அத்தியாயம் 41

பரிதி திலீப்பிடம், மருது மாமா வீட்டுக்கு போங்க. அங்க தான்ரம்யா இருப்பா என்றார். திலீப் காரை நிறுத்த அனைவரும் இறங்கினார்கள்.

கீர்த்தனா தான் முதலில் உள்ளே சென்றாள். அவளை பார்த்து துளசி அம்மா அவளை வரவேற்றார்.

ஆன்ட்டி, “ரம்யா இப்ப நல்லா இருக்காலா?” என்று கீர்த்தனா கேட்டுக் கொண்டிருக்க எல்லாரும் உள்ளே வந்தனர்.

“என்னம்மா சொல்ற? ரம்யாவுக்கு என்ன?” அவள் அத்தை பதற, அவள் மாமா அறையிலிருந்து ஓடி வந்தார்.

பரிதி, “என் பிள்ளைக்கு என்னாச்சு? என்ன?” அவரும் பதறினார்.

“அவ இங்க இல்லையா?” அன்னம் கேட்க, இல்லை. முதல்ல என்னன்னு சொல்லுங்க என அவர் பதட்டமாக கேட்டார்.

துளசி அவள் அறையிலிருந்து வெளியே வந்து, அவளுக்கு காய்ச்சல். மாமா அவளுக்காக விடுப்பு எடுத்தார். ஆனால் அவள் அதை கொஞ்சமும் மதிக்கலை. வீட்டினுள் கதவை பூட்டிட்டு இருக்காலாம். வெளிய வருவான்னு அவர் காத்துட்டு இருந்தார். நான் தான் அவரை சமாதானப்படுத்தி வேலைக்கு அனுப்பினேன். நானும் கூப்பிட்டு பார்த்தேன். அவள் கதவை திறக்கலை. நல்லா தூங்குறா போல..என்று நடந்த ஏதும் அறியாத துளசி சாதாரணமாக சொன்னாள்.

“பூட்டிட்டு உள்ள இருக்காலா?” உனக்கு தெரிந்தும் நீ எங்களிடம் சொல்லலை என்று துளசி அம்மா அவளை திட்ட, “அது என்ன அவளுக்குன்னா மட்டும் இப்படி துடிக்கிறீங்க?” என கோபமாக துளசி கேட்க,

அடியேய், “என்ன பண்ணி இருக்க தெரியுமா?” என்று அன்னம் சத்தமிட்டார்.

அன்னம்மா, வா..நாம முதல்ல பிள்ளைய பார்க்கலாம் என்று பரிதி சொல்ல, ரம்யாவின் மாமா வெளியே சென்றார்

அப்பா..போகாதீங்க. “எனக்கு உடல்நலமில்லாத போது என்றாவது என்னை கவனித்து இருக்கீங்களா?” துளசி கத்தினாள்.

கீர்த்தனா கோபமாக, “என்ன பேசுறீங்க?” அவளுக்கு நேற்று எவ்வளவு காய்ச்சலாக இருந்தது. சரியான பின் அவளை அம்மா போக சொன்னாங்க. அவ கேக்கலை. உங்க அப்பா உங்களை கவனிக்கலைன்னா அம்மா உங்களை பார்த்துப்பாங்க.

“அவளுக்கு என்ன அம்மாவா இருக்காங்க? இப்படி அவளை தனியா விட்ருக்கீங்க?” என சினமான கீர்த்தனா, மாமா..வாங்க. காரை எடுங்க. அவளை பார்க்கணும் என்றாள் கண்ணீருடன்.

“இவ பெரிய இவ. அவளுக்காக இவ வக்காளத்து வாங்குறாளாம்” என்று துளசி சொல்ல,

மகிழன் கோபமாக, ச்சீ..அவ உன்னை அண்ணின்னு நினைக்கலை. அம்மாவை போல தான் பார்த்தாள். உனக்கும் அவ அண்ணனுக்கும் எப்படி திருமணம் செய்து வைக்கலாம்ன்னு எண்ணிட்டு இருக்கா? ச்சீ..நீ இப்படி பேசுற என்று உங்க பொண்ணை நல்லா வளர்த்திருக்கீங்க என்று மகிழன் துளசி பெற்றோரை பார்த்து விட்டு திலீப்பை பார்த்து, அவளை பார்த்து ஹாஸ்பிட்டல்ல சேருங்க.

“எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்று மகிழன் நகர, மகிழ், வேண்டாம் என்று பரிதி அவனை நிறுத்த, “என்ன பெரியப்பா?” இவ சொன்னான்னு மருதண்ணா எப்படி அவளை இந்த நிலையில தனியா விட்டு போகலாம் என்று சீறினான்.

அங்கே சோர்வுடன் மெதுவாக நடந்து வந்த ரம்யா அனைத்தையும் கேட்டு கண்ணீருடன் நின்றாள். “துளசி, மகிழன் சத்தம் தான் தெரு முனை வரை கேட்டிருக்குமே”!

“பாப்பா” என்று துளசி அப்பா அவளிடம் செல்ல, வெளியே வந்த துளசி மகிழனை பார்த்து, இவ இருக்கிறதால தான் என்னை மாமா கட்டிக்க மாட்டேங்கிறார் என்று சொல்ல, அவள் கன்னத்தில் பளாரென அறைந்தார் துளசி அம்மா.

நீ எங்க பொண்ணு தான். அவளையும் நாங்க அப்படி தான் பாக்குறோம். “என்னடி பேசுற? உன் மாமன் ஒத்துக்கலைன்னா அவ என்ன செய்வா? அவரை சரி செய்றதை விட்டு இந்த பிள்ளைய சொல்லீட்டு இருக்க?” அவள் அம்மா கோபமாக சத்தமிட்டார்.

இல்ல, இவளால தான் எல்லாமே! இவளால் தான் அத்தையும், மாமாவும் செத்தாங்க. இவ நம்ம வீட்டுக்கு வந்த பின் தான் நம்ம நிலை கீழிறங்கி விட்டது. இவள் ராசியால் எல்லாரும் எல்லாத்தையும் இழந்திருவாங்க என்று துளசி பேசிக் கொண்டே செல்ல, அனைத்தையும் கேட்ட திலீப் கால்கள் துளசி பக்கம் செல்ல, அவள் கன்னம் பழுத்திருந்தது.

கீர்த்தனா அவளை அடித்திருந்தாள். எல்லாரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

“கீர்த்து” சுருதி அழைக்க, சும்மா இருங்க என்று உன்னை மாதிரி சுயநலவாதியை நான் பார்த்ததேயில்லை என்று ரம்யாவை பார்க்க, அவள் அங்கே இல்லை. எல்லாரும் துளசியை கவனித்துக் கொண்டிருக்க, அழுது கொண்டே ரம்யா ஓடி இருப்பாள்.

ரம்யா..

அப்பா..ரம்யாவை காணோம் என்று கீர்த்தனா பதற, கீர்த்து ஒன்றுமில்லை என்ற திலீப், “சுருதி இவளை பார்த்துக்கோ” என்று அவளிடம் விட்டு, அனைவரும் ரம்யாவை தேடினர். அவள் எங்கும் இல்லாது போக எல்லாரும் பதறினர்.

சீற்றமுடன் புகழேந்தி வீட்டிற்கு வந்த மகிழன், மருது வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து, அவனை இழுத்து ஓங்கி அறைந்தான். கோபத்தில் அவனும் மகிழனை அடிக்க, மகிழனுக்கு அடி பலமாக பட்டது.

மருது, “உன்னோட தங்கச்சிய காணோம்” என்று அவன் பக்கத்து வீட்டு அக்கா வந்து சொல்ல, அவன் மகிழனை பார்த்து, என்ன? “ரம்யா” என்று அவன் பதட்டமானான்.

ஆமா, அவள காணோம். அவளோட உடலுக்கு முடியல. அவளோட இருக்கிறத விட உங்களுக்கு வேலை முக்கியமா போச்சுல்ல? மகிழன் கோபமாக கேட்டான்.

இல்ல மகிழ், துளசி கூட இருக்கேன்னு சொன்னா என்று மருது சொல்ல, விரக்தியுடன் அவனை பார்த்த மகிழன், ஆமா ரொம்ப நல்லா பார்த்துகிட்டா. நல்லா பேசுறா போ..என்று வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்து விட்டு அமர்ந்தான்.

சிம்மாவிடம் பரிதி விசயத்தை சொல்ல எல்லாரும் எல்லா இடத்திலும் அவளை தேடி அலைந்தனர். ரம்யாவை காணோம் என்ற பதிலே வந்தது. எல்லாரும் கூடினர்.

ரம்யா பள்ளியில் இருந்து மருதுவுக்கு அழைப்பு வந்தது. அவள் பள்ளியில் மயங்கிட்டான்னு..

“எப்ப ஸ்கூலுக்கு போனா?” திலீப் கேட்க, வேற யாரை பார்க்க போயிருப்பா. பாருவை பார்க்க தான் போயிருப்பா. அவளுக்கு வேற யாரு இருக்கா? என்று மகிழன் சொல்ல, நட்சத்திராவிடம் பேசும் போது திலீப்பும் கேட்டிருப்பானே!

“வாங்க பள்ளிக்கு போகலாம்” என்று எல்லாரும் சென்றனர்.

பள்ளியில் ஓர் அறையில் அவளது வகுப்பாசிரியை கண்காணிப்பில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை நேரில் கண்டவுடன் தான் எல்லாரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

உள்ளே செல்ல இருந்த மருதுவை தடுத்து உள்ளே சென்ற திலீப். “கீர்த்து எடுத்துட்டு வா” என்று அவன் சொல்ல, அவள் அவனது காரிலிருந்த முதலுதவி பெட்டியை எடுத்து ஓடி வந்தாள். அதில் இருந்த அவனது மருத்துவக்கருவிகளை வைத்து ரம்யாவை பரிசோதித்து, இதை எடுத்துட்டு வா என்று ரம்யாவை துக்கினான் திலீப்.

மருது கோபமாக அவனிடம் வர, அவ உங்களை பார்த்தால் மேலும் கஷ்டப்படுவா. முதல்ல அவ சரியாகட்டும். பின் பேசிக்கோங்க என்று கீர்த்தனா, சுருதி, அன்னத்தை மட்டும் அழைத்து அவளுடன் அவர்களையும் காரில் ஏற்றினாள்.

அவன் குனிந்து ரம்யாவை காரினுள் போட, மெதுவாக கண்ணை திறந்த ரம்யா, திலீப்..பயமா இருக்கு என்று அவன் சட்டை காலரை இறுக பற்றினாள்.

ரம்யா, இங்க பாரு. மாமா..காரை எடுக்கட்டும். நீ ரொம்ப வீக்கா இருக்க கீர்த்தனா சொல்ல, அவளை பார்த்து அவனை விட்டு கீர்த்தனா கையை இறுக பற்றினாள் ரம்யா.

“நீ கண்ணை மூடு” திலீப் சொல்ல, “மாட்டேன்” என்று தலையசைத்து அவள் அவனை பார்க்க, அவன் காரை எடுத்தான். கீர்த்தனா அருகே சாய்ந்து படுத்திருந்த ரம்யா மெதுவாக எழுந்து, எனக்கு காய்ச்சல் குறைஞ்சிருச்சு என்று கீர்த்தனாவை அணைத்தாள். அவள் உடல் குலுங்குவதை பார்த்து, அவள் அழுகிறாள் என்று காரில் இருந்தவர்களுக்கு தெரிந்தது.

சுருதி அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒன்றுமில்லைடா. அவ கோபத்துல்ல பேசிட்டா அன்னம் ஆறுதலாக பேச, அம்மா..அவளுக்கு பெரியதாக காய்ச்சல் இல்லை. இப்ப ஓ.கே தான். ஆனால் டிப்ரசன்ல்ல தான் மயங்கி இருக்கா. மாத்திரைய வாங்கி சரியா போட சொல்லுங்க. வீட்ல இறக்கி விட்றலாம். அவ ஓய்வெடுக்கட்டும் என்றான் திலீப்.

“என்னது? மறுபடியும் வீட்லயா?” கீர்த்து கேட்க, அப்புறம் அவ வீட்ல தான் அவ இருக்கணும் என்று வீட்டின் முன் காரை நிறுத்தி, “சாப்பிட்டியா?” எனக் கேட்டான். அவள் அமைதியாக இருந்தாள்.

நீங்க இருங்க. நான் சாப்பாடும் மாத்திரையும் வாங்கிட்டு வாரேன் என்று திலீப் அருகே இருந்த மெடிக்கலில் வாங்கி விட்டு சாப்பாட்டை வாங்கி வீட்டிற்கு வந்தான்.

அங்கே துளசி அம்மா, அப்பா, மருது ரம்யாவிடம் பேச, அவள் ஏதும் பேசாமலே இருந்தாள். மாமா..என திலீப்பை கீர்த்தனாவும் சுருதியும் ஒன்றாக அழைத்தனர்.

ரம்யா அவனை பார்க்க, எல்லாரும் அவனை தான் பார்த்தனர்.

இந்தா..இட்லி இருக்கு. சாப்பிட்டு மாத்திரைய போட்டு கண்டதையும் யோசிக்காம ஓய்வெடு. இல்லை மயக்கம் அடிக்கடி வர தான் செய்யும் என்று அன்னத்தை பார்த்தான் திலீப். அவள் அமைதியாக வாங்கிக் கொண்டாள்.

மீண்டும் துளசி அம்மா அவளிடம் பேச, “நான் பேசலாமா?” என கேட்டாள் ரம்யா.

“என்னடா வேணும்?” மாமாகிட்ட சொல்லு. நான் வாங்கித் தாரேன் என்றவரை ஆழ்ந்து பார்த்த ரம்யா, எனக்கு நான் படிக்கும் பள்ளி விடுதியில் சேரணும் என்றாள். அனைவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.

ரம்யா, உனக்கு எல்லாரும் இருக்காங்க. “நீ எதுக்கு?” கீர்த்தனா கேட்க, “ப்ளீஸ் கீர்த்து” என்று சோர்வுடன் எல்லார் கையிலிருந்த அலைபேசியை பார்த்து விட்டு, சுருதியிடம் கேட்டாள். அவள் யோசனையுடன் அலைபேசியை கொடுக்க, உங்க சம்பந்தபட்டவங்களுக்கு நான் கால் பண்ணல. பயப்படாதீங்க என்ற ரம்யா எண்ணை அழுத்தினாள். துளசி அலைபேசியை எடுத்தாள்.

உங்ககிட்ட சாரி கேட்டுக்கிறேன். நான் இனி உங்களுக்கும் உங்க மாமாவுக்கும் தொந்தரவாக இருக்க மாட்டேன் என்று துளசியிடம் கூறிக் கொண்டே தன் அண்ணன் மருதுவை பார்த்து விட்டு, “ஹாப்பியா கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று அலைபேசியை வைத்து விட்டாள் ரம்யா.

பாப்பு, “என்ன பேசுற?” மருது அவளருகே கண்ணீருடன் வர, யாரும் என் பக்கத்துல வராதீங்க. எனக்கு புழுக்கமா இருக்கு என்று எழுந்து திலீப் வாங்கி வந்த சாப்பாட்டை பிரித்து உண்ணத் தொடங்கினாள்.

கீர்த்தனா அவளருகே அமர்ந்திருக்க, மகிழன் மெதுவாக அவளிடம் வந்து..”நீ என்ன சொன்ன? புரிஞ்சு தான் சொல்றீயா?” மருதண்ணா..உன்னோட சொந்த அண்ணன் என்றான்.

அவனை பார்த்த ரம்யா, “பிக் சீனியர்” எனக்கு உங்க உதவி வேணும். நாம நிறைய சண்டை போட்டிருக்கோம். எனக்காக நீ பேசியது ரொம்ப சந்தோசமாக என்று அவன் உதட்டில் காயத்தை பார்த்து அவனது உதட்டை தொட வந்தாள். அவள் கையை பிடித்த மகிழன், “என்ன உதவின்னு மட்டும் சொல்லு?” என்று கேட்டான்.

இப்ப யாரும் இங்க இருக்க வேண்டாம். நான் பள்ளி விடுதிக்கு செல்லும் வரை நான் இந்த வீட்லயே இருந்துக்கிறேன்.

அதுவரை நான் யாரையும் பார்க்க வேண்டாம். அப்புறம் என்று தயங்கி திலீப்பை பார்த்து விட்டு, நீங்க நீட் எழுத படித்த எல்லா புத்தகமும் தருவீங்களா ப்ளீஸ் என்றாள்.

“இவ்வளவு தான?” எல்லாமே இருக்கு. எடுத்துட்டு வாரேன் என்றான் மகிழன்.

அப்புறம், நான்..இப்ப தூங்கவா? என்று எல்லாரையும் பார்த்தாள். அனைவரும் வெளியே வந்தனர்.

ஏம்ப்பா, பிள்ளைக்கு காய்ச்சல் தெரியல. ஆனாலும் சோர்வா இருக்கா? பரிதி கேட்டார்.

அங்கிள் அவ மனசு தான் வீக்கா இருக்கு. “இந்த நேரம் தனியா இருந்தான்னா இன்னும் கஷ்டப்படுவா?” ஆனால் இவ இவங்க யாரை பார்த்தாலும் அவளுக்கு மன அழுத்தம் அதிகமாக வாய்ப்பிருக்கு. அதனால..நீங்க யாராவது அவள் தூங்கி எழும் வரை இருக்கணும். உதவிக்காக நான் இங்கே இருந்தாலும் அதை தான் இந்த ஊர்ல தப்பா பேசுவாங்களே! என்று மருதுவை பார்த்து விட்டு, திலீப் பரிதியை பார்த்தான்.

“என்ன மாமா? தப்பா பேசுவாங்கல்லா? என்ன சொல்ற?” சுருதி கேட்க, அதை விடு சுருதி. நாம மாலை நம்ம ஊருக்கு கிளம்பணும். தயாரா இருங்க என்று திலீப் சொல்ல, “மாமா” ரம்யா என்று கீர்த்தனா அவனை பார்க்க, விக்ரம் மச்சான் நீ இல்லாமல் போனால் கோபப்படுவார்ம்மா. நீயும் வர்ற. வேணும்ன்னா மூன்று மணிவரை இங்கே இருந்துட்டு வா. மாமா நான் சொல்றது சரி தான? திலீப் சுருதி அப்பாவை பார்க்க, “சரி தான் மாப்பிள்ள” என்று அவர் மகிழனை பார்த்தார்.

சுருதி அப்பா திலீப்பை மாப்பிள்ளை என்றதும் மகிழன் முகமோ வேறானது. சுருதியும் அவனை பார்க்க, நாம எடுத்து வைக்கணும் என்று திலீப் சொல்ல, சரி மாமா என்று சுருதி மகிழனை பார்த்துக் கொண்டே திலீப் காரில் ஏறினாள்.

மூவரும் கிளம்ப, திலீப்..இவங்களையும் வீட்ல விட்ருங்க என்று சிம்மா சொல்ல, அன்னம் பரிதியும் அவனுடன் காரில் ஏறிச் சென்றனர்.

துளசி பெற்றோர் செய்வதறியாது திண்ணையில் அமர்ந்திருக்க, மருதுவிடம் வந்த சிம்மா..அவனருகே அமர்ந்து, “திலீப்பிற்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?” என்று கேட்டான்.

மருது அமைதியாக இருந்தான்.

மருதுவின் அமைதியை பார்த்து, இவன் தான் ஏதோ அவசரப்பட்டு இருக்கான் என சிம்மா புரிந்து கொண்டு, திலீப் குடும்பத்தில்லே அவனும் மற்றவனும் தான் அதிகமா பேச மாட்டாங்க. இவன் கோபப்படும் அளவு நீங்க தான் ஏதோ செஞ்சுருக்கீங்கன்னு தெரியுது. அவன் ஒரு மருத்துவர். அதை தாண்டி அவனுக்கு ஏதாவது தோன்றினால் அவன் நேராகவே பேசி விடுவான் என்று மருதுவை பார்த்தான்.

“என்னப்பா சொல்ற?” துளசி அப்பா கேட்க, ம்ம்..திலீப் பற்றி எனக்கு முழுதாக தெரியாது. ஆனால் அவன் குடும்பத்தினருக்கு நன்றாக அவனை தெரியும்.

சுருதியும் அவள் அப்பாவும் பேசியதை கேட்டேன். திலீப்புக்கு அவனை அறியாமலே நம்ம ரம்யாவை பிடிச்சிருக்கு. அவன் தங்கை போல நினைப்பதாக எண்ணி பழகிட்டு இருக்கான் என்று சிம்மா மருதுவை பார்த்து, “இப்படி தான் பேசுனீங்களோ?” எனக் கேட்டான்.

ம்ம்..என்றான் மருது.

சிம்மா புன்னகையுடன், அவனே காதல் தோல்வியில் இருக்கான். ரம்யா அவன் மனசுல்ல வந்துட்டான்னு அவனுக்கே தெரியாது. நீங்க வேற சேர்த்து பேசீட்டீங்களா? அதான் டாக்டர் சாருக்கு கோபம் வந்துருச்சு போல என்று சிரித்தான் சிம்மா.

“காதல் தோல்வியா?” மருது கேட்க, ஆமாப்பா..யாரு அந்த பொண்ணுன்னு தெரியும்மாண்ணா. “என்னோட தங்கச்சி ரித்திகா தான்” என்றான் சிம்மா.

“என்ன?” துளசி அம்மா கேட்க, ஆமா..யாரிடமும் காட்டிக்காதீங்க. ரித்து இனியாவது சந்தோசமா இருக்கணும். நீங்க ரம்யா, துளசி விசயத்துல்ல பெரிய தப்பு பண்ணீட்டீங்க. இருவரும் மாற வாய்ப்பில்லை. ரம்யாவிற்கு அவன் அண்ணன் உடன் இருந்ததில்லை. துளசிக்கு அவள் அப்பா உடன் இருந்ததில்லை. ஆனால் இப்ப துளசி மருதண்ணாவையும் விட்டு இருக்க மாட்டா. அதே நேரம் துளசி பேசியதை கேட்ட ரம்யாவால் உங்க யாருடனும் சந்தோசமா இருக்க முடியாது என்றான் சிம்மா.

அப்படி சொல்லாத சிம்மா. “என்னால எப்படி ரம்யாவை விட்டு இருக்க முடியும்?” மருது கேட்க, “இதுக்கு முன்னாடி எப்படி இருந்தீங்க?” அதே போல் இருங்க என்றான் சிம்மா கோபமாக.

சிம்மா..மருது பதற, ஆமா..இரவு தூங்கும் போது மட்டும் தான உடன் இருந்தீங்க. மற்ற நேரம் முழுவதும் அவ துளசி அப்பாவுடன் தான இருந்தாள். அவள் அங்கேயே இருக்க அது துளசிக்கு பிடிக்கலை என்றான் சிம்மா.

“துளசி என்ன பேசுனா?” மருது கேட்க, துளசி பெற்றோர் அவனை சிரமத்துடன் பார்த்தனர்.

“சொல்லுங்க?” கோபமாக கேட்டான் மருது.

அதெல்லாம் ஒன்றுமில்லை. இருவரையும் எந்த குறையும் சொல்ல முடியாது. உங்க இருவர் மீது தான் தவறு என்று மருது, துளசி அப்பாவை பார்த்தான் சிம்மா.

“இப்ப என்ன தான் பண்றது?” துளசி அப்பா கேட்க, அதை திலீப் தான் சொல்லணும்.

“அ.. அவர் எதுக்கு சொல்லணும்?” மருது கேட்க, ரம்யா மனஅழுத்தத்தால் மயங்கியதாக அவர் தான சொன்னார்.

ம்ம். “அவரால் இதை சரி செய்ய முடியுமா?” மருது கேட்க, “உங்க பிரச்சனையை அவர் எப்படி சரி செய்வார்?” அவரால் விட அவள் அண்ணனால் முடியும்ன்னு நினைக்கிறேன் என்றான் சிம்மா.

“அண்ணனா?” ம்ம்..மனநல மருத்துவர்..

என்னது? பைத்தியங்களுக்கு பார்ப்பவரா?” என்று மருது கேட்க, மனநல பிரச்சனை இருக்கிற எல்லாரும் பைத்தியம்ன்னா உங்க தங்கச்சிய என்ன சொல்றது? சிம்மா சினமுடன் கேட்டான். அனைவரும் அமைதியாக இருந்தனர்.

முதல்ல திலீப் ஏதாவது செய்றாரான்னு பார்க்கலாம். திலீப் அண்ணன் நல்ல பழக்கம் தான் பார்க்கலாம் என்றான் சிம்மா.

ஏப்பா சிம்மா, “காதலித்த உன்னோட தங்கையை அதுக்குள்ள மறந்து எப்படி நம்ம ரம்யாவை நினைப்பார்?” துளசி அம்மா கேட்க, இன்று மாலை கிளம்பணும்ன்னு சொன்னார்ல்ல. நான் எண்ணுவது உண்மையானால் அவர் இன்று கிளம்பமாட்டார். இன்னும் சற்று நேரத்திலே இங்கே இருப்பார்.

“அவர் தான் கிளம்பிட்டாரே!”

காத்திருங்கள். பார்க்கலாம்.

சிம்மா, “அவர் குடும்பம் எப்படி? எல்லாரும் நல்லா பழகுவாங்களா?” என துளசி அப்பா கேட்க, “எதுக்கு? இப்பவே ரம்யாவை அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்ன்னு நினைக்கிறீங்களா?” சிம்மா கேட்க, மருது முறைத்தான்.

“என்ன அண்ணா முறைக்கிறீங்க?” இப்ப மட்டும் ரம்யா காலேஜ் போயிட்டு இருந்தா அவருக்கு உடனே கல்யாணம் பண்ணிக் கொடுத்திடலாம். அவரும், அவங்க குடும்பமும் நல்லா பார்த்துப்பாங்க என்றான் சிம்மா.

அவர்கிட்ட ரம்யாவை அவர் காதலிப்பதாக ஏதும் பேசிடாதீங்க. அவர் எப்ப உணருகிறாரோ அப்ப பார்த்துக்கலாம்.

“இவ்வளவு உறுதியா சொல்ற சிம்மா” துளசி அப்பா கேட்க, ம்ம்..ஏன்னா அவர் ரித்துவை காதலிக்கவில்லை. அவர் இருநாட்களுக்கு முன் தான் அவளை பார்க்கவே செய்தார். ஜஸ்ட் ஈர்ப்பு தான் என்றான்.

“இருநாளில் காதலா?” இல்லைன்னு சொல்ற சிம்மா. ஒன்றுமே புரியல என்றார் துளசி அம்மா.

கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. அவர் வருகிறாரான்னு பார்க்கலாம் என்றான் சிம்மா.

காரில் சென்று கொண்டிருந்த திலீப்பிற்கு ரம்யாவின் களைத்து சோர்ந்த முகம் இம்சித்தது. அந்த பொண்ணு..நல்லா இருந்த போது எனக்கு ஒன்றுமே தெரியல. எனக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே என்று சிந்தனையுடன் காரை செலுத்தினான். எல்லார் கவனமும் அவன் மீது தான் இருந்தது.

மாப்பிள்ள, “என்னாச்சு?” சுருதி அப்பா கேட்க, மாமா..எனக்கு ஏதோ மாதிரி தோணுது. எனக்கு சரியா தெரியல என்றான் அவன்.

அப்பா, “நான் சொன்னேன்ல்ல” சுருதி சொல்ல, “என்னம்மா?” என்று அன்னம் கேட்டார்.

அவர் காதில் அவள் விசயத்தை சொல்ல, “ஓ..அப்படியா?” எனக்கும் தோணுச்சு என்றார் பரிதி.

“என்ன தோணுச்சு அங்கிள்?” திலீப் கேட்க, இல்லப்பா..ரம்யா தான். அவ எப்படி விடுதியில இருப்பா. அவ மாமாவை பார்க்காம இருக்கவே மாட்டாளே! அதான் திருமணம் ஏதாவது செய்து வைத்து விட்டால் அவ மாமா கூடவே இருப்பால்ல என்றார் பரிதி.

காரை சாரேலென நிறுத்திய திலீப், “அவராலும் அவளோட அண்ணாவாலையும் தான் இந்த பிரச்சனை? இதுல கல்யாணம் வேறயா? அதுவும் அவள் பள்ளி கூட முடிக்கலை என திலீப் கேட்க, “இதை கேட்க காரை நிறுத்தணுமா மாமா?” சுருதி கேட்க, இல்ல..என்று யோசனையுடன் காரை எடுத்தான். ஆனால் மீண்டும் ரம்யா பற்றிய சிந்தனையே அவனுக்கு எழுந்தது.

ஓ..மை காட். “இந்த பிரச்சனையை முடிக்கலைன்னா என் தலையே வெடிச்சிடும் போலவே?” திலீப் சொல்ல, “பிரச்சனையா?” கீர்த்தனா கேட்க, “அதான் ரம்யாவை என்ன செய்றதுன்னு தான்” என்றான் திலீப்.

அவள அவ மாமாவும் அண்ணாவும் தான் சமாதானப்படுத்தி அவங்களோட வச்சுக்கணும் என்றாள் கீர்த்தனா.

கீர்த்து, “அப்படி நடந்தால் அந்த துளசியால ரம்யா கஷ்டப்படுவாளே!” திலீப் கேட்க, மாமா..”என்ன சொன்னீங்க?” கீர்த்தனாவிற்கும் புரியத் தொடங்கியது.

“கஷ்டப்படுவால்ல?” அதான் சொன்னேன் என்று காரை அன்னம் வீட்டின் முன் நிறுத்தினான். அனைவரும் இறங்க.. திலீப் இறங்கவில்லை. அவனுக்கு ரம்யாவை பார்த்து அவளது சிரிப்பை பார்க்க அவன் மனம் அவனை அறியாமலே துடித்தது.

“மாமா” வாங்க கீர்த்தனா அழைக்க, நீ போ கீர்த்து. நான் ரம்யாவை பார்த்துட்டு வாரேன் என்று காரை எடுத்தான்.

சிம்மா மருது, அவன் மாமாவிடம் பேசி முடித்த பத்தாவது நிமிடத்தில் திலீப் அங்கே வந்தான். எல்லாரும் அவனை வியந்து பார்த்து விட்டு சிம்மாவை பார்த்தனர். அவன் ஒற்றை கண்ணடித்து புன்னகைத்தான்.

“திலீப் இப்ப தான போனீங்க? வந்துட்டீங்க?” சிம்மா அறியாதது போல் கேட்டான்.

“அவ தூங்கிட்டாளா?” என்று மருதுவை பார்த்து கேட்டான் திலீப்.

தெரியல. கதவை திறக்கலை என்றான் அவன்.

சிம்மா, நீ கூப்பிடு. கதவை திறப்பா என்று திலீப் சொல்ல, ரம்யா மருந்து சாப்பிட்டிருக்கா டாக்டர் சார். “மறந்துட்டீங்களா?” சிம்மா கேட்டான்.

ஆமால்ல..என்று சிந்தனையுடன் வீட்டின் முன் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

என்னாச்சு, “டீப் திங்க்கா இருக்கு?” சிம்மா கேலியுடன் கேட்க, இல்ல இவங்க கூட இருந்தா அதிகமா வருத்தப்படுவா. தனியா விடுதியில இருந்தா..ஊர் சுற்றி வளர்ந்த பொண்ணு. அங்கேயும் கஷ்டப்படுவா? அதான் என்ன செய்யலாம்ன்னு யோசிக்கிறேன் என்றான்.

அதுக்கு ஓர் வழி இருக்கு திலீப். அவளை இந்த ஊர் பையனுக்கு கல்யாணம் முடிச்சு வச்சுட்டா. எல்லார் பிரச்சனையும் முடிஞ்சிரும்.

“என்னது? எல்லாருமே ரம்யா கல்யாணத்தை பத்தியே பேசுறீங்க?” அவள் இன்னும் ஸ்கூல் கூட முடிக்கலை. நீங்க அவ மாமா தான. “அவளுக்கு இப்பவே திருமணம் செய்து வைக்க போறீங்களா?” என கேட்க, வாயில் கையை வைத்து திலீப்பை அசந்து பார்த்தார் துளசி அம்மா.

“பண்ணா தான சரியா இருக்கும்” என்று துளசி அப்பா ஓரக்கண்ணால் திலீப்பை பார்த்து விட்டு தரையை பார்த்து வருத்தமாக பேச, அங்கிள்..அவ படிக்கணும். அவளுக்கு டாக்டர் ஆகணும்ன்னு ஆசையாம். நீங்க கல்யாணம் செய்து வச்சால் இதெல்லாம் முடியாது என்று அவன் குரலில் பதட்டம் லேசாக தெரிந்தது. மருது அவனையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

அவளுக்கு இப்ப கல்யாணமெல்லாம் வேண்டாம். ஒன்று செய்யலாம் என்ற திலீப், “உங்களில் யாரை அவளது வகுப்பாசிரியருக்கு தெரியும்?” என அவன் கேட்க, துளசி அப்பாவை மருது பார்த்தான்.

அங்கிள், நீங்க வாங்க. நாம அவங்கள பார்க்கலாம் என்றான் திலீப்

“அவங்கள எதுக்கு பார்க்கணும்?” மருது கேட்க, ரம்யா அவள் எண்ணியது போல பள்ளி விடுதியில் படிக்கட்டும். வாரம் ஒரு முறை எல்லாரும் அவளை சென்று பார்த்துக்கோங்க என்றான்.

அதெல்லாம் சரிப்பட்டு வராது திலீப். அவளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் எல்லா பிரச்சனையும் ஓவர் என்று சிம்மா அசட்டையாக சொல்ல, திலீப் கோபமாக சத்தமிட்டான்.

சும்மா கல்யாணம் கல்யாணம்ன்னு பேசாதீங்க. நான் சொல்வது தான் அவள் படிக்க உதவியா இருக்கும்.

“வேற யாரு ரம்யா திருமணம் பற்றி பேசியது?” துளசி அம்மா கேட்க, என்னோட மாமா தான். அவ சின்னப்பொண்ணு. படிக்கணும்ன்னா படிக்க வைக்கலாமே! என்றான்.

“அதுக்கு பணம்?” என்று மருதுவை பார்த்தார் துளசி அப்பா.

அதை பற்றி எதுக்கு கவலைப்படுறீங்க. அவ ஸ்டேட்ல்ல முதலாவதாக வந்தால் நிறைய ஆட்கள் அவளுக்கு உதவ முன் வருவாங்க என்றான் அவன்.

சரிப்பா, “பள்ளி விடுதியில் சேர்க்க பணம் வேண்டுமே!” என்று துளசி அப்பா கேட்க, அது வந்து..நான் பே பண்ணிடுறேன் என்றான் திலீப். அவனது இந்த புரியாத காதல் எல்லாருக்கும் பிடித்து விட்டது.

“நானே பார்த்துக்கிறேன்” என்றான் மருது.

நோ..நான் தான் பே பண்ணுவேன். ஆனால் ரம்யாவிடம் யாரும் சொல்லக் கூடாது என்றான் திலீப்.

“ஓ கண்ணாமூச்சி ஆட்டமா?” துளசி அம்மா கேட்க, “என்னது?” திலீப் கேட்டான்.

சும்மா தான். வாங்க போகலாம் என்று துளசி அப்பா அழைக்க, மருதுவையும் துளசி அம்மாவையும் பார்த்து நீங்க வேற யாரையாவது அவளுக்கு பாதுகாப்பாக இருக்க வச்சுட்டு கிளம்புங்க. அவள் உங்களை பார்த்தால் துளசி பேசியது அவளுக்கு நினைவுக்கு வரும். மீண்டும் பழையவாறு மனஅழுத்தம் அதிகமாகிடும் என்ற அவனது அக்கறையில் எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்து மனம் வருந்தினர்.

திலீப் ரம்யா பள்ளிக்கு சென்று அவள் பெயர், விளக்கம் கொடுத்து பணம் கட்டி பில்லை அவர்களிடமே கொடுத்து விட்டு, பள்ளி வார்டனிடம் பேசி விட்டு சென்றான். துளசி அப்பாவிற்கு திலீப்பை மிகவும் பிடித்து போனது. ஆனால் வயதை பற்றி தான் சிந்தித்தார். அவரை அவர் வீட்டில் விட்டு ரம்யா வீட்டிற்கு வந்தான். அங்கே கீர்த்தனாவும் சுருதியும் இருந்தனர்.

இப்ப தான உங்கள வீட்ல விட்டு வந்தேன்.

“இப்பவா?” மாமா..மணிய பாருங்க. மதியை இரண்டாகி விட்டது கீர்த்தனா சொல்ல, மாமா கிளம்பணும். “உனக்கு நினைவிருக்குல்ல?” என்று சுருதி கேட்க, ம்ம்..என்று அவன் மட்டும் அன்னம் வீட்டிற்கு சென்றான்.

வினித் தயாராகி அஜய் வீட்டிற்கு வந்தான். பைக்கை நிறுத்தி விட்டு தியாவை பார்க்க சென்றான். அவளும் அவனை பார்த்து விட்டு கதவை பூட்டினாள்.

அஜய்யும் தனராஜூம் கார் அருகே வந்தனர்.

“தியா” வினித் அழைக்க, கிளம்பலாம்டா என்ற அவள் உடையை பார்த்து அஜய் முகம் இடுங்கியது.

“கார்ல்ல ஏறு” என்று தியா வினித்தை பார்த்து விட்டு அஜய்யை பார்த்தாள்.

மூவரும் காரில் ஏற, அஜய் நான் மாதவரம் செல்கிறேன். இனி எல்லாவற்றையும் நீங்களே பார்த்துக்கோங்க. இனி கார்ட்ஸ் உங்களுடனே வருவாங்க என்று தனராஜ் அவர் அசிஸ்டென்ட்டிற்காக காத்திருந்தார்.

அஜய் கார் வீட்டிலிருந்து கிளம்ப, கார்ட்ஸ் ஒரு காரில் அவர்கள் பாதுகாப்பிற்காக பின் தொடர்ந்தனர்.

தியா,” நான் கூறியது உனக்கு நினைவிருக்குல்ல?” வினித் கேட்க, அவளிடம் பதிலில்லை. அவளை பார்த்துக் கொண்டே வந்த அஜய் தயங்கியவாறு, “தியா நான் உனக்கு பிடித்த ஆடையை போட்டுக்கோன்னு சொன்னேனே?” எனக் கேட்டான்.

பரவாயில்லை சார், எல்லாமே நமக்கு பிடித்தது போல் அமையாதுல்ல.. என்றாள் விரக்தியாக. வினித் இருவரையும் பார்த்து விட்டு, தியா தோளில் கை வைக்க, காரை நிறுத்திய தியா..வினித் கையை தட்டி விட்டு, எதுவும் இப்ப பேச வேண்டாம் என்று கீழே இறங்கினாள்.

அஜய்யும் வினித்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இறங்கி அவள் பின் சென்றனர்.

எல்லாரும் மூவரையும் பார்த்தனர். பாஸ் இவ பின்னாடி வர்றாரு என்று பேச்சு ஒலிக்க, தியா நின்று அவள் பின் வந்த இருவரையும் முறைத்தான்.

டேய், “உன்னை தான் முறைக்கிறா?” வினித் சொல்ல, உன்னையும் தான் என்று அஜய் தியா முன் நகர்ந்து அவனறைக்கு செல்ல, தியாவும் வினித்தும் பின் உள்ளே நுழைந்தனர்.

அஜய்யை பார்த்தவுடனே தயாராக இருந்த கிருஷ்ணன் வேகமாக அஜய் அறைக்கு சென்றான்.

“எக்ஸ்யூஸ் மீ சார்” அவன் அழைக்க, “தியா அவனை கொஞ்ச நேரம் வெளியே இருக்க சொல்லு” என்று அஜய் சொல்ல, அவளும் சொல்லி விட்டு வினித் அருகே வந்து நின்றாள்.

தியா, “நாம பேசலாமா?” அஜய் கேட்க, நாம பேச எதுவும் இல்லை சார் என்றாள்.

ஆமா, நானும் பேசணும் என முந்தினான் வினித்.

இருவரும் ஒன்றாக அவனை முறைத்தனர்.

என்னோட அம்மா கோபத்துல்ல பேசி இருப்பாங்க. அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று அஜய் பேச, தேவையில்லை சார். அப்புறம் நானும் உங்களிடம் சொல்ல வேண்டியது இருக்கு. இனி என்னோட வீட்டுக்குள்ள நீங்க வரக் கூடாது. அது உங்க வீடானாலும் ஒரு பொண்ணு தனியா இருக்கும் வீட்டில் இருப்பது தவறு.

உங்க உதவிக்கு ரொம்ப நன்றி. இதுவரை நான் குடித்ததில்லை. முதல் முறை என்பதால் என்ன நடந்ததுன்னு தெரியல? கண்ணம்மா அம்மாவை எனக்கு உதவிக்கு வைத்ததற்கும் நன்றி. இனி இது போலெல்லாம் நடக்காது. சாரி சார் என்றாள்.

தியாவின் சிவப்பு சாயத்துடன் இருக்கும் இதழ்களை பார்த்தவாறு அஜய் அமர்ந்திருக்க, தியா..அஜய் அம்மா மட்டுமல்ல நம்முடன் வேலை செய்பவர்கள் கூட இது போல் பேசுவாங்க. அதையெல்லாம் நீ கடந்து தான் வரணும் என்ற வினித் தியாவை அவனை பார்த்து திருப்பினான்.

எனக்கு உன்னை நன்றாக தெரியும். இதுவரை யாரும் உன்னை எந்த குறையும் சொல்லியதில்லை. எல்லா நேரமும் ஒரே போல் அமையாது. நாம நம்ம இடத்திற்கு ஏற்றவாறு மாறிக்கணும்.

அஜய்யை உனக்கு இப்ப இல்லை முன்னிருந்தே தெரியும்ல்ல? என வினித் கேட்க, தியா அஜய்யை பார்த்து விட்டு, வினித்தை கண்கலங்க பார்த்தாள்.

தியா..இதெல்லாம் சாதாரணம். நீ அஜய்யோட எல்லாமுமா இருக்கணும். அவனுக்கு கம்பெனிக்குள்ளும் வெளியவும் நிறைய எதிரிகள் இருக்காங்க. என்னை விட நீ ஸ்மார்ட். நீ அவனுக்கு கம்பெனி விசயத்துல உறுதுணையா இருக்கணும். அவன் அம்மா, அப்பா..ஏன் அவனே என்று வினித் அஜய்யை பார்த்து விட்டு, ஏதும் சொன்னாலும் போகக் கூடாது. எனக்காக செய்வேல்ல..வினித் கேட்க, அஜய்க்கு தூக்கி வாரி போட்டது.

“உனக்காகவா? என்ன சொல்ல வர்ற? தியாவை நான் என்ன செய்யப் போகிறேன்?” அஜய் கோபமாக கத்தினான்.

அஜய், ப்ளீஸ் அமைதியா இரு என்று வினித் தியாவை பார்க்க, வினித்தை அணைத்த தியா. நீ எனக்கு கால் பண்ணுவேல்ல. எனக்கு யாருமே இல்லாதது போல இருக்குடா. நீயும் போறேன்னு சொன்னதிலிருந்து பயமா இருக்கு என அவனை அணைத்து தியா அழ, அஜய்க்கு சினம் ஏறியது.

நான் அங்கேயே இருக்கப் போறதில்லை. கண்டிப்பாக வந்துருவேன். அதுவரை நீ அஜய் அருகே தான் இருக்கணும். என்னால உன்னை வேற யாரிடமும் விட முடியலை என்றான்.

வினு, “நான் தங்க வேற இடம் மட்டும் ஏற்பாடு செய்கிறாயா?” என தியா கேட்டாள்.

நோ..தியா, நீ அஜய் வீட்டுக்குள்ள தான் இருக்கணும். அதான் பாதுகாப்பு.

இல்ல வினித், எனக்கு அப்படி தோணலை என அஜய்யை பார்த்தான்.

அஜய், “ஏதாவது செய்தானா?” வினித் கேட்க, அஜய் மனம் குறுகுறுக்க தியாவை பார்த்தான்.

இல்ல வினு, அவங்க அம்மா..தான்.

தியூ..அவங்க அப்படி தான். நீ உன்னோட லிமிட்ல்ல இருக்கிற வரை திட்ட மட்டும் தான் செய்வாங்க. அதனால் அவங்க பேசியதையே நினைச்சுட்டு இருக்காத. அவங்க அதுக்கு மேலையும் போவாங்க தான். ஆனால் உன் விசயத்துல்ல அவங்க உன்னை நெருங்க முடியாது. எல்லா ஏற்பாடும் பக்காவா முடிச்சிட்டு போறேன்.

“ஏற்பாடா?” அஜய் கேட்க, தியா..பிராமிஸ் பண்ணு என்று வினித் கையை நீட்ட, நான் பிராமிஸ்ல்லாம் செய்ய மாட்டேன். ஆனால் உனக்காக செய்வேன் என்று அஜய்யை பார்த்தாள்.

“என்னை குற்றம் சாட்டுவது போல பேசுறானுக?” என மனதினுள் அஜய் எண்ண, தியூ..நீ வெளிய இரு. நான் அஜய்யிடம் பேசணும் என்று தியாவை வெளியே அனுப்பினான் வினித். அவள் இருவரையும் பார்த்துக் கொண்டே வெளியேறினாள்.