“மேடம் நீங்க கேட்ட பெரியய்யா வீடு இதுதான்!!” என்ற குரலில் திரும்பி ஆட்டோக்காரரின் முகத்தை பார்த்தாள்.

“மேடம் என்ன வேலையா இங்கே வந்து இருக்கீங்க ??” என்று கேட்கவும் “ப்ச்”…என்று சலித்துக்கொணடவள் “எத்தனை முறைதான்பா இதையே கேட்ப?? மீட்டர பாத்து ரேட்ட சொல்லுயா டைம் ஆச்சு” என்றவள் திரும்பி சுற்றியும்  கண்களை சுழல விட்டாள்.

“எதுக்கு வந்துருக்கான்னு தெரியலயே, ஆள் பாக்க வேற டிப்டாப்பா அம்சமா இருக்கா!! என்னவா இருக்கும்!! அய்யோ தெரியலன்னா தலை வெடிச்சிடுமே??” என தனக்குள்ளேயே நினைத்தவர் மீட்டரை பார்த்தார். வண்டியில் ஏறியலிருந்து அவரும் எப்படியெல்லாமோ பேச்சு கொடுத்து பார்த்துவிட்டார். எல்லா முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்தது. மௌளமே பதிலாக கிடைத்தது. முயற்சித்து பார்த்து தோற்றவர், ஒரு கட்டத்தில் “ அடப்போங்கயா” என வாயை மூடிக்கொண்டு வந்து விட்டார்.

அது வளர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு கிராமம். ஊருக்குள் புதிதாக ஒருவர் வரும்போது யாரு? என்ன? என்ற தெரிந்துக்கொளளும் ஆவலுடன் தான் விசாரித்தார் “அமுக்குணி வாயா தொறந்தாதானே!!”

“மேடம்!! பெரியய்யா வீட்டுக்கு தூரத்து உறவுங்களா நீங்க??விசேசத்துக்கு வந்து இருக்கீங்களா??” என மீண்டும் கேட்வும்

“உனக்கெதுக்கய்யா அதெல்லாம்??டைம் ஆச்சு சீக்கிரம் கணக்க முடி!!” என பேசிக்கொண்டிருக்கும் போதே கேட்டை திறந்து கொண்டு வெளியே வந்தாள் அந்த வீட்டின் வேளையாள் கனகா. மாநிறம், ஐந்தரை அடி உயரம் இருப்பாள். பெரிய வீட்டில் சமையல் வேலை செய்கிறாள். நேறே வந்தவள்  “யே புள்ள பார்வதி!! சீக்கிரம் வாடி நேரமாச்சு!! எப்ப வரச்சொன்னேன்?? எப்ப வரவ??” என குரல்கொடுத்துக்கொண்டே வந்தாள்.

“ மேடம் மேடம் சொல்லிட்டு போங்க மேடம்!!” என ஆட்டோக்காரர் கெஞ்சவே ஆரம்பித்துவிட்டார்.

“ அச்சோ!.…..சொந்தமெல்லாம் இல்லையா!! சாபாடினேட்டர் வேலைக்கு வந்துருக்கேன்” என நூறு ரூபாய் தாளை அவர் கையில் திணித்துவிட்டு கனகாவோடு வீட்டிற்குள் சென்றுவிடட்டாள் பாரு

“ அப்படின்னா??” என்றவர் குரல் அவளை எட்டவில்லை. “கடவுளே!!இப்போ இதை  யாருகிட்ட போய் நான் கேட்பேன்??” என புலம்பிக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டு சென்று விட்டார் அவர்.

வீட்டின் கேட்டிற்குள் நுழைந்தவள் அதன் அழகில் ஒரு கணம் அசந்துதான் போனால். ஆளுக்கொருபுறம் பரப்பராக சுற்றி சுற்றி வேலைசெய்து கொண்டிருந்தார்கள். முன்வாசல் வழியாக உள்ளே செல்ல இயலாது அவ்வளவு கூட்டம்

“ஆடி‌ அசஞ்சு வராதடி!!வெரசா வா!!” என்றவள் வீட்டை சுற்றி பின்வாசல் வழியாக சமையற்கட்டிற்குள் நுழைந்தாள். பாருவும் அவளை பின்தொடர்ந்து வீட்டினுள் நுழைந்தாள்.

