அத்தியாயம் 16

மோகனா அழைத்து “என்ன இரண்டு நாளா உன்னையும் அண்ணனையும் ஆபீஸ் பக்கம் காணோம்? எங்கேதான் போய் தொலைஞ்சீங்க” கடுகாடுத்தாள்.

ஆபீஸ் விஷயமாகத்தான் போய் இருக்கிறோம் என்றவன் ஆபீஸ் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்ததோடு ஒருவாரத்திற்கு பிறகு மோகனாவை ஒரு ரெஸ்டூரண்ட்டில் தன்னை வந்து சந்திக்குமாறு அழைத்தான்.

“என்ன பயபுள்ள எப்போவும் இல்லாமல் இன்னக்கி மனசிறங்கி வர்றான்” குதூகலமாக ரகுராமை காணச் சென்றாள் மோகனா.

சொன்ன நேரத்துக்கு முன்பாகவே மோகனாவின் வரவுக்காக காத்திருக்கலானான் ரகுராம்.

காரியாலயத்தில் மோகனா இவனை நெருங்குவது, முத்தமிடுவது என்று கூடுதல் உரிமை எடுத்துக்கொள்ள, அவளை தடுக்கவும் தெரியாமல், தன்னைமீறி அவள்பால் சாயும் மனதை கட்டுப்படுத்தவும் புரியாமல் விக்ரமிடம் சென்று மோகனாவுக்கு விரைவில் திருமணம் செய்துவைக்குமாறு கூறலானான்.

“என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ண உனக்கு என்னடா அவசரம்?”

அவள் தன்னிடம் எல்லை மீறுவதாக கூறத்தான் முடியுமா? “அவளுக்கு கல்யாணமானாத்தான் நீ கல்யாணம் பண்ணுவ போல. நீ கல்யாணம் பண்ணாதான் நான் கல்யாணம் பண்ண முடியும்?” என்று சமாளித்தான்.

“அட நீ வேற, பாரதிக்கு ப்ரொபோஸ் பண்ண போறேன். அவ சம்மதம் சொன்னா நான் கல்யாணம் பண்ணிப்பேன். மோகனா கல்யாணம் பண்ணும் வரைக்கும் எல்லாம் நான் வைட் பண்ண மாட்டேன். நீயும் உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்க. எனக்காக வைட் பண்ணாதே” என்று புன்னகைத்தான் விக்ரம்.

என்ன இவன் நான் ஒன்றை கூறினால் அதற்கு மாறாக கூறுகின்றானே என்று நண்பனை பார்த்திருந்தான் ரகுராம்.

“என்னடா… ஏதாச்சும் பிரச்சினையா?” யோசிப்பது போல் விக்ரம் பாவனை செய்ய, தலையசைத்து ஒன்றுமில்லையென்றான் ரகுராம்.

“நீ மாடு மாதிரி தலையாட்டும் பொழுதே தெரியுது உனக்கு மூக்கணாங் கயிறு போடணும் என்று. மோகனாவ போடச் சொல்லட்டா? என்னடா ஆபீஸ்ல நடக்குற எதுவும் எனக்குத் தெரியாது என்று நினைக்கிறியா?” என்று கேட்டு நண்பனை அதிர்ச்சிக்குள்ளாக்கினான் விக்ரம்.

“டேய் நீ நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்ல” ரகுராம் பதற

“ஒண்ணுமில்லைதான். உன் மனசுல ஒண்ணுமில்லைதான். ஆனா என் தங்கைச்சி மனசுல நீ இல்ல இருக்க” பொடிவைத்து பேசலானான் விக்ரம்.

“அவ கொழந்ததா, எதோ புரியாம…”

“இங்க பாரு என் தங்கச்சிய கட்டிக்கன்னு நான் சொல்ல மாட்டேன். நீ நோ சொல்ல காரணம் அவளை நீ உன் தங்கச்சியா பக்குறியா? இல்ல ஆளவந்தான் பொண்ணா பாக்குறியா?” பட்டென்று கேட்டான்.

ஒரு அண்ணனாக மோகனாவின் திருமணத்தை பற்றி விக்ரம் யோசிக்காமலா இருப்பான்? தங்கையிடம் திருமணத்தை பற்றி பேச,

“எனக்கு உன் ப்ரெண்டத்தான் பிடிச்சிருக்கு. கட்டினா அவனைத்தான் கட்டுவேன். இல்லையா காலம்பூரா கன்னியாவே இருந்து தொலையிறேன்” இதுதான் என் விருப்பம். நான் என் முடிவில் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கின்றேன் என்று நச்சென்று சொல்லிவிட்டாள்.

