அத்தியாயம் 13

காலையிலையே குளித்து விட்டு விசிலடித்தவாறே தயாராகும் நண்பனை பார்த்த ரகுராம் “என்ன இன்னைக்கு சூரியன் மேற்கு திசையிலே உதிச்சிட்டானா?” என்று கலாய்த்தான்.

“சூரியன் மேற்கிலையும் உதிக்கும் என்று எனக்கு இன்னைக்குத்தான் தெரியும். சயின்டிஸ்ட் நீ சொல்லிட்டியே” என்று பதிலுக்கு ரகுராமை கலாய்த்தான் விக்ரம்.

“பின்ன காலேஜுக்கு அறக்கப், பறக்க குளிக்காமத்தான் போவ. இன்னைக்கு மட்டும் காலையிலையே எழுந்து, குளிச்சி ரெடியாக்கிட்டியே” பாரதியை காணத்தான் செல்கின்றான் என்று அறிந்தே கிண்டல் செய்தான்.

“ஸ்பெஷல் பெர்சன பார்க்க ஸ்பெஷலா போகனும்டா” ரகுராமின் பேச்சை தூசியாக தட்டிவிட்டான் விக்ரம்.

“ஆமா… அந்த ஸ்பெஷல் பெர்சன பார்க்க ஸ்பெஷலா போறியே, நீ வர்றது தெரியுமா? சொன்னியா? சொல்லாமத்தான் போறியா?”

“கழுத்தை கெட்டா குட்டிச்சசுவருடா… பாரதி லைப்ரரிலத்தான் இருப்பா”

“அப்போ நீ பாரதிய பார்க்கப் போற. அவதான் ஸ்பெஷல் பெர்சனா? நான் என்னமோ உங்கப்பாவை பார்க்கபோரியோன்னு நினைச்சேன். அவளை பார்த்தா நீ அவளை கழுதைன்னு சொன்னேன்னு சொல்லுறேன்” ஆளவந்தான் அறிந்தால் என்னவாகும் என்று அச்சப்படுத்தியதுமில்லாமல், தான் சொன்னதை பிடித்துக் கொண்டு பாரதியிடம் சொல்லிவிடுவேன் என்று புன்னகைக்கும் நண்பனை முறைத்து விட்டு வெளியேறினான் விக்ரம்.

“போறதும் போற அந்த வைஷ்ணவி கண்ணுல மட்டும் பட்டுடாத. அவ உனக்கு சூனியம் வைப்பா” விளையாட்டாக கத்தியது விக்ரமுக்கு அன்று நடந்ததை ஞாபகமூட்டலானது.

பாரதியின் மீது தனக்கிருக்கும் காதலை உணர்ந்த நொடி, அவளிடம் தன் காதலை எவ்வாறு கூறுவது? கூறினால் ஏற்றுக்கொள்வாளா? நான் உன்னை என் நண்பனாக மட்டும் தான் பார்க்கிறேன் என்று சொல்லி விடுவாளா? என்ற ஏகப்பட்ட குழப்பத்தோடு பாரதி வரும் வரையில் நடந்துக்க கொண்டிருந்த விக்ரமை அணுகினாள் வைஷ்ணவி.

“என்ன விக்ரம் ரொம்ப சந்தோசமாக இருக்க போல” பாடசாலையில் படிக்கும் பொழுதிலிருந்தே வைஷ்ணவிக்கு விக்ரமை பிடித்திருந்தது. உன்னை பிடிக்கும், காதலிக்கின்றேன் என்று பலதடவை விக்ரமிடம் கூறியிருக்கின்றாள். விக்ரமோ தனக்கு உன் மீது அவ்வாறான எந்த எண்ணமும் இல்லையென்று முகத்தில் அடித்தது போல் கூறியிருக்கின்றான். விடாது கருப்பு போல் தனக்கு பிடிக்காவிட்டாலும், விக்ரம் படிக்கும் ஒரே காரணத்துக்காக இந்த கல்லூரியில் சேர்ந்திருந்தாள் வைஷ்ணவி.

தன்னை பிடிக்கவில்லையென்ற விக்ரம் பாரதியின் மேல் அதீத அக்கறை கொள்வதும், காதலாய் பார்ப்பதும் வைஷ்ணவியின் கண்களில் விழுந்து வயிறெரியத்தான் செய்தது.

