அத்தியாயம் 14

அதிர்ச்சியில் உறைந்தவாறு அமர்ந்திருந்த பாரதியை உலுக்கி சோடா பாடிலை திணிக்காத குறையாக கையில் கொடுத்தான் கார்த்திகேயன்.

கார்த்திகேயன் என்ன சொன்னான், என்ன கொடுத்தானென்று உணராமல் கொடுத்த பாடிலை இறுக்கப் பற்றியவாறு அழ ஆரம்பித்தாள் பாரதி. அவளை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று புரியாமல் அவளை பார்த்த கார்த்திகேயன் அழுதாலாவது அவள் மனம் ஆறும் என்று வண்டியை மெதுவாக செலுத்தி ஆள் அரவமற்ற இடத்தில் நிறுத்தியிருந்தான்.

வீடு மாறுவதை கூறியதும் ஆனந்தத்தில் குதித்த பாரதியின் முகம் கல்லூரியை மாற்ற நேரிடும் என்று கூறியதும் சுருங்கியதை கார்த்திகேயன் கவனிக்கத்தான் செய்தான். என்ன விஷயமென்று கேட்க வேண்டும் என்று பாரதியை அழைத்து செல்ல கார்த்திகேயன் கல்லூரிக்கு வந்த பொழுது பாரதி அழுதவாறே ஓடி வருவதும், விக்ரம் கற்சிலை போல் நின்றிருப்பதும் தான் கண்களில் தென்பட்டது.

விக்ரம் மற்றும் ரகுராமை பாரதியோடு பார்த்த பொழுது அத்தை பையனாக மட்டுமன்றி, தோழனாகவும் மாறி பாரதியை விசாரிக்கத்தான் செய்தான். நண்பர்கள் தான் என்று பாரதி கூறியதும், மேற்கொண்டு அவளிடம் தோண்டித் துருவாவிட்டாலும், விக்ரம் மற்றும் ரகுராமை பற்றி தேடிப்பார்த்தான். விக்ரம் ஆளவந்தானின் மகன் என்று அறிந்த பின்னும் விசாரித்தவரையில் எந்த பிரச்சினையுமில்லை என்பதால் பாரதியிடம் எதுவும் பேசவில்லை. அவள் தந்தையின் இறப்புக்கு ஆளவந்தான் தான் காரணமென்று அறிந்திருந்தால், கார்த்திகேயன் அவளை விக்ரமோடு நெருங்க விட்டிருக்க மாட்டான். 

 பாரதி அழுவதை பார்த்ததும் கார்த்திகேயனுக்கு விக்ரம் ஆளவந்தானின் மகனாகத்தான் தெரிந்தான். பணத்திமிரில் பாரதியிடம் ஏதும் சேட்டை செய்திருப்பானோ என்று கோபமாக விக்ரமின் அருகில் சென்று அவனை ஓங்கி ஒரு குத்து விட, அதை விக்ரமும் எதிர்பார்க்கவில்லை. பாரதியும் எதிர்பார்த்திருக்கவில்லை.

“மாமா” என்று பாரதி அதிர்ச்சியில் கத்த, தனக்கு இருக்கும் வியாதியால் இறந்து விடுவேன் என்ற துயரத்தையும் தாண்டி பாரதியை காயப்படுத்தி விட்டேனே என்ற மனவேதனையில் இருந்த விக்ரமோ கார்த்திகேயனின் ஒரே அடியில் விழுந்தவன் எழும் பொழுது அவன் சட்டையை பிடித்திருந்தான் கார்த்திகேயன்.

“மாமா, விடு மாமா” என்றவாறு பாரதி அவர்களை நெருங்க, தான் இவ்வளவு பேசியும் இவள் என்னை பற்றி கவலை படுகிறாளே என்று நொந்தான் விக்ரம்.

இப்பொழுதே இவளை துரத்தாவிட்டால் காரணம் கேட்டு நாளை தன் முன்னால் வந்து நிற்பாள் என்று கார்த்திகேயனை சம்பந்தப்படுத்தி பாரதியை வசைபாட ஆரம்பித்தான் விக்ரம்.