“பிடிவாதக்காரி அன்னைக்கு என்னமோ புரியாம சொல்லுறான்னு நினச்சேன். ஆனா உறுதியா இருக்கா. அது சரி யார் ரெத்தம்? நினைச்சதை நடத்தி முடிக்காம ஓயா மாட்டா” என்றெண்ணியவன் “நான் அவன்கிட்ட பேசிட்டு சொல்லுறேன்” என்று விக்ரம் கூறியதும்,

“நோ சொல்ல அவன் என்ன தங்கச்சியாகத்தான் பார்க்கிறேன் என்று மட்டும் சொல்லட்டும் அவன் சாவு என் கைலதான்” அமைதியாக கூறிவிட்டு சென்றாள் மோகனா.

அவள் பேசிய விதத்திலையே இருவருக்குமிடையில் என்ன மாதிரியான உறவு இருக்கிறது என்று விக்ரம் புரிந்துக் கொண்டான். காரியாலயத்தில் நடப்பு எனக்குத் தெரியாதா? என்று போட்டுப் பார்க்க, ரகுராம் பதறியதிலையே அவனுக்கு மோகனை பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு வேண்டுமென்றேதான் ரகுராமிடம் நீயும் மோகனாவை தங்கையாக பார்க்கின்றாயா எனக் கேட்டான்.

“தங்கையா? அவளையா? ஒருகாலமும் என் மனம் அவளை தங்கையாக பார்த்ததே இல்லை. ஆளவந்தான் எந்த பிரச்சினையும் செய்துவிடக் கூடாதென்றுதான் என்னை “அண்ணா” என்று அழைக்குமாறு அவளிடம் கூறினேன். அன்று அவள் தவிர்த்ததன் காரணம் இப்பொழுது புரிகிறது” பெருமூச்சுவிட்ட ரகுராம் “மோகனா ஆசைப்படலாம். உங்க அப்பாவும், பாட்டியும் சம்மதிக்க மாட்டாங்க. எனக்குன்னு குடும்பம் இல்ல. பெரியவங்க சம்மதம் இல்லாம அவளை கல்யாணம் பண்ணி அவளுக்கும் குடும்பம் இல்லாமல் போனால் அது பாவம்” என்று மறுத்தான்.

“எனக்குத் தெரியும்டா… இதைத்தான் நீ சொல்வான்னு” நண்பனின் மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்துபோக “பாட்டிய சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு. அவங்க அப்பாவை பார்த்துப்பாங்க” என்று நண்பனுக்கு தைரியமூட்டினான்.

சந்தோசமாக புன்னகைத்த ரகுராம் “அவசரப்பட்டு மோகனாகிட்ட சொல்லிடாத. நானே அவகிட்ட சொல்லுறேன். வித் ப்ரோபோசல்” என்று கண்சிமிட்டினான்.

“பாருடா…” என்று கலாய்த்த விக்ரம் அடுத்த நாள்தான் காரியாலயத்தில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.  அதன்பி விக்ரம் பாரதியிடம் திருமணம் செய்துகொள்ளலாமா என்று பேசி அவள் மறுத்து பாரதியென்றெண்ணி பார்கவியிடம் பேசி மயங்கி விழுந்ததுமல்லாது என்ன நடந்தது என்பதையே மறந்து விட்டான்.

மோகனாவிடம் காதலைச் சொல்ல சில, பல திட்டங்களை வகுத்திருந்த ரகுராம் விக்ரம் எல்லாவற்றையும் மறந்து போனதில் அவளிடம் எதையும் சொல்லாதிருந்தான்.

வாக்கு கொடுத்த நண்பனே எல்லாவற்றையும் மறந்து போனான். இப்பொழுது போய் என்னவென்று பேச? மோகனாத்தான் வேண்டுமென்று ஆளவந்தானிடம் சண்டை போடலாம். ஆனால் “எனக்குத் தெரியாம என் தங்கையையே…” என்று விக்ரம் கேட்டுவிட்டால் என்ன செய்வது. மோகனாவை விட எனக்கு விக்ரம் முக்கியம் அவன் நட்பு முக்கியம் என்று தன் காதலை மனத்துக்குள்ளையே பூட்டி வைக்கலானான்.