பாரதிக்கும் விக்ரமின் மீது காதல் இருப்பதை கண்டு கொண்டவள் “என்னிடம் இல்லாதது, அந்த பாரதியிடம் அப்படி என்ன இருக்கிறது” என்று இருவரையும் பிரிக்க திட்டம் தீட்டலானாள்.

அதற்கு அவள் பெரிதாக சிரமப்படவில்லை. பாரதி யார் என்ன என்று விசாரித்த பொழுது அவள் தந்தையின் இறப்புக்கு காரணம் விக்ரமின் தந்தை ஆளவந்தான் என்று அறிந்துக் கொண்டதும் அதை பற்றி பாரதியிடம் பேசலாமா என்று முடிவெடுத்தவள் பாரதியை நெருங்கிய பொழுது, பெற்றோர் செய்தவற்றுக்கு பிள்ளைகள் என்ன செய்ய முடியும் என்று வகுப்புத் தோழிக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தாள்.

தான் சென்று உன் தந்தையின் இறப்புக்கு விக்ரமின் தந்தை தான் காரணம் என்று கூறினாலும், விக்ரமின் தந்தை செய்ததற்கு விக்ரம் காரணமில்லையென்று பாரதி கூறிவிடுவாளே. இவ்வளவு இளகிய மனம் இவளுக்கு ஆகாது. இவளை விக்ரமை வைத்தே காயப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள் என்ன செய்வது என்று யோசிக்கலானாள்.

விக்ரம் பாரதியை வெறுத்தால் மட்டும் தான் பாரதியின் மனதில் பெரிய அடி விழும் என்று புரிந்துகொண்ட நொடி விக்ரமை நெருங்கினாள்.

தான் எவ்வளவு விரட்டினாலும், தன்னை நெருங்கும் வைஷ்ணவியை பார்த்ததும் விக்ரம் வெறுப்பையும், கோபத்தையும் ஒருசேர முகத்தில் அப்பட்டமாகவே காட்டலானான்.

தன்னை பார்த்ததும் முகம் சுருங்கியவனை கோபமாக ஒருநொடி முறைத்தவள், காரியம் தான் பெரிதென்று முகத்தை இயல்பாக வைக்க முயன்றவாறே “எதிரிகளை கூடவே வச்சிக்கிறது உனக்கு கைவந்த காலை போல. நண்பனை விட எதிரியை கூடவே வச்சுக்கணும் என்று நீ சரியாகத்தான் கணிச்சிருக்க” என்று வைஷ்ணவி பேச ஆரம்பித்ததும்.

அவள் ரகுராமை பற்றி சொல்கிறாள் என்றெண்ணிய விக்ரம் “ரகு எனக்கு நண்பன் தான். நீ சொல்லி நான் எதையும் தெரிஞ்சிக்க வேண்டியதில்லை” சீற்றமாக வந்தது அவன் பதில்.

“நான் எப்போ ரகுராமை பற்றி பேசினேன்” என்று நிறுத்திய வைஷ்ணவி விக்ரமை நிதானமாகப் பார்த்து “உண்மையான அன்பு என்னவென்று உனக்குத் தெரியாது விக்ரம். என் காதலை நிராகரிச்ச நீ ஒரு முட்டாள். அடி முட்டாள். உன்ன பழிவாங்கணும் என்று உன் கூட பிரென்டா சுத்திக்கிட்டு இருக்காளே பாரதி, அவ யார் என்று உனக்குத் தெரியுமா? தெரிஞ்சிதான் நீ அவளை லவ் பண்ணுறியா?”

“நான் நான் பாரதியை காதலிப்பதை பற்றி இன்னும் ரகுவிடம் கூட சொல்லவில்லையே! இவளுக்கு எப்படித் தெரியும்?” விக்ரம் யோசிக்கும் பொழுது.

“பல வருடங்களுக்கு முன்னாடி உங்க அப்பா பேக்டரில நடந்த ஒரு எக்சிடண்ட்டுல ஒருத்தர் செத்தது உனக்குத் தெரியுமா? தெரிஞ்சாலும் அது பாரதியோட அப்பான்னு உனக்கு தெரியாம இருக்கும். செமெஸ்டர் நடுவுல இந்த காலேஜுக்கு எதுக்காக மாறி வந்தான்னு நினைக்கிற? அவ அப்பா சாவுக்கு பழிவாங்க உன்ன பகடைகாயாக்கத்தான். லவ்வு என்ற ஒரு ஆயுதம் போதுமே. மரணத்தை விட வழியை கொடுக்குமே” கொழுத்திப் போட்டாள் வைஷ்ணவி.