“என்னமா நடிக்கிற? மாமா, மாமான்னு இவன கொஞ்சிகிட்டே என்ன லவ் பண்ணுறேன்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? பார்க்க நல்லாத்தான் இருக்கான். என்ன பணம், வசதி இல்ல என்று என்ன கல்யாணம் பண்ண திட்டம் போட்டியா? ஒருவேளை இவனும் போட்டுக் கொடுத்த திட்டமா? ரெண்டு பேரும் கூட்டா?” தன்னை பேசினால் கோபம் வராவிட்டாலும், சம்பந்தமே இல்லாத கார்த்திகேயனை பேசினால் நிச்சயமாக பாரதி கோபப்படுவாளென்றே பேசினான் விக்ரம். “உங்கப்பாவுக்காக பழிவாங்க இல்ல…”

விக்ரம் மேற்கொண்டு பேசும் முன் அவனை மீண்டும் அடித்த கார்த்திகேயன் பாரதியை இழுக்காத குறையாக அழைத்து வந்து வண்டியில் அமர்த்தி வண்டியை இயக்கியிருந்தான். 

அவர்களுக்குள் என்ன நடந்தது என்று புரியாவிட்டாலும், பாரதியின் தந்தையின் மரணத்துக்கு ஆளவந்தான் தான் காரணம் என்பதை கூறியது கார்த்திகேயனின் காதில் சரியாக விழாவிட்டாலும், தன்னை பாரதியோடு சம்பந்தப்படுத்தி பேசியதை கேட்டு கடும் கோபம் கொண்டுதான் இரண்டாவது முறையாக விக்ரமை அடித்திருந்தான் கார்த்திகேயன்.

பாரதி வாய் திறந்தால் தான் என்ன நடந்தது என்று அறிய முடியும் என்று அழும் அவளை அமைதியாக பார்த்திருந்தான்.

அழுது ஓய்ந்த பாரதி கையிலிருந்த சோடாவை சரசரவென தொண்டையில் ஊற்றிக் கொண்டவள் “நான் லவ் பண்ணுறேன்னு தானே சொன்னேன். அதுக்கு எதுக்கு இவ்வளவு ஹாஸ்ஸா பேசினான்? எங்கப்பா…. எங்கப்பா சாவுக்கு அவன் அப்பாதான் காரணமா?” கார்த்திகேயனின் சட்டையை பிடித்து உலுக்கினாள் பாரதி.

“என்ன சொல்லுற?… மாமா வேலை செஞ்ச பாக்டரி ஓனர் பையனா விக்ரம்?” அதிர்ந்தான் கார்த்திகேயன்.

ஆளவந்தானின் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்ட பொழுது பாரதிக்கு ஐந்து வயது, விக்ரமுக்கு ஏழு, கார்த்திகேயனுக்கு பத்து. பெரியவர்கள் பேசிக்கொள்ளும் எதுவும் பாரதிக்கு புரியாவிட்டாலும், கார்த்திகேயனுக்கு ஓரளவு புரியாத்தான் செய்தது.

ஆளவந்தானை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் சுப்பு லட்ச்சுமிக்கே வராத பொழுது அந்த எண்ணத்தை கார்த்திகேயனின் மனதில் விதைப்பாளா?

ஆளவந்தான் சமுகத்தில் மதிக்கக் கூடிய முக்கியமான தொழிலதிபர்களின் ஒருவர். அவர் மகன் விக்ரம் என்று கார்த்திகேயன் அறிந்திருந்தானே ஒழிய, தன் மாமாவின் மரணத்துக்கு காரணமானவனின் மகன் தான் விக்ரம் என்று அவனுமே தெரிந்திருக்கவில்லை.

“பாரதி விக்ரமை காதலிக்கின்றாளா? காதலை சொன்னதால் தன்னை பழிவாங்க வந்தாளென்று அவன் தப்பார்த்தம் கொண்டானா?” கல்லூரி மாற வேண்டும் என்ற பொழுது பாரதியின் முகம் சுருங்கியதற்கு காரணம் இதுதானா? காரணம் புரிந்தாலும், ஆளவந்தானின் மகனை காதலித்ததால் விளைவை அனுபவிக்கின்றாளே என்று அவள் மேல் பரிதாபம் கொண்டான் கார்த்திகேயன்.

