கண்களை திறந்த விக்ரம் அழுது கொண்டிருக்கும் பாரதியை பார்த்து அவளை தொட்டு அணைத்து “உனக்கு ஒண்ணுமில்லையே” என்று ஆராய்ந்தவன் “என்ன நீ ஆளே மாறிட்ட? நீ ரதியா? இல்ல அவ அக்காவா? ஆன்டியா? பார்க்க ஒரே மாதிரித்தான் இருக்கிறீங்க? என் ரதி எங்க?”சட்டென்று கைகளை விலகி அவளை விட்டு தள்ளி நின்றவாறே கேட்டான்.
இவன் என்ன கேட்கின்றான் என்று புரியாமல் முழிக்கலானாள் பாரதி.
விக்ரம் விழிப்பதை கண்ணாடி தடுப்பினூடாக பார்த்திருந்த ரகுராம் மருத்துவரை அழைத்திருக்க, மருத்துவக் குழுவே உள்ளே வந்திருந்தது.
ஆளாளுக்கு அவனை பரிசோதிப்பதும், கேள்வி கேட்பதுமாக இருக்க, அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் ரகுராமை ஏறிட்டாள் பாரதி.
“என்ன பதில் சொல்வான்?” விக்ரமை பாதிப்பது போல் எந்த விஷயத்தையும் சொல்லக் கூடாது என்று மருத்துவர் அச்சுறுத்தியிருக்க, யார் என்ன சொன்னார்களோ அவன் மயங்கி விழுந்து விட்டான்.
விக்ரம் நிறுவனத்தில் மயங்கி விழுந்திருந்தால் இந்நேரத்துக்கு ஆளவந்தானுக்கும், சாந்தி தேவிக்கும் விஷயம் தெரிந்து மருத்துவமனைக்கு வந்திருப்பார்கள். ஏன் மோகனா ரகுராமை உண்டு, இல்லையென்று ஒருவழி செய்திருப்பாள். எதோ ஒரு காபி ஷாப்பில் மயங்கி விழுந்திருக்க, யாரோ அவனை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.
அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தவர்களில் யாரோ இவனுக்குத்தான் அழைத்து விஷயத்தை கூறியிருந்தனர். ரகுராமின் அலைபேசி எண்ணை தானே எண் ஒன்றை அழுத்தினால் அழைப்பு செல்லும்படி வைத்திருந்தான் விக்ரம்.
விக்ரம் மயங்கி விழ காரணமே பாரதியென்று அவளை அழைத்து விசாரித்ததால் அவள் விக்ரமின் அருகில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்.
விக்ரம் யாரை சந்தித்தான் என்று சென்று விசாரித்தால், புடவை கட்டிய ஒரு பெண்ணை தான் சந்தித்தான் என்று காபி ஷாப் ஓனர் கூறினாலும், அங்கே சீசீடிவி வேலை செய்யாததால் அந்த பெண் யாரென்று ரகுராமால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பாரதி புடவை கட்டுவதில்லை. அதனால் அவள் மீது ரகுராமுக்கு சந்தேகம் வரவில்லை. வந்திருந்தால் பார்கவியை கண்டுபிடித்திருப்பான்.
கண்டு பிடித்திருந்தால் விக்ரம் மயங்கி விழும் அளவுக்கு பார்கவி என்ன பேசினாள் என்று அறிந்து மருத்துவரை அணுகியிருப்பான்.
யாரோடு பேசினான். என்ன பேசினான். எதற்கு மயங்கி சரிந்தான். அதனால் விக்ரமின் நிலைமை என்னவோ என்று எதுவும் தெரியாமல் பாரதியிடம் என்னவென்று சொல்வான்?
விக்ரமுக்கு அப்படி என்ன பிரச்சினை? எதற்கு இவ்வளவு மருத்துவர்கள் என்று பாரதியின் மண்டை குடைய, பொறுமையிழந்தவள் ரகுராமை வற்புறுத்தி விக்ரமுக்கு என்ன நடந்தது என்று கேட்கலானாள்.
“லவ்வ சொல்லாமலே உன்ன பிரேக்கப் பண்ணவன் எக்ஸாம் முடிஞ்ச கையோட ட்ரிப் போலாமென்று கிளம்பினான். போறதும் போறோம் அமேரிக்கா போலாமென்று நான் தான் அவனை கூட்டிட்டு போனேன்.