“நீ என்ன சொல்லுற?” குழம்பலானான் விக்ரம்.

“இதற்கு மேலும் நான் என்னத்த சொல்ல? இன்னைக்கு உன் ப்ரெண்டா இருக்குறவ நாளைக்கு உன் லவ்வரா மாறி உன்ன நாசம் செய்யப் போறா. அது தான் அவ திட்டம். நீயே யோசிச்சுப் பாரு உனக்கே எல்லாம் புரியும்” என்றவள் வன்மமாக புன்னகையுத்தவாறே அங்கிருந்து சென்றாள்.

வைஷ்ணவி பேசிவிட்டு சென்றதிலிருந்து அங்கேயே அமர்ந்து யோசனையில் விழுந்த விக்ரமுக்கு, அவள் பேசியவைகளை மறுக்கவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

“தன் தந்தை செய்தவற்றுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்? அதை புரிந்துக்கொண்டு தானே ரகு தன்னோடு இத்தனை வருடங்களாக நட்போடு இருக்கின்றான். பாரதி…. அவள் அவள் என்னை பழிதீர்க்க நினைக்கின்றாளா?

ஒருவேளை என்னை ஏழு வயதில் கடத்தியதுக் கூட அவள் குடும்பமாக இருக்குமோ? சீ, சீ… இருக்காது. என்னையோ, என் குடும்பத்தையே ஏதாவது செய்ய நினைத்தால், இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்திருப்பார்களா என்ன?

காதலால் ஒருவனை வீழ்த்துவதென்பது எவ்வளவு அசிங்கமான செயல்? நிச்சயமாக பாரதி அந்த அளவுக்கு கீழ்தரமானவள் கிடையாது. அவ்வாறு செய்ய துணிய மாட்டாள். செய்ய என்ன யோசிக்கக் கூட மாட்டாள்” பாரதியை நன்கு அறிந்திருந்தமையாலும், அவள் மீது வைத்திருக்கும் காதலாலும் அவன் மனம் காரணங்களை கூறியவாறு சமாதானமடையலானது.

தன்னுடைய தந்தை செய்தவற்றுக்கு ரகுராமிடம் மன்னிப்புக் கேட்ட பொழுது, “பெரியவங்களுக்குள்ள என்ன நடந்தது என்று தெரியாது. அதற்கும், நம் நட்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை” என்றிருந்தான். அதே போல பாரதியிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன் பாரதியை காண விரைந்தான்.

அன்று பாரதி கல்லூரிக்கு வந்திருக்காததால், அவளை இன்று பார்த்து பேசியே தீரவேண்டும் என்று அவள் வீட்டுக்கு வண்டியை கிளப்பினான் விக்ரம்.

வண்டியிருந்து இறங்கி பாரதியின் வீடு எதுவாக இருக்கும் என்று விக்ரம் யோசித்துக் கொண்டிருக்க, பாரதியே அவன் எதிரே ஓடி வந்து கொண்டிருந்தாள். தன்னை கண்டு தான் அவள் ஓடி வருகிறாள் என்று நினைத்து இவன் அவள் புறம் ஓட, பாதையில் அதி வேகமாக வந்த வண்டி பாரதியின் மேல் மோதி விடக் கூடாதென்று அவளை தள்ளி விட்டவன் மறுபுறம் விழுந்து அங்கிருந்த கல்லின் மீது தலை மோதுண்டு மயங்கலானான்.

அன்னையும், அத்தையும் பேசியத்தைக் கேட்டு தற்கொலை செய்து கொள்ளலாமென்று ஓடி வந்திருந்த பார்கவியை பாரதி என்றெண்ணி காப்பாற்றியிருந்தான் விக்ரம்.        

மருத்துவமனையில் கண்விழித்தவன் பாரதிக்கு என்னவாச்சோ என்று பதற, தலையில் அடிபட்டதால் தலை வலித்தாலும் தான் பாரதியை பார்க்க செல்ல வேண்டும் என்று கத்திக், கூப்பாடு போடலானான்.

