடக் கூடும் என்று அவனை விட்டு விலகி இருந்தாளென்றால், மீண்டு சந்தித்த பொழுது அவள் அவனை அந்நியனாக ஒதுக்கியதை அவன் ஞாபகத்தில் வந்தால் கூட பிரச்சினைகள் உருவாகும் என்று அவனை நெருங்க முடியாமலும், விட்ட விலக முடியாமலும் தாமரை இலை நீர் போல அவன் கூடவே இருந்தாள்.  

“என்ன? நாம கம்பனி ஆரம்பிச்சி சக்ஸஸ்ஸா போய் கொண்டிருக்கா? சொன்ன மாதிரியே செஞ்சிட்டேனா? நீ கேட்டது போல உனக்கு வேலையும் கொடுத்தாச்சா?” என்று பாரதியை புன்னகையோடு பார்த்தவன் “என்ன நீ ஆக்டரா? உன் மூஞ்சிய தினமும் பார்க்கணும் என்று தமிழ்நாட்டு மக்களோட தலைவிதி” என்று ரகுராமை கலாய்த்தவன், ரகுராமும், பாரதியும் தொழில் சம்பந்தமாக பேசும் பொழுது தனது கருத்துக்களையும், அறிவுரைகளையும் வாரி வழங்குவான் விக்ரம்.

“நீ நடந்ததை மறந்தாலும் பக்கா பிசினஸ்மேன் தான்” என்று விக்ரமை கலாய்த்தான் ரகுராம்.  

ரகுராமின் மூலம் விஷயமறிந்த மோகனா விக்ரமை கட்டிக் கொண்டு ஓவென அழுதாள்.

யாரோ ஒரு பெண் ஓடிவந்து தன்னை கட்டிக் கொண்டு அழுவதை பாரதி வேறு பார்த்துவிட்டாள் என்று அதிர்ந்து நின்ற விக்ரமின் செவிகளில் மோகனாவின் புலம்பல்கள் விழவேயில்லை.

சங்கடமாக பாரதியை பார்த்தவாறே மோகனாவை தன்னிடமிருந்து பிரிக்க முயல, அவளோ விக்ரமை விடாமல் பிடித்துக் கொண்டாள். 

“மோகனா போதும் நீயும் அழுது அவனையும் அழ வைக்காதே” ரகுராம் அதட்டிய பின் தான் மோகனாவை அடையாளம் கண்டுகொண்டான் விக்ரம். 

“ஹே குட்டி நீயாடா…” என்று விக்ரம் கூறியதும் அவனுக்கு மோகனாவை அடையாளம் தெரியவில்லையென்று அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது.

பத்து வருடங்களுக்கு முன் குழந்தையாக இருந்தவள் இன்னும் குழந்தையாகவேவா இருப்பாள். ஓடி வந்தவள் முகத்தை காட்டாது கட்டிக் கொண்டு அழுது கரைந்தால் விக்ரமும்தான் என்ன செய்வான்?

“என்ன கொழந்த வளர்ந்துட்ட?” விக்ரம் மோகனாவை குட்டி என்றுதான் சிறு வயதில் அழைத்தான். மோகனா வளர வளர அப்படி அழைக்காதே, அழைத்தால் பேச மாட்டேன் என்று மிரட்டியே தன் பெயரை கூற வைப்பாள். அவன் ஏன் குழந்தையென்று அழைத்தானென்று அவனுக்குமே புரியவில்லை.

“ஆமா… சிலபேர் கண்களுக்கு நான் இன்னும் கொழந்தைதான்” என்று ரகுராமை முறைத்தாள் மோகனா. அவன் தான் அவளை “குட்டி பொம்மை போல இருக்க” என்று குழந்தையென்று அழைத்தவன். 

அவள் என்ன சொல்கிறாள் என்று புரிந்த போதிலும், அமைதியாக புன்னகைத்தான் ரகுராம்.