அங்க என்னத்த பார்க்க இருக்குன்னு முறைச்சான். “நீ வாறதென்றா வா. இல்லனா இங்கயே கெடான்னு பதிலுக்கு மொறைச்சேன்” அன்று நடந்ததை கூறலானான் ரகுராம்.
“நான் போற ட்ரிப்பிக்கு நீ வாலு, என்னமோ நீ பிளான் பண்ணது போல பீத்துற”
விக்ரமை சம்மதிக்க வைக்க என்னெல்லாம் பேசினானென்று அன்று நடந்ததை கண்களுக்குள் கொண்டு வந்து சொல்லியவனின் குரலில் சோகத்தையும் தாண்டி நண்பனுடன் கழிந்த இனிமையான பொழுதுகள் கண்களுக்குள் ஓடி மறைய, சிறு புன்னைகையுடனான உவகை எட்டிப்பார்த்திருந்தது.
“எங்கடா அடிக்கடி காணாம போற? எனக்கு சொல்லாம தனியா போய் சாப்பிடுறியா?” ரகுராம் விக்ரமை வம்பிழுத்தான்.
“எனக்குன்னு பிரைவசி இருக்கு. உன்ன கூட்டிகிட்டு எல்லா இடத்துக்கும் போக முடியாது” என்றான் விக்ரம்.
“அப்படி என்ன என் கூட போக முடியாத இடம்?” சோகத்தை உள்ளுக்குள் மறைத்தவாறு விக்ரமை முறைப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டான் ரகுராம்.
“உன் முழியே சரியில்ல. என்னமோ நான் தப்பான இடத்துக்கு போயிட்டு வரெங்குற மாதிரியே பாக்குற? உன்ன கூட்டிகிட்டு போகலேயே எங்குற பொறாமையா? இல்ல. நாம தனியா திட்டம் போட்டா இவன் கழண்டுட்டானே என்று வருத்தப்படுறியா?” ரகுராமை சந்தேகமாக பார்ப்பது போல் பாவனை செய்தான் விக்ரம்.
“டேய் நான் செவணேன்னு ரூம்லதானே இருக்கேன்”
“ஆமா… நான் வெளில போன உடனே ரூமுக்கு ஒரு வெள்ளைக்காரி வாறாலாமே” என்னமோ ரகுராம் ஒரு வெள்ளைக்காரியை அறைக்கு அழைப்பதினாலே விக்ரம் அறையை விட்டு அடிக்கடி வெளியே செல்வதாக பேச ரகுராம் நண்பனை முயன்றமட்டும் முறைக்கலானான்.
“என்னமோ பண்ணுற. ஒருநாள் இல்ல ஒருநாள் எலி லேப்ல என்ன செஞ்சது என்று வெளிய வரத்தானே செய்யும்” கிண்டல் செய்தவாறே இருவரும் ஊரை சுற்ற கிளம்பியிருந்தனர்.
சென்ற இடத்தில் தலைவலியால் துடித்த விக்ரம் மயங்கி விழ, தாங்கிப் பிடித்த ரகுராம் உடனே அவனை மருத்துவமனையில் அனுமதித்திருந்தான்.
மருத்துவர் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூற, ரகுராம் உடனே கையொப்பம் போடலானான்.
பாரதியை எதற்காக திட்டினாய் என்று கேட்டும் விக்ரம் பதில் சொல்லாமல் இருந்தால் ரகுராம் விட்டுவிடுவானா?
விக்ரம் எங்கு சென்றான், யாரையெல்லாம் சந்தித்தான், அவன் பாரதியோடு பேசும் பொழுது யாரெல்லாம் இருந்தார்கள் என்று விசாரித்துப் பார்த்தான் எந்த தகவலும் கிடைக்காமல் அடுத்து என்ன என்று இருக்கும் பொழுதுதான் எதேச்சையாக விக்ரமின் மருத்துவ கோப்பை பார்த்து கதறி அழலானான்.
விக்ரமிடம் கேட்டால் நிச்சயமாக அவன் எந்த பதிலும் கூற மாட்டானென்று மருத்துவரை அணுகினான்.
