குண்டூசி விழுந்தால் கூட பட்டென சத்தம் கேட்டுவிடும், அந்த அளவு மிக மிக அமைதியாக இருந்தது ஊர் வத்தலகுண்டு. அதை வைத்தே கூறிவிடலாம் அங்கே நேரம் தற்போது நள்ளிரவை நோக்கி நகர்ந்துவிட்டதென.
     இந்த அர்தஜாமத்தில் பத்து பேர் கொண்ட ஒரு கும்பல் பயத்தில் வேர்த்து வழிந்தபடி பூனை நடைப்போட்டு அந்த இருட்டில் செடி கொடிகளுக்கு இடையே பதுங்கி பதுங்கி வந்தது. நல்ல தடிதடியாக பார்ப்பதற்கு எதோ ஆம் ரெஸ்லிங் போட்டிக்கு பதிவு செய்ய வந்ததைப் போல் இருந்தது இந்த கும்பல்.
     அப்படியே கொஞ்சம் உத்து பார்த்தால் அந்த கும்பலில் ஒவ்வொருவரின் காலும் தையத்தக்கா என கதகளி ஆடியபடி வருவதை நாம் காணலாம். இதை எதையும் கண்டுக்காமல் அவர்களுக்கு முன்னால் எதையோ சாதிக்க போகும் வெறியை கண்ணில் தேக்கி வைத்து வந்தார் நம் பக்கத்து ஊர் பெரிய மனிதரான கேசவன்.
     என்னதான் நம் கேசவன் கேமரூனின் டைட்டானிக் கப்பலின் அளவுக்கு ஒரு பெரிய பிளானை போட்டு வந்திருந்தாலும், அவருடைய பருப்பு எல்லாம் நம்ம சைக்கோ பொம்மையிடம் வேகாமல் போகபோகிறதென பாவம் அவருக்கு தெரியாதே.
     சொந்த ஊர் பக்கத்து ஊர் என சுத்துபட்டு பதினெட்டு பட்டியிலும் இந்த வீட்டின் எஸ்டிடி தெரிந்த அனைவரும் கேசவன் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த வேலைக்கு வர மாட்டோம் என சொல்லிவிட மதுரையிலிருந்து ஆட்களை இறக்கியிருந்தார் மனிதர்.
     அப்படி வந்திருந்த தடி தாண்டவராயன்களுக்கு வந்தவுடன் இந்த வீட்டின் சிறப்புகள் காதுகளுக்கு வந்தும், ‘நாம பாக்காத பேயா, நம்ம ஊருல இல்லாத பிசாசா. வாங்கடா போவோம்’ என வீரவசனம் பேசி வந்திருக்க, உண்மையில் நம் மினி அரண்மனையை நேரில் கண்டு நடுங்கி விட்டனர்‌.
     கேசவன் அவர் கையில் வைத்திருந்த சாவியை போட்டு அந்த வீட்டின் பின்வாசல் கதவை திறக்க போக
     “ஐயா! காலைல இருந்து எனக்கு என்னவோ சகுணம் எதுவும் சரியாவே படலைங்க. இந்த ஊட்டுக்குள்ள போவ வேணாமே. பேசாம இப்படி பண்ணலாமா.. நாம எல்லாரும் இப்ப போயிட்டு பொறவு வருவோமா?”
     திட்டு விழும் என நிச்சயமாக தெரிந்தும் கடைசி முயற்சியாக கேட்டு வைத்தார் கேசவனின் கணக்குப் பிள்ளை. திட்டு வாங்குவதை விட உசுரு முக்கியம் இல்லையா.
     “யோவ் கணக்கு என் வாய நல்லா கெளராதயா. கதவ தெறக்க முன்ன இப்படி அபசகுணம் அது இதுன்னு பேசுற. பேசாம உன் திருவாய மூடிட்டு உள்ள வரியா இல்ல உன்ன மொதல்ல காலி பண்ணிட்டு நான் உள்ள போகவா”
     கேசவன் கடுங்கோவத்தில் கத்திவிட்டு கதவை திறந்து அசால்டாக தன் லெப்டு லெக்கை வைக்கும் நேரம்
     ‘ஆத்தா மாரியாத்தா காளியாத்தா உள்ள என்ன நடந்தாலும் என்னமட்டும் காப்பாத்திவிட்டுறு ஆத்தா. அப்படி மட்டும் பண்ணிட்டன உனக்கு நான் தீ மிதிச்சு கெடாவே வெட்டுறேன் ஆத்தா’ கணக்கு மனதிற்குள் மினி வேண்டுதலையே போட்டுவிட்டார்.
