அன்புள்ள தவறே 11

அடுத்து வந்த ஒரு வாரமும் அதன்போக்கில் கடந்து போக, தினமும் மாலை வேளையில் பவித்ராவை  மருத்துவமனையில் இருந்து விடுதிக்கு அழைத்துச் சென்று விடும் வேலையை தனதாக்கிக் கொண்டிருந்தான் வருண் ஆதித்யன்.

அரைமணி நேர பயணம், இடையிடையே கடற்கரை, இரவு உணவுக்காக வெளியே செல்வது என்று இயல்பாக கழிந்து கொண்டிருந்தது அவர்களின் நாட்கள். இடையில் மயூரி இரண்டு முறை அழைத்திருக்க, அவரது அழைப்பை இன்றுவரை ஏற்று பேசியிருக்கவில்லை பவித்ரா.

இன்னும் பதினைந்து நாட்களில் அவளது செமஸ்டர் தேர்வுகள் தொடங்க இருக்க, அதற்கும் முழுதாக தயாராக இல்லை அவள். அவளது பெரும்பாலான நேரங்கள் வருணுடன் கழிந்ததில், பாடங்கள் முடிக்காமல் பாதியிலேயே நின்றிருந்தது.

ஆனால், சரியான நேரத்தில் சுதாரித்துக் கொண்டவளாக அவள் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய நேரம் தான் மீண்டும் திருமணம் செய்து கொள்வோம் என்று வருண் ஆரம்பித்தது.

அன்று இரவு வழக்கம்போல் பவித்ராவை மருத்துவமனையிலிருந்து அழைத்துச் செல்ல வந்திருந்தான் வருண். எப்போதும் சலசலவென்று பேசியபடியே இருப்பவன், அன்று பயண நேரம் மொத்தமும் அமைதியாக இருக்க, “என்னாச்சு வருண்” என்றது பவித்ரா தான்.

அவளது கேள்வியில் அவளை ஒரு பார்வை பார்த்தவன், பதிலேதும் கூறாமல் சில காகிதங்களை காரின் டேஷ் போர்டில் இருந்து எடுத்து அவளிடம் நீட்ட, அதில் பார்வையை ஓட்டியவள் விழிகள் அதிர்ந்து பெரிதானது இப்போது.

“வருண் என்ன பண்ணி வச்சிருக்கீங்க” என்று அவள் அதிர,

“நாளைக்கு நமக்கு கல்யாணம்” என்று அமைதியாக உரைத்தான் அவன்.

“வருண் விளையாடாதீங்க. இன்னும் 15 நாள்ல எனக்கு எக்ஸாம் இருக்கு.”

“ஹே பவிம்மா.. நாம என்ன கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த போறோமா. ரெஜிஸ்டர் மேரேஜ்… ஜஸ்ட் ஒரு சைன் பண்ணிட்டு நம்ம வேலையைப் பார்க்கலாம்.” என்று வெகு சுலபமாக பேசினான் வருண்.

“இப்படியெல்லாம் உங்க இஷ்டத்துக்கு எல்லாம் பண்ண முடியாது வருண். உங்களுக்கு கல்யாணம் விளையாட்டா இருக்கா”

“நிச்சயமா இல்லடா. நான் நிறைய யோசிச்சுட்டேன். ரொம்ப தீர்க்கமா தான் முடிவெடுத்து இருக்கேன். கல்யாணம் பண்ணிட்டு அடுத்த வேலையைப் பார்ப்போமே” என்றான் அவன்.

“ஏன் இப்படி அவசரப்படறீங்க வருண். என்ன நினைக்கறீங்க நீங்க” என்று பவித்ரா கேள்வியெழுப்ப, அவளது கன்னங்களை தன் கைகளால் பற்றியவன், “உனக்கு என்மேல நம்பிக்கை இருக்கா?” என்றான் சம்பந்தமே இல்லாமல்.

“இப்போ விஷயம் நம்பிக்கையைப் பத்தி இல்ல. அப்போ உங்களுக்கு என்மேல நம்பிக்கை இல்லையா. அதனால தான் இந்த அவசர கல்யாணமா?” என்றாள் பவித்ரா.

“பவிம்மா ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. இந்த வருண் மேல நம்பிக்கை இருந்தா, என்கிட்ட கேள்வி எதையும் கேட்காத. நாளைக்கு நம்ம கல்யாணம் நடந்தே ஆகணும். அதை மட்டும் மனசுல வை” என்று அவளை சரிக்கட்ட முயற்சித்தானே தவிர, வேறு எதையும் தெளிவாக கூறுவதாக இல்லை அவன்.