“நான் விக்ரமோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் அமெரிக்கக்கு அனுப்பி வச்சேன். ஆபரேஷன் பண்ணா உயிர்பிழைக்க வாய்ப்பிருக்கு ஆனா சில நினைவுகள் மறந்துவிடக் கூடும். உடலில் சில பகுதிகள் செயல் இழக்கவும் கூடும் என்று சொன்னாங்க, அதை விக்ரமுக்கு சொன்னேன். ஆனா அவன் அலட்ச்சியப்படுத்திட்டான். நான் திரும்ப கூப்பிட்டா போனையே எடுக்கல” என்றார்.
விக்ரம் மறுத்ததற்கான காரணம் ரகுராமுக்கு நன்றாகவே புரிந்தது. அறுவை சிகிச்சை செய்த பின் பாரதியை மறந்து விட்டால் உயிர்வாழ்வதே கொடுமை அதை விட இறப்பதே மேல். அவளிடம் தான் பேசியவற்றுக்கு தண்டனை மரணம் தான் என்று முடிவு செய்திருப்பான் போலும் அதனால் அறுவை சிகிச்சை செய்ய மறுக்கின்றான்.
ஆனால் பாரதி இதையறிந்தால் அவன் உயிரோடு இருந்தால் போதும் என்று தானே நினைப்பாள். அதுதான் அனைவரினதும் முடிவாக இருக்கும் என்று ஏன் இவன் புரிந்துகொள்ள மறுக்கின்றான். எவ்வாறு இவனை சம்மதிக்க வைப்பது என்று ரகுராம் நினைக்கும் பொழுதுதான் சுற்றுலா செல்வதாக வந்து நின்றான் விக்ரம். ஒருவாறு அமேரிக்கா செல்ல சம்மதம் வாங்கி ரகுராம் விக்ரமின் நிலை தனக்கு தெரியாதது போல் விக்ரமின் முன்னிலையில் நடந்துகொள்ளலானான்.
தலைவலி வரும் பொழுது ரகுராம் பார்த்து விடக் கூடாதென்று விக்ரம் மொட்டை மாடிக்கு செல்வது ரகுராம் அறியாமலில்லை. நண்பனின் பின்னால் செல்பவன் ஆறுதல் படுத்தக் கூட முடியாமல் மெளனமாக கண்ணீர் வடிப்பான்.
“ஆபரேஷன் சக்ஸஸாச்சு. ஆரம்பத்துல பிறந்த குழந்தை போல, நடக்க முடியாம, கையால எதையும் தொடக்க கூட முடியாம தான் இருந்தான். அவன் குணமாக பிசியோதிரப்பி மட்டும் காரணமல்ல. அவன் பிடிவாதமான முயற்சியும்தான். அவன் பயந்தது போல உன்ன மட்டும் மறந்துட்டான். டோட்டலா மறந்துட்டான். என் கூட, அவன் வீட்டுலயாளுங்க கூட இருந்த ஒருசில நினைவுகள் இல்லாட்டியும் எங்களை தெரிஞ்சி வச்சிருந்தான். உன்ன பத்தி சொல்லவும் முடியாம, சொன்னா அவனுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்துகிட்டே இருந்தேன்.
திடிரென்று உன்ன கனவுல காண ஆரம்பிச்சான். அதுவும் நீ அவன் கூட இருக்கும் பொழுது நடந்த எல்லாம். ஒருவேளை உன்ன முழுசா ஞாபகம் வந்தா அவன் உன்ன லவ் பண்ணதும் ஞாபகம் வரும். அப்போ நீ அவன் கூட இருக்கணும் என்று சுயநலமா யோசிச்சுதான் உன்ன வரவச்சேன்.
நீயும் வந்த. அவன் உன்ன திரும்ப காதலிச்சான். ஆனா நீ அவன் மேல கோபத்துல இருந்த. உண்மைய சொன்னா அவனை நீ ஏத்துப்பியோ, மாட்டியோ என்ற பயம். அவன் மேல் பரிதாபப்பட்டு ஏத்துக்கவும் கூடாதே. அவன் உன்ன எவ்வளவு உருகி, உருகி காதலிக்கின்றானென்று நீ புரிஞ்சிகிட்ட பிறகு உன்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லலாம்னு நினச்சேன்” விரக்தியாக புன்னகைத்தான் ரகுராம்.
ரகுராம் பேசப் பேச அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பாரதியின் கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை.
தன்னோடு தோழமையாக பழகியவன் கண்டபடி பேசியதும் ஏன்? என்று யோசித்திருக்கலாம். ரகுராம் விளக்கம் கூறிய பொழுது செவிசாய்த்திருக்கலாம்.