“இந்த பக்கம் உன் பொருளெல்லாம் வச்சுக்க,வேலை முடிந்ததும் ஐயாகிட்ட பேசுறேன்!!”என்று ஓரிடத்தை காட்டியவள் சமையல் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டாள். பார்வதி அப்படியே நின்றுக்கொண்டிருந்தாள்.

“ என்னடி மசமசன்னு நிக்கிற?? இந்த பக்கம் வந்து வெங்காயத்த உறி!! வா!!” என வேலை ஏவினாள்.

தனது உடைமைகளை கனகா சொன்ன இடத்தில் வைத்தவள்,வாட்சையும் கலட்டி வைத்து விட்டு அமர்ந்து வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

“ பாருபுள்ள!! கவனமா புழப்ப பாரு!!என்னய நம்பிதான் உங்க ஆத்தா உன்னைய அனுப்பி விட்டிருக்கு,சூதனமா புழைச்சிக்க!!பின்னேரம் பெரிய ஐயாகிட்ட பேசிக்கலாம்!!” என்றாள் கனகா.

அவள் கூறியதையெல்லாம் கேட்டவள் தலையை உருட்டவும்

“தலைய தலைய ஆட்டாம வாயத்தொறந்து பேசுடி!!” என்றாள்

“சரிக்கா சரிக்கா!!” என்றவள்

“ வீட்டில என்ன விஷேசம்?? எல்லாம் பரப்பரப்பா இருக்கு??” என பேச்சை தொடங்கினாள். இருப்பெண்கள் ஒன்றுக்கூடிவிட்டால் பேச்சிற்கா பஞ்சம்!

“ பெரியய்யா பொண்ணு ஸ்ரீ அம்மாவுக்கு கல்யாணம் அதேன் இந்த ஏற்பாடெல்லாம்!!”

“ஊரில் உள்ள அத்தனை பெரிய தலையும் இங்க தான் இருக்கும் போலவே” என்று வீட்டு முற்றத்தில் நின்ற கூட்டத்தை நினைத்துக்கொண்டே கேட்டாள். “இருக்காதா பின்னே!!ஒரே பொண்ணு கல்யாணம் இல்ல அதான் மனுசன் சிறப்பா செய்யறாக!!”

“ஒரே பொண்ணா?? பெரிய ஐயாவுக்கு மொத்தம் எத்தனை புள்ளைங்க?? ஆளுங்க எல்லாம் எப்படி??” என்றாள் கதை கேட்கும் பாவனையுடன்

பெரிய ஐயாவுக்கு மொத்தம் மூணு புள்ளைங்கடி, மூத்தவரு “வெற்றிவேல்” சொக்கத்தங்கம். ஊரில் எந்த விசேஷம்னாலும் பிரச்சனைன்னாலும் ஐயாகிட்டாதான் எல்லாரும் வந்து நிற்பாங்க. முகங்சுலிக்காம யாருக்கு என்ன வேணும்னு பார்த்து செய்யறதுல்ல அவரை அடிச்சிக்க முடியாது. ஊருக்குன்னு ஓடி ஓடி உழைக்கிற மனுசன் அவருக்கு எந்த மகராசி வந்து வாய்க்கப்போறாளோ?? இளையவரு “சக்திவேல்” சிங்கப்பூரில இருக்காவ!! அங்கேயே ஏதோ ஒருப்புள்ளய விரும்புறாகலாம்!! சீக்கிரமே கல்யாணம் பண்ணி அங்கேயே செட்டில் ஆகப்போறாராம். அவருக்கும்‌ மூத்தவருக்கும் ஆகவே செய்யாது!ரெண்டும் ரெண்டு துருவம்!

கடைக்குட்டி “ஸ்ரீ” அண்ணனும் தம்பியும் ஒரு விசயத்துல ஒத்துப்போறாங்கன்னா அது தங்கச்சி விசயத்துலதான். அவங்க உசுரே அந்த புள்ளதான். அவுகளக்குத்தேன் கல்யாணம் ஆகப்போகுது.

“அப்போ பெரிய ஐயா சம்சாரம்??” என்று கேள்வியாக நிறுத்தினாள்.