“இங்க பாரு பாரதி… நீ பழிவாங்கத்தான் காதலிக்கிறதாக விக்ரம் எதோ தப்பா நினைக்கிறான். நான் அவன் கிட்ட தெளிவா பேசி புரியவைக்கிறேன்” பாரதியை சமாதானப்படுத்த முயன்றான்.

“இல்ல மாமா… உனக்கு புரியல. அவன் என்ன ஒரு ப்ரெண்டா கூட பார்க்கல. நான் எப்போ அவனை லவ் பண்ணுறேன்னு சொல்வேன். எப்போ என் மனச உடைக்கலாமென்று அவன் காத்துகிட்டு இருந்திருக்கான்” விம்ம ஆரம்பித்தாள் பாரதி.

“என்னம்மா… சொல்லுற?”

“எங்கப்பா அவன் அப்பாவோட பாக்டரி எக்சிடன்டுலத்தான் இறந்தாரென்று அவனுக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சே தான் என்கிட்டே பழகியிருக்கான்” கண்களில் நீர் பொங்க விக்ரம் பேசியதை கூறலானாள் பாரதி.  

“விக்ரம் எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. பிடிச்சிருக்குன்னா…. நான் உன்ன விரும்புறேன். ஐ மீன் லவ் பண்ணுறேன். காலேஜ விட்டு போறதால இப்போவே சொல்லணும் என்று… நீ இப்போவே சொல்ல வேண்டாம், அப்பொறம் யோசிச்சு…” திக்கித் திணறி உளரிக் கொட்டினாள் பாரதி.

“ஹாஹ்…. இதுக்குத்தான் இத்தனை நாளா என் பிரெண்டு என்ற வேஷம் போட்டியா?” பாரதியை கோபமாக முறைத்தான் விக்ரம்.

“இவன் என்ன சொல்கின்றானென்று அதிர்ச்சியாக அவனை பார்த்தாள் இவள்.

“நானும், ரகுவும் உனக்கு ஒரே நாள்ல அறிமுகமானோம். அவன் மேல உனக்கு வராத லவ் என் மேல எப்படி உனக்கு வந்தது? பணம், காசு இருக்குன்னு தானே. இவன வளச்சிப் போட்டா காலத்துக்கும் சொகுசா வாழலாமென்ற எண்ணம் தானே”

“விக்ரம்…” விக்ரம் என்றவனை அறிவாள். அவன் குடும்பப்பின்னணியை பற்றி அறிய நினைத்ததுமில்லை. யோசனையும் வரவில்லை. அப்படியிருக்க ஏன் இவன் இப்படி பேசுகிறான்? நான் காலேஜை விட்டு போகிறேன் என்றதால் வந்த கோபமா?” அதிர்ந்து விழித்தவளுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.

“என்ன விக்ரம் என்று கொஞ்சுற? உன்ன மாதிரி எத்தனை பொண்ணுங்கள பார்த்திருப்பேன்? எவன் கிடைப்பான்னு அலைய வேண்டியது. இளிச்சவாயன் எவனாவது சிக்கினா தாலிய கொடுத்து கட்ட சொல்ல வேண்டியது. நீயெல்லாம் நல்ல குடும்பத்து பொண்ணா? உனக்கெல்லாம் நல்ல வாழ்க அமைஞ்சிடுமா? கேவலமான பிறவிடி நீ.  நீயெல்லாம் நல்லா வாழ்ந்துடுவியா? நாசமாதான் போவ” கடுமையான வார்த்தைகளையே அவள் மேல் வீசலானான்.

தான் போகிறேன் என்பதனால் இவன் இவ்வாறு பேசவில்லை என்று அப்பொழுதுதான் உணரலானாள் பாரதி. “ஏன் விக்ரம் நான் அப்படி என்ன சொல்லிட்டேன்… சாபம் கொடுக்குறது போல பேசுற?” கண்களிலிருந் கண்ணீர் முணுக்கென்று எட்டிப்பார்க்க, கண்ணீரோடு அவனை ஏறிட்டாள் பாரதி.

