கந்தசஷ்டி கவசம் வீட்டையே நிறைக்க பூஜையறையில் கண்மூடி நின்றிருந்தார் லெட்சுமி. பெயருக்கேற்ற போல இந்த வயதிலும் முகத்தில் ஒரு தேஜசும் பலபலப்பும் அவரின் நிறைவான வாழ்க்கையை எடுத்துக்கூறியது. அவரின் ஒரே குறை அவரது கணவர் சண்முகம் தான்!! மாரடைப்பால் சில வருடங்களுக்கு முன்பு தான் இறைவனடி சேர்ந்திருந்தார்.
பூஜையறையிலிருந்து வெளியே வந்த லெட்சுமி நேரே சென்றது தன் தம்பி கணேசனின் அறைக்குதான். பெயருக்கேற்றப்போல் இன்னும் பிரம்மச்சாரியாக சுற்றிவருகிறார் கணேசன். லெட்சுமி மீதிருந்த அளவுகடந்த பாசத்தின் காரணத்தினால் சீர்வரிசை பொருளுடன் வந்தவர் இங்கேயே இருந்துவிட்டார். லெட்சமி அவரை போக விடவில்லை என்பது வேறுகதை. லெட்சுமி மீதும் சண்முகம் மீதும் அளவுக்கடந்த பற்றும் மரியாதையும் கொண்டவர்.
கணவரை இழந்து நின்ற லெட்சுமிக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது கணேசன் மட்டுமே. இன்றளவும் அவர் தொழில்களையும் சொத்துக்களையும் கவனித்துக்கொள்கிறார். அவர் வாய் திறப்பது இரண்டே விசயத்திற்கு தான் ஒன்று சாப்பிடுவது மற்றொன்று பேசுவது, ஆரம்பித்துவிட்டால் ரெண்டு வேலையையும் நிறுத்தமுடியாது.
லெட்சுமி அவரது அறைக்குள் நுழைய அலுவலக கோப்புகளை சரிபார்த்து கொண்டிருந்தார் கணேசன். அவர் அருகில் சென்றவர்
“டேய் கணேசா!!
“என்னக்கா??” தலையைக்கூட நிமித்தாமல் கேட்டார்
“நேரம் ஆகுதுடா??அவனை போய் வர சொல்லு??”
“நான் போய் சொன்னதும் கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பான் பாரு உன்பிள்ளை!! நாம என்ன சொல்லுறோமோ அதுக்கு எதிரா பண்ணியே பழக்கப்பட்டவன்கா அவன்!!
மணிய பாரு!!ஆற அமர எழுந்து வருவான்!! அப்படியே குண்டுகட்டா தூக்கிட்டு போகிடுவோம்!!போய் வேற வேலைய பாரு!! போ” என்று கோப்புகளை பார்த்து கொண்டே கூறினார்.
“என்னடா எப்ப பாரு என்புள்ளைய குறை சொல்லிட்டே இருக்க நீ? முதல்ல நிமிர்ந்து முகத்தை பார்த்து பேசுடா!!”
“இன்னுமா அவனை நம்பிகிட்டு இருக்க நீ??” என்றவர் ஃபைலை மூடி வைத்துவிட்டு அப்போதுதான் லெட்சுமியை நிமிர்ந்து பார்த்தார்.
“அப்படி என்ன பண்ணான்?? அது தான் கல்யாணத்துக்கு சம்மதித்துவிட்டானே??” என்று பதில் கேள்வி கேட்டார் லெட்சுமி.
“எனக்கென்னமோ அவன் நடவடிக்கை எல்லாம் சரியில்லக்கா!! முதல்ல லவ் பண்றேன்னான், அவளை விடமாட்டேன்னான்,
என்னென்னவோ திருகுதாளம் பண்ணி வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைச்சோம்!! அப்போ தலைய தலைய ஆடிட்டு இப்போ இல்லாத சேட்டையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கான்!! எனக்கென்னவோ இந்த கல்யாணம் நடக்கும்னு தோனல!!” மருமகனின் அனைத்து சேட்டைகளும் அறிந்தவராயிற்றே அவர்.
“ஏன்டா காலையிலயே வாய வைக்கிற??”
“பின்னே என்னக்கா?? நேரம் என்னாச்சு?? இன்னும் எழும்பி வரல!! நானே டிஃபன ரெண்டு ரவுண்டு உள்ள தள்ளி அது செமிச்சே இருக்கும்”
“அய்யோ!!என் தம்பிக்கு இவ்ளோ தெரிஞ்சிருக்கு பாறேன்??” என்று கிண்டலாக சொல்லி சிரித்தார் லெட்சுமி
“ம்ம்ம் என்ன நக்கலா??”என்று அவர் முறைக்கவும்
“பின்ன என்னடா?? நீயே இவ்வளவு நோட் பண்ணும்போது எனக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்?? பாத்துக்கலாம் விடு கணேசா” என்றார்.
“நீ என்னமோ ரிலாக்ஸாக தான் இருக்க!! நானில்ல வயசுபிள்ளைய பாதுகாக்கறப் போல உன்பிள்ளைய அடக்காக்குறேன்!!”