மோகனாவை தன்னிடமிருந்து எவ்வளவு தூரம் தள்ளி வைக்க ரகுராம் முயற்சித்தாலும், மோகனா சேட்டைகள் செய்த்து அவனை அவள்பால் ஈர்த்துக் கொண்டே இருந்தாள்.

அவன் இருக்கும் துறையில் எத்தனை பெண்களை சந்தித்திருக்கின்றான். பேசி, பழகியிருக்கின்றான். மோகனாவின் மனம் அவனுக்கு புரியாமலில்லை. பிற பெண்களிடம் இல்லாத ஈர்ப்பு அவளை பார்த்தால், அவள் நெருங்கி வந்தால் தோன்றுவதை ரகுராம் நன்கு உணர்ந்துதானிருந்தான். அதற்கு காதல் என்ற வடிவம் கொடுக்க மட்டும் அவன் மனம் விரும்பவில்லை.

அவன் அவளை விரும்புவதாக கூறினால், என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று அவளுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. விக்ரமின் தங்கை அவனை போலவே பிடிவாதக்காரி. ஆளவந்தானின் இரத்தம் அல்லவா அவள் உடலிலும் ஓடுவது என்று முயன்றமட்டும் அவளிடமிருந்து ஒதுங்கியே நின்றான்.

அவள் பேச்சிலும், செய்கைகளிலும் அவள் இன்று, நேற்றல்ல, பள்ளிப் படிக்கும் பொழுதிலிருந்தே காதலிக்கின்றாள் என்று புரிந்துக் கொண்டான். அதனால் தான் “அண்ணா” என்று அழைக்கும்படி வற்புறுத்தியும் பிடிவாதமாக மறுத்திருக்கின்றாள். தனக்கும் அவள் மேல் இருந்த ஈர்ப்பு காதல் தானென்று அப்பொழுது உணராதவன் ஆளவந்தானை எண்ணி விலகியிருந்தான். ஆனால் இன்று அவன் நினைத்தால் எல்லோரையும் எதிர்த்து அவள் கரம் பற்ற முடியும். விக்ரமுக்காக தன் மனதை மறைத்திருந்தான்.

விக்ரம் சம்மதம் கூறிய பிறகு இருந்த ஆனந்தம் அவன் எல்லாவற்றையும் மறந்ததில் தலைகீழானது என்பது தான் உண்மை.

மோகனா வந்தால் அவளிடம் எவ்வாறு பேச வேண்டுமென்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தவனின் இதயம் அவளை பார்த்த உடன் தாறுமாறாக துடிக்கலானாயது.

“நான் சொல்வதை இவள் பொறுமையாக கேட்க வேண்டும். வந்த உடன் இவள் சேட்டை செய்ய ஆரம்பித்தால் நான் இவளுக்கு இசைந்து கொடுப்பேன் என்று முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டான் ரகுராம்.

மொழியில்லை மொழியாய்

உன் பேர் சொல்லாமல்

விழியில்லை விழியாய்

உன் முகம் பார்க்காமல்

உயிரினில் உனையே

நான் புதைத்தே நின்றேன்

புரிந்திடும் முன்னே

உனை பிரிந்தேன் அன்பே…ஏ…..

தினமும் கனவில்

உனை தொலைவில் காண்கிறேன்

அதனால் இரவை

நான் நீள கேட்கிறேன்

எழுத்து பிழையால்

என் கவிதை ஆனதே

எனக்கே எதிரி

என் இதயம் ஆனதே

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே

ஓ நெஞ்சே நெஞ்சே

ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

இன்று ரகுராம் அழைக்கவும் ஓடோடி வந்த மோகனா “இவனுக்கு என் மனசு புரியுதா? இல்லையா?” என்று முறைத்தவாறே அவன் முன்னால் அமர்ந்தாள்.

“என்ன சாப்பிடுற?” அதிகாரத் தொனியிலையே கேட்டான்.

“ஆ… பச்ச மங்கா வாங்கிக் கொடுக்கிறா?” யாருகிட்ட? என்னையே அதிகாரம் செய்வியா? நக்கலாக பதில் சொன்னாள் மோகனா.

“இவ ஒருத்தி… அடங்கவே மாட்டேங்குறாளே” கடுப்பானவன் “சாரி அதெல்லாம் இங்க கிடைக்காது நானே ஆடர் பண்ணுறேன்” அவள் பதிலையும் எதிர்பாராமல் அவன் இஷ்டத்துக்கு எதையெதையோ ஆடர் செய்தான்.