“இங்க பாருப்பா… உன் கூட கூட்டிட்டு வந்த பொண்ணுக்கு ஒண்ணுமில்ல, அவ டிஸ்டாஜாகி வீட்டுக்கு போய்ட்டா. பெரிதாக அடிபடாட்டியும், தலையில அடிபட்டதால் உன் தலையில ஸ்கேன் பண்ணனும். பண்ண பிறகு நீயும் கிளம்பலாம்” மருத்துவர் பொறுமையாக கூறவும் அமைதியானான் விக்ரம்.

அடுத்து வந்த ஐந்து நாட்களுமே பாரதி கல்லூரிக்கு வரவில்லை. அலைபேசியில் விசாரித்தால் குலதெய்வத்தை வணங்க ஊருக்கு சென்றதாக கூறியவள் மேற்கொண்டு பேசாமல் அலைபேசியை துண்டித்திருந்தாள்.

கார்த்திகேயனுக்கு, பார்கவிக்கும் மருத்துவமனையில் வைத்து திருமணம் நிகழ்ந்ததால், குலதெய்வத்தையும் வணங்கி, ஊர் கோவிலில் மீண்டும் தாலி கட்டும் சடங்கை வைத்துக்கொள்ளலாமென்று சுப்பு லட்ச்சுமி முடிவு செய்ததால் உடனே கிளம்ப வேண்டிய சூழ்நிலையில் விக்ரமுக்கு தகவல் கூற பாரதியால் முடியாமல் போனதும், சென்ற இடத்தில் பிணைய இணைப்பு சரிவராக கிடைக்காதலினாலும், அலைபேசியை துண்டித்திருந்தாள்.

“என்ன பொசுக்குன்னு போன வச்சிட்டா? எந்த ஊரு என்று சொன்னா போய் பார்த்துட்டு வந்திருக்கலாமே” என்று முணுமுணுத்தவன், திடுக்கிட்டான். போயும் போயும் ஐந்து நாள் தானே போயிட்டு வந்துடப் போறா? அதுக்காக நான் எதுக்கு அவ ஊருக்கு போகணும்” என்று புலம்பியவனுக்கு அவன் மனம் தெள்ளத் தெளிவாக புரிந்து போனது.

உண்மையிலயே பாரதி தன் தந்தையின் இறப்புக்காக பழிவாங்க எண்ணினாலும் பரவாயில்லை. அவளிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு அவள் மனம் மாறும் வரை காத்திருப்பேன் என்று உறுதிபூண்டான் விக்ரம்.

மண்ணில் ஓடும்

நதிகள் தோன்றும் மழையிலே

அது மழையை விட்டு ஓடி

வந்து சேரும் கடலிலே

வைரம் போல பெண்ணின்

மனது உலகிலே அது தோன்றும்

வரையில் புதைந்து கிடக்கும்

என்றும் மண்ணிலே

கண்ஜாடையில்

உன்னை அறிந்தேனடி

என் பாதையில்

இன்று உன் காலடி

நேற்று நான் பார்ப்பதும்

இன்று நீ பார்ப்பதும் நெஞ்சம்

எதிர் பார்ப்பதும் ஏனடி

யார் இந்த சாலை ஓரம்

பூக்கள் வைத்தது காற்றில்

எங்கெங்கும் வாசம் வீசுது

யார் எந்தன் வார்த்தை மீது

மௌனம் வைத்தது இன்று

பேசாமல் கண்கள் பேசுது

நகராமல் இந்த நொடி

நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம்

அனலாலும் இந்த நெருக்கம்

தான் கொல்லுதே

எந்தன் நாளானது இன்று

வேரானது வண்ணம் நூறானது

வானிலே

பாரதி அழைத்து தான் ஊருக்கு வந்து விட்டதாகவும், நாளை காலை நூலகத்துக்கு வருவதுமாகவும் தகவல் தெரிவித்திருக்க, இதோ காலையிலையே குளித்து, தயாராகி அவளை காண விக்ரம் கிளம்பியிருந்தான்.

செல்லும் வழியெல்லாம் பாரதியின் எண்ணங்களே. பொய்க்கோபம் கொண்டு கூட அவள் ஒருநாளும் தன்னை முறைத்ததில்லை. எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக, நிதானமாக யோசிப்பவள். தனக்கு தீங்கிழைத்தவராயினும் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை பார்ப்பவள் நிச்சயமாக தன்னை புரிந்துகொள்வாள் என்று புன்னகைத்தான்.