பாரதி அமைதியாக வேடிக்கை பார்த்திருக்க, தங்கையை சமாதானப்படுத்திவிட்டு பத்து வருட கதையை கேட்கலானான் விக்ரம்.

மருத்துவர் அழைத்து உடலளவில் விக்ரமுக்கு எந்த பிரச்சினையுமில்லை. இன்னும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கு அதன்பின் வீடு செல்லலாமென்று கூறியிருக்க, ஒருவாரம் கழித்து வீடு வந்தான் விக்ரம்.

இந்த ஒருவாரத்தில் விக்ரம் எங்கு சென்றானென்று சாந்தி தேவி ரகுராமை அழைத்து விசாரித்திருக்க, ஆளவந்தான் மோகனாவை விசாரித்திருந்தான்.

அன்று பார்கவியை சந்திக்க விக்ரம் தனியாக சென்றதால், அவர்களுக்கு தகவல் சொல்லும் ஓட்டுனருக்கே விக்ரம் எங்கு சென்றானென்று தெரியவில்லை.

மூன்று நாட்களாக எந்த தகவலுமில்லையென்றதும் பதறியவளாகத்தான் சாந்தி தேவி ரகுராமை அழைத்திருந்தாள்.

அக்கணம் ரகுராம் காரியாலயத்தில் இருந்ததால் அவ்வாறு சமாளித்திருக்க, அவன் முன்னால் வந்து நின்ற மோகனாவும் தந்தை அழைத்து விசாரித்ததாக கூறினாள்.

விக்ரமுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை எந்நாளும் மறைக்க முடியாது. அவன் பேசாவிட்டால் நான் அவனை கொன்று அவன் சொத்துக்களை அபகரித்ததாக உன் அப்பா போலீஸ் கம்பளைண்ட் கொடுப்பாரு. அதற்கு முன் விக்ரமிடம் பேசி புரியவைத்து வீட்டாரிடம் பேசச் சொல்ல வேண்டும் என்று தனக்குள் புலம்புவது போல யோசித்தான் ரகுராம்.

மோகனா அவனை முறைத்தாலும், தந்தை செய்யக் கூடியவர் என்பதினால் விக்ரமிடம் அவன் வாழ்க்கையில் பாரதியை தவிர நடந்த அனைத்தையும் கூறலாமென்று முடிவெடுத்து மெதுவாக புரியவைக்கலாயினர்.

ஆளவந்தாரின் நிறுவனத்தை விட்டு வெளியே வந்ததிலிருந்து தனக்கும் தந்தைக்கும் பேச்சுவார்த்தையை இல்லை. அவரை பார்த்தாலும் சிடுசிடுப்பான். ஆனால் சாந்தி தேவியிடம் தினமும் செல்லம் கொஞ்சுவதாக ரகுராம் கூற,

“எதோ ஒரே வீட்டுல இருக்கிறாரே என்றுதான் அவர் கேள்வி கேட்டா, பதில் சொல்வேன். இவள் ஜடமா பாக்குறது போல கடந்து போக என்னால முடியல” என்று மோகனாவை பார்த்தவன் “அவருக்கும் எனக்கும் எந்த உறவுமில்லாமல் இருப்பதே நல்லது” என்றான். 

விக்ரமுக்கு ஆளவந்தானுக்குமிடையில் என்ன மாதிரியான உறவு இருந்திருக்கிறது என்று புரிந்து போக தன் தந்தையின் இறப்புக்காக ஆளவந்தானை பழிவாங்குவதாக விக்ரமை தான் ஏதும் செய்ய நினைக்கவில்லை என்பதை நினைத்து கண்களில் நீர்கோர்க்க, யாரும் அறியாமல் மெதுவாக கண்களை துடைத்துக் கொண்டாள் பாரதி.

ஒருவாரமாக பாரதி மருத்துவமனை, காரியாலயமென்று ஓடிக் கொண்டிருப்பவள் வீட்டுக்கு குளிக்க, துணி மாற்ற மட்டும் தான் சென்றாள். இரவில் விக்ரமோடு மருத்துவமனையில் தான் தங்கினாள்.