அவள் கண்களில் கண்ணீரை பார்த்ததும் விக்ரமின் இதயம் வலிக்கத்தான் செய்தது. வேறு வழியில்லை. அவள் இதயத்தை உடைத்தால் மட்டும் தான் அவள் அவளது இறுதி மூச்சுவரை நிம்மதியாக இருப்பாளென்று மேலும் அவளை தூற்றலானான்.

“உன்ன பத்தி எனக்குத் தெரியாதா? நல்ல பொண்ணா, அப்பாவியா என்னமா நடிக்கிற? நீ எவ்வளவு தூரத்துக்கு போறான்னு பார்க்கத்தான் நானும் உன் கூட சேர்ந்து நடிச்சேன்”

“நடிச்சியா? நீ என்ன சொல்லுற?” தங்களுக்குள் நடந்த எல்லாம் நடிப்பா? மேலும் அதிர்ந்தவள் அழ ஆரம்பித்தாள்.

மதிய நேரம் என்பதால் நூலகத்தில் அவ்வளவு கூட்டமில்லை. நூலகத்துக்கு வந்து செல்வோருக்கு இடைஞ்சல் இல்லாமல் இருவரும் சற்று தொலைவில் உள்ள மரநிழலில் நின்று பேசுவதால் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று நூலகத்துக்கு வருபவர்களுக்கு புரியாவிட்டாலும், அழும் பாரதியை திரும்பித் திரும்பி பார்த்தவாறுதான் செல்லலாயினர்.

“என்ன கண்ணைக் கசக்கி, அழுது ஸீன் கிரியேட் பண்ணுறியா? உத்தமி வேஷம் போட உன்ன விட்டா இந்த உலகத்துலயே ஆள் இல்ல பாரு. நீ யாரு? என்ன? எதுக்காக என் கூட பழகுற எல்லாம் எனக்குத் தெரியும். தெரிஞ்சே தான் இத்தனை நாள் உன் கூட இருந்தேன். அதான் உன் உண்மையான முகத்தை காட்டிட்டியே. நானும் என் வேஷத்தை கழட்டிட்டேன்” இதயம் வலிக்க, வலிக்க வார்த்தைகளில் அனலை கொட்டி பாரதியின் மனதை உடைத்தான் விக்ரம். 

“என்ன பத்தி உனக்கு என்ன தெரியும்? நான் அப்படி என்ன பண்ணிட்டேன்?” இவனுக்கு நான் என்ன தீங்கு செய்தேன் என்று புரியாமல் அழுதவள் அதை சொல்லுமாறு அவனிடமே கேட்கலானாள்.

“என்ன இன்னும் நடிக்கிற? உன் அப்பா சாவுக்கு பழிவாங்கத்தானே என் கூட பழகின?” எதை சொல்லி அவளிடம் மன்னிப்புக் கேட்டு தன் மனதை புரிய வைக்க வேண்டும் என்று வந்தானோ அதை சொல்லியே அவள் மனதை உடைக்கலானான். 

“நீ… நீ என்ன சொல்லுற? எங்கப்பா செத்ததுக்கு நீ எப்படி காரணமாவ?” அழுகையை சட்டென்று நிறுத்திய பாரதி புரியாமல் அவனை ஏறிட்டாள்.

பாரதியைப் பற்றி அவளிடமே ரகுராம் கேட்டதில் தந்தை ஒரு ஃபேக்டரி விபத்து இறந்ததாக கூறியதும் தீர விசாரித்தான். அவள் தந்தையின் இறப்புக்கு ஆளவந்தான் தான் காரணம் என்று அறிந்ததும் இவளை விக்ரம் காதலிக்கின்றானே என்று ஆளவந்தானின் மகனை சந்தித்தால் என்ன செய்வாய் என்று கேட்டிருந்தான்.

“எனக்கு அவர் யார் என்றே தெரியாது. இதுல அப்பா பண்ணதுக்கு மகன் எப்படி பொறுப்பாவான்? மறப்போம், மன்னிப்போம்” என்றிருந்தால்.  