“என்ன இவன் எப்போவும் முசடாகவே இருக்கான்” என்று அவனை பார்த்த மோகனா அவனை ரசிக்கலானாள்.

கோபத்தில் கூட ரகுராம் மோகனாவுக்கு பிடித்தமான உணவுகளையே ஆடர் செய்திருந்தான்.

“அட எனக்கு என்ன பிடிக்கும் என்று கூட தெரிஞ்சி வச்சிருக்குறியே” கண்சிமிட்டி சிரித்தாள் மோகனா.

அவளது பத்து வயதிலிருந்தே அவனுக்கு அவளை தெரியும். அவளுக்கு என்ன பிடிக்கும். பிடிக்காது என்று கூட தெரியும். புதிதாக அறிந்துகொள்ள எதுவுமில்லை. மோகனா கிண்டலாகத்தான் கூறினாளென்று ரகுராமுக்கு புரியாமலில்லை. ரசிக்கத்தான் முடியவில்லை. இவளை விலக்கி வைப்பத்து கடினம். இவளிடமிருந்து விலக்கித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தான். அவன் மனமோ எப்படி? விக்ரம் பாரதியை கண்டபடி பேசி விலக்கி வைத்தானே அப்படியா? என்று கேள்வி எழுப்பியது.

ஒருகாலமும் அவ்வாறு பேசி வைக்க மாட்டேன். பேசினால் அழுது கரைய இவள் பாரதியுமல்லவே. தன் மனத்தில் இவளை பற்றி அவ்வாறான எந்த எண்ணமுமில்லை என்று தெரியப்படுத்தினால் போதும் என்று நினைத்தான்.

“ஆமா எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போற? உனக்கு கல்யாணமானாதான் உங்கண்ணன் கல்யாணம் பண்ணுவான். அவன் கல்யாணம் பண்ணினால் தான் நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்” மோகனாவின் முகம் பாராமல் தட்டை பார்த்தவாறுதான் கேட்டான் ரகுராம்.

“அண்ணா உன்கிட்ட ஒன்னும் சொல்லலையா? ஐ மீன் கேட்கலையோ?” இவள் தான் விக்ரமிடம் அவள் மனதை தெளிவாக கூறியிருந்தாளே

அது ரகுராமுக்கு தெரியாதா என்ன? தெரியாதது போல் நடிக்க வேண்டிய சூழ்நிலையிலல்லவா அவன் இருக்கின்றான்.

“நீ என்ன சொன்னாலும் அது இப்போ உங்கண்ணனுக்கு ஞாபகத்தில் இருக்காது” என்றவன் விக்ரமின் நிலையை பொறுமையாக எடுத்துக் கூறி தெளிவுபடுத்தினான்.

“என்ன? ஒருநொடி அதிர்ந்தவள் “லூசா நீ? முக்கியமான விசயத்த சாப்பாடு போட்டுத்தான் சொல்லுவியா? அண்ணா எந்த ஹாஸ்பிடல்ல இருக்கான். வா போலாம்” என்று எழுந்துக் கொண்டாள்.

“முதல்ல உக்காரு. நான் சொல்ல வேண்டியத இன்னும் சொல்லி முடிக்கல”

“டேய் இதைவிட என்னடா முக்கியமான விஷயம்?” என்ற மோகனாவை ஏகத்துக்கும் முறைக்கலானான் ரகுராம்.

“சொல்லித் தொலை எனும் விதமாக பதிலுக்கு முறைத்தவள் அமர்ந்தாள்.

“நீ பாட்டுக்கு கொழந்தைத்தனமா உங்கண்ணன் கிட்ட போய் பத்து வருஷ கதையையும் பத்தி வைக்காதே. முக்கியமா நீ ஆன்லைன்ல யாரையோ லவ் பண்ணியே அந்தக் கதைய சொல்லி அவன டென்சன் பண்ணாதே. அவனா கேட்டா நான் சொல்லி சமாளிக்கிறேன்” மோகனா ஆன்லைனில் யாரையோ காதலித்து  ஏமார்ந்தாளென்று விக்ரம் புலம்பிய காலகட்டம் அது. ரகுராம் அதை இப்பொழுது மோகனாவுக்கு ஞாபகப்படுத்தக் காரணம் விக்ரம் கேட்பானென்று கூறினாலும், நீதான் யாரையோ காதலிக்கிறாயே. என்னை எதற்கு காதலிப்பதாக கூறுகின்றாய் என்று மறைமுகமாக சாடினான்.