“என்ன நினைச்சுகிட்டு இருக்கா? அம்மா, அப்பா இல்லைன்னா, கேட்க ஆளில்லை என்று நினைக்கிறாளா? எங்க போறா, எப்போ வரான்னே தெரியல. அவனை மறந்துட்டேன். அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நம்மளோட ஊருக்கு வர்றதா சொன்னவளோட நடவடிக்கை சரியில்லை” கணவனிடம் முறையிட்டாள் பார்கவி.

“என்னன்னு நான் கேட்குறேன்” பாரதி ஒன்றும் குழந்தையல்லவே, என்ன செய்கிறோம் என்று புரியாமல் செய்ய என்றெண்ணி கூறினான் கார்த்திகேயன்.

“என்னத்த கேப்பீங்களோ, அக்கான்னு நான் ஒருத்தி இருக்குறது அவ கண்ணுக்கு தெரியுதா? மதிக்கிறாளா?” தன் முன்னால் மயங்கி விழுந்த விக்ரமுக்கு என்ன ஆச்சோ என்ற கவலை பார்கவிக்கு கொஞ்சம் கூட இல்லை. ஆனால் அதனால்தான் தங்கை எல்லாவற்றையும் மறந்து வீடு வராமல் இருக்கின்றாளோ என்ற சந்தேகத்தில் கணவனை குடைந்தாள். 

பார்கவி தங்கையின் மீது பாசம் வைத்திருக்கின்றாள். கவலையில் புலம்புவதாக பாரதிக்கு அலைபேசி அழைப்பு விடுத்தால், அவளோ தான் பிசியாக இருப்பதாக அலைபேசியை துண்டித்து விடுவாள். அலைபேசியில் பிடிக்க முடியாதவளை விக்ரமின் காரியாலயத்துக்கு சென்று சந்தித்துப் பேசினான் கார்த்திகேயன்.

“சாரி மாமா” விக்ரமின் நிலையையும், அன்று அவன் ஏன் அவ்வாறு பேசினான் என்பதையும் எடுத்துக் கூறியவள் “நான் அவன் கூட இருக்க முடிவு பண்ணிட்டேன்” என்று தன் முடிவை கூறினாள்.

கார்திகேயனால் விக்ரமின் அன்றைய மனநிலையை புரிந்துக்கொள்ள முடிந்தது. பாரதி அவன் மீது வைத்திருக்கும் காதலையும், விக்ரம் அவள் மீது வைத்திருக்கும் காதலையும் நன்றாகவே உணர்ந்துதானிருந்தான்.

“கூடவே இருக்குறதுன்னு முடிவு பண்ணா கல்யாணம் பண்ணி கூட இரு. வீட்டுக்கு வராட்டியும் போன் பண்ணு. உன் அக்கா உன்ன பத்தி கவலை படுறா” புன்னகைத்து விடைபெற.

“அப்போ நீங்க கவலை படல” சிரித்தாள் பாரதி. 

நடந்த அனைத்தையும் பார்கவியிடம் கார்த்திகேயன் கூற, “அப்படியாங்க?” உள்ளுக்குள் கனன்றாலும் சிலிர்ப்போடு கேட்பது போல் நடித்தாள் பார்கவி.

“இனிமேல் பாரதி நிம்மதியாகவும், சந்தோசமாகவும் அவள் வாழ்க்கையை பார்ப்பாள். விக்ரம்கிட்ட பேசி கல்யாணத்த சீக்கிரம் ஏற்பாடு செய்யணும். அவ கல்யாணம் முடியட்டும் நாம ஆஸ்ரேலியா கிளம்பலாம்” என்று புன்னகைத்தான் கார்த்திகேயன்.

“அவனுக்கு கல்யாணம்தான் கேடா? அன்னைக்கு மயங்கி விழுந்தவன் செத்துத் தொலஞ்சியிருந்தா, எந்தப் பிரச்சினையும் இருக்காது” கருவியவள் “கல்யாணத்துக்கு பிறகு இந்த மறதிநோய் வந்தா என்னங்க பண்ணுறது?” சந்தேகம் கேட்பது போல் திருமணத்தை எவ்வாறு நிறுத்துவது என்று யோசிக்கலானாள் பார்கவி.