பாரதியின் பேச்சில் இருந்த தெளிவில் அவள் விக்ரமின் பழி தீர்க்க நினைக்கவில்லை என்று நிம்மதியடைந்த ரகுராம் உண்மை அறிந்தாலும் இவள் விக்ரம் என்ன ஆளவந்தானே கூட பழிதீர்க்க நினைக்க மாட்டாள் என்று உணர்ந்தான். காதலை சொல்ல நினைக்கும் நண்பனிடம் இதை கூறி எதற்கு அவனை கவலை அடையச் செய்வது என்று விட்டுவிட்டான்.

ஆனால் பாரதிக்கு ரகுராம் காரணம் இல்லாமல் விசாரிக்க மாட்டான் என்று புரிந்து போக, ஒரு வேலை ரகுராம் தான் ஆளவந்தானின் மகனோ என்று சந்தேகம் கொண்டாள். ஆனாலும் அவனிடம் எந்த விகற்பமும் இல்லாமல் சகஜமாகத்தான் பழகினாள்.

“இவள் அப்பாவின் இறப்புக்கு என் தந்தைதான் காரணமென்று இவளுக்கு உண்மையிலயே தெரியாதா? தெரிந்திருந்தால் கோபத்தில் கூறியிருப்பாளே. ஐயோ இவளுக்கு அது கூட தெரியாதே. இவளை போய் காயப்படுத்தி விட்டேனே” என்று விக்ரமின் இதயம் கனக்க, இதயத்தில் இரத்தம் கசிவது போல் பிரம்மை தோன்றி வலிக்கச் செய்ய, அவன் கண்களிலும் நீர் நிரம்பாலானது.

“இல்லை இல்லை இப்பொழுது இவள் என்னை விட்டு சென்றேயாக வேண்டும்” பிடிவாதமாக உறுதிபூண்டவன் “ஏன் உங்கப்பா எங்கப்பா பக்டரில வேலை பார்த்தது உனக்குத் தெரியாதா? இல்ல நடந்த எக்சிடண்ட்டுல உங்கப்பா செத்தது தான் உனக்குத் தெரியாதா? தெரிஞ்சிதானே என்ன நெருங்கின? என்ன லவ் பண்ணி ஏமாத்தலாமென்று நீ திட்டம் போட்ட. இல்ல கல்யாணம் பண்ணி செட்டிலாகி எங்கப்பா சொத்தை ஆட்டைய போடலாமென்று நினச்சியிருப்ப. ஐயோ பாவம் நீ யார் என்று தான் எனக்குத் தெரியுமே. உன் அப்பா செத்ததுக்கு நியாயம் கேட்டு உங்கம்மா கூட எங்க வீட்டு வாசல்ல வந்து நின்னவதானே நீ. உன் அம்மா விட்ட சாபத்தால எங்கம்மா எங்கள விட்டு போய்ட்டாங்க. பச்சை குழந்தை என் தங்கச்சி அம்மா இல்லாம இருந்தா. அது பத்தாதா உனக்கு? திரும்ப பழிவாங்க என்று வந்து நிக்குறியே. அன்னைக்கி பார்த்த உன்ன என்னைக்குமே நான் மறக்க மாட்டேன். நீ என் முன்னாடி வந்து நின்னா நான் உன்ன அடையாளம் கண்டுகொள்ள மாட்டேன்னு நினைச்சியா?”

பாரதியின் தந்தையின் மரணத்துக்கு ஆளவந்தான் எப்படிக் காரணமானானோ, அன்னை தங்களை விட்டுச் செல்ல சுப்பு லட்ச்சுமியும் ஒருவிதத்தில் காரணம் என்று அன்று அன்னை புலம்பியதை வைத்து புரிந்துகொண்டிருந்தான் விக்ரம்.

அன்னை தங்களை விட்டு சென்றதற்கு சுப்பு லட்ச்சுமியை குற்றம் சொல்ல முடியாது என்றவன் பாரதியை குற்றம்சாட்ட நினைப்பானா? அவன் விதி இவ்வாறெல்லாம் பேச வைத்திருந்தது.