“வருண் என்னை ஏன் இப்படி…” என்றவள் எதையும் மேற்கொண்டு பேச முடியாமல் கண்கள் கலங்கிட, அவள் கண்ணீரைத் துடைத்து அவளது கண்களின் மீது அடுத்தடுத்து அவன் இதழ் பதிக்க,

“தள்ளி போங்க” என்று அவனைப் பிடித்து தள்ளியிருந்தாள் கோபத்தில்.

அவளது கோபத்தில் வருண் புன்னகைக்க, “கொன்னுடுவேன் வருண் உங்களை. என்னை டென்க்ஷன் பண்ணாதீங்க.” என்று கத்தினாள் பவித்ரா.

“பவிம்மா. நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. என்ன சூழ்நிலை வந்தாலும் எனக்கு நீ, உனக்கு நான் தான். இதுல மாற்றம் எதுவும் இல்லையே.” என்று நிறுத்தி, “என்னால உன்கிட்ட வெளிப்படையா சில விஷயங்களை பேச முடியல. ஆனா, நிச்சயமா நானே எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிடுவேன். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு. அதோட என்னை துரத்திட்டு இருக்க சில எண்ணங்கள்ல இருந்து எனக்கு விடுதலை வேணும். து உன்னால மட்டும் தான் கொடுக்க முடியும். நீ என் பொண்டாட்டியா இருக்கறது மட்டும்தான் எனக்கு நிம்மதியைத் தரும்.”

“நான் உன்னை இப்படி ஒரு நிலையில கண்டிப்பா நிறுத்தக்கூடாது தான். தப்புதான்… எல்லாமே தெரியுது எனக்கு. ஆனா, இது நடந்தே ஆகணும் பவி. நமக்காக ப்ளீஸ்” என்றவன் வார்த்தைகளில் இன்னுமின்னும் குழம்பி நிற்கத்தான் முடிந்தது பவித்ராவால்.

என்ன தான் கேட்டாலும், அவன் வெளிப்படையாக எதையும் கூறப் போவதில்லை என்று புரிய, “நீங்க நினைக்கறதை செய்ங்க” என்று விட்டு காரில் இருந்து இறங்கி விடுதியை நோக்கி நடக்க தொடங்கிவிட்டாள் அவள்.

வருணுக்கு செல்லும் அவளை நினைத்து வேதனையாக இருந்தாலும், “சாரி பவிம்மா” என்று தனக்குள் முனகியவனாக அமர்ந்துகொண்டான் அவன்.

அன்று இரவு அவர்களின் வழக்கமான நேரத்திற்கு அவன் பவித்ராவிற்கு அழைக்க, “மார்னிங் எத்தனை மணிக்கு கிளம்பனும்?” என்றாள் அவள்.

“எட்டு மணிக்கு நானே வந்து பிக் பண்றேன்” என்று வருண் கூறிட,

“ஓகே. குட்நைட்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள் அவள்.

அவளது செயலில் துவண்டாலும், “நீ பன்றதுக்கெல்லாம் அவ அமைதியா இருக்கறதே பெரிய விஷயம்.” என்று அவன் மனசாட்சி துப்பியதில் அமைதியாக கட்டிலில் விழுந்துவிட்டான் வருண் ஆதித்யன்.

இங்கு பவித்ராவின் நிலையோ, அவனைக் காட்டிலும் மோசமாக இருந்தது. கண்மூடவே பயந்தவளாக அமர்ந்திருந்தாள் அவள். வருணின் இந்த நடவடிக்கைகளை வைத்து  வர முடியாமல் திணறிப் போயிருந்தாள் பெண்.

அடுத்து என்ன என்று யோசிக்கவே அச்சமாக இருந்தது அவளுக்கு. வருணைப்போல் சாதாரணமாக கடந்துவிட முடியவில்லை அவளால். இந்த திருமணத்திற்கு மனதளவில் தான் தயாராக இருக்கிறோமா என்பதற்கே அவளிடம் பதிலில்லை.

இதில் வில்வநாதனை குறித்த அச்சம் வேறு. அந்த மனிதனுக்கு எப்போதும் பெரிதாக பயந்தவள் எல்லாம் கிடையாது அவள். பார்க்கும் நேரமெல்லாம் திமிரையும், அலட்சியத்தையும் நிரம்பவே காட்டியிருக்கிறாள் தான். இத்தனை நாட்களும் மயூரிக்காக அவளை பொறுத்துக் கொண்டிருந்தார் வில்வநாதன்.