“கணேசா இப்போ போறியா??இல்லையா??” மிரட்டலாக வந்தது லெட்சுமியின் குரல். கணேசனிடம் மட்டுமே லெட்சுமியின் குரல் சற்று உயரும். உரிமையுள்ள இடத்தில் தானே நம் கோபங்களும் உணர்வுகளும் வெளிவரும்.
“அடப்போக்கா!! காலையிலேயே செஃப் வெங்கடேஷ் பட் சமையல் குறிப்பு ப்ரோக்ராம் போடறான்!! அதை பாத்தாவாவது லஞ்சுக்கு மெனு சொல்ல யூஸாகும்!!” என்று சொல்லிக்கொண்டே டீவியை ஆன் பண்ண போகவும், பொறுமையிழந்த லெட்சுமி அவரது அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்தார்.
“நீயெல்லாம் தொழிலதிபர்னு ஊருக்குள்ள சொல்லிக்காத!! சின்னப்புள்ளத்தனமா பண்ணிக்கிட்டு!!இப்போ மட்டும் நீ போகல, ஒரு வாரத்துக்கு சோறு கிடையாது பாத்துக்க!! எனவும் அது சரியாக வேலை செய்தது.
“அய்யோ அக்கா!! நீ என்ன வேணும்னாலும் சொல்லு பண்ணுறேன்!! ஆனால் சாப்பாட்டில் மட்டும் கைவைக்காத!! சொல்லிட்டேன்!!” என்று அலறினார்.
“அப்படி வா வழிக்கு!! உன்னை என்னை மலையவாடா பிளக்க சொன்னாங்க!! உன்னை நம்பித்தான் இதுல எறங்கியிருக்கேன்!! ஆனால் நீ நக்கல் பண்ணிட்டு சுத்துற ராஸ்கல்!! போய் அவனை பாருடா எருமை “ என்று ரூமைவிட்டு வெளியே தள்ளிவிட்டுத்தான் வேறு வேலை பார்க்க சென்றார் லெட்சுமி.
“சரி போறேன்,போறேன் இரு!! என்று சலித்துக்கொண்டே மாடிப்படிகளில் ஏறினார் கணேசன்.
“ம்ம்ம்…… காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணியிருந்தா என்புள்ளய ஸ்கூலுக்கு அனுப்ப அவன் பின்னாடி ஓடியிருப்பேன்!!இப்போ இந்த வளர்ந்து கெட்டவனை மேய்க்க வேண்டியதா இருக்கு!!” என முணுமுணுத்துக்கொண்டே அறைக்குள் நுழைந்தார்.
அங்கே ஒரு குடும்பமே படுத்து உறங்கும் அளவுக்கு இருந்த ராஜப்படுக்கையில் முதுகு காட்டி கவுந்து படுத்து தூங்கிக்கொண்டிருந்தான் லெட்சுமி சண்முகம் தம்பதியினரின் ஒரே தவப்புதல்வன் “வேந்தன்”
செல்வத்திலும் செல்வாக்கிலும் குறைவில்லாத குடும்பம். அந்த பணசெருக்கு சிறிதுமில்லாத பக்கத்துவீட்டுப்பையனின் தோற்றம் தான் (பக்கத்து வீட்டுபொண்ணுதான் போடனுமோ??) எப்போதும் கலகலவென வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என சொல்லும் ரேர் கேட்டகிரி அவன். அவனிருந்தால் அந்த இடத்தில் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. வாழ்க்கையில் ஒரு விசயத்தை சீரயஸாக கையாண்டதும் கிடையாது!! வராது!!
சண்முகம் லெட்சுமிக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழித்து தவமாய் தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை. ஆதலால் அதிக செல்லமாக வளர்ந்தவன். அவன் வைத்ததுதான் வீட்டில் சட்டம். நினைத்ததுதான் நடக்கவேண்டும். அவன் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடந்ததில்லை. அப்படிப்பட்டவனையே தன்தாய் பாசத்தால் அடக்கிவிடட்டார் லெட்சுமி. அவனுக்கு பிடிக்காத விஷயங்களை எப்போதும் திணிக்கமாட்டார், அப்படிப்பட்டவர், ஒரு விஷயத்திற்காக அவனை கட்டாயப்படுத்துகிறார் என்றால் அது அவனது திருமணம் மட்டுமே. ஏனோ அவன் காதலிப்பதை அவர் விரும்பவில்லை. எங்கே காதலித்த பெண்ணை கல்யாணம் செய்தால் தன்னை விட்டு பிள்ளையை பிரித்து விடுவாளோ என்ற பயம் தான் அவருக்கு பெரிதாக இருந்தது.
“டேய் வேந்தா!! டேய் மாப்பிள்ளை எழுந்திருடா!!” என குரல் கொடுத்தார்.
“இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க விடுடி!!” எனப்புரண்டு படுத்தான் வேந்தன்
“இவன் ஒருத்தன்”என சலித்துக்கொண்டே
“அடேய் எழும்புடா!!” என அருகில் அமர்ந்து உசுப்பினார்
“சும்மா இருடி,தூங்க கூட விடாம” என கையை பிடித்து இழுக்க,அவன் அருகில் வந்து விழுந்தவர்
“அய்யோ முருகா!!! எனக்கு இன்னும் கல்யாணம்கூட நடக்கலடா!!எழும்பி தொலைடா எருமை”என அலறியே விட்டார்.
தன் காதலியுடன் கனவில் டூயட் ஆடிக்கொண்டிருந்தவன் மெதுவாக கண்விழித்து பார்த்தான். மிக நெருக்கத்தில் கணேசனை பார்த்தவன்“அய்யோ பேயி” என அலறியடித்து கொண்டு எழுப்பினான்.
“யோவ் காலங்காத்தால வந்து மூஞ்ச காட்டுற, தள்ளு யா!!” என்றவன் எழுந்து அமர்ந்து நெட்டி முறித்தான்.
“எல்லாம் என் நேரம்” என வெளிப்படையாகவே தலையிலடித்துக்கொண்டவர் “எழும்பி கிளம்புடா!! நல்ல நேரத்தில போய் சேரனும்” என்றார்
“எங்கே??”
“பொண்ணு பார்க்க”
“இந்த நேரத்தில் ஏன்யா பண்ணு வாங்க போற??” என்று ஏதோ ஹாஸ்யத்தை கூறியதைப்போல சிரிக்க ஆரம்பித்துவிட .அவனை நன்றாக முறைத்த கணேசன்
“சிரிப்பே வரல மாப்ள!! வேற ஏதாவது டிரை பண்ணு!!” என்றார்.
“பொறுக்காதே!!அதான் போட்டோ பார்த்தாச்சே மாம்சு!! பின்னே எதுக்கு அலஞ்சிகிட்டு?? டேட்ட விக்ஸ் பண்ணுங்க!! வந்து கழுத்தை நீட்டுறேன்!! த்தூ ச்சீ வந்து தாலியை கட்டுறேன்!! பல்லு விலக்கலல்ல அதான் நாக்குழறுது” என கைமறைவில் கொட்டாவியை மறைத்துக்கொண்டே கூறினான்.
“எப்பா சாமி!! உன்கிட்ட போராட எனக்கு தெம்பில்ல ராசா!! ரெடியாகி வா!!”என பாத்ரூமுக்குள் பிடித்து தள்ளிவிட்டவர் பெட்டில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிப்பிக்க இசையொலியில் “மயிலிறகே மயிலிறகே” பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
பாத்ரூமுக்குள் சென்றவனோ “காலையிலேயே என் தூக்கத்தை கெடுத்துட்டு மயிலிறகேவா இரு பெண்ட நிமிர்த்துறேன்”என மனதுக்குள் நினைத்தவன்
“மாம்சு தண்ணி சூட இல்ல ஹீட்டர் போடு,ரொம்ப சூடா இருக்கு ஹீட்டர் ஆஃப் பண்ணு,மாம்சு டவல், மாம்சு இது இல்லை பிங்க் டவல், சட்டை அயர்ன் பண்ணல,என்பெல்ட்ட காணம்” என படுத்தி எடுத்துவிட்டான்.
“வயசான பாடிடா!! தாங்காது!!” என இவன் அலம்பல் தாங்காமல் கணேசன் அலறவும்தான் விட்டான்.
சீர்பொருட்களை சரிப்பார்த்துக்கொண்டிருந்த லெட்சுமி இவர்கள் வரும் அரவம் கேட்டு திரும்பி பார்த்தார். இரண்டு பேரும் படிகளில் இறங்கி வரவும் “வந்து சாப்பிடுங்க ரெண்டு பேரும்!! நல்ல நேரம் போகுது!!” என அழைத்தார். தாய் அழைக்கவும் நல்ல பிள்ளையாக சாப்பிட அமர்ந்துவிட்டான். உண்டு முடித்ததும் பெண் வீட்டிற்கு அவனை கிட்டத்தட்ட இழுத்து கொண்டு சென்றார் கணேசன்.
“ஸ்ரீ இல்லம்”
வானுயர கம்பீரமாக உயர்ந்து நின்றது அந்த அரண்மனை. ஆம் அரண்மனை என்றுதான் சொல்ல வேண்டும். கேட்டே அவ்வளவு பெரியதாக கட்டி வைத்திருந்தார்கள். வாயிற்கதவிற்கு உள்ளே அழகிய மலர் செடிகளும் அலங்கார தோரணங்களுமென பார்க்க பார்க்க தெவிட்டாத அழகு!!
அந்த வீட்டின் முன்னே வந்து நின்றது ஒரு ஆட்டோ. தன் உடைமைகளை எடுத்துக்கொண்டே இறங்கினாள் பார்வதி.
அளவான உடல்வாகு, நீளமாக வளர்ந்திருந்த கூந்தலை நேர்த்தியாக பின்னி கனகாம்பரம் மலர்களை சூடியிருந்தாள். ஒரு கையில் கண்ணாடி வளையலும் இன்னோரு கையில் வாட்சும் அணிந்திருந்து அம்சமாக இருந்தாள்.