அது மட்டுமா விக்ரம் கடத்தப்பட்ட பொழுதுதான் சுப்பு லட்ச்சுமி பாரதியோடு அவன் வீட்டுக்கு வந்து சாபம் கொடுத்து விட்டு சென்றிருந்தாள். அன்று அவன் பாரதியை பார்க்கவேயில்லை. அதையும் மாற்றிக் கூறி அவள் மேல் ரணத்தை வாரி இறைத்து, தன் மேல் கோபத்தை தூண்டலானான்.

“என் தந்தையின் இறப்புக்கு இவன் தந்தைதான் காரணமா? இது தெரியாமல் இவனோடு பழகி, காதல் வயப்பட்டுவிட்டேனே” பேரதிச்சியில் உறைந்த பாரதிக்கு பேச்சே வரவில்லை. அதற்கு மேல் அங்கே இருக்கவும் பிடிக்கவில்லை. விக்ரமோடு பேசவும் பிடிக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள். அப்பொழுது அங்கே வந்த கார்த்திகேயனின் கண்களில் இந்த காட்ச்சிதான் தென்பட்டது.

அழுதவாறே செல்லும் பாரதியை கனத்த இதயத்தோடு பார்த்திருந்த விக்ரம் மனசார மன்னிப்புக் கேட்கும் பொழுது கார்த்திகேயன் விட்ட குத்தில் விழுந்திருந்தான். 

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவனையும் பாரதியோடு சேர்த்து வைத்து பேசி மேலும் அவள் மனதை காயப்படுத்தி கொன்றே விட்டான் விக்ரம்.

காதல் காதல்

காதல் காதல் காதல்

இனித்திடும் நரகமா

காதல் காதல் வலித்திடும்

சொர்க்கமா

கண்களில்

பொங்கும் நீரில் காட்சியும்

மறைந்து போகும் காதலின்

மடியில் தானே இறுதியாய்

இதயம் தூங்கும்

பூவை காட்டி

முள்ளை விற்றாய்

காதலே தெய்வம்

கருணை கொண்டால்

வெல்லும் காதலே

ஓடும் மேகங்கள்

ஓய்வு கொள்ளலாம்

மழையாய் பொழிந்தே

தன் பாரம் தீர்க்கலாம்

அழுதால் கூட

தீரா சுமையே காதல்

தீயில் கருகும் இமையே

காதல் காதல்

காதல் காதல் காதல்

இனித்திடும் நரகமா

காதல் காதல் வலித்திடும்

சொர்க்கமா

கண்களில்

பொங்கும் நீரில் காட்சியும்

மறைந்து போகும் காதலின்

மடியில் தானே இறுதியாய்

இதயம் தூங்கும்

பூவை காட்டி

முள்ளை விற்றாய்

காதலே தெய்வம்

கருணை கொண்டால்

வெல்லும் காதலே

கண்கள் விளையாடி

காதல் வந்தது இதயம்

களவாட துணிவு தந்தது

இதயம் தந்து

இதயம் வாங்கும் காதல்

என்றும் வெல்லும்

வெல்லுமே

“எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன். அப்பாவை கொன்னவன் பையனையே காதலிச்சிருக்கேன். நான் அவனை பழிவாங்க பழகியதா நினைச்சி என்ன பழிவாங்கிட்டானே. எங்கப்பாவை கொன்னதுமில்லாம என்னையும் சேர்த்து கொன்னுட்டான்” வலியில் துடித்தவள் ஏதேதோ உளறியவாறு மயங்கிச் சரிந்தாள்.

பாரதியை மருத்துவமனையில் அனுமதித்து மாலைவரை அவளோடு இருந்த கார்த்திகேயன் அவள் கண்விழித்ததும் மேற்கொண்டு பேச முயல.

வேண்டாம். இதை பற்றி இனிமேல் பேசவே வேண்டாம் என்று தடுத்தவள் உடனடியாக கல்லூரியையும் மாற்றிக் கொண்டு சென்றுவிட்டாள்.