“அதான் விக்ரம் எதை மறந்தாலும் பாரதிய லவ் பண்ணுறத மறக்காம இருக்கானே அது போதாதா?” மனைவியின் மனதில் என்ன ஓடுகிறது என்று புரியாமல் கார்த்திகேயன் பேச,

“இவர் ஒருத்தர் விட்டா, இப்போவே தாலிய கொடுத்து கட்ட சொல்வார் போல” கார்த்திகேயனை முறைக்க முடியாமல் பார்த்தவள் விக்ரமின் தற்போதைய நிலையை விலாவரியாக கேட்டுது தெரிந்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள். 

அக்கா என்ன செய்யக் காத்திருக்கின்றாளென்று அறியாமல் விக்ரமை அழைத்துக் கொண்டு ரகுராமோடு வீடு வந்திருந்தாள் பாரதி.

நான் போகிறேன்

மேலே மேலே

பூலோகமே

காலின் கீழே

விண்மீன்களின்

கூட்டம் என் மேலே

பூவாலியின்

நீரைப்போலே

நீ சிந்தினாய் எந்தன்

மேலே நான் பூக்கிறேன்

பன்னீர் பூப்போலே

தடுமாறிப்போனேன் அன்றே

உன்னைப்பார்த்த நேரம்

அடையாளம் இல்லா

ஒன்றைக் கண்டேன்

நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னைப் பார்த்தேன்

என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்

ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை

நேசிக்கும்

என் தூக்கம்

வேண்டும் என்றாய்

தரமாட்டேன் என்றேனே

கனவென்னும் கள்ளச்சாவி

கொண்டே வந்தாய்

வார்த்தைகள் தேடித்தேடி

நான் பேசிப்பார்த்தேனே

மெளனத்தில் பேசும் வித்தை

நீதான் தந்தாய்

அன்றாடம் போகும்

பாதையாவும் இன்று மாற்றங்கள்

காணாமல் போனேன் பாதியில்

நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய்

என்று இங்கேயே கால்நோக

கால்நோக நின்றேன்

என் வீட்டில் நீயும்

வந்து சேரும் காலம் எக்காலம்

பூ மாலை செய்தேன் வாடுதே

என் மெத்தை தேடும் போர்வை

யாவும் சேலை ஆகாதோ

வாராதோ அந்நாளும் இன்றே

ஹா..

உடலுக்குத்தான் வயதாகும் உள்ளத்துக்கு அல்ல. என்றும் இளமையாக வாழ்வது வரம். பத்து வருட வாழ்க்கையை மறந்து மீண்டும் இளமை பருவத்துக்கு திரும்பிய விக்ரமின் நடையில் ஒரு துள்ளல். பேச்சில் கலகலப்பு என்று  நிறுவனத்திற்கு வந்தவன் சுறுசுறுப்பாக வேலை பார்கலானான்.

“என்ன பாஸ் ஆளே மாறிட்டாரு” அவனது நிறுவனத்தின் ஊழியர்கள் மூக்கின் மீது விரல் வைக்க, “ஒருவேளை பாஸ் கல்யாணம் பண்ணிக்க போறாரோ? காதல் வந்தால் இப்படித்தான் போலும்” என்று சில பேச வேறு செய்தனர். 

“என்னது விக்ரம் சாருக்கு கல்யாணமா? நான் இருக்க யாரை கல்யாணம் பண்ணப் போறாரு” விக்ரமிடம் நியாயம் கேட்டு வந்தாள் மம்தா.

அவள் யாரென்றே அவனுக்குத் தெரியவில்லை. இதில் இருவரும் காதலிப்பது போல் மம்தா பேசினால் விக்ரம் திகைக்க மாட்டானா?