மீண்டும் விக்ரமை சந்தித்த பொழுது அவன் தன்னை யாரென்றே தெரியாதது போல் பேசியதும், ரகுராமிடம் விசாரித்திருக்கலாம். அவன் என்னை ஏமாற்ற முயற்சி செய்வதாகவும், பழிவாங்க நினைப்பதாகவும் நானே முடிவு செய்து அவன் மேல் கோபத்தை மட்டும் வளர்த்துக் கொண்டேனே என்று புலம்பலானாள்.
“சரி விடு. எது நடக்கணும் என்று இருக்கோ அது நடந்துதான் தீரும். அவன் உயிரோடத்தானே இருக்கான். அது போதும்” பாரதியை சமாதானப்படுத்தியதோடு தனக்குத் தானே சமாதானம் செய்யலானான். அவன் கண்களுக்குள் மோகனா வந்து நின்றாள். கண்களை சிமிட்டி அவளை துரத்தினான்.
“நான் அவனை காதலிப்பதை அறிந்து அவன் மரணம் நெருங்குவதை கூறினால் நான் அவனை விட்டு செல்ல மாட்டேன் என்று என்னை வார்த்தைகளால் குதறி விரட்டியடித்தான் என்று இப்பொழுது புரிகிறது. என்னை மறந்தும் அவன் இன்னும் என்னை மட்டும் தான் காதலிக்கின்றான். அதை புரிந்து கொள்ளாமல், அவன் மீண்டும் என்னை கஷ்டப்படுத்த திட்டம் போடுவதாக முடிவு செய்த நான் தான் அவன் மேல் வைத்திருக்கும் காதலை உணராத முட்டாளாக இருந்திருக்கின்றேன்.
நான் மட்டும் நடந்ததெதுவும் அறியாமல் விக்ரமை பழிவாங்கு கிளம்பியிருந்தால் என்னவாகியிருக்கும்? என் மரணம் வரைக்கும் மீளாத்துயரத்தில் மூழ்கி என்னையே நான் மன்னிக்க முடியாமல் மாண்டிருப்பேன்” தன்னுள் உழன்றவள் மனதுக்குள்ளே புலம்பலானாள்.
மருத்துவரை சந்தித்த பின் ரகுராமோடு பாரதி விக்ரமை காண ஓடாத குறையாக உள்ளே வந்தாள்.
“டேய் என்னடா ஆளே மாறிட்ட?” நண்பனை கட்டிக்கொண்ட விக்ரம் பாரதியை பார்த்து மெலிதாக புன்னகை செய்தான் “எனக்கு என்னதான்டா ஆச்சு? அன்னைக்கு பாரதிய பார்க்க போனப்போ ஆக்சிடென்ட் ஆச்சு அது வரைக்கும் தான் ஞாபகம் இருக்கு. ஆக்சிடென்ட்ல நான் கோமாக்கு போயிட்டேனா? லவ்வ சொல்லவே இல்ல, அதுக்குள்ள பத்து வருஷம் ஓடிப்போச்சு. என்னதான் ஆச்சு? பாரதிக்கு கல்யாணம் ஆச்சா” சோகமாக பாரதியை ஏறிட்டவாறே ரகுராமிடம் கிசுகிசுக்கலானான் விக்ரம்.
மருத்துவர் அழைத்து ரகுரமிடம் கூறியதாவது “இந்த லவ் இருக்கே தம்பி அது உடல் சார்ந்ததா? உணர்வு சார்ந்ததான்னு இன்னும் குழப்பமாகத்தான் இருக்கு. ஆனா உங்க பிரெண்டு விஷயத்துல மட்டும் மூளை சார்ந்ததாக இல்ல இருக்கு” என்று புன்னகைத்தார்.
ரகுராம் இவர் என்ன சொல்ல முனைகிறார் என்று புரியாமல் மருத்துவரையே பார்த்திருந்தான்.
பாரதியும் அங்குதான் இருந்தாள். தன்னிலையில் உழன்றுக்கொண்டிருந்தவள் மருத்துவர் கூறியதை கவனிக்காமல் “என் விக்ரமுக்கு ஒண்ணுமில்லையே” என்று பதறினாள்.
