அந்த குகையில் காற்று வீசும் சத்தம் கூட கேட்கவில்லை, அவ்வளவு அமைதி இல்லை இல்லை பேரமைதி. அந்த அளவு அங்கிருந்த ஒவ்வொருவரின் கண்களும் வியப்பில் விரிந்திருந்தன.
     அரவிந்தோ தன் அருகிலேயே இருக்கும் பொம்மையின் வாய் மட்டும் அசைவதை ஒருவித திகிலுடன் பார்த்திருந்தார். அந்த குகையில் எப்போதும் நிறைந்திருக்கும் அமானுஷ்யத்தை விட இப்போது இந்த பொம்மை பேசுவதே பெரிய அமானுஷ்யமாய் தெரிந்தது.
     “என்னடா எல்லா பயலும் எதோ காணாத அதிசயத்தை கண்ட மாதிரி பப்பரப்பான்னு பாக்குறீங்க. இங்க என்ன ஆட்டகாரியா ஜிங்கு ஜிங்குன்னு ஆடுறா”
     பொம்மை பேசுவதை கண்டு இன்னும் திறந்த வாயை மூடாது ஆஆவென எல்லோரும் அதே பொசிஷனில் நின்றனர்.
     “இவனுங்க இப்படியே அதிர்ச்சியிலையே இருந்தா நாம எப்ப வேலை கழுதைய முடிச்சு வூடு போயி சேர.
     அடச்சை வாய மூடுங்க எல்லாரும். வாய்க்குள்ள கொசு ஈன்னு எதாவது போய் குட்டி போட்டுற போவுது. எனக்குன்னே வருவாய்ங்க போல” என சத்தமாகவே புலம்பிய பொம்மை மாதவன் சங்கரின் புறம் அறுவது டிகிரியில் தன் தலையை மட்டும் திருப்பியது.
     “எலேய் வெளங்காத பயலுவளா, அங்க நின்னு நீங்க யாரு வாயலே வேடிக்க பாக்குறீங்க. வாங்கடா வந்து நான் சொல்றத சட்டுப்புட்டு செய்யுங்க. அப்பதான் இங்க இருக்குற எல்லாரும் உசுரோட வூடு போயி சேரமுடியும்”
     அரவிந்தின் நக்கல் தொனி சற்றும் மாறாது அப்படியே அதே டோனில் ஜெராக்ஸ் அடித்ததைப்போல் பொம்மை பேசி வைக்க
     ‘இது யாருடா இது, நம்ம பக்கத்துலையே இருந்திருக்கு நமக்கு இவ்வளவு நேரம் தெரியல. பேசறதுல இருந்து எல்லாத்துலையும் நமக்கே டப் காம்படீஸன் குடுக்கும் போலையே. டைம்க்கு கவுண்டராவும் அடிச்சு விடும் போலையே. இப்படியே போனா இந்த அரவிந்தோட பேன் பேசு என்னாகுறது’ என மனதிற்குள் ஜர்க்காகிவிட்டார் மனிதர்.
     இப்போது இவர்கள் இங்கு மாட்டியதை விட தன் வாய்க்கு ஒரு ஆள் போட்டியாக வந்துவிட்டாரே என்பதே அரவிந்தின் மிகப்பெரிய கவலையாக மாறியது.
     “யோவ் மாதவா இந்த பொம்மையாருயா. அது பேசுது. அதவிட அது உன்கிட்ட எதோ வேலை எல்லாம் செய்ய சொல்லுது. வாய தொறந்து இங்க என்ன நடக்குதுன்னு சொல்லுயா”
     சித்து மாதவனிடம் நேராக பாய்ந்தான். சித்துவின் கேள்விக்கு மாதவன் பதில் சொல்லும் முன் பொம்மையிடமிருந்து பதில் வந்தது.
     “டேய் அரவிந்து பெத்த மவனே! அவன்ட்ட என்னடா கேள்வி அவன வேலை செய்யவிடு. உனக்கு எது தெரியனும்னாலும் என்கிட்ட கேளுடா. ஏன்னா உங்க எல்லாரையும் இங்க கொண்டார வச்சதும் நான்தான், இங்க இனிமே நடக்க போற எல்லாத்துக்கு காரணமும் நான்தான்”
     பொம்மை சுயவாக்குமூலம் தந்து பாயிண்டரை அதன்புறம் திருப்ப,
     “ஏய் பொம்மை நீயே சுய வாக்குமூலம் தந்தா நான் சும்மா விட்டுருவனா. இங்க என்ன நடக்குதுன்னு சொல்லி தொலை. இதுக்கு மேல என்னால பொறுமையாலாம் இருக்க முடியாது. அப்புறம் என் பேரு சித்தார்த் சும்மா அரவிந்து மகன்னு சொல்லாத கடுப்பாவுது” போயும் போயும் ஒரு பொம்மைக்கு போய் பயப்படுறதா என பொங்கி எழுந்தான் சித்து.