“ஒருவேளை நாம இவளை லவ் பண்ணியிருப்போமா? ச்சீ… இவளையெல்லாம் நிச்சயமாக எனக்கு பிடிக்காது. மேபி ரிலேஷன்ஷிப்ல இருந்தேனோ? அது பாரதிக்கு தெரிஞ்சிதான் முகம் கொடுத்து பேச மாட்டேங்குறாளா? டேய் விக்ரம் என்னத்த பண்ணி தொலைச்சியோ” தன்னை தானே திட்டலானான்.

அங்கு வந்த ரகுராம் மம்தா கொஞ்சலாக கெஞ்சுவதையயும், விக்ரம் அதிர்ந்து முழிப்பதையும் பார்த்து “இவன் எல்லாத்தையும் மறந்துட்டான்னு வெளிய சொன்னா வீண் பிரச்சினை வரும் என்று இவங்கப்பாக்கும், பாட்டிக்கும் சொல்லல. இவன் கதை தெரிஞ்சா இந்த மம்தா கல்யாணமே ஆச்சுன்னு சொல்லியிருப்பா” வேகமாக வந்தவன் “ஏம்மா உனக்கு ஒருதடவை சொன்னா புரியாதா? என்னமோ நீயும் அவனும் லவ் பண்ணது போல சொல்லிக்கிட்டு இருக்க? அவன் வாழ்க்கையிலையே ஒரு பொண்ணைத்தான் லவ் பண்ணான். பண்ணிக்கிட்டு இருக்கான். இப்போ தான் கல்யாணம் பண்ண போறான். நீவேற இடையில வந்து குட்டைய குழப்பாதே” என்று மம்தாவை துரத்தியடித்தான்.

ரகுராம் பேசப் பேசத்தான் தனக்கும் மம்தாவுக்குமிடையில் எந்தவிதமான உறவுமில்லையென்று புரிந்துக்கொண்டான் விக்ரம்.

“டேய் மச்சான் நல்லவேளை வந்து காப்பாத்தின. அதுக்குள்ள என்னென்னமோ நினைச்சிட்டேண்டா… டேய் நான் நல்லவனா? கெட்டவனாடா? ரதி முகம் கொடுத்து பேச மாட்டேங்குறா. அவளை சமாதானப்படுத்த வழி சொல்லு” பாவமாய் முகத்தை வைத்திருந்தான் விக்ரம்.

தன் தந்தையின் இறப்புக்கு ஆளவந்தான் தான் காரணம் என்றறிந்தும் விக்ரமோடு நட்பு பாராட்டும் ரகுராம் மட்டும் ஆளவந்தான் குடும்பத்தை பழிதீர்க்க நினைத்திருந்தால், விக்ரமின் இந்தநிலையை சரியாக பயன்படுத்தியிருப்பான். ஏன் மோகனா கூட வழிய வந்து தலையை கொடுப்பது போலல்லவா நடந்துகொள்கிறாள்.

தன் தந்தையின் முடிவுக்கு அவரும் ஒரு காரணம் என்று புரிந்துகொண்டதாலும், விக்ரமின் உண்மையான அன்பினாலும் ரகுராம் விக்ரமையோ மோகனாவையோ காயப்படுத்த நினைக்கவில்லை. காரணமான ஆளவந்தானிடமிருந்தும் விலகியிருக்கவே நினைக்கிறான்.

மோகனாவின் மீது முளைத்த காதலை கூட துச்சமென தூக்கியெறிந்து விக்ரம் ஒருவனுக்காகத்தானே.   

தன்னை பாவமாய் பார்ப்பது விக்ரமுக்கு ஒருகாலமும் பிடிக்காது. அதனால் தான் தனக்கு நடந்த எதையும் யாரிடமும் கூற மறுத்தான். அவன் உணர்வுகளுக்கு மதிப்புக்கு கொடுத்துத்தான் ரகுராம், மோகனா மற்றும் பாரதி அமைதி காத்தனர்.