வண்டியில் சென்று கொண்டிருந்தவனின் அலைபேசி விடாமல் அடிக்கலானது. யார் தன்னை தொல்லை செய்வது என்று முதலில் கண்டு கொள்ளாமல் இருந்தவன் தெரியாத எண்ணிலிருந்து இவ்வளவு அழைப்பு விடுக்கிறார்களென்றால் காரணம் இல்லாமலா இருக்கும் என்று வண்டியை நிறுத்தி விட்டு தொலைபேசியை இயக்கி காதில் வைத்திருந்தான்.

மருத்துவரை உடனடியாக வந்து பார்க்குமாறு மருத்துவமனையிலிருந்துதான் அழைப்பு வந்திருந்தது.

“நான் ஈவ்னிங் வரேன்” கொஞ்சம் கடுப்பாகத்தான் கூறினான் விக்ரம்.

“டாக்டர் உங்கள உடனடியாக பார்க்கணும் என்று சொன்னாரு தம்பி. ஈவினிங் டாக்டர் இருக்க மாட்டாரு. நீங்க இப்போவே வந்து பாருங்க. உங்க ஸ்கேன் ரிப்போர்ட் வந்திருக்கு”

செல்லலாமா, வேண்டாமா என்று யோசித்த விக்ரம் ஒரு அரைமணி நேரத்தில் மருத்துவரை பார்த்து விட்டு பாரதியை சந்திக்க செல்லலாமென்று வண்டியை மருத்துவமனைக்கு செலுத்தினான்.

மருத்துவரோ விக்ரமின் ஸ்கேன் ரிப்போட்டை பார்த்தவாறு அமர்ந்திருக்க, விக்ரம் அவரை முறைக்காத குறையாக பார்த்திருந்தவன் பொறுமையிழந்தான்.

“டாக்டர் என்ன? ஏது என்று சட்டுபுட்டுன்னு சொல்லிட்டீங்கன்னா. நான் கிளம்பிடுவேன்” பாரதி நூலகத்திலிருந்து கிளம்பும் முன் அவளை சந்தித்து பேச வேண்டுமே என்ற எண்ணத்தில் அவசரப்படுத்தலானான்.

“எப்படி ஆரம்பிக்கிறது என்று தான் புரியல” அமைதியை கலைத்த மருத்துவர் சொல்லித்தானேயாக வேண்டும் என்று “அடிக்கடி தலைவலி, மறதி வருதா?” என்று கேட்டார்.

 “அடிக்கடி என்று சொல்ல முடியாது. லேசான ஒரு தலைவலி வரும். பெயிண்கிளர் போட்டா சரியாகும். மறதி… என் பர்த்டேயே எனக்கு மறந்து போச்சு. என் ஃப்ரெண்ட் ரகுதான் ஞாபகத்தோட விஷ் பண்ணினான். அப்புறம் பார்ட்டி தான் டாக்டர்” என்று சிரித்தான் விக்ரம்.

வயதுக்கேற்ற துடுக்குத்தனம் விக்ரமிடம் இருப்பது மருத்துவருக்கு புரியாமல் இல்லை. ஆனாலும் அவர் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டுமே!

ஸ்கேன் ரிப்போர்ட்டை காட்டியவாறு “உனக்கு மூளையில இந்த இடத்தில ஒரு கட்டி இருக்கு. எப்பயோ தலையில் அடிபட்டதனால இரத்தம் உறைந்து கட்டியா மாறி இருக்கு. அத்தோட கேன்சர் கட்டி வேற சேர்ந்திருக்கு”

“இப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க? நாளைக்கு நான் செத்துப் போயிடுவேன்னு சொல்ல வரீங்களா?” மருத்துவரின் பேச்சில் குறுக்கிட்டு கேட்டவாறே முறைதான் விக்ரம். தனக்கு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் தான் அவனுக்கு.

“சீரியஸ்நஸ்ஸ கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்க முயற்சி செய் தம்பி. ஆபரேஷன் பண்ணாலும் ஆறு மாசம் தான் உயிரோடு இருப்ப”

பொறுமையாக பேசிக் கொண்டிருந்த மருத்துவரின் தொனி சற்று கடுமையாக ஒலிக்க, அவர் சொல்லும் விஷயத்தின் வீரியத்தை உணர்ந்து கொண்ட விக்ரம்.