“ம்ம்ம்”..எதையோ நினைத்து பெருமூச்சு விட்டவள்

“தங்கமா புள்ளைகள பெத்த மகாராசி, அதுங்களுக்கு ஒரு நல்லது செய்யுமுன்னே , போய் சேர்ந்தாச்சி” என்றாள்

இவர்கள் இப்படியே பேசிக்கொண்டிருக்க வெளியில்

“எல்லா வேலையும் முடிந்ததா “வேலு” வறவங்களுக்கு எந்த குறையும் வந்துடக்கூடாது” என ஹாலில் அமர்ந்து தன் கணக்குப்பிள்ளையிடம் கேட்டுக்கொண்டிருந்தார் சந்திரன்.

ஊரின் முக்கால்வாசி சொத்துக்களுக்கு அதிபதி. தீர்க்கமான விழிகளும் முறுக்கு மீசையும் என பார்ப்பவற்கு கிலியை உண்டாக்கும் தோற்றம். பட்டு வேட்டி வெள்ளை சட்டையும் தான் எப்போதும் உடுத்துவார். மனிதர் மிகவும் கண்டிப்பானவர். அவரது மனைவி சந்திரகலாவின் இறப்புக்குப் பின் தனக்குள்ளேயே இன்னும் இறுகிவிட்டார்.

“எல்லா வேலையும் முடிந்தது ஐயா!!மாப்ள வீட்டிலயும் கிளம்பிட்டாங்களாம், கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க!!” என பக்கத்தில் பவ்யமாக நின்றிருந்தார் அந்த வீட்டின் கணக்குப்பிள்ளை வேலய்யா என்கிற வேலு. வயது 25 இருக்கும். வசீகரிக்கும் முகவமைப்பு. சிரிக்கும்போது விழும் கன்னககுழியில் விழுந்த பெண்கள் ஏராளம்.

சந்திரன் குடும்பத்திற்கு என்றே பரம்பரை பரம்பரையாக நேந்துவிட்ட குடும்பம் இவர்களது குடும்பம். முதலாளி விசுவாசம் என்பது இரத்தத்திலேயே ஊறிப்போனவர். அந்த வீட்டின் உள் மற்றும் வெளி விவாகரங்கள் அத்தனையும் அத்துப்படி. எப்போதும் சந்திரனை விட்டு பிரிந்ததில்லை. பார்ப்பவர்கள் சந்திரன் ஐயா பையனா என வினவியதும் உண்டு. அவர்கள் உறவும் அப்படித்தான். சந்திரனும் முதலாளி தொழிலாளி எல்லாம் தாண்டித்தான் வேலுவிடம்  பழகுவார். அவர் பிள்ளைகளுககு பிறகு நெருக்கமானவர்கள் என்றால் அது வேலு மட்டும் தான். வேலு “ கரும்பு கணக்கு என்னாச்சு, தோப்புக்கு போகனும்,மூத்தவர் என்ன செய்யறார்??நெல்லு குடோனுக்கு போகலாம்!!” என கூடவே கூட்டிக்கொண்டு சுத்துவார்.

கேட்டுக்கொண்டே இருந்தவர் டேபிளில் கிடந்த அன்றைய செய்தித்தாளை பிரித்து வாசிக்க ஆரம்பித்தார்.

“ஏய் புள்ள கனகா, காஃபி கொண்டா!!” என வேலுதான் குரல் கொடுத்தார்.

பாருவிடம் பேசிக்கொண்டு இருந்தவள் குரல்கேட்கவும் “நீ வேலைய பாருபுள்ள!! இந்தா வந்துடுறேன்!!” என காஃபியை எடுத்துக்கொண்டே சென்று சந்திரனிடம் கொடுக்க அவர் அதனை பருகத்தொடங்கினார்.

அடுத்த காஃபியை கணக்கிடம் நீட்ட  நிமிர்ந்து முகத்தைக்கூட பார்க்காமல் கப்பை எடுத்துக்கொண்டு சந்திரனிடம் பேச ஆரம்பித்து விட்டான்.

“ ம்ம்க்கும் முகத்தை பார்த்தாதான் என்னவாம் ரொம்பத்தான்” என முணுமுணுத்துக்கொண்டே மீண்டும் சமையற்கட்டு பக்கம் சென்று விட்டாள்.