“ஓஹ் உனக்கு அது கூட ஞாபகம் இருக்கா?” நக்கலாக கேட்டாள்.

“உன் அண்ணன் தான் எல்லாத்தையும் மறந்துட்டான். நானில்லை” இவனும் நக்கலாக கூறிவிட்டு கைகழுவ எழுந்து சென்றான்.

“இப்போ இவன் என்ன சொல்ல வாரான்? நான் ஒருவனை காதலித்ததால் கறைபடிந்த விட்டேன் என்கின்றானா? இனிமேல் யாரையும் காதலிக்க தகுதியற்றவளென்கின்றானா? இவன் மட்டும் நடுரோட்டில் வைத்து ஒரு பெண்ணை முத்தமிட்டது தவறில்லை. நான் காதலித்தது தான் தவறா? முட்டாள்” கொதித்தாள்.

ரகுராமின் மேல் தனக்கு இருக்கும் ஈர்ப்பால் அவனை அண்ணா என்று அழைக்க. மறுத்தவள் அவனிடமிருந்து விலகி நிற்பது போல் நடித்தாலும் அவன் அறியாமல் அவனை பின் தொடர்ந்துக் கொண்டுதான் இருந்தாள்.

இதை ரகுராம் கவனித்தானோ இல்லையோ விக்ரம் கவனித்து விட்டான். மோகனா பள்ளிப் படித்துக் கொண்டிருக்கின்றாள். அவளுக்கு ரகுராமின் மேல் இருப்பது காதலல்ல இந்த வயதில் வரும் ஒருவிதமான ஈர்ப்பு என்று தங்கைக்கு புரியவைக்க முயன்றான்.

“உன் பிரெண்டு யாரையாவது லவ் பண்ணுறானா?”

இல்லையென்று கூறினால் தனக்கு வாய்ப்பிருக்கு என்று உளறுவாளோ என்றெண்ணி “ஆம்” என்றான்.

“நீ பொய் சொல்லலையே” தொண்டை கமறினாலும் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“இங்க பாரு உன் வயசுக்கு நீ லவ் பண்ண நினைக்கிறான்னா, அவன் வயசுக்கு ஆசை வராதா? காதல் வராதா? வந்தா தப்பா?” விக்ரம் ஏதேதோ பேச அவனை சந்தேகமாக பார்த்தாள் மோகனா.

“என்ன நீ அவன்கிட்ட போய் கேட்க போறியா? நானே அவன் விசயத்துல தலையிட மாட்டேன். நீ கேட்டா மட்டும் உண்மைய சொல்லிடுவானா? அவன் கண்ணுல நீ இன்னும் கொழந்தைதான். அத சொல்லியே உன்ன துரத்துவான். அசிங்கப்பட்டு நிற்க்க போற” எங்கே  இவள் சென்று ரகுராமிடம் கேட்டு விடுவாளோ என்று மழுப்பலாக சமாளித்தான்.

மோகனா சட்டென்று யார் என்ன சொன்னாலும் நம்பக்கூடியவளல்ல. அண்ணன் பொய் சொல்கிறானா? சமாளிக்கின்றானா? என்று ஆராய்வதை விட ரகுராமிடம் காதலை சொன்னால் அவன் மறுப்பதற்கான காரணங்களை ஆராய்ந்தாள்.

இப்பொழுது போய் காதலிப்பதாக கூறினால் விக்ரம் கூறுவது போல் குழந்தையென்று நிச்சயமாக மறுப்பான். அதனால் பள்ளிப் பருவம் முடிந்த பின் சொல்லலாமென்று முடிவெடுத்தாள். ஆனாலும் அவனை பின் தொடர்வதை விடவில்லை.

பள்ளிப் படிப்பை முடித்தவள் ஆசையாக அவனை காண யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் விக்ரம் படிக்கும் கல்லூரிக்கு வந்தாள். அவள் கண்கள் அவனை மட்டும் தேடியலையாலானது. அக்கணம் ரகுராம் ஓட்டமும் நடையுமாக செல்வதை பார்த்தவள் அவன் பின்னால் ஓட விக்ரம் அவள் கையை பிடித்து தடுத்திருந்தான்.

யார் தன்னை தடுத்தது என்று ஒருநொடி பார்த்தவள் “என்ன” என்று அண்ணனை முறைத்தவாறே  ரகுராமை பார்க்க ஓடிச் என்றவன் மூச்சு வாங்கியவாறே ஒரு பெண்ணின் முன்னால் நின்று தலை கோதி விட்டு தன் இருகைகளையும் கொண்டு அவள் கன்னங்களை தொட்டு அவள் இதழ் நோக்கி குனிந்தான்.