“ஓஹ்… நீதான் அந்தப் பொண்ணா? அன்னைக்கி ஆபரேஷன் பண்ணி அவன் மூளையில் இருந்த இரத்தக்கட்டியையும், கேன்சர் கட்டியையும் அகற்றினப்போ எல்லாத்தையும் மறந்து பிறந்த குழந்தை போல இருப்பான்னு நினைச்சோம். ஆனா குடும்பத்தை பார்த்தப்போ பழசெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவன் ஞாபகத்துக்கு வந்திருந்தது. அவனுக்கு உன்ன மட்டும் ஞாபகம் வராததற்கு காரணம் அவன் உன்ன இனிமேல் பார்க்கவே கூடாதுன்னு முடிவு செய்துட்டான்னு ரகுராம் சொன்னான்.
ஆனால் திடிரென்று அவன் உன்ன கனவுல காண ஆரம்பிச்சான். அதாவது உன்னோடான அவனுடைய கடந்தகாலம் ஞாபகத்துல வந்து கொண்டிருந்தது. அதுவும் சந்தோசமான நினைவுகள் மட்டும். நீ கூட இருந்தா எல்லாம் ஞாபகத்துல வரும். வந்தால், அதை பொறுத்து ட்ரீட்மெண்ட் பார்க்கலாமென்று ரகுராமிடம் சொல்லியிருந்தேன். விக்ரமுக்கு பிஸிகளி எந்த பிரச்சினையுமில்ல. திரும்ப கேன்சர் கட்டி உருவாகுதான்னு மட்டும் செக் பண்ணிப்பேன். விக்ரம் ஈஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட்” விக்ரம் நலமாகத்தான் இருக்கின்றானென்று பாரதி கேட்ட கேள்விக்கு பதில் கூறிய மருத்துவர் மேலும் தொடர்ந்தார்.
ஞாபகங்கள். மனிதன் மறக்கவே கூடான்னுன்னு அடிக்கடி நினைவு படுத்திக்க கொள்ளும் ஞாபகங்கள் சந்தோசமானவையென்றால், மனிதன் மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத ஞாபகங்கள் கவலையான, கஷ்டமான, வலியை கொடுத்த ஞாபகங்கள். உங்க ரெண்டு பேருக்கிடையிலும் நடந்த எதோ ஒன்றை அவன் மறக்கணும் என்று உன்னையே மறந்துட்டான். வாழக்கையில் எதையோ இழந்துட்டேன் என்று அவன் உள்ளுணர்வு சொல்லியிருக்கும். அவன் மூளை உன்ன அவனுக்கு கனவாக அடையாளம் காட்டியிருக்கு.
அதனால அந்த சம்பவம் நடக்க முன்னாடி என்ன ஆச்சோ அதுவரைக்கும் தான் அவனுக்கு ஞாபகம் இருக்கு. இந்த பத்து வருஷமா என்ன நடந்தது என்று எப்படி சொல்லணும் என்று உங்க ரெண்டு பேர் கையிலையும் தான் இருக்கு” என்றார் .
“பத்து வருஷத்தையும் மறந்துட்டானா? அப்போ அவன் என்ன திரும்ப லவ் பண்ணதையுமா?” குழம்பிய மனநிலையில் பாரதி விக்ரமை காண வந்தால், அவன் இவளை வெற்றுப்பார்வை பார்த்து வைக்க, பாரதியின் இதயத்திலிருந்து இரத்தம் கசிவது போல் வலித்தது.
“திரும்ப அவன் என்ன லவ் பண்ணுறேன். கல்யாணம் பண்ணிக்கலாமாஎன்று கேட்டப்போவே சம்மதிச்சிருக்கணும்” பாரதியின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தோட அதை பார்த்து பதறித்துடித்தான் விக்ரம்.
“ஹேய் ரதி என்னாச்சு? எதுக்கு இப்போ கண்ணை கசக்குற? எனக்கு ஒண்ணுமில்ல” அவளை அணைத்து ஆறுதல் படுத்தலானான் விக்ரம்.
“டேய் டேய் உங்க ரொமான்ஸுக்கு அளவே இல்லையா?” விக்ரமிடம் எவ்வாறு சொல்ல வேண்டும் என்ற முடிவோடு இடைபுகுந்தான் ரகுராம்.
மருத்துவர்கள் கேட்ட கேள்விகளால் தனக்கு கடந்த காலத்தின் சில நினைவுகள் மறந்து விட்டன என்று புரிந்துகொண்ட விக்ரம் அங்கிருந்த நாட்காட்டியை பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டிருந்தான்.