தப்பாக ஏதும் முடிவெடுத்து விடுவாளோ என்றஞ்சி வீட்டாருக்குத் தெரியாமல் கார்த்திகேயன் பாரதியை கவனித்தவாறே தான் இருந்தான். அது பார்கவியின் கண்களில் தப்பாக பட்டுவிட்டதால் தான் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது.

மீண்டும் விக்ரமை பார்க்கும் வரையில் நடந்த எல்லாவற்றையும் மறந்து விட்டேன் என்று {நாடகம்} நடமாடிக் கொண்டிருந்தாள் பாரதி.

பாரதியை திட்டித் தீர்த்துவிட்டு அவள் சென்ற திசையையே வெறித்தவாறு அமர்ந்திருந்த விக்ரமின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தோடலானது. துடைக்கவும் தோன்றாமல் அமர்ந்திருந்தவன் தன் வாழ்க்கையில் மட்டும் ஏன் இவ்வாறெல்லாம் நடக்க வேண்டும் என்று புலம்பலானான்.

நூலகத்துக்கு வந்து செல்வோர் அவனை ஒருமாதிரியாக பார்த்துவிட்டு செல்வது கூட அவன் கவனத்தில் இல்லை. சுற்றுப்புற சூழலில் என்ன நடக்கிறது என்ற சிந்தனையும் அவனுக்கு இல்லை. சத்தம் கூட கேட்கவில்லை. நீண்ட நேரமாக அவன் அலைபேசி அடித்தது கூட அவனுக்கு தொலைவில் தான் கேட்டது. ஒருவாறு தெளிந்தவன் அலைபேசியை இயக்கியிருக்க ரகுதான் அழைத்திருந்தான்.

நடந்த எதுவும் தெரியாமல் “என்னடா பாரதிகிட்ட லவ்வ சொல்லிட்டியா? என்ன ரெண்டு பேரும் டேட்டிங்க்ல இருக்கிறீங்களா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று விசாரிக்க, பதில் கூறாது அலைபேசியை துண்டித்திருந்தான் விக்ரம்.

வீட்டுக்கு செல்ல மனமில்லை. சென்றால் ரகு தோண்டித் துருவி விசாரிப்பானென்று வண்டியை எடுத்துக் கொண்டு எங்கெங்கோ சுற்றித்திரியலானான். அவனை அறியாமலே அவன் கண்கள் பெருக்கெடுத்து கன்னங்களில் வழிந்தோடியது. தன்னையும் மீறி பெருக்கெடுத்த கண்ணீரால் கண்கள் மங்க பாதையும் தெளிவில்லாமல் போக, விபத்துக்குள்ளாகப் போனவன் வண்டியை திருப்ப, வண்டியோடு விழுந்தவன் மயிரிழையில் உயிர் தப்பினான்.

எதிரே வந்த வண்டிக்காரனோ “ஏன்டா… வீட்டுல சொல்லிட்டு வந்தியா? செத்துக்கித்து போகப்போற. பத்திரமா வீட்டுக்கு பொய் சேரு” கத்திவிட்டு சென்றான்.   

“செத்துத்தான் போகப்போறேன். இன்னைக்கே எக்சிடன்டுல செத்திருந்தா நல்லா இருக்கும்” புலம்பியவாறே பாருக்கு சென்று கவலை மறக்க, மதுபானத்தை நாடியவன் தன்னையே மறந்தான்.

மணி பத்தை தாண்டியும் விக்ரம் வராததால் அவன் அலைபேசிக்கு அழைத்துக் கொண்டே இருந்தான் ரகு. மறுமுனையில் தொர்பு இணைக்கப்பட்டு விக்ரம் பாரில் குடித்து விட்டு அட்டகாசம் செய்வதாக கூற, “என்ன ஆச்சோ…” என்று பறந்தவன் அவனை வீட்டுக்கு அழைத்து வந்தான்.

வரும் வழியெல்லாம் பாரதியை திட்டித்தீர்த்தானென்று புலம்பியவன். வீடு வந்தும் புலம்புவதை நிறுத்தவில்லை.