அதை பார்த்து அதிர்ந்த மோகனாவின் கண்களிலிருந்து கண்ணீரை நிற்காமல் பெறுக விக்ரமின் கையை உதறிவிட்டு ஓடினாள்.

அவள் பின்னால் விக்ரம் சென்றால் ஏங்கி ஏங்கி அழுதுக் கொண்டிருந்தாள்.

தங்கையை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் விக்ரம் முழித்துக் கொண்டிருக்க, அங்கு வந்து சேர்ந்தான் ரகுராம்.

அவனை பார்த்ததும் அவசர, அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டாள் மோகனா.

“என்னாச்சு?” பதறியவனாக மோகனின் கண்ணீரை துடைத்தவாறே சமாதானப்படுத்தலானான்.

“ச்சீ தள்ளிப்போ…” கோபத்தில் சீரியவள் ரகுராமை தள்ளி விட்டாள்.

அதிர்ந்தவன் “என்னடா… ஆச்சு? குழந்தைய நீ ஏதாச்சும் சொன்னியா?” விக்ரமை முறைக்க, அந்த சூழ்நிலையிலும் விக்ரமின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

தங்கை தவறாக புரிந்துக் கொண்டாலென்று கூற வந்தவன், நண்பனின் மனதில் எந்த விகல்பமும் இல்லை என்று புரிந்து போக, “இவ ஆன்லைன்ல யார் கூடவோ பேசிப் பழகி லவ் பண்ணி தொலைச்சாலாம். அவனை தேடி வந்தா, அவன் இவளுக்கு டிமிக்கி கொடுத்துட்டு பறந்துட்டான்” என்று சிரித்தான்.

“டேய் அண்ணனா நீ? கிண்டல் பண்ணுற? பணம், காசு போனா போகுது. இவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா?” ஆன்லைனில் சின்ன பெண்களை காதலித்து ஏமாற்றியதாக அன்றாடம் வரும் செய்திகளை பார்ப்பவன் விக்ரம் கூறியதை வைத்து மோகனா பணத்தை பறிகொடுத்து விட்டாள் என்று தான் எண்ணினான். ஏதாவது ஆகியிருந்தால், அவள் இங்கு வந்திருக்கவும் மாட்டாள். அவள் நிலை இவ்வாறிருந்திருக்காது என்று அவளை ஆராய்ந்தவாறுதான் கூறினான்.

இவர்கள் என்ன உளறுகிறார்கள் என்று பார்த்திருந்த மோகனா தான் ரகுராமை காதலிப்பதை அவன் அறிந்துக்கொள்ளக் கூடாதென்று தான் அண்ணன் இவ்வாறு கூறியிருக்கின்றான் என்றெண்ணி “ஆமா, ஆமா நான் ஏமார்ந்தது உங்க ரெண்டு பேருக்கும் சிரிப்பா இருக்கா?” கோபமான மூச்சுக்களை இழுத்து விட்டவள் இருவரையும் இடித்து விட்டு நகர்ந்தாள்.

“இவ என்ன மதிக்கவே மாட்டாளா? நான் இவளுக்காக பேசிக் கொண்டிருக்கிறேன். இவ என்னடான்னா….? இப்படி பண்ணுறாளே” மோகனாவின் மனதில் என்ன இருக்கிறது. அவள் எதற்காக இவ்வாறு நடந்துக்க கொண்டாள் என்று புரியாமல் நொந்த ரகுராம் விக்ரமிடம் புலம்பித தீர்த்தான்.

இன்று மோகனாவின் திருமணத்தை பற்றி ரகுராம் விக்ரமிடம் பேசிய பொழுது அன்று நடந்த சம்பவத்தை தெளிவாக எடுத்துக் கூறியிருந்தான்.

மோகனாவுடனான கடந்த காலத்தை ஓட்டிப் பார்த்த ரகுராமுக்கு அவள் மனம் தெளிவாக புரிந்து போனது. குதூகலத்தில் குதித்தவனை விக்ரமின் விபத்து தரையிறக்கியிருக்க, மோகனாவை தன்னிடமிருந்து விலக்கி வைக்க அன்றைய சம்பவத்தை பேசி அவளை வெறுப்பேத்தியிருந்தான்.