“பாரதி நீ போய் விக்ரமுக்கு சாப்பிட சமைச்சி எடுத்துட்டு வரியா?” பத்து வருடங்களாக பாரதிக்கும் தனக்கும் நடுவில் என்ன நடந்தது என்று அறியாமல் விக்ரம் ஓயமாட்டான். அவளை அருகில் வைத்துக் கொண்டு கேட்கவும் தயங்குவான் என்றே அவளை அனுப்பி வைத்தான் ரகுராம்.
காரணமில்லாமல் ரகுராம் தன்னை அனுப்பமாட்டானென்று விக்ரமிடம் கூறிக் கொண்டு கிளம்பினாள் பாரதி.
பாரதியின் தலை மறைந்ததும் “என்ன ரதி எனக்காக சமைக்கப் போறாளா? அவளுக்கு நல்லா சமைக்கத் தெரியுமா? அப்போ அவ அடிக்கடி எனக்கு சமச்சிக் கொடுப்பாளா? அப்படின்னா அவளுக்கும் எனக்கும் கல்யாணமே ஆகிருச்சா? ஆமால்ல எனக்கு வயசு முப்பத்திரண்டு என்றா அவளுக்கு முப்பது தானே. ஐயோ பத்து வருஷம் நாம சந்தோசமா குடும்பம் நடாத்தினோமா?” பூரிப்போடு விக்ரம் கூற,
“டேய் டேய் அடங்குடா… உனக்கும் அவளுக்கும் இன்னும் கல்யாணமாகல”
“என்னடா சொல்லுற?” ஒருவேளை தனக்கு வேறொரு பெண்ணோடும், பாரதிக்கு வேறொருவனோடும் திருமணமாகியிருக்குமோ என்று தோன்றவே கவலையானவன் ரகுராமின் பதிலுக்காக அவனையே பார்த்திருந்தான்.
“நடந்த எக்சிடண்ட்டுல நீ பாரதிய சந்திச்சத்தையே மறந்துட்ட. அதனால நீ உன் லவ்வ சொல்லவே இல்ல. அவளையும் கண்டுக்கல. அவ உன்ன நெருங்க எவ்வளவோ முயற்சி செஞ்சும் நீ அவளை திட்டி நெருங்ககாம இருந்த”
“என்ன?” நானா என் ரதியை துரத்தியடித்தேன் என்று சோகமானவன் ரகுராம் சொல்வதை செவிசாய்த்தான்.
“இனிமேல் உன்ன தொந்தரவு செய்யமாட்டேன் என்று பாரதி ஆஸ்திரேலியாக்கு போய்ட்டா. சமீபத்துலதான் நம்ம கம்பனில ஜோஇன் பண்ணா. இத்தனை வருஷமா அவ உன்ன நினைச்சுகிட்டு கல்யாணமே பண்ணாம இருந்திருக்கா என்றதும் உன் மனசும் மாறிருச்சு. நீயும் அவளை லவ் பண்ண ஆரம்பிச்சிட்ட. கல்யாணம் பண்ணிக்கலாமான்னும் கேட்ட, அவளும் சம்மதிச்சா. அந்த சந்தோஷத்துல வண்டியோட்டி நீ திரும்ப எக்சிடண்டாகி ஆஸ்பிடல் வந்த. திரும்ப மொதல்ல இருந்து ஆரம்பிக்கிற” விக்ரம் நம்ப வேண்டுமே என்று கிண்டல் சொல்வது போல்தான் கூறினான்.
உண்மையை ஒருநாளும் மறைக்க முடியாது. கொஞ்சம் பொய் கலந்து கூறினால் பின் விளைவுகளை சமாளிக்கலாம் என்று சாமர்த்தியமாக கூறியிருந்தான் ரகுராம்.
“நான் என்னமோ ரதிய கல்யாணம் பண்ண விடாம தடுத்தது எங்கப்பாவோன்னு நினச்சேன். நடுவுல கொஞ்சம் பேஜஸ் மிஸ் ஆனாலும் நான் கல்யாணம் பண்ணாம இருந்தது ரதிக்காகத்தான். அவ லவ்வோட சக்தி திரும்ப எனக்கு அவளை ஞாபப்படுத்திருச்சு” ஆனந்தத்தில் குதித்தான் விக்ரம்.