“என்னத்தான் நடந்தது சொல்லித்தொலையேன்” ரகுராம் கடுப்பாக கேட்ட பொழுதும் விக்ரமின் வாயிலிருந்து அதற்கு மட்டும் பதில் வரவேயில்லை.

பாரதியிடம் கேட்கலாமென்று அவளை அழைத்தால் அவள் அலைபேசி எண் உபயோகித்தில் இல்லையென்று வந்தது. சரி காலையில் கல்லூரி சென்று பேசிக்கொள்ளலாமென்று ரகுராம் விட்டுவிட்டான். அடுத்தநாள் கல்லூரிக்கு சென்றால் பாரதி கல்லூரியை விட்டு சென்றுவிட்டாள் இதோ இப்பொழுது தான் கிளம்பிச் சென்றாள் என்ற தகவல் தான் கிடைத்தது.

அவளை தேடி ஓடிய ரகுராம் அவள் கையைப் பிடித்து நிறுத்தி என்ன நடந்தது என்று விசாரித்தான்.

“ஏன் உன் பிரண்டு உன்கிட்ட ஒன்னும் சொல்லலையா?” கவலையும் கோபமும் கலந்த குரலில் கேட்டாள் பாரதி.

“அவன் சொல்லி இருந்தா நான் எதுக்கு உன்கிட்ட கேட்கப் போறேன்? லவ்வ சொல்ல வந்தவன் உன்கிட்ட சொன்னா, அதுக்கு நீ தான் ஏதோ சொல்லி இருக்க வேண்டும்” விரக்தியாக பதில் சொன்ன ரகுராம் பாரதியின் மேல் கோபம் கொள்ளவில்லை. தன் தந்தையின் மரணத்துக்கு ஆளவந்தான் தான் காரணம் என்று பாரதி மறுத்திருக்க கூடும் என்று தான் எண்ணினான்.

“என்ன அவன் என்ன லவ் பண்ணானா?” பாரதி அதிர்ச்சடையவில்லை. தான் காதலை  சொல்லாவிட்டால் விக்ரம் தன்னை காதலிப்பதாக கூறி தன் மனதை உடைக்க எண்ணி இருப்பான் என்று நினைத்தாள். அதற்கு நான் சந்தர்ப்பமே கொடுக்காமல் அவனை காதலிப்பதாக கூறி இருந்தேனே. தன்னிடம் நல்ல முறையில் நடந்துகொள்வது  போல் நடித்து தன் மனதை கவரத்தான் போலும் வேஷக்காரன் விக்ரமின் மனதால் சாடினாள்.

விக்ரம் வாய் திறந்தால் தான் உண்டு என்று “என்னதான்டா ஆச்சு?” ரகுராம் விக்ரமிடம் பலதடவை கேட்டும் அவன் பதில் கூறவேயில்லை.

கல்லூரி படிப்பும் முடிந்தது. மேற்படிப்பை எங்கு தொடரலாமென்று விக்ரமை கேட்டான் ரகுராம்.

“இத்தனை வருஷமா படிப்பு படிப்புன்னு இருந்துட்டேன். கொஞ்சம் நாள் ஊர் சுத்தலாமென்று இருக்கேன்”

“டேய் இது நல்ல ஐடியா. மூணு மாசம் இல்ல ஆறு மாசம் நல்லா என்ஜோய் பண்ணிட்டு படிக்கிறத பத்தி யோசிப்போம்” என்றான் ரகுராம்.

நண்பன் திட்டுவான். திட்டினாள் அவனை விட்டு தனியாக செல்லலாமென்று நினைத்த விக்ரமுக்கு ஏமாற்றமாக இருந்ததோடு, தான் என்ன சொன்னாலும் சரியென்று சொல்பவனை பார்த்து ஆனந்தமாகவும், சிரிப்பாகவும் இருந்தது. 

நீ வராதெயென்றால் கேட்க மாட்டானென்று ரகுராமையும் அழைத்துக் கொண்டு தான் சென்றான். சென்ற இடத்தில் விக்ரம் மயங்கி விழ, அவன் நிலை அறிந்து அழுது கரைந்தான் ரகுராம்.