“என்ன டாக்டர் சொல்லுறீங்க? எப்பயோ ஸ்கூல்ல ஒரு தடவை தம் அடிச்சதோட சரி. நான் போதை பொருள் எதுவும் பாவிக்கு மாட்டேன். சரக்கு இருந்தாபல பார்ட்டின்னு வந்தா மட்டும். கொஞ்சம் நல்லா பாருங்க. வேறு யாருடையதாவது ரிப்போர்ட் எனக்கு மாறி வந்திருக்கும்” மருத்துவர் கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபப்பட்டான்.

விக்ரமை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று மருத்துவருக்கு புரியவில்லை. “சரிப்பா வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா. நான் பேசுறேன்” என்றார்.

தந்தையோடு தான் நல்ல உறவில் இல்லையே அப்பத்தாவிடம் போய் என்னவென்று கூறுவது அழுது கரைந்து ஆர்ப்பாட்டம் செய்வாளே என்று எண்ணியவன் நான் “ஒரு அனாதை டாக்டர்” என்றான்.

தங்கையும், நண்பனும் அவன் கண்களுக்குள் வந்து நின்றாலும், இந்த விஷயம் அறிந்தால் அவர்கள் இவனை நோயாளியாகப் பார்ப்பார்கள். கூடுதலான அக்கறை எடுப்பதாக இம்சை செய்வார்கள் என்று கண்களை சிமிட்டி அவர்களை துரத்தினான்.

பாரதி…. அக்கணம் அவன் அவளை மறந்துதான் போனான்.

ஐயோ பாவம் என்று பரிதாப்படுவதா? நீ இறந்தால் உனக்காக அழ யாருமில்லாதது ஒருவிதத்தில் நல்லது தான் என்று நிம்மதியடைவதா? கலவையான முகபாவனையை கொடுத்த மருத்துவர் “ஆபரேஷன் பண்ணிக்கிறியா? என்று கேட்டார்.

“பண்ணிக்கிட்டா மட்டும் நூறு வருஷம் வாழப்போறேனா என்ன? இல்லையே. சாவு எப்போ வரும் என்று தெரியாதவரைக்கும் தான் எல்லாமே. அதான் தெரிஞ்சிருச்சே. அதற்கான வழியை மட்டும் பார்க்குறேன்” எங்கே மருத்துவரின் முன் அழுது விடுவேனோ என்று கலங்கிய கண்களோடு வெளியேறிய விக்ரம் மருத்துவமனை கழிவறைக்குள் புகுந்து அழுது கரைந்தான்.

அழுது ஓய்ந்த பின்தான் பாரதியின் ஞாபகமே அவனுக்கு வந்தது. “நீ என்னடி என்ன பழிவாங்க நினைப்பது? என் அப்பா செய்த ஒட்டு மொத்த பாவத்துக்கு கடவுள் என்ன பலியாடாக்கிட்டான்” புலம்பியவாறே வண்டியை இயக்கியவனுக்கு இன்னும் கொஞ்சம் நாள் தான் நான் உயிரோடு இறுக்கப் போகிறேனா என்று எண்ணும் பொழுது, கோபம், வெறுப்பு, அழுகை, ஆற்றாமை என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி அவனை இம்சை செயலானது.

ஆனாலும் அவன் மூளையோ வண்டியை சரியாக இயக்கி அவனை நூலகத்தின் முன் கொண்டு வந்து சேர்ந்திருந்தது.

பாரதியை சந்திக்கக் கூடாது. இன்றென்ன இனிமேல் சந்திக்கவே கூடாது. என்று முடிவு செய்தவன் வண்டியை கிளப்ப முயல, பாரதியே அவனை கண்டு அவன் அருகில் வந்திருந்தாள்.

“எங்க கிளம்பிட்ட? இப்போ தானே வந்த?” இன்முகமாக பேசுபவளை அவனால் புறக்கணிக்க முடியவில்லை.

“நான் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். வா அங்க அமர்ந்து பேசலாம்” விக்ரமின் பதிலையும் எதிர்பார்க்காமல் நடந்த பாரதி அமர்ந்து கொண்டாள்.

“நீ சொல்வதை நான் செய்ய வேண்டுமா?” என்பது போல் நின்றவாறே “என்ன விஷயம் சொல்லு” என்றான் விக்ரம். 

பாரதி இருந்த மனநிலையில் விக்ரமின் குரலில் இருந்த மாற்றத்தை உணரத் தவறினாள்.

பார்கவிக்கும், கார்த்திகேயனுக்கு திருமணம் திடீரென்று நடந்ததால் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சினை. அதில் ஒன்று வீட்டில் இடம் பற்றாமை. பார்கவிக்கு உடம்பு முடியாததால் இருவரையும் தனிக்குடித்தனம் அனுப்பவும் முடியாது. எல்லோருக்கும் வசதியாக ஒரு வீட்டை கார்த்திகேயன் பார்த்திருக்க, அது பாரதியின் கல்லூரியிலிருந்து தொலைவில் இருந்தது.

கல்லூரியை மாற்றினால் விக்ரமை பார்க்க முடியாதே என்று பாரதி தனக்கு பிரச்சினையில்லை என்று கூறியும் கார்த்திகேயன் பேச வேண்டியவர்களிடம் பேசி பாரதியை புதுக் கல்லூரியில் சேர்க்கும் முயற்சியில் இருந்தான்.

ஏற்கனவே அக்கா மாமாவின் உழைப்பை உறுஞ்சுவதாக பேசுகின்றாள். தான் பிடிவாதமாக இருந்தால் மேலும் பேசுவாள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. இன்னும் மூன்று மாதங்களில் விக்ரமின் படிப்பு முடிந்து கல்லூரியை விட்டு சென்று விடுவான். இப்பொழுது தான் சென்றாலும், மூன்று மாதங்கள் கழித்து விக்ரம் சென்றாலும் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வந்தவள் அவனை மீண்டும் சந்திக்க முடியுமோ, என்னவோ, அதற்கு முன் தன் மனதில் இருப்பதை சொல்லிவிட வேண்டும் என்றே தான் ஊருக்கு வந்த உடன் அவனை சந்திக்க வந்திருந்தாள்.

எப்படி ஆரம்பிப்பது என்று திணறியவள் மெதுவாக தான் சந்தர்ப்ப சூழ்நிலையால், வேறு கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு விக்ரமின் முகம் பார்த்தாள். 

“தான் இவளை விட்டு விலக நினைத்தால், விதியே இவளை என்னிடமிருந்து பிரிக்கிறதா? என்று நிம்மதியடைந்தவன் “சந்தோசம்” என்று ஒற்றை வார்த்தையில் கூறியிருந்தான்.

தான் கல்லூரியை விட்டு செல்வதால் விக்ரம் கோபமாக இருப்பதாக எண்ணிய பாரதி சிரித்தவாறே “இன்னும் மூணு மாசத்துல நீயே காலேஜ விட்டு போய்டுவ. அதுக்கு முன் நான் போயிடுறேன்” புன்னகைத்தாள்.

“இன்னும் மூன்று மாதத்தில் காலேஜை விட்டு இல்ல. உலகத்தை விட்டே போகப்போறேன்” தனக்குள் முணுமுத்தவன் “வேறு ஒன்றுமில்லையே” இன்று தான் இவளை இறுதியாக பார்க்க முடியுதா? இனிமேல் முடியாதா? விடைபெறுவதாக காட்டிக் கொண்டாலும், அவளை விட்டு விலக அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. 

“விக்ரம் எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. பிடிச்சிருக்குன்னா…. நான் உன்ன விரும்புறேன். ஐ மீன் லவ் பண்ணுறேன். காலேஜ விட்டு போறதால இப்போவே சொல்லணும் என்று… நீ இப்போவே சொல்ல வேண்டாம், அப்பொறம் யோசிச்சு…” திக்கித் திணறி உளரிக் கொட்டினாள் பாரதி.

“இத்தனை நாட்களாக என்னோடு இருந்தவள் மனதை புரிந்துக்கொள்ளாத நான் ஒரு முட்டாள் மட்டுமல்ல, துரதிஷ்டசாலி. தானும் இவளை விரும்புவதை சொல்லத்தான் வந்தேன். ஆனால் விதி…” உள்ளுக்குள் நொந்தவன், தான் மறுத்தாலும் பாரதி பொறுமையாக பேசி தன் மனதை மாற்றி விடுவாள். நான் இறந்து விடுவேன் என்றறிந்தால் இவள் என்னையே நினைத்துக் கொண்டு வாழ்வாள். எனக்காக இவள் இவளது வாழ்க்கையை தியாகம் செய்யக் கூடாது என்ற பாரதியை கண்டபடி வசைபாட ஆரம்பித்தான் விக்ரம்.