இதனால் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்று ரகுராம் அவன் கூடவேதான் இருப்பான். இதோ மம்தாவை சமாளித்தான்.

“நீ பேசாம பாரதிய கல்யாணம் பண்ணிக்க. என்னதான் உனக்கு ஆப்டர் காலேஜ் லைப் மறந்தாலும், உனக்கு வயசாகிருச்சு. இப்போ போய் ப்ரொபோஸ் பண்ணி லவ்வ சொல்லவெல்லாம் நேரம் பத்தாது. உடனே கல்யாணம், ஸ்டைட்டா ஹனிமூன். ஒரே வருஷத்துல குழந்தை குட்டின்னு செட்டிலாகு” விக்ரம் கேட்ட கேள்விக்கு கிண்டலாகவே பதில் சொன்னான் ரகுராம்.

நண்பனை முறைத்த விக்ரம் “என்ன நடந்ததென்று தெரியாததால் என்ன செய்யணும் என்றும் புரியல. ஆனா நீ சொன்னா சரியாகத்தான் இருக்கும்” வழிந்தான் விக்ரம்.

“பார்டா…  மொததடவ வாக்குவாதம் பண்ணாம ஒத்துக்கிட்டான்” விக்ரமை கலாய்த்தவாறே வெளியேறினான் ரகுராம்.

பாரதியின் ஒதுக்கம் ரகுராமின் கண்களுக்கு புலப்படாமலா இருக்கும்? என்ன பிரச்சினை என்று தெரிந்தேதான் அவளிடம் கேட்டான். பாரதி தனக்குள் இருக்கும் அச்சத்தை விலாவரியாக கூறியவாறே அழுதாள்.

ரகுராமுக்கு அவள் நிலை நன்றாகவே புரிந்தது. “நல்லதே நடக்கும் என்று நினைப்போம் பாரதி. விக்ரம கல்யாணம் பண்ணிக்க” என்றான். அதைத்தான் நண்பனுக்கும் கூறினான்.

விக்ரம் நினைப்பதெல்லாம் நடந்திடுமா? அவ்வளவு இலகுவில் நடக்க விட்டுடுவாளா பார்கவி?

பாரதியிடம் திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்க வேண்டும். கேட்டால் அவர் மறுக்கவும் கூடாது. மறக்கவும் கூடாது. அவ்வாறான ஒரு இடத்தில் தன் காதலை சொல்லி சம்மதம் வாங்க வேண்டும் என்று எங்கே செல்லலாமென்று கணினியில் பார்த்துக்கொண்டிருக்க, திரையில் அவனுக்கு மின்னஞ்சல் வந்ததாக காட்டியது. என்னவென்று பார்த்தவன் அதிர்ந்தான்.

அது ஒரு புகைப்படம். புகைப்படத்தில் கார்த்திகேயனும், பார்கவியும் மாலையும் கழுத்துமாக திருமணக்கோலத்தில் சிரித்தவாறு நின்றிருந்தனர். புதிதாக ஏறிய தாலி அவள் கழுத்தில் இருந்தது.

பாரதிக்கு பார்கவியென்றொரு இரட்டை இருப்பதாக அறியாத விக்ரமின் கண்களுக்கு அவள் பாரதியாகத்தான் தெரிந்தாள்.

“என்னையும் என் மாமாவையும் சேர்த்து வச்சி அசிங்கமாக பேசினியே. அத நான் உண்மையாக்க போறேன். நான் என் மாமாவையே கல்யாணம் பண்ணிப்பேன். போதுமா உனக்கு? சந்தோசமா? என் வாழ்க்கையில நான் உன்ன திரும்ப பார்க்கவே கூடாது” அன்று பார்கவி பேசியது சட்டென்று ஞாபகத்தில் வந்து செல்ல “என் ரதிக்கு கல்யாணமாச்சா?” அவன் கண்கள் சட்டென்று கலங்க நெஞ்சம் இறுகளானது. தலை வலிக்கவே கண்களை இருக்க மூடலானான் விக்ரம்.