“ என்னக்கா முகம் தொங்கிப் போச்சு,ஐயா ஏதாவது சொல்லிட்டாரா??” என்றாள் தேங்காயை துருவிக்கொண்டிருந்த பாரு

“ ஒண்ணுமில்லபுள்ள நீ வேலய பாரு” என்றவள் வேலைகளை கவனித்துக்கொணடே “தனியா மாட்டாமலா போகிடுவ, பார்த்துக்கறேன்யா!” என மனதிற்குள் கறுவிக்கொண்டாள்.

கணக்கை கணக்கு பண்ண பல வருடங்களாக முயற்சித்துக் கொண்டிருக்கிறாள் கனகா. அவன் மடிந்தால் தானே!! மாட்டுவேனா?? என்று நழுவிக்கொண்டேயிருக்கிறான்.

கனகமும் பார்த்துக்கொண்டேயிருக்கிறாள். பல நாட்களாக பார்த்துக்கொண்டு மட்டும் தான் இருக்கிறாள். எதுவும் பயனில்லை. கல்லு மண்ணை பார்ப்பதைப்போலத்தான் பார்த்து விட்டு போவான் வேலு. கணக்கு காதல் பாடத்தில் கொஞ்சம் வீக்கு.

கனகாவே சென்று தன் மனதில் இருக்கும் காதலை சொல்லியும் அந்தப்பக்கம் இருந்து ஒரு ரியாக்ஷனும் இல்லை. மனங்கலங்காமல் அவளும் தன் காதல் கைக்கூடும் என்ற நம்பிக்கையில் நாட்களை தள்ளிக்கொண்டிருக்கிறாள்.

கணக்குப்பாடத்தில் சதமடித்தாலும் வாழ்க்கை பாடத்தில் தேர்ச்சி பெறுவாரா?? வேலு!! கேள்விக்குறிதான்

வெகுநேரமாக ஏதோ கேட்க வருவதும் பின்பு தயங்கி கேட்காமல் கையை பிசைந்து கொண்டே நிற்பதும் என ஒரு நிலையில்லாமல் இருக்கும் வேலுவை கவனித்துக்கொண்டுதான் இருந்தார் சந்திரன்

“ என்னாச்சு வேலு?? நினைக்கிறத கேளு?? என்ன தயக்கம்??”  என்றார்.

“ அதுங்கய்யா!! சின்னாம்மாக்கு இப்படி அவசரமா ஒரு கல்யாணம் தேவைங்களா??” என கம்மியக்குரலில் தயங்கிக்கொண்டுதான் கேட்டான்.

சந்திரன் சட்டென திரும்பிப்பார்க்கவும் “ஆசையா வளர்த்தப்புள்ள திடீர்னு கல்யாணங்கவும் கேட்டேன்!! தப்பா இருந்தா மன்னிச்சிங்கய்யா!!” என்றான் அவசரமாக, என்னதான் சந்திரன் உரிமையாக பழகினாலும் வேலு தள்ளியே இருந்துக்கொள்வான். ஏன் என்று சந்திரன் கேட்டால் ” அது உங்க பெரிய மனசு ஐயா!! என் இடம் எனக்கு தெரியும்” என முடித்துவிடுவான்.

“ மூத்தவரு சொன்னா சரியாத்தான் இருக்கும், அதுமட்டுமில்லை ஸ்ரீ விருப்படித்தான் எல்லாம் நடக்குது வேலு!!”

 சொல்ல தேவையில்லை என்றாலும் விளக்கினார். இந்த பொறுமை வேலுவிடம் மட்டும்தான். ஏனென்று கேட்டால் பதிலில்லை. வேறாரும் கேள்வி கேட்கவும் முடியாது.

பேசிக்கொண்டிருந்தவருக்கு வெளியே சலசலப்பாக சத்தம் கேட்டது. “என்ன சத்தம்” என சந்திரன் எழும்ப போக“ இதோ போய் பாக்குறேங்கய்யா!!” என்று வெளியே சென்றான் வேலு.

நீண்ட நேரமாக உள்ளே வேலு வராததால்  வீட்டின் வாசலுக்கு சென்று பார்த்த சந்திரனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி!!