     இப்படி வரும்போதே அமளிதுமளியுடன் ஒரு அணி உள்ளே நுழைய, வீட்டிற்குள் இருக்கும் அந்த டூ இடியட்ஸ் கூட்டனியோ தங்கள் மொக்கை பிளானை எக்சிகுயூட் செய்ய தக்க பிராப்பர்டிஸோடு தயாராகி இருந்தனர். இதில் வெற்றி யாருக்கு என சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.
     காதல் மயக்கத்தில் நல்ல உண்ட மயக்கமும் சேர கவுந்தடித்து தூங்கியபடி சொர்கத்துக்கு டிராவல் செய்துக் கொண்டிருந்தான் நம் ஹீரோ. முதலில் இந்த வீட்டில் கவுக்க வேண்டிய விக்கெட் அவன்தான் என தெரிந்ததில் அந்த அறையை தேர்வு செய்து வந்திருந்தான் மாதவன்.
     சித்துவை ஆஃப் செய்ய தன் முதுகிற்கு பின்னால் ஒளித்து வைத்திருந்த தன் பிராப்பர்ட்டியை எடுத்து பார்த்து எச்சிலை முழுங்கி வைத்தான்‌.
     “மச்சான் ரொம்ப யோசிக்காதடா ம்ம் ஆரம்பி” இதில் ஹஸ்கி வாய்ஸில் சங்கர் வேறு ஏத்தி விட
     ‘அப்பனே முருகா ஈஸ்வரா இந்த வேலைய சக்சஸ் பண்ணிவிடுப்பா’ ஊரில் தூங்கியிருந்த தெய்வத்தை எல்லாம் அழைத்து தன் கையை பார்த்தான். அதில் இருந்தது ஒரு சிறிய கர்ச்சீப்.
     இந்த இரண்டு பேரின் மூளைக்கும் தோன்றிய பிளான் வேற ஒன்னும் இல்லை மயக்கமருந்து தெளித்த கர்ச்சீப் தான். எல்லாம் பல நூறு படங்களை பார்த்து வைத்ததில் வந்த ஐடியாதான் இதுவே. ரொம்ப மொக்கையாக இருந்தாலும் இந்த இருவரின் மூளைக்கு இந்த பிளான் வந்ததே உலக அதிசயம் எனும் போது சொல்லுவதற்கு ஒன்னும் இல்லை.
     சரி வேலையை ஆரம்பிப்போம் என நாலு அடி தள்ளி நின்றுபடி அந்த கர்சீப்பை சித்துவின் முகத்தில் வைத்து அமுக்கி நசக்கு நசக்கு என அவன் முகத்தில் நாலு வாட்டி தேய்த்து வேறு எடுத்தான் மாதவன்.
     ஆனால் சித்துவோ “ஆஹா ம்ம்ம்…” என தூக்கத்திலே மூச்சை இழுத்துவிட்டு சினுங்கி, அவன் எதிர்பார்த்ததிற்கு மாறாக வேற ரியாக்ஷன்னை தர மாதவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவர்கள் செய்த வேலையில் அவன் தூக்கத்திலிருந்து எழுவது போல் தெரிய, இதற்குமேல் இருப்பது ஆபத்து என பயந்து இருவரும் தங்கள் அறைக்கே மீண்டும் ஓடிவிட்டனர்.
     “என்னடா அவன் மயங்கவே இல்ல. என்ன எழவடா வாங்கிட்டு வந்த கடையில சரியாத்தான குடுத்தான்” பதற்றத்தில் மாதவன் கத்தினான்.
     “மச்சான் நான் சரியா தான்டா வாங்கிட்டு வந்தேன். ஒரு தடவைக்கு நாலு தடவை கேட்டு பாத்துதான் வாங்குனேன். ஒருவேளை அந்த கடக்காரன் எதும் ஏமாத்தி இருப்பானோ” சங்கர் தன் போக்கில் சொல்லி நிறுத்த,
     “என்னத்த சரியா வாங்கிட்டு வந்தியோ” என திட்டிய படி மாதவன் அந்த கரசீப்பை மோந்து பார்க்க அவன் உபயோகப்படுத்தும் பெர்ஃப்யூமின் வாசனை அமோகமாக அதில் வந்தது.
     அதில் குழம்பிய மாதவன் திரும்பி மேசையை பார்த்தான். அங்கே அவன் பயன்படுத்தும் பெர்ஃப்யூம் பாட்டில் பல் இளித்தபடி இருந்தது. அங்கே அந்த பெர்ஃப்யூம் பாட்டிலை தவிர வேறெதுவும் இல்லாமல் இருக்க, குழம்பிப்போய் கீழே இருந்த டிராகளை திறந்து பார்த்தான் மாதவன். அவர்கள் வாங்கிய மயக்கமருந்து ஸ்ப்ரே அதில் பத்திரமாக தூங்கிக் கொண்டிருந்தது‌.
     பதற்றத்தில் அந்த அரை போதை ஆசாமி மயக்கமருந்து ஸ்ப்ரேவுக்கு பதில் சென்டை அடித்து வைத்திருக்கிறது என கால தாமதமாக அப்போதுதான் புரிந்து கொண்ட மாதவன்
     ‘ஐயோ ராமா! ஒரு மொக்க பிளானு இதக்கூட சரியா செய்ய துப்பில்லாத ஒரு கூமுட்டைய வச்சுகிட்டு இன்னைக்கு ராத்திரிய நான் எப்படி கடத்த போறனோ’ என மனதிற்குள் அழுது வெளியே தலையில் கையை வைத்து அமர்ந்து விட்டான்.
     “டேய் மாதவா என்னடா உக்காந்துட்ட, அந்த கடை மருந்து சரியில்லை போல வேற கடைக்கு போய் மருந்து வாங்கிட்டு வந்து வேலைய ஆரம்பிப்போம் வாடா. நேரமாகுது பாரு” என்று வேற கூப்பிட ரத்தக்கண்ணீரே வந்துவிட்டது மாதவனுக்கு‌.
     “சங்கரு ராசா என் உசுரு ஏற்கனவே இப்பவோ அப்பவோனு ஊசலாடிட்டு இருக்கு. அதை நீ மொத்தமா முடிச்சு விட்டுட்டு போயிடாதடா”
     சங்கரிடன் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சியேவிட்டான் மாதவன். ஆனால் பார்த்திருந்த நம் அரைவேக்காடு சங்கருக்கு ஒன்னும் புரியாமல் போக தலையை செறிந்தபடி நின்றான்.
     ‘இதுக்கு மேல இவனை நம்புனா வேலைக்கு ஆவாது. நேரத்தை கடத்தாம நாமலே வேலைய பாப்போம்’ என முடிவெடுத்து அந்த மயக்கமருந்து பாட்டிலையே தூக்கி சித்துவின் அறைக்கு சென்று சேர்ந்தான் மாதவன். அதேப்போல் வெற்றிகரமாக அவன் முகத்தில் அந்த ஸ்ப்ரேயை அடித்து அவனை மயங்க செய்து, வீட்டிலிருந்த மற்றவர்களையும் மயங்க செய்தான் கடைசியாக.
     “அப்பாடா ஒரு வழியா எல்லாரு மயங்கிட்டாங்க. மச்சான் எல்லாம் சரி இப்ப இவங்க எல்லாரையும் பொம்மை சொன்ன எடத்துக்கு எப்புடிடா கூட்டிட்டு போறது”
     “வேற எப்புடி எல்லாரையும் எங்க கார்லையே தூக்கிப் போட்டுட்டு போவ வேண்டியதுதா…”
     சங்கரின் கேள்விக்கு பதில் சொல்லும் போதுதான் மாதவனின் மண்டையில் காலையில் அவன் தந்தை அவர்கள் காரை சர்வீசுக்கு அனுப்பிய நினைவு உதயமாக அவன் பேச்சு அப்படியே நின்றது.
     பொம்மை வேறு அவன் குடும்பத்தில் இருக்கும் நண்டு நத்தை முதற்கொண்டு அனைவரையும் அள்ளிப்போட்டு வர சொல்லியிருக்க ‘இப்ப என்னடா செய்யிறது?’ என்றாகிவிட்டது மாதவனுக்கு.
     ‘ஒரு மனுஷனுக்கு ஒருதடவை கண்டம் வந்தால் பரவால்ல. ஒவ்வொரு தடவையும் கண்டாமா வந்தா எப்புட்ரா’ மீண்டும் மாதவனின் மைன்ட் வாய்ஸ் இது.
     மயக்கமருந்தின் இபெக்ட் இன்னும் இரண்டு மணி நேரமே தாக்குப்பிடிக்கும் என்பது வேறு தக்க சமயத்தில் ஞயாபகம் வந்து மாதவனின் வயிற்றில் புளியை கரைத்தது.
     “ஐய்யோ அம்மா என்ன விட்டுரு”
     “இனி இந்த பக்கமே நான் வரமாட்டேன்”
     “ஐயோ யாராவது என்ன காப்பாத்துங்களே!”
     என அந்த நேரம் பல அகோர குரல்கள் மாதவனுக்கும் சங்கருக்கும் கேட்க அடித்து பிடித்து எழுந்து சத்தம் வந்த திசைக்கு சென்று பார்த்தனர். அங்கே சில தடியன்கள் பிளஸ் கேசவன் அவரின் கணக்கு என மொத்தம் பன்னிரண்டு பேர் பலத்த அடியுடன் தரையில் கிடக்க, இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
     வீரவசனம் பேசிவந்த நம் கேசவன் இப்படி தரையில் செத்த தவளை போல் கிடக்க காரணம் என்னவென சில மணித்துளிகள் முன்னே சென்று பார்ப்போமா மக்களே!
     இங்கே வீட்டினுள் கேசவன் காலை வைக்கும் நேரம் ஊரின் கடைக்கோடியில் இருந்த பொம்மைக்கு டிரிங் என காலிங்பெல் அடித்ததைப்போல் உள்ளே வந்தவர்கள் தெரிந்துவிட்டனர். இப்படி அத்துமீறி தன் வீட்டிற்கு வருவோரை சும்மா அனுப்பும் வழக்கம் நம் பொம்மைக்கு இல்லையே. எனவே அதுவும் தன் வேலை ஆரம்பித்தது.
     வீட்டின் பின்கதவை ஒட்டியே சமையல் அறை இருக்க, முதல் ஆயுதமாக அங்கிருந்து சப்பாத்தி கட்டை ஒன்று பறந்து வந்து டங்கென ஒரு தடியனின் தலையை பதம் பார்க்க, விளையாட்டு அமோகமாக ஆரம்பமாகியது.
     அதில் பின்னால் இருந்தவர்கள் பதறி அங்கிருந்து போகிறோம் என அலற, “அதெல்லாம் முடியாது எல்லாரும் ஒன்னாத்தான் போவனும்” என அலறிய குரல்களை கண்டுக்கொள்ளாது அலேக்காக உள்ளே தள்ளி சென்றார் நம் கேசவன்.
     அப்படி உள்ளே வந்தவர்கள் முன்னே சடாரென புகை போன்ற ஒரு கரிய உருவம் வந்து குதிக்க, “ஆஆஆ…..” என அலறியபடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் ஓடிவிட்டனர்.
     ஏன் இவ்வளவு நேரம் தைரியமாக வந்திருந்த நம் கேசவனே பயத்தில் உயிரே போவதைப் போல் அலறியடித்து ஓடிவிட்டார். ஆனால் என்ன செய்ய காலம் கடந்துவிட்டதே! நம் பொம்மைக்கு உள்ளே வந்தவர்களை அப்படியே வெளியே அனுப்பும் பழக்கம் என்றுமே இல்லை எனும்போது அவர்கள் தலை எழுத்தை யாரால்தான் மாற்ற முடியும்!
-ரகசியம் தொடரும்