     “ஹப்பா சரிடா சித்தார்த்தா சொல்லுறேன் கேளு. அதுக்கு முன்னாடி என்கிட்ட பேசும்போது மரியாதையா பேசி பழகு. ஏன்னா நான் வெறும் பொம்மை இல்ல உன்னோட கொள்ளு பாட்டி அதாவது உன்னோட அப்பன் அரவிந்தோட அப்பத்தா. என்ற பேரு கண்ணாத்தா”
     தன் பேரை பெருமையுடம் சொல்லி நிறுத்தி பொம்மை பெரிய குண்டை தூக்கிப் போட, அங்கிருந்த அனைவருக்கும் ஒருநிமிடம் ஒன்றும் புரியவில்லை.
     “ஏய் பொம்மை என்ன சொல்ற நீ, நீ என்னோட கொள்ளு பாட்டியா. அப்ப அந்த பொம்மைக்குள்ள என்ன பண்ற? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு சும்மா அடிச்சு விடாத. உண்மைய சொல்லு”
     அந்த பொம்மை சொல்வதை சித்து நம்பவில்லை. எனவே உடனே மறுப்பு தெரிவித்தான். அதற்கு பொம்மை சித்துவிடம் பதில் சொல்லாது அரவிந்தை பார்த்து பேசியது.
     “டேய் அரவிந்தா உன் புள்ளயைய நீ கூறுகெட்டவன் கிறுக்கன்னு திட்டுறதுல தப்பே இல்லடா. நான் முழுசா பேசறதை கேக்காம எப்படி பேசறான் பாரு”
     பொம்மை அந்த கோலத்தை பார்த்து பேச, அங்கிருந்த சித்து வீரா கதிரை தவிர மற்ற அனைவரும் முழித்து வைத்தனர் இந்த பொம்மை யாரை பார்த்து பேசுகிறதென புரியாமல். அதுவும் சித்து பொம்மை தன்னை டேமேஜ் செய்ததில் கடுப்பில் இருந்தான்.
     “ஆமா இந்த பொம்மை யாருட்டடா பேசுது” சேகர் சரியான நேரத்தில் மாதவனிடம் கேள்வியை எழுப்ப “தெரியலையேடா” என்றான் அவனும்.
     இதை கேட்ட பொம்மை “இதா இருக்கானே உன்ற மாமன் அரவிந்த், அவன்ட்டதான்டா பேசுறேன். இரு உனக்கும் அவன காட்டுறேன்” என ஏதோ ஜூம்மந்தகாளி என மந்திரம் போட காலை ஆட்டியபடி எதையோ வாயில் போட்டு அதக்கும் அரவிந்தின் உருவம் அனைவர் கண்ணிலும் தெரிந்தது.
     “அண்ணா…” அலமேலுவின் ஆச்சரிய குரலில் அரவிந்த் திரும்பி பார்க்க, அங்கிருந்த அனைவரின் முகமும் அவரின் புறம் இருப்பதை கவனித்தார். அதுவும் அவர் தங்கை அலமேலு அவரிடம் ஓடி வந்தார். ஆனால் அந்த கோலத்தினுள் அவரால் உள்ளே நுழைய முடியாது போனது.
     “ஐயோ அண்ணா நீயா. நீ எப்புடி இங்க? ஐயோ என்னால உள்ள வர முடியலையே. உன் புள்ள சித்து நீ செத்துட்டன்னு சொன்னான். நீ எப்புடிணா இங்க. உன்ன இத்தினி வருஷம் கழிச்சு பாத்தும் உன்கிட்ட வர முடியிலையே”
     அழுதபடி அலமேலு அரவிந்தின் முன் மண்டியிட்டு புலம்ப, தன் தங்கையை கண்டு அரவிந்தின் உள்ளமும் உருகிவிட்டது. அவர் கையில் வைத்திருந்த தீனையை ஓரமாக வைத்தவர்
     “அலமேலு பாப்பா அழாதடா. அண்ணனால நீ அழறத பாக்க முடியலைடா. எனக்கு ஒன்னும் இல்ல. இங்க பாரு நல்லாதான் இருக்கேன்”
     அரவிந்தால் அலமேலு அழுவதை தாங்கமுடியாது பாசமலராக டயலாக்கை அள்ளிவிட, சித்து வீரா இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்து வைத்தனர். ஆனால் நம் பொம்மை பொறுமையை இழந்தது.
     “டேய் உங்க அண்ணன் தொங்கச்சி நாடவத்தை அப்புறம் வச்சிக்கிங்க. இப்ப ரெண்டு பேரும் வாய மூடிட்டு அமைதியா உக்காரனும் புரிஞ்சதா” அதட்டலாக பொம்மை பேச
     “ஏய் இந்தா பாரு பொம்ம, நீ என் பாட்டியோ இல்ல யாரா வேணா இருந்துட்டு போ. ஆனா என் தங்கச்சிட்ட பேசறப்ப இடையில வந்த, இந்த கட்டு எல்லாத்தையும் பிச்சி போட்டு வந்து உன்னை தூக்கி போட்டு பொலந்துருவேன் பாத்துக்க” வெளியே வரமுடியாது இருந்தாலும் வாயை மட்டும் குறைக்காது தன் பங்குக்கு தானும் எகிறி வைத்தார் அரவிந்த்.‌
     “நீ சரிபட்டு வரமாட்டடா, இந்த வாய வச்சிக்கிட்டு தானே இந்த பேச்சு பேசுற. இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்டா மொதல்ல”
     கோவமாய் மீண்டும் ஆக்குபாக்கு வெத்தலை பாக்கு என ஒரு மந்திரத்தை பொம்மை போட, ரயில் தண்டவாளத்தில் கல்லை போடட்து போல் பேசிக் கொண்டிருந்த அரவிந்தின் வாய் அதியசமாய் மூடி கொண்டது.
     “ம்ம்ம்… ம்ஹூம்…” என அரவிந்த் எவ்வளவு முயற்சித்தும் அந்த வாயை திறக்க முடியாது போகவே, வெறியாகிவிட்டார் மனிதர். சோறு இல்லாமல் கூட அரவிந்த் இருந்துவிடுவார், ஆனால் வாயை பேசாமல் அவரால் ஒரு நொடிக்கூட உயிர்வாழ முடியாதே. அப்படி இருந்தும் பொம்மையின் வேலையால் அரவிந்தின் வாய் வெற்றிகரமாய் பூட்டப்பட்டது சில நிமிடங்களுக்கு.
     “இங்க பாருங்க நான் பேசி முடிக்கிற வரை யாரும் வாய திறக்க கூடாது. இல்ல இந்தா இருக்கான் பாரு, என் பேரன் அரவிந்து அவன் நிலைமைதான் உங்களுக்கும்”
     எல்லோரையும் பார்த்து முன்னமே வார்னிங் கொடுத்து ஆரம்பித்தது பொம்மை. அந்த பேய் பொம்மை தங்களை எதுவும் செய்து விடுமோ என பயந்தே ஒருவரும் வாயை திறக்கவில்லை. எனவே பொம்மை தன்னுடைய கதையை துவங்கியது.
     “நான் யாருன்னா இந்தா இருக்காங்கள அரவிந்து அலமேலு, இவங்க அப்பன பெத்தவ. நம்ம குடும்பத்துக்கு வந்த ஒரு சாபத்தால இந்த பொம்மைக்குள்ள அடப்பட்டு அந்த வீட்டுள ஒரு அறைக்கு உள்ளையே இத்தினி வருஷமா மாட்டிட்டு இருந்தேன். என் பேத்தி என் ரத்தம் வீரசுந்தரி வந்தா, அவ கையு பட்டு அந்த மந்தர கட்டு அத்துப்போய் சுதந்திர பறவையா நான் வெளிய வந்துட்டேன்”
     பொம்மையில் இருந்த பாட்டியின் பேய், தலையும் புரியாது வாலும் புரியாது பாதி கதையின் சுருக்கத்தை மட்டும் கூற ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. வாயை திறந்து அந்த பேயிடம் கேட்கப்போய், பேய் அரவிந்தின் வாயை அடைத்ததைப்போல் நம்மை எதேனும் செய்துவிடுமோ என பயந்து ஒரு மூச்சை கூட யாரும் சத்தமாய் வெளியேற்றவில்லை.
     ஆனால் எதற்கும் பயப்படாத அஞ்சாநெஞ்சம் கொண்ட நம் வீராதான் முதலில் தன் சந்தேகத்தை பாட்டி பேயிடம் கேட்டாள்.
     “பாட்டி நீங்க சொல்றது எங்களுக்கு சுத்தமா புரியலை. நான் எப்படி உங்க ரத்தம்னு சொல்றீங்க. அது போக அப்படி உங்கள அடச்சு வைக்கிற அளவு இந்த குடும்பத்துக்கு என்ன சாபம். அப்புறம் எதுக்கு எங்க எல்லாரையும் இங்க கொண்டு வந்து கட்டிப்போட்டு வச்சீங்க”
     அங்கிருந்தவர்களின் மனதை அரித்த கேள்வியை பார்த்து பக்குவமாய் கேட்டு வைத்தாள் வீரா.
     “அது எல்லாம் தெரிய முன்னாடி நான் அடப்பட்டு இருக்க இந்த பொம்மைக்கு உள்ள இருந்து வெளிய வரனும். அப்பதான் நான் நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியும், அதோட முக்கியமான ஒரு விஷயம். நான் வெளிய வந்து சில பல வேலைய செஞ்சு முடிச்சாதான் நாம எல்லாம் இங்க இருந்து உயிரோடவே போக முடியும்”
     வீரா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது பொம்மை வெளியே வர ஒரு பிட்டை போட்டது. ஆனால் ஊரை அடித்து உலையில் போடும் நம் வீராவோ அது கூறியதை நம்பாமல் சந்தேகத்தோடு பார்த்து வைக்க
     “என்ன வீராம்மா நீ என்ன சந்தேகமா பாக்குற. இந்த பாட்டி சொன்னத நீ நம்பலையா. இத்தினி வருஷமா இந்த பொம்மைய விட்டு வெளிய வர முடியாம நான் தவிக்கிறது எனக்குத்தான் தெரியும்‌. நான் பெருசா என்ன கேக்குறேன் நான் இந்த பொம்மைய விட்டு வெளிய வந்து இந்த பூமியை விட்டு சொர்க்கத்துக்கு போயி என்ற புருஷனோட இருக்கனும்னு தானே ஆசைப்படுறேன். இது ஒரு தப்பா, அதுக்கு நீங்க என் குடும்பம் எனக்கு உதவி பண்ண மாட்டீங்களா”
     பாட்டி தன் வாயிசில் ஒரு வண்டி சோகத்தை கொண்டு பேசி அனைவரின் இரக்கத்தையும் சம்பாதிக்க பார்க்க, கேட்ட வீராவுக்கு மனசுசே உருகிவிட்டது.
     ‘அச்சோ பாட்டி பேசறதை கேட்டாலும் பாவமாதான் இருக்கு. சரி போற போக்குல ஒரு சமூக சேவைதானே, பாட்டிக்கு பண்ணிவிட்டு போவோம்’ என முடிவெடுத்த வீரா
     “சரி பாட்டி நான் உங்களுக்கு உதவி பண்றேன். ஆனா நீங்க அதுல இருந்து வெளிய வந்த அப்புறம் உங்க எஸ்டிடி ஜாகிரபி எல்லாத்தையும் சொல்லிடனும், அதோட எங்க எல்லாரையும் பத்திரமா இந்த இடத்துலே இருந்து கொண்டுப்போய் நம்ம வீட்டுலையே விட்டுடனும். அது உங்களுக்கு ஓகேயா”
     பாட்டி பேயிடம் வீரா டீல் பேச, அவள் கேட்ட அனைத்திற்கும் சரி சரியென தன் பொம்மை மண்டையை ஆட்டி வைத்தது. அப்படி என்ன செய்து பாட்டியை பொம்மைக்குள்ளிருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என வீரா கேட்க
     “அது வேற ஒன்னும் இல்ல தாயி, ரொம்ப வேணாம் உன்னோட ரத்தம் ஒரு ரெண்டே ரெண்டு சொட்டு மட்டும் இந்த பொம்மை மேல விட்டீன்னா நான் வெளியே வந்துப்புடுவேன்”
     அப்பாவி போல் பாட்டி பேய் பேசி நிறுத்த,
     “எதே! ரத்தமா. ஏய் கெழவி இங்க பாரு நீ யாரா வேணா இருந்துட்டு போ. இந்த குடும்பத்து வரலாறு பூலோகம் எல்லாம் எனக்கு தேவையே இல்ல. நீ ஏற்கனவே செத்து போய்ட்ட இனி நீ எக்கேடு கெட்டு போனாலும் எனக்கு கவலையே இல்ல. என் வீராவோட ரத்தம் வேணுமாம்ல ரத்தம், ஒரு மண்ணும் தரமுடியாது நீ ஆனத பாத்துக்க”
     இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சித்து பொங்கிவிட்டான். அரவிந்தால் பேச முடியவில்லை என்றாலும் விட்டால் பாய்ந்துவிடுவேன் என்ற நிலையில்தான் அவரும் இருந்தார். பின்னே ஆசை காதலியின் ரத்தத்தை யாரென்றே தெரியாத ஒரு பேய் கேட்டால் தந்துவிடுவானா நம் அரவிந்தின் புதல்வன்.
     இல்லை ஆசை மருமகளை பேயின் டீலுக்கு ஒத்துக் கொள்ள தான் விடுவாரா நம் அரவிந்த். எனவே வேகமாக எதிர்த்து நின்றார்கள் தந்தையும் மகனும். இவர்களை மீறி பாட்டியின் பேய் என்ன செய்ய போகிறதென பார்ப்போமே!
-ரகசியம் தொடரும்