ஆனால், இத்தனை நாட்கள் செய்ததும், இந்த திருமணமும் ஒன்றல்லவே. அதுவும் பெண் என்று ஒருத்தி இருப்பதையே வெளிக்காட்ட விரும்பாதவர் அவர். அப்படி பட்டவருடைய மகள் சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒருவனை மணந்து கொண்டால் சும்மா விடுவாரா அவர்.

இந்த திருமணவிஷயம் மட்டும் அவருக்கு தெரிந்துவிட்டால், வருணையோ, அவளையே கொல்லக்கூட தயங்கமாட்டார் என்று வில்வநாதனை சரியாகவே கணித்தாள் பவித்ரா.

இது அத்தனையும் தாண்டி மயூரி. என்னதான் பிடிக்காத அன்னையாக இருந்தாலும், அவருக்கு மறைத்து திருமணம் செய்து கொள்வதும் தவறாகத் தான் பட்டது அவளுக்கு.

நடுஇரவு வரை ஏதேதோ சிந்தனைகளில் உழன்றபடி நேரத்தை கடத்தியவளுக்கு, இந்த யோசனைகள் தீரவே தீராதா என்று ஏக்கமாகிப் போனது. “வேண்டாம் மனமே” என்று பலமுறை தனக்குத்தானே கூறியபடி அந்த இரவை கடந்துவிட்டவள் இரவு முழுவதும் ஒரு பொட்டுக்கூட உறங்கியிருக்கவில்லை.

காலை சூரியனின் கதிர்கள் முகத்தில் படும்வரை படுக்கையில் கிடந்தவள் அதன்பின் எழுந்து குளித்து ஒரு புடவையை அணிந்துகொண்டு அமைதியாக அமர்ந்துவிட்டாள். அலைபேசியை கையால் தொட்டுக்கூட பார்க்கவில்லை இதுவரை.

காலை எட்டு மணிக்கு வருண் ஆதித்யன் அலைபேசி வழியே அவளை அழைக்கும் வரை இதே நிலை நீடிக்க, அவன் அழைப்பில் தான் அசைந்தாள் பவித்ரா.

வருண், “பவி” என்று மெல்லிய பதட்டத்துடன் அழைக்க,

“வந்துட்டீங்களா” என்றாள் நிச்சலனமாக.

“வாசல்ல தான் இருக்கேன் பவி” என்றான் வருண்.

“வரேன்” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

வருணுக்கு அவளது ஒதுக்கம் புரிந்தாலும், எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தான். அடுத்த சில நிமிடங்களில் பவித்ரா காருக்கு வந்துவிட, வருண் அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்தபோதும் வாயைத் திறக்கவே இல்லை அவள்.

அவன் பார்வையை சந்திக்க விரும்பாமல் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துவிட்டாள் அவள். வருணும் எதுவும் பேசாமல் காரை எடுக்க அடுத்த அரைமணி நேரத்தில் பதிவாளர் அலுவலகத்தில் இருந்தனர் இருவரும்.

அங்கு தேவையான அத்தனை விஷயங்களையும் வருண் ஏற்கனவே செய்து முடித்திருக்க, வருணுக்கு தெரிந்த சிலரும் அங்கே காத்திருந்தனர். வருணின் நண்பன் காசி, அவனது காரை கண்டதும் அருகில் வர, “எல்லாம் ஓகே தானே” என்று அவனிடம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொண்டான் வருண்.

பவித்ரா திருமணம் என்றால் பதிவேட்டில் கையெழுத்திடுவது மட்டுமே என்று அதுவரை நினைத்திருக்க, பதிவாளரின் முன்னிலையில் தாலி கோர்க்கப்பட்டிருந்த ஒரு தங்கச்சங்கிலியை தனது சட்டைப்பையில் இருந்து எடுத்து பவித்ராவின் கழுத்தில் அணிவித்துவிட்டான் வருண்.

பவித்ரா நடப்பதை நம்ப முடியாமல் பார்த்து நிற்க, அவள் நெற்றியில் அவன் முத்தமிடவும், சுற்றி நின்ற அவன் நண்பர்கள் கைதட்ட, எதுவுமே தன்னை பாதிக்கவில்லை என்றுதான் நின்றிருந்தாள் பவித்ரா.

வருண் பதிவேட்டில் கையெழுத்திட்டு பவித்ராவிடம் பேனாவை கொடுத்தபோதும் பெரிதாக எந்த உணர்வையும் காட்டாமல் கையெழுத்திட்டு விட்டாள் அவள்.

திருமண பதிவுக்கான நடைமுறைகளை முடித்துக்கொண்டு அவர்கள் வெளியே வர, வருணின் காரில் ஏறி அமர்ந்த நிமிடம், “நான் உங்ககிட்ட பேசணும் வருண்” என்றுவிட்டாள் பவித்ரா.

“என்னடா” என்று அவன் நெருங்க, கைநீட்டி அவனைத் தடுத்தவள், “என்னை எங்கேயாவது கூட்டிட்டுப் போங்க. நான் பேசணும்” என்றாள் மீண்டும்.

வருண் அவளிடம் எதுவும் வாதிடாமல் அருகே இருந்த அவன் நண்பனின் வீட்டிற்கு பவித்ராவை அழைத்துச்செல்ல, வீட்டிற்குள் நுழைந்த நிமிடம் வருணின் கையைப் பிடித்துக் கொண்டாள் பவித்ரா. வருண் வேகமாக அவளிடம் திரும்ப, அவனது கையை தன் தலையின்மீது வைத்தவள், “எதற்காக இந்த அவசரகல்யாணம். என்ன மறைக்கறிங்க என்கிட்ட. உண்மையை சொல்லுங்க” என்றுவிட,

“பவி நான் சொல்றதை…” என்றவனை பேசவே விடாமல், “உண்மையை மட்டும் சொல்லுங்க வருண்” என்று ஏறக்குறைய கத்தினாள் பவித்ரா.

“பவி”

“எனக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சாகணும்.”

“பவி எனக்கு கொஞ்சம் டைம் கொடு”

“உன்னை நம்பி என்னையே கொடுத்துட்டேன்டா… இன்னும் டைம் கொடுக்கணுமா உனக்கு” என்று அவன் நெஞ்சில் கையை வைத்து தள்ளியவள் தரையில் மடங்கி அமர்ந்துவிட்டாள்.

அப்படி உடைந்து போனவளாக அவளை பார்க்க முடியாமல் வருண் அவள் அருகில் மண்டியிட, “எனக்கு பைத்தியம் பிடிச்சுடும் போல வருண்.” என்று கலங்கினாள் பெண்.

“ஹேய் அம்மும்மா” என்று வருண் அவளை அணைத்துக்கொள்ள, அவன் சட்டையை கண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.

அவள் கண்ணீரைத் தாள முடியாமல், “என்ன தெரியணும் உனக்கு” என்று வருண் இறங்கிவர,

“என்னைப்பத்தி என்ன தெரியும் உங்களுக்கு” என்று சரியாக அவனைக் கணித்துவிட்டாள் அவன் மனைவி.

வருணுக்கும் அதற்குமேல் மறைக்கும் எண்ணமில்லாததால், “நீ வில்வநாதன்- மயூரியோட பொண்ணுன்னு தெரியும் எனக்கு.” என்றுவிட்டான் வருண்.

இப்படி எதுவோ இருக்கும் என்று எண்ணி பயந்து கொண்டே இருந்ததாலோ என்னவோ, அந்த நொடியில் பெரிதாக அதிர்ச்சியடையவே இல்லை பெண். இதழ்களில் ஒரு கசப்பான புன்னகை கூட மலர்ந்தது அவளது நிலையை எண்ணி.

“சோ… எதுக்கு இந்த கல்யாணம்? வில்வநாதனை பழிவாங்கவா? இல்ல, அவரோட மகளை தண்டிக்கவா” என்று பவித்ரா கேட்க,

“பவிம்மா” என்றவனிடம் இருந்து அமைதியாக விலகி அமர்ந்தாள் அவள். அவளது விலகல் எதிரில் இருந்தவனுக்கு உயிர்வரை வலிக்க, “நான் சொல்றதை கேளு பவி” என்றான் அவன்.

“என்ன சொல்ல போறீங்க? என்ன சொல்ல முடியும் உங்களால”

“நம்ம கல்யாணத்துக்கு நம்மோட காதல் மட்டும் தான் காரணம். உன்மேல சத்தியம் இது” என்று பவித்ராவின் தலையில் கைவைத்து அவன்கூற, சலனமே இல்லை பவித